இதயங்களில் ஈரமில்லை !

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,267 
 

அது ஒரு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். அந்த ஹாஸ்டல் வார்டன் வேணி . நிச்சயமாக ஆறடி உயரம், அதற்கேற்ற பருமன் என்று அவளைப் பார்த்தவர்கள் யாரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் ஆகிருதி. அவளுடைய அந்த ஆகிருதி தான் அவளுக்கு அந்த ஹாஸ்டல் வார்டன் வேலையைப் பெற்றுத் தந்தது. ஆனால் அவள் மனசு பூ மாதிரி லேசானது என்பது வெகு சிலருக்கே தெரியும்.

வேணியின் சொந்த ஊர் திருநெல்வேலிப் பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம். சிறு வயதிலேயே தாயை இழந்தவள். தகப்பன் இன்னோருத்தியை மணந்து கொள்ள, அவள் படுத்தியபாட்டில் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தாள். அப்போது அவளுக்கு இருபது வயது. தெரிந்தவர்கள் வீடுகளில் வேலை செய்து வந்த போது தான் அந்த அம்மா துவங்கிய ஹாஸ்டலில் வார்டன் வேலை கிடைத்தது. அன்று முதல் அதுவே அவளுடைய நிரந்தர அடையாளமானது.

இதயங்களில் ஈரமில்லைஎத்தனை வகையான பெண்களை அவள் பார்த்துவிட்டாள். வரும் போது அப்பா, அம்மாவுடன் பூனை மாதிரி வருவார்கள். வந்த இரண்டு மாதங்களுக்குள்ளே அவர்களுடைய மினுக்கும் தளுக்கும். அப்பப்பா… வேணிக்குச் சிரிப்பாக வரும். எல்லாருமே இயற்கையாகவே அழகாக இருப்பதாகப் படும் அவளுக்கு. எதற்கு இந்த லிப்ஸ்டிக்? எதற்கு இந்த பேய் மாதிரியான கூந்தல்? என்றெல்லாம் கேட்க ஆசை தான்; ஆனால் கேட்க மாட்டாள். ஹாஸ்டலுக்கு வரும் பெண்களும் இவளோடு அதிகம் பேசியதில்லை.

யார் எங்கே போனாலும் கவலை இல்லை. சாயங்காலம் ஏழடிக்கும் போது எல்லாப் பெண்களும் அவரவர் அறையில் இருக்க வேண்டும் என்பது அந்த விடுதியின் எழுதாத சட்டம். அதை அனுசரிக்கவில்லையென்றால் வேணியின் கோபத்துக்கு ஆளாக வேண்டும். மற்றபடி வேணி அவர்கள் பகலில் எங்கு போகிறார்கள், வருகிறார்கள் என்பதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஏதாவது ஒரு பைக்கில் வாலிபனின் இடுப்பைப் பிடித்தபடி வரும் சில பெண்களும் இவள் வாசலில் நிற்கிறாள் என்று தெரிந்தால் கொஞ்சம் முன்னாலேயே இறங்கி விடுவது இவள் உருவத்துக்குக் கொடுக்கும் மரியாதை. அதற்கு மேல் அவளும் எதிர்பார்ப்பதில்லை.

தங்கும் பெண்களின் உள் விவகாரங்களில் இவள் ரொம்பவும் தலையிடக் கூடாது என்பது ஹாஸ்டல் நடத்தும் அம்மாளின் கட்டளை. அதை அவள் அப்படியே அனுசரித்தாள். ஒரு மாதிரி அவளுக்கு அந்த வேலை பிடித்திருந்தது.

அந்த நிலையில் தான் மலர்க்கொடி வந்து சேர்ந்தாள்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக சென்னைக்கு வேலைக்கு வந்த கிராமத்துப் பெண். படித்த பெண் என்றாலும் கிராமம் என்பதால் மலரின் நடை, உடை பாவனைகள் வித்தியாசமாக இருந்தன. வகிடெடுத்து ஒற்றைப் பின்னல் போட்டு நெற்றி நிறையத் திருநீறும் பூசி பயந்தபடி படியேறிய அவளை வேணிக்கு மிகவும் பிடித்துப் போனது. என்றோ இறந்து போன தன் தாயின் சாயலை அவளிடம் கண்டாள் வேணி.

மலர்க்கொடியின் அறையைக் காட்டிய வேணி வழக்கத்துக்கு மாறாக அவளுடன் கனிவாகப் பேசினாள்.

“”அக்கா எனக்கு தென்காசிப் பக்கம் இலஞ்சி.

ஆய்க்குடியில இருக்கற காலேஜ்லதான் நான் படிச்சேன். எங்கப்பா வயலை வித்து என்னியப் படிக்க வெச்சா

ருக்கா. அவருக்கு நாலு காசு சம்பாதிச்சுப் போடணும்னு தான் எனக்கு கேம்பஸ் இண்டர்வியூவுல கெடச்ச இந்த வேலையை ஒத்துக்கிட்டு வந்தேன். இங்க ஒரு ஐடி கம்பெனியில வேலை. மாசம் நல்ல சம்பளம். எனக்கு ஹாஸ்டல் செலவு போக மிச்சப் பணத்தை அனுப்புனா ஒரே வருஷத்துல எங்கப்பா வித்த வயலை வாங்கிடுவாருக்கா” என்று எல்லாவற்றையும் வந்த அன்றே வேணியிடம் கொட்டி விட்டாள்.

மலரின் நெல்லைத் தமிழும் , அவளின் உடையும் மற்ற பெண்களிலிருந்து அவளை சற்று தூரத்திலேயே நிறுத்தியது.

அதனால் வேணியின் நட்பு மலருக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. இருவரின் நட்பைப் பற்றி மற்ற பெண்கள் The Beauty and the beast என்று கிண்டல் செய்ததை அர்த்தம் தெரியாததால் விட்டு விட்டாள் வேணி.

மலர்க்கொடி சென்னை வந்து ஒரு மாதம் போயிருக்கும். மெல்ல மெல்ல அவள் மாற ஆரம்பித்தாள்.

முதலில் நல்ல சுத்தத் தமிழில் பேசி வந்தவள், இப்போதெல்லாம் ஸ்டைலாக ஆங்கிலத்தில் பேசுகிறாள். வேணியிடம், “”ஏங்க்கா இப்படி கிராமத்துக்காரியாவே இருக்கீங்க? நீங்களும் நல்ல இங்கிலீஷ் பேசுங்கக்கா? நான் சொல்லித்தரேன்” என்றாள். அதில் வேணிக்கு ஏகப் பெருமை. சொன்னது போல் மலர் சில வார்த்தைகளைக் கற்றும் கொடுத்தாள்.

நாட்கள் பறந்தன.

மலர் அபரிமிதமான தன் கூந்தலை குறைத்துக் கொண்டு வந்த போது அதிர்ந்தே போனாள் வேணி.

“”என்ன மலர் முடி வெட்டிட்ட? உன் முடி எவ்ளோ அழகா இருந்தது? அதை ஏம்மா குறைச்ச? என் கிட்டக் கூட சொல்லவேயில்லியே” என்று ஆதங்கத்தோடு கேட்டு விட்டாள். அதற்கு மலரின் பதில் வேணியை மீண்டும் ஒரு கூட்டினுள் தள்ளியது.

“”என் முடியக் குறைக்கறதுக்கு நான் யார் கிட்ட சொல்லணும்? இது தான் எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்குப் பிடிக்கல்லேன்னா பரவாயில்ல” என்று பட்டென்று பேசி விட்டாள்.

அன்று முதல் இருவருக்குள்ளும் ஓர் அழிக்க முடியாத கோடு உருவாகி விட்டது. இருந்தாலும் மலர்க்கொடியின் மேல்,வேணி வைத்திருந்த பாசம் மட்டும் மாறவேயில்லை. ஆனால் அவள் போக்கில் தெரிந்த மாற்றங்கள் வேணிக்குத் திகிலூட்டின.

ஆபீஸ் விட்டு ஆறரைக்கு உள்ளே நுழைந்தவள் காதில் ஏறும் செல்ஃபோன் , ராத்திரி லைட்டை அணைக்கும் வரை ஓயாது. என்ன தான் பேசுவார்களோ? ஆனால் அவள் பேசுவது வெளியில் யாருக்கும் கேட்கவே கேட்காது.

யாரோ ஓர் இளைஞனின் பின்னால் தொற்றிக் கொண்டு வருவதும் , ஹாஸ்டலில் சாப்பிடாமல் அவனோடே சென்று சாப்பிடுவதுமாக இருந்தாள். ஞாயிறு ஆனால் போதும், அந்த பைக் இளைஞன் அவனோடு மற்ற நண்பர்கள், அந்த நண்பர்களுடன் பின்னால் துப்பட்டா மூடிய நண்பிகள் என்று ஒரு கூட்டம் காலையில் கிளம்பும். முகமூடிக் கொள்ளைக் கூட்டம் என்று துப்பட்டாவால் முகத்தை மூடிப் பயணிப்பவர்களை வேணியோடு சேர்ந்து கேலி செய்த மலர், தானே அந்தக் கொள்ளைக் கூட்டத்தில் ஒருத்தியான வேதனையை வேணியால் தாங்க முடியவில்லை.

அன்று மலர் திரும்பியதும் வேணி அவளை அருகில் அழைத்தாள்.

“”அம்மா மலர் நான் உன் கூடப் பொறந்த பொறப்பு மாதிரிம்மா. நீ போற பாதை சரியில்ல. நீ போடற உடுப்பும் வர வர சகிக்கல. நாமெல்லாம் கிராமத்துலருந்து வந்தவுங்க. நம்ம மனசே வேறம்மா நீ என்ன சொன்ன செலவைக் கொறச்சிக்கிட்டு அப்பாவுக்குப் பணம் அனுப்பி வயலை மீட்கணும்னு சொன்னியேம்மா? இப்படி செலவு பண்ணினா வயலை மீட்க முடியுமா?”

“”உங்க வேலை என்ன உண்டோ அதை மட்டும் பாருங்க. எங்கப்பாவுக்கு நான் பணம் அனுப்பிக்கிட்டுத்தான் இருக்கேன். இதுக்கெல்லாம் என் பாய் ஃபிரெண்டு தான் செலவு பண்றான். அதனால செலவைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நான் ஒண்ணும் இப்போ கிராமத்துப் பொண்ணு இல்ல. மத்தவங்க விஷயத்தில தலையிடாத நீங்க, ஏன் என் விஷயத்துல மட்டும் தலையிடுறீங்க? ரொம்பப் பர்சனலாப் பூந்து வந்தீங்கன்னா ஓனர் கிட்ட கம்பிளைண்ட் பண்ணிடுவேன்” என்று எடுத்தெறிந்து பேசி விட்டு உள்ளே போய் விட்டாள்.

இடிந்து போனாள் வேணி.

நாலு நாட்களாகேவே வேணிக்கு யாருக்கோ ஏதோ கெடுதல் நடக்கப் போகிறது என்று தோன்றிய வண்ணம் இருந்தது. முன்னால் ஒரு முறை அப்படித் தோன்றிய போது தான் அவள் அம்மா இறந்தாள். இப்போது என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டத்திலேயே இருந்தாள். நாலு நாள் கழித்துத்தான் ஞாயிற்றுக்கிழமை என்பதையும் மறந்து விட்டாள்.

அன்றும் வழக்கம் போலத் தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளியில் கிளம்பிய மலரைப் பார்த்ததும் வேணியின் பதட்டம் அதிகரித்தது.

“”நீ இன்னிக்குப் போக நான் விட மாட்டேன்”

“”நீங்க என்ன எனக்குப் பெர்மிஷன் தர்றது? நான் ஹாஸ்டல் அனுமதிக்கற டயத்துக்குள்ள வந்துடுவேன்”

“”சொன்னாக் கேளு மலர். இன்னிக்கு ஒரு நாள் போகாதே. நாளைக்கு வேணாப் போ”

“”நீங்க யாரு அதைச் சொல்ல? நான் போகத்தான் போவேன்” என்றாள் திமிராக.

அன்று வேணிக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை, அப்படியே குண்டுக்கட்டாக மலரைத் தூக்கிக் கொண்டு போய் அவள் அறையில் விட்டவள், மலர் எழுந்து வருவதற்குள் அறையைப் பூட்டி சாவியைக் கொண்டு வந்து விட்டாள்.

மலரை எதிர்பார்த்துக் கீழே நின்றிருந்தவர்களிடம்,””மலர் இன்று வர மாட்டாள். அவளுக்கு உடம்பு சரியில்லை” என்று சொல்லி போகச் சொல்லி விட்டாள்.

அதிர்ச்சியிலிருந்து விடுபட மலருக்கு சில நிமிடங்கள் பிடித்தன.

தன் நண்பர்களுக்குத் தொடர்பு கொண்டாள் செல்ஃபோனில். அவர்கள் உடம்பு சரியில்லையென்றால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விரைந்து கொண்டிருந்தனர்.

மலருக்கு வேணியின் மேல் ஆத்திரமான ஆத்திரம் பொங்கியது . தன் தோழர்கள் தன்னை அவ்வளவு எளிதில் விட்டு விட்டுப் போனது அவளுக்கு அவமானமாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் வேணி என்று அவள் மேல் காழ்ப்பு மேலும் பொங்கியது. கத்திப் பார்த்தாள். ம்ஹூம் திறக்கவேயில்லை. மலருக்கு வந்த கோபத்தில் நேரே ஹாஸ்டல் ஓனருக்கே ஃபோன் செய்து வேணி தன்னை அடைத்துப் போட்ட விவரத்தைக் கூறி விட்டாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஹாஸ்டல் அமளி துமளிப் பட்டது. வேணியிடமிருந்து சாவி வாங்கி ஓனரே திறந்து விட்டு மலரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். வேணியை அந்த நிமிடமே வேலையை விட்டுத் தூக்கி விட்டதாகச் சொல்லி ஒரு தொகையைக் கொடுத்து அனுப்பி விட்டாள் அந்த அம்மாள்.

வேணிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.

“”மலர் எனக்கு இந்த வேலை போனா, இன்னோரு ஹாஸ்டல்ல வேற வேலை கிடைக்கும். எனக்கு அதைப் பத்திக் கவலையே இல்ல. ஆனா நீ போற பாதையை நெனச்சுப் பாரு. நான் உன்னை அடச்சிப் போட்டது உன் நல்லதுக்குத்தன்னு என் உள் மனசு எங்கிட்ட சொல்லுது. அதனால் நான் உன்கிட்ட மன்னிப்புக் கேக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டு தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு கம்பீரமாகப் படியிறங்கினாள் வேணி.

மறுநாள் பேப்பரில் ஈசிஆர் ரோட்டில் குடித்து விட்டு வண்டி ஓட்டிய நான்கு வாலிபர்கள் பைக்குகளுடன் ஆக்சிடெண்டான நிகழ்ச்சி எல்லாப் பேப்பரிலும் முதல் பக்கத்தில் வந்தது. அதில் இறந்து கிடந்த எல்லோரையும் மலருக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது.

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *