உயிர் வெட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 10,989 
 

எனது லேப்டாப்புக்கான பேட்டரியை நான் வாங்கியபோது மின்சாரம் போய்விட்டது. கடைக்காரர் என் நண்பர்தான். அவர் சிறு அளவில் கம்யூட்டர் வணிகத் தொழில் ஆரம்பித்தபோது அவரின் இளவயது காரணமாக அவருக்கு ஆதரவு அளித்தேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும், எனது தொடர்புகளை அவரது வாடிக்கையாளர்கள் ஆக்கிவிடுவதைத் தவிர? அதற்காக என்மீது கொண்ட மரியாதையால், இரண்டு தவணையில் தருவதாக சொன்ன என் வார்த்தையை ஏற்றுக்கொண்டு லேப்டாப் பேட்டரியை பணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் கொடுத்துவிட்டு கிரடிட் பில் கொடுத்தார். அவர் கடையின் இன்வெர்ட்டர் உயிர் பெற்றிருந்தாலும் பில் போட வழியில்லை. கையில் எழுதிக் கொடுத்தார்.

வெளியே வந்தேன். மதுரை இருண்டு கிடந்தது. வாகனங்கள் மட்டும் மின்சாரத்தை வைத்திருந்தன. பெரிய கடைகளில் ஜெனரேட்டர் சப்தம் கேட்டது. சிறிய கடைகளில் இன்வெர்ட்டர். என்போன்ற வக்கற்ற கடைக்காரர்கள் ரீசார்ஜ்ஜபிள் லைட் உபயத்தில் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருந்தனர்.

வெளியே வந்த நான், பைக்கைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்தேன். முன்னதாக புதிய லேப்டாப் பேட்டரியை பைக் பெட்டிக்குள் வைத்துப் பூட்டியிருந்தேன். அந்த பேட்டரி மிகவும் முக்கியமானது. இரண்டு ஆண்டுக்கு முன்பு வாங்கிய லேப்டாப். அதன் பேட்டரி ஏறக்குறைய செத்துப்போன நிலையில் மின்சாரம் இல்லையேல் வேலையில்லை என்றாகிவிட்டது. தேங்கிப் போன வேலைகளை முடித்துப் பணம் பார்க்க வேண்டும். இப்போது லேப்டாப் பேட்டரி என் உயிரை விட முக்கியமானது.

வீட்டுக்குப் போக வேண்டும். ஆனால், அது கதைக்காகாது. நான் போய்ச் சேர 10 மணி ஆகிவிடும். அப்போது வாடிப்பட்டியில் மின்வெட்டு நேரம். மின்சாரம் 9 மணிக்குப் போய் 11 மணிக்குத்தான் வரும். என்ன செய்யலாம்?

என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நாளை காலை ஐந்து பக்கத்தை முடித்து அந்த பப்ளிஷருக்கு அனுப்பியாக வேண்டும். அப்படிச் செய்தால்தான் 50 பக்கங்கள் முடிந்து அதற்காக ஐயாயிரம் ரூபாய் பில் கைக்கு வரும்.

கடைசியாக உப்பு பாக்கெட் வாங்கப் போனபோது, மளிகைக்கடை இராமுத்தாய் பார்வையில் கேள்வியிருந்தது. என்னிடம் அவர் பாக்கி கேட்க மாட்டார். கட்சிக்காரன் என்ற மரியாதை. ஆனால், மூத்த பெண் தனியார் என்ஜினியரிங் காலேஜில் படித்துக்கொண்டிருந்தாள். அதற்குப் பணம் கட்ட வேண்டும். அத்தோடு அவளுக்கு லேப்படாப் வாங்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘அண்ணே மளிகை பாக்கி எப்ப கெடைக்கும்?’ என்று கேட்கிறார் என்று அதற்குப் பொருள்.

கடைசி 5 பக்கத்தை முடித்தால்தான் பணம் வரும். ஒரு வாரம் கூட ஆகலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த அளவு நல்லது. அந்த பப்ளிஷர் இழுத்தடிப்பதில் வல்லவர்.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன். மெல்ல பைக்கை உருட்டினேன். வழியில் பிடிஆர் டீக்கடையில் நிறுத்தினேன். அங்கு போளி கிடைக்கும். ஒரு போளி சாப்பிடலாம். சர்க்கரை ஒன்றும் அதிகமாக இருக்காது. டீ சாப்பிட நன்றாக இருக்கும். என்ன அவசரம்? 11 மணிக்குத்தானே மின்சாரம் வரும்.

டீ சாப்பிட்டுவிட்டு ஒரு தம் இழுத்துவிட்டு மெதுவாகப் புறப்பட்டேன். மணி 9.15தான் ஆகியிருந்தது. பரவாயில்லை. சமயநல்லூரில் இன்னொரு ஹால்ட் போடலாம் என்று யோசித்தவாறே புறப்பட்டேன்.

முன்பு நான் டெஸ்க் டாப்தான் வைத்திருந்தேன். கோரல் டிரா, போட்டோ ஷாப் வேலை பார்க்க டெஸ்க் டாப் நல்லது. ஆனால், மின்வெட்டு ஆரம்பித்த காலம் அது. அப்போது அய்யாதான் ஆட்சியில் இருந்தார். சமாளிக்க முடியவில்லை. இன்வெர்ட்டர் என்று கணக்குப் போட்டுப் பார்த்து அப்புறம் டெஸ்க் டாப்பை விற்றுவிட்டு என் நண்பரிடம் தவணையில் லேப்டாப் வாங்கினேன். 2 மணி 30 நிமிடம் தாங்கியது. ரீசார்ஜ் லைட் வாங்கிக்கொண்டேன். யார் வேலை கொடுத்தார்களோ அவர்கள் இடத்துக்கு லேப்டாப்பைத் தூக்கிச் சென்று இறுதி கட்ட சரிபார்த்தலை செய்ய முடிந்தது. புத்திசாலித்தனமான முடிவு என்று எண்ணிக்கொண்டிருந்தேன், அம்மா ஆட்சி வரும்வரை.

அதற்குள் லேப்டாப்புக்கு வயதாகிவிட்டது. 1 மணி நேரம் நிற்பதே பெரிய விஷயம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் மின்வெட்டு நேரம் என்பது போய் மின்சாரம் வரும் நேரம் என்றாகிவிட்டது.

நான் ஒரு பேய் எழுத்தாளன். அதாவது கோஸ்ட் ரைட்டர். பலரும் என் எழுத்துக்களைப் படித்திருப்பார்கள். ஆனால், என் பெயர் இருக்காது. பக்கத்துக்கு இத்தனை ரூபாய் என்று பேசிக்கொள்வோம். அல்லது ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொடுப்பேன். சில வக்கீல்களுக்கு கேஸ் கட்டுகளை ஆங்கிலமாக்கித் தருவேன். பேயாய் எழுதி சம்பாதித்து வாழ்ந்துகொண்டு கிராமங்களில் கம்யூனிஸ்ட்டு கட்சி கட்டும் வேலையும் பார்ப்பேன். இந்த இரண்டு பக்க இழுப்பில் மூன்றாவதாக மின்வெட்டும் சேர்ந்துகொண்டது. நேரம் கிடைப்பது அரிதாகிவிட்டது. நேரம் கிடைக்கும்போது மின்சாரம் கிடைப்பது இன்னும் அரிதாகிவிட்டது.

கவனத்தையெல்லாம் முடிக்க வேண்டிய மொழிபெயர்ப்பிற்குள் செலுத்தி நெருடிய இடங்களை அசைபோட்டபடி மெதுவாக வண்டியோட்டியபடி வாடிப்பட்டி வந்து சேர்ந்தேன்

என்ன ஆச்சரியம்! மின்சாரம் இருந்தது. வழக்கமாக 9க்குப் போய் 11க்கு வரும். ஊரில் நுழையும்போது தெரிந்த பிரகாசம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படியானால், எப்போது மின்சாரம் வந்தது? எப்போது போகும்? மீண்டும் எப்போது வரும்?

புதிய பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் இருக்கும்? தெரியவில்லை. பழைய பேட்டரியைக் கடையிலேயே கொடுத்துவிட்டு வந்திருந்தேன். பேட்டரி ஒரு அபாயகரக் கழிவு. அதனை விற்றவரே திரும்ப எடுத்துக்கொண்டு அதனைக் கழிவாகக் கையாள வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ‘அதனை எடுத்துக்கொண்டு போய் நான் வாடிப்பட்டியில் போட அது குப்பையோடு சேர்ந்துபோய் எரிக்கப்பட்டு வெடித்தால்?’ என்று யோசித்து கடைக்காரரிடமே கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அந்த பேட்டரி 30 நிமிடத்திற்கு மேல் நிற்கும். புதிய பேட்டரி அந்த அளவு நிற்குமா?

எட்டு மணி நேரம் தொடர்ந்து சார்ஜ் போட வேண்டும் என்று கடைக்காரர் சொல்லியிருந்தார். அவர் சொல்லி முடிக்குமுன்பே நான் சிரிக்க தலையைச் சொறிந்துகொண்டார். அந்தப் பழைய பேட்டரியையும் எடுத்துக் கொண்டிருந்திருக்கலாமோ? பழைய பேட்டரி, புதிய பேட்டரி என்று மாற்றிப் போடலாம் அல்லது புதிய பேட்டரி சற்று கூடுதலாக, ஒரு மணி நேரம் நின்றாலும் பராவாயில்லை.

நான் வீட்டுக்குள் நுழைந்து அறையைத் திறந்து லேப்டாப்பில் பேட்டரியைச் செருகி மின் இணைப்பு கொடுத்தேன். லேப்டாப் வேலையைத் துவக்கியவுடன் பேட்டரி மீட்டரைப் பார்த்தேன். 10 நிமிடம் தாங்கும் என்று செய்தி சொன்னது. என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் என் கைக்கடிகாரம் ஒரு முறை கூவவும் மின்சாரம் போய்விட்டது. அரசாங்கத்தில் கடிகாரம் பார்த்து வேலை செய்யும் ஒரே துறை மின்சார வாரியம்தான். அதுவும் மின்சாரத்தை நிறுத்துவதற்குத்தான் கடிகாரத்தைப் பின்பற்றுவார்கள்.

மணி 10. அப்படியானல் இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்கவேண்டும். 11 மணிக்கு மின்சாரம் வருமா என்று யோசித்தபோது லேப்டாப் எச்சரித்தது. மின்சார இணைப்பு கொடு இல்லையென்றால் பேட்டரியை மாற்று என்றது. கடையில் போட்டுவிட்டு வந்த பேட்டரியை எடுத்து வந்திருக்கலாம். செட்டிங்கை மாற்றலாமே என்று யோசிப்பதற்குள் லேப்டாப் திரை கருப்பாகிவிட்டது. மைக்ரோ சாப்ட்காரன் அனைத்தையும் மூடிவிட்டு தூங்கப் போய்விட்டான். ரீசார்ஜ் லைட் வெளிச்சத்தில் நான் பேய்போல உட்கார்ந்திருந்தேன்.

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பசித்தது. சாப்பிட வேண்டும். ஆனால், சாப்பிட முடியாது. நான் சர்க்கரை நோயாளி. சாப்பிட்டால் இரத்தத்தில் குளுகோஸ் ஏறியவுடன் கண்ணைச் சொக்கும். தூங்கிவிடுவேன். அப்புறம் எப்படி 5 பக்கத்தை முடித்து மெயில் செய்வது?

வயிற்றுக்கு மிரட்டல் செய்தி அனுப்பிவிட்டு படிக்காத இந்து பேப்பர்களைத் தூக்கி வைத்துக்காண்டு கண்ணாடியை மாட்டிக்கொண்டு ரீசார்ஜ் லைட் வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தேன். அடுத்த ஆண்டு ஜூலையில் மின்வெட்டுப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று அம்மா சொல்லியிருந்ததில் ஆரம்பித்து ரிலையன்ஸ்காரன் காஸ் விவகாரத்தில் செய்த தில்லுமுல்லுவால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது வரை படித்து முடித்து கண் சோர்ந்தபோது மணி 11 ஆகியிருந்தது. மின்சாரம் வரவில்லை. சரி.. இன்னும் பத்து நிமிஷம் பார்க்கலாம் என்று தீர்மானித்து டைம்ஸ் ஆப் இந்தியா படிக்க ஆரம்பித்தேன்.

வயிறு கேட்கவில்லை. முரண்டு பிடித்தது. எவ்வளவு நேரம் சமாளிப்பது? 15 நிமிடம் கடந்துவிட்டதை என் கடிகாரம் காட்டியது. சரி அவ்வளவுதான்… சாப்பிடலாம் என்று கை விளக்கோடு சமையலறைக்குச் சென்று சோற்றைத் தட்டில் கொட்டிக்கொண்டு திரும்பினேன்.

அடப்பாவமே.. மின்சாரம் வந்துவிட்டது. அப்படியே வைத்துவிட்டு வந்து எல்லாவற்றையும் ஆன்செய்து வேலையைத் துவக்கினேன். வயிறு எரிந்தது. எரியட்டும். ‘இன்னிக்கு வேல பார்த்தாத்தான் அடுத்த வாரம் சாப்பாடு’, என்று வயிற்றிடம் சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தேன். என்ன எழவோ சற்று நேரத்தில் மின்சாரம் போய்விட்டது.

லேப்டாப் பேட்டரி மீட்டரைப் பார்த்தேன். 25 நிமிடம் என்றது. கரண்டு எப்ப வரும்? இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம். சரி இருக்கட்டும் என்று வேலை செய்ய ஆரம்பித்தேன். 15 நிமிடத்தில் மைக்ரோசாப்ட்காரன் குறுக்கிட்டு எச்சரிக்கை செய்துவிட்டு லேப்டாப்பை தூங்க அனுப்பிவிட்டான்.

என்ன செய்யலாம்? பேசாமல் சாப்பிடலாம் என்று வயிறு சொன்னது. கைவிளக்கோடு சென்று சாப்பிட்டேன். நானே சமைத்து வைத்துவிட்டுப் போனது. மழைக்கால குளிரில் சில்லிட்டிருந்தது. கொஞ்சம் காரம் அதிகம். சரி இருக்கட்டும் என்று கொட்டிக்கொண்டேன்.

திரும்ப வந்து அமர்ந்தபோது 20 நிமிடம் போயிருந்தது. இன்னும் 40 நிமிடமாவது காத்திருக்க வேண்டும். ஒரு சிகெரெட் எடுத்து பற்ற வைத்துக்கொண்டேன். ஆழ்ந்து உள்ளிழுத்து, யோசித்தேன். காலைக்குள் முடிக்க முடியுமா?

இந்த நேரம் பார்த்து அந்த ரீங்காரம் கேட்டது. கொசுவின் ரீங்காரம். எனது வீட்டு வாசலில் ஊரின் சாக்கடை ஒடுகிறது. எத்தனைதான் கதவையெல்லாம் சாத்தி வைத்தாலும் கொசு வந்துவிடும். நேற்று பெய்த மழையால் கொசுக்கள் பிரச்சனையிருக்காது என்று நினைத்து கதவையெல்லாம் திறந்து வைத்திருந்தேன். இந்த படுபாவிக் கொசு எப்படியே பிழைத்து வந்துவிட்டது.

ஒரு சமயம் இந்தக் காது அப்பறம் அந்தக் காது என்று கொசு ரீங்காரம் செய்தது. நான் காத்திருந்தேன். அது அமர வேண்டும். அமர்ந்து மெல்ல பல் பதியும்போது அடிக்க வேண்டும். அடிப்பதற்கு முன்பு உடலில் வித்தியாசமான தன்னிச்சை அசைவு வந்துவிடக்கூடாது. கொசு எச்சரிக்கையாகி பறந்துவிடும். அந்தக் கொசு உட்காருவதாக இல்லை. என் தயார் நிலையை ஆய்வு செய்கிறதோ?

மின்சாரம் இல்லாத நேரத்தில் இது நல்ல பொழுதுபொக்கு என்று தோன்றியது. கைகளைத் தயார் செய்து வைத்துக்கொண்டேன். கொசு லேண்டான இடத்தில், அந்த நொடியில் ஒரே அடி என்று காத்திருந்தேன். அந்த நொடியும் வந்தது. என் இடது பக்கக் காது ஓரத்தில் கொசு உட்கார்ந்தது. கோபத்தையெல்லாம் திரட்டி இடது காதோடு சேர்த்து என்னை அறைந்து கொண்டேன். தலை சுற்றியது. காது விண்விண்ணென்று வலித்தது. கொசு என்ன ஆனது என்று பார்த்தபோது, மங்கிப்போன ரீசார்ஜ் வெளிச்சத்தில் தெரியவில்லை. காதைத் தடவிக்கொண்டே, கொசு எங்கே என்று யோசித்தபோது வலது காதில் கொசுவின் ரீங்கார‌ம். எனக்குக் கொலைவெறி வந்தது.

விட்டேனா பார் என்று சவால் விட்டவாறு சுமோவை, அதாவது மிகப் பெரிய கொசுவர்த்தியைப் பொருத்தினேன். புகை கசிய ஆரம்பித்த போது மங்கிய வெளிச்சத்தில் அந்த வெள்ளைக் கோடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கொசுவின் ரீங்காரம் இப்போது கேட்கவில்லை. ஆனால் நான் இறும ஆரம்பித்தேன். இந்தக் கொசு மருந்து எனக்கு ஆகாது. கொசுக்கடியா, இருமலா என்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்த சமயம் பார்த்து மின்சாரம் வந்தது. மின்விசிறி ஓட ஆரம்பித்தது. கொசுவர்த்தியை ஓரங்கட்டி அணைத்துவிட்டு வேலையை ஆரம்பித்தேன்.

எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை. கண் சொக்கியது. சாப்பிட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது. தட்டச்சு எல்லாம் தப்பச்சு ஆகிக்கொண்டிருந்தது. ஆங்கிலம் இருந்த பிடிஎப் கோப்புக்கும் தமிழ் தட்டச்சு செய்த வேர்டு கோப்புக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. கைகள் சோர்ந்துபோக… என்ன ஆனது என்று தெரியவில்லை.

போலீசுடன் வந்த பில்கேட்ஸ், சாப்ட்வேர் திருட்டுக்காக என்னைக் கைது செய்தபோது மிரண்டுபோய் எழுந்தேன். இருட்டாக இருந்தது. கனவு என்று தெரிந்தது. லேப்டாப் மீட்டர் 50 சதத்தைக் காட்டியது. இன்னும் எவ்வளவு நேரத்தில் கரண்ட் வரும் என்று கணக்குப் போட முடியாமல் மூளை சோர்ந்திருந்தது.

என்ன செய்யலாம்? என்று யோசித்தபடியே உட்கார்ந்தேன். தூங்கிவிட்டேன் போலும். பேப்பர் பையன் வீசிய பேப்பர் வந்து விழுந்த சப்தம் கேட்டு துடித்துப் பிடித்து கண்விழித்தேன். ‘அய்யோ இராத்திரி பூரா உட்காந்ந்துட்டே தூங்கிட்டேனா?’ என்று கேட்டுக்கொண்டேன். காலை மணி ஆறு இருக்கும். மின்சாரம் இருக்கிறதா என்று பார்த்தேன்.

இல்லை.

‘மயிரே போச்சு’ என்று முனகியவாறு நாற்காலியில் இருந்து எழுந்து தரையில் படுத்துத் தூங்கிப்போனேன்.

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *