இரண்டு பேர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 6,133 
 

சென்னையில் புதிய முயற்சியாக ‘ஆக்ஸி’ யின் விற்பனை அலுவலகம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. சுத்தமான ஆக்ஸிஜனை மெல்லிய அலுமினிய டின்களில் பத்திரமாக அடைத்து விற்கும் தொழில் தற்போது சக்கைப்போடு போடுகிறது. ஒரு காலத்தில் தண்ணீர் விற்பனையை நாம் ஆச்சரியமாகப் பார்த்தோம். அதன் பிறகு சுத்தமான தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து கொண்டோம். தற்போது பணம் கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம். அதே மாதிரி சுத்தமான ஆக்ஸிஜன் ஹிமாலயன் மலை உச்சிகளில் பத்திரமாக சேகரிக்கப்பட்டவுடன் அதை விற்பனைக்காக பதப்படுத்தப்படும் தொழிற்சாலை மேற்கு வங்கத்தில் உள்ளது. அதன் புதிய சென்னை விற்பனை அலுவலகத்தில் அந்த இரண்டுபேரும் ஒரே நாளில் ஸ்டெனோவாக சேர்ந்தார்கள்.

அவர்கள் சுகன்யா மற்றும் அமுதா. அலுவலகத்தில் சேர்ந்த பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகினர்.

ஆனால் வேலை பார்க்கும் ஒழுங்கில் இருவரும் வெவ்வேறு திசைகள். அமுதா தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவள். தினமும் புடவையில்தான் வருவாள். நெற்றியில் குங்குமமும் அதன் மீது தீற்றலாக வீபூதியும்… மரியாதைக்குரிய தோற்றம். அனாவசியமாகப் பேச மாட்டாள். அன்றைய வேலையை அன்றைக்கே முடித்துவிட்டுத்தான் செல்வாள். அமைதியானவள் ஆனால் ரொம்ப சென்ஸிடிவ்.

சுகன்யா கோதுமை நிறத்தில் ஸிந்திப் பசு மாதிரி புஷ்டியாக ரொம்ப ஸ்டைலாக இருப்பாள். பாப் செய்யப்பட்ட தலைமுடியை அடிக்கடி ரெஸ்ட் ரூம் சென்று கோதிக்கொண்டு, பவுடர் ஒத்தியெடுத்து லிப்ஸ்டிக் காயாமல் பார்த்துக் கொள்வாள். மாடர்ன் உடைகளில் வருவாள். கார் ஓட்டுவாள். சிரித்து சிரித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவாள். சரியாக வேலை செய்யமாட்டாள். செய்யும் வேலைகளிலும் தவறுகள் அதிகம்.

அலுவலக ஆண்களுடன் செளஜன்யமாகப் பேசுவாள். அலுவலக வேலை தவிர மற்ற விஷயங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். அதில் உதவும் மனப்பான்மைதான் அதிகம். வருடத்திற்கு இரண்டு முறை பிக்னிக் ஆர்கனைஸ் பண்ணுவாள், யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்றால் தன் காரில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வாள், . டென்டிஸ்ட், ஆப்தல், நியூரோ என டாகடர்களிடம் அப்பாயிண்ட்மெண்ட் பேசி வாங்கித் தருவாள். பேச்சில் அக்கறையும், கவனிப்பும் இருக்கும். அவள் அப்பா ஒரு தொழிலதிபர் என்பதால் பணம் அவளுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. மற்றவர்களுக்காக பணம் தாராளமாக செலவழிப்பாள். அலுவலக ஆண்கள் அவளிடம் கொஞ்சிக் கொஞ்சி பேசுவார்கள். திருமணம் ஆகாத வாலிபர்கள் அவளிடம் ஏராளமாக ஜொள்ளு விடுவார்கள். ஆனால் அவர்களை தன்னிடம் ஓட்டவிடாது ஒரு எல்லையிலேயே சாமர்த்தியமாக நிறுத்தி விடுவாள்.

அந்த இரண்டு பேர் சேர்ந்த அடுத்த ஒரு வருடத்தில், அமுதாவுக்கு செக்ரட்டரிக்கான பதவி உயர்வு கிடைத்தது. ஆனால் சுகன்யாவுக்கு ஒரு இன்க்ரிமென்ட் கூட கிடைக்கவில்லை. அது குறித்து அவள் கவலையே படவில்லை. எப்போதும்போல் சிரித்துக்கொண்டே சகஜமாக இருந்தாள். அமுதாவுடன் அதே வாஞ்சையான நட்பு பாராட்டினாள்.

அலுவலகத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. சி.ஈ.ஓ பூபதி லண்டன் மாற்றலாகிச் சென்றார். புதிய ஸி.ஈ.ஓவாக கல்கத்தாவிலிருந்து டெபாஷிஷ் முகர்ஜி என்கிற இருபத்தியேழு வயது இளைஞன் வந்தான். சிரித்த முகத்துடன் அழகாக இருந்தான். ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் மார்க்கெட்டிங்கில் கோல்ட் மெடலிஸ்டாம். பயங்கர சுறுசுறுப்புடன் செயல்பட்டான். வேலையில் மிகவும் கண்டிப்பானவன். அவனது அதிரடியான புதிய வியூகங்களால் ஆக்ஸிஜன் அதிகமாக விற்றன.

இந்தியாவில் பலருக்கு அது வேண்டிய சுவாசக்காற்றாகிப் போனது. வாட்டர் பாட்டில்களுடன் ஆக்ஸிஜன் டின்களையும் பலர் கையோடு எடுத்துச் சென்றனர். ‘ஆக்ஸி’ மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. ஆக்ஸியில் வேலை செய்யும் அனைவருக்கும் சம்பளமும் சலுகைகளும் இரண்டு மடங்காக உயர்ந்தன. அதனால் கம்பெனியில் அனைவருக்கும் டெபாஷிஷ் மீது மரியாதையும், அன்பும் அதிகரித்தது. அவன் சொல்வதுதான் வேதவாக்கு என்றானது.

அவனின் கண்டிப்பான செயல்களினால் சுகன்யாவே சற்று சரியாக வேலை செய்வதில் கவனம் செலுத்தினாள். அமுதாவின் திறமையும், முனைந்து வேலை செய்யும் வேகமும் டெபாஷிஷ் கவனத்தை ஈர்த்தது. தடலாடியாக அமுதாவுக்கு எக்ஸிகியூட்டிவ் செகரட்டரி பதவி உயர்வு கொடுத்து அவளை தனக்கான பர்சனல் செக்ரட்ரியாக வைத்துக் கொண்டான். டெபாஷிஷின் கண்டிப்பும் வேகமும் அமுதாவிடமும் இருந்ததால் அலுவலகத்தில் நிர்வாகத் திறமை பொறி பறந்தது. நாளடைவில் அமுதா மிக்க அதிகார மிக்கவளாகவும் டெபாஷிஷிடம் ஏராளமான செல்வாக்கு உள்ளவளாகவும் உயர்ந்துவிட்டாள். ஆனால் இந்த அதிகாரமும் செல்வாக்கும் அவளை மாற்றவில்லை. அமைதியாகத்தான் இருந்தாள்.

சுகன்யா அதே ஸ்டெனோ ராங்கில்தான் இருந்தாள். அமுதாவின் அதீத வளர்ச்சியில் எரிச்சலோ பொறாமையோ ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் அமுதாவின் வளர்ச்சி பற்றி எல்லோரிடமும் பெருமையாக சொல்லி சந்தோஷப் பட்டு இவள் இனிப்பு வாங்கி அலுவலகத்தில் அனைவருக்கும் வினியோகித்தாள். சுகன்யாவின் இந்தச் செய்கை அலுவலகத்தில் அனைவரையும்ஆச்சரியப் படுத்தியது.

மாதங்கள் ஓடின…

அன்று வெள்ளிக் கிழமை. மிக முக்கியமான டெண்டர் ஒன்றை மும்பைக்கு அனுப்பவேண்டிய கடைசி நாள். அதைத் தயாரித்து கொரியரில் அனுப்ப வேண்டிய பொறுப்பு சுகன்யாவினுடையது. சுகன்யாவும் அதை ஒழுங்காகத் தயாரித்து தன் வி.பி யிடம் கையெழுத்து வாங்கி பொறுப்பாக ஐந்து மணிக்குள் டெஸ்பாட்ச்சில் சேர்த்து விட்டாள்.

திங்கட்கிழமை மும்பையிலிருந்து டெபாஷிஷுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் ‘அவர்களுடைய டெண்டர் ஏன் கிடைக்கவில்லை என்ன ஆயிற்று?’ என்று கேட்கப்பட்டபோது டெபாஷிஷ் முகம் சிவந்தது. உடனே ஒரு மீட்டிங் கூட்டப்பட்டது. விசாரித்ததில், ‘கடந்த வெள்ளியன்று டெஸ்பாட்ச் உமா நான்கு மணிக்கே பர்மிஷனில் சென்று விட்டதால் அந்த கொரியர் அனுப்பப்படவில்லை இன்றுதான் அனுப்பப்படும்’ என்று தெரிய வந்தபோது டெபாஷிஷ் கொதித்துப் போனான். அனைவரின் முன்னாலும் “அது சுகன்யாவின் தவறுதான் என்றும் அவளுக்கு சிறிதும் பொறுப்பு இல்லை எனவும்… அவளின் இந்த அலட்சியப் போக்கினால் ஆக்ஸிக்கு பெரிய நஷ்டம், ஆக்ஸியின் வளர்ச்சிதான் நம் அனைவருக்கும் சுவாசக்காற்று ” எனவும் பெரிதாக கத்தினான்.

அதற்கு சுகன்யா “அது தன் தவறு இல்லை… உமா பர்மிஷன் போட்டுச் சென்றது தனக்குத் தெரியாது” என்று பதில் வாதம் புரிந்தாள். “டோன்ட் ட்ரை டு ஆர்க்யூ வித் மீ…ஷிட்” என்று டெபாஷிஷ் உறும, சுகன்யா மீட்டிங்கை விட்டு கோபத்துடன் வெளியேறினாள். அனைவரும் அதிர்ந்துதான் போனார்கள்.

அன்று வெளியேறியவள்தான்… இரண்டு வாரங்கள் ஆகியும் அலுவலகம் வரவேயில்லை.

இது குறித்து ஹெச்.ஆர் மனேஜர் டேவிட், டெபாஷிஷிடம் அவனுடைய தனியறையில் தெரிவித்தபோது, உடனே டேவிட்டிடம் ஸ்பீக்கரை ஆன் செய்து சுகன்யாவிடம் மொபைலில் பேசச் சொன்னான். டேவிட் சுகன்யாவை அவளது மொபைல் நம்பரில் அழைக்க ரிங் போனது.

“ஹாய் டேவிட் ஹவ் ஆர் யூ?”

“ஐ ஆம் குட்.. வாட் ஹாப்பண்ட் சுகன்யா? ரெண்டு வாரமா ஏன் ஆபீஸ் வரல?”

“நோ டேவிட்.. ஐம் நாட் ஹாப்பி வித் த வே ஐயாம் ட்ரீட்டட் பை டெபாஷிஷ்… ஹீ திங்க்ஸ் டூ மச் ஆப் ஹிம்செல்ப், ஐ ஹாவ் அல்ரெடி ரிசைன்டு ப்ளீஸ் ரிலீவ் மீ.”

டெபாஷிஷ் வாய் விட்டுச் சிரித்தான். பின்பு டேவிட்டிடம், “ஓகே டேவிட் ரிலீவ் ஹர் சூன்.. பே ஹர் டில் தி லாஸ்ட் டே. நோட்டீஸ் பிரியட் எதுவும் டிடக்ட் பண்ண வேண்டாம்…லெட் மீ ஹாவ் ஹர் பர்சனல் பைல்” என்றான்.

அடுத்த இரண்டு நாட்களில் சுகன்யாவிற்கு செட்டில்மென்ட் நடந்தது. அவளுடைய பர்சனல் பைல் அமுதா மூலம் டேவிட்டிடம் திருப்பித் தரப்பட்டது.

ஒன்பது மாதங்கள் சென்றன….

கல்கத்தா சென்றிருந்த ஸீ.இ.ஓ. டெபாஷிஷ் அனைவருக்கும் ஒரு ஈ.மெயில் அனுப்பியிருந்தான். அதில் ‘தனக்கு வருகிற 15ம் தேதி கல்கத்தாவில் திருமணம் என்றும் அதையடுத்து 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ரிசப்ஷன் என்றும் ரிஷப்சனுக்கு அனைவரும் வர வேண்டும்’ என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தான்.

அனைவருக்கும் ஒரே சந்தோஷம். டெபாஷிஷ் கல்யாணம் பற்றித்தான் அலுவலகம் முழுவதும் ஹாட் டாப்பிக்.

ஞாயிற்றுக்கிழமை 24ம் தேதி எல்லோரும் ரிசப்ஷன் சென்றிருந்தனர். டெபாஷிஷ் திருமணம் செய்துகொண்டது சுகன்யாவை என்று தெரியவந்ததும் அனைவரும் அதிரிச்சியடைந்தனர். குறிப்பாக அமுதாவுக்கு பெரிய அதிர்ச்சி. ஏனோ தான் ஏமாற்றப் பட்டதுபோல் உணர்ந்தாள்.

அடுத்த நாள் திங்கட் கிழமை சுகன்யா தன் ராஜினாமா கடிதத்தை டேவிட்டிடம் கொடுத்தாள்.
டெபாஷிஷ்-சுகன்யா திருமணம், அதைத் தொடர்ந்த அமுதாவின் ராஜினாமா பற்றிய கிசுகிசுக்கள் அலுவலகத்தில் ரெக்கை கட்டி பறக்க விடப்பட்டன.

அடுத்த வாரம் அலுவலகம் வந்த டெபாஷிஷ் அமுதாவின் ராஜினாமாவை திரும்பப்பெற அவளிடம் பேசிப் பார்த்தான். அவள் பிடிவாதமாக மறுத்து விட்டாள். அலுவலக கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக உடனே ஒரு ஸ்டாப் மீட்டிங் வைத்தான்.

“சுகன்யாவின் ராஜினாமாவை அடுத்து தான் அவளது பர்சனல் பைலை வாங்கிப் பார்த்ததாகவும் அதன் மூலமாக அவளின் தந்தையைப் பற்றி தெரிந்து கொண்டதாகவும், பிறகு விசாரித்ததில் கல்கொத்தாவில் இருக்கும் தன் தந்தையும், சுகன்யாவின் தந்தையும் நெடுநாட்களாக நல்ல பிசினெஸ் பார்ட்னர்களாக இருப்பதையும் தெரிந்து கொண்டவுடன், தன்னால் வேலையை விட்டுப்போன, அழகும் அதிரடியுமாக சுதந்திரமாக சுற்றிவந்த சுகன்யா மேல் தனக்கு காதல் அரும்பியதாகவும்… தன் காதலை தெரிவித்தபோது அதற்கு சுகன்யாவும் சம்மதித்ததாகவும்” சொன்னான்.

அனைவரும் அவனுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர், அமுதாவைத் தவிர.

மறுநாள், சுகன்யா அலுவலகம் வந்து ராஜினாமாவைத் திரும்பப் பெறுமாறு அமுதாவுடன் ஒரு மணிநேரம் தனிமையில் மன்றாடினாள். அமுதா மசியவில்லை.

“நீங்க இப்ப ஸீ.இ.ஓ வின் மனைவி. பல சமயங்களில் நான் உங்களுடன் பேச வேண்டியதிருக்கும்… அவர் மீட்டிங்கில் இருக்கும்போது அவரை தொந்திரவு செய்யாதிருக்க நீங்க என்னிடம் ஏதாவது சொல்ல நேரிடும். அதற்கு நான் ஒத்துழைப்பு தர வேண்டும். நீங்க இப்போது ஆக்ஸியில் ஸ்டெனோ இல்லை….என்னால் உங்களிடம் கலகலப்பாக இருக்க முடியாது. ப்ளீஸ் என்ன விட்ருங்க சுகன்யா” என்றாள்.

ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு மிகத் திறமையான செக்ரட்டரி, சி.ஈ.ஓ.வைத் திருமணம் செய்துகொண்ட ஒரு முன்னாள் ஸ்டெனோவினால் தன் வேலையை ராஜினாமா செய்ய நேரிட்டது.
எதனால் ? பொறாமையா? அல்லது இதுதான் ஈகோ என்பதா? சுகன்யாவிடம் இருந்த பெருந்தன்மை அமுதாவிடம் இல்லாது போனதேன் ? அலுவலகத்தில் இதற்கு ஒருவருக்கும் விடை தெரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *