ஒய்யாரச் சென்னை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 9,885 
 

தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இரவின் காரிருளில் தவித்துக் கொண்டிருக்க சிங்கார சென்னை தன்னை அலங்கார கலர் கலராய் மின்குழல் விளக்குகளால் சீவி சிங்காரித்து மினுக்கி குலுக்கிக் கொண்டிருந்தது. அந்த குலுக்கலும், மினுக்கலும் அதிகாலை கதிரவன் வெளிச்சம் பரப்பிய பின்பும் கூட அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது.. இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணக்கூடிய சில நூறு நபர்களிடம் இருக்கும் நான்கு விலைஉயர்ந்த அடி அதிநவீனக்கார்கள் சில நிமிட இடைவேளைகளில் சென்னை மாநகரின் மையத்தில் நட்ட நடுசாலையில் நின்று கொண்டிருந்த பெரும் இயந்திரத்தினை சூழ்ந்து நின்றன.

பத்தடுக்கு மாடி கட்டிடத்தை விட உயரமான அந்த நவீன இயந்திரம் உலகம் முழுவதும் கிளைகளை விரித்திருக்கும் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு சொந்தமானது. அண்ணாசாலையின் நட்டநடுவில் சுற்றிலும் இரும்பு சுவர்களுக்கு மத்தியில் நின்று சுரங்க இரயிலுக்கான நீள்குகைகளை தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. சென்னையை நியூயார்க், டோக்கியோ போன்ற நவீன நகரங்களுடன் இணைக்கப்போகும் அந்த நவீன இயந்திரத்தினை கர்வத்துடன், பெருமையுடனும் நிமிர்ந்து பார்த்து கொண்டு இருந்தனர். நீண்ட சுரங்கம் தோண்டப்பட்டு நிறைவுற்றதற்கு சிறப்பு பூஜைக்காக இவர்கள் கூடி உள்ளனர்.

பன்னாட்டு கம்பெனி அதிகாரியும், அந்த கம்பெனியின் கூட்டுறவில் இயங்கும் இந்திய பெருமுதலாளி கம்பெனியின் அதிகாரியும், சுரங்க இரயில் பிராஜெக்ட்டின் மேலாளரும், தமிழக, டில்லி அமைச்சர்களும் யாருடைய வருகைக்காகவோ காத்திருந்தனர். செவ்வாய் கிரகத்தின் ராக்கெட் செலுத்துவதற்கு ‘அதிமுக்கிய காரணகர்த்தாவாக’ இருந்த அய்யர் குழாமின் முக்கிய குடுமி தனது பூஜை புணஸ்கார பொருள்கள் அடங்கிய காரவான் வேனில் ஆர்ப்பாட்டத்துடன் வந்து இறங்கினார். இவர் இல்லாமல் டில்லி சர்க்காரின் எந்த முக்கிய பிராஜெக்ட் வேலையும் நடக்காது என்கின்ற அளவிற்கு செல்வாக்குடைய முக்கிய ஆ’சாமி’ இவர். பூஜை வெற்றிகரமாக முடிந்தது. இந்த கடும் உழைப்பினால் காலை குளிரிலும் அந்த முக்கிய குடுமி அய்யருக்கு முத்து முத்தாய் வியர்த்தது!!

பெரிய இரும்பு பெட்டி போன்ற அறைக்குள் இருந்த கணினி திரையில் இவர்கள் அனைவரும் அமர்ந்த சுரங்கத்தின் காட்சிகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது சுரங்கத்தின் கடைசி மூலையில் மேற் கூரையை பிய்த்துக் கொண்டு கறுப்பு திரவம் கொட்டியது. அதிலிருந்து ஒரு கருத்த உருவம் ஆங்கிலப் படங்களில் வரும் வெற்று கிரக வாசி போல் மொதுவாக எழுந்து நின்றது. எல்லாரும் திரையில் அந்த உருவம் என்ன செய்கிறது என்று பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த உருவம் இப்படியும் அப்படியும் வேகமாக ஓடி அலைந்தது. சுரங்கத்திலிருந்து வெளிவர வெளிச்சம் வந்த திசையை நோக்கி ஓடி வந்தது. அது என்னவாக இருக்கும் என உடனடியாக கணிக்க முடியவில்லை.

அதிகாரிகள் மூன்று வட இந்திய தொழிலாளிகளை அந்த உருவம் என்ன என்று பார்த்து வர அனுப்பினர்.

வட இந்திய தொழிலாளிகளும் அந்த உருவமும் சந்தித்து உரையாடின. அந்த உருவம் சுரங்கத்திலிருந்து வெளி வந்தது. அதற்குள் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம் அந்த இடம் எங்கும் பரவியது. அந்த உருவம் ஒரு சென்னை கார்ப்பரேசன் துப்புரவு தொழிலாளி. சாக்கடையில் இருந்த அடைப்பை சரி செய்வதற்க்காக போதையை ஏற்றிக்கொண்டு எந்த பாதுகாப்பு உடையும் இன்றி இறங்கிய அந்த தொழிலாளி பாதள இரயிலுக்கான சுரங்கத்தினுள் பொத்து கொண்டு விழுந்து விட்டார். அந்த தொழிலாளியின் உடலெங்கும் ஒட்டி கிடந்த மனித மலம், இதர கழிவுகளை கண்டு மூக்கை பொத்து கொண்டு அங்கு கூடியிருந்த நவீன் இரயில்வே திட்ட பிராஜெக்ட்காரர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடினர். சில நொடிகளில் வடமாநில கூலி தொழிலாளர்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.

அந்த துப்புரவு தொழிலாளி போதையில் தள்ளாடிய படியே நடந்து வந்து அந்த பிரமாண்டமான இந்திரத்தினை எரிச்சலுடன் கழுத்தை நிமிர்ந்தி பார்த்தார்.

“தூத்தர்ரீ…. இன்னா எழவுக்குடா…… சாக்கிடை போற வய்யில மண்ணுக்கில எலியாட்டம் பொந்து தோண்டிகினு கிடங்கிறீங்க.. இன்னாராம் அடப்ப எட்த்திட்டு போயிருப்பேன்.. யா..வேல முடிச்சிருக்கும்..இதுக் கொசரம் இன்னொரு தாட்டி குவாட்டர் அடிக்கனும்..தாயாளிங்க…எங்கடா ஓடிரீங்க..” என்று எல்லாரையும் ஏசிக் கொண்டே அவர் முகத்தில் வழிந்த மனித மலக்கழிவை கையால் வழித்து சுண்டி வீசி எறிந்தார்.

அந்த நவீன இயந்திரத்தில் மஞ்சள் குங்கும போட்டு வைத்து தடவி பூஜை போட்ட இடத்திற்கு அருகில் சந்தனம் தெளித்தது போல் பச்சக் என்று அந்த மலக்கழிவு ஒட்டிக் கொண்டது. நவீன போக்குவரத்து வாகனங்களின் புகையின் வாசனையையும் மீறி அது மணம் வீசிக் கொண்டிருந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *