இப்படியும் மனிதர்கள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 5,801 
 

இன்று திங்கட்கிழமை, அதிகாலை நேரம் 6:30 மணியிருக்கும் அவசர அவசரமாக 6:35 ற்கு என் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் இருக்கும் பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஒஷ்லோ(Oslo) தலை நகரம் நோக்கி புறப்படும் பேரூந்தை பிடிப்பதற்காக வெளிக்கிட்டுக்கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வீடு இரண்டு மகிழூந்து, வழி எங்கும் போக்குவரத்து நெரிசல். அதைவிட சுங்க வரிக்காரரின் தொல்லை. அதனால் பணிக்குச் செல்லும்போது எப்பொழுதும் பொதுப்போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவது என் வழக்கம். இன்றும் வழமைபோல என் மன்னவரே மகிழூந்தில் ஏற்றிச்சென்று பேரூந்து வரும்வரை காத்திருந்து வழியனுப்பி வைக்கின்றார். 505 என்று இலக்கமிடப்பட்ட குருத்துப்பச்சை வர்ணம் தீட்டப்பட்ட பேரூந்து குறிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நிமிடங்கள் தாமதித்தே வந்தது.

அதிகாலை வேளை என்பதால் எந்தவித தங்கு தடையுமின்றி பேரூந்து சரியாக 25 ந்தே நிமிடங்களில் ஒஷ்லோவிலுள்ள( Oslo) பியொர்விகா(Bjørvika) என்னும் பேரூந்துதரிப்பிடத்தை வந்தடைகின்றது. அங்கிருந்து இரண்டு, மூன்று நிமிடங்கள் நடந்து சென்று தொடரூந்து நிலையத்தை அடையவேண்டும். சரியாக 7 மணி 4 நிமிடத்திற்கு லில்லெஷ்துறொம் (Lillestrøm) நோக்கிச்செல்லும் தொடரூந்தை பிடிக்க வேண்டும். என் நடையில் வேகம் இல்லை. அனேகமாக தொடரூந்து புறப்படும் நேரத்துக்கு ஒரு நிமிடம் இருக்கும் போதே தொடரூந்து கதவுகள் மூடப்பட்டுவிடும். இன்னும் சரியாக இரண்டு நிமிடங்களே இருக்கின்றன.

முன்பெல்லாம் இவ்வாறான தருணங்களில் நான் ஓடிச்சென்று தொடரூந்தை பிடித்திருக்கின்றேன். இவ்வாறு நடந்து கொள்வதால் அடிக்கடி காச்சல் தடிமல் வருவது வழக்கம். அதற்கு காரணமும் உண்டு. திடீர் என்று ஓடுவதால் உடலில் உள்ள அணுக்கள் எங்களுக்காக தொழிற்பட தொடங்குகின்றன. இவை எதிர்பாராமல் நடைபெறுவதால் ( stress) அணுக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உடல் நோய்எதிர்ப்பு சக்தியை இழந்து விடுகின்றது.

ஒவ்வொரு பத்து நிமிட இடைவெளிக்கொருமுறை தொடரூந்து லில்லெஷ்துறொம்(Lillestrøm) நோக்கிச் செல்லும். எனவே 07:14 ற்கு வெளிக்கிடும் தொடரூந்தை பிடித்துவிடலாம் என்ற எண்ணமே அப்பொழுது இருந்தது. குறிக்கப்பட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே தரிப்பிடம் 11(Zone) என்று இலக்கமிடப்பட்ட இடத்தில் டால்( Dal) என்ற இடம் நோக்கிச்செல்லும் தொடரூந்து தரித்து நிற்க, அதில் ஏறிக் கொண்டேன்.

வழமைபோல் அதிகாலை வேளை என்பதால் சனக்கூட்டம் அதிகமில்லை. எப்பவும் போல் சாளரத்தையொட்டி இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொள்கிறேன். யாரும் என்பக்கத்து இருக்கையில் இருக்கவில்லை என்பதில் அவ்வளவு சந்தோசம். புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட அந்த தொடரூந்தில் நவீன தொழில் நுட்பத்தோடு கூடிய சொகுசு இருக்கைகள், பளபளக்கும் சாளரங்கள், மின்குமிழ்கள், மின்பயணச்சீட்டுக்களை சரிபார்க்கும்( validation) கருவிகள், கோடைகாலத்தில் குளிரூட்டி, பனிக்காலத்தில் சூடாக்கி என அத்தனை வசதிகளை இந்த தொடரூந்து கொண்டிருந்தாலும். சூழலுக்கு ஒவ்வாத பல்வேறு விதமான வாசனைத்திரவியங்களை போட்டவர்களின் வாடையையும் , புகைத்துவிட்டு வருபவர்களிடமிருந்து வரும் மூச்சுக்காற்றையும் முட்டி மோதி சிதறவிட்டுக்கொண்டுதான் இந்த தொடரூந்து செல்வது வழக்கம். அதனாலேயே இவ்வாறு தனி இருக்கையை விரும்புவது வழக்கமாயிருந்தது.

பத்தே நிமிடங்களில் தொடரூந்து லில்லெஷ்துறத்தை( Lillestrøm) சென்றடைந்துவிடும் என்பதால் வழமைபோல் முகப்புத்தகத்தில் மூழ்கிவிட்டிருந்தேன். மாதாந்த பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கென்று தனியாக பல பெட்டிகள் இருக்கும். தொடரூந்தில் பயணச்சீட்டு வாங்குபவர்களுக்கென்று வேறு பெட்டிகள் இருக்கும். அவை தெளிவாக தொடரூந்து பெட்டிகளில் எழுதப்பட்டிருப்பது மட்டுமன்றி வெள்ளை நீலம் கலந்து வர்ணமிடப்பட்டிருக்கும் அப்பெட்டிகளின் கதவுகளும், கம்பிகளும், சாளரங்களும்.

என்னிடம் மாதாந்தத்திற்கான மின்பயணச்சீட்டு தொலைபேசியின் செயலியில் (app) தரவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நான் இருந்ததோ அந்த பயணச்சீட்டு இல்லாமல் வருபவர்களுக்கான பெட்டியில். இது சாதாரணம்தான். நாங்கள் விரும்பினால் ஏறிக்கொள்ளலாம். ஆனால் என்ன இந்த பயணச்சீட்டு பரிசோதிப்பவர்களின் தொல்லையை தங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். கையில் வைத்திருக்கும் மின்பயணச்சீட்டு பரிசோதனை கருவியால் ஒவ்வொருவருடைய பயணச்சீட்டு செயலியையும் (app) நுட்பச்சோதனை (scan) செய்து கொண்டே வந்த அந்த பரிசோதனையாளர் எனக்கு முன் இருக்கையில் இருந்த ஒரு இளைஞனை நெருங்கினார். எரித்திரியா அல்லது சோமாலியா நாட்டைச்சேர்ந்தவன் போல் தோற்றமளித்தான் அந்த இளைஞன். ஏதோ தனது மொழியில் தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஏதோ அவசரம்போலும். அந்த பரிசோதகர் அவன் அருகில் வந்ததை அவதானிக்காதவன் போல் தொடர்ந்தும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவன் பத்து பதினைந்து வினாடிகள் கழித்து தனது தொலைபேசியில் இருந்த மின்பயணச்சீட்டை காட்டினான். அவர் எதுவும் சொல்லாமலே அதை நுட்பச்சோதனை செய்துவிட்டு என்னிடம் வந்தார்.

நான் எனது தொலைபேசியில் இருந்த மின்பயணச்சீட்டை செயலியை( app) திறந்து தயாராக வைத்திருந்தேன். அதை நுட்பப்பரிசோதனை (scan) செய்தவர் “உன்னிடம் ஒஷ்லோவிலிருந்து (Oslo)தொடர்ந்து லில்லெஷ்துறொம் (Lillestrøm)செல்வதற்கான பயணச்சீட்டு இல்லை. நீ இப்பொழுது அதை வாங்கவேண்டும் என்றார்” . “நீ சொல்வது தவறு என்னிடம் அது இருக்கின்றது “என்று வலியுறுத்தியதுடன் அடுத்த பக்கத்தை தட்டிக் காட்டினேன். “காட்டினால் தானே எனக்கு தெரியும். இல்லாவிட்டால் நான் எப்படி தெரிந்துகொள்வது” என சற்று சினத்தோடு பதிலளித்துவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார்.

ஒரு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் நாங்கள் இருந்த பக்கம் திரும்பி வந்த அந்தப்பரிசோதகர். அந்தப்பையனிடம் சென்று “உன் பயணச்சீட்டை காட்டு” என்றார். அவன் அப்பொழுதும் தொலைபேசியில் கதைத்துக்கொண்டே இருந்தான். ஒரு சில வினாடிகள் கழித்து” நான் இப்பொழுதுதானே உன்னிடம் காட்டினேன்” என்றான் அந்த இளைஞன். “ எனக்கு நினைவில்லை, நீ மீண்டும் காட்டு” என்றார். அந்த பரிசோதகர். “ ஏன் நான் மீண்டும் காட்ட வேண்டும்” என்று மிகவும் மிருதுவான குரலில் கேட்டான் அந்த இளைஞன். “ நான் ஐந்து தடவை கேட்டாலும் நீ காட்டத்தான் வேண்டும்” என்றார் அவர் மிகவும் பயமுறுத்தும் குரலில். அந்த இளைஞன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவரும் அதை வாங்கிப்பரிசோதித்துவிட்டு தன்வழியே சென்றுவிட்டார்.

என்ன மனிதர்கள்? உண்மையிலேயே அந்த பரிசோதகருக்கு ஞாபகமறதி என்றால்கூட அது அவருடைய பிரச்சனை. பயணிகள் பல தடவை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தொழில் தர்மம் என்ற போர்வையில் பொது அதிகாரங்களை தம் கையில் எடுத்து தவறாக பயன்படுத்துபவர்கள் உலகில் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

– 22.ஆடி.2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *