இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 4,525 
 

(1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒன்று | இரண்டு | மூன்று

அந்தக் கிழமை என்னுடைய அறை நண்பனும் ஏதோ அவசர அலுவலென்று கூறி வீட்டிற்குப் போய்விட்டான். நான் மிகவும் கவன மாகச் சூட்கேசிற்குள் வைத்திருந்த சேர்ட்டை எடுத்து அன்று அணிந்து கொண்டேன். கண்ணாடியின் முன்பாக நின்று என்னைப் பல கோணங்களிலும் பார்த்து என்னை நானே ஆசையோடு மோகித்துக்கொண்டேன். இவ்வளவு காலமும் இப்படி ஆடை அணியாதிருந்த காரணத்தினால் எவ்வளவு களிப்பான நாட்களினை இழந்து போய்விட்டேன் நான்; நான் ஒரு வெறும் மடைச்சாம்பிராணி என்று என் மனதினுள் திட்டிக் கொண்டு முணுமுணுத்தேன்.

விடுதி மண்டபத்திலிருந்து புறப்பட்டுப் படிகள் வழியாக இறங்கி வரும்போது இளவரசன் ஒருவனுக்குரிய கம்பீரத்தோடு நான் மிதந்து வந்தேனென்றுதான் சொல்லவேண்டும். “சோஷல்” நடைபெறுகின்ற விளையாட்டரங்க மண்டபத்திற்குப் போகின்ற வழியிலே, நூல் நிலையத் திலே படிப்பதற்காகத் தனக்கேயுரிய வேகமான நடையில் போய்க்கொண்டிருந்த சுமணதாசாவை நான் கண்ணுற்றேன். வாழ்க்கைத் தேனை அனுபவித்துப் பருகத் தெரியாதவன், பரிதாபத்திற்குரிய இளையோன் என்ற தொனியில் அவனோடு நான் கதைத்த கதைகள் அமைந்தன. என்னையும், அபூர்வமாகவே என்னை வசீகரப்படுத்தும் எனது புதிய உடுப்புக்களையும் அவன் ஏதாவது பாராட்டிச் சொல்லவேண்டுமென்று நான் நினைத்தேன்; விரும்பினேன். அவன் எதைப் பற்றியும் ஒன்றுமே சொல்லாதபடியினால் அவனோடு நின்று பேசவே எனக்கு மனம் வராதபடியினால் அவனோடு பேச்சினைச் சட்டென்று முறித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன் நான். என் மனதிலே அவன் மீது இனந்தெரியாத வெறுப்புத் துளிர்த்தது.

அழகிய மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மண்டபத்தினை அண்மிய போது என்னுடைய மனம் மிக்க ஆனந்தத்தால் விம்மிதமுற்றது: ஒரு கடைக்காரனின் மகனுக்கு இலகுவில் கிடைத்த இத்தகைய வாய்ப்பு வேறு யாருக்குக் கிட்டும் என நினைத்து என்னுள்ளேயே நான் இறுமாந்தேன்.

மண்டபத்தின் தென்மூலை மேடையிலிருந்து கிதார் வாத்திய இசை காதுப் பறைகளை அதிர்த்திக் கணகணத்துக் கொண்டிருந்தது. எனக்குப் பெயர் தெரியாத வாத்தியங்களை ஓசைப்படுத்திக்கொண்டிருந்த அந்த வாத்தியக் குழுவினரோடு கண்களைக் குத்துகின்ற பெண்ணொருத்தியும் நின்றாள். அந்த வாத்தியங்களின் இசைக்கேற்ப அவள், உடலை மனதைக் கிளறும் விதத்திலே நெளித்துக்கொண்டிருந்தாள். மண்டபம் முழுதிலும் சிறுசிறு வட்டங்களாகக் கதிரைகள் அடுக்கப்பட்டிருந்தன. இளமையின் கலகலப்புப் பறவைகளின் கூட்டான சிறகடிப்பாய் திக்குத்திக்காய்க் கேட்டுக்கொண்டிருந்தது. உள்ளே போனதும் ஒரு கதிரையில் அமர்ந்த சில நிமிஷங்களில் என்னுடைய மனம கூனிக் குறுகிற்று. நான் அமர்ந்திருந்த கதிரைக்கு அருகருகாக ஆறு கதிரைகள் வட்டமிட்டிருந்தன. மூன்று யுவ திகள். இளைஞர்கள் இருவர். ஒரு கதிரை வெறுமையினைச் சுமந்திருந்தது. அவர்களைக் கண்களினாற் தடவி நோட்டம் விட்டேன், ஆங்கிலேயனால் பணக்கார உலகிற்கே அறிமுகப்படுத்தப்பட்ட சொர்க்கத்திலே அவர்களே தேவர்கள். என்னைத் தரித்திரத்தின் குறியீடான குசேலனுக்கு ஒப்பிடலாமா? அந்த ஐவரும் என்னை உணர்ச்சியின் சலனமற்ற கண்களினால் என்னைப் பார்த்தபோதிலும், அங்கே கதிரைகளில் நிறையும் வண்ணமும், வாசமும் மதமதர்க்கும் இளமையின் கலகலத்த சிரிப்பும் என் நெஞ்சினை என்னவோ செய்தன. அங்குள்ளவர்கள் அணிந்திருந்த உடைகளின் பகட்டிற்கு முன்னால் நான் தரித்திரக் கோலம் தரித்தவன் போல நாணமுற்றேன். மழைக்கு ஒதுங்கி கல்யாண வீட்டுப் பந்தலினுள் பிறர் அருவருப்போடு பார்த்து நிற்கின்ற பிச்சைக்காரனின் மனநிலையில் குறுகி நின்றேன் நான்.

சிரிக்கவே முடியாத சிறிய விஷயங்களுக்கெல்லாம் யுவதிகள் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார்கள். கட்டுப்பாடற்ற யௌவனச் சிரிப்பு. அடுத்த வட்டத்திலிருந்த ஒருத்தி சிரிக்கையில் கண்களிலே நீர் துளிர்த்து விட்டது. அதனை அவளருகில் இருந்த மாணவன் பூவைத் தடவுகிறாற்போல மெதுவாகப் பெருவிரலாற் துடைத்து விட்டுத் திரும்பி என்னைக் கண்களைக் குறுக்கிப் பார்த்தான். “நீ ஒரு ஏழைக்கடைக்காரனின் மகன். இங்கு ஏன் வந்தாய்?” என்பது போல கவலை மறந்த அவர்களின் சிரிப்பு என்னைப் பார்த்து ஏளனம் செய்தது. என்றுமே என்னைத் தரங்குறைந்த பயலாக மதிக்கும் ராமலிங்கம் எனக்குப் பக்கத்திலே மிகவும் நளினமாக வந்து சிகரட்டை நீட்டுகின்ற பாவனையில், “மிகமிக எளிமையாக இருக்கின்றாய்” என்று ஏளனமும் குத்தலுமாய்க் கூறிவிட்டு அங்கிருந்து மற்ற வட்டத்திற்குப் போனான். அங்கு போகும்போது நான் ‘ரை’ கூடக் கட்டிக்கொண்டு போகவில்லை. ‘ரை’ கட்டவேண்டுமென்ற நினைவே மனதில் எழவில்லை. அப்படி அந்த நினைவு முன்னதாகவே தோன்றியிருந்தாலும் யாரிடம் தான் நான் ‘ரை யை இரவலாக வாங்கியிருப்பேன்? யாருமே எனக்கு இரவலாக ‘ரை’ தந்திருக்கமாட்டார்கள். ராமலிங்கம் எனக்கருகாகக் குனிந்தபோது அவன் கட்டியிருந்த சிவப்புக் கோடிட்ட அழகிய ‘ரை’ என்னுடைய தோளிலே துவண்டு மடிந்து போயிருந்தது. அங்கிருந்து போகும்போது தன்னுடைய ‘ரை’யை வெகு ஸ்ரைலாகச் சரி செய்து கொண்டு போனான். நான் அங்கே அனாதையாய், இடந்தவறியவனாக கவலையினுள் ஆழ்ந்து போய் எப்போதடா வெளியிலே போவேன் என ஏங்கிக்கொண்டிருந்தேன்.

என்னோடு ஒத்தவர்களோடு சேர்ந்து கொள்ளாது, எனக்கு மேல் தட்டு நிலையிலுள்ளவர்களோடு சேர்ந்து வாழ்வு முறையை அமைக்க வேண்டுமென்று நினைத்திருந்த எனது மன மயக்கம் எனக்குப் பல்கலைக்கழகத்தின் விதேசியச் சூழ்நிலை தந்த மாற்றமே என்பதைப் பின்னர் நான் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

என் அற்பத்தனமான சிந்தனைகளுக்காக நான் கூனிக்குறுகி வெட்கப்பட்டேன். என்னுடைய மனம் அதற்குள் எவ்வளவாகச் சலனப்பட்டுவிட்டது என்பதை எண்ணிய போதிலே என் மனதின் உறுதிப் பாடற்ற தன்மைக்காக நான் மிகவும் அவமானமும் கழிவிரக்கமும் கொண்டேன்.

இந்தச் சம்பவம் நடந்தொழிய முன்னர், நான் தர்மபாலாவோடு அரசியல், பொருளாதாரம், மனிதப் பிரச்சினைகள் சம்பந்தமாக நிறையக் கதைத்திருக்கின்றேன். அவன் தருகின்ற பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றைப் படித்திருக்கின்றேன். ஆனால் இவைகள் யாவும் என் காது களினால் கேட்கப்பட்டனவே தவிர மனதினாற் கொள்ளப்படவில்லை. இந் தச் சூடு விழுந்ததின் பின்புதான் தர்மபாலாவின் சிந்தனை நிறைந்த வார்த்தைகள், அவன் தந்த புத்தகங்களின் விஞ்ஞான மயமான கருத் தோட்டங்கள் ஆகியன என் மனதின் அடிவாரம் வரை ஆழச்சென்று உ.றைத்தன.

தர்மபாலாவிடம் எனது வெட்கத்திற்குரிய முன்னாள் எண்ணங்களைச் சொன்னதோடு அதற்குத் தொடர்பான விஷயங்கள் பலவற்றைக் கதைத் தேன். நாங்களிருவரும் எங்கள் வாழ்க்கையில் கழிந்துபோன நாட்களின் பயனற்ற பொழுதுகளையும் கோணற் சிந்தனைகளையும் அசைபோட்டு எதிர் காலம் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தோம். தர்மபாலா எல்லா விதங்களிலும் பதப்பட்ட உருக்காயிருந்தான். விவசாயியின் மகனான அவன் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும், குரூர வசீகரங்களையும் நேருக்கு நேராகவே உணர்ந்து தரிசித்தவன். பசியின் கொடிய பாதங்களின் நசிப்பினிடையே துணிவையும் வாழ்வில் கூர்மையான நம்பிக்கையையும் அவன் கொண்டிருந்தான். அவனுடைய பேச்சிலே உல்லாசத்தை எதிர்பார்க்கும் கற் பனையார்ந்த வேட்கை சற்றேனும் தொனிக்கவில்லை. அவன் வயலிலே பாடுபட்டு வேலை செய்வோரையும், மலை நாட்டில் தேயிலை – கொய்பவர் களையும் பற்றி நிறைய விஷயங்களை அனுபவரீதியாக அறிந்து வைத்திருந்தான். அவர்களின் நண்பனாக அவர்களோடு வாழ்ந்து, அவர்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களுக்காகப் போராடுகின்ற இயக்கங்களோடு தன்னை இணைத்துக்கொண்டு வாழ்கின்ற தர்மபாலாவில் எனக்கு எல்லை யில்லாத பற்றும் பிடிப்பும் உண்டாயிற்று. அன்றிலிருந்து திசைமாறிச் சிந்திக்கவைக்கும் கேவலமான போலித்தனமான கலாச்சாரத்தை நஞ்சாக வெறுத்தது எனது மனம். சுமணதாசாவின் உடையினை நினைத்துப் பரிதாபப்பட்ட என் மடமைக்காக நான் என்னையே நொந்து கொண்டேன்.

வசதிகளற்றவனும் வசதிகள் உள்ளவனும் சமமாகச் சுதந்திரம் அனு பவிக்கின்றானாம்! நான் மனங்கசந்து சிரித்தேன். ஓட்டப்போட்டி ஒன்றில் ஒருவனுக்குக் கால்களைக் கட்டிவிட்டு கால்களே கட்டப்படாது சுதந்திர மாக நிற்கும் இன்னொருவனோடு ஓடுவதற்கு விட்டால் யார் தான் சிரிக்க மாட்டார்கள்? ஆனால் அந்த ஏமாற்று வித்தையை நடத்தி வருகின்ற இந்த அமைப்பின் கீழே வசதியுள்ளவனுக்குத்தான் வாழ்வு என்பதனை நான் பூரணமாக உணர்ந்து கொண்டேன் . அமுங்கித் திறமையை வெளிக் காட்டி நல்வாழ்வு வாழமுடியாமல் வெம்பற்பிஞ்சாகி உதிர்ந்து பயனற்று அழிந்தே போகும் என்னைப் போன்றவர்களின் சோகம், உறுதியான செயலாக உருவாகும் வரை, உருவாகி இந்த வாழ்வு முறை மாற்றப்பட்டு எல்லோரும் எல்லாம் பெற்று வாழுங்காலம் வரும்வரை இதே நிலைமை வளர்ந்து பூதாகரமாக நீடிக்குந்தானே என நினைத்தது என்மனம்.

தர்மபாலா என்னோடு எல்லா அம்சங்களைப் பற்றியும் தர்க்கிப்பவன். கிணற்றுத் தவளையான என்னைச் சிந்திக்கவைத்த தர்மபாலா, தன் பரந்த நெற்றியில் முத்திட்ட வியர்வையைத் துடைத்துக் கொண்டு அடங்கிய குரலிற் சொன்னான்:

“சிவகுமார், நீ நினைப்பதுபோல கொடுமை நிறைந்த பேதமுள்ள உலகமானது தானாகவே மாறிவிடக் கூடியதல்ல. அதனைத் தகர்த்து நொருக்கவேண்டும். போஷாக்கின்மையால் அவலச்சாவு சாகின்ற குழந்தைகளும், இலட்சக்கணக்கில் வேலையில்லாது விரக்தியடைந்திருக்கும் வாலிபர்களின் பெரு மூச்சுகளும், உயர்ந்து விட்ட வாழ்க்கைச் செலவுகளின் அழுத்தமுந்தான் நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் பெறுபேறுகளா?”

ஒரு ஜனவரி மாதப் பிற்பகுதியில் அறுபத்தெட்டாம் ஆண்டின் போது தர்மபாலா இதனை மிக ஆவேசத்தோடு என்னிடம் சொனனன். இருபதாண்டுகள் ஆகப்போகின்றது இலங்கை சுதந்திரம் பெற்று என நினைக்கின்ற போது நாட்டோடு சேர்த்து என் வீட்டையும் நான் மனங் கொள்ள வேண்டியதாயிற்று. தினசரி ஐம்பது ரூபா வருவாய்க்காக கடையிலிருந்து வியாபாரம் என்ற பெயரில் இலையான் கலைக்கின்ற எனது வயது முதிர்ந்த தகப்பனார்; நகைகளை அணிந்து மகிழ்வதற்குப் பதிலாக அனேக வருஷங்களாக நகை ஈடுபிடிக்குமிடத்தில் நகைகளை அடைவு வைத்து விட்டு வெறுங்களுத்தைத் தடவிக்கொண்டிருக்கும் என் அருமைத்தாய்; தங்களின் விடிவான வாழ்விற்காக எனது வருகையையும், உத்தியோக சம்பளத்தையும் எதிர்பார்த்திருக்கும் எனது தங்கைகள்…இப்படி என்னைப்போல எத்தனை பேர்? நானே இப்படியென்றால் என்னைவிடக் கீழ் நிலையிலிருக்கின்ற சாதாரண மனிதனின் சரித்திரம் எப்படியிருக்கும்? சுதந்திரம் பெற்று இருபது ஆண்டுகள்…இருபது ஆண்டுகளாம்!

தர்மபாலா ஆவேசமாகக் கூறிய கருத்துக்கள் எனது நெஞ்சத் தளத்தினையே கீறித் தைத்தன. எனக்குள்ளே குமுறல்களும் மாற்றங் களும் கிளர்ந்தன. மௌனமாய் இளமையின் இதயத்தினுள் கனன்று பொங்கத் தயாராகிக் கொண்டிருக்கும் தீத்தழற்குழம்பு என்னுள்ளத் தினுள்ளும் கொதிப்பதாய் நான் அடிக்கடி உணரத்தலைப்பட்டேன்.

***

செல்லமாகத் துமித்துக் கொண்டிருந்த மழையின் வீச்சு அதிகரிக்க முன்னர் நூல் நிலையத்திற்குப் போகவேண்டுமென்று விரைந்து வந்து கொண்டிருந்த சுமண தாசா, நூல் நிலைய வாசலடியில் நின்று பசியமரங்கள் மழைத்துமியில் தோய்ந்து சிலிர்ப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த என்னைக் கண்டதும் தோளில் தட்டி முகமலர்ந்தான்; சொல்லற்றமுறுவல்.

பல்கலைக்கழகத்து மத்திய கன்ரீனில் தேனீர் அருந்தும் நினைவோடு அவ்விடத்தில் வந்து நின்று ஆளைத் தேடிய நான் அவனைத் தேனீர் அருந்த வரும்படி அழைத்தேன். அவனும் சம்மதித்தான். இருவருமாகப் பல்கலைக்கழக நூல் நிலையத்திலிருந்து கன்ரீனை நோக்கிச் செல்லும் படிகளினால் இறங்கிச் சென்றோம். அவ்வேளையிலே நான் தர்மபாலாவோடு கதைத்து மனதினுள்ளும் செயலினுள்ளும் பதித்துக்கொண்ட எண்ணங்களை அவனுக்குச் சொன்னேன். எதிலுமே தனித்துச் சிந்தித்து தனியான உல கிலே சஞ்சரித்திருக்கும் அவனை அந்த உலகத்திலேயிருந்து மீட்டு எங்களோடு சேர்க்கவேண்டுமென்று எனக்கு விருப்பமாயிருந்தது. “படித்தவர்கள் என்று கருதப்படுகின்ற நாங்கள் எதிலும் சுயதிருப்திப்பட்டு இருந்து விடக்கூடாது. நாங்கள் தொடர்ந்து எம்மைப் புதிய அச்சில் வார்த் தெடுத்துக்கொள்ளவும் புதிய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், தொழிலாளி விவசாயிகளுடன் நெருக்கமாக ஐக்கியமுறவும் கூடியதாகச் சிறிது சிறிதாக முதலாளித்துவ உலக திருஷ்டாந்தங்களைக் கைவிட்டு தொழிலாளி வர்க்க திருஷ்டாந்தங்களை அடையவேண்டுமல்லவா? அப்படியல்லாது நாங்கள் இடைவழியில் நின்றுவிட்டாலோ அல்லது பின்னால் வழுக்கிச் சென்றுவிட்டாலோ மீள வழியற்ற பாதையை அடைந்து விடுவோமல்லவா?”

எனது சொற்கள் பாடமாக்கினாற்போலக் கோவையாக வெளியாகின. ஆனால் அவை செயற்கையான சொற்களல்ல. நான் சொல்லி முடியும் வரை சுமண தாசா என் வார்த்தைகளை வெகு நிதானமாகக் கவனித்தான், பின்னர் சில கணங்கள் யோசித்து விட்டுக் கசப்புணர்ச்சி மேலோங்கிய குரலிலே சுமண தாசா சொன்னான்:

“சிவா, இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அன்று தான் நானும் பிறந்தேன். முன்பெல்லாம் எனது அம்மா இதைச் கொல்லிப் பெருமைப் படுவதுண்டு. நான் சுதந்திரமானவனாய்ப் பிறந்தேனாம்”

பரந்த நெற்றியில் சுருண்டு விழுந்த மயிர்க் கற்றையை ஒதுக்கி, நெற்றியைப் பெருவிரலாற் சுரண்டிக்கொண்டு அலட்சியமாகச் சிரித்தபடி தன்னை மறந்த வேகத்திலே தொடர்ந்தான் சுமணதாசா.

“ஒவ்வொரு சுதந்திர தினத்தின் ஆடம்பரமான கொண்டாட்டங்களின் போதும் என்னைப் பெற்றவள் மனமும் கண்களும் பொருமிக்க கலங்கக் கண்ணீர் சொரிந்திருக்கிறாள். தன்னுடைய ஒரேயொரு ஆசை மகனுக்கு நல்ல உணவு கொடுக்க முடியாமல், கிழிசலற்ற ஆடைகள் அணிவிக்க முடியாமலிருக்கின்றதே, அவனை ஒரு சொந்தமான வசதியுள்ள வீட்டில் வைத்து வளர்க்க முடியாமல் இருக்கின்றதே என்று தான் என் தாய் அழுகின்றாள்… நண்பனே இருபது வருஷங்களாய் இந்த மூன்று ஆசைகளையும் நிறைவேற்ற முடியாமலேயே நான் மனம் வேதனையுற அழுந்திக்கொண்டிருக்கின்றேன், என் தாயோ….”

சுமண தாசா நாத்தளுதளுக்கப் பொங்கும் கண்ணீரை வெளிவர விடாது சமாளித்துக் கொண்டு எங்கோ பார்த்தான். மலர்ச்சிக்காகவே துடிக்கும் அவனைப்போலவே எனது இதயமும் ஆத்திரத்தோடு கசப்புற்று என்னையும் அவனையும் போன்றுள்ள லட்சக்கணக்கானோரின் துயரம் மாறிச் செயலாகி இந்த வாழ்வு முறை தலைகீழாக மாறவேண்டும் என்ற முடிவிலே போய் நின்றது. இந்தத் தேசத்தின் லட்சக்கணக்கான, வாழத் துடிக்கின்ற ஆத்மாக்களின் குரல் அவன் சொற்களிலே மறைவேதுமற்றுத் தொனித்தது.

கசப்புணர்ச்சியோடு வாழ்வைக் கழித்து முடிவெய்துவதைவிட, கசப்புணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் காரணங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்துவிட வேண்டுமென்ற தர்மபாலாவின் குரல் என் காதோடு கேட்டது. தர்மபாலாவையும், சுமணதாசாவையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஒன்று தன்னை யோசித்து உலகை மறக்கின்றது. மற்றது உலகினை யோசித்து தன்னை மறந்திருக்கின்றது.

மடைதிறந்த வெள்ளம் முற்றாகவே வடிவது போல, சுமண தாசாவின் இதயத்தினுள் புதைந்திருந்த, அமுங்கியிருந்த துன்பங்களெல்லாம் அன்று அவன் சொற்களில் துடித்துப் பிரவகித்தன. சுமண தாசாவினுடைய தாய் அவனைச் சிறுவயதிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படிக்கவைத்தாள். தன்னுடைய வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்டிருந்த கணவனை, மகன் பிறந்த சில வருஷங்களுக்குள்ளேயே இழந்துவிட்ட அவள் – அழகான உடைகள் தரித்து வீதியில் போவோர் வருவோரையெல்லாம் ஏக்கந்ததும்பப்பார்த்திருந்தாள். அந்த உடைகளிலே மிடுக்கோடு செல்கின்ற தன் மகனை மானசீகமாகத் தரிசித்துத் தரிசித்து அவள் மனதிலே சபலமா யிருந்த உணர்ச்சி, வைராக்கியமான உறுதியாய் வளர்ந்துவிட்டது. பலர் வாயிலாக அவள் பேராதனைப் பல்கலைக் கழகத்தைப்பற்றி விசாரித்தும் சொல்லக்கேட்டும் அறிந்திருக்கின்றாள். பேராதனைப் பல்கலைக் கழகத்திலே மகனைப் படிப்பித்து பட்டதாரியாக்கப்பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் வட்டியும் முதலுமாக அவனை உத்தியோகமாக்கி, சிறிய அடக்கமான வீடொன்றைக் கட்டி, மகனுக்கு வேளாவேளைக்கு நல்ல உணவு கொடுத்து, கம்பீரமான விலையுயர்ந்த உடைகள் அணிவித்து மங்கிய கண்களும் புழுங்கிய இதயமும் பரவசத்தினால் விம்மிதமுற மகிழ்வோடு பேரப்பிள்ளைக் கண்டு தன் இறுதிக் காலத்தை முடித்திட வேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்தாள் அந்தத் தாய்.

“…. சிவா என்னுடைய தாய் எனக்காகப் படுகின்ற கஷ்டங்களை என்னால் தாங்க முடிவதே இல்லை. என்னுடைய பட்டப்படிப்பைக் கை விட்டு விட்டு எங்காவது போய்க் கூலிவேலை செய்யலாமா என்று கூடப் பல சமயங்களிலே நான் யோசித்திருக்கின்றேன். என்னுடைய தாய் அதற்குச் சம்மதிக்கமாட்டாள்… சம்மதிக்கவே மாட்டாள். சில வேளைகளில் என்னில் எனக்கே அளவு மீறிய கசப்புணர்ச்சி ஏற்படுவதுண்டு. எட்ட முடியாத, எட்டியே தொடமுடியாத ஆசையொன்றை எதற்காகத்தான் என்னுடைய தாய் முயன்று கொண்டிருக்கின்றாள், அது இயல்பினையே மீறிய வீணான ஆசையென்று அலுத்துப்போன சிந்தனைகள் என்னை ஆட் கொள்வதுண்டு. என்னுடைய ஆசைக்காக, தன்மேல் இரக்கப்படுவதனைக் கூட அனுமதிப்பதில்லை அவள். மகனே, நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வீடு ஆகியவற்றை என்றுமே நான் உனக்கு அளித்ததில்லை. அவற்றை நீ பரிபூரணமாகப்பெற்று உன் தாய்க்கு மன நிறைவை அளிக்கும்வரை எதற்குமே கவலைப்படாதே. நமது கையிலே தான் நமது சந்தோஷம் இருக்கின்றது என்று மிக நம்பிக்கையோடு அடிக்கடி என்னுடைய தாய் சொல்லிக் கொண்டிருப்பாள்…”

அவனுடைய தாயின் சிந்தனை களில் பல தவறானவையென்பதை தான் மனதார அறிந்திருந்தபோதும், நம்பிக்கையை எதிர்நோக்கியிருக் கும் அவளைப் பற்றி அறிய நான் மிகவும் அவாவுற்றேன்.

“சுமணா, உன்னுடைய தாய் என்ன செய்கின்றாள்?”

சுமணதாசாவின் பரந்த முகத்தில் தயக்கரேகை நிமிஷத்தில் கீறிட்டு மறைந்தது. அவன் அந்தக் கேள்வியை என்னிடமிருந்து எதிர்பார்க்க வில்லைப் போலும். பிறகு என்னை அவனுடைய இயல்புப்படியே கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான் .

“என் தாய் கருங்கல் உடைத்துக் காசு சம்பாதிக்கின்றாள்”

என்னையறியாமல் அர்த்தமற்று நான் திடுக்கிட்டுப் போனேன். எங்கள் கண்களின் முன்பு மலையோடு சேர்ந்து நீலமாகப் பரந்து விரிந்திருக்கும் நிர்மலமான வானத்தில் அசையாது நின்ற வெண்முகில் துண்டுகள் போல இருவரும் சில நிமிஷங்கள் மௌனமாக நின்றோம்.

கடைக்காரனின் மகனாகிய நான், கருங்கல் உடைத்து மலையளவு ஆசையினை நெஞ்சத்தோடு சுமந்திருக்கும் தாயின் லட்சிய வடிவாகிய சுமண தாசா, துண்டு நிலத்தின் சொந்தக்காரனாயிருந்து துயரங்களின் அமுக்கலிடையேயும் துணிவோடும், செயலுக்கான சரியான நம்பிக்கை யோடுமிருக்கும் விவசாயியின் மகனான தர்மபாலா…இப்படி எவ்வளவு லட்சம் பேர்!

– தொடரும்…

– ஒளி நமக்கு வேண்டும் (குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1973, மலர் பதிப்பகம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *