இரு துருவங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 2,559 
 

கமலன், ரமணன் – இருவரும் சென்னையை அடுத்த ஒரு சிறிய நகரத்தில் உணவகம் நடத்தி வருகின்றனர்.

“இந்த ரமணன் பொடிப்பய. என்கிட்ட வேலை செஞ்சிட்டு இருந்தவன், வேற உணவகத்தையே எனக்குப் போட்டியா நடத்தறான். அவன கவுக்காம விடமாட்டேன்” – கமலனின் சபதம்.

“நீ மக்களை எப்படி ஏமாத்தறன்னு எனக்குத் தெரியாதா? உன் உணவகத்தை மூட வைக்கிறேன் பார்” – இது ரமணன்.

ரமணன் மொதல்ல ஒரு காரியம் பண்றான்.

“ராமசாமி! நீதான் கமலனுக்கு மொத்தமா அரிசி, பருப்பு எல்லாம் குடுக்கற. இந்த தடவை அதுல எல்லாம் கல் அதிகமா சேர்த்துடு. அரிசில கல் வெள்ளையா தெரியற மாதிரியும், பருப்புகள்ல அதே மாதிரி கலர்-லயும் கற்களை எங்க ஆளுங்க ரெடி பண்ணிட்டாங்க. நீ மாட்டிக்க மாட்ட. உன்னோட கமிஷனைவிட மூணு மடங்கு, இதோ பிடி”

ராமசாமி பணத்த வாங்கிட்டு கொஞ்சம் பயந்துகிட்டே பட்டுவாடா பண்ணான்.

ரமணனுக்கு பதட்டமா இருந்தது. இன்னைக்குல இருந்து, கமலனின் உணவகத்துல புதுசா குடுத்த அரிசி/பருப்பு உபயோகிக்க ஆரம்பிச்சாங்க, ஆனாலும் கல் அதிகமா இருக்குன்னு ஒரே ஒருத்தன் கூட சண்டை போடல. மாறாக, கூட்டம் அதிகமாக ஆயிருக்கு, உணவு இன்னும் நல்லா இருக்குன்னு பேசிக்கறாங்க.

ஆள் அனுப்பி விசாரித்தால், ரமணனுக்கு ஆச்சரியமான அதிர்ச்சி – கமலன் எதேச்சையாக ஒரு புது மெஷின சோதிச்சானாம் (ராமசாமி பட்டுவாடா பண்ண அதே நாள்). அது, அரிசி/பருப்புல இருந்து கற்களை முழுமையாக பிரிச்சி எடுத்திடுமாம். அதன் பலன் நன்றாக இருந்ததால், கமலன் அந்த மெஷினை விலைக்கு வாங்கிட்டானாம். இப்ப அவன் உணவகத்துல தரம் ரொம்பவே உயர்ந்துடுச்சி.

இப்போது கமலனோட முறை, ரமணன கவுக்க திட்டம் போட்டான்.

“செந்தில்! உன் மூலமா தான் ரமணன் உணவகத்துக்கு சாப்பிட்ட தட்டு எடுக்க, கழுவ ஆட்கள் சப்ளை ஆவுது. நீ என்னமோ காரணம் சொல்லிக்க, ஆனா இன்னைக்கு ஒருத்தன கூட அனுப்பாத. உனக்கு மூணு மடங்கு பணம் தரேன்”

காலைல உணவகம் திறந்து, வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிக்கும் நேரம், ரமணனுக்கு விஷயம் தெரிஞ்சது. கொஞ்சம் நேரம் என்ன பண்றது ன்னு புரியாம தவிச்சான்.

திடீரென ஒரு யோசனை, செயல்படுத்தினான். அன்னைக்கி வழக்கத்தை விட வியாபாரம் இரு மடங்கு (கமலனோட வாடிக்கையாளரும் வந்தாங்க).

கமலனுக்கு என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியல. ஆள் அனுப்பி விசாரித்தால், அரண்டுட்டான்.

“செல்ஃப் சர்வீஸ்” அறிமுகப்படுத்தி இருந்தான் ரமணன் (அதுவரை அந்த சிறிய நகரத்தில் அது பழக்கத்தில் இல்லை). தட்டு கழுவ மட்டும் அவன் ஆட்களையே இரு மடங்கு கூலி கொடுத்து அமர்த்தினான். வருமானம் அதிகமானதால் அவனுக்கு நிறைய லாபமே.

இப்போது ரமணனின் முறை.

“முருகேசன்! இன்னைக்கு கமலனோட உணவகத்துல நீ சமைக்கற எல்லா உணவுலயும் உப்பும், காரமும் ரொம்ப அதிகமா போடு. உனக்கு நிறைய பணம் தரேன்”

நீங்க கணிச்ச மாதிரியே கமலன் உணவகத்துல கூட்டம் முட்டுது. ஆனா இது வழக்கமான கூட்டம் இல்ல. விசாரித்தால் சூழ்நிலை அவனுக்கு எவ்ளோ சாதகம் ன்னு நொந்துட்டான் ரமணன். அது வேற ஒண்ணும் இல்லை – அன்னைக்குன்னு பார்த்து ஆந்திரா மாநிலத்துல இருந்து கூட்டமா ஆளுங்க அந்த நகரத்தையும் பக்கத்துல இருக்கற மத்த இடங்களையும் சுத்திப் பார்க்க வந்தாங்க. அவங்களுக்கு காரமான சாப்பாடு புடிச்சிப் போகவே, மூணு வேளையும் அங்கேயே சாப்பிட்டாங்க. அது போதாதுன்னு, உள்ளூர் ஆளுங்க பலபேர், டேஸ்ட் நல்லா இருக்குன்னு சாப்பிட்டாங்க.

ரெண்டு பேரும் நேர்லயே மோதிக்கறதுன்னு முடிவு பண்ணாங்க. ஊருக்கு ஒதுக்குப் புறமா ஒரு பண்ணை வீட்ல சந்திப்பு ஏற்பாடு ஆச்சு. கூட யாரும் அல்லக்கைகள் இல்லாம ரெண்டு பேரும் தனியா வந்தாங்க.

“ரமணா! ரெண்டு தடவையும் நீ என் உணவின் தரத்தை கெடுக்கப் பார்த்த, நான் அவ்ளோ கேவலமான லெவலுக்கு எறங்கல. நான் உன் ஆட்களை ஒருநாள் நிறுத்தினதால, உனக்கு நல்லதுதான் நடந்தது”

“கமலன் அய்யா! தரத்தை கெடுக்க நெனச்சது தப்புதான். ஆனா உங்க நேரமும் புத்திசாலித்தனமும் சேர்ந்து அது உங்களுக்கு சாதகமாதானே முடிஞ்சுது”

மாத்தி மாத்தி (நாகரீகமாவே) ரொம்ப நேரம் வாதாடி, கடைசியில் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தாங்க.

அடுத்த நாள் முதல் அது அமலுக்கு வந்தது. ஒரு சில மாதங்கள் போச்சு – இப்பல்லாம் ரெண்டு பேருக்கும் வியாபாரம் ரொம்ப நல்லா சரிசமமா ஆச்சு, அந்த நகரத்தில் இருக்கும் மத்த எல்லா உணவகங்களையும் மூடற அளவுக்கு இவங்க வியாபாரம் நல்லா போச்சு. வெளியூர் வரைக்கும் இவங்க ரெண்டு உணவகங்கள் பத்தி நல்ல விதமாக நியூஸ் பரவி, வியாபாரம் இன்னும் ஓஹோ ன்னு ஆச்சு.

அப்படி என்னதான் ஒப்பந்தம் போட்டாங்க ன்னு கேக்கறீங்களா? தங்களோட உணவகத்தை மார்க்கெட்டிங் பண்ற பொறுப்பை அடுத்தவங்க கிட்ட ஒப்படைச்சாங்க – அதாவது, கமலனோட உணவகத்தோட மார்க்கெட்டிங்கை ரமணனும், ரமணனோட உணவகத்தோட மார்க்கெட்டிங்கை கமலனும் பார்த்துக்கிட்டாங்க.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *