இவனும் ஒரு இந்தியக் குடிமகன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 2,842 
 

அவன் பெயர் அவனுக்கே தெரியாது..!

இந்த பூமியில் அவன் வாழ்கிறான் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை…

என்ன ஆதாரம் வேண்டும்…?

ஆதார் அட்டையில்லை..
ரேஷன் கார்டு கிடையாது..
வாக்காளர் அட்டை.ம்ஹும்…!
பாஸ்போர்ட்டா…?
அது என்னவென்றே தெரியாதே!
அப்புறம் வாகன லைசென்ஸ்..?
பாங்க் பாஸ் புக்..?
பான் கார்டு..? மாஸ்டர்..விசா..கார்டு..?
சான்சே இல்லை…

இந்தியாவில் பிறந்த ஒரே காரணத்தால் மட்டுமே ஒருவன் இந்தியக்குடிமகனாக முடியுமா…?

இதில் ஏதாவது ஒன்று இருந்தால்தானே இந்திய குடிமகன்…?

ஆ..ஒன்று மறந்து விட்டது…
பிறப்பு சான்றிதழ்…!
அவன் எங்கே பிறந்தான்..? யாருக்கு எப்போது பிறந்தான்..?

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது..!

இறப்புச் சான்றிதழ்…

அதுவும் அவன் இறந்தபின் யாராவது முனைந்து கேட்டால்தானே கிடைக்கும்…?

ஆமாம்..அனாதைக்கு இறப்பு சான்றிதழ் உண்டா..?

சரி.. இவ்வளவு அறிமுகம் இவனுக்குத் தேவையா…?

***

ஐந்தடி இரண்டு அங்குலம் உயரம் இருப்பான். ஒரு நாற்பது நாற்பத்தைந்து…? ஒல்லியென்று சொல்ல முடியாது..கருத்த முகத்தில் வடுக்கள்…பற்கள் மட்டும் பளீர்..

ஒருகால் விந்தி விந்தி நடப்பான்..அடர்த்தியான கொஞ்சம் நரைத்த முடி…!

இந்த வர்ணனை இவனுக்கு அவசியமா…? ஆம்..இந்தக் கதைக்கு அவசியம்தான்…

இவனைப் போன்று எத்தனையோ பேர்..! இவர்களைப் பற்றி அக்கறைப்பட என்ன இருக்கிறது..?

ஆனாலும் இந்தக் கதையின் கதாநாயகன் இவன்தான்..

பிடித்தவர்கள் மட்டுமே மேலும் இவனைப்பற்றி என்ன இருக்கப்போகிறது என்ற ஆவலில் தொடரலாம்..

இவன் காணப்படும் இடங்கள்…ஃப்ளைஓவர் அடியில்…எலியட்ஸ் பீச்சில் …கட்டுமரத்துக்கடியில்…

பெரிய பார்க் பெஞ்சுகளில் (போலீஸ் விரட்டினால் அடுத்த பார்க்…), பிளாட்பாரம்…!

ஆனாலும் இவனையும் புரிந்துகொண்டு ஓரு ஓரத்தில் இருக்க அனுமதித்த டீக்கடை மாதவனை இந்தக் கதையின் செகண்ட் ஹீரோவாக வைத்துக் கொண்டால் தப்பில்லை என்று தோன்றுகிறது…

இவனுக்கு ஒரு பெயர் வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..

ஆரம்பத்தில் பக்கத்து பள்ளிக்கூட சிறுவர்கள் இவனிடம் பேச்சுக்குடுப்பார்கள்.

இவன் வெள்ளந்தியாய் சொல்லும் பதில்களைக் கேட்டு பரிகாசம் செய்வதும் அவர்களின் பொழுதுபோக்கில் ஒன்று..

இவன் பெயர் தெரியாததால் ‘கேனையன்‘ என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்..

அவன் அதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை..

ஆனால் மாதவனுக்கு ஒரு நாள் கோபம் வந்து விட்டது..

பதினாறு வயதினிலே மயிலு

‘இனிமே உன்ன யாராவது சப்பாணின்னு கூப்பிட்டா, அவன் கன்னத்தில சப்புன்னு அறஞ்சிடு ‘ என்று சொல்வாளே..

அதுபோல…சப்பென்று அறையச் சொல்லவில்லை…

ஆனால் “எம்பேரு..கேனையன் இல்ல..கன்னையன். ‘ என்று சொல்ல சொல்லிக் கொடுத்தான்..

இப்படித்தான் கன்னையன் பிறந்தான்…

***

கன்னையனுக்கு நிச்சயம் ஒரு தாய் இருந்துதானே ஆகவேண்டும்.ஆனால் அவளுக்கு என்ன இக்கட்டோ, அவனை தூக்கி எறிந்து விட்டாள்.. !

எமனின் லிஸ்ட்டில் இப்போதைக்கு இவன் பெயர் இல்லை..

எப்படியோ தப்பிப் பிழைத்து நாற்பது வயதில் வந்து நிற்கிறானே…!

ஆனால் கன்னையன் ஒருநாளும் பிச்சையெடுத்ததில்லை.. யாரிடமும் கையேந்தியதில்லை..!

மூட்டை தூக்குவான்.. தோட்டம் பெருக்குவான்.. கார் துடைப்பான்..கால்வயிறு, அரைவயிறு ரொம்பினால் போதுமென்றிருப்பான்…!

அவனுடைய இத்தனை வருட வாழ்க்கையில் அவனுக்கு என்று இருக்கும் ஒரே சொத்து ஒரு நீல நிற ரெக்சின் பை…

ஏதோ ஒரு புண்ணியவான் ஜிப் சரியில்லையென்று குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டுப் போயிருக்கிறார்..

இவனை அவன் தாய் எறிந்த மாதிரி…!

யாரும் எடுப்பதற்கு முன் இவன் கையில் கிடைத்தது அதிர்ஷ்ட்டம்தான்…

ஒரு சகோதரபாசம்….!

அவனுக்கும் ஒரு பை வேண்டியிருந்தது..!

இரண்டு கிழிந்த பனியன், ஒரு லுங்கி, பழைய நைந்து போன ஜட்டி இரண்டு, ஒரு துண்டு, ஒரு டூத் பிரஷ், கோபால் பல்பொடி பொட்டலம்…! (பளிச் பற்களுக்கு கோபால் பல்பொடி..!)

ஜிப் வேண்டிய அவசியம் இல்லை..இதற்கு எந்தத் திருடன் வரப்போகிறான்..இரவு தலையணையாக மாறிவிடும்…!

மாதவன் ஒருநாள் காலையில் கடையைத் திறக்கும்போது பார்வையில் பட்டான் கன்னையன்..

அப்போது அவன் கேனையன்…!

ஏனோ சிலரைப்பார்த்ததும் பிடித்துப்போகும்..!

ஐந்து வருடமாகிவிட்டது..காலையில் கடையைப் பெருக்கி, குப்பையை அள்ளிக்கொட்டி, தண்ணீர் பிடித்து வைத்து இரவு கடை அடைக்கும் வரை கூடவே இருப்பதில் இரண்டு வேளை டீயும் பன்னும் கிடைத்தது..

கூடவே ஒரு உறவு..மாதவனைச் சொல்லவில்லை..!

மாதவன் கடைக்கு வரும் யாரும் இவனைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்.. லட்சுமியைத் தவிர..!

லட்சுமிக்கு ஒரு பத்து வயது இருக்கும்..

தினம் ஒரு டீயும் பன்னும் வாங்க வருவாள்.

அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்..அம்மா காலையில் எழுந்திருந்து வேலைக்குப் போகிறாள்..

பாவம்..லட்சுமி..பள்ளிக்கூடத்திலிருந்து நின்றுவிட்டாள்..முழு நேரமும் அப்பாவைக் கவனித்துக் கொள்கிறாள்..

ஒரு நாள் போகும்போது “வரேன் அண்ணா…!”
என்றாள்…

கன்னையன் சுற்றும் முற்றும் பார்த்தான்.யாருமில்லை..!

“உன்னத்தான் விளிச்சு கன்னையா…!”

“என்னயா…? நானா..?”

“ஆமா..கன்னையா… லட்சுமி வளர நல்ல குட்டி… சூதுவாது தெரியாது.. உடம்புதான்..! கண்டோ..?!பொறந்திலிருந்தே ஏதோ சுகமில்லா…!”

அன்பான வார்த்தைக்குத்தான் எத்தனை சக்தி..தினமும் லட்சுமி வரவுக்காக காத்திருப்பான்…

***

“அண்ணா ! டீ வேணுமா..?”

“டீக்கு எனக்கு பஞ்சமேயில்ல கண்ணு..!

ஆமா..நீ ஏன் தினமும் ஒரு டீயும் பன்னும் வாங்கிட்டு போற? யாருக்கு…?”

“அப்பாவுக்கு நடக்க முடியாது..பக்கவாதமாம்…அம்மா வேலைக்கு போனால்தான் சோறு…!”

“அதெல்லாம் சரி.. ஒரு டீயும் பன்னும் பத்துமா ? உனக்கு..?”

“நானு இதில ஒரு வாய் ஊத்திக்குவேன்..ஆமா.. உங்களுக்கு யாருமே இல்லியா…? வீடு இல்ல…?”

அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு நினைவே இல்லை..சிலநாள் அவளுக்கு இரண்டு வாழைப்பழம் வாங்கித் தருவான்.

“என்ன லட்சுமி..இந்த வயசுல சீக்காளி மாதிரி இருக்கியே…!”

“சீக்காளிதான் அண்ணா..நானு பொறக்கும் போதே ஏதோ நோவுன்னு ஆஸ்பத்திரியில சொல்லிட்டாங்க…!”

“திரும்ப போயி காட்ட வேணாம்?”

“கூட்டிக்கிட்டு போறேன்னு அம்மா சொல்லியிருக்கு…!”

அவள் ‘அண்ணா! அண்ணா! என்று கூப்பிடும்போது அவனை யாரோ தங்கத்தேரில் வைத்து முன்னால் பூப்போட்டுக்கொண்டே, ஊர்வலம் அழைத்துச் செல்வதுபோல் ஒரு பரவசம்…’

அதற்காகவே அவளிடம் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்போல இருக்கும்…!

கடையென்று இருந்தால் நாலுவிதமான மனிதர்களும் வந்துதானே ஆகவேண்டும்..

அந்த ஏரியாவிலும் நாலு ரவுடிகள் இருக்கத்தான் செய்தார்கள்..!

“மாதவா..! யாரு இந்த ஆளு ? ஏரியாக்கு புச்சா தெரியுது…? கண்டகண்ட பேமானி பசங்கள பக்கத்துல வச்சிகிட்டு..? நாளைக்கு ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆயிடிச்சுன்னா…?”

மாதவனுக்கு சூடான டீயை அவர்கள் முகத்தில் வீச வேண்டும்போல ஆத்திரம்..!

என்ன வேண்டுமென்றாலும் செய்யத்தயங்காத கும்பல்…!

“ஆமா…அவனுக்கென்ன அந்த லட்சுமிப் பொண்ணோட பேச்சு…?

பொறுக்கிப் பசங்க..! சின்ன பிள்ளைன்னு கூட பாக்கமாட்டாங்க..!

“இதபாருங்க..எங்கடை முன்னால நின்னுகிட்டு கண்டபடி பேச்சு வேண்டாம்..

வந்தமா..! டீயக்குடிச்சமான்னு போய்க்கிட்டே இருங்க…!”

“பார்ரா…! ஏதாச்சும் ஏடாகூடமாக நடத்திச்சு..! அப்புறம் உங்கதியும் அதோ கதிதான்…!”

இந்த மாதிரி மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவன் இல்லை மாதவன்..

ஆனாலும் கன்னையனை நினைத்து பயந்து வாயை மூடிக்கொண்டான்..

***

வேலை மும்மரத்தில் கவனிக்கத் தவறிவிட்டான்..கன்னையனை ஒருவாரமாக காணவில்லை..

சிலசமயம் அங்கே, இங்கே சுற்றிவிட்டு வருவான்..

இந்த ரௌடி கும்பல் ஏதாவது செய்திருக்குமோ..?

அப்போதுதான் நினைவுக்கு வந்தவனாய்…

“ஆமா.இந்த குட்டி லட்சுமியையும் ஒருவாரமா காணமே…!

எங்க இருக்கான்னு வீட்டு விலாசம் கேக்காம விட்டுட்டமே..!”

ஒரு பத்து நாள் கழித்து உடம்பெல்லாம் கட்டுடன் நடக்க முடியாமல் நடந்து வந்தான் கன்னையன்..

“என்னப்பா..என்னாச்சு..? எவிட போயி ?போறவன் சொல்லிட்டு போறதில்ல..? எனிக்கு பேடியாயி! “

கன்னையன் முகம் முழுவதும் வேதனை அப்பியிருந்தது…

கண்கள் சிவந்து, உதடு கறுத்து … முகமெல்லாம் வீங்கி…

“அண்ணே…நானு உசிரோட இருக்கக் கூடாது… இருக்கவே கூடாது…! அப்பிடியே என்ன கொன்னு போடாம போயிட்டாங்களே…!”

“சொல்லு கன்னையா ? அந்த பொறுக்கி பசங்க ஏதாச்சும் உபத்ரவிச்சோ…?”

“ஆமா..நேத்து ராத்திரி நாலு பேரும் நல்லா குடிச்சிருப்பாங்க போல..

நான் கடைக்குத்தான் வந்துகிட்டு இருந்தேன்..

“டேய்..எங்கடா போயிட்டு வர..? நெசத்த சொல்லு..அந்த லட்சுமிகுட்டியையும் பத்து நாளா காணம்..எங்கடா தள்ளிக்கினு போன?

உன் வேல முடிஞ்சதும் அவளையும் சேத்து முடிச்சிட்டியா..? “

இன்னும் காது கேட்கக் கூசும் வார்த்தைகளை நாக்கூசாமல் சொன்னதுமில்லாமல் பின்னி எடுத்து விட்டார்கள்..

“கன்னையா..பொறப்படு..இப்பவே போலீசுல போயி கம்ளெயின்ட் குடுத்துறலாம்…!

“வேண்டாம் அண்ணே.. என்னோடு சேத்து லட்சுமி பேரையும் நாரடிச்சிடுவாங்க.. பாவம் அந்தப் பொண்ணு..”

“அத்தையும் காணலியே கன்னையா…? நினக்கு ஏதாச்சும் அறியுமோ…?”

கன்னையன் திருதிருவென்று முழித்தான்.

“எனக்கு எல்லாமே வெறுத்திருச்சு…நானு பொறந்திருக்கவே கூடாது…”

“கன்னையா… அங்கன பறையறுது..! இரண்டு திவசம் பேசாம படுத்து ஒறங்கு!… எல்லாம் சரியாப் போகும்…!

காலையில் கன்னையனைக் காணவில்லை…!

ஆனால் அவனுடைய நீலநிற ரெக்சின் பைமட்டும் அனாதையாய்..

மாதவனுக்கு பகீரென்றது.

***

Advertisements

Report this ad

அடையார் திரு.வி.க. பாலத்தில் கூட்டம் நெருக்கியடித்தது.

“இப்பத்தான்.. கொஞ்ச நேரமாவே எட்டிப்பாத்திட்டே நின்னுகிட்டு இருந்தாப்ல..

போலீசு உடனே வந்திரிச்சு.பாவம் யார் பெத்த பிள்ளையோ? என்ன கஷ்ட்டமோ …?”

“போங்க எல்லாரும்..எதுடா சாக்குன்னு துக்கம் விசாரிக்க வந்திடுவாங்க..! வேலை வெட்டியில்லாம..! ஒத்தரும் இங்க நிக்கக் கூடாது…!

கூவத்துல தண்ணி போகக்கூடாதே…! உடனே குதிச்சிருவானுங்க…!”

போலீஸ் திட்டிக் கொண்டே கூட்டத்தை விரட்டினார்..

***

“பேப்பரில எந்தா நியூஸ்..? காலையிலே சீக்கிரம் வித்துப்போச்சு?

மாதவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே…

“மாதவா…கூவத்துல நேத்து யாரோ குதிச்சிட்டாங்க..பாவம்.. ஆள் போயிட்டாப்ல..இன்னிக்கு வெவரமா போட்டிருக்கானுங்களே…?

“எந்தா சேதி…? சொல்லுப்பா…?”

“மார்ச்சுவரியில இருக்குதாம்…யாருன்னு விசாரிச்சிட்டு இருக்காங்க…!”

தீடீரென்று மாதவனுக்கு எங்கோ ஒரு பொறி தட்டியது..ஒருவேளை கன்னையனாய் இருக்குமோ..?

இரண்டு மூன்று நாளாய் காணவில்லை..பையை வைத்துவிட்டு போகமாட்டானே.! “

“மாதவா..! இன்னிக்கு நியூஸ் தெரியுமா..?

யாருமே பாடிய வாங்க வரலியாமே..! அனாதைப் பொணமாம்… பாவம்..!”

அவன் நிச்சயம் கன்னையன்தான்..

மாதவனுக்கு பயித்தியம் பிடிப்பதுபோல இருந்தது…

பாவி..கடைசியில் இப்படியா ஆகணும்..மார்சுவரியில போயி பாத்தா என்ன..?

***

லட்சுமி ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி இரண்டு நாள்தான் ஆகியிருந்தது..

“அம்மா..பேப்பர்ல போட்டிருக்காமில்ல.யாரோ பாலத்திலேயிருந்து குதிச்சிட்டாங்களாம்..

பாவம்! யாருன்னே தெரியலியாம்!

ஏம்மா..! வீட்டுக்கு வந்ததும் உடனே பாக்க வரேன்னு சொல்லிச்சே கன்னையன் அண்ணா..

இன்னும் வரக்காணமே…அன்னிக்கே ஆஸ்பத்திரியிலேந்து அனுப்பிப்பிச்சிட்டாங்களே…”

லட்சுமி உருகிப் போனாள்…

“சுப்பம்மா…! உனக்கு சேதி தெரியுமா..?

பாவம்! அந்த கன்னையன நாலு பொறம்போக்கு பயலுக அடிச்சு போட்டாங்களாம்…

லட்சுமியோட வேற சேத்து வச்சு பேசியிருக்காங்க பேமானிப் பசங்க…!

டீக்கடைக்குக் கூட நேத்து கன்னையன் வரலையினு மாதவன் சேட்டன் சொல்லிட்டிருந்தாப்பல…!

ஒன்றும் ஒன்றும் இரண்டு..சுப்பம்மாவுக்கு புரியாத கணக்கா..?

வயிற்றில் தீ மூண்டது…

பெறாத வயிறு பற்றி எரிந்தது..

அனாதையா.? யாரு அனாத ? உனக்கு நாங்க இருக்கோம் ராசா..!

சாகக் கெடந்த பொண்ணு இன்னைக்கு உசிரோட இருக்குதே..! யாரால…? நீயா அனாத..?

உனக்கு தாய்க்குத் தாயா நானிருக்கேன்..உந்தங்கச்சி லட்சுமி இருக்கையில நீ எப்படி அனாத..?

“லட்சுமி..வீட்டப் பாத்துக்க..பக்கத்து வீட்டு ஆயாவ தொணைக்கு வச்சுக்க..இப்ப வரேன்.. “

“அம்மா..எங்க போற…?”

“வந்து சொல்றேன்…சாக்கிரதையா இரு..”

***

“சார்..இங்கத்த ஆபீசர பாக்கணுங்க..!”

“யாரும்மா நீ..? எதுக்கு பாக்கணும்?”

“எம்பேரு சுப்பம்மா… அடையாறு கூவத்தண்ட குயிலு குப்பம்..

மூணு நாள் மின்னாடி பாலத்தண்ட ஒரு ஆளு விளுந்து போயிட்டானே.. அவன் பொணத்த இங்கு ஐஸ் ரூமில வச்சிருக்காங்களாமே.”

“இப்பிடி மொட்டையா கேட்டா..? ஒரு நாளைக்கு எத்தினியோ அனாத கேசுங்க வருது..!

உள்ளார வலது பக்கம் திரும்பி நேரா போனா ஆபீசர் ரூம்..!”

“வணக்கம் ஆபீசரய்யா…!”

“சொல்லும்மா…!”

விலாவாரியாய் நடந்ததைக் கூறினாள் சுப்பம்மா..!

சார்..அந்த பிள்ளை அனாதையில்ல! எம்பிள்ள கன்னையன்..!”

“ஏம்மா.. இதென்ன புதுக் கத..? பெத்த பிள்ளைய காணலன்னு ஒடனே ஓடி வரவேண்டாம்..? பிள்ளையின்னு ஆதாரம் இருக்குதா..? ஏதாச்சும் சர்ட்டிபிகேட்டு…? கொண்டாந்திருக்கியா..?”

“சார்.. அவன் நானு வளத்த பிள்ளை.! படிக்கல..! இஸ்கோலுக்கு போவல..! வேலை பாக்கல! என்னத்தையா காட்றது..?”

“சண்முகம்…! இங்க வா..! போயி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ட எடுத்துகிட்டு வா…!

“ம்ம்ம்..இப்போ நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லு..!”

“வயசு என்ன இருக்கும்..?”

“நாப்பது சார்..மொகத்துல வடு..காலு விந்தி விந்தி நடக்கும்..ஒரு காலு குட்ட…உங்க ஒசரம் இருப்பான்.“

“அப்புறம்…?”

“ஒரு கிட்னி இருக்காதுங்க..! சரியா ?”

ஆபீசரும் சண்முகமும் ஒருவரையோருவர் பார்த்துக் கொண்ட பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்..

“ஏம்மா..கிட்னியத் திருடிட்டு பாலத்திலேர்ந்து தள்ளிவிட்டிட்டீங்களா….?”

“சார்..ஆபீசர்னு பாக்குறேன்..அப்பிடியிருந்தா அனாதைப் பொணத்த சொந்தங்கொண்டாடிட்டு நான் ஏன் சார் வரணும்..?

இந்த ஊர்ல இருக்கிற பாதிப் பணங்காரங்க ஒடம்புல இருக்கிறது எங்கள மாதிரி ஏழபாழைங்களோட உறுப்புங்கதானே சார்..! வயத்து பொழப்புக்குத்தானே விக்குறானுங்க..

ஆனா எப்பவுமே காசுக்காக மட்டும்னு நெனச்சுடாதீங்க…!

இந்தபிள்ளையாலதான் எம்பொண்ணு லட்சுமி இன்னிக்கு உசிரோட இருக்கு..

அத்தையும் செக் பண்ணி பாக்கணுங்களா…! ஆஸ்பத்திரியண்ட போயி கேளுங்க! எல்லா வெவரமும்!

பாவம்! இப்பேர்ப்பட்ட பிள்ளைக்கு வந்த கெதியப் பாருங்க!

***

என்ன நினைத்தாரோ ஆபீசர்..

“சுப்பம்மா நீ சொல்றது நான் முழுசா நம்பறேன்..

உன்னமாதிரி நாலு பேரு இருந்திட்டா நாங்க இங்க அனாதைப் பொணங்கள வச்சிகிட்டு அல்லாட வேண்டியதில்ல..

பேப்பருல ஒரு கையெழுத்த போட்டுட்டு கன்னையன் பாடிய எடுத்துகிட்டு போ…

வேற என்ன உதவி வேணும்னாலும் கேளு.!

சார்..! டெத் சர்ட்டிபிகேட் நீங்க தருவீங்களா..?

“அடையாறு போலீசு ஆபீசருகிட்ட சொல்லி என்ன உதவி வேணும்னாலும் செய்யச் சொல்றேன்.

அவுங்க ஹெல்ப் பண்ணுவாங்க..!

“ரொம்ப டேங்ஸ் சார்.!”

புடவைத்தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் சுப்பம்மா…

கன்னையனுக்கு இறப்பு சான்றிதழ் கிடைத்துவிட்டது..

இப்போது இவனும் ஒரு இந்தியக் குடிமகன்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *