எங்கோ ஒரு நகரத்தில்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 2,919 
 

கரு நிறத் தூசியினால் மூடப்பட்டிருக்கும் பாழடைந்த கட்டடங்களுக்கு மத்தியில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டு குளவிக் கூடு கலைந்தாற் போல மக்கள் பரபரப்புடன் செல்லும் வீதிகள் நிறைந்த நகரம் அது. வெய்யில் கொளுத்தும் பகல் நேரத்திலும் நடு இரவிலும் அந்நகரம் உடலுக்கு ஓர் இருட்டுணர்வை வழங்கிக் கொண்டிருந்தது. நாய்களினால் கடித்துக் குதறப்பட்டிருக்கும் மாட்டுப் பிணங்களிலிருந்து வரும் துர்நாற்றத்தை இயல்பாகவே சகித்துக் கொள்ளும் மக்கள் வாழும் நகரம் அது. மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு சில மணி நேரம் வழிப்போக்கர்கள் தற்காலிக ஓய்விடம் ஒன்றில் தங்கியிருக்கும் விதத்தில் முழு வாழ்க்கையையும் கழித்து வரும் நகரம் அது. ஏதோ ஒரு காரணத்தினால் அந்த நகரத்தின் மீது எனக்கு இனம் புரியாத ஒரு கவர்ச்சி ஏற்பட்டிருந்தது.

நான் ஒரே ஒரு தடவைதான் அந்நகரத்துக்குச் சென்றிருக்கிறேன். வாழ்க்கை என்றால் என்ன என்பதனைப் புதிதாகச் சொல்லித் தரக்கூடிய மனிதர்களை அங்கு சந்தித்தேன். வானம் தெளிவாகத் தென்பட்ட அமைதியான இரவில் ஓர் இளம் பெண் பாடும் காதல் பாடலொன்றை அரைப் பட்டினியுடன் செவிமடுக்கும் அதியற்புதமான பரவச அனுபவம் அந்நகரத்தில் எனக்குக் கிடைத்தது. இப்போது நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் இதயத்தை உறையச் செய்யும் மனவேதனையாக அந்தப் பரவசம் மாற்றமடைகின்றது.

மூன்றாம் உலக மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்தும் பொருட்டு செயற்பட்டு வரும் தொண்டர் நிறுவனமொன்றின் மாநாடு கொழும்பில் நடைபெற்ற போதே நான் முதன் முதலில் பிரேந்திரகுமாரைச் சந்தித்தேன். அவன் இந்தியாவின் கான்பூர் நகரிலிருந்து வந்திருந்தான். மலர்ந்த முகமும் செயல்துடிப்பும் மிக்க இளைஞன் அவன். அவனுக்கு சுருட்டை முடியாக இல்லாவிட்டாலும் கூட ஓரளவுக்கு படிந்த கேசம். வட்ட முகம், பிரகாசமான கண்கள், கூரான நாசி, கச்சிதமாக வெட்டிய மீசை உடலுக்கு ஓர் ஆபரணம் போல் இருந்தது.

நாங்கள் நல்ல சினேகிதர்களாக ஆகிவிட்டோம்.

“இந்த வேலைத் திட்டத்தின் மூலம் எங்கள் நகரத்துக்கு ஒரு நல்ல சேவையை செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும் என நினைக்கிறேன்”.

மாநாடு ஆரம்பமாகிய நாளன்றே அவன் இவ்வாறு என்னிடம் சொன்னான்.

“உங்கள் நகரம் எப்படிப்பட்டது?” என நான் அவனிடம் கேட்டேன்.

“அது ஒரு பெரிய கைத்தொழில் நகரம்” என அவன் சுருக்கமாகப் பதிலளித்தான்.

“எமது பிரதேச மக்களின் கல்வித் தரம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. அதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும். என்னால் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கிறேன்”.

பிரேந்திரகுமார் அன்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசினான். தனது அப்பாவின் வழிகாட்டுதல் காரணமாகவே தானும் தனது சகோதரனும் மூத்த சகோதரியும் பட்டதாரிகள் ஆகியதாக அவன் சொன்னான். தன்னுடைய அப்பா குறித்து மிகுந்த மரியாதையுடன் அவன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.

அச்சந்திப்பு நிகழ்ந்து மூன்று வருடங்களின் பின்னர் இந்தியாவுக்குச் செல்லும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் பயணத்தின் போது எனது நண்பனையும் சந்திக்க வேண்டும் என நான் உறுதி பூண்டிருந்தேன்.

பிரேந்திரகுமாருடன் அறிமுகம் ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்து நாங்கள் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டோம். அவனுக்கு அனுப்பிய பல கடிதங்களில் இந்தியாவைப் பார்ப்பதற்கு வெகுவிரைவிலேயே அங்கு வரவுள்ளேன் என எழுதியிருந்தேன். கான்பூர் நகரத்துக்குள் பிரவேசிக்கக் கூடிய ஒரு சில மார்க்கங்களை அவன் எனக்கு எழுதியிருந்தான். என்னை வரவேற்பதற்கு அவனும் அவனுடைய குடும்பத்தினரும் ஆர்வத்துடன் காத்திருப்பதனை அக்கடிங்கள் உணர்த்தின.

எனது வாக்குறுதி ஒரு எதிர்பார்ப்பாக மாற்றமடைந்த விதத்தில் காலம் கரைந்து சென்றது. எமக்கிடையில் இடம்பெற்ற கடிதப் பரிவர்த்தனையின் கால இடைவெளியும் வரவர அதிகரித்துச் சென்றது. அவனிடமிருந்து எனக்கு கடைசியாகக் கிடைத்த கடிதத்துக்கும், இந்தத் தடவை நான் நிச்சயமாக அங்கு வரவுள்ளேன் என்பதனைத் தெரிவித்து நான் எழுதிய கடிதத்துக்குமிடையிலான கால இடைவெளி சுமார் ஒன்றரை வருடம் அளவில் இருக்கும். எனினும், நான் அங்கு வருகின்றேன் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் என்னைப் பார்ப்பதற்கு அவன் துடித்துக் கொண்டிருப்பதனை என்னால் உணர முடிந்த்து.

நான் ரெயில் வண்டியில் கான்பூருக்குச் சென்றேன். ஒரு கைத்தொழில் நகரத்தைத் தூரத்திலிருந்தே இனங்கண்டு கொள்ள முடியும். வானில் புகை மண்டலத்தைக் கக்கும் புகை போக்கிகளுடன் கூடிய நெடிதுயர்ந்த கட்டடங்கள் அதற்கு அடையாளம். இத்தகைய கட்டடங்களைப் பார்க்கும் எதிர்பார்ப்புடன் நான் ரெயில் பெட்டியிலிருந்து வெளியே கழுத்தை நீட்டினேன். துர்நாற்றம் சகிக்க முடியாததாக இருந்தது. நகரம் அண்மித்திருந்தமையினால் ரெயில் மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. இந்தத் துர்நாற்றம் எங்கிருந்து வருகின்றது என்பதனை அறிந்து எனது கண்களை தரையை நோக்கித் தாழ்த்தினேன். அங்கு வெவ்வேறு அளவுகளில் அழுகிக் கிடந்த மாட்டுப் பிணங்களையே காண முடிந்தது. ரெயில் பாதையுடன் இணையான விதத்தில் அதே உயரத்தில் நீண்ட வரிசையில் குடிசைகள் அமைந்திருந்தன. இந்தக் குடிசைகளுக்கும் ரெயில் பாதைக்குமிடையில் வரண்ட ஒரு நீரோடை போல ஒரு தாழ்நிலப் பரப்பு இருந்தது. இந்தத் தாழ்நிலப் பரப்பில் மாட்டுப் பிணங்கள் குவிக்கப்பட்டிருந்தன.

ஒரு நாய்க் கூட்டம் கன்றுக் குட்டியொன்றின் குடலை வெளியில் எடுத்துத் தின்று கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் ஒரு நாய் அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்த வேறு ஒரு நாயைத் துரத்திச் செல்வதனைப் பார்ப்பதற்குக் கண்களைத் திருப்பிய போது சிறு புதர்களுக்கிடையில் சிலர் மலம் கழித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நான் பார்ப்பதற்கு சென்று கொண்டிருந்த பெரிய கைத்தொழில் நகரத்தின் பிரதான ரெயில் நிலையத்துக்கு அரை மைல் தொலைவிலேயே இக்காட்சிகளைக் காண நேரிட்டது.

ரெயில் வண்டி மெதுவாக முன்னால் ஊர்ந்து செல்ல அதனுடன் இணைந்த விதத்தில் வந்து கொண்டிருந்த குடிசை வரிசை நின்றது. அந்த இடத்திலிருந்து நிலக்கரித் தூள் குவியல்கள் தென்படத் தொடங்கின. அந்த நிலக்கரித்தூள் குவியல்களுக்குள் உடலும், உடையும் ஒரே விதத்தில் கருமை படர்ந்திருந்த ஆண்களும், பெண்களும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களால் கிளறி விடப்படும் தூசுப்படலம் ஒரு பகையைத் தீர்த்துக் கொள்வதற்குச் செல்வதைப் போல நகரத்தை நோக்கி விரைந்து செல்கின்றது.

நிலக்கரித்தூள் குவியல்களைத் தாண்டிச் செல்லும் போது, மீண்டும் குடிசைகளின் வரிசை தென்படுகிறது. ஏழு, எட்டு அடிகளுக்கு மேற்படாத நீள, அகல, உயரம் கொண்ட மண்குடிசைகள் அவை. அவற்றின் கூரைகள் தகரத்தினாலும் பொலித்தீன் கடதாசியினாலும் மூடப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்து பார்க்குப் போது, இக்குடிசை வரிசை நகரத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட ஓர் அழுக்கு வேலி போல தென்படுகிறது. குடிசை வாசல்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் கயிற்றுக் கட்டில்களில் சிறுவர்கள் அல்லது வயோதிபர்கள் கைகால்களை அசைக்க முடியாத ஏதோ நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் போல அமர்ந்திருக்கின்றார்கள்.

ரெயில் நிலையம் பிரம்மாண்டமான ஒரு பழைய கட்டடத்தில் அமைந்திருந்தது. அதற்குள் பயமுறுத்தும் விதத்தில் இருள் சூழ்ந்திருந்தது. ரெயில் வண்டியிலிருந்து கீழே இறங்கிய போது, முண்டியடித்துக் கொண்டு செல்லும் மக்களுக்கு மத்தியில் நான் நெரிசலில் சிக்கித் திணறினேன். பிரயாணிகளின் நெருக்குதல்களுக்கு உள்ளாகும் போது, இயல்பாகவே ஆட்கள் வெளியில் தள்ளப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வெளியே வீசப்படுகிறார்கள்.

நானிங்கு ஏன் வந்தேன், எங்கு செல்கிறேன் என்பதெல்லாம் மறந்து விட்டது போலிருந்தது. மனக்குழப்பம் அதிகரித்தது. வியர்வையும் தூசும் கலந்த முகங்களுடன் சைக்கிள் ரிக்ஷாக்காரர்களைப் பார்க்கும் பொழுது, அவர்கள் முரட்டுப் பிச்சைக்காரர்கள் போல தென்பட்டனர். அவர்கள் கெஞ்சி இரந்து பயணிகளை தங்கள் வண்டிகளில் ஏற்றிக் கொள்கிறார்கள். அதன் பின்னர், அவர்களிடம் ஒழுக்க நெறிமுறைகளோ நீதி நியாயமோ இருப்பதில்லை. முச்சக்கர சைக்கிள் ரிக்ஷா வண்டிகளின் பின்பக்கத்திலிருக்கும் பலகையில் இரண்டு மூன்று பேரை ஒன்றாக உட்கார வைத்து, வியர்வை சிந்தியவாறு அவற்றை ஓட்டிச் செல்லும் இந்த இரும்பு மனிதர்களைப் பார்க்கும் பொழுது, அவர்கள் வீதி ஒழுங்குகளைத் துச்சமாக மதிக்கும் நகரத்துக்கே உரித்தான விசேடமான படைப்புகளாக எனக்குத் தோன்றினர்.

பிரேந்திரகுமார் என்னிடம் தந்திருந்த முகவரியின் படி அவர்கள் தர்சன்பூர்வா என்ற இடத்தில் வசித்து வருகின்றார்கள் என்பதை அறிந்திருந்தேன். ரெயில் நிலையத்திலிருந்து தர்சன்பூர்வா வரையில் மேற்கொண்ட சைக்கிள் ரிக்ஷா பயணத்தின் போது, இடையில் இரு தடவைகள் அதிலிருந்து கீழே குதிக்க வேண்டி நேரிட்டது. ஒரு முறை ரெயில் பாதையைக் கடந்து ரிக்ஷா பயணம் செய்த பொழுது நான் கீழே குதித்தேன். இரு பக்கங்களிலும் செல்லும் வாகனங்களுக்கென பாதையை இரண்டாகப் பிரித்துப் பயன்படுத்தும் வழக்கம் இந்த நகரத்திலில்லை. ரெயில் கேட் மூடப்படும் பொழுது, இரு பக்கங்களிலும் வீதி முழுதிலும் வாகனங்கள் ஒன்று குவிகின்றன. சைக்கிள் ரிக்ஷாக்களும், மோட்டார் சைக்கிள்களும் மற்றும் எருமை மாட்டு வண்டிகளும் மிக அதிகளவில் உள்ளன. ரெயில் கேட் மேலே தூக்கப்படும் கணத்திலேயே சொற்ப இடம் கிடைக்கும் எந்தவொரு மூலையிலும் நுழைந்து செல்கின்றனர் வாகன ஓட்டிகள்.

நான் பயணித்த ரிக்ஷா அவ்விதம் நுழைவதற்கு முயற்சித்த பொழுது வாகனங்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டது. இன்னொரு ரெயில் வண்டியின் ஹாரன் ஒலி மிக அருகில் கேட்கத் தொடங்கியது. ரிக்ஷாக்காரன் கீழே இறங்கி வண்டியைத் தள்ள ஆரம்பித்தான். மரண பயத்தில் கீழே குதித்த நான் எதிர்த்திசையில் செல்வதற்குத் திணறிக் கொண்டிருந்த மற்றொரு ரிக்ஷாக்காரனின் மேல் மோதினேன். ஹிந்தி தூஷணை வார்த்தைகள் எனக்குப் புரியவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த ரிக்ஷாக்காரன் இந்த வார்த்தைகளின் மூலம் அவர்களுடைய வீதி ஒழுங்குகளை எனக்கு சொல்லித் தந்தான் என்பது விளங்கியது.

எருமை மாட்டு வண்டியொன்றிடமிருந்து தப்பிக் கொள்வதற்காகவே நான் இரண்டாவது தடவை ரிக்ஷாவிலிருந்து கீழே குதித்தேன். ஒரு லொறியில் ஏற்றிச் செல்ல முடியாத அளவு அதிகமான இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஒரு வண்டியை எங்கள் ரிக்ஷா முந்திச் சென்றது. தார் நிறத்தில் கருப்பாக இருந்த கொழுத்த எருமை மாடொன்று இந்த வண்டியை இழுத்துச் சென்று கொண்டிருந்தது. மாட்டின் முதுகுக்கு மேல் வண்டியின் நுகத்தடியின் முனைக்கும் அப்பால் சுமார் இண்டடி நீளத்தில் இரும்புக் கம்பிகள் துருத்திக் கொண்டிருந்தன. எனது ரிக்ஷா இந்த எருமை வண்டியை முந்திச் சென்ற பொழுது இன்னொரு ரிக்ஷாவுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்கென ஒரேயடியாக நிறுத்தப்பட்டது. வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசலுக்கு இந்த எருமை மாடுதான் காரணம் என எண்ணியதைப் போல வண்டிக்காரன் தொடர்ந்தும் அந்த மாட்டுக்கு அடித்துக் கொண்டிருக்கும் சப்தம் பின்னால் கேட்கிறது. நான் திரும்பிப் பார்த்த பொழுது இரும்புக் கம்பிகள் எனது முதுகில் உரசிக் கொண்டு நின்றன. வீதி ஓரத்தில் கொதித்துக் கொண்டிருந்த ஓர் எண்ணெய்ச் சட்டியில் விழாமல் கெட்டித்தனமாகக் கீழே குதிக்கும் அளவுக்கு நான் ஒரு கான்பூர்வாசியாக மாறியிருந்தேன்.

நாங்கள் பயணம் செய்த வீதிகளில் சில இடங்களில் ஹோட்டல்களும், பசு மாடுகளும், கட்டில்களும் நடுவீதியில் கிடந்தன. வீதியில் அடுப்புகளை அமைத்து உணவுப் பொருட்களை ஆட்கள் அவிப்பதிலும் பொரிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள். கதிரைகளையும், மேசைகளையும் வீதி ஓரத்தில் வைத்து ஹோட்டல்களை நடத்திக் கொண்டிருந்தனர். வீதியோரத்தில் கட்டி வைத்து வளர்க்கப்படும் பசு மாட்டிலிருந்து வீதியிலிருந்தே பால் கறந்து கொண்டிருந்தார்கள். நீண்ட வீட்டு வரிசைகளின் முன் பகுதியில் வெளியில் கதவுக்கருகில் வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் ஆட்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவையனைத்தும் சன நெரிசல் மிகுந்த வீதிகளிலேயே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி இந்த வீதிகளுக்கு ஊடாக போய்க் கொண்டிருந்த பொழுது பிரேந்திரகுமாரும் நானும் முதலில் சந்தித்துக் கொண்ட நினைவு எனக்கு வந்தது.

“உங்கள் நகரம் எப்படிப்பட்டது?”

“அது ஒரு பெரிய கைத்தொழில் நகரம்.”

மூங்கில் மரங்களையும் விறகுக் கட்டைகளையும் பாதை ஓரத்தில் குவித்து வைத்து விற்பனை செய்யும் வீதி ஒன்றுக்கு ஊடாக ரிக்ஷாக்காரன் என்னை சுமார் இரண்டு மைல்கள் அழைத்துச் சென்றான். அதன் பின்னர் ஒரு குறுக்குத் தெருவில் திருப்பி வண்டியை நிறுத்தினான். பிரேந்திரகுமாரின் முகவரி எழுதப்பட்ட ஒரு காகிதத்துண்டை நான் அவனிடம் நீட்டினேன். அதனை சிறுது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அதில் இருந்த இலக்கத்துடன் கடை அறைகளின் இலக்கங்களை ஒப்பிட்டுப் பார்த்தான். நாங்கள் தேடும் இலக்கம் அந்த ஒழுங்கையின் அடுத்த முனையில் இருந்தது. சிறு அறைகளாகப் பிரிக்கப்பட்ட பழைய இரண்டு மாடிக் கட்டடம் அது. பார்க்குமிடங்களிலெல்லாம் அத்தகைய பழைய மாடி வீடுகளே தென்பட்டன.

ரிக்ஷாக்காரன் அங்கு என்னை விட்டு விட்டுச் சென்று விட்டான். அதன் பின்னர் பிரேந்திரகுமாரைத் தேடுவதற்கு வலது கை செயலிழந்த ஓர் இளைஞனின் உதவி எனக்குக் கிடைத்தது. அவனுடைய தலையும் முகமும் எண்ணெய் மழையினால் நனைந்தவை போல் தெரிந்தன. வீதியை நோக்கித் திறக்கப்பட்ட கதவொன்றிலிருந்து வெளியில் வந்த அவன் நடு வீதியிலிருந்து மேல் மாடியை நோக்கி, “அன்னு!” “அன்னு” என உரத்துச் சப்தமிட்டான். கதவு நிலைகளோ யன்னல் கதவுகளோ இல்லாத ஒரு திறந்த இடத்தை நோக்கி அவன் அவ்வாறு சப்தமிட்டான். இரண்டு மூன்று தடவைகள் சப்தமிட்டபின் அங்கிருந்து வெள்ளை முகமுடைய பெண்ணொருத்தி எட்டிப் பார்த்தாள்.

நான் எனது பெயரையும், பிரேந்திரகுமாரின் பெயரையும், இலங்கை என்பதனையும் அவளுக்குக் கேட்கக் கூடிய விதத்தில் உரத்த குரலில் கூறினேன்.

“அச்சா!” “அச்சா!” எனக் கூறிய அப்பெண் என்னை அங்கு நிற்குமாறு கையால் சைகை செய்து விட்டு அந்த இடத்திலிருந்து மறைந்தாள்.

மேல் மாடிக்கு ஏறிச் செல்லுமிடத்தைக் கண்டுபிடிப்பதற்கு முயற்சித்த போதிலும், அங்கு படிக்கட்டுக்கள் எவையும் தெரியவில்லை. நீண்ட கடை அறைகளின் வரிசையை மட்டுமே பார்க்க முடிந்தது. இந்தக் குறுகிய வீதி இன்னொரு வீதியில் முடிகிறது. மேல் மாடியிலிருந்து முகத்தைக் காட்டிய அந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் குறுகிய பாதையின் முனையிலிருந்து தோன்றி எனக்கு எதிரில் வந்தாள். நான் அவளை பார்த்தவுடனேயே, வலது கையை மேலே உயர்த்தி தலையை நிமிர்த்தி ஒரு இராணுவ வீரனின் தோரணையில் எனக்கு வணக்கம் தெரிவித்தாள். அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த ஓர் இந்தியப் பெண்மணியிடமிருந்து அவ்விதம் ஒரு மரியாதை கிடைத்தவுடன் எனது ஆர்வம் மேலும் அதிகரித்தது.

குறுகிய ஒழுங்கையும் அகலமான வீதியும் சந்திக்கும் சந்து முனையில் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு கட்டடத்தில் பிரேந்திரகுமாரின் குடும்பம் வசித்து வந்தது. மேல் மாடியிலிருக்கும் அறைகளுக்குச் செல்லும் படிக்கட்டுக்களைப் பார்ப்பதற்கு அகன்ற வீதியை எதிர்நோக்கியிருக்கும் ஒரு சுரங்க வழிக்கு ஊடாக நுழைந்து செல்ல வேண்டும். சுமார் பத்தடி அகலமும் அதே அளவு உயரமும் கொண்ட அந்த சுரங்க வழியின் கீழ்ப்பகுதியில் தரையில் கயிற்றுக் கட்டிலொன்றில் ஒரு பெண் தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த வழியைத் தாண்டி உள்ளே பிரவேசிக்கும் பொழுது நடு முற்றம் போன்ற ஒரு பகுதி உள்ளது. அதைச் சூழ வரிசையாக வீடுகள். அந்த முற்றத்திலும் ஒரு சில கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. கறையான்களால் அரிக்கப்பட்டுக் கொண்டிருந்த மரக்கட்டைகள், செங்கல் குவியல்கள், தகரத்துண்டுகள் போன்ற இடிபாடுகளுக்கு மத்தியில் சிறு பிள்ளைகள் உற்சாகம் குன்றியவர்களாக அமர்ந்திருக்கின்றனர். பிரேந்திரகுமாரின் தாய் பின்னால் வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்த போது கூட அவர்களுடைய முகபாவங்களில் எத்தகைய மாற்றங்களும் ஏற்படவில்லை.

என்னை இவ்விதம் அழைத்துச் சென்ற பிரேந்திரகுமாரின் தாய் மறைப்பெதுவுமில்லாத குறுகிய படிக்கட்டுகளில் ஏறி, கதவில்லாத ஒரு வாசலின் உள்ளே பிரவேசித்தாள். நான் ஒரே அடியாக உள்ளே செல்லாது, வாசல் படியில் நின்று வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தினேன். சுமார் பதினைந்தடி நீளமும், எட்டடி அகலமும் கொண்ட ஓர் அறை தென்பட்டது. அதன் வீதிப் பக்கத்திலிருந்த சுவரில் நான் பாதையிலிருந்து பார்த்த பொழுது தென்பட்ட வாசலும் மற்றொரு உள் அறைக்குச் செல்லக்கூடிய வாசலும் இருந்தன.

இரண்டாவதாக என்னை வரவேற்பதற்கு அழகிய பெண்ணொருத்தி வந்தாள். அவளுக்கு சுமார் 22 வயது இருக்கலாம். அந்தப் பெண் பெரிய பூக்களைக் கொண்ட மஞ்சள் நிற கவுணொன்றை அணிந்திருந்தாள். பயணப் பையை தோளில் விட்டுக் கொண்டு வாசலில் நின்றிருந்த என்னை நோக்கி எவ்வித தயக்கமும் இல்லாமல் அவள் தன் மென் கரங்களை நீட்டினாள். பிரேந்திரகுமார் என்னிடம் கூறியிருந்த தகவல்களின் பிரகாரம் இது அவனுடைய பெரிய தங்கையாக இருக வேண்டும் என நான் நினைத்தேன். அதனால் அவளுடைய கையைக் குலுக்கி “உங்களை எனக்குத் தெரியும்” என நான் கூறினேன்.

“எங்களுக்கு உங்களை நன்கு தெரியும், உங்கள் புகைப்படம் எங்களிடம் இருக்கிறது. நீங்கள் வரும் வரையில் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்” என அவள் சொன்னாள்.

அவளுடைய ஆங்கில உச்சரிப்பு தெளிவாக இருந்தது.

பிரேந்திரகுமார் எங்கிருக்கின்றான் என நான் சுற்றுமுற்றும் பார்த்த பொழுது, அறையின் ஒரு மூலையிலிருந்து கைகளை தரையில் ஊன்றி, கால்களை இழுத்துக் கொண்டு ஒரு பெண் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவளுக்கு சுமார் பதினான்கு வயது மதிக்க முடியும். சிறிது தூரம் இவ்விதம் தவழ்ந்து வந்த அவள் இரு கைகளையும் கூப்பி “நமஸ்கார்” எனக் கூறி இந்திய வழமைப்படி எனக்கு வணக்கம் தெரிவித்தாள்.

“இவள் என்னுடைய தங்கை மேதா” என அந்தப் பெண் தனது சகோதரியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அந்தச் சிறுமி மஞ்சள் நிற ரீசேர்ட் ஒன்றையும் அரைக்கால் சட்டையொன்றையும் அணிந்திருந்தாள். அவளுடைய சூம்பிய உயிரற்ற கால்களின் முழங்கால்கள் இரு பந்துகளைப் போல நன்கு வெளித்தெரிந்தன. உடலின் மேல் பகுதி சாதாரண அளவிலும் பார்க்க நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. அக்காவின் அளவுக்கு அழகி இல்லையென்றாலும் கூட பார்ப்பதற்கு வசீகரமான அப்பாவி முகத்தோற்றம் அவளுக்கு. தூசு படிந்திருந்த தரையில் அமர்ந்திருக்கும் அவளை நான் அனுதாபத்துடன் நோக்கினேன். ஆனால், அவள் எதனையும் பொருட்படுத்தாமல் வாயை அகலத் திறந்து சிரித்தாள்.

“பிரேந்திரகுமார் எங்கே?” என நான் வினவிய பொழுது அம்மா புருவங்களைச் சுருக்கி மூத்த மகளைப் பார்த்தாள். நான் கேட்ட விடயம் அவளுக்குப் புரிந்த போதிலும், அதற்குப் பதிலளிப்பதற்கு ஆங்கில வார்த்தைகளைக் கோர்த்துக் கொள்வது சிரமமாக இருந்தமையினால் அதனை மகளிடம் சாட்டினாள் என நான் நினைத்தேன்.

“அவன் இப்பொழுது வருவான்” அப்பெண் கூறினாள்.

ஆனால், தாயின் முகத்திலும் மகளின் முகத்திலும் ஏதோ ஒன்றை மறைப்பதற்கான ஒரு முயற்சி தென்படுவது எனக்குத் தெரிந்தது.

வாசல் படியைத் தாண்டி நான் அறைக்குள் பிரவேசித்தேன். அங்கு ஒரு கயிற்றுக் கட்டிலும் இரண்டு கதிரைகளும் ஒரு மர அலுமாரியும் வைக்கப்பட்டிருந்தன. அலுமாரிக்கு மேல் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றின் ஒரு குவியல் இருந்தது. சிறிய வானொலிப் பெட்டியொன்றும் வைக்கப்பட்டிருந்தது.

அந்தக் காகிதக் குவியல்களில் எதையோ தேடிய அம்மா விமானத் தபால் ஒன்றை எடுத்து வந்து என்னிடம் நீட்டினாள். அது நான் வருவதாகத் தெரிவித்து பிரேந்திரகுமாருக்கு அனுப்பி வைத்த கடிதம். நான் அக்கடிதத்தின் பக்கம் பார்த்து விட்டு மீண்டும் அவளுடைய முகத்தை நோக்கிய பொழுது அவள் கண்களை அகல விரித்துச் சிரித்தது, “நீங்கள் வருவது எங்களுக்குத் தெரியும்” எனக் கூறுவது போலிருந்தது.

நான் தோளில் தொங்க வைத்துக் கொண்டிருந்த பிரயாணப் பையைப் பறித்தெடுத்து அதனை கயிற்றுக் கட்டிலில் வைத்து விட்டு அம்மா எனது கைகளைப் பிடித்து ஒரு கதிரையை நோக்கி தள்ளினாள். நான் அதில் அமர்ந்தேன். நான் இருந்த இடத்திலிருந்து நான்கைந்தடி தூரத்தில் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு கழுத்தை நிமிர்த்தி நின்ற பிரேந்திரகுமாரின் தாய் இதழ்களைச் சேர்த்து ஒரு மந்தகாசமான புன்னகையை வீசினாள். சிரிக்கும் பொழுது அவளுடைய கண்கள் விரிந்து தோள்கள் செயற்கையான விதத்தில் மேலெழுவதனைப் பார்த்த எனக்கு அவள் ஏதோ ஒரு சங்கட நிலையை மூடி மறைப்பதற்கு முயற்சித்து வருகின்றாள் என்பது தெரிந்தது. அந்த சங்கடத்தையும் மீறி அவளுடைய கண்களிலிருந்து தோன்றிய நேச உணர்வினை நான் அடையாளம் கண்டு கொண்டேன்.

பிரேந்திரகுமார் அங்கில்லாத குறையை நிவர்த்திக்கும் விதத்தில் அவர்கள் எனக்கு விருந்தோம்பத் தொடங்கினார்கள். பிரேந்திரகுமாரின் பெரிய தங்கை நான் அமர்ந்திருந்த கதிரையிலிருந்து சுமார் ஏழெட்டு அடி தூரத்தில் தரையில் குத்துக்காலிட்டமர்ந்து ஒரு மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்ற வைத்து தேநீர் தயாரித்தாள். ஒரு வாளி நீரை எடுத்து வந்து வாசலில் வைத்து விட்டு “கை கால் முகம் கழுவிக் கொள்ளுங்கள்” எனக் கூறினாள்.

விருந்தாளிகளை வரவேற்பதற்கும், தூங்குவதற்கும், சமையல் வேலைகளைச் செய்வதற்கும் அவர்களுக்கு ஒரே ஒரு அறை மட்டுமே உள்ளது என்பதை நான் புரிந்து கொண்டேன். அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டில் நீளமான, உயரம் குறைந்த ஒரு மேசை போல தென்பட்டது. மர அலுமாரிக்கு கதவுகள் இருக்கவில்லை. அதில் வைக்கப்பட்டிருக்கும் தட்டு முட்டுச் சாமான்களை வெளியிலிருந்து பார்க்க முடியும். அதில் ஒரு தட்டில் சஞ்சிகைகளும், புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கீழ் தட்டில் மூடி வைக்கப்பட்டிருந்த வீணையொன்றும், பிக்பென் கடிகாரமொன்றும், ஒரு சில போத்தல்களும், இரும்பு ஆணிகள் போன்ற சாமான்களும் இருந்தன.

ஒரு தூசுப்படலம் இவையனைத்தையும் மூடியிருந்தது. சமையலறையையும், கூடத்தையும் எதுவும் பிரிக்கவில்லை. அறையின் ஒரு மூலையிலே சமையலறையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அந்த மூலையில் மண்ணெண்ணெய் அடுப்பு, குடம், சட்டி பானைகள், பலசரக்குச் சாமான்கள் மற்றும் போத்தல்கள் என்பன வைக்கப்பட்டிருந்தன. பொருத்தப்பட்டிருந்த ஒரு சிறு மரப் பெட்டியில் பீங்கான் கோப்பைகள் இருந்தன. அந்த இடத்தில் சுவரில் வீதியை எட்டிப் பார்க்கக் கூடிய ஒரு யன்னல் உள்ளது. அதற்கு எதிர்ப்புறத்தில் வீட்டின் முன் வாசலுக்கு அருகில் மூன்று கழிப்பறைகள் இருந்தன. ஒரு சிறு தகர வாளியில் நீரை எடுத்துக் கொண்டு வாசலில் அங்குமிங்கும் ஆட்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கு செல்கின்றார்கள் எனப் பார்த்த பொழுதே, அவை பொதுக்கழிப்பறைகள் என்ற விடயம் எனக்குத் தெரிய வந்தது.

வீதிக்கு வந்து என்னை அழைத்து வந்து கதிரையில் அமர வைத்த பின்னர் பிரேந்திரகுமாரின் தாய் சுவரில் முதுகை சாய்த்து தரையில் அமர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கால்களை இரு கைகளையும் கோர்த்துக் கட்டிப்பிடித்த நிலையில் அவள் அமர்ந்திருந்தாள். மடித்து வைத்த கழுத்து நரம்புகள் புடைக்கும் அளவுக்கு மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியிடுவதனை அப்பொழுது என்னால் பார்க்க முடிந்தது. பிரேந்திரகுமாரின் தங்கை மண்ணெண்ணெய் அடுப்பை அணைத்த பின்னரேயே தாயின் நெஞ்சிலிருந்து “ரூங் ரூங்” என்ற சப்தம் வருவதனை நான் செவிமடுத்தேன். அப்பெண்மணி என்னுடன் மட்டுமன்றி, அவளுடைய பிள்ளைகளுடனும் அவ்வளவாக உரையாடவில்லை. அவள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணம் என்பதனை நான் பிற்பாடு உணர்ந்து கொண்டேன்.

“பிரேந்திரகுமார் உங்களைப் பற்றிய எல்லா விடயங்களையும் எங்களிடம் சொல்லியிருக்கிறான். உங்களுக்கு எங்கள் சாப்பாட்டை சாப்பிட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் நன்றாகப் பாடக் கூடியவர்தானே?”

பிரேந்திரகுமாரின் தங்கை அடுப்புக்கு அருகில் அமர்ந்து கேள்விகளைத் தொடுத்தவாறே பாண் துண்டுகளை சூடாக்கத் தொடங்கினாள்.

“ஒம்லட் உங்களுக்குப் பிடிக்கும் தானே?” எனக் கூறிக் கொண்டு என்னுடைய பதில் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை என்பது போல அவள் ஒரு முட்டையை உடைத்து உயரமான கோப்பையொன்றுக்குள் போட்டாள்.

கை கால் செயலிழந்த சிறுமி எனக்கு வணக்கம் தெரிவித்த பின்னர் மீண்டும் சுவருக்கருகில் சென்று அமர்ந்திருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எங்களுக்கிடையில் இடம்பெற்று வந்த உரையாடலைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வது போல தலையை அங்குமிங்கும் திருப்பிக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் அதில் ஒரு மங்காத புன்னகை தெரிகிறது. அவள் இருந்த நிலையில் தனது தலைப் பின்னல்களைச் சரி செய்து கொண்டிருந்தாள்.

வீட்டின் உள் அறையில் யாரோ தடுமாறும் சப்தம் எனக்கு லேசாகக் கேட்டது. அதனால் அந்த அறையை எட்டிப் பார்க்கத் தோன்றியது. எனக்கு சிரிப்பூட்டுவதற்காக பிரேந்திரகுமார் அங்கு ஒளிந்திருக்கிறானோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

நான் கதிரையிலிருந்து எழுந்து அறைக்குள் எட்டிப் பார்த்தேன்.

“உள்ளே செல்ல வேண்டாம். அது எங்கள் மாமாவின் அறை” என அப்பெண் எனது காதருகில் வந்து இரகசியமாகச் சொன்னாள்.

ஒரு பெரிய துணியைக் கொண்டு கோவணம் கட்டிக் கொண்டிருந்த ஒரு நபர் அங்கு மல்லாந்து படுத்த நிலையில் கைகளையும், கால்களையும் உரத்துத் தரையில் தேய்த்தவாறு தடுமாறுகிறார். கடும் வேதனையினால் துன்பப்படுவது போல அவர் கண்களை இறுக்கமாக மூடி, தலையை அங்குமிங்கும் ஆட்டிக் கொண்டிருந்தார். அவருடைய தோற்றத்தைக் கொண்டு அறுபது வயது மதிக்க முடியும். அந்தச் சிறு அறையின் ஒரு மூலையில் இரு தகரப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அது தவிர இரு சுவர்களுக்கிடையில் கட்டப்பட்டிருந்த ஒரு கயிற்றில் ஒரு சில ஆடைகள் மட்டும் தொங்க வைக்கப்பட்டிருந்தன. பெருக்கி ஒதுக்கப்பட்ட தூசு மற்றும் அழுக்குகள் இன்னமும் மூலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த அறைக்கு யன்னல்கள் இருக்கவில்லை. அதனால் ஒரு பகுதி முழுவதும் இருட்டாக இருந்தது.

அறையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த எனது முகத்தில் தெரிந்த ஆவலைப் புரிந்து கொண்ட பிரேந்திரகுமாரின் தங்கை, “நான் உங்களிடம் பின்னர் கூறுகிறேன்” என மெதுவாகச் சொன்னாள்.

அவள் பேசிக் கொண்டே முட்டை ஒம்லட் பீங்கானையும், பாண் துண்டுகள் வைக்கப்பட்டிருந்த தட்டையும் எடுத்து வந்து கட்டிலின் மீது வைத்தாள்.

“பிரேந்திரகுமார் இப்போது வருவானா?” பாண் துண்டொன்றை கையில் எடுத்தவாறு நான் கேட்டேன்.

அப்பொழுது தனது தாயின் முகத்தைப் பார்த்து அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவள், எனக்கு எதிரில் கட்டிலில் அமர்ந்தாள்.

“உங்கள் நண்பன் இப்பொழுது குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டான். இரவு தாமதமாகவே வீட்டுக்கு வருகிறான். காலையிலிருந்து இரவு வரையில் எங்கெங்கோ அலைந்து திரிந்து குடிக்கிறான். நீங்கள் வருவது அவனுக்குத் தெரியும். ஆனால் குடியை விட முடியவில்லை”

அவன் என்னிடம் கூறத் தொடங்கினாள்.

அந்த அற்புதமான இளைஞன் இவர்கள் சொல்லும் விதத்தில் சீரழிந்தது ஏன்? அது என்னைப் பொறுத்தவரையில் தீர்க்க முடியாத ஒரு புதிர். அதிலும் பார்க்க என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் நல்ல படிப்பையும், அபாரமான திறமையையும் கொண்டிருந்த தனது சகோதரனனின் சீரழிவு குறித்து இந்தப் பெண் ரொம்ப சகஜமான தொனியில் என்னிடம் கூறியதுதான். அதே போல எங்கள் உரையாடலை தாயும் மற்ற சகோதரியும் எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாது செவிமடுத்துக் கொண்டிருந்தனர்.

இருளை தனது ஆன்மாவாகக் கொண்டிருக்கும் இந்த நகரத்தில் எனக்குத் தெரிந்த ஒரே நபரும் புத்தி பேதலித்த நிலையில் அலைந்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டவுடன் எனக்குள் ஓர் அச்சம் எழுந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான எதிர்கால அபிலாஷைகளைச் சுமந்து கொண்டிருந்த அந்த துடிப்புமிக்க இளைஞன் இவ்விதம் சீரழிந்து போயுள்ளான் என்பதனைக் கேள்விப்பட்டவுடன் தோன்றிய வேதனை அந்த அச்சத்தைப் பின்னுக்குத் தள்ளியது.

“ஏன், அவன் இப்பொழுது வேலையில் இல்லையா?” என வேதனையுடன் நான் கேட்டேன்.

“அவை அப்போதே முடிந்து விட்டன. அந்த நாட்களில் அவன் ஒரு டிப்ளோமாவும் பெற்றிருந்தான்”.

அவன் இவ்வாறு சீரழிந்து போனது ஏன் எனக் கேட்பதற்கு நான் சொற்களைக் கோர்த்துக் கொள்வதற்கு முன்னர் அவள் வேறொரு பக்கம் திரும்பினாள்.

“எங்கள் மாமா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?”

அறையின் பக்கம் தனது கண்களைத் திருப்பிய அவள் சூடுபட்டு கீழே விழுந்து துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பருந்தைப் போல தத்தளித்துக் கொண்டிருந்த நபரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

“அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்கு எதிராகப் போராடிய ஒரு போராளி அவர்”.

“இப்பொழுது நோய்வாய்ப்பட்டுள்ளாரா?” என நான் மெதுவாகக் கேட்டேன்.

“இல்லை. அவருக்கு நோயொன்றுமில்லை. தன்னை தனது பாட்டில் இருக்க விடும்படி அவர் கூறுகிறார்”.

எல்லாம் அவிழ்க்க முடியாத சிக்கல்களாகவே தோன்றுகின்றன. “நீ இந்தியாவுக்கு வந்தால் எனது வீட்டில் ஒரு வார காலம் தங்க வேண்டும்” என எனக்கு அழைப்பு விடுத்த என்னுடைய நண்பன் என்னை வரவேற்பதற்குக் கூட இருக்கவில்லை. இதனால் நான் பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டுள்ளேன் என எனக்குத் தோன்றியது. எவரேனும் உதவியாளர் ஒருவர் இல்லாமல் இந்த நகரத்தில் ஒரு நாளையேனும் கழிக்க முடியுமா? இந்த நகரத்தைப் பார்த்த நேரம் தொடக்கம் பிரேந்திரகுமாரின் வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பது வரையில் இங்கிருந்து தப்பியோடுவது எப்போது என்பதே எனது எண்ணமாக இருந்தது. இப்பொழுது நான் அறிந்திருக்கும் ஒரே ஒரு நபரும் இங்கு இல்லாத நிலையில் நாட்களைக் கடத்த வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

சிறிது காலத்துக்கு முன்னர் நான் சந்தித்த முகமலர்ச்சியும் துடிப்பும் மிகுந்த அந்த இளைஞன் இப்பொழுது ஓர் உதவாக்கரை குடிகாரனாக மாறிப் போயுள்ளான் என்பதனைக் கேட்ட பொழுது கடும் மன வேதனை என்னைப் பீடித்தது. கடல் கடந்து தன்னைச் சந்திப்பதற்கு வரும் நண்பனைக் கூட உதாசீனம் செய்யும் அளவுக்கு அவன் உதவாக்கரையாகியுள்ளான். இது சொல்ல முடியாத அளவிலான ஓர் இழப்புத்தான்.

எனக்குத் தெரிந்திருக்கும் தகவல்களின் பிரகாரம் பிரேந்திரகுமாரின் குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர் இருக்கிறார்கள். இரு பாகங்களை மட்டும் கொண்ட இந்த வீட்டில் ஒரு பாகத்தை அவர்களுடைய மாமா வைத்துக் கொண்டிருக்கின்றார்.

பல நாட்கள் தங்குவது எப்படி இருந்தாலும், என்னால் இங்கு ஓர் இரவைக் கூடக் கழிக்க முடியுமா? இப்படியான ஒரு பெரிய சிக்கலில் நான் மாட்டிக் கொண்டிருந்த போதிலும், இந்த வீட்டார்கள் காட்டும் நேச உணர்வு என்னை எளிதில் சிரமத்திலிருந்து விடுவிப்பதற்கு மட்டுமன்றி, இங்கு பிடித்து வைத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு சக்தி மிக்கதாகவும் உள்ளது.

இத்தகைய எண்ண ஓட்டங்களுடன் நான் இரு பாண் துண்டுகளையும் ஒம்லட்டையும் மெதுவாக சாப்பிட்டேன். நான் சாப்பிடுவதைப் பார்த்தவாறு எனக்கு எதிரில் அமர்ந்திருந்த வீணா அங்கிருந்து எழுந்து தேநீர் தயாரிப்பதற்குச் சென்றாள். அப்பொழுது விரிவாக பார்வையை செலுத்தக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நாங்கள் சுக துக்கங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்த போதே பிரேந்திரகுமாரின் தம்பி அங்கு வந்தான். அப்பொழுது நான் அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரினதும் பெயர்களைத் தெரிந்து கொண்டிருந்தேன். இரவு சாப்பாட்டுக்கு எனக்கு எது பிடிக்கும் என வீணா கேட்டுக் கொண்டிருந்த போது, மேதா தரையில் அமர்ந்து நிரந்தரமாகப் புன்னகை தவழும் தனது முகத்தை என் பக்கம் திருப்பி கூந்தலைப் பின்னிக் கொண்டிருந்தாள்.

வீட்டுக்குள் வந்த இளைஞனிடம் “ஹலோ அன்னு!” எனக் கூறியவாறு நான் கையை நீட்டினேன். அவன் பிரேந்திரகுமாரின் முகச் சாயலையே கொண்டிருந்தான்.

அன்னு எனது கையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்தவாறு “ஹலோ ஹலோ ஸ்ரீலங்கா” எனக் கூறினான். அவன் அவ்வாறு கூறிய விதம் “எனக்கும் உங்களைத் தெரியும்” எனக் கூறுவது போல் இருந்தது.

அன்னு துடிப்பு மிக்க இளைஞன். கட்டில் மீதிருந்த எனது பயணப் பையை மேலே போட்டான். அணிந்திருந்த சட்டையைக் கழற்றி வீட்டின் உள்பகுதியிலிருந்த கொடியில் வீசி விட்டு மூச்சை அடக்கி முழங்கைகளையும், மார்பு சதைப் பகுதிகளையும் புடைக்கச் செய்து ஒரு சுற்று சுற்றினான். பின்னர் சமையல் மூலையில் பீங்கான் ஒன்றிலிருந்த பாண் துண்டொன்றை எடுத்து அதை வாயில் திணித்துக் கொண்டு வந்து எனக்கு எதிரில் கட்டிலில் அமர்ந்தான். அவனது ஒரு காதில் பஞ்சு நிரப்பப்பட்டிருந்ததை அப்பொழுது நான் பார்த்தேன்.

“பிரேந்திரகுமார் இல்லாவிட்டால் பரவாயில்லை, நாங்கள் எல்லோரும் உங்கள் நண்பர்கள்” எனக் கூறிக் கொள்ளும் விதத்திலேயே அவர்கள் எல்லோரும் நடந்து கொண்டார்கள்.

உண்மையிலே ஒரு வெளி ஆளுடன் அதுவும் அந்நிய நாடொன்றிலிருந்து வந்திருக்கும் தமது மொழியை அறியாத ஒரு நபருடன் இவ்விதம் உடனடியாக நட்புப் பாராட்டுவது எவ்விதம் என்பதனை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு சகஜ பாவத்துடன் கூடிய, அந்த அளவுக்கு பாசாங்கற்ற மனிதர்களை நான் வேறு எங்கும் சந்தித்திருக்கவில்லை. பிரேந்திரகுமார் அங்கு இல்லை என்பதனை அறிந்து கொண்ட கணத்தில் என்னிடம் தோன்றிய கவலையுணர்வுகளை ஒரு சில நிமிடங்களில் அவர்கள் முற்றாகப் போக்கிவிட்டார்கள். அவர்களுடைய சகஜமான நட்புணர்வுடன் கூடிய சுபாவமே அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவர்களுடன் அரை மணி நேரத்தை செலவிடும் பொழுது பிரேந்திரகுமார் இல்லாத குறையைக் கூட நான் உணரவில்லை.

வீணா இரவுச் சாப்பாட்டைத் தயாரித்துக் கொண்டே ஒவ்வொரு வார்த்தையையும் சிங்களத்தில் எப்படிக் கூறுவது என என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். தங்கையை எப்படி அழைப்பது என அவள் கேட்ட கேள்விக்கு நான் பதிலளித்த பொழுது எல்லோரும் உரத்துச் சிரித்தார்கள். தாய் இரு கைகளாலும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள். அன்னு “நங்கீ! நங்கீ!” என உரத்துக் கூறியவாறு உடல் ஊனமுற்ற தங்கையை தூக்கிச் சென்று ஜன்னல் படிக்கட்டில் வைத்தான்.

“நங்கீ” என்ற சொல்லுக்கு இணையான ஒரு சொல் ஹிந்தி மொழியிலும் உள்ளது என்றும், அதன் பொருள் நிர்வாணமாக இருப்பது என்றும் வீணா என்னிடம் விளக்கிக் கூறினாள்.

சிறிய பெண் தனது செயலிழந்த கால்களை உள் பக்கத்தில் தொங்கவிட்டவாறு ஒரு கையால் சுவரைப் பிடித்துக் கொண்டு எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வாறிருப்பது அவளுக்குப் பழக்கம் என்று தெரிந்தது. ஆனால், ஒரு சிறு அசைவில் அவள் ஜன்னலிலிருந்து பாதையில் போய் விழ முடியும். அந்த அபாயம் அவர்களுடைய வாழ்க்கையுடன் நன்கு பரிச்சயமானது போல் தோன்றியது.

“நீங்கள் வேலைக்குப் போகவில்லையா?” நான் வீணாவிடம் கேட்டேன்.

அவள் அதற்குப் பதிலளிக்காது சிரித்தாள். அந்தச் சிரிப்பு ஒரு ஏளனச் சிரிப்பு போல தெரிந்தது.

நாங்கள் என்ன பேசுகின்றோம் என்பதனைப் புரிந்து கொண்ட அன்னு கீழுதட்டை விகாரப்படுத்தியவாறு “ஜொப்” எனக் கூறினான்.

“ஜொப் ஜொப்? ஜொப்? நோ ஜொப்?” எனக் கூறிய அவன் இடது உள்ளங்கையை நீட்டி வலது கை முஷ்டியினால் அதில் ஓங்கி அடித்தான்.

ஒரு கணம் கேள்விகள் நிறுத்தப்பட்டன. வீணா, “ம்… ம்… ம்… ஹ்… ம்…” என ராகமிசைத்தவாறு சமையலில் ஈடுபட்டிருந்தாள். அம்மா கீழே அமர்ந்து மடித்த கால்களை நெஞ்சில் வைத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். ஜன்னல் படிக்கட்டில் அமர்ந்திருந்த மேதா பின்னல்களில் ஒன்று வீதிப் பக்கத்தை நோக்கி தொங்கும் விதத்தில் முகத்தை வளைத்து வெளியே பார்த்துக் கொண்டிருக்கின்றாள். அன்னு, அக்காவின் கட்டளைப்படி ஏதோ ஒரு வேலைக்காக வெளியில் சென்றான். எனக்கென தயாரிக்கப்படும் விசேட உணவுக்கு மேலதிகமாக எதனையோ எடுத்து வருவதற்கு அவன் சென்றிருக்கக் கூடும்.

இவ்விதம் கிடைத்த இடைவேளையில் அந்த வீட்டின் இடவசதியை நான் மனக்கண்ணால் அளந்து பார்த்தேன். முழு வீடும் இருநூறு சதுர அடிக்குள்தான் அடங்கும். குடும்பத்தின் மர்ம உறுப்பினரான நபர் ஒரு யன்னலோ அல்லது காற்று வருவதற்கான துவாரமோ இல்லாத அறைப்பகுதியை சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றார். அதன் காரணமாக ஏனையவர்கள் அனைவரும் நான் இங்கு உட்கார்ந்திருக்கும் இந்த குறுகிய இடத்தையே சமையலறையாகவும், கூடமாகவும், படுக்கையறையாகவும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அலுமாரிக்குள்ளிருந்து ஒரு சப்தம் வந்த பொழுது நான் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அதில் வைக்கப்பட்டிருந்த தட்டுமுட்டுச் சாமான்களுக்கு நடுவில் சாம்பல் நிற எலிக் குட்டியொன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நான் கதிரையிலிருந்து எழுந்து வாசல் படிக்கு அருகில் சென்று வெளியே நோக்கினேன். கட்டுமான வேலைகள் பூர்த்தி செய்யப்படாது சில காலத்துக்கு முன்னர் கைவிடப்பட்டுள்ளது போல தோன்றும் மாடி வீடுகளின் வரிசைகளையே எங்கும் காண முடிகிறது. அந்த வீடுகள் எல்லாவற்றிலும் மக்கள் வசித்து வருகின்றார்கள். பார்க்குமிடமெல்லாம் எனக்குள் தோன்றும் கேள்வி “இந்த நகரத்துக்கு என்ன நேர்ந்துள்ளது” என்பதாகும்.

இந்த நகரம் ஏன் இப்படி உள்ளது? நிலைப்படியில் கைகளை வைத்துக் கொண்டு நான் வீணாவிடம் கேட்டேன்.

“ஏன்?” என அவள் என்னிடம் திருப்பிக் கேட்டாள்.

வீணாவின் மூத்த சகோதரனும், தந்தையும் மாலையில் சுமார் ஆறு மணியளவில் வீட்டுக்கு வந்தார்கள். இக்குடும்பத்தைச் சேர்ந்த எல்லாப் பிள்ளைகளுக்கும் ஓர் இனிய புன்னகையை வெகுமதியாக அளித்திருப்பவர் இந்த தந்தைதான் என்ற விஷயம் எனக்கு உடனடியாகப் புரிந்தது. பிரேந்திரகுமாரின் தாய் எனக்கு வணக்கம் தெரிவித்த அதே விதத்தில் ஆனால் அதிலும் பார்க்க பக்குவப்பட்ட ஒரு தோரணையில் என்னைப் பார்த்தவுடனேயே வலது கை முஷ்டியைத் தூக்கி தந்தை எனக்கு வணக்கம் தெரிவித்தார். அதே நேரத்தில், முழங்கை வரையில் நீண்டிருந்த சட்டையில் மேல் பையில் கையை விட்ட அவர் ஏதோ ஒரு பொருளை எடுத்து அதனை வலது காதில் பொருத்திக் கொண்டார். காதிலிருந்து சட்டைப் பை வரையில் தொங்கிக் கொண்டிருந்த மெல்லிய வயரை நான் பார்த்த பொழுது “ஆம் அப்படித்தான்” எனக் கூறுவது போல அவர் சிரித்தார்.

யாதவ் அதிகம் பேசும் இயல்புடையவன் அல்ல. ஆனால், அவன் குடும்பத்தின் ஏனையவர்களைப் போலவே மலர்ந்த முகபவாத்துடன் இருந்தான். தொழில் நீதிமன்ற வழக்குகளில் வாதாடுவதற்கு போகும் தந்தைக்கு உதவிகளை வழங்கி, அவன் அந்தத் தொழிலை பழகி வருவதாக வீணா ஏற்கனவே என்னிடம் கூறியிருந்தாள். தனது சகோதரனும் ஒரு பட்டதாரி என பிரேந்திரகுமார் என்னிடம் தெரிவித்திருந்தான். அமைதியாக இருக்கும் யாதவின் முகத்தில் அறிவுக் கூர்மையின் சாயல் தென்படுவது போல் எனக்குத் தோன்றியது.

ஒரு வார காலம் இங்கு தங்குவதற்கு வர வேண்டும் என பிரேந்திரகுமார் எனக்கு அழைப்பு விடுத்திருந்தான். ஆனால், இந்தச் சிறிய வீட்டில் இத்தனை ஆட்களுடன் ஒரு இரவைக் கழிப்பது கூடச் சாத்தியமில்லை எனத் தெரிந்தது. இந்தச் சிக்கலை தீர்த்துக் கொள்ள முடியாது நான் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தந்தை எனது தோள் மீது கை வைத்து, “இவ்வளவு தூரம் வந்திருக்கின்றீர்கள், குறைந்தது இரண்டு வாரங்களாவது இங்கு தங்கிச் செல்லுங்கள்” எனக் கூறினார்.

அதன் பின்னர் தான் தொடர்பு கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் குறித்தும், இந்திய அரசியல் குறித்தும் நீண்ட நேரமாக என்னிடம் விளக்கிக் கூறினார். ஆனால், இரவைக் கழிப்பது எப்படி என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருந்தமையினால் அவர் கூறியவற்றில் பெரும்பாலான விஷயங்களை என்னால் ஊன்றிக் கவனிக்க முடியாது போய்விட்டது.

“சாப்பாட்டுக்குப் பின்னர் நீங்கள் பாட வேண்டும்”

தகரப் பீங்கான்களில் பரிமாறப்பட்டிருந்த உணவை கட்டில் மீது வைத்துக் கொண்டே வீணா சொன்னாள்.

தூக்கத்தை தியாகம் செய்தாவது இந்த வீட்டிலேயே இரவைக் கழிக்க வேண்டும் என நான் முடிவு செய்து கொண்டேன்.

வீணா பச்சரிசிச் சோறும் சப்பாத்தியும் கிழங்குக் கறியும் சமைத்திருந்தாள். நான் சோற்றை அள்ளிப் போட்டுக் கொண்ட பொழுது வீணாவின் தாய் ஒரு சிறிய கரண்டியில் எடுத்து வந்த நெய்யை அதன் மீது விட்டாள். மிளகாய் போட்டுச் சமைத்த மீனும், இறைச்சியும் சாப்பிட்டு பழக்கப்பட்டிருந்த எனது நாக்கு அந்த உணவை வாயிலிருந்து வெளியே தள்ளத் தொடங்கியது. நான் சங்கட நிலையை மூடி மறைத்துக் கொள்வதற்கு எவ்வளவுதான் முயன்றாலும் எல்லோருக்கும் அது விளங்கியது என்பது நன்கு தெரிந்தது. அதனால்தான் போலும் நான் கை கழுவ முன்னரேயே வீணா தேநீர் தயாரித்து வைத்திருந்தாள்.

அன்னுவே அதிகமாகச் சாப்பிட்டான். கீழே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அவன் பல தடவைகள் வெற்றுப் பீங்கானை அம்மாவிடம் நீட்டினான். அப்படி ஒவ்வொரு தடவையும் பீங்கானை நீட்டும் போது கண்களை அகல விரித்து என்னைப் பார்த்து தலையை ஆட்டிக் கொண்டான். ஒவ்வொரு தடவையும் அம்மா அவனுக்கு சோற்று உருண்டை ஒன்றையும் ஓர் அகப்பையில் கிழங்குக் கறியையும் பரிமாறினாள்.

எல்லோரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கதைக்கத் தொடங்கிய பொழுது உள் அறையிலிருந்த நபர் வெளியில் வந்தார். அவர் சட்டி பானைகளுக்கு அருகில் போய் எங்களுக்குப் பின் பக்கத்தைக் காட்டியவாறு சுவரைப் பார்த்து குந்தி அமர்வது தெரிந்தது. எங்களுக்கு தனது உடலின் பின் பக்கத்தைக் காட்டியவாறே அவர் சாப்பிட்டார். எங்களுடன் உரையாடுவதற்கு யாதவ் தரித்திருக்கவில்லை. சாப்பிட்ட உடனேயே அவன் ஒரு சிறிய குப்பியிலிருந்து ஒரு சில மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டு முன் வாசலால் வெளியே சென்றான்.

வீணா, மேதா ஆகியோரின் நச்சரிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நான் இரண்டு பாட்டுக்களை பாடினேன். நான் வெறுமனே பாட்டைக் கூறுவதல்லாமல் லயிப்புடன் பாடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், எனது பாட்டைக் கேட்டு எல்லோரும் கை தட்டினார்கள். அதன் பின்னர் மேதா ஒரு பாட்டுப் பாடினாள். அது ஒரு நல்ல பாட்டு என்றுதான் கூற வேண்டும்.

“நீங்களும் பாடுங்கள்” என நான் வீணாவிடம் கூறினேன்.

“ஆம், நான் பாடப் போகிறேன்” என அவள் கூறிய போதிலும், பாடுவதற்கு முன்வரவில்லை.

எங்கள் உரையாடல் இரவு பதினொரு மணி வரையில் நீடித்தது. அதற்கிடையில் அன்னு தலைமறைவானான். சுற்றுமுற்றும் பார்த்த பொழுது யாதவ் திரும்பி வந்திருக்கவில்லை என்பது தெரிந்தது.

“எனது நண்பன் இன்னும் வரவில்லையே?” நான் எழுந்தவாறு கேட்டேன்.

“அவன் வந்து விட்டான். இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கின்றான்” வீணா சொன்னாள்.

“எப்பொழுது வந்தான்? எங்கே அவன்?”

“நீங்கள் பாடிக் கொண்டிருந்த போது நல்ல போதையில் வந்தான். இப்பொழுது தூங்குகிறான். காலையில் பேசிக் கொள்ளலாம்”

“அவன் எங்கு தூங்குகிறான்? நான் அவனைப் பார்க்க வேண்டுமே” நான் வீட்டின் உள்பக்கத்தை எட்டிப் பார்த்தேன்.

“அவன் அங்கு இல்லை. கூரையின் மேல் தூங்குகின்றான். நீங்களும் விரும்பினால் அங்கு போய் தூங்கலாம். அன்னு, யாதவ் எல்லோரும் அங்குதான் இருக்கிறார்கள். நானும் இன்று கூரையில்தான் உறங்கப் போகிறேன்”

“என்ன பரிகாசம் பண்ணுகிறீர்களா?” நான் கேட்டேன்.

“ஒரு பரிகாசமுமில்லை”

ஒரு தலையணையையும், பெரிய போர்வையையும் கையில் எடுத்த வீணா, “வாருங்கள் போவோம்” எனக் கூறிக் கொண்டு முன்னே நடந்தாள்.

முன்வாசலால் வெளியில் சென்று குறுகிய விறாந்தைக்கு ஊடாக நடந்து போன அவள் மூங்கில் ஏணியொன்றுக்கு அருகில் போய் நின்றாள். வானம் தெளிவாக இருந்ததால் மங்கலான வெளிச்சம் இருந்தது. போர்வையையும் தலையணையையும் என்னிடம் ஒப்படைத்த வீணா கொங்கிரீட் கூரையில் சார்த்தி வைத்திருந்த ஏணியில் மேலே ஏறிச் சென்றாள். கூரைக்கு ஏறிய பின்னர் கீழே கையை நீட்டிய அவள் எனது கைகளில் இருந்த பொருட்களை மேலே எடுத்துக் கொண்டாள். நான் மிகுந்த சிரமத்துடன் ஏணியில் ஏறி கொங்கிரீட் கூரையை அடைந்த பின்னர் இது வெறும் வேடிக்கையல்ல என்பது எனக்குத் தெரிய வந்தது. அங்கு உறங்கிக் கொண்டிருந்த நபர்களை லேசான வெளிச்சத்தில் கணக்கிட்டுப் பார்த்தேன். எட்டுப் பேர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தார்கள். தூங்கிக் கொண்டிருந்தவர்களின் கால் பக்கமாக போர்வையையும், தலையணையையும் அணைத்துக் கொண்டு நடந்து சென்ற வீணா கடைசியிலிருந்த நபருக்கு அருகில் நின்று “உங்கள் நண்பர் இதோ இருக்கின்றார்” எனக் கூறினாள். அவனுடைய கால்களுக்கு அருகில் ஒரு செங்கல் குவியல் இருப்பதனை என்னால் அவதானிக்க முடிந்தது. பிரேந்திரகுமாரின் முகத்தைப் பார்ப்பதற்காக நான் அவனை நோக்கி குனிந்த பொழுது அவனுடைய குறட்டை ஒலி எனக்குக் கேட்டது. முகமெங்கும் தாடி மண்டிக் கிடப்பதனை அரை இருட்டிலும் கூட என்னால் பார்க்க முடிந்தது.

அவன் படுத்த இடத்திலிருந்து இரண்டு மூன்றடி தூரத்தில் ஒரு துணி விரிக்கப்பட்டு, தலையணையன்றும் வைக்கப்பட்டிருந்தது.

“இதுதான் உங்கள் இடம்”

வீணா அந்த விரிப்புக்கு அருகில் நின்று என்னிடம் சொன்னாள். யாரோ முன்னரேயே வந்து இந்த இடத்தை தயார் செய்திருப்பதை நான் புரிந்து கொண்டேன்.

போர்வையையும், தலையணையையும் செங்கல் குவியலின் மீது வைத்த அவள் ஒரு துடைப்பத்தை எடுத்து நாங்கள் நின்ற இடத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள ஓர் இடத்தை பெருக்குவதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தரையைப் பெருக்கி துணியை விரித்து தனது படுக்கையை தயார் செய்து கொண்ட வீணா, “உங்களுக்கு எப்படி? எல்லாம் சரியாக இருக்கிறதா?” என கேட்டவாறு படுக்கையில் சாய்ந்தாள்.

“ஆம். எல்லாம் சரியாகவே இருக்கிறது. நன்றி” என்றேன்.

“நீங்கள் அதிர்ஷ்டசாலி, வெயில் காலத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள்”

வீணா அப்படிக் கூறிய பொழுது உண்மையிலேயே இரவு மழை பெய்தால் என்னவாகும் என்ற அச்சம் எனக்குத் தோன்றியது.

நான் வந்த ரெயில் வண்டி இந்த நகர எல்லையை அண்மித்தது தொடக்கம், இது இப்படி இருக்க முடியுமா? என்ற கேள்வி எத்தனையோ தடவை எனது உள்ளத்தில் எழுந்திருந்தது. அந்தக் கேள்வியை எழுப்பி சிறிது நேரத்தின் பின்னர் – அது உண்மையில் அவ்வாறுதான் உள்ளது என்பதனை நம்பக்கூடிய விதத்தில் அந்தச் சூழல் என்னை உருவாக்கியிருந்தது.

இப்பொழுது மீண்டும் ஒரு முறை அதே கேள்வி எனது உள்ளத்தைக் குடைந்து கொண்டிருக்கின்றது. திருமணமாகாத ஓர் அழகிய இளம் பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு மேலே எத்தகைய மறைப்புமில்லாமல் தூங்குவது உண்மையிலே நடக்கக் கூடிய ஒரு காரியமா? நான் இதுவரையில் கண்ணால் பார்த்த விடயங்களைப் போலவே இதுவும் அப்படியே நடக்கிறது என்பதனை நான் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

கீழே விரிக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்பில் படுத்த பிற்பாடு நான் கைகளை தோள்களுக்கு மேலால் சேர்த்து தலையை கைக்கு மேல் வைத்துக் கொண்டேன். அப்பொழுது என் கண்களுக்கு தெளிவான வானம் மட்டுமே தென்பட்டது. சூழல் சலனமின்றி நிச்சலனமாக இருந்தது. நானும் இப்பொழுது மிகவும் அற்புதமான ஒரு பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றேன் என எனக்குத் தோன்றுகிறது. பரிச்சயமில்லாத ஒரு சமூகத்தில், பரிச்சயமில்லாத ஒரு சூழலில் ஒரே ஒரு சந்திப்பின் மூலம் ஏற்படுத்திக் கொண்ட சிறு அறிமுகத்தை மட்டுமே கொண்டிருக்கும் மனிதர்களுடன் எங்கள் அனைவருக்கும் பொதுவான வானத்தின் கீழே கொங்கிரீட் கூரையில் நாங்கள் படுத்திருக்கின்றோம். !… வியப்பும், சாகசமும் கலந்த அந்த அற்புதமான அனுபவம் இந்த நகரம் குறித்து எனக்குள் உருவாகியிருந்த அருவருப்புணர்வைப் போக்கி வருவதை நான் உணர்ந்தேன்.

“ஆஜா ரே… ஏ… ஏ…. ஏ…. பர்தேசி”

வீணா மெல்லிய குரலில் பாடத் தொடங்கினாள்.

அந்தச் சூழலும் சந்தர்ப்பமும் பாட்டின் ராகமும் மெல்லிய குரலும் கச்சிதமாகப் பொருந்திச் சென்றன. கண் இமைகளை மூடுவது கூட இந்தப் பரவச அனுபவத்துக்கு ஒரு தடையாக இருக்கக் கூடும் என நான் பயந்தேன். வீணா எனக்காகப் பாடுகிறாளா அல்லது தனது ரசனைக்காகப் பாடுகிறாளா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் எனக்கு நன்கு புரிந்தது. அவள் இப்பொழுது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலிலிருந்து வெகு தொலைவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றாள்.

தான் பிறந்து வாழ்ந்து வரும் இந்தச் சகதியிலிருந்து மீண்டு வந்து மலர்ந்து மணம் பரப்ப வேண்டுமென்ற அவளுடைய தணியாத வேட்கை ஒரு பாடலாக வெளிப்பட்டு இந்தச் சூழலில் ரம்மியமாக மிதந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அப்பாடலைக் கேட்கக் கூடிய தூரத்திலிருக்கும் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கியுள்ளனர். புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தொனியில் புரிந்து கொள்ள முடியாத வார்த்தைகளில் அவள் பாடும் அவர்களுடைய ஜீவகீதத்தைக் கேட்பதற்கு அந்நியனாகிய நான் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னைப் போலவே இரு கைகளின் மீதும் தலையை வைத்து வானத்தின் மீது பார்வையைச் செலுத்தியவாறு வீணா பாடிக் கொண்டிருக்கக் கூடும் என நான் ஊகித்தேன். ஆனால், எனது நிலையை மாற்றி தலையைத் திருப்பி, அவளிருக்கும் திசையைப் பார்க்க வேண்டும் போல எனக்குத் தோன்றவில்லை.

மூன்று பாட்டுக்களைப் பாடி முடித்து விட்டு, “உங்களுக்கு தூக்கம் வருகின்றதா?” என வீணா என்னிடம் கேட்டாள்.

“நான் தூங்குகிறேன்”

உங்கள் தாலாட்டு என்னைத் தூங்க வைக்கின்றது எனக் கூறுவதற்குப் பதிலாக நான் அப்படிச் சொன்னேன். நாங்கள் காதலர்கள் அல்ல. மேலும், இச்சந்தர்ப்பத்தில் எனக்குள் தோன்றிய உணர்வு காதலிலும் பார்க்க மேலான ஒரு பரவச உணர்வாக இருந்தது. அதன் காரணமாக அந்த வார்த்தைகள் பொருத்தமற்றது என எனக்குத் தோன்றியது போலும்.

“அப்படியானால் உங்களுக்கு குட் நைட்…”

அப்பொழுது நான் தலையை கைகளிலிருந்து எடுத்து மேலே திரும்பிப் பார்த்தேன். வீணா ஒரு பக்கமாகத் திரும்பி போர்வையினால் தலையை மூடிக் கொண்டாள். நான் பிரேந்திரகுமாரின் பக்கமாகத் திரும்பி கண்களை மூடிக் கொண்டேன்.

யாரோ என்னுடைய முகத்தை வருடுவது போல் உணர்ந்ததனை அடுத்து காலையில் விழித்துக் கொண்டேன். அப்பொழுது இரவில் மெல்லிய இருள் மறைந்திருந்தது. பிரேந்திரகுமார் எனக்கருகில் அமர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பெருவெள்ளத்தால் சூழப்பட்டிருக்கும் தனது வீட்டின் ஒவ்வொரு சுவரும் இடிந்து விழுவதனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் அநாதையின் பார்வையைப் போல அது தென்பட்டது. நான் கண்களைத் திறந்து அவனைப் பார்த்த போதிலும், அவனுடைய முக பாவனையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் அவன் நீண்ட நேரமாக இந்த அநாதைப் பார்வையை என் மீது வீசிக் கொண்டிருக்கக் கூடும் என நான் நினைத்தேன். “உன்னிடம் நான் எதைத்தான் கூறுவது” எனக் கேட்பது போல அவனுடைய ஒளியிழந்த கண்கள் அசையாது என் மீது நிலைத்திருந்தன.

கடல் கடந்து தன்னைச் சந்திப்பதற்கு வந்த நண்பனை எதிர்கொள்ளாது பதுங்கித் திரிந்த எனது நண்பன் அவனால் எனக்கு இழைக்கப்பட்ட இந்தத் தவறையும், தன்னால் தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் தவறையும் அதற்கு எத்தகைய சாக்கு போக்கையும் கூறாமல் ஏற்றுக் கொள்வது போன்ற ஒரு பார்வையாகவே அது தோன்றியது. அந்த ஒளியிழந்த கண்களை நீண்ட நேரம் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நான் சந்தித்த உற்சாகம் பொங்கி வழிந்த, துடிப்பு மிக்க இளைஞனான பிரேந்திரகுமாரின் மங்கலான ஒரு தோற்றம் எனது மனத்திரையில் தோன்றியது.

போர்வையை ஒதுக்கி விட்டு அவனுடைய இடது தோளை எனது நெஞ்சில் வைத்து அழுத்தும் விதத்தில் அவனை அணைத்து கழுத்தில் முத்தமிட்டேன்.

நான் எனது முகத்தை வெளியில் எடுத்த பின்னர், “என்னை மன்னித்துக் கொள்” எனக் கூறுவது போல அவன் கோழைத்தனமாக ஒரு சிரிப்பை வீசினான்.

“நீ இப்படிச் சீரழிந்து போனது ஏன்” என இந்த நண்பனிடம் நான் கேட்க விரும்பினேன். ஆனால், இந்த நகரத்தில் அத்தகைய ஒரு கேள்விக்கு எந்தவொரு மதிப்பும் இருக்க முடியாது என்பதனை நான் ஏற்கனவே புரிந்து கொண்டிருந்தமையினால் மௌனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிரேந்திரகுமாரின் தோளில் கை வைத்து எழுந்து நின்ற போது நாங்கள் தூங்கிய அந்த கொங்கிரீட் தளத்தில் காணப்பட்ட தூசுக்குவியல்களையும் ஏனைய கழிவுப் பொருட்களையும் கண்டேன். நிலக்கரித் தூள் குவியல்களிலிருந்து எழுந்து முழு நகரத்தையும் மூடும் தூசு மேகங்கள் அந்த இரவில் எனக்கு எந்த விதத்திலும் நினைவுக்கு வரவில்லை.

– ஜயதிலக்க கம்மல்லவீர, தமிழில் எம்.எல்.எம்.மன்சூர்

ஜயதிலக்க கம்மல்லவீர

இலங்கையின் இடதுசாரி அரசியல் கட்சிகளுள் ஒன்றான நவ சமசமாஜக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த ஜயதிலக்க கம்மல்லவீர, முழு நேர வர்த்தகத் தொழிற்சங்கவாதியாகவும் பணியாற்றியவர்.

1943ல் கம்பஹாவில் பிறந்து மினுவாங்கொட மத்திய கல்லூரியில் கல்வி கற்ற அவர், மார்க்சிஸ சிந்தனையில் ஈடுபாடு கொண்டு, இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளராகத் தொழிற்பட்டு வந்த போதிலும், பின்னாளில் அரசியலைக் கைவிட்டு முழு நேர எழுத்தாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இதுவரை ஆறு நாவல்கள், பத்து சிறுகதைத் தொகுதிகள், நான்கு சிறுவர் நூல்கள், ஒரு மொழிபெயர்ப்பு நூல் (சிறுகதைகள்) என்பன இவரது எழுத்தின் பிரதான சாதனைகள்.

1985, 1992, 1994 மற்றும் 2003ம் வருடங்களில் சிறந்த சிறுகதைத் தொகுதிக்காகவும், 2011ல் சிறந்த நாவலுக்காகவும் ஐந்து முறை தேசிய இலக்கிய விருதை வென்றுள்ளார் கம்மல்லவீர. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட தேசிய இலக்கிய விழா மற்றும் வித்யோதயா இலக்கிய விழா என்பவற்றில், “ச்சும்பன கண்டா” என்ற அவரது நாவல், 2010ம் வருடத்தின் மிகச் சிறந்த நாவலாகத் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதேவேளை, “அட்ட அவ்ருதா” என்ற தனது முதலாவது நாவலுக்காக டி.ஆர். விஜேவர்தன விருதையும், தனது இரு சிறுகதை தொகுதிகளுக்காக சுதந்திர இலக்கிய விருதை வென்ற அவர், இரண்டு தடவைகள் நாட்டின் உயர் விருதான சாகித்திய மண்டல விருதை அரசியல் காரணங்களுக்காக நிராகரித்தார். விருதுகளுக்காக அலையும் கலைமாமணிக்காரர்களுக்கு இது சமர்ப்பணம்.

அவரது முகநூல் விலாசம்: http://www.facebook.com/jayatilaka.kammallaweera
அவரது மின்னஞ்சல் முகவரி: kammallaweera@gmail.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *