ஒத்த ரூபா…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 5,526 
 

மணி ஒன்பது அடித்ததும் ராதாவிற்கு படபடப்பு கூடியது,’ ம் என்னதான் ஓடி ஓடி செஞ்சாலும் நேரம் போறதே தெரியலை… அவசரமாக கிச்சனுக்குள் நுழைந்து காஸ் ஆப் பண்ணியிருக்கோமா என்று செக் செய்து கதவை பூட்டி பஸ்ஸை பிடிக்க ஓடினாள்.

இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தது பரவாயில்லை வேகமாக நடந்தால் சீட்டில் உட்கார்ந்து விடலாம்.. நேற்றே அந்த சிடுமூஞ்சி மானேஜர், “ மேடம் உங்களை பார்த்து மத்தவங்களும் லேட்டா வர்றாங்க.. நாளையிலர்ந்து டைமுக்கு வரலைன்னா அட்டெண்ட்டஸ்ல ஸைன் பண்ணாதீங்க…”

“என்ன சார் நான் வேணும்னா லேட்டா வர்றேன்… குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்பிட்டு அவருக்கும் லஞ்ச் ரெடி அனுப்பி வர்றதுக்குள்ள எப்படி பார்த்தாலும் ஒரு அஞ்சு பத்து நிமிஷம் லேட்டாயிடுது… “

“அது எனக்கு புரியுதுமா ஆனா ஆம்பிளைங்க லேடி ஸ்டாப்னா மட்டும் ஒண்ணும் கேட்கறதில்லைன்னு சண்டைக்கு வர்றாங்க…”

“ம் என்னதான் படிச்சாலும் இரட்டைச் சுமையை இல்ல சுமக்க வேண்டியதாயிருக்கு.. இவங்களுக்கு எங்க புரியுது.. ? யோசித்துக்கொண்டே வந்தவளை எதோ ஒரு குரல் தடுத்த்து…

“ஏ குழந்தை ஒரு ரூபா கொடேன்..?”

திரும்பி பார்த்தாள்.. கிழிசல் துணியுடன் தலை கலைந்த அந்த கிழவி இவளைத்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்…

ராதா யோசிப்பதற்குள், வழியில் சென்ற ஒருத்தி, “நீங்க போங்க மேடம் அது பைத்தியம்…இப்படிதான் போற வர்றவங்ககிட்ட காசு கேட்டுட்டிருக்கும்…”

அதோடு நேரமாகிவிடவே அந்த கிழவியை கடந்து போய்விட்டாள்.

மறு நாளும் வழக்கம் போல் அடித்து பிடித்து நடந்து கொண்டிருக்கையில் அதே கிழவியின் குரல், “ஏ குழந்தே ஒரு ரூபா கொடேன்?” கைகளால் மண்ணை அலைந்து அதில் கீழே விழுந்திருந்த வடையை பிய்த்து வாயில் போட்டு கொண்டிருந்தது… ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும் நேரமாகிவிட்டதால் கிழவியை கடந்து போய்க்கொண்டிருந்தாள்..

தினமும் அந்த குரல் பழகி விட்டது ஆனால் இன்று அந்த கிழவி இரண்டு மூன்று முறை சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தாள்.. சாலை திரும்பும் வரை அந்த குரலின் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருந்தது.. “சே பாவம் ஒரு சில்லறைய கொடுக்க கூட முடியாதளவுக்கு நாம சுய நலமா போய்ட்டோமா? அன்றிரவு முழுக்க அவளை தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது.. நாளைக்கு ரெடியா கையில் சில்லறை வச்சிக்கிடனும்… கிழவி கிட்ட கொடுத்தடனும்.. பாவம் பைத்தியமா இருந்தாலும் எதுக்கு கேட்டாளோ?”

பஸ்ஸை விட்டு இறங்கியதும்… கையில் சில்லறைகளை வைத்துக்கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.. இன்று ‘ஏ குழந்தை ஒரு ரூபா கொடேன்…? கேட்கவில்லை… சுற்று முற்றும் தேடியவள் கொஞ்ச தூரத்தில் இருந்த கூட்டத்தில்தான் பார்த்தாள்…

“பாவம் கிழவி.. தெனம் போற வர்றவங்களை எல்லாம் கூச்சல் போட்டுட்டிருக்கும்.. நேத்து பேஞ்ச மழையில் காவாய் இருக்கறது தெரியாம விழுந்து செத்து போயுடுச்சு….” கூடையில் காய் கறி சுமந்திருந்த ஒருத்தி சொல்லிக்கொண்டிருந்தாள்…

ராதாவின் கையில் இருந்த சில்லறைகள் நழுவிக்கொண்டிருந்தது..ஒத்தை காசு ஒன்று கிழவியின் கை அருகில் போய் சுருண்டு நின்றது.

– 18 June 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *