கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 7,159 
 

இந்திரன் அந்த விகாரைக்குள் புகுந்தான். புத்தரை அங்கே கண்டு கொள்ளலாம் என்கின்ற திடமான நம்பிக்கை அவனிடம் இருந்தது. இந்திரன் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டான். பௌத்த துறவி போலக் காவி தரிக்காவிட்டாலும் அவனும் காவி தரித்திருந்தான். தலை மொட்டையாக மழிக்கப்பட்டு இருந்தது. முகத்திலும் துளியளவு ரோமம் இல்லை. அதுவும் சுத்தமாக மழிக்கப்பட்டு பளிங்காக மினுமினுத்தது. அவன் இன்னும் பௌத்த துறவியாக மாறிவிடவில்லை. எதுவாக மாறவேண்டும் என்பதைப் பற்றி அவன் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதற்கு முன்பு புத்தரைக் காணவேண்டும் என்பது அவனுடைய அடங்காத அவா. அந்த அவாவோடே அவன் அந்த விகாரைக்குள் புகுந்தான். புத்தர் உயிரோடு இருக்கிறாரா?

இன்று அவர் இல்லை என்று இந்த உலகம் நம்பினாலும் அவரைக்காண வேண்டும் என்பது அவனது நம்பிக்கையுடன் கூடிய அவா. அவரைக் கடவுள் ஆக்காது இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். யாரும் அதைக் கேட்கவில்லை. இது பற்றி இந்திரனுக்குத் தெரியாது. இந்திரனாலும் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. அவனும் கடவுள் என்றால் அர்ச்சுனனின் கண்ணன் போல் நேரே வந்து பிரபஞ்சத்தையே தன்னில் காட்ட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்புக் கொண்டவன். அதனால் அவன் எண்ணம் அவரைப் பார்ப்பது மடுமாகவே இன்று இருந்தது?

கடவுள் கோயிலில் இருப்பார் என்பதை இந்திரன் நம்பினான். அதைப் போல புத்தர் இங்கே இருப்பார் என்பதையும் அவன் முழுமையாக நம்பினான். அவன் நம்பிக்கையோடு விகாரைக்குள் காலடி எடுத்து வைத்தான். கால் குளிர்ந்தது. உடல் சிலிர்த்தது. உள்ளம் குளிர்ந்தது. மிகுதி ரோமங்கள் குத்திட்டு நின்றன. அவன் கண்கள் ததும்பின. உள்ளம் கோடைக் காலத்துப் பனியாக உருகிக் கண்களால் அது அருவியாகப் பெருகிக் கொட்டியது.

புத்தர் எப்போதும் அமைதியை விரும்பியவர். என்றும் கோபத்தைத் துறந்தவர்.

உள்ளே புத்தரின் காலடியில் அன்று மலர்ந்த வெண்தாமரை மலர்கள். இந்திரன் தனது மனதும் அப்படி இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். புத்தரின் அந்த உருவம் எதை அவர் வெறுத்தாரோ அதனாலேயே செய்யப்பட்டு இருந்தது. இருந்தாலும் இந்திரனுக்கு அதில் ஒரு சாந்தம் தெரிந்தது. அது அவனை அமைதிக்குள் தள்ளியது. எரியும் தீபங்கள் அவன் மன அழுக்கை எரிப்பதாக இருந்தது. அமைதி, சாந்தம் பரவ அவன் மனது ஒருநிலைப்படத் தொடங்கியது. புத்தர் அதே சாந்தத்தோடு, அதே அமைதியோடு… அவர் இன்று இவனுக்காகப் பேசுவாரா? இந்திரன் புத்தரைப் பார்த்துக் கொண்டு நின்றான். மாறாத அதே சாந்தம். அதே அமைதி. ஆனால் அவர் பேசவே இல்லை. அவர் பேசாது விட்டால்… அவன் கண்கள் கலங்கின. கவலை பெருகியது. மனம் அலைபாயத் தொடங்கியது. பலர் வெண்தாமரை மலர்களைக் கொண்டு வந்து அர்ப்பணித்தனர். சிலர் செந்தாமரை மலர்கள் அர்ப்பணித்தனர். வந்தவர்கள் வழிபாடு முடித்து நகர்ந்தனர்.

இந்திரனால் முடியவில்லை. இறைவனாகப் புத்தரை இமைக்கும் கணமாவது நிஜமாகப் பார்த்துவிட வேண்டும் என்கின்ற அடங்காத அவன் ஆசை. அதை யாரிடமும் சொல்லிவிட முடியாது. சொன்னால் இவன் பயித்தியக்காரன் என்று நகைப்பார்கள். இந்திரன் அசையாது நின்றான். கண்கள் உருகும் மெழுகாகச் சிந்தின. இந்திரன் நின்றான். ஒரு மணித்தியாலம் நின்றான். பல மணித்தியாலங்கள் நின்றான். ஆலயம் மூடும் வரைக்கும் நின்றான். இறுதியாக அவர்கள் அவனை வெளியேற்றினர். இப்போது புத்தரை எண்ண அவனுக்கு வெறுப்பாக இருந்தது. இனி என்ன செய்வது என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவன் சோகமாக நடந்தான்.

இந்திரன் வெள்ளைச் சாறம் கட்டி இருந்தான். வெள்ளை மேற்சட்டை அணிந்திருந்தான். தலையில் வெள்ளைக் குல்லாவும் அணிந்து இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவனை விலத்திக் கொண்டு பலர் உள்ளே சென்றார்கள். அது ஒரு வெள்ளை மசூதி. அரச காலத்தில் வெள்ளை மாபிள் கற்களால் கட்டப்பட்ட அந்த மசூதியின் நிலமும் வெள்ளையாக மினுங்கியது. அவன் இப்படி நிற்பதை சிலர் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

இந்திரனுக்கு இங்காவது இறைவனைப் பார்த்துவிட வேண்டும் என்று மனது கிடந்து துடித்தது. இங்கே வந்துவிட்ட அவனுக்கு இப்போது என்ன செய்வது என்று விளங்கவில்லை. இருந்தாலும் இறைவனை இங்காவது பார்த்துவிட வேண்டும் என்கின்ற ஆசை அவன் நினைவையும் கண்ணையும் மறைத்தன. அவன் மெதுவாக உள்ளே சென்றான். சிலர் அவனைப் பார்த்து நகைத்தனர். எதற்காக நகைக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவனும் முகம், கை, கால் அலம்பினான். ஆவலோடு அல்லாவைக்காண அவன் உள்ளே சென்றான். உள்ளே சென்ற அவன் மலைத்தான். திகைத்தான். பிரமிப்பில் உறைந்தான்.

தங்கம் பதித்த தூண்கள். எங்கும் நிறைந்த சித்திரங்கள். வைரமாய் ஒளிரும் கண்ணாடிச் சுவர்கள். நிலத்தின் செங்கம்பள விரிப்புக்கள். இந்திரனுக்கு ஒருகணம் தன்மீது கோபம் வந்தது. பார்க்க வந்ததை விட்டுவிட்டுப் பராக்குப் பார்ப்பதை எண்ணிக் கவலை வந்தது. அங்கே சிலைகளை வைத்துச் சித்திரவதை செய்யும் முறை இல்லை. அதுவும் அவனுக்கு அன்னியமாக இருந்தது. சிலைகள் இருந்த இடத்திலேயே இறைவனைச் சந்திக்க முடியவில்லை. இங்கு அது முடியுமா? என்கின்ற சந்தேகம் எழுந்தது. இந்திரன் தன்னைக் கடிந்து மனதை ஒருநிலைப்படுத்தினான். முட்டுக்கால் இட்டு மற்றவர்களோடு இருந்தான். கண்கள் மூடிக் கைகள் ஏந்தி அல்லா… அல்லா என்று உள்ளுருகி வேண்டி அந்த அஸ்ரத் தொழுகையைத் தொழுதான்.

எவ்வளவு நேரம் அவன் அப்படிப் பிரார்த்தித்தான் என்பது விளங்கவில்லை. அல்லா, அல்லா என்று அவன் மனம் உருகியது. இந்திரன் என்று அவர் அழைப்பார் என்று கண்ணை முடிக் காத்திருந்தான். எதுவும் கேட்கவில்லை. எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. யாரோ அவன் தோழில் கைவைத்தார். அவன் கண்களைத் திறந்தான். கிழவர் ஒருவர் அவனைப் பார்த்துப் பரிதாபமாய் சிரித்தார். இந்திரன் கலங்கிய கண்களோடு வெளியே வந்தான். அவனுக்குச் செத்துவிடலாம் போல இருந்தது. அவன் சிறிது நேரம் வெளியே நின்ற அழுதான். இருந்தாலும் அவனிடம் நம்பிக்கை இருந்தது. இன்னும் பல இடங்கள் இருக்கின்றன என்கின்ற துணிவு வந்தது. அவன் அதனால் மேற்கொண்டு நடந்தான்.

இந்திரன் துறண்கெய்மில் இருக்கும் அந்தப் புகழ் பெற்ற கருங்கற் தேவாலயத்திற்குள் இருந்தான். இது பதினோராம் நூற்றாண்டில் அரசர் இரண்டாவது ஊலாவிற்காகக் கட்டப்பட்டது. பின்பு பல மாற்றங்களைத் தாங்கி இன்று கருங்கற் தேவாலயமாக… ரோமாபுரியின் சிற்பக் கலையோடு, யேசுபிரானை ஞாபகப்படுத்தும் ஒரு முக்கிய தலமாக நோர்வேயில் இருக்கிறது. யேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று பலர் நம்புகிறார்கள். சிலர் காத்து இருக்கிறார்கள். நம்பிக்கையே வாழ்க்கை. அதுவே கடவுள் என்பது அவர்கள் எண்ணம்.

இந்தத் தேவாலயம் நோர்வே அரசகுடும்பத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்று என்கின்ற எந்தத் தகவலும் இந்திரனுக்கு இப்போது முக்கியம் இல்லை. அவன் தேடுவது அவனுக்கு மட்டுமே தெரியும். அதை வெளியே சொல்லவும் அவனால் முடியவில்லை. இன்றாவது அது நிறைவேற வேண்டும் என்பதே அவன் அடங்காத அவா. ஆயிரத்து எட்டு நூறு நபர்களை உள்ளடக்கக்கூடிய அந்தத் தேவாலயத்தில் இன்று அதிக கூட்டம் இல்லை. இருக்கும் கூட்டத்திற்கு பிரார்த்தனையும், பிரசங்கமும் நடக்கப் போகிறது. அது முடிய இந்திரனுக்காக யேசு காட்சி தருவார் என்பது அவன் இன்றைய அசைக்க முடியாத நம்பிக்கை. பூசைக்குப் பல சுதேசிகள் வந்து இருந்தார்கள். இரண்டு வெளிநாட்டவர் வந்து இருந்தார்கள். எல்லோரும் அமைதியாக குருவானவருக்காகக் காத்திருந்தார்கள்.

சிறிது நேரத்தில் எதிர்பார்த்தது போலக் குருவானவர் வந்தார். தனது ஆசனத்தில் ஏறி யேசுபிரானைப் பற்றி, இறையுணர்வோடு வாழ வேண்டிய வாழ்வைப் பற்றி நீண்ட நேரமாக விரிவாக உரையாற்றினார். இந்திரன் யேசுபிரானை எண்ணினான். சிலுவை சுமந்து இரத்தம் சிந்தினாலும் அவர் உயிர்த்து எழுந்தார். இன்று அவர் உயிர்த்து வந்து தரப்போகும் காட்சி பற்றிக் கனவு கண்டான். அவன் எதிர்பார்ப்பிற்கு எதிராக குருவானவர் ஆறுதலாக… இது எப்போது நிறைவுறும் என்கின்ற பொறுமை அற்ற நினைவோடு அவன்…

ஒருவாறு அவர் தனது பிரசங்கத்தை முடித்தார். கூட்டம் கலையத் தொடங்கியது. இந்திரன் கண்ணை மூடினான். தனது பிரார்த்தனைக்கான பலனை இன்று பார்த்து விடுவேன் என்கின்ற நம்பிக்கையோடு காத்திருந்தான். அவன் பிரார்த்தனை தொடர்ந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்று அவனுக்குத் தெரியாது. ‘நான் வந்துவிட்டேன்’ என்கின்ற குரல் வரும் என்று கண்ணை மூடிக் காத்திருந்தான். ‘நீங்கள் வெளியே செல்ல வேண்டும்.’ என்று நோர்வே நாட்டு மொழியில் யாரோ கூறியது அவன் காதில் விழுந்தது. அவன் கண்ணைத் திறந்தான். சிவபெருமானால் மட்டுமே இந்திரனை எரிக்க முடியும். என்னால் எதுவும் செய்ய இயலாது என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது. தனக்கு முன் யேசுபிரான் வரவில்லை என்கின்ற தோல்வி மனதோடு அவன் எழுந்தான். புயலாகத் தேவாலயத்தை விட்டு அழுதுகொண்டு வெளியேறினான்.

ஈழத்துச்சிதம்பரம். மார்கழிமாதத் திருவெண்பாத் தேர்த் திருவிழா. நடன நாதன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி இருந்தான். வாசம், வர்ணம், நாதம், பிரகாசம் நிறைந்த அவன் தலத்தில் ஒற்றைக்காலைத் தூக்கிப் பிரபஞ்சத்தைத் தன்னில் காட்டும் அவன் நர்த்தனத்தை மனதில் கண்டு இந்திரன் மெய் சிலிர்த்தான். சிவபதம் என்பது இந்த ஆடல் அரசனின் காலில் சரணடைவது அல்லவா என்பது இந்திரனுக்குப் புலனாகியது. எங்கும் ஓளி வெள்ளம் ஆகியது. இந்த ஒளி வெள்ளத்தில், இரதோற்சவ நேரத்தில், இறைவன் இன்று வருவான். தன் ஆடலை நிறுத்தி என்னை ஆட்கொள்வான். அந்த அவா இன்று நிறைவேறப் போகிறது என்கின்ற மகிழ்வில் அவன் திளைத்தான்.

ஆடல் நாயகன் உள் வீதி வலம் வந்து, இரதமேறி, சக பரிவாரங்களோடு பல இரதங்கள் பவனிவர வெளி வீதி சுற்றி முடித்து, இரதம் விட்டு இறங்கி, மீண்டும் வசந்த மண்டபம் வரும் வரைக்கும் இந்திரன் ஆடல் நாயகனைக் கண்ணீரோடு பார்த்த வண்ணம் வலம் வந்தான். வசந்த மண்டபத் திரை மீண்டும் இழுத்து மூடப்பட்டது. பின்பு திறந்து ஆடல் நாயகனுக்குக் கற்பூர ஆராதனை நடத்தப்பட்டது. பிரசாதத்தோடு எல்லோரும் கலையத் தொடங்கினார்கள். இந்திரன் நம்பினான். நடராச தரிசனம் கிடைக்கும் என்று காத்திருந்தான். கூட்டம் கலைந்து கரைந்து போனது.

‘இந்திரா வா. மணிவாசகர் சபையில அன்னதானம் போடுறாங்கள். போய்ச் சாப்பிடுவம்‘ என்று கூறிய யாரோ அவனது தோழில் கைவைத்து அவனைத் தள்ளிக் கொண்டு சென்றார்கள். ‘ஆடல் நாதா இது என்ன சோதனை?’ அவன் கண்கள் கண்ணீரால் நிறைந்து பார்வை அழிந்தது.

நான்கு உருவங்கள் அவன் முன்பு தோன்றின. அவை அவன் முன்பு அந்தரத்தில் ஆடின. அவற்றின் பின்னே இன்னும் பல உருவங்கள் தோன்றின. அவை எல்லாம் திடீரென ஒன்றாகின. ஒன்றாகியவை ஒளியாக அவனுள் புகுந்தன.

இந்திரன் விழித்தான். உடல் தெப்பமாக வியர்த்து இருந்தது. கனவுகளின் வால்களாகச் சில நினைவுகள். அவனுக்கு இதுவரை காலமும் விளங்காது இருந்த ஒரு உண்மை இன்று விளங்கியதாய் தோன்றியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *