என்னை ஏமாற்ற முடியாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 8,932 
 

கொல்கத்தா காளி ரொம்ப ஃபேமஸ் என்று நண்பர் சொன்னார். வேறு ஒன்றும் இல்லை. நான் அலுவலக விஷயமாய் கொல்கத்தா செல்வதாகச் சொன்னேன் அவரிடம். “போயிட்டு வாங்க. நாலு ஊருக்குப் போயிட்டு வந்தாத்தான் உங்களுக்கும் அனுபவம் கிடைக்கும்” என்றார்.

ஆகக் கிளம்பி வந்தாச்சு. அலுவலக வேலையும் சுலபமாய் முடிந்தது. என்ன.. எனக்கு ஹிந்தி தெரியாது. நான் போன அலுவலகத்தில் பெங்காலியும் ஹிந்தியும்தான் அதிகம். பாதி சைகையில், பாதி ஆங்கிலம். சமாளித்து விட்டேன். இனி ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான். அரைநாள் மிச்சம். இரவு ரெயிலைப் பிடித்தால் போதும். அப்போதுதான் காளி கோயில் ஞாபகம் வந்தது. மினி பஸ்ஸில் ஏறி காளிகாட்டில் இறங்கி விட்டேன்.

“காளி மந்திர் கிதர் ஹை?”

“ஸீதா சலோ”

நடந்தேன். இருபுறமும் கடைகள். என்னைச் சிலர் துரத்த ஆரம்பித்தார்கள்.

“நீங்க வரிசையில காத்திருக்க வேணாம். நேரா மூலஸ்தானத்துக்குக் கூட்டிகிட்டு போறோம்” என்றார்கள் ஹிந்தியில். நான் பதிலே சொல்லவில்லை. நண்பர் முன்பே எச்சரித்து இருந்தார். என்னைத் துரத்தி அலுத்துப் போய் வேறு நபரைத் தேடி நகர்ந்தார்கள். கோவில் வாசலில் அர்ச்சனை சாமான்கள் விற்கும் கடை. ஒரு புறம் செருப்பு விட வசதி.

“ஆயியே..”

பெஞ்சில் அமர்ந்தேன். ஷூவைக் கழற்றி வைத்தேன். காளியைத் தரிசித்தால் போதும். கடைக்குள் நுழையும் முன்பே பார்த்து விட்டேன். ஏகக் கூட்டம். குனிந்த தலை நிமிராமல் – அர்ச்சனை சாமான் வாங்க வற்புறுத்துவார்களோ என்ற பயம் – வெளியே வந்தபோது கடைக்கார பெண்மணி ஹிந்தியில் வேகமாய் ஏதோ சொல்வது கேட்டது. நான் திரும்பவில்லை.
பின்னாலேயே துரத்தி வந்தார். அவர் கையில் தண்ணீர்ச் செம்பு. “கையைக் கழுவிக்குங்க.. ஷூவைக் கழற்றியதோட போறீங்களே”

பாஷை புரியாவிட்டாலும் அவள் சைகையின் அர்த்தம் புரிந்தது.

கையைக் கழுவிக் கொண்டேன். மனதையும் தான்!

– மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *