உடைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 10,698 
 

கதவைத் திறந்தாள் தவமணி. யாரோ ஒரு வெள்ளைக்காரர் எதிரில் நிற்கிறார். கூடவே, இன்னும் சிலர்.

‘‘நான்தான் டேவிட்சன். உலக மனித உரிமைக் குழு தலைமை நிலையத்திலிருந்து வருகிறேன். உங்கள் கடிதம் கிடைத்தது.’’

அவர் பேசிய ஆங்கிலம் அவளுக்குப் புரியவில்லை. மட்டக்களப்பில் பணியாற்றும் மனித உரிமையாளர் பெரியதம்பி ஆசிரியர் மொழிபெயர்த்தார். விழிகளில் நீர் பொங்க பெருமூச்சின் வெடிப்போடு குலுங்கி விம்முகிறாள் தவமணி.

‘‘கவலைப்படாதீங்க. டேவிட்சன் ஐயா மூணு மாசம் மட்டக்களப்புலதான் நிற்பார். உங்கட மகளை எப்படியும் உங்களிட்டச் சேர்த்திடுவம்!’’ & பெரிய தம்பி ஆசிரியரின் ஆறுதல்.

‘‘நாங்க இருக்கிறம். சின்னப் புள்ளைகளை எந்தப் படையிலையும் சேர்க்கக் கூடாது என்பது உலகச் சட்டம். உங்கட மகள் கட்டாயம் வீடு திரும்புவாள். கவலையை விடுங்க!’’ & இது டேவிட்சன்.

அவர் மொழி புரியாவிட்டாலும் மனிதநேயம் தேடி அலையும் அவர் கனிந்த குரல் அவளை அசைக்கிறது. மீண்டும் அழுகிறாள்.

மணமாகி ஓர் ஆண்டுகூட நிரம்பாத மிகக் குறுகிய கால இல்லறத்தில் பிள்ளையும் வயிறுமாக, கணவனைப் பறிகொடுத்து இன்று வரை மறுமணமே வேண்டாம் என்று கல்லாகிப்போனவள் தவமணி. அப்பாவின் சாவோடு பிறந்த செவ்வந்திக்கும் அகவை 13 ஆகிறது. தவமணியின் உயிராய் அவள் இருந்தாள். செத்துப்போன கணவனின் இடத்தை நிரப்பி, ஆறுதல் சேர்த்தவள் செவ்வந்தி. படுக்கையிலும் அம்மாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டே உறங்கும் தவமணியின் தொப்புள்கொடித் தொடர். 7&ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த அவள் திடீரென்று புலிகள் பாசறையில் தன்னை இணைத்துக்கொண்டதும் தவமணி ஏங்கிப்போனாள்.

அடர்ந்த காட்டின் நடுவில் புலிகள் பாசறையில், அவர்களின் பொறுப்பாளரை அவள் சந்தித்தாள். பாசறைப் பொறுப்பாளனாக இருந்த இளைஞனின் பார்வையில் கனிவு இருந்தது. தவமணியைப் பார்த்து அவன் சொன்னான்… ‘‘உங்கட மகள் எங்களோடதான் இருக்கிறாள். ‘சிங்களப் படைதான் என்ட அப்பாவைக் கொன்டதெண்டு அம்மா சொல்லுறா. எங்கட பள்ளியில படிச்ச மூணு புள்ளையளைப் போன கிழமை சுட்டுப்போட்டானுகள். நான் போராட வேணும் எண்டு சொல்லுறாள். எங்களுக்குத் தெரியும், அவள் சின்னப் புள்ள. அவளுக்குப் பயிற்சி கொடுப்பம். ஆனா, இப்ப அவளைப் போரில ஈடுபடுத்த மாட்டம். உங்கட மகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுவம். ஏனோ உங்களைப் பார்க்க அவள் விரும்புறாளில்ல. போராட்ட உணர்வோட எங்களிட்ட வந்து சேர்ந்த ஒரு புள்ளைய வீட்டுக்குப் போ எண்டு துரத்துறதும் எங்களுக்குச் சரியாப் படல்ல. நீங்க போகலாம். பின்னால் உங்களை அவள் சந்திக்கிறதுக்கு ஏற்பாடு செய்வம். அப்ப வாங்க.’’

இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் தவமணி, பெரியதம்பி ஆசிரியரின் உதவியை நாடினாள். மனித உரிமைக் குழு மூலமாவது செவ்வந்தியை மீட்டெடுக்க வேண்டும். பெரிய தம்பி ஆசிரியரும் டேவிட்சனும் வீட்டுக்கு வந்து நம்பிக்கையூட்டி விடைபெற்று இரண்டு மூன்று நாட்களாயிற்று.

அப்பாவின் சாவைச் சொல்லி டேவிட்சனிடமும் செவ்வந்தி அடம்பிடிப்பாளோ என்று தவமணி கலங்கினாள். செவ்வந்தி பிறக்கும்போது அப்பா உயிரோடில்லை. வெறிபிடித்த சிங்களப் படையின் அந்தக் கொடிய செந்நீர் வேட்டையை நினைவுக்குக் கொண்டு வந்தாள் தவமணி.

எழுவான் கரை & படுவான் கரை என்று மட்டக்களப்பை இரண்டாகப் பிரிக்கும் உப்பேரி. நாவற்குடா & எழுவான் கரையில் உப்பேரியை ஒட்டினாற் போல் கிடக்கும் சிற்றூர். அதுதான் தவமணியின் முந்திய பல தலைமுறைகளைச் சுமந்த கருப்பை. செவ்வந்தியின் அப்பா தேநீர்க் கடை வைத்திருந்தார். கடை எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். வெறும் தேத்தண்ணி குடித்துப் பழகிப்போன மண் & மக்கள். ஆனால், இனக் கலவரம் வெடித்து, சிங்களப் படைகள் தெருவில் இறங்கிய பின் எல்லாமே மந்தம்தான். சோர்வோடு கடையில் உட்கார்ந்திருப்பார் அப்பா. நல்லவராம். அவர் பேசினால்கூட அடுத்தவர்களுக்குக் கேட்காதாம்.

ஒரு மாலைப் பொழுதில்தான் வெறிபிடித்த சிங்களப் படை ஓநாய்களின் அந்தக் கொலைக் கூத்து அரங்கேறிற்று. திடீரென்று சிங்களப் படை வெறியரின் வண்டி உறுமலோடு தேநீர்க் கடை முன்னால் வந்து நின்றபோது, அப்பா திணறிப்போனார். கடையில் இருந்த வடை, வாழைப்பழம், பிட்டு, பருப்புக்களி அனைத்தையுமே தின்று தீர்த்தார்களாம். கடையை முற்றாகக் காலி செய்துவிட்டு வண்டியில் ஏறப் போனவர்களிடம் ‘காசைக் குடுத்திட்டுப் போங்க’ என்று கேட்டிருக்கிறார் அப்பா. அடுத்த நொடியே அடித்து வீழ்த்தப்பட்டார். இரும்புச் செருப்புகள் அப்பாவை மிதித்துத் துவைத்தன. நெஞ்சு வெடித்துக் குருதி பாய அப்பா சுருண்டார். இறுதியாக ஊரையே அசைத்த துப்பாக்கி வேட்டின் நெருப்புக் குரல். அப்பா போய்விட்டார்.

பள்ளிக்கூடம் விட்டு வரும்போதெல்லாம் செவ்வந்தி கதை கதையாகச் சொல்லுவாள். அனைத்துமே சிங்கள இனவெறி பற்றியவை. உயிர்களின் துடிப்பு பற்றியவை. சாவு பற்றியவை. கண்ணீர் பற்றியவை.

தழலில் சருகாய்ச் செவ்வந்தியின் நினைவில் எரிந்தாள் தவமணி.

அவள் எதிர்பார்க்கவே இல்லை… கதவு திறந்து, செவ்வந்தியின் கைவிரல் பற்றியவராக டேவிட்சன் கன்னம் குழியச் சிரிக்கிறார்.

‘‘எண்ட புள்ள என்னட்ட வந்திட்டாள்’’ என்று குழந்தை போல் எகிறிக் குதித்தாள் தவமணி. ‘‘உங்கட மகளை உங்களிட்ட ஒப்படைச்சிட்டோம். எங்கட வேலை முடிஞ்சுது’’ என்று கூறிக் கொண்டே நாற்காலியில் சாய்ந்தார் பெரியதம்பி ஆசிரியர்.

இரண்டு வாரங்கள் ஆகவில்லை, தவமணி வீட்டில் இன்னொரு மகிழ்ச்சி காத்திருந்தது. செவ்வந்தி சமைந்துவிட்டாள்.

மஞ்சள் நீராட்டைச் சிறப்பாக நடத்தியே தீருவதென்று விடாப்பிடியாக நின்றார் மாணிக்கம் சித்தப்பா. செல்லையா அப்பாச்சிக்கு வாசலில் குலைவாழை கட்டும் பொறுப்பு. மின்விளக்குச் சோடிப்புக்குச் சின்னவனிடம் சொல்லியாயிற்று. இரண்டு கூட்டம் தவில். தவமணியின் கால்கள் நிலத்தில் படுவதாக இல்லை.

ஊரே கூடி இருந்தது. காதில் தேன்பொழியும் நாகசுர இசை. மின்விளக்குப் பூக்களின் பளபளப்பு. வண்ணச் சேலைகளின் உலா. பன்னீர் வாடை. வெற்றிலைத் தட்டோடு முத்தம்மாக் கிழவி. உள்வீட்டில் செவ்வந்தி நீராட்டில் உட்கார்ந்திருந்தாள்.

சில பொழுதுகள் மட்டுமே நிலைத்த மகிழ்ச்சியின் சிலிர்ப்பு. எங்கோ ஊரில் எழுந்த வெடிகுண்டின் அதிர்வொலியில், ஒரு நொடியில் எல்லாமே தலைகீழாயிற்று.

விழாவை முற்றாக மறந்து & ஒருவர் ஒருவராக வெளியேறி & அவரவர் வீடு நோக்கி விரைவதை தவமணி கவனித்தாள். ஊரை நோக்கிய படைவெறியர் வண்டி களின் தூரத்து உறுமலோசை கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக்கொண்டே வருவதை உணர முடிந்தது. தவமணி ஒடுங்கிப்போனாள். இதே வீட்டுக்கு முன்னால் தெருவை ஒட்டியிருந்த ஒற்றை அறைக் கடையில்தான் செவ்வந்தியின் அப்பா 13 ஆண்டுகளுக்கு முன்பு இனவெறிய ரால் சாகடிக்கப்பட்டார்.

வீதி முன்வாசல் கம்பிக் கதவைப் பூட்டிவிட்டு, உள்ளே வந்து வீட்டுக் கதவையும் தாளிட்டாள் தவமணி. முத்தம்மாக் கிழவி இருந்தாள். செல்லையா அப்பாச்சி, கொஞ்சம் துணிச்சலான கண்ணமுத்து மாமா, மாணிக்கம் சித்தப்பா, உறவுப் பையன்கள் நாலைந்து பேர் & விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே முன் மண்டபத்தில் இருந்தார்கள்.

கண்காணியார் கோயில் வாசலில் படைவெறியரின் வண்டி ஒன்று எரிந்துகொண்டு இருப்பதாக, ஒரு சிறுவன் தெருவில் கத்திக்கொண்டு போனான். சில மணித்துளிகள் ஆயிற்று. வரிசை கட்டிய படை வண்டிகள் முன்வாசலில் சீறிச் சிலிர்த்து நின்றபோது தவமணி கல்லாய்ப்போனாள்.

வீதி வாசல் கதவை இரும்புச் செருப்பால் உதைத்து நொறுக்கியவர்கள் வீட்டை நோக்கிப் பாய்ந்தார்கள். ‘‘லைட் எல்லாம் வச்சு சோடிச்சு இருக்கிறது… என்ன செலிபிறேசன்?’’ & அவர்களின் ‘பெரியவன்’ முரட்டுக் குரலில் அதட்டினான். கோயிலில் மரத்தில் செய்துவைத்த பூதத்தின் சிலைபோல் கோரமாக இருந்தான். கண்ணமுத்து மாமாதான் வாயைத் திறந்தார். தவமணியின் மகள் பூப்பெய்திய செய்தியையும் விழாவையும் பற்றி கொச்சை ஆங்கிலத்தில் அவர் விளக்கினார்.

‘‘நல்லது. ஹொந்தாய். நல்லது!’’ & அவன் சொற்களில் நஞ்சு கலந்தி ருந்தது. திடீரென்று உரத்த குரலில் அவன் கத்தினான்… ‘‘அது சரி. குண்டு வெடிச்சது யாரு?’’

எவரும் பேசவில்லை. உள்ளே இருந்த செவ்வந்தியையும், பையன் களையும் கையைக் காட்டி அழைத் தவன் அவர்களை வண்டியில் ஏற்றுமாறு உறுமினான். ‘‘செவ்வந்தி! செவ்வந்தி! ’’ என்று கத்தினாள் தவமணி. துப்பாக்கியின் பின்புறத்தால் இடித்தும், உதைத்தும் அந்த இளசுகளைப் படைவெறியர்கள் வண்டியில் தூக்கிப் போட்டார்கள். வண்டிகள் உறுமிப் பறந்தன. முத்தம்மாக் கிழவியின் மார்பில் முகத்தைப் புதைத்து விம்மி விம்மி அழுதாள் தவமணி.

எல்லாமே முடிந்துவிட்டது. கல்லடியில் இருந்த சிங்களப் படைத் தலைமையகத்துக்கு விடிகாலைப் பொழுதிலேயே போய் வந்த கண்ணமுத்து மாமா, செவ்வந்தி அங்கே இல்லை என்று அவர்கள் சொன்னதாகக் கூறியபோதே கவலையும் ஐயமும் பரவிற்று. இங்கும் அங்குமிருந்து செய்திகள் வந்துகொண்டே இருந்தன. பகல் பன்னிரண்டு மணிக்கு வந்த செய்தி செவ்வந்தியின் முடிவை உறுதிசெய்து பறைசாற்றிற்று.

கல்லடிச் சுடுகாட்டில் அவள் உடல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடிய காயங்களோடு கிழிந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம்.

பிற்பகல் 3 மணி இருக்கும். டேவிட்சனும் பெரியதம்பி ஆசிரியரும் செவ்வந்தியின் உடலைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக மட்டக் களப்பிலிருந்து மருத்துவர் பிறைசூடன் தொலைபேசியில் தெரிவித்தார்.

இரவு 8 மணி. நேற்று நீராட்டு வந்த அதே நேரம். முன்வீதி வாசலில் வண்டி ஓசை கேட்டு வெறிபிடித்தவளாய் முற்றத்துக்கு வந்தாள் தவமணி. கூட்ட நெரிசலில், செவ்வந்தியின் உடலைச் சுமந்த பெட்டியின் முன்னால் கண்கள் பனிக்க நிற்கிறார் டேவிட்சன்.

தவமணி பேயானாள். ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக்கொண்டு ஓங்கிக் கத்தினாள் தவமணி… ‘‘எண்ட மகள் போராடிச் செத்திருக்க வேணும் ஐயா… எண்ட மகள் போராடிச் செத்திருக்க வேணும்!’’

வெளியான தேதி: 27 ஆகஸ்ட் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *