ஒரு கல்லூரியின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 12,973 
 

காலை நேரப்பரபரப்பு, தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பேசிக் கொண்டிருக்க, அடுக்களையில் குக்கர் தன்னை நினைவுபடுத்த விசில் அடித்தது.

சீதா, உனக்குக் காலேஜுக்கு சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் பாரு, டிபன் பாக்ஸை எடுத்து வச்சுக்கோ, புது காலேஜ் அங்கே கேண்டின் இருக்கோ என்னமோ, நான் கனகதாரா சொல்லிட்டு வந்துடறேன். சரியா,

சரிம்மா,

என் அம்மா இப்படித் தான், காலையில் குளித்ததும் கனகதாரா சொல்லிடுவா, உலகத்துல உள்ள எல்லாரும் நல்லா இருக்கணும், எல்லாருக்கும் உணவு கிடைக்கணும்னு வேண்டிக்கிற ஜீவன். நேர்பட வகிடு எடுத்து, நெற்றியில் வட்டமாய்க் குங்குமம் வைத்து, பார்க்கவே லெட்சுமி கடாட்சமாய் இருப்பாள்.

அம்மாவைப் பற்றி எண்ணிக் கொண்டே புத்தகங்களைக் கைப்பையில் வைத்துக் கொண்டேன். எனக்குப் பிடித்த நீல நிறப் புடவை, கண்ணாடி முன் நின்று, ஒரு முறை புடவையைச் சரிசெய்து கொண்டேன்.

பக்கத்துக் கல்லூரியில் தான் எம்.ஏ., எம்.பில்., முடித்திருந்தேன். வேலை தேடும் படலமா? மாப்பிள்ளை தேடும் படலமா? என்ற பட்டிமன்றத்தில் அப்பா ஜெயித்தார். அப்பா எப்பவுமே என் கட்சி தான். அம்மாவிற்கு எனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து விட வேண்டுமென்ற ஆசை. இருக்காதா, ஒரே மகள் வேறு. காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்க் வேண்டும் என்று நினைப்பது, எல்லாத் தாய்க்குமே இருக்கும் இயல்பான ஆசை தான். ஆனால் என் குறிக்கோளே முனைவர் பட்டம் பெறுவது, 2. 3 வருடங்கள் விரிவுரையாளராக பணிபுரிவது. கல்யாணம் அதற்குப் பிறகு தான். நாளிதழ்களில் வரும் விரிவுரையாளர் தேவை விளம்பரங்கள் பார்த்து, கல்லூரிகளுக்கு விண்ணப்பம் போட்டு, நேர்முகத் தேர்விற்குச் சென்ற ஒரு சுய நிதிக் கல்லூரியிலேயே 7000ரூ சம்பளத்தில் விரிவுரையாள்ர் பணியிலும் சேர்ந்தாயிற்று. நல்ல வேளையாக வேறு ஊர்களில் கிடைக்காமல், இதே ஊரிலேயே வேலை கிடைத்தது. வேறு ஊர் என்றால் விடுதியில் தங்க வேண்டி இருக்கும். சாப்பாடுக்கும் பிரச்சினை தான். என் அம்மா கையாலே சாப்பிட்டுப் பழகிட்டேனா, வேறு எங்கும் சாப்பிடப் பிடிக்காது. அப்படி ஒரு கைமணம்.

இன்று தான் நான் ரசித்து, ரசித்து செதுக்கி வைத்திருந்த கனவு நனவாகும் நாள். சிறு வயது முதலே கல்லூரி விரிவுரையாளர் ஆவது என்பது என் குறிக்கோள். ம்ம்.. தவம் என்பதே பொருத்தமான வார்த்தை.

இந்த கல்லூரி கல்விக்கு முக்கியத்துவம் தரும் கல்லூரி, உனக்கு இந்தக் கல்லூரியில் நிறைய வேலை இருக்கு என்று சித்தி சொன்னது நினைவிற்கு வந்த்து. இக்கல்லூரி மாண்வர்கள் குறவஞ்சிக் கூட்டங்கள், கவனம் என்று மாலினி சொன்னதும் நினைவிற்கு வராமலில்லை.

பூஜை அறையின் முன் நின்றேன். “இறைவா, கல்வி கற்றுக் கொடுக்கும் புனிதமான பணியைச் செய்யப் போகிறேன், உன் அருள் எப்பொழுதும் வேண்டும்” என்று மனம் வேண்ட வாய் சுலோகங்களை முணுமுணுத்த்து. காய்ந்த கூந்தலைப் பின்னி கொண்டையாக முடிந்து கொண்டேன். காலையில் செய்த சாதகத்திற்கு வயிறு பசித்தது. அம்மா பண்ணியிருந்த இட்லி, சட்னி தேவாமிர்தமாய் இறங்கியது. அடுப்பில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட குழம்பு என்னவென்று ஆர்வ மிகுதியால் பார்த்தேன். ஆஹா, சாம்பார், ரசம், அவரைக்காய் பொரியல், அடுக்களையே மணந்தது. மதியம் நான் சாப்பிட சாம்பார் சாதம் பாக்ஸ் தயார் நிலையில் இருந்தது. அதை எடுத்து என் கைப்பையில் வைத்துக் கொண்டேன்.

அம்மா, போயிட்டு வர்றேன்மா,

இந்தா மல்லிகப்பூ வச்சுக்கோ, திரும்பு, நானே வச்சு விடறேன். கொண்டையைச் சுற்றி பூவை நேர்த்த்யாக வைத்தாள். அம்மா பூ வைக்கும் பின் தலையைப் பதம் பார்க்கும் முன் முன்னேற்பாடாய் கத்தினேன்.

ஆ அம்மா…

அம்மா சிரித்துக்கொண்டாள். இவளே குழந்தை, இவள் பெரிய மனுஷி போல பாடம் சொல்லிக் கொடுக்க போறாளே என்று எண்ணி இருப்பாள். என் முகத்தைத் தன் கைகளால் திருஷ்டி கழித்தாள். அம்மவிற்கு டாட்டா காட்டி விட்டு அப்பாவுடன் வண்டியில் ஏறிக் கொண்டேன்.

அப்பா கல்லூரி வளாகத்தில் என்னை இறக்கி விட்டு விட்டு வேலைக்குக் கிளம்பினார். சாலையின் இரு மருங்கிலும் மரங்கள், இடையிடையே பூந்தொட்டிகள், நடுவே பிரம்மாண்டமான கல்லூரி, அழகான கல்லூரி, பார்ப்பவர்கள் கண்களையும் மனங்களையும் கல்லூரியின் முகப்பு கவருவதாக இருந்தது. ரசனையுடன் கட்டப்பட்டதாகத் தோன்றியது.

ஆங்காங்கே மாணவச்செல்வங்கள், சில மாணவர்கள் கல்லூரிக்குள் வருவதும், சிலர் கேண்டினில் வடை, காப்பி சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். ஒரு சில மாணவர்கள் புத்த்கங்கள் படிப்பதும் நண்பர்களிடம் பேசிக் கொள்வதுமாக இருந்தனர். ஒரு புறம் கல்லூரிப் பேருந்து மாணவிகளை கல்லூரி வளாகத்தில் இறக்கிக் கொண்டிருந்தது. மாணவ மாணவிகளைப் பார்க்க, பூந்தோட்டம் என்ற கல்லூரியைச் சுற்றும் வண்ணத்துப் பூச்சிகளைப் போல் இருந்த்தது. எங்கும் வண்ணமயம். இந்த ஊரில், படம் எடுப்பவர்கள் வந்தால், கல்லூரி தொடர்பான திரைப்படங்களுக்கு இயக்குனர்களின் தேர்வு இந்தக்கல்லூரியாக இருக்கலாம். அவ்வளவு அழகு. ரம்மியம்.

சிலுசிலு காற்று வீச, என் மேனி சிலிர்த்தது. கல்லூரி அழகை நேர்முகத்தேர்விற்கு வந்த போது கூட இப்படி ரசிக்கவில்லை. நேர்முகத்தேர்வு குறித்த பரபரப்பு. இப்போது வேலை கிடைத்ததால் என் கல்லூரி என்ற பெருமிதமும் சேர்ந்து கொள்ள, கல்லூரி கொள்ளை அழகாய்த் தோன்றியது எனக்கு.

சில மாணவர்கள் என்னைக் கண்டதும் பதுங்க, சில மாணவ,மாணவியர் எனக்கு வணக்கம் கூற, உதடு புன்னகைக்க வணக்கம் கூறினேன். என்னை அந்த மாணவர்களுக்கு அறிமுகம் இல்லை தான், என் கொண்டை என்னை அக்கல்லூரியின் விரிவுரையாளர் என்பதை உறுத்படுத்தியதால் கிடைத்த மரியாதையாகவும் இருக்கலாம். பெரியவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மரியாதை தரும் ஒழுக்கத்தைக் கல்லூரி கற்பித்த காரணமாகவும் இருக்கலாம்.

நேரே அலுவலகம் சென்றேன். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர், ‘வாங்க மேடம், எப்படி இருக்கேங்க?’ என்று கேட்டார்.

நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கேங்க? என் டிபார்ட்மெண்ட் எங்கே இருக்கு?

மூணாவது மாடியில் ரெண்டாவது ரூம் தான், பசங்கள்ல யாரையாச்சும் கூட அனுப்பவா?

இல்லை, நானே போயிடுவேன், தாங்க்ஸ்,

விறுவிறுவென்று படியேறினேன்.

துறைக்குள் ஊதுபத்தியின் மணம். சுவாமி படங்கள், நாட்டுத் தலைவர்கள் படம் மாட்டப்பட்டிருந்தன. துறைத் தலைவர் நாற்காலி காலியாக இருந்தது. துறைக்குள் விரிவுரையாளர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஒரு சில விரிவுரையாளர்கள் தங்கள் வகுப்புகளுக்குச் செல்ல ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தார்கள். சுறுசுறுவென இயங்கிக் கொண்டிருந்த்து துறை.

சற்று குண்டாக பெரிய மீசையுடன் கண்ணாடி போட்டுக் கொண்டிருந்த ஒருவர் துறைக்குள் வரவும், துறைக்குள் இருந்தவர்கள் வணக்கம் கூற, அனேகமாக இவர் தான் துறைத்தலைவராக இருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.

வணக்கம் கை கூப்பிய படி சொல்ல, பதில் வணக்கம் கூறினார்.

நீங்க சீதாலெட்சுமி, புதுசா சேர்ந்துருக்கிற பேராசிரியை தானே.

ஆமாம் சார்,

எப்படி இருக்கேங்க?

நல்லா இருக்கேன் சார், நீங்க எப்படி இருக்கேங்க?

கடவுள் அருளாலே பிரமாதமா இருக்கேன்மா,

தன் இருக்கையின் கீழே தன் பேக், சாப்பாடு, தண்ணீர் ஆகியவற்றைக் கீழே வைத்துக்கொண்டே ஏன் நிக்கறேங்க, உட்காருங்க, என்று தன் முன் உள்ள நாற்காலியைக் காட்ட, நான் உட்கார்ந்தேன்.

தன் மூக்குக் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டே, நேர்முகத்தேர்வின் போது என்னால வர முடியலை, எனக்கு விடைத்தாள் திருத்தும் பணி இருந்த்தது, மதுரை போயிருந்தேன்.
இல்லைனா, அன்னைக்கே நாம சந்திச்சிருப்போம். நேர்முகத்தேர்வுலே அசத்திட்டேங்களாமே, உங்க படிப்பு, திறமை பற்றி முதல்வரும், செயலரும் சொன்னாங்க. துறை உங்களை வரவேற்குது. உங்களை மாதிரி ஆட்கள் தான் தேவை.

துறைத்தலைவர் ரொம்ப புகழ்வதாகத் தோன்றியது. பேச்சை மாற்றினேன்.

நான் எப்போ வகுப்புக்குப் போகலாம், கால அட்டவணை இருக்கா சார்?

அதாவது, இன்று காலை 11 மணிக்கு புதுசா வேலைக்குச் சேர்ந்தவங்களுக்கு பக்கத்து ஹால்லே மீட்டிங் நடக்க இருக்கு, ஓரியண்டேஷன் போல.இந்தக் கல்லூரி பற்றியும் மாணவர்கள் பற்றியும் வகுப்பு எடுக்கும் விதம் பற்றியும் சொல்லித் தருவோம். முதல்வர் தான் சிறப்புரை. ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் வகுப்பு இல்லாத பேராசிரியர்களும் இதுலே கலந்துப்பாங்க. கல்லூரி பற்றின அறிமுகப்படலம்னு வச்சுக்க்கோங்களேன்.

சரி சார், வந்துடறேன்.

இருக்கைக்குச் சென்று நான் கொண்டு வந்திருந்த புத்தகங்களை அடுக்கினேன். 11 மணிக்கு 2,3 நிமிடங்கள் முன்பே மீட்டிங் நடக்கவிருக்கும் அறைக்குச் சென்றேன். பான்சாய் மரங்களை அலங்காரமாய் அறைக்குள் விட்டிருந்தனர். வளர வளர அழகுக்காக வெட்டப்படும் பான்சாய் மரங்களை எனக்குப் பிடிப்பதில்லை. கல்லூரியின் முகப்பு தந்த திருப்தி உள்ளே இல்லை. குளிரூட்டப்பட்ட அறை. ஒரு நீள மேசை, அதைச் சுற்றிலும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நட்புடன் ஒரு பேராசிரியை சிரித்து கை காட்டி, அவர் அருகில் அமர அழைப்பு விடுத்தார். அவர் அருகில் அமர்ந்தேன். ஒரு புறம் ஆண்களாகவும், இன்னொரு புறம் பெண்களாகவும் அமர்ந்திருந்தோம். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் மொத்தம் 20 பேர் இருப்போம்.

முதல்வர் உள்ளே வர, நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம். எங்கள் எல்லாரையும் அமரும் படி சொல்லி விட்டு, அவரும் அமர்ந்தார். சற்று பருமனான தேகம், வழுக்கைத்தலை, வெளியில் தெரியும்படியான தொப்பை, நெற்றியில் சந்தனமும் குங்குமமும் வைத்து, கம்பீரத்துடன், முதல்வருக்க்கேயுரிய லட்சணங்கள் பொருந்தி இருந்தார். அவர் உட்கார்ந்து பேசுவதற்கு வசதியாக, ஒரு மைக்கும் பொருத்தப்பட்டிருந்தது. முதல்வர் குரலைச் சரி செய்து கொண்டே பேசத் தொடங்கினார்.

உங்க எல்லாரையும் கல்லூரி சார்பில் வரவேற்கிறேன். முதல்லே இந்த மீட்டிங் எதுக்குனா, இந்த கல்லூரிய பற்றியும், கல்லூரியின் கொள்கைகளைப் பற்றியும் புதுசா வேலைக்குச் சேர்ந்த நீங்க தெரிஞ்சுக்கணும். அதுக்குத்தான்.

இந்தக் கல்லூரி தொடங்கின 7 வருடங்களில் கல்வித் தேர்ச்சி விகித்ததில் 98 சதவீதம் எடுத்துக்குனா, அதுக்குக் காரணம் வெறி, படிப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கல்வி கற்ற மாணவர்களின் உழைப்பும், கல்வி கற்பித்த ஆசிரியர்களின் முயற்சியும் தான். உங்ககிட்டேர்ந்தும் இதே ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

இதற்கு கரவொலி. நான் மட்டும் அமைதியாக முதல்வரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்தக் கல்லூரி வகுப்பு நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. கேம்சிற்குனு ஒரு மணி நேரம் இருக்கு, அதுவும் பேருக்குத்தான். அதிலும் நீங்க வகுப்பு எடுக்க்ணும். அப்புறம், மதிய உணவு இடைவேளைக்கான நேரம் அரை மணி நேரம். மீதி நேரம் முழுவதும் வகுப்பு தான். காலையிலும் மாலையிலும் 11 மணிக்குப்பிறகு ஒரு 5 நிமிடம் பிரேக், அது பாத்ரூம் போக, வர,அதுவும் பசங்க மட்டும் தான் போவாங்க. அப்படி போயிட்டு லேட்டா வர்ற மாணவர்களுக்கு தண்டனை கொடுங்க. ஏன்னா நேரம் பொன் போன்றது. ஒரு நிமிடம் தாமதமாக வருபவன் பாடத்தின் தொடக்கத்தைக் கேட்காமல் பாடமே புரியாது.

சில பேராசிரியர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாய், மாணவர்களைப் போலத் தலையாட்டிக் கொண்டிருந்த்தைப் பார்க்க, பார்க்க எனக்குச் சிரிப்பாய் வந்தது. ஒரு சில்ர் குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தனர். முதல்வர் பேசத் தொடங்கின போது ஒருவர் தூங்க ஆரம்பித்தது, அரைக்கண்ணால் அவ்வப்போது முதல்வரைப் பார்த்து தலையாட்டிக் கொண்டிருந்தார். காலையிலேயே இப்படி தூக்கம் வருகின்றதே, பாவம், தயிர் சாதம் சாப்பிட்டு இருப்பாரோ? முதல்வர் கண்ணிலிருந்து தப்பிக்க, அவ்வப்போது நாற்காலியில் சாய்வதும், பின்பு முன்னாடி வந்து தலையை ஆட்டுவதும் எனக்கு சிரிப்பை அதிகப்படுத்தியது. இவ்வளவு விவரமாக ஏன் சொல்லுகிறேன் என்றால் அந்தப் பேராசிரியர் உட்கார்ந்திருந்தது எனது எதிரே தான்.அவருக்குத் தன் கல்லூரி நினைவு வந்து விட்டதோ என்னவோ, வாத்தியார் கத்திப் பாடம் நடத்த, சுகமாய் உறங்க. அந்த இனிய நாட்கள் திரும்ப உயிர்ப்பித்ததாய் நினைத்துக் கொண்டாரோ? இவர் மாணவர்களை தூங்க வைக்காமல் அல்லது இவர் தூங்காமல் வகுப்பு எப்படி நடத்துவாரோ?

முதல்வரும் விட்டபாடில்லை.

பசங்களுக்கு படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் சிதறாம பார்த்துக்கங்க. போட்டிகள் எதுவும் சேர விடாதீங்க. வருஷத்துக்கு ஒரு முறை ஆண்டு விழா, அப்போ பார்த்துக்கலாம்.

இந்தக்கல்லூரியின் குறிக்கோள் வெற்றி மட்டுமே. மாணவர்கள் அத்தனை பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். அதைத் தான் மாணவர்களின் பெற்றோரும் விரும்பறாங்க.
முயற்சி + பயிற்சி = வெற்றி இது தான் என் தாரக மந்திரம்.

இத்ற்கும் கரவொலி, இந்த முறை முதல்வர் என்னையே பார்த்து பேச,கை தட்டவில்லையென்றால் கோபித்துக் கொள்வார் போல என்று நானும் கை தட்டி வைத்தேன்.

முதல்வர் எங்களைக் கை காட்டி அமைதிப்படுத்தி, புன்முறுவலுடன்,

நான் சொல்லுகிற 5 முக்கியமான கருத்துக்களைக் கவனிங்க.

1. இது இருபாலர் சேர்ந்து படிக்கிற கல்லூரி. மாண்வர்களைக் கவனமா பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. நீங்களும் மாணவர்களுடன் ஒரு வரைமுறையுடன் தான் பழக வேண்டும்.

2. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மணி அடிக்கப்படும். அது வரை விடாமல் நீங்க பாடம் நடத்த வேண்டும். மணி அடிக்கும் 5 நிமிடம் முன்பு அடுத்த்ப்பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர் வெளியே காத்து நிற்பார். அவர் உள்ளே வரவும் தான் நீங்க வெளியில் போக வேண்டும். ஒரு நிமிடம் கூட வீணடிக்கக் கூடாது.

3. படிப்பு தவிர வேறு எதைப் பற்றியும் வகுப்பிலோ வெளியிலோ பேசக் கூடாது. பாடத்திட்டத்தில் நிறைய நடத்த வேண்டி இருக்கும், அது முடிக்க்வே நேரம் காணாது. உங்களுக்கு சிலபஸ் முடிக்க டைம் இல்லைனா, ஸ்பெஷல் க்ளாஸ் வச்சுக்கங்க.

4. வகுப்பில் வைத்து ஆசிரியர் டிக்டேட் செய்ய மாணவர்கள் எழுதக்கூடாது. எழுத்து வேலையை வீட்டுக்குக் கொடுத்து விடுங்க. நீங்க பாடம் நடத்துங்க. அவ்வளவு தான்.

5. கடைசியா ஒரு விஷயம், நான் அவ்வப்போது கல்லூரியச் சுத்தி ரவுண்ட்ஸ் வருவேன். உங்களுக்கே தெரியாம உங்க வகுப்புலே ஒழுங்கா பாடம் நடத்தறேங்களானு செக் பண்ணுவேன்.

இக்க்கொள்கைகளுக்கு உட்பட்டு நடப்பவர்கள் நிரந்தரப்ப்ணி வாய்ப்பினைப் பெறலாம். வித்களை மீறுபவர்களின் பணிச் சீட்டு உடனடியாகக் கிழிக்கப்படும். விஷ் யூ ஆல் ஸக்ஸஸ்,

கரவொலியுடன் நன்றியுரை கூற, கூட்டம் முடிந்தது.

துறைக்குள் சென்ற போது, என்னுடன் பணிபுரியும் சகப்பேராசிரியை ஒருவர் எச்சரிக்கும் தொனியில், “சீதா, பசங்களுக்கு ஒரு நிமிஷம் கூட ஓய்வு கொடுக்காதேங்க, நிறைய கேள்விகளாக் கேட்பானுங்க, வானர கூட்டங்கள். வால் மட்டும் தான் இல்லை” என்று நான் கேட்காமலேயே இலவச ஆலோசனை தந்தார்.

என் முகத்தில் கோபம் வழிந்தோடியது. பாரதியின் வரிகள் கண்களுக்குள் வந்து போயின.

“காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா”

ஏன் என்ற கேள்வி அரிய கண்டுபிடிப்புகளின் ஆதார சுருதி அல்லவா, சிந்திக்க சந்தர்ப்பம் அளிக்காத கல்வியாளர்களின் நிலையையும் கல்வியின் நிலையையும் எண்ணி நொந்தேன். கல்வியில் தேர்ச்சி பெறுவது மட்டும் தான் சாதனையா? நாளைய இந்தியா மாணவர்கள் கைக்களில் அல்லவா? மனப்பாடம் செய்து வாந்தி எடுத்து விட்டால் தேர்ச்சி பெற்று விடலாமே. ஆனால் சிந்திக்கும் திறன், பல்துறை அறிவு, கலையறிவு, தனித்திறன் வெளிப்பாடு இவை இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்று என்ன பயன்? படிப்பு படிப்பு என்று பூட்டி வைத்து எத்தனை சாதனையாள்ர்களை இழக்கிறோம். மாணவர்கள் என்ன பான்சாய் மரங்களா?

என் மனம் அலை பாய்ந்த்தது. மனதிற்குள் புலம்பிய எனக்குள்ளே ஒரு முடிவு, முகத்தில் ஒரு தெளிவு. எனக்குக் கொடுக்கப்பட்ட வகுப்பிற்குச் சென்றேன்.

இரண்டாமாண்டு கணிப்பொறியியல் வகுப்பு, உள்ளே சென்றேன். மாணவர்கள் வணக்கம் கூற எதிர்கால இந்தியா அறைக்குள் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். பாடம் தொடங்கும் முன் மாணவர்கள் அறிமுகப்படலமும், தன்விளக்கமும் அமைந்தது.

வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இடும் வேளையில் ‘தருவியா? தர மாட்டியா? தரலைனா உன் பேச்சு கா’ என்ற பாடல் காற்றோடு என் செவியை மீட்டியது.

எல்லா மேடமும் சாரும் பாடம் பாடம்னு அறுக்கிறாங்க. இது ஒரு குரல்.

இந்த மேடமும் என்ன சொல்லப் போறாங்க, படி படினு தானே, இன்னும் கொஞ்ச நாள்லே நமக்குப் பேசறதே மறக்கப் போகுது பாரு, கிசுகிசு குரல்.

டேய், இவங்க என் பக்கத்து வீடு, இவங்களும் நம்ம எச்.ஓ.டியும் பிரண்ட்ஸ், பார்த்துடா. நடுங்கின குரல்.

என் பேரு சீதாலெட்சுமி, இந்த செமஸ்டர்லே உங்களுக்கு தமிழ் கத்துக் கொடுக்கப் போவது நான் தான்.

என்னோட வகுப்புலே நீங்க சந்தோஷமா உட்காரலாம். நம்ம வகுப்பு ஒரு மணி நேரம்னா அதுலே ஒரு சில நிமிடங்கள் இறைவணக்கத்திற்கும், அடுத்த கொஞ்ச நேரம் பழைய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கும் பகுதியாகவும், மீதி அரை மணி நேரம் புதுப்பாடங்களுக்கும் மீதி 10 நிமிடங்கள் உங்கள் சந்தேகம் தீர்க்கும் பகுதியாகவும், கடைசி 10 நிமிடங்கள் உங்கள் தன்னாற்றல் திறனை வெளிப்படுத்தும் விதமாகவும் பிரித்து இருக்கிறேன். நீங்க உங்களுக்குள் பாடிக்காம தைரியமாய் திறமையை வெளிப்படுத்தும் நேரத்தில் பாடுங்கள். எல்லாரும் ரசிக்கிறோம். படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை, உங்கள் திறமையையும் உலகுக்கு எடுத்துச் சொல்கிறேன்.

புன்முறுவலுடன் மாணவர்களின் தனித்திறன்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். எத்தனை எத்தனை பூக்கள், வெவ்வேறு குணங்கள், பல்வேறு நிறங்கள், பலவித மணங்கள். பூட்டி வைக்க்ப்பட்ட திறமைகளைத் திறக்கிறேன், பான்சாய் மரங்களாய் ஆக விடாமல், ஆல்மரமாய் உங்கள் விழுதுகளைப் படர விட்டு உங்கள் சாதனைகளை உலகறியச் செய்கிறேன்.

புன்னகைத்த மாணவர்களின் கரவொலியும் வகுப்பு முடிந்ததற்கான கரவொலியும் ஒருங்கே கேட்க, இந்த மாணவர்களைப் பல்துறைகளிலும் சாதனைச்செல்வங்களாக்கும் திட்டத்துடன் தன்னம்பிக்கையுடன் வகுப்பை விட்டு வெளியே வந்தேன் தமிழ் பேராசிரியையாகிய நான்.

– காயத்ரி [gayathrivenkat2004@yahoo.com] – நவம்பர் 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *