கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 27,430 
 

நான் லிகுவிட் லவுஞ் கிளப்பில் இருந்து வெளியே வந்தபோது அதிகாலை மூன்றுமணி. வீதியில் ஒரு சிலரின் நடமாட்டமே இருந்தது. வீடற்றவர்கள் நிறை வண்டிகளைத் தள்ளினர்; சனங்கள் நெருக்கியடிக்கும், புகை சூழ்ந்த பார்களில் வேலைசெய்பவர்களும், சங்கீதக்காரர்களும் தங்கள் அன்றைய கடுமையான உழைப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். போதை நிறைந்த இன்னும் சிலர் வேறு எங்காவது சாப்பிடவோ, அல்ல மேலும் குடிக்கவோ அலைந்தனர். அந்த நேரம் கெட்ட நேரத்தில் வாடகைக்கு வாகனமொன்று பிடிப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. காலையிலோ அல்லது பரபரப்பான மாலையிலோ அல்லது வெள்ளி, சனி பின்னிரவுகளிலோ அது அத்தனை சுலபம் இல்லை. அதுவும் ஒரு கறுப்பு முகத்தை வாடகைக் காரோட்டிகள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள். இரண்டு வாடகைக் கார்கள் வசதியாக கிளப்புக்கு முன் தரித்து நின்றன. நான் என்னுடைய இரண்டு ஜிம்பே மேளங்களையும், பேசும் மேளத்தையும், அதன் உறைகளையும் சுமந்தபடி முதல் காரை அணுகினேன். அந்தக் காரின் சாரதி இரண்டாவது கார் சாரதியுடன் ஏதோ ஆவேசமாக பேசுவதை நிறுத்திவிட்டு கையைக் காட்டி ‘ஓ, நண்பரே வாரும், வாரும்’ என்றான். அவனுடைய பேச்சில் கிழக்கு மத்தியதரை வாடை வீசியது. கிரேக்கம், அல்பேனியா அல்லது துருக்கியாகக்கூட இருக்கலாம். யார் கண்டது? அவன் கொஞ்சம் தொக்கையாக, ஐம்பது வயது வாக்கில் இருந்தான்.

இத்தனை வருடங்களில் என்னைச் சவாரி ஏற்கும் சாரதிகளினுடனான என் உறவை வர்ணிப்பதானால் சண்டை – சமாதானம் என்று சொல்லலாம். சில வேளைகளில் அது மோசமான பகையாகவும் மாறுவதுண்டு. இந்த டிரைவர்கள், வீதி வெறிச்சோடி, அவர்கள் தொழில் மந்த நிலையில் இருக்கும் நேரங்களில் மட்டுமே என்னை ஏற்றுவார்கள். அவர்களுடன் சுமுகமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எனக்கில்லை. இன்றைய சாரதி கொஞ்சம் நல்லவன்போல தோன்றினாலும் என்னுடைய வழமையான தோரணையை உதறிவிடுவது கடினமாகவே இருந்தது.

நான் சாமான்களைத் தூக்கிக்கொண்டு காரின் ட்ரங்கை அணுகியதும் அவன் எனக்கு உதவ வந்தான். ‘நான் இதைப் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் சிறிய பையுடன் உள்ளே ஏறுங்கள்’ என்றான். அப்படியே என் ஜிம்பே மேளங்களை வாங்கி ட்ரங்கிலே வைத்து மூடினான்.

‘புரூக்லினுக்கா போகிறீர்கள்?’ அவன் கேட்டான்.

பின் கதவை நோக்கி நடந்தவாறு ‘ஆம், பார்க் ஸ்லோப்’ என்றேன்.

காரின் உள்ளே புதிதாகத் தெளித்த ஏதோ வாசனை நல்ல மணம் வீசியது. ஆனால் அது மறைக்க முயன்ற சிகரெட் நெடி இன்னும் அடிவாரத்தலிருந்து அகலவில்லை. வாரத்தில் ஒரு நாள் என்று ஆப்பிரிக்க ஜாஸ் வாத்தியக் குழுவுக்கு, காற்றோட்டம் இல்லாத நிலவறைக் கிளப்பில், மேளம் வாசித்ததில் எனக்கு கண்கள் எரிந்து நீர் கசிந்தது.

டிரைவருக்கு காத்திருக்கும்போது என் பகல் வேலையைப் பற்றி யோசித்தேன். அங்கே பத்து மணிக்கு நான் நிற்கவேண்டும். நாளாந்தம் ஒரு கம்புயூட்டர் திரைக்கு முன் உட்கார்ந்து மணிக்கணக்காக கம்பனி இணைய தளங்களை உண்டாக்குவதும், புதுப்பிப்பதுமாகிய என் வேலையை நினைத்த மாத்திரத்திலேயே சோர்வு இன்னும் கூடியது.

சாரதி காருக்குள் ஏறியதும் ‘உங்கள் முகவரி என்ன?’ என்றான்.
நியூயோர்க் சாரதிகள் அரசியல் விவாதங்களுக்கு பேர்போனவர்கள். பேச்சை வளர்த்த எனக்கு பிரியமில்லை என்பதை உணர்த்துவதற்காக வெடுக்கென்று பதில் கூறினேன். அது அவனுக்கு புரிந்ததாகத் தெரியவில்லை.
‘நீங்கள் எங்கேயிருந்து?’ அவன் கேட்டான்.

‘புரூக்லின்’ நான் கூறினேன்.

‘இல்லை, இல்லை. எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டேன்.’

‘ஓ, கானாவிலிருந்து.’

‘எனக்கு கானா தெரியும். அங்கேயிருந்து எனக்கு அநேக கார் சாரதி நண்பர்கள் இருக்கிறார்கள்.’

‘அப்படியா!’

‘நான் ஆர்மினியன்.’ அவனுடைய முகத்தில் தோன்றிய சிரிப்பில் அளவில்லாத பெருமிதம் தெரிந்தது.

‘நல்லது.’

நாங்கள் அப்போது சமிக்ஞை விளக்குகளுக்கு முன்னால் நின்றிருந்தோம். இவன் என்னிடம் வேறு கேள்விகள் கேட்பதை நிறுத்துவதற்காக நான் கார் யன்னல் வழியால் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘அப்ப நீங்கள் ஓர் இசைக்கலைஞரா?’

நான் நீளமாக மூச்சை தயாரித்து பெருமூச்சு விட்டுக்கொண்டே ‘ஆம்’ என்றேன்.

‘என்னுடன் பேச விருப்பமில்லையா, நண்பரே. எனக்கு சகமனிதரை மிகவும் பிடிக்கும்.’

எப்படியிருந்தாலும் எனக்கு என்ன என்று நினைத்தபடி திரும்பி ‘இல்லை, நான் மிகவும் களைத்திருக்கிறேன்’ என்றேன்.

‘கேளும், நண்பரே.’ அவன் திரும்பி கண்ணாடி தடுப்பு வழியால் என்னைப் பார்த்தான். ‘இங்கே முன்னாலே வந்து உட்காருங்கள். பரவாயில்லை’ என்றான்.
‘இருக்கட்டும்’ என்றேன் நான். ஆனால் நாங்கள் ஒன்பதாவது தெருவை கடந்ததும் அவன் திடீரென்று பிரேக் போட்டு காரை ஒரு பக்கத்தில் நிறுத்தினான். பின்னாலே வந்த கார்கள் விடாமல் ஹோர்ன் அடிக்கத் தொடங்கின.

‘நாசமாய்ப் போகட்டும்.’ அவன் சிரித்தபடி நகராமல் சாவகாசமாக ‘முன்னுக்கு வாரும், நண்பரே’ என்றான்.

நான் கதவைத் திறந்து வெளியே வந்தேன். முன் இருக்கையில் உட்கார்ந்து கதவைச் சாத்திய பிறகு சாரதி சொன்னான் ‘இது எவ்வளவோ நல்லது, நண்பரே. என்னைப் பாருங்கள். எனக்கு உலகத்தவர் எல்லோரையும் பிடிக்கும். நீங்கள் எங்கேயிருந்து வந்தாலும் எனக்கு பரவாயில்லை.’ அவன் சொன்னதற்கு என் முகத்தில் ஏதாவது மாற்றம் எதிர்பார்த்தான். ஆனால் நான் ஒருவித உணர்ச்சியையும் காட்டாது மறைத்துக்கொண்டேன்.

‘எனக்கு தெரியும், எனக்கு தெரியும்.’ விவாதத்தில் தோல்வியடைந்தவர் விட்டுக்கொடுப்பதுபோல பேசினான். ‘எங்களில் பலர் கறுப்பர்களை ஏற்றுவது கிடையாது. நான் அப்படி இல்லை. என்னை அழைப்பவர் எவரையும் ஏற்றுவேன்.’

கறுப்பு மனிதரில் கரிசனை கொண்ட ஒரு குற்ற உணர்வுள்ள வெள்ளைக்காரன்போல இவன் நடப்பதாக எனக்குப் பட்டது. இவனுடைய கரிசனை உண்மையாகக்கூட இருக்கலாம். நான் சிலவேளைகளில் குணவானாக நடப்பதுபோல இவனும் மற்ற சாரதிகளின் நடத்தையை சரிக்கட்டுவதற்காக நல்லவன்போல நடக்கலாம். நான் அதைப் பொருட்படுத்தவில்லை, என்னை தனியாக விட்டால் போதும் என்று நினைத்தேன். ஆனால் பேசுவதற்கு வாயைத் திறந்தபோது மாத்திரம், ‘நீங்கள் மிக நல்லவராக இருக்கிறீர்கள்,’ என்றேன்.

‘ஆம், நான் நல்லவன்தான்.’ அவன் சிரித்தபடி சொன்னான், ‘இங்கே புகை பிடிக்கலாம், தெரியுமா?’ திடீரென்று ஒரு வெளிநாட்டு சிகரட் பக்கட்டை சேர்ட் பையிலிருந்து உருவி என்னிடம் நீட்டினான்.

‘இல்லை, நன்றி. நான் புகைப்பதில்லை.’

‘என்னவும் புகைக்கலாம். என்னிடம் கஞ்சாவும் உண்டு, வேணுமா?

‘வேண்டாம். எதுவுமே நான் புகைப்பதில்லை.’

‘உமக்கு என்ன நடந்தது? புகை பிடிக்காத இசைக்கலைஞன்,’ கரகரத்த குரலில் சிரித்தான்.

அவன் சிகரெட்டை வாயில் பொருத்தி, லைட்டரை தேடியபடி, ‘உங்களுக்கு பரவாயில்லையா?’ என்றான்.

‘இல்லை’ என்றேன்.

அடுத்த சிக்னல் விளக்கில் சிகரெட்டை பற்றவைத்தான். நான் அவசரமாக என் வீட்டு நம்பரை அழைத்தேன். மூன்று முறை மணி அடித்தபின் பதிலி வந்துவிட்டது. என்னோடு வாசம் செய்யும் சிநேகிதி •பிரான்ஸிசுக்கு தகவல் விட்டேன். ‘ஏ, இது நான். வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன். உன்னை எழுப்பவில்லை என்று நினைக்கிறேன். விரைவில் அங்கே நிற்பேன்.’ இப்படி நடு இரவு தாண்டி நான் வேலை முடித்து வரும்போது என்னுடன் சேர்த்து வியர்வை மணமும், புகை மணமும் வந்துவிடும். அவள் அது தன்னை தொந்திரவு செய்வதில்லை, அப்படியே தன்னுடன் படுக்கலாம் என்று சொல்லியிருந்தாலும் நடு நிசியில் அவளை எழுப்புவது எனக்கு குற்ற உணர்வைக் கொடுத்தது. ஆனால் இன்றிரவு, என் நினைவிலிருக்கும் வேறு எந்த இரவைக் காட்டிலும், எனக்கு •பிரான்சிஸின் அன்பும், தொடுகையும் தேவையாக இருந்தது.

நான் செல்பேசியை சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு இந்த ஆர்மினியனிடம் இருந்து தப்பி என்னைச் சூழ்ந்திருந்த பிரச்சினைகளில் மூழ்கினேன். இரண்டு மாதம் முன்பு கானாவில் இருக்கும் என் பெற்றோர் தொலைபேசியில் என்னை அழைத்து தாங்கள் அங்கே நல்ல குடும்பத்தில், குணமான ஒரு பெண்ணை எனக்கு பார்த்திருப்பதாக கூறினார்கள். நான் அவர்களிடம் சண்டை போட்டேன். அதற்கு பிறகு அவர்களை அழைக்கவில்லை. அமைதியை தொலைத்து, மனம் சோர்ந்துபோய் இருந்தாலும் இந்த விசயத்தை நான் •பிரான்சிஸிடம் சொல்லவில்லை. மூன்று வருடங்களாக நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம்.

ஆனால் இந்த ஆர்மினியனை இலகுவில் திசை திருப்ப முடியாது.
நான் தொலைபேசியை முடித்தது தெரிந்ததும் அவன் தொடங்கினான். ‘உமக்குத் தெரியுமா நாங்கள் கலைஞர்கள் வித்தியாசமானவர்கள்; ஒருவரையும் வெறுப்பது கிடையாது.’

நான் தலையை ஆட்டினேன். செல்பேசியில் இன்னொரு அழைப்பு செய்யாததையிட்டு என்னையே நான் திட்டிக்கொண்டேன்.

‘நானும் ஒரு இசைக்கலைஞன்தான், உமக்கு தெரியுமா?’

‘அப்படியா?’

‘உமக்கு சுர்ணா தெரியுமா?’

‘சுர்ணா, அது என்ன? ஒருவித இசையா?’

‘இல்லை, இல்லை. அது ஓர் இசைக் கருவி. சுர்ணாதான் என்னுடைய சனங்களின், உச்சக்குரலுக்கு ஏற்ற முதலாவது சக்ஸபோன்.’ அவன் பேசும்போது ‘ர்’ உச்சரிப்பு உருண்டு உருண்டு வந்தது.

‘அந்த வாத்தியத்தையா நீர் வாசிப்பீர்? சுர்ணா.’

‘இல்லை, இல்லை, இல்லை, நண்பரே. நீங்கள் சரியாக உச்சரிக்கவில்லை. நாங்கள் அதை சுர்ர்ணாஹ் என்போம்.’

‘ஓகே, சுர்ர்ணாஹ்.’ அவன் சொன்னமாதிரியே ‘ர்’ க்கு அழுத்தம் கொடுத்து ‘ஹ்’ கில் முடித்தேன்.

‘அதேதான், நண்பரே.’ அவன் சந்தோசத்தில் கத்தினான்.

‘என்னவோ. அப்படியானால் இந்த சுர்ர்ணாஹ்வை நீர் வாசிப்பீரா?’

‘நான் அனைத்தையும் வாசிப்பேன். சுர்ர்ணாஹ், டூடுக், டாவுல், டோ•ல், சுலிச். எதைக் கொண்டுவந்தாலும் வாசிப்பேன்.’ வலது கையை மேலும் கீழும் பெரிதாக ஆட்டியபடி ஆர்வமாகப் பேசினான். ‘நான் கனூன் கூட வாசிப்பேன், உமக்கு கனூன் தெரியுமா?’ என்றான்.

‘இல்லை, கனூன் தெரியாது.’

‘நீர் ஓர் இசைக்கலைஞன், ஆனால் உமக்கு கனூன் தெரியாது,’ அவன் தொடர்ந்தான்.

‘இங்கே பாரும். என் சனங்களின் சரித்திரத்தை மறைத்துவிட்டார்கள். கனூன்தான் உலகத்தின் முதல் ஹார்ப்பிஸ்கோட். அதைக் கண்டுபிடித்தது என் சனங்கள்தான்.’

நான் மனதுக்குள், ஆர்வம் குறையாத இவன் அடுத்ததாக என்னத்தை தன் சனங்கள் கண்டுபிடித்ததாக சொல்வான் என்று ஊகிக்கப் பார்த்தேன். என்றாலும் தலையை அசைத்து ஆமோதித்தேன். இந்தச் சாரதியின் அற்புதம் வாய்ந்த ஆர்மினிய முன்னோர்கள் கண்டுபிடித்த உச்சக்குரல் சக்ஸபோன், முதலாவது. அவர்கள் கண்டுபிடித்த ஹார்ப்பிஸ்கோட்டும், முதலாவது. ஆகவே முதலாவது பியானோவைக் கண்டுபிடித்ததும் அவர்களே என்று ஆகிறது. என் மூளையில் ஒரு பொறி தட்டியது. அவன் சொல்வது உண்மையில்லை. உலகத்தின் முதல் ஹார்ப்பிஸ்கோட் பல•பொன் அல்லவா?

‘மன்னியுங்கள். கோறா உமக்கு தெரியுமா?’ நான் கேட்டேன்.

‘கோறா, இசைக்கருவியா?’

‘ஆமாம். ஹார்ப்லூட், கீழே பெரிய குடுவையுடன், இருபது தந்திகள் கொண்டது. அது மேற்கு ஆப்பிரிக்காவச் சேர்ந்தது.’

‘அதற்கென்ன?’ அவன் கேட்டான்.

‘எனக்கு தெரிந்த சரித்திரத்தின்படி கோறாதான் உலகத்தின் முதல் ஹார்ப்பிஸ்கோட். ஆகவே அதுவே உலகத்தின் முதல் பியானோவும்’ என்றேன்.

‘இல்லை. இல்லை. இல்லை. ஆர்மினியர்களின் நாகரிகத்தை தாண்டி ஒன்றுமே இல்லை,’ அவன் கத்தினான். ‘எல்லோருக்கும் தெரியும், நாங்கள்தான் முதல் ஹார்ப்பிஸ்கோட்டை கண்டுபிடித்தவர்கள் என்பது. ஆகவே பியானோவும் எங்களுடையதுதான்.’

‘இதில் நாங்கள் வித்தியாசப்படுகிறோம் என்பதை ஒப்புக்கொள்வோம்,’ என்றேன்.

நாங்கள் இப்பொழுது மான்ஹட்டன் வருவதற்கு முன்பாக உள்ள கடைசி சிக்னல் விளக்கில் நின்றோம். இது கனால் தெருவையும், பொவெரி தெருவையும் குறுக்கறுக்கும் சந்தி. என்னுடைய மறுப்பில் சாரதியின் உற்சாகம் வற்றிவிட்டது. விழுந்துபோன முகத்துடன், சிகரெட்டை மௌனமாக இழுத்து, அடுத்து என்ன பேசுவது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான். விளக்கு பச்சைக்கு மாறியது. அவன் காரை எடுத்ததும் அது துள்ளிப் பாய்ந்து பக்கத்து வீதியில் ஓடிய இரண்டு குப்பை வண்டிகளை ஏறக்குறைய இடித்துவிட்டது. ‘நாசமாய்ப் போ’ என்று அவர்களைப் பார்த்து இரைந்தபடியே ஓட்டினான். அவன் கொஞ்சநேரம் தாறுமாறாக வண்டியை செலுத்தியதில் இன்னொரு வேகமான காருடன் மோதுவது நூலிழையில் தவிர்க்கப்பட்டது. இவ்வளவுக்கும் அவன் என்னுடன் ஒரு வார்த்தையும் பரிமாறவில்லை. அதை நான் வரவேற்றேன். எங்கள் கருத்து வேற்றுமை கடைசியில் வேலை செய்துவிட்டது. எனக்கு கரைச்சல் கொடுக்காமல் என்னை தனியாக விட்டான். நான் முகத்தை திருப்பி யன்னல் வழியாகத் தெரிந்த மான்ஹட்டன் வான விளிம்பின் அழகை பருகினேன். அது ஒரு ஈரப்பிடிப்பான இருள் படிந்த இரவு. உலக வர்த்தக மைய கட்டிடங்கள் இரண்டு எரியும் வெள்ளிகள் போல தெரிந்தன. நகரத்தின் விளிம்பை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என்னவோ எனக்கு வெற்றியும், உற்சாகமும் ஏற்பட்டு, என்னுடைய அமெரிக்க இசைக் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

பாலத்தின் நடுவில் வண்டி போகும்போது சாரதி உளறினான், ‘உமக்கு ஆர்மினியா தெரியுமா?’ மறுபடியும் தொடங்கிவிட்டான் என்று நான் நினைத்தேன். சிறிது தாமதித்து ‘என்ன கேட்கிறீர்?’ என்றேன்.

‘ஆர்மினியாவைப் பற்றி உமக்கு ஏதாவது தெரியுமா?’

‘நிச்சயமாக. முந்திய சோவியத் யூனியனில் ஒரு பகுதி, ஜோர்ஜியாவுக்கு அருகில்.’

‘உமக்கு உலக வரைபடம் நல்லாக, நல்லாக தெரியும்’ என்றான். நான் ஒரு பொய்ப் புன்னகையை உதிர்த்தபடி இவன் இன்னும் என்ன செய்யப்போகிறான் என்று யோசித்தேன்.

எனக்கு தலை இடித்தது. என் கண்கள் சிகரெட் சாம்பலிலும், அவன் கைகளை அசைக்கும்போதும், ஊதும்போதும் எழும் புகையிலும் எரிந்தன.

‘ஆனால் – ஆம், ஆம் – முந்திய சோவியத் யூனியன் என்று சொன்னது சந்தோசம். இனி ஒரு போதும் இல்லவே இல்லை.’ சற்று நிறுத்தி சிகரெட் துண்டை யன்னலுக்கு வெளியே வீசினான். ‘நூற்றாண்டுக் காலங்களாக பல இன மக்கள் எங்களை ஆளப்பார்த்தார்கள். ஆனால் நாங்கள் பலமான சனங்கள். நாங்களே முழு ஆசியாவின், மத்திய கிழக்கின் பூர்வ இனம்.’ அவன் குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது.

‘இங்கே பாருங்கள், துருக்கியை ஸ்தாபித்தவர்..’

‘அட்டர்ருக்’ நான் கூறினேன். தற்செயலாக Orhan Pamuk எழுதிய The Black Book என்ற புத்தகத்தை சில நாட்கள் முன்புதான் நான் படித்து முடித்திருந்தேன்.
‘நண்பரே, உமக்கு அதிக விசயம் தெரிந்திருக்கிறது. நீர் ஒரு மிக மிக கெட்டிக்காரரான கறுப்பு அ…அ..’ அப்படியே பாதி வசனத்தில் நின்றுவிட்டான். பிறகு ‘இசைக்கலைஞன்’ என்றான். இந்த ஆர்மினியன் என்னை கெட்டிக்காரக் கறுப்பன் என்று அழைத்த தன் மூடத்தனத்தை நினைத்துப் பார்த்திருப்பான் போல. எப்படி தொடருவது என்று தெரியாமல் சிறிது நேரம் அசௌகரியமான சிரிப்பில் கழிந்தது. சில மௌனமான தருணங்கள்.

‘நீர் சொன்னது சரி. ஆனால் ஒரு திருத்தம் உண்டு. அட்டர்ருக்தான் நவீன துருக்கியின் பிதா. அட்டர்ருக்குக்கு முன்பு, ஏன் துருக்கிக்கு முன்பாகக்கூட நாங்கள்தான் இருந்தோம், ஆர்மினியர்கள். ஹாமிட்தான் உண்மையான ஆதி சுல்தான்.’ அவன் குழறியபடி கூறினான்.

நான் எவ்வளவு அசுவாரஸ்யம் காட்டினாலும் சாரதி விரிந்து கொண்டே போகும் தன் கதைகளை என்னிடம் கூறுவதை நிறுத்துவதாகத் தெரியவில்லை. பல நூற்றாண்டுகளாக அசேரியர்களும், சியா துருக்கியர்களும், ரஸ்யர்களும் ஆர்மினியர்களை பூமியில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிக்க முயன்றிருக்கிறார்கள். ஆர்மினியர்களை இந்த ஆக்கிரமிப்புகளால் அடிபணிய வைக்க முடியவில்லை. வெல்லமுடியாத ஆத்மாக்கள் அவர்கள். சரித்திரம் ஒரு நாள் மறுபடியும் அவனுடைய சனங்களை வெற்றி பெறச் செய்யும். அவர்களை மறுபடியும் அரியணை ஏற்றும் – பிரபஞ்சத்தின் அரியணை.

இது எல்லாம் நடக்கும்போது •பிரான்சிஸ் பற்றி என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவளுடைய ஒரே விருப்பம் சரித்திரம் செக் மக்களை மறுபடியும் பலமுள்ளவர்களாக ஆக்கவேண்டும் என்பது. அப்படி என்றால்தான் அயலில் உள்ள போராசை பிடித்த நாடுகள் தங்கள் நாட்டுடன், முந்திய ஐரோப்பிய பிணக்குகளின் போது நடந்ததுபோல, செக் நாட்டை இணைக்க மாட்டார்கள்.

பாலத்தை கடந்து பிளாட்புஷ் தெரு வரும்போது சாரதி ஆர்மினியர்களைப் பற்றிய புகழ்ப் பிரசங்கத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தான். நான் அவன் பேசிய எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தேன் என்ற பாவனையில் தலையை அசைத்தேன்.

‘நான் சொல்கிறேன், நண்பரே, துருக்கியில் இன்று ஒரு கலாச்சாரம் இருக்குமானால் அதற்கு காரணம் ஆர்மினியர்கள்தான். நாங்கள் உண்ணும் உணவை அவர்கள் உண்கிறார்கள். நாங்கள் சமைப்பது போலவே அவர்களும் சமைக்கிறார்கள். எங்களைப்போலவே அவர்கள் தோற்றத்திலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தாங்கள் ஆர்மினியர்கள்தான் என்பதை கேட்பதற்கு அடி ஆழத்தில் விருப்பமில்லை. அந்த ஆத்மாவைக் கொன்று உடம்பில் இருந்து வெளியே வீசவே பிரியப்படுகிறார்கள். ஆனால் அதை எப்படிச் செய்யமுடியும், நண்பரே.’ பெரும் சிரிப்பு ஒன்றை ஆடம்பரமாகச் சிரித்தான்.

நான் தலையை ஆட்டியபடியே சொன்னேன், ‘ஒருக்காலும் முடியாது.’
‘நண்பரே, மிகச் சரி. ஒருக்காலும் முடியாது.’ உரத்துச் சத்தமிட்டபடியே ஞாபகமறதியாக அடுத்த வரிசைக்குள் நுழைந்துவிட்டான். அந்த வரிசை சாரதிகள் உருது, கிரியோல், ஜமாய்க்கன், அரபு, ஆப்பிரிக்கன் என்று வசை மொழிகளை பிரவாகமாக எடுத்துவிட்டனர். ஆர்மினியன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு மேலும் தொடர்ந்தான். ‘கிரேக்கம் ஒரு காலத்தில் ஆர்மினியாவாக இருந்தது. ஆதிகாலத்து கிரேக்கமும் அதைச் சுற்றியிருந்த பிரதேசங்களும் ஆர்மினியாதான்.’

‘ம்’

‘நம்பமுடியாது, அல்லவா.’

நான் தலையசைத்தேன். கார் ஓட்டுவதில் ஆர்மினியனின் கவனம் குறையக் குறைய, எனக்கு வரலாறு பாடம் புகட்டுவதில் அவன் காட்டிய ஆர்வம் கூடிக்கொண்டே வந்தது. அடிக்கடி என்னை திரும்பிப் பார்த்து நான் செவி மடுக்கிறேனா என்பதை உறுதி செய்தான்.

‘இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் சூடானிலும், எத்தியோப்பியாவிலும் இருந்தது ஆர்மினியர்கள்தான்.’

ஏன் உலகம் முழுக்க ஆர்மினியர்களால் நிரம்பி வழிந்தது என்று சொல்வதற்கென்ன? நான் நினைத்தேன். சாரதியின்மேலும், அவன் சனங்களின் மேலும் எனக்கு ஒருவித அக்கறையும் கிடையாது. கறுப்பின மக்கள் பிரச்சினையில் அவன் ஏதாவது அக்கறை காட்டுகிறானா? அதுபோலத்தான் இதுவும். துருக்கியர்கள் ஆர்மினியர்களை அடக்கியாண்டு துன்பப்படுத்தியதற்கும், வெள்ளைக்காரர்கள் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தியதற்கும் இப்படியான மூட எண்ணமே காரணம் என்று நான் சொல்ல விரும்பினேன்.

ஆனால் என்னால் சொல்ல முடிந்ததெல்லாம், ‘நீர் சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால் இப்படியான மனித கொடுமைகளுக்கு ஒருத்தர் என்ன செய்வது.’ அவன் பதில் சொல்லவில்லை. இந்த பயம் தரும் மௌனத்தை குலைக்க நான் தொடர்ந்தேன். ‘நான் என்ன சொல்கிறேன் என்றால், பாரும் அமெரிக்கா என்ன செய்தது? அமெரிக்க யப்பானியர்களைக் கொடுமைப் படுத்தியது. அதையே யப்பானியர்களும் இரண்டாம் உலக யுத்தத்தில் கொரியர்களுக்கு செய்தார்கள். வெள்ளைக்காரர்கள் எங்களை அடிமைகளாக ஆண்ட காலத்தில் செய்ததை பாருங்கள். இப்பொழுது நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் ஒருத்தரை ஒருத்தர் கொல்கிறார்கள். சேர்பியர்கள் பொஸ்னியர்களைக் கொல்கிறார்கள். ஹ்ட்டுக்கள் துட்ஸியரை ஒழிக்கிறார்கள். இதுதான் உலக நடப்பு, இதுதான் வாழ்க்கை.’ சாரதி திடீரென்று ஒரு வார்த்தையும் உதிர்க்காமல் மௌனமாகியதில் கிடைத்த அசௌகரியமும், நான் வேறொரு போக்கில் போகிறேன் என்ற உணர்வும் என்னை மேலே பேசவிடாமல் நிறுத்தியது. அவனைப் பார்த்தபோது அவன் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் ஆழமாக யோசிப்பவன்போல காணப்பட்டான். கடைக்கண்ணால் என்னைப் பார்த்துவிட்டு ஆர்மினியன் மறுபடியும் தொடங்கினான். ‘நண்பரே, நீர் முக்கியமான பல விடயங்களை சொன்னீர். ஆனால் அதில் அதிமுக்கியம் வாய்ந்த வாக்கியம் ‘ஒருத்தர் என்ன செய்யமுடியும்?’ என்பது.’

‘உண்மைதான். இந்த நாட்டைப் பாருங்கள். கறுப்பின மக்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு இழப்பீடு கேட்கும்போது வெள்ளையாட்கள் ‘மறந்துவிடு’ என்கிறார்கள். உண்மை சிலவேளைகளில் கொடூரமானது. கடினமான வாழ்க்கையை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்,’ நான் சொன்னேன்.

நான் இப்படி உணர்ச்சி வசப்பட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ‘நண்பரே நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது,’ சாரதி மறுபடியும் தொடங்கினான். காரை வேகம் குறைத்து என்னுடைய தெருவுக்குள் இடப்பக்கமாகத் திருப்ப ஆயத்தப் படுத்தினான். ‘நீங்கள் சொல்கிறீர்கள் மனிதர்கள் எப்பொழுதும் இன்னொரு மனிதரை வதைப்பார்கள்; சில சமயம் கொல்லக்கூடச் செய்வார்கள் என்று. நான் ஓர் உதாரணம் சொல்வேன். காடுகளில் புலியானது சிங்கத்தையோ, சிறுத்தையையோ உணவுக்காக தாக்காது. அது எப்பவும் வலிமையில்லாத, தன்னை பாதுகாக்க தெரியாத இன்னொரு மிருகத்தைத்தான் தாக்கும். வலிமை குறைந்த மிருகம் பலமுள்ளதாக மாறினால் அல்லது சண்டைபோட்டால் ஒழிய புலி எப்பொழுதும் அதையே சாப்பிடும். வாழ்க்கையிலும் அப்படியே. சில மனிதர் எப்பொழுதும் இன்னொருத்தரை விழுங்கியபடியே இருப்பார்கள். நீங்கள் செய்யவேண்டியது, மற்றவர்கள் சாப்பிடுவது நீங்களாக இல்லாமல் பார்த்துக்கொள்வது.’ சாரதி சொன்னதை நான் அசை போட்டுக்கொண்டு இருக்கும்போது அவன் மறுபடியும் தொடங்கினான்.

‘ஆர்மினியன் சனங்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் போன்று இனிமேல் ஒன்று நடக்க நாங்கள் விடமாட்டோம். எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்பதற்கு குரல் எழுப்புவோம். ஆனால் நண்பரே, கறுப்பர்களான உங்கள் பிரச்சினை அதுதான்.’

‘எப்படி?’ நான் கேட்டேன்.

‘ஏனென்றால் நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள்; ஏனென்றால் போராடுவதை நிறுத்திவிட்டீர்கள். ஏனென்றால் உங்களுக்கு பசியில்லை. ஏனென்றால் நீங்கள் மன்னிக்கிறீர்கள். ஆனால் அது பெரிய பிழை. நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் மறுபடியும் அவர்கள் உங்களை சாப்பிட்டு விடுவார்கள்.’ சாரதி கட்டியெழுப்பிய வாதத்தை தகர்க்க திட்டமிட்டு நான் இப்படி கூற நினைத்தேன். ‘யார் யாரை ஆண்டாலும் இறுதியில் மனிதர்கள் வரலாற்றின் கைப்பொம்மைகளே. ஒரு கழுதையில் தங்க நாணயங்களை ஏற்றி வந்து பொதியை இறக்கிவைத்துவிட்டு கழுதையை விரட்டுவதுபோலத்தான் வரலாறும் எங்களை நடத்தும்.’ ஆனால் அதை நான் கூறவில்லை. சாரதி கடைசியாக சொன்ன வார்த்தையில் சிறிது என்னுடைய இன மக்கள் பற்றிய உண்மையும் இருந்ததால் மௌனம் சாதித்தேன்.

நான் யன்னல் வழியாகப் பார்த்தபோது எங்கள் கட்டிடத்துக்கு வந்துவிட்டிருந்தோம்.

‘கட்டிட நம்பர் 823’ என்றேன்.

‘இடமோ, வலமோ?’

‘வலது பக்கம், கடைசி.’

‘பிரச்சினை இல்லை, நண்பரே. ஆனால் நான் ஒன்று கேட்கவேண்டும்.’

‘ஓகே.’

காரை வாசலில் நிற்பாட்டும்போது அவன் கேட்டான், ‘சரத்துஸ்ற்றா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ அப்படியே திரும்பி என்னைப் பார்த்தான். மிக சமீபமாக இருந்தபடியால் அவன் மூக்கில் இருந்து வெளிப்பட்ட காற்று என் நெற்றியில் அடித்தது.

நாசமாய்ப் போச்சு.

நான் நீட்சேயின் Thus Spake Zarathustra வையும், இன்னும் ஆதி புராண இறைதூதர் பற்றிய இலக்கியத்தையும் என்னுடைய பல்கலைக் கழக பழைய கிரேக்க தத்துவ பாட வகுப்பில் கற்றிருந்தேன். ஆனால் அவரிடம் ‘இல்லை’ என்றேன். ‘கடவுள் என்பவருக்கு முன்பு வந்த அஹ்ரா மஸ்டா தான் முதற் கடவுள். அவருடைய தூதர்தான் ‘சரத்துஸ்ற்றா,’ என்றான்.

நான் தலையை அசைத்தேன். ‘ஆர்மினியர்களாகிய நாங்கள் இன்றும் அஹ்ரா மஸ்டாவையும், அவருடைய தூதரான சரத்துஸ்ற்றாவையும் வணங்குகிறோம். அவர் காக்கசஸ் மலைப்பகுதியை சேர்ந்தவர், ஆகவே நாங்கள்….’ என் எதிர்பார்ப்பைக் கூட்டுவதற்காக நிறுத்தி என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான். ‘ஆர்மினியர்கள்தான் உண்மையான காக்கசஸ்காரர்கள், ஆகவே நாங்களே உண்மையான ஆரியர்.’ அவனுடைய தொனியில் வெற்றி ஒலித்தது.

சாரதி எப்படி சரத்துஸ்ற்றாவில் ஆரம்பித்து, அவர்கள் கடவுளான அஹ்ரா மஸ்டாவிடம் சென்று அதிலிருந்து தொன்மையான காக்கசஸ் ஆர்மினியர்கள்தான் ஆரியர்கள் என்ற விடயத்தை கண்டுபிடித்தான் என்பது எனக்கு புரியவே இல்லை. ஆனாலும் நான் ஏதாவது சொல்லப்போய் அது மீண்டும் அவனை தூண்டிவிடும் என்ற பயத்தில் வாய் பொத்தியிருந்தேன். திடீரென்று அவன் சிந்தனையிலும், மௌனத்திலும் ஆழ்ந்துவிட்டான்; அவனுடைய ஒலிவ் நிற நெற்றித் தோல் வாய்க்கால்போல சுருங்கியிருந்தது. ஒரு சில செக்கண்டுகள் அவனிடம் இருந்து ஒரு வார்த்தையும் பெயரவில்லை. நான் இருக்கையில் அடித்து வைத்ததுபோல அமர்ந்திருந்தேன். ஒரு சிரிப்புடன் இருக்கைக்கு கீழே குனிந்து மெதுவாக திறப்பானை இழுத்தான்; ட்ரங் கதவு பட்டென்று திறந்தது. நான் சவாரிக் கணக்கை தீர்ப்பதற்கு பணப்பையை எடுத்தேன். ஆனால் அந்த ஆர்மினியன் என்னுடைய மணிக்கட்டைப் பிடித்து, கண்களை நேராக நோக்கியபடி ‘கவலையை விடுங்கள், நண்பரே, பணம் வேண்டாம்’ என்றான். அவனுடைய சிரிப்பு பிரகாசித்து வரிசையான பற்களை – சிகரெட் கறை ஒன்றே குறை – காட்டியது.

‘நிசமாகவா.’

‘நிசமாக,’ அவன் தொடர்ந்து சிரித்தான்.

அந்த செய்கையில் நான் அசௌகரியமாக உணர்ந்தேன். எனக்கு காரைவிட்டு வெளியேறுவது அவசரம். நான் தலையைக் குனிந்து ‘நன்றி’ என்றேன். அவன் ஒரு ரசீது அச்சடித்து கொடுத்தான். ‘உங்கள் வருமானவரிக்கு உதவும்.’
‘இதை செய்திருக்கவேண்டிய தேவை இல்லை,’ என்றேன்.

‘ஒரு கலைஞருக்கு என்னாலான சிறு உதவி.’

என்னவாயினும்.ஓட்டு வளையத்தில் நெஞ்சு படுத்திருக்க, அந்த ஆர்மினியன் காரின் உள் அறையில் எதையோ தேடினான். சிறிது நேரத்தில் அவன் தன் முகவரி அட்டையை கண்டுபிடித்து எடுத்து என்னிடம் கொடுத்து ‘எப்பொழுது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள்’ என்றான். அவன் கண்கள் மிருதுவாகி கலங்கியிருந்தன.

‘நன்றி’ என்று சொல்லி அட்டையைப் பெற்றுக்கொண்டேன். அதில் ‘சார்கிஸ்’ என்று பேர் மட்டுமே எழுதியிருந்தது.

‘நண்பரே, பிரச்சினையில்லை.’ ஆர்மினியாவில் வணக்கம் கூறும்போது நாங்கள் ‘சானெட் ரானெம்’ என்று சொல்வோம். ஆகவே நான் உங்களுக்கு கூறுகிறேன் ‘சானெட் ரானெம்’.

எனக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் என் உள்ளுணர்வு காரைவிட்டு சீக்கிரம் இறங்கச் சொன்னது. நான் இடம் பெயர முன்னர் சார்கிஸ் கேட்டான், ‘சானெட் ரானெம்’ என்றால் என்ன பொருள் என்று தெரியுமா?’

‘இல்லை’ நான் வியப்படைந்திருந்தேன். ‘சானெட் ரானெம்’ என்றால் என்னவென்று எனக்கு எப்படித் தெரியக்கூடும்.

அவன் சொன்னான், ‘சானெட் ரானெம்’ என்றால் ‘உன் வேதனைகளை நான் எடுத்துக் கொள்கிறேன்.’

அந்த மனிதன் சொன்ன வார்த்தைகளின் ஆழத்தை உணருவதற்கு எனக்கு சில விநாடிகள் பிடித்தன. நான் கையை நீட்டினேன். அவன் அதை ஒரு ஐந்து செக்கண்டுகள் விடாமல் பிடித்தபடி என் கண்களை உற்று நோக்கினான். எனக்கு அவனின்மேல் பரிவு உண்டாகியது. தன் சனங்களின் கனத்த வரலாற்றை தன் இருதயத்திலும், ஆத்மாவிலும் காவித் திரியும் ஒருவனின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.

ஒரு நோய்ப் பறவையை போசித்து, இறகுகளை மீண்டும் வலியதாக முளைக்க வைத்து, ஆகாயத்தை இன்னொரு முறை துளாவிப் பறக்கச் செய்வதற்கு அவன் முயல்வதுபோல அந்த செய்கை இருந்தது. சாரதி என் கையை விட்டான். அவன் தன் பேரைச் சொன்னதுபோல நான் என் பேரைச் சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் ஒரு காலை தரையிலே ஊன்றியபடி அந்தச் சமயம் சார்க்கிசுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்றுதான் இருந்தது. நான் அவருடைய கண்களைப் பார்த்தேன். திடீரென்று ஏற்பட்ட மரியாதையுடன் சொன்னேன், ‘உம்முடைய வேதனையை நானும் எடுத்துக்கொள்கிறேன்.’

– ஏப்ரில் 2005

மொஹமட் நாஸிகு அலி (Mohammed Naseehu Ali)
தமிழில்: அ.முத்துலிங்கம்

மொஹமட் நாஸிகு அலி (Mohammed Naseehu Ali) ஆப்பிரிக்காவின், கானாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது அவர் வசிப்பது நியூ யோர்க்கில். இளம் வயதில் எழுதத்தொடங்கி திடீரென்று புகழ் பெற்றவர். இவருடைய கதைகளும், கட்டுரைகளும் நியூயோர்க் டைம்ஸ், நியூ யோர்க்கர் போன்ற பிரபலமான பத்திரிகைகளில் பிரசுரமாயிருக்கின்றன. இவர் ஓர் இசைக்கலைஞரும்கூட. சமீபத்தில் இவர் எழுதிய ‘மல்லம் சிலே’ என்ற சிறுகதையை நியூ யோர்க்கரில் படித்துவிட்டு, ஆப்பிரிக்காவின் சினுவா ஆச்சிபி, பென் ஒக்ரி போல இன்னொருவர் தோன்றிவிட்டார் என்று நினைத்தேன். கடந்தமாதம் அவருடைய சிறுகதைத் தொகுதி The Prophet of Zongo Street வெளியானபோது அதை முதலாளாக நின்று வாங்கினேன். அதிலே வெளியான ‘உண்மையான ஆரியன்’ என்ற இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. உலகத்தின் இரு பாகங்களில் இருந்து புலம்பெயர்ந்து நியூ யோர்க்கில் வாழும் இருவருடைய கதை. இது இன்னும் மற்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

Print Friendly, PDF & Email

1 thought on “உண்மையான ஆரியன்!

  1. மிகசிறந்த கதை மிகசிறந்த மொழியாக்கம் . மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *