எங்க ஊரு இலங்காமணித் தாத்தா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 1,855 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் பிறந்த ஊரு ராசாங்கோயில். சிறு கிராமம், கரிசல் பூமி, குடிதண்ணிக்குக் கூப்பாடு. ஆனா அதுக்குன்னு ஒரு பெருமை இருக்கு.

கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக்குப் பக்கத்துப்பட்டி. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பிறந்த ஒட்டப்பிடாரம் எங்களுக்கு ஓடும் தூரம்தான். புரட்சிக்கவி பாரதி பிறந்த எட்டயபுரம் கொஞ்சம் எட்டின தூரம்.

ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல்லார் கல்விப் பணி ஆற்றிய தூத்துக்குடி எங்களுக்குப் பக்கத்துப் பட்டணம். பகல் ஏற ஏற பாலை வெயில் கொளுத்தும். மாலையில் கடல் காற்று கொஞ்சம் ஊஞ்சலாட்டும்.

என் சிறுவயதில் உப்புத் தண்ணீருக்கு எங்க ஊரு உலகப் பிரசித்தம். நிறைய இறவைக் கிணறுகள் இருக்கு. எல்லாம் உவர் தண்ணீர். குளத்துக்குள்ள ஊத்துத்தோண்டி ஊற ஊற தண்ணி எடுத்துக் குடிப்போம். கண்ணீர் மாதிரி சொட்டு சொட்டா தண்ணி சுரக்கும். அதை சிரட்டையில் வழிச்சி வழிச்சி மண்குடத்துல ஊத்துறது தனிக்கலை.

கரிசல் மண்ணுக்குன்னு தனியா ஒரு மணமுண்டு. ஆண்டுக்கு மூணு மழை பெய்யும் வானம் பாத்த பூமி. அந்த மழையும் பெய்யாட்டா வனாந்தர பூமி. எந்த நதியும் எங்களை நினைத்தது மில்லை, நனைத்தது மில்லை.

உவர் தண்ணிக்கு மிளகாய் நல்லா காய்க்கும், எள்ளுச்செடி துள்ளி வளரும்.

எங்க மொழியே தனி. ‘என்னல, எசக்கி எப்படி இருக்கா?’ இப்படித்தான் நலன் விசாரிப்போம். எங்க பேச்சு மொழி கொச்சையாத்தான் இருக்கும், ஆனா இலக்கியம் கொஞ்சி விளையாடும்.

ஊருக்கு மத்தியில் வேதக்கோயில். மேலக் கடைசியில் அம்மன் கோயில். ரெண்டு கோயில்கள் முன்பும் வேப்ப மரங்கள் அடர்ந்திருக்கும். வேப்பங்காற்று ஜிலுஜிலுவென்றிருக்கும். சோம்பல் முறிப்பது, தூங்கி வழிவது வம்பளப்பது எல்லாம் இரு கோயில்களின் மண்டபங்களில்தான்.

வறண்ட எங்க ஊர்ல அறிவுக்குப் பஞ்சமே கிடையாது. அரசியல் பிச்சி உதறுவாங்க. வீட்டுக்கு ஒருவர் பர்மா, மலேசியா, சிங்கப்பூர், கொழும்புன்னு திரைகடல் ஓடி திரவியம் தேடப்போயிட்டாங்க. அதனால நாகரீகம் வேகம் வேகமாக ஊடுறுவியது.

எங்க வீடு வேதக் கோயிலுக்கு மேல்பக்கம் தெக்கு வரிசையில் முதல்வீடு, உண்டு முடியவும் கைதுடைக்க வேதக்கோயில் மண்டபத்துக்குப் போயிருவேன். எப்பவும் அங்க கூட்டம் வழியும். வழக்காடு மன்றம், பட்டிமன்றம், பஞ்சாயத்து, குடும்பச் சண்டை, விசாரணை எல்லாம் அந்த மண்டபத்தில்தான்.

மண்டபத்து மகா சந்தடிக்கு மத்தியில் இலங்காமணித் தாத்தா அமைதியா அமர்ந்திருப்பாரு. தொண்ணூறு வயதுன்னோ, தொண்டுக் கிழவருன்னோ யாரும் சொல்ல மாட்டாங்க. இலங்கா மணித் தாத்தா, இலங்காமணிப் போத்தி, இலங்காமணிப் பாட்டயா, இலங்காமணி வைத்தியர்..இப்படிப் பல பேர்களில் அழைப்பார்கள்.

மண்டபத்து மூணாம்படியில் உட்கார்ந்து, நாலாம்படியில் முதுகைச் சாய்த்து வலக்கையில் தடிக்கம்பைப் பிடித்து அமர்ந்திருக்கும் காட்சி ஒரு குறுநில மன்னன் போன்றிருக்கும்.

நாலு முழ வேட்டி இடுப்பில், மூணு முழ முண்டாசு தலையில்….இவ்வளவே அவரது ஆடை அலங்காரம். கருகருவென்று வைரம் பாய்ந்த உடல் ஈ, எறும்பு…எதுவும் அவர் பக்கம் அண்டாது. தேள் கொட்டினா கொடுக்குதான் உடையும்.

அவருக்கு வெள்ளை உள்ளம். பொறாமை, பூசல், சூது வாது எதுவும் கிடையாது.

ஒரு பிரச்சினையைச் சொன்னா அமைதியா கேப்பாரு. பதில் ஒரு பழமொழியாகவோ, உவமையாகவோதான் இருக்கும். தம் கருத்தை பிசிறு தட்டாம தெளிவா சொல்வாரு.

1945 முதல் 1950 வரை நான் ஊரில் இருக்கும் போது அவரோடு உரையாடுவேன். மண்டபத்தில் நடக்கும் வாதப் பிரதிவாதங்கள், அடிபிடி சண்டைகள் ஒன்றையும் கண்டு கொள்ளமாட்டார்.

alol அவரோடு பேசுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

எங்க ஊருக்குக் கிழக்கே மூணுகல் தொலைவிலுள்ள பண்ணை யூரில் (நயினாபுரம்) நான் வாத்தியாரு. அன்னக்கி சனிக்கிழமை. லீவ் நாள். காலை பத்து மணிக்கு தாத்தா பக்கத்தில் அமர்ந்தேன்.

கைத்தடியை ஒரு குத்து குத்தி என்னை வரவேற்றார். நான் பேசினேன்.

தாத்தா, நம்ம ஊர்ல ஒரு அசிங்கம். நம்ம ஊருக்கு புதுசா ஒரு பிச்சக்காரி வந்திருக்கா. அவா அநாதை. நிறை கர்ப்பிணி. ஆர் கொடுத்த புண்ணியமோ! பரிதாபமா இருக்கு. அம்மங்கோயில் மண்டபத்தில படுத்து கிடக்கா. பாவப்பட்டு யாராவது கொண்டு கஞ்சி கொடுக்காங்க. எந்த ஊரு, என்ன ஏது ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறா. கேட்டா அழுறா….

நம்ம ஊரு கிறுக்குப் பய சோதிமுத்து இருக்கான்ல அவன் அவாட்டப் போயி சரசம் பண்றான். தொடுறான். முத்தம் கொடுக்கிறான். அவா அடிச்சா தொடச்சிகிறான். வீடுகளில் சோளக்கஞ்சி வாங்கிக் கொடுக்கான். ஒரே சிரிப்பு, ஒரே அசிங்கம், ஊரே நாறுது தாத்தா!

அவரது பதிலை எதிர்பார்த்தேன். உதட்டுக்குள்ளே சிரித்தபடி தடிக்கம்பை ஓங்கி ஒரு குத்துக் குத்தினார். கல் தரையில் தணார் என்று ஒலி எழுந்தது.

தாத்தா பேசினார்:

“அடே, சீவனத்த கழுதைக்கு சினக்கழுதை வைப்பாட்டி,” அப்படியாவது அவங்க சந்தோஷமா இருக்கட்டுமே, ஒண்ணுக்கொண்ணு துணை. ஊர் ஒண்ணும் நாறாது. பாவம் அதுகள்” என்றார்.

வேறு பேச்சே கிடையாது. அப்பொழுது மாணிக்கம் அண்ணன் வந்து “தாத்தா, இடது கால் முட்டு வாதம் போல வலிக்கு” என்றார்.

இலங்காமணித் தாத்தா சொன்னார்; அம்பதுவயசுக்குள்ள வாதமால, குப்பைமேனி இலையில் இரண்டை வதக்கி சோத்தோடு சேத்து மூணு வேளையும் சாப்பிடு. வாதம், கீதம் எல்லாம் காத தூரம் ஓடிடும்… போ…போ…. என்றார்.

நானும் எழுந்து சென்றேன். வீட்டில் போய்தான் தாத்தா சொன்ன பழமொழியின் ஆழத்தை சிந்தித்தேன். ஊர் முழுவதும் கேலியும், கிண்டலுமாகப் பேசுகிற ஒரு காரியத்தைக் குறித்து அவர் எவ்வளவு அனுதாபத்தோடு பார்க்கிறார். அவரது பழமொழியில் உயிர் துள்ளுவது போன்று எனக்குத் தோன்றியது. இலங்காமணித் தாத்தாவை மனத்தால் பூஜித்தேன்.

மாதங்கள் பல கடந்தன. சுதந்திரத்திற்குப் பிறகும் பண்ணையூரில் தலைவிரித்தாடிய கொத்தடிமைத் தனங்களையும் – ஏழை எளிய மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதையும் எதிர்த்துப் போராட வேண்டி இருந்தது.

ஞாயிறு நாட்களில் மாலை மூன்று மணிக்குப் பிறகுதான் தாத்தா கோயில் மண்டபத்திற்கு வருவார்.

அவருக்காகக் காத்திருந்தேன். கையில் கோலுடன், தலையில் பாகையுடன் அவர் வந்த தோற்றம் என்னை அசத்தியது. மண்டபப் படியில் சாய்ந்து சாய்ந்து அவர் முதுகு தேய்ந்து காய்ப்பேறி இருந்தது.

யோபு வந்து, “போத்தி உமக்கு வயது என்ன ஆவுது?” என்று கேட்டான்.

அதுக்கு அவர் சொன்ன பதில், “இம்மட்டாக என்னை தூக்கிச் சுமக்கும் காலப்பறவையை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்” என்றார்.

யோபுவுக்கு ஒன்னும் புரியாமல் போய் விட்டான். வயசக் கேட்டா தாத்தாவுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும்.

நான் பேச ஆரம்பிச்சேன்: நம்ம வயணன் பயலுக்கு இப்ப நல்ல துட்டு. தூத்துக்குடியில் ஒரு வைப்பாட்டி வச்சிருக்கானாம். இங்க வீட்ல ஒரே சண்டை. பொண்டாட்டி சோறு கொடுக்காம வௌக்கமாறை தூக்குறா … ஒரே சண்டைக்காடு. ஊருல அவனுக்குச் சப்போட்டு, வருமானம் பாக்றான். வப்பாட்டி வச்சா என்னன்னு கேக்குறானுக.

தாத்தா சாந்தமா இருந்தாரு. தடியை தூக்கி இரு ஓரங்களையும் வருடியவாறு வீரத்தோடு பேசினார்.

“ஆம்பளை சேறு கண்ட இடத்தில் மிதிப்பான், தண்ணி கண்ட இடத்தில் கழுவுவான். ஆம்பளைக்குக் கற்பு கிடையாது, என்று ஒரு சொலவிடையை சொன்னான் பாரு, அவனையும் அந்த சமூகத்தையும் பழைய செருப்பால அடிக்கணும்” என்று கண்களில் கனல் பறக்கச் சென்னார்.

அவர் சொல்லின் ஆழம் கண்டு திகைத்துப் போனேன். பழமொழிகள் மக்கள் வழங்கும் நாணயங்கள் போல எனக்குத் தோன்றின.

முப்பது வயது நடராஜன் வயித்தத் தடவிக் கொண்டே வந்தான்.

“பாட்டயா, வயிர் இரயிது, ஊதுது, வலிக்குது” என்றான்.

இலங்காமணியார் சொன்னார் : “ஏல. குட்டப்பயல கலியாண வீட்ல கிடச்சிப் போச்சின்னு அள்ளி அடஞ்சியோ? மாட்டுப்பயல, தின்னது சீரணிச்ச பிறகுதான் சாப்படணும். அப்படிச் செய்தா மருந்தே வேண்டாம். இன்னிக்கு முழுதும் பட்டினி கிட பச்சத்தண்ணிய நிறைய குடி…சுகமாயிரும் போ” என்றார்.

என் வாத்தியார் வாழ்க்கையில் புயல் வீசியது. சுதந்திரம் சோறு போடாததை கண்ட இளம் உள்ளங்கள் வீறுகொண்டு கொதித்து எழுந்தன.

பொதுஉடைமை இயக்கம் தடை செய்யப்பட்டது. பலரை சித்திரவதை செய்து சிறையில் தள்ளினர். தலைமறைவுத் தோழர்களின் தலையைக் காப்பாற்ற வேண்டி இருந்தது.

1950 ஆம் ஆண்டு “கம்யூனிஸ்ட்” என்று கைது செய்யப்பட்டேன். கொடிய அடிபாடுகளுக்குப் பிறகு சிறைவாசம். அதன் பிறகு சதி வழக்கில் இணைப்பு – மூன்று ஆண்டுகளாக விசாரணைகளும், சிறைக்கொடுமைகளும்.

சத்தியம் என்னை விடுதலை செய்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்கு வருகிறேன். மனதிற்குள் ஓர் ஆசை. இலங்காமணித் தாத்தாவின் கல்லறையில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது. வத்தி , பத்தி, தீப்பெட்டி, மாலை இவ்வளவையும் வாங்கி பைக்கு அடியில் ரகசியமாக வைத்துக் கொண்டேன்.

நான் சிறையிலிருக்கும் போது எங்க வீட்ல போலீஸ் ரெய்டு பண்ணி என்னுடைய புத்தகங்கள், நோட்டுகள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். வீடு நொறுங்கிப் போயிருந்தது.

“ரெண்டு பயல்களுக்கும் கலியாணத்த கட்டி வச்சிட்டு சாகணும்” என்று மகிழ்ச்சியோடு தந்தை சொல்லுகின்றபோது, அவர்களது வெற்றிலைக் காவிப்பற்கள் மினுங்கின. தம்பியின் விடுதலைக்காகக் கவலையோடு காத்திருந்த அண்ணன் கோயில்பிள்ளை வாத்தியார் கலியாணம் கட்டிக் கொள்ள சம்மதித்தார்.

மேலத்தெருவில் செத்த கொட்டு சத்தம் கேக்குது, என்னன்னு ஐயாவிடம் கேட்டேன்.

இலங்காமணி வீட்டில் என்று எந்தை சொல்லி முடிக்குமுன் எனக்கிருந்த மகிழ்ச்சி சொல்லி முடியாதிருந்தது.

“இலங்காமணியர் இவ்வளவு நாளும் உயிரோடிந்தாரா? நான் கொடுத்து வச்சவன். அவரது இறப்பு நிகழ்வை பார்க்க முடிந்ததே…!” அவர் இறந்த துக்கத்தை விட மகிழ்ச்சியே அதிகமாயிருந்தது. அவருக்கு இறுதி மரியாதை செய்யலாமே என்ற ஆவல் மேலிட்டது.

அவர் வீட்டை நோக்கி நடந்தேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. ஆனந்தக் கண்ணீர் உருண்டோடியது.

இலங்காமணித் தாத்தா கையில் தடியுடன் மெதுவாக வந்து கொண்டிருந்தார் என்னை தழுவிக் கட்டியவாறு, “நம்ம கொள்ளைக்காரங்களைவிட வெள்ளைக்காரங்க தேவலைன்னு சொன்னேனே கேட்டியா? நீ விடுதலையாகி வந்திருக்கன்னு கேள்விப்பட்டு வாறேன்” என்றார்.

“தாத்தா, கொட்டுச் சத்தம் கேட்டுச்சே” என்றேன். “கோட்டிக்காரப் பயலுக… ஏம் பேரமாறு… எனக்கு இன்னக்கோட நூறு வயசு முடியுதுன்னு கண்டு பிடிச்சிட்டங்களாம். மாம்பழத்துக்குள்ள எப்படி வண்டு புகுந்ததுன்னு இவன்களுக்குத் தெரியுமா? மடப்பயல்க செத்த கொட்டப் போட்டு முழக்குறான்க… சின்ன இலங்காமணி திருநெல்வேலியில கட வச்சிருக்கான். அவன் வேலைதான் இது” என்றார் தாத்தா.

தேய்ந்து நறுங்கிப் போன அவரது பற்களிலிருந்து பிரகாசம் பளிச்சிட்டது.

– 2004 ஆகஸ்ட் தாமரை, ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *