இன்றைய தலைப்புச் செய்தி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,042 
 

‘‘அவசரமா தலைவரைப் பார்க்கப் போயிட்டிருக்கேன். கார்ல ஏறுங்க, பேசிட்டே போகலாம்!’’

பேட்டி காண வந்த நிருபரை காரில் ஏற்றிக் கொண்டார் மருதமுத்து. ‘‘தேர்தல் நெருங்கிருச்சு இல்லே, மூச்சு விட நேரமில்லே..!’’ என்றவரிடம், தான் கேள்விப்பட்ட விஷயங்களை எடுத்துவிட்டார் நிருபர்.

மருதமுத்துவின் முகம் கறுத்தது.

‘‘வேகமா ஓட்டுய்யா!’’ என்று டிரைவரிடம் கடுகடுத்தார்.

‘‘என்னைப் பத்தி அப்படியெல்லாம் சொல்றாங்களா…’’ என்றவர் பொங்கிப் பொங்கிப் பேசியவற்றையெல்லாம், கார் ஓட்டத்தில் கிறுக்கலாகக் குறித்துக் கொண்டார் நிருபர்.

‘‘தலைவரோட நிழல்லே வளர்ந்தவன் நான்… அவருக்குத் துரோகம் பண்ண அத்தனை சுலபமா மனசு வருமா? இன்னிக்கு நேத்திக்கு இல்லே, ஐம்பது வருஷமா கட்சிதான் எனக்குச் சோறு போடுது! தம்பி, நீங்க அப்ப பொறந் திருக்கக்கூட மாட்டீங்க! என் அப்பாவை பார்க்க வீட்டுக்கு வருவாரு தலைவர். நான் அரை ட்ரவுசர் போட்டுக்கிட்டு தோட்டத்துல பம்பரம் விட்டுக்கிட்டி ருப்பேன். ஒருநாள், ‘டேய் மருத! எப்படா நீ என் கட்சியில சேரப் போறே?’னு சிரிச்சுக்கிட்டே கேட்டாரு தலைவர். உடனே சாட்டையைக் கீழே போட்டுட்டு, சட்டையை எடுத்து மாட்டிக்கிட்டுத் தலைவரோட கார்ல ஏறினவன்தான்…’’

நிருபரின் குறிப்புநோட்டில் சாட்டையும், சட்டையும் குடியேறியது!

‘‘கண்ணாடி உடைப்பு போராட்டத் துல தலைவரைக் கைது பண்ணாங்க. அன்னிக்குத் தலைவரைத் தொடர்ந்து ரெண்டாவது ஆளா போலீஸ் வேன்ல ஏறினவன் நான். எட்டரை வருஷம் ஜெயில் வாசம். தலைவர்கிட்டே நான் அரசியல் அரிச்சுவடி கத்துக்கிட்டது அப்போதான். அரசியல் நெளிவு சுளிவுகளை அவர்கிட்டேர்ந்துதான் கத்துக்கிட்டேன். தேர்தல் நேரத்துல எப்படிக் காய் நகர்த்தணும்கறதையும் அவர்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். மகாபாரத கதைகளுக்கு வகுப்பு எடுத்தார். சகுனியையும், கூனியையும் எனக்கு அறிமுகப் படுத்தினார். அவருக்குத் துரோகம் பண்றதுன்னா…’’

மருதமுத்துவின் குரல் கரகரத்துக் கம்மியது. நிருபர் அதையும் அடைப்புக் குறிக்குள் குறித்துக்கொண்டார்.

‘‘தலைவர் தேர்தல்ல ஜெயிச்சு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்தார். என்னையும் அமைச்சராக்கி அழகு பார்த்தார். அமைச்சரவையில் எனக்கு மூணாவது இடம் கொடுத்தார். ‘என்ன மருத… திருப்திதானே?’னு கேட்டார். ‘என்ன தலைவரே இப்படிக் கேக்கறீங்க? முப்பதாவது இடம் கொடுத்து என்னை மூலைல உட்கார வெச்சாலும் ஓ.கே தான் தலைவரே!’னு சொன்னேன். அப்புறம், ஏதோ கோபத்துல மூணு தடவை என்கிட்டேயிருந்து அமைச்சர் பதவியைப் பறிச்சார்… நாலு தடவை திருப்பிக் கொடுத்தார். அதெல்லாமே சகோதர சண்டைதான்! அரசியல்ல கொடுக்கல் வாங்கல் சகஜம்தானே தம்பி?’’ என்ற மருத முத்துவின் காரின் வேகம் குறைந்தது.

‘‘இதோ, தேர்தல் நெருங்கிடுச்சி! என்னை இந்த கமிட்டியில போடலே, அந்தக் குழுவுல சேர்க்கலேனு என்னென் னவோ சொல்றாங்க. கட்சியில என்னை ஓரங்கட்டிட்டதா எழுதறாங்க இவங் களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்பற ஒரே பதில்…’’ என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மருதமுத்துவின் செல் ஒலித்தது. எதிர்முனை சொன்னதைக் கேட்டுப் பிரகாசமானார். ‘‘ஆமாங்கய்யா! நேத்து ராத்திரிதான் டீல் முடிஞ்சுது!’’ என்றவர், ‘‘டிரைவர், நிறுத்துய்யா வண்டியை’’ என்றார்.

‘‘தம்பி… தலைவர் வீடு வந்துடுச்சு… நீங்க இறங்கிக்குங்க… எனக்கு இது ஒரு முக்கியமான சந்திப்பு!’’ என்றார் மருதமுத்து.

நிருபருக்குத் தலை சுற்றியது!

‘‘சார்… இது உங்க தலைவர் வீடு இல்லையே… எதிர் முகாம் தலைவரின் வீடாச்சே..?’’

‘‘தெரியும் தம்பி! சர்வாதிகார போக்குல கட்சியை நடத்தற அந்தத் தலைவரோட சேர்ந்து இருக்க என் தன்மானம் இடம் கொடுக்கலே. தேர்தல் வந்துடுச்சு இல்லே, ஆதியிலேர்ந்து கட்சிக்கு விசுவாசமா இருந்த எனக்குத் துரோகம் பண்ணின தலைவருக்கு நான் யார்னு புரிய வைக்கிறேன்!’’

மருதமுத்துவின் கார் அந்தப் பங்களாவுக்குள் நுழைந்தது & புதிய அரசியல் அத்தியாயம் எழுத!

குறிப்பு நோட்டில் தலைப்புச் செய்தியை எழுதிக்கொண்டார் நிருபர்!

– மார்ச் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *