ஒருவழிப் பாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 2,112 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது. கொடியவன் என்று கொடிகட்டிப் பறந்த பழைய சேல்ஸ் மானேஜர் கழிவதாலும், புதிய சேல்ஸ் மேனேஜர் புகுவதாலும் அலுவலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பழையவரைவிட எவரும், மோசமானவராக இருக்க முடியாது என்ற அனுமானமே, புதியவருக்கு, ஒரு தகுதியாக வாய்ந்தது. மானேஜிங் டைரக்டர், “திஸ் இஸ் யுவர் பிராஞ்ச். ஹி ஈஸ். ஹெட் கிளார்க் சோணாசலம்…” என்று சொல்லி விட்டு, புதியவரை அங்கே புகுத்திவிட்ட திருப்தியில் போய்விட்டார்.

செக்‌ஷன் ஆட்கள் அனைவருமே எழுந்து நின்றார்கள்: டைப்பிஸ்ட்காரி கொண்டையை சரிசெய்து கொண்டாள். சேல்ஸ் – அசிஸ்டண்ட் முத்துசாமி, சட்டைப் பித்தானைப் போட்டுக் கொண்டான். ‘மாடர்னாக’ இருப்பதாய் காட்டிக்கொள்ள விரும்பிய பெண்கள், ‘பெளவியமாய்’ இருப்பதாய் நினைத்துக் கொண்ட பெண்கள், ‘கிளாட் டு மீட் யூ ஸார்’ என்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்தப் பட்டவுடனேயே சொல்லியாக வேண்டும் என்பதற்காக, அவற்றை மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் – இப்படி அலுவலகம், சரஸ்வதி பூஜையை கொண்டாடுவதுபோல் புதுமையாகத் தோன்றியது.

சேல்ஸ் மானேஜர் சதாசிவத்திற்கு இருபத்தெட்டு வயதிருக்கலாம். டூவிட்பேண்டும், சிலாக்கும், உடம்பில் ஒட்டியும் ஒட்டாமலும் மின்விசிறியில் லேசாக ஆடியது. கூர்மையான பார்வையும், அறிமுகப்படுத்தப்படுவோரின் கண்களை, அவன், நேராகப் பார்த்ததில், அப்படிப் பார்க்கப்பட்டவர்கள் பாவம் செய்தவர்கள்போல், தலைகளை குனிந்து கொண்டார்கள்.

தலைமை குமாஸ்தா சோணாசலம், ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும்போது, அலுவலகத்திற்கு அப்போதுதான் வந்த அக்கெளண்டன்ட் சிங்காரம் தான் லேட்டாக வந்ததற்கு மற்றவர்கள் தான், வருத்தப்பட வேண்டும் என்று நினைத்தவன்போல், மதர்ப்புடன், அடிமேல் அடி வைத்து நிதானமாக நடந்து வந்தான்.

தலைமை குமாஸ்தா, தான் அறிமுகப்படுத்திக் கொண்டிந்த டைப்பிஸ்ட் பெண்ணை, அம்போ என்று விட்டுவிட்டு, சிங்காரத்தைப் பார்த்தார். அவனை முதலில் அறிமுகப்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் திட்டுவான்.

“ஹி ஈஸ். சிங்காரம். லார்” என்றார் சோனாச்சலம், “கிளாட் டு மீட் யூ மிஸ்டர்… சதாசிவம்” என்று சொல்லிக் கொண்டு, மானேஜர் சதாசிவத்தின் கரங்களைக் குலுக்கினான் சிங்காரம். எல்லோரும் ‘ஸார்’ போடுகையில், இவன் மட்டும் மிஸ்டர் என்று போட்டதை சதாசிவம் கவனிக்கத் தவறவில்லை. அதோடு, அவன் பேசிய் தோரணை, அவன் என்னமோ மானேஜர் மாதிரியும், தான்தான் அக்கெளண்டண்டாக வந்திருப்பது போலவும் நினைப்பதாகத் தோன்றியது. முதியவர்கள்கூட பதவிக்குரிய மரியாதையைக் கொடுக்கும்போது, சம வயதுள்ள ஒருவன், ‘ஆப்டர்ஆல்’ ஒரு அக்கெளண்டண்ட் நடந்து கொண்ட விதம், மானேஜர் இளைஞனுக்கு பிடிக்கவில்லை. அவன், இந்த இடத்தில், ஏதாவது பேசி, தனது சுப்பீரியாரிட்டியை காட்டியாக வேண்டும். காட்டினான்.

“கிளாட் டு மீட் யூ… ஒர்க் ஈஸ் காட்.. உங்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும்… என்கிட்ட வரலாம்… பட்… டிஸ்லிபிளின் இஸ் ரொம்ப முக்கியம்… நான்… லண்டன்ல பிஸினஸ் அட்மினிஸ்டிரேஷன் கோர்ஸ்… படிக்கும் போது… அங்கே ஒரு சம்பவத்தை சொன்னாங்க. அங்கே ஒருவர்…

அலுவலக ஊழியர்கள் அனைவரும், மானேஜர் விளக்கப்போகும் சம்பவத்தை அறியத் துடிப்பவர்கள்போல், கண்கொட்டாமல், அவர் வாயையே பார்த்தார்கள். அதிலே சில பாவலாப் பேர்வழிகளும் இருக்கலாம்.

ஆனால் அக்கெளண்டண்ட் சிங்காரம், அலட்சியமாக மேலே ஓடும் மின்சார விசிறியைப் பார்த்தான். பிறகு கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகையை அலட்சியமாக புரட்டினான். இந்த அலட்சியத்தை மானேஜர் இளைஞன் லட்சியம் செய்தவன்போல், கோபமாகக் குறிப்பிட்டான்.

‘லேட்கம்மிங் ஒரு சமூக விரோத செயல்…” நான் சும்மா இருக்கமாட்டேன்.

ஊழியர்கள், மானேஜருக்குப் பயப்படுவதுபோல், தத்தம் கைகால்களை ஆட்டிக் கொண்டார்கள். சிங்காரம் மட்டும் ‘ஒனக்கு ஒரு திறமை இருந்தால்… எனக்கும் ஒரு திறமை இருக்கு… நீ என்ன சொல்றது… நான் என்ன கேட்கிறது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டே, அலட்சியமாக பத்திரிகை ஒன்றைப் புரட்டினான்.

மானேஜரின் பார்வை, அவன்மேல் அடிக்கடி விழுவதை ஊழியர்களும் பார்த்துவிட்டார்கள். மானேஜர் வாலிபன் ‘அட்வைஸ்’ முடித்துவிட்டு, தனது ஏர்கண்டிஷன் அறைக்குள் போனான். அவனை எப்படி மடக்கலாம் என்று மானேஜரும், ஆசாமி மீது எப்படி மொட்டைப் பெட்டிஷன் போடலாம் என்று அக்கெளண்டண்டும் நினைத்துக் கொண்டதால் அன்று இருவருமே எந்த ஃபைலையும் பார்க்கவில்லை.

இரண்டு மூன்று நாட்கள் ஓடின.

அக்கெளண்டண்ட் சிங்காரம், தான் நடந்து கொண்டதற்கு வருத்தப்பட்டான். என்ன இருந்தாலும் எவ்வளவு திறமை அவனிடத்தில் இருந்தாலும், அவன் மேனேஜருக்கு கிழே வேலை பார்ப்பவன். ஆகையால், அடுத்த தடவை அவரைப் பார்க்கும்போது, மிகமிகப் பணிவாக நடந்து கொள்வதென்று தீர்மானித்தான்.

‘அடுத்த’ தடவை வந்தது. கம்பெனியின் நுழைவாயிலில் காரில் இருந்து இறங்கிய மேனேஜரைப் பார்த்து, ஸ்கூட்டரில் இறங்கிய சிங்காரம், ‘குட்மார்னிங் ஸார். ஆபீஸிற்கு வாரீங்களா’ என்று கேட்டு வைத்தான்.

மானேஜர் இளைஞன், அவனை ஏற இறங்கப் பார்த்தான். ஆபீஸிற்குள், தான் நுழைவதைப் பார்த்த பிறகும் ‘ஆபீஸிற்கு வாரீங்களான்னு’ கேட்டால் என்ன அர்த்தம்? இவன், திமிரை அடக்காமல் விட்டால், பிஸினஸ் அட்மினிஷ்ட்ரேஷன் கோர்ஸ் படித்ததில் அர்த்தமே இல்லை.

சிங்காரத்திற்கு பதில் வணக்கம் செலுத்தாமல் ‘யூ மீட் மி இன் மை ரூம்’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு, வேகமாக லிப்டிற்குள் நுழைந்தான்.

அக்கெளண்டண்ட் சிங்காரத்தின், ரத்தம் கொதித்தது. மரியாதை கொடுத்தால், இந்த மேனேஜருக்கு மரியாதை தெரியவில்லையே! இருக்கட்டும்… இருக்கட்டும்… இரண்டில் ஒன்றை பார்த்துவிடலாம்.

மானேஜர் சொன்னபடி அவன் பார்க்கவில்லை. பியூன் வந்து சொன்னபிறகு, கால்மணி நேரம் கழித்து, மானேஜர் அறைக்குப் போனான். அப்போது, மானேஜர், அவனைக் கூப்பிட்டதை மறந்தவன்போல், ஒரு இளம் பெண்ணுடன் மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தான்.

“சரண் சிங், நேருவின் பொருளாதாரக் கொள்கையை தாக்கியிருந்தார் பார்த்திங்களா? உங்க அபிப்ராயம் என்ன மேடம்?”

அந்தப் பெண் அழகானவள் மானேஜரிடம் ஏதோ பேசப் போனாள். அதற்குள் அங்கே நின்று கொண்டிருந்த, அக்கெளண்டண்ட் சிங்காரம் ஒரு நாற்காலியில் இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டே “நம் நாட்டுக்கு ஹெவி இண்டஸ்ரிஸும் முக்கியம்தான். அதேமாதிரி காட்டேஜ் இண்டஸ்ரிஸும்…” என்று பேசிக் கொண்டே போனான்.

அந்த இளம்பெண், மானேஜரை விட்டு விட்டு சிங்காரத்தைப் பார்த்தாள். எதிரே உள்ள நாற்காலியில், கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு, அக்கெளண்டண்ட் சிங்காரம் பேசியதை மானேஜர் சதாசிவத்தால் சகிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு அந்தப் பெண் அவனையே பார்க்கிறாள். இப்போது அவர், அவளை ‘இம்ப்ரஸ்’ செய்தாக வேண்டும்.

‘இம்ப்ரஸ்’ செய்தார்.

‘மிஸ்டர் சிங்காரம் நான் உங்களை கவனிச்சுக்கிட்டே வரேன். பத்து மணிக்கு ஆபீஸ். வழக்கமாய் பத்தரை மணிக்கு வந்தால் வாட் டஸ் இட் மீன்?’

“நீங்க வர்ற சமயத்துல நானும் வந்துடுறேனே.’

‘அந்த இளம் பெண், அக்கெளண்டண்டின் பதிலில் ஒளிந்திருக்கும் கிண்டலை ரசித்தவள்போல், லேசாக சிரித்துத் தொலைத்தாள்.

மானேஜருக்கு, ரத்தம் கொதித்தது. ஒரு பெண்ணின் முன்னால், பெரிய பதவியில் இருக்கும் அவரை, ஒரு சின்னப் பதவிக்காரன், அவமானப் படுத்துவதா? முடியாது விட முடியாது.

‘மிஸ்டர் சிங்காரம்! டோன்ட் யூ நோ மேனர்ஸ்? பிளீஸ் கெட் அப். எழுந்து நின்னு பதில் சொல்லுங்க. ஏன் லேட்டாய் வந்திங்க? ஐ ஸே ஒய் ஆர் யூ லேட்?”

அக்கெளண்டண்ட் சிங்காரம், எழுந்தான். ஒரு பெண்ணின் முன்னால் அவனை அவமானப்படுத்துவதா? மானேர்ஸ் இல்லாமல் பேசுவதா? அவன் பதில் சொல்லாமல் இருந்தால், அவனைப்பற்றி இந்தப் பெண் என்ன நினைப்பாள்?

ஆகையால் அவன் பதிலடி கொடுத்தான்.

“மிஸ்டர் சதாசிவம் ஏன் அனாவசியமாய் ‘பஸ்’ பண்றிங்க? இப்போ லேட்டாய் வந்ததுனால என்ன குடி முழுவிப் போச்சு? நீங்களுந்தான் லேட்டாய் வந்திங்க”

“எதிர்த்தா பேசுற… யூ ஆர் சேலஞ்சிங் மை பவர்”

“நோ… நோ… யூ ஆர் பாஸிங் ஓவர் டு மச் பெரிய பதவிக்கு சின்ன புத்தி கூடாது.”

“ஓட்… அட்ரோஷியஸா பேசுறே… கெட் அவுட் ஐ ஸே பூ கெட் அவுட்”

“போகிறேன். கொஞ்சம் மானேர்ஸ் கத்துக்கங்க”

“இங்க எதுக்கு மேன் வந்திங்க?”

“நீங்க எதுக்கு கூப்பிட்டு அனுப்பினிங்க?”

“எதிர்த்தா பேசுற”

“நீ நான்னு பேசினா… நானும், நீன்னு பேச வேண்டியது வரும்…”

“ஐ ஸே யூ கெட் அவுட்”

“ஐ ஸே யூ ஷட் அப்”

மானேஜர் சதாசிவம், நாற்காலியில் இருந்து கொண்டே குதித்தான். அப்படி குதித்துக் கொண்டே கத்தினார். ஒரு இளம் பெண் முன்னால், தன் அதிகாரம் ‘சேலஞ்ச்’ செய்யப்பட்டதை, அவர் விடத் தயாராகயில்லை.

அக்கெளண்டண்ட் சாம்பசிவம், வெளியே வந்து, கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஒரு பெண்ணின் முன்னால், அவனை அவமானப் படுத்துவதா. அவள் கடைக்கண்பார்வையில், மண்ணில், அக்கெளண்டண்டான அந்த மாமலை மானேஜரும், ஒரு கடுகாம்.

மானேஜரின் பயங்கரமான இரைச்சலைக்கேட்டு ஊழியர்கள் அங்கே ஓடி வந்தார்கள். ஏர்கண்டிஷன் அறைக்குள் வியர்வை கொப்பளிக்க பல்லைக் கடித்துக் கொண்டிருந்த மானேஜரை ஆசுவாசப்படுத்திய அவர்கள், சிங்காரத்தின் கையைக் குலுக்கவும் தவறவில்லை.

மானேஜிங் டைரக்டரும் குலுக்கினார். சதாசிவம், சிங்காரத்தைப் பற்றியும், சிங்காரம் சதாசிவத்தைப் பற்றியும் எழுதிய புகார்களின் சிக்கல்களை தீர்க்க, சிக்கல் சிங்கார வேலனை வேண்டினார். மானேஜர், ஆபீஸர்கேடர் அவர் புகாருக்கு வெயிட் கொடுத்தாக வேண்டும். சாம்பசிவம் யூனியனில் செல்வாக்குள்ளவன். அவனையும் அலட்சியம் செய்ய முடியாது.

‘ஆக்‌ஷன்’ எடுக்கவில்லையானால் ராஜினாமா செய்யப் போவதாக மானேஜரும், ஆக்‌ஷன் எடுத்தால் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அக்கெளண்டண்டும் ஃபீலர்ஸ் விட்டார்கள். விவகாரத்தை மழுப்பிவிடலாம் என்று நினைத்த மானேஜிங் டைரக்டர். இறுதியில் இருவருக்குமே ‘மெமோ’ கொடுத்தார். அக்கெளண்டண்டுக்கு ‘சிவியர் மெமோ’.

சேல்ஸ் – மானேஜராக இருந்தும், தனக்கு கீழே வேலை பார்க்கும் ஒருவனுக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று சதாசிவமும், எத்தனையோ சேல்ஸ் மேனேஜரை மிரட்டிய தன்னால் இவனை மிரட்ட முடியவில்லையே என்று சிங்காரமும் அதிருப்தி அடைந்தார்கள். எப்படியோ இருவருக்குமிடையே ஒருவித ‘டிடெண்ட்’ நிலவி வந்தது.

அதைக் கலைக்கும், ஒரு நிகழ்ச்சியும் விரைவில் வந்தது.

ஊழியர் பிரதிநிதிக்குழு ஒன்று சேல்ஸ் மானேஜர் சதாசிவத்தின் முன்னால் வந்து நின்றது. அவனும், தான் ஒன்றும் சர்வாதிகாரி இல்லை என்பதை காட்டும் ‘ஹம்பிள் பிரைட்’ (எளிமையில் கர்வம் கொள்வது) உந்தப்பட்டவனாய் அவர்களை உட்காரச் சொன்னார். பியூன் கொண்டு வந்த காபி டம்ளர்களை, அவனே எடுத்து ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு பேச்சைத் துவக்கினான்.

“என்ன விஷயம்?”

“வந்து ஸார். நம் கம்பெனி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து வழக்கமா இந்த வருஷமும் நாடகம் நடத்த போறோம்”.

மானேஜர் உச்சி குளிர்ந்தான். கம்பெனி சாவனீர்களிலும், அவன் கொடுக்கும் விளம்பரத்தை வாங்கிக் கொண்டு, அவன் எழுதியதை அப்படியே பிரசுரிக்கும் இதர கம்பெனி மலர்களிலும், அவன் கதைகள் எழுதியிருந்தான். அந்த கதைகளைப் படித்துவிட்டு, இவர்கள். தன்னிடம் ‘ஸ்கிரிப்ட்’ கேட்க வந்திருக்கிறார்கள். வெரிகுட்…

வந்தவர்கள் ‘ஸ்கிரிப்டை விட்டுவிட்டு, நன்கொடை சமாச்சாரங்களை பேசினார்கள். மானேஜருக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல், வாய்விட்டே கேட்டான்.

“டிராமாவுக்கு கதை வசனம் யார் எழுதறது”.

“நம்ம அக்கெளண்டண்ட் சிங்காரம் ஸார். நீங்க தலைமை தாங்கணும்”.

“நான் தலைமை தாங்கணுமுன்னா முதல்ல ஸ்கிரிப்டை பார்க்கணும். கம்பெனிய தாக்குறது மாதிரி இருக்கா? தனிப்பட்ட மனிதரை தாக்குறது மாதிரி இருக்கான்னு பார்க்கணும்.”

ஊழியர்கள், சிங்காரத்திடம் விவரத்தைச் சொன்னார்கள். அவன் முதலில் குதித்தான். பிறகு, தன் திறமையை, சேல்ஸ் மானேஜருக்கு தெரியப்படுத்த விரும்பியவன்போல், ஸ்கிரிப்டை கொடுத்தான்.

சிங்காரத்தின் ‘ஸ்கிரிப்டை’ சதாசிவம் படித்தான். அவருக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. இதுவரை, தன்னால் மட்டுமே நன்றாக எழுத முடியும் என்று நினைத்த அவனுக்கு, அந்த ஸ்கிரிப்ட் நன்றாக இருப்பதுபோல் தோன்றியது. ஆகையால், அந்த கதை வசனத்தை அடியோடு வெறுத்தான். அதை எழுதிய சிங்காரத்தை இன்னும் அதிகமாக வெறுத்தான். ஸ்கிரிப்டில் இருந்த நுணுக்கங்களும், ஜனரஞ்சக நடையும், அவன் உள்ளத்தைக் குடைந்தன.

‘ஸ்கிரிப்ட் எப்படி லார் இருக்கு” என்று கேட்டுக் கொண்டே ஊழியர்கள் வந்தார்கள்.

“இதுக்கு பேரு ஸ்கிரிப்டாயா? கதை இல்ல… வசனம், மட்டத்திலும் மகா மட்டம். சம்பவக்கோர்வை என்கிற பேர்ல சம்போக கோர்வை… சீச்சி… இதைவிட நீங்க நாடகம் போடாமலே இருக்கலாம். வேற ஸ்கிரிப்ட்டை வேற ஆள்கிட்ட வாங்குங்க”

“டு லேட் ஸார். ஆள் கிடைக்கிறது கஷ்டம். இவன் பணம் வாங்காம எழுதிக் கொடுத்தான். மத்தவங்க பணம் கேட்பாங்க.”

“நான் பணமும் தாரேன், ஸ்கிரிப்டும் எழுதித்தாரேன். ஏன் யோசிக்கிறீங்க? என் கதைகள நீங்க படிச்சதில்லையா?”

ஊழியர்கள் மெளனமாக நடந்தார்கள். நடந்ததை சிங்காரத்திடம் சொன்னார்கள்-அவன் கத்துவான் என்று எதிர்பார்த்து. அவன் கத்தாததால் இவர்கள் கத்தினார்கள்.

“சிங்க்! எப்படிடா உன்னால கோபப்படாம இருக்க முடியுது?”

“சேல்ஸ் மானேஜர் ஆசையை எதுக்குப்பா கெடுக்கனும்?”

அக்கெளண்டண்ட் தான் ‘பெருந்தன்மையானவன்’ என்பதைக் காட்டிக் கொண்டதில் பெருமிதப் பட்டான். இதுபோல், சேல்ஸ் மானேஜரும், நாடகத்தை, சிங்காரம் ‘டைரக்ட்’ செய்ய ‘பெருந்தன்மையோடு’ சம்மதித்தான்.

ஒத்திகைகள் நடந்தன. இறுதி ஒத்திகையைப் பார்க்க சேல்ஸ் மானேஜர் சதாசிவம் வந்திருந்தான். இரண்டு மூன்று காட்சிகளைப் பார்த்தான். முதல் காட்சியில் அவன் எழுதியதே இல்லை. இரண்டாவதில், பல மாறங்கள். மூன்றாவது, முழுசாய் இன்னொன்று. சதாசிவத்தால், கத்தாமல் இருக்க முடியவில்லை.

“நிறுத்துங்க. இந்த நாடகத்தை நான் அனுமதிக்க முடியாது. என் ஸ்கிரிப்டை திருத்த எவனுக்கும் உரிமை கிடையாது.”

அக்கெளண்டண்டும், நாடக டைரக்டருமான சிங்காரமும் விடுவானா? விடவில்லை.

“சொல்லுங்களேண்டா… ஸ்கிரிப்டை திருத்த டைரக்டருக்கு உரிமை உண்டு.”

“அதுக்காக எல்லா காட்சியிலேயும் கை வைக்கிறதா?”

“எல்லாக்காட்சியும் மட்டமாக இருந்தால் என்ன பண்றது?”

“என் ஸ்கிரிப்டா மட்டம். நான்சென்ஸ், டைரக்‌ஷன்தான் மகாமட்டம்”

“என் டைரக்‌ஷனா? இடியாட்டிக். மட்டமான ஸ்கிரிப்டையும் வைத்து சிறந்த நாடகம் தயாரிக்க முடியும் என்கிறதுக்கு என் டைரக்‌ஷன் ஒரு உதாரணம்”.

“மிஸ்டர் சிங்காரம்! நீ ரொம்பத்தான் பேசுற”

“மிஸ்டர் சதாசிவம்! இங்க நீங்க மானேஜர் இல்ல. ரைட்டர். நான் அக்கெளண்டண்ட் இல்லே. டைரக்டர். டோண்ட் பீ ஸில்லி”

“வார்த்தையை அடக்கிப் பேசு. இந்த மாதிரி டைரக்‌ஷன் பண்ணியிருக்கியே. இதைவிட நீ எருமை மாடு மேய்க்கலாம்.”

“எருமைமாடு எழுதின ஸ்கிரிப்டைவிட, டைரக்‌ஷன் எவ்வளவோ மேல்.”

“டேய் என்னடா நினைச்சிக்கிட்டே?”

“டாய். என்ன நினைக்கணுங்றடா?”

“இப்படி பேசினா பல்லை உடைப்பேன்”

“இதோ நானே உடைக்கிறேன் பாரு.”

ஊழியர்கள், இருவரையும் விலக்கிவிட்டார்கள். பிறகு இரண்டு கோஷ்டிகளாகி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டார்கள். நாடகம் போடாமலே அங்கே சண்டைக் காட்சிகள் நிறைந்த நாடகம் ஒன்று தத்ரூபமாக அரங்கேறியது.

விவகாரம், மானேஜிங் டைரக்டருக்கு மட்டுமல்ல பத்திரிகைகளுக்கும் போனது. சமயம் பார்த்து கொண்டிருந்த எம்.டி. சதாசிவத்தையும், சிங்காரத்தையும் ‘சஸ்பென்ஷனில்’ வைத்திருக்கிறார். அனேகமாக இருவருக்கும் டிஸ்மிஸல் ஆகும் என்கிறார்கள்.

கடற்கரையில் கண்ணகி சிலைக்கருகே உள்ள பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு மனோதத்துவ புத்தகம் ஒன்றில் ஒரு பக்கத்தை விழுங்கி விடுபவன்போல், அக்கெளண்டண்ட் சிங்காரம் படித்துக் கொண்டிருந்தான்.

“உலகத்தில் எல்லோருமே ஒரே மாதிரி குண இயல்பு உள்ளவராய் இருந்தால், கலகந்தான் மிஞ்சும். ஒருவர் தன்னிடம் இருக்கும் குறைகளை, பிறரிடம் காணும்போது, அவரை வெறுக்கிறார். உண்மையில், இது ஆழ்மனத்தில் உள்ள சுய வெறுப்பின் சாமர்த்தியமான வெளிப்பாடு. சுய குறைகளைக் கண்டு, தன்னை வெறுக்கவிடாமல் ஒருவரது அடிமனம் அந்த குறைகளை கொண்ட இன்னொருவரை வெறுக்கிறது. ‘ஈத்’ தடுக்கிறது. ‘ஈகோ’ அவற்றை சாமர்த்தியங்களாகக் கூட நினைக்க வைக்கிறது. இதே குறைகள் இன்னொரு மனிதனிடம் பிரதிபலிக்கும்போது, ஒருவன், அவனை ஜென்மப்பகைவனாய் கருதுகிறான். வெறுப்பத மூலம் இவன், தன் ஜென்மத்தில் உள்ள குறைகளை மறைமுகமாக வெறுக்கிறான். இதனால் தான் சான்றோர்கள் தன்னை உணரச் சொன்னார்கள். திருமூலர், ‘மரத்தை மறைத்தது மாமத யானை’ என்றதுக்கும், சாக்ரடீஸ் ‘உன்னையே நீ அறிவாய்’ என்று சொன்னதுக்கும், பைபிளில் ‘உன்னைப்போல் மற்றவனை நேசி’ என்று சொன்னதுக்கும் இதுதான் காரணம். பிறரை வெறுக்கும் ஒருவன் தன்னே தானே சோதித்துக் கொள்ள வேண்டும்.”

படித்ததை நிறுத்தி விட்டு, திடுக்கிட்டவன்போல், புத்தகத்திற்கு வெளியே விழித்துப் பார்த்த சாம்பசிவத்தின் உடல், ஒருமுறை குலுங்கியது. மானேஜர் சதாசிவத்தை தன்னை கண்ணாடியில் பார்ப்பதுபோல் பார்த்தான்.

– அண்ணா – பொங்கல் மலர், 1982

– சிக்கிமுக்கிக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *