ஆறுமுகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,535 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மனப்பூர்வமான நட்பு என்பது சுயநலத்திற்கு அப்பாற் பட்ட ஒரு உன்னதமென்று, ஆறுமுகம் எனக்கு எழுதிக் கொடுத்த ஆட்டோ கிராபை நான் இன்னமும்பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆங்கிலத் தில் எழுதப்பட்ட வாசகம். மணி மணியான கையெழுத்து ஆறு முகத்தினுடையது. ஒவ்வொரு எழுத்தையும் சித்திரக்காரன் ஒருவனைப் போல – செதுக்கிச் செதுக்கி எழுதினாற் போன்ற அலங்காரத்துடன் – ஆறுமுகம் எழுதியிருந் தான். நான் எனது முதல் அரிச்சுவடி எழத்தாக ஆங்கில ‘ஏ’யைத்தான் எழுதி னேன் என்று ஆறுமுகம் சொன் னதும், அந்த வசீகரமான மழைத்தூற்றல் நாளும் தத்ரூப மான ஓவியம் ஒன்றினைப் போல இன்னமும் என் மனதில் பளீச்சென்று தெரிகின்றது. நீலத்திலும் தேயிலைப் பச்சை யிலும் மூழ்கிய மலைகளைத் தனது இடது கண்ணை லேசா கச் சுருக்கிப் பார்த்தவாறே ஆறுமுகம் பல தடவைகள் தனது கதையை எனக்குக் கூறி யிருக்கிறான்.

நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுகின்ற இடம் மிகவும் அமைதியானது. பேராதனைப் பூங்காவின் தொங்கு பாலத்தின் முடிவுப்பகுதி அந்த இடம். மூங்கில்கள் பச்சையாயும் மஞ்சளாகவும் அடர்ந்து செழுமையாய் பரந்திருக்கிற மகாவலி கங்கையின் கரைப்பகுதி. மஞ்சளும் நீலமும் வினோத வண்ணங்களுமாய் மனதை அள்ளியெடுத்து மணங்கமழுகின்ற பூக்கள் சிலிர்த்தபசுஞ் செடிகொடிகள். நுரை சிதறி நீர்சுழித்துப் பெருகியோடுகின்ற மகாவலி ஆற்றின் அருங்கொடைகளா கவே அந்தப் பூக்களைக் குறிப்பிட்டுச் சொல்லுவான் ஆறுமுகம்.

இப்படிப் பேசுகின்றபோது அவனது முகம் எழிலான பரவசம் கொள்ளும். வார்த்தைகளும் கவிதையாய்ப் பெருகிப் பிரவகிக்கும். ஷேக்ஸ்பியர், ஷெல்லியின் கவிதை வரிகள் வெகு லாவகமாய் அவனுக்குள் வந்து நின்று சேவகம் செய்யும். அப்போது என்னெதிரே இயல்பான கவிஞனாக அவன் தரிசனம் பெறுவான். கீழே விரைந்தோடும் ஆற்றுப் பெருக்கினைப் போன்று அவனது வார்த்தைகளை உணர்ந்து நான் பிரமித்துப் போயிருப்பேன். மனம் நெகிழ்ந்து தத்தளிக்கும். பேசாமலே மலைகளைத் தொட்டுப்படியும் சூல்கொண்ட மேகங்களைப் பார்த்தபடியே இருப்பேன். மௌனமே அப்போது உகந்ததாக இருக்கும்.

“யோ …”

என் பேரின் முதலெழுத்தால் அழைத்து என்னைச் சுயத்துக்குக் கொண்டு வருவான் ஆறுமுகம்.

எனது புன்னகையில் வார்த்தைகளை உணர்ந்தவன் போல, ஆனந்தமாக என்னைப் பார்ப்பான் அவன்.

“ஆறுமுகம், உமது நண்பனாக இருப்பதையிட்டு எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? இந்த வயதுக்குள் எவ்வளவு வியக்க வைக்கும் ஞானம்!”

ஆறுமுகம் என் கைகளைப் பற்றுவான். கண்கள் மலர்ந்திட என்னை ஊடுருவுவான்: “யோ, உண்மையாகவா?”

“நான் சொல்வது நூறு வீதமும் உண்மை . என் நண்பன் இன்னும் சில வருஷங்களில் எல்லாரும் போற்றும் கல்வியாளன்

ஆவான். பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்ப்பான்…”

லேசாக ஆறுமுகத்தின் கண்கள் பனிக்கும். குரல் தளதளக்க வெறுமையைப் பார்த்தவாறே சொல்வான்:

“யோ… இந்த பெருமையெல்லாம் எனக்கு உரியதல்ல. மார்க்கரெட் சீமாட்டிக்குத்தான் உரியது. நான் இப்போது பேசிக் கொண்டிருக்கும் ஆங்கிலம், இந்தக்கல்வி, இப்போதைய வாழ்க்கை எல்லாவற்றுக்கும் அந்தச் சீமாட்டிதான் காரணம்…”

மார்க்கரெட் சீமாட்டி தன் எதிரேயே நிற்பது போன்ற உணர்வுடன் பவ்வியமும் மரியாதையும் தொனிக்கின்ற குரலிலே கூறிக்கொண்டு போகும் ஆறுமுகத்தின் வார்த்தைகள் எப்போதும் ஒருவிதமாகத்தான் முடியும்.

“அந்த அம்மா இல்லாட்டிப் போனா ஏதாவது ஒரு தேயிலைக்காட்ல, லயக்காம்பராவில நான் இருந்திருப்பேன்…”

ஆறுமுகம் தனதுகதையை எனக்கு முழுதாகக் கூறியிருக்கின்றான். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சொன்னதையே திரும்பவும் சொல்லி இருக்கிறான். அப்போதெல்லாம் எந்த முணுமுணுப்புமின்றி நான் புதிதாக அவன் சொல்கிறாற் போல அவற்றைக் கேட்டிருக்கிறேன். பிரியமானவர்களின் வார்த்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டாலும் என்றைக்கும் சந்தோஷமும் உற்சாகமும் உண்டாக்குகின்றவைதான். இந்த அனுபவத்தோடு கேட்கிற போது, மார்க்கரெட் சீமாட்டி பற்றி அவன் சொல்கிற வார்த்தை கள் எல்லாவிதத்திலும் பொருந்தத் தக்கவையே.

மார்க்கரட் சீமாட்டியின் புகைப்படத்தை அவன் மிகவும் பத்திரமாக பிரெமிட்டு வைத்திருக்கின்றான். வெள்ளைக்காரப் பெண். கறுப்பு வெள்ளைப் படத்திலும் பூனைக் கண்களில் தீட்சண்யம் சுடரிட்டது. கம்பீரமான புன்னகை. உதட்டின் கீழ்ப் புறத்திலே தெரிந்த சிறிய மச்சமும் முகவசீகரத்தை மேலும் மெருகுபடுத்திற்று. நேரில் பார்த்தால் இன்னும் அழகோடும், கனிவோடும் இருப்பாள் என்று ஆறுமுகம் சொன்னான்.

ஆறுமுகத்துக்கு மார்க்கரட் சீமாட்டி இவ்வளவு உதவி செய்த போது அதை அவளது கணவன் வெலிங்டன் ஒத்துக் கொள்வானா என்ற கேள்வி என் மனதில் எழுந்தபோது சொல்லி

வைத்தாற் போல அதற்குப் பதில் சொன்னான் ஆறுமுகம்:

“சீமாட்டி புருஷன் அதிகம் பேசமாட்டார். ஆனா அவ என்ன சொன்னாலும் மறுக்க மாட்டார். தோட்ட மக்களில் ரொம்ப இரக்கமாயிருந்தவர்…”

சில கணங்கள் மௌனமாயிருந்த ஆறுமுகம், ஆங்கிலத்திலேயே தொடர்ந்தான்: –

“தோட்டத்தை விற்றுவிட்டு அவர்கள் புறப்பட்ட போதுதான் என்னால் அவரை முற்றாக உணர முடிந்தது. தனது தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்த எல்லாத் தொழிலாளரையும் தனது பங்களாவிற்குக் கூப்பிட்டார். நிறையப் பணம் கொடுத்தார். ஒவ்வொருவரையும் பாராட்டினார்… புறப்பட அரை மணி நேரத்தின் முன் ஸோபாவில் மிகவும் கவலையோடு இருந்தார். பின்னர் தனது துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு, பங்களாவின் பின் பக்கம் உள்ள டென்னிஸ் மைதானத்துக்குச் சென்றார். மார்க்கரெட் சீமாட்டி வாடிய முகத்துடன் ஸோபாவில் உட்கார்த்திருந்தார்.

சில கணங்களில் துப்பாக்கி வேட்டுச்சத்தம் தொடர்ந்து கேட்டது. நான் திடுக்கிட்டுப் போய் விட்டேன். குதிரை, நாய்களின் வீரிடல் என்னைத் துயரம் கொள்ள வைத்தது. மௌனத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவர் உள்ளே வந்தார். அங்கும் இங்குமாக நடந்துவிட்டு ஸோபாவில் உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார். பிறகு தன்னையே சோகமாய் நோக்கிக் கொண்டிருந்த சீமாட்டியில் அவரது பார்வை சென்றது.

_ “டார்லிங், இதுவரை காலமும் அன்பாய் வளர்ந்த நான்கு பிராணிகளையும் சுட்டுக் கொன்றுவிட்டேன். பியாரிக் குதிரைதான் நம்ப முடியாதது போல என்னைப் பார்த்தது. அதனால் இரண்டாவது முறையும் சுட்டேன். எவ்வளவு அருமையாக அன்பாக வளர்த்த பிராணிகள். வேறு வழியில்லை. இவற்றை நாம் இங்கே விட்டுச் சென்றிருந்தால் யார் எம்மைப் போல உணவு கொடுத்து அன்பாக வளர்க்கப் போகிறார்கள். உணவின்றி நோய்ப்பட்டு அலைந்திருக்கும். லண்டனில் எம்மை இவை பற்றிய கவலைகள் அலைத் திருக்கும். இனி அதில்லை … ஆனால் அறுமுகம் பற்றி எனக்குக் கவலை. இந்தத் தோட்டப் பையனை இத்தனை நன்றாக வளர்த்தோம். நாம் போன பிறகு இவனை யார் கவனிப்பார்கள்? ஆனால் என்ன செய்வது, குதிரையையும், நாயையும் போல அறுமுகத்தைச் சுடமுடியுமா?…’

அவர் சொன்னதைச் சீமாட்டி விரும்பவில்லை என்பதை முகம் சொல்லிற்று. என்னைப் பார்த்து, “அறுமுகம் உனக்குப் போதிய பணம் பாங்கில் போட்டிருக்கிறேன். கவனமாகப் படித்துப் பெரிய மனிஷன் ஆக வேண்டும் நீ, என்ன” என்றாள். நான் கண்கலங்கத் தலையை அசைத்தேன். சீமாட்டி பின்னர் மௌனமாகக் கணவரைப் பார்த்தாள்…. அவர்கள் தோட்டத்தை விட்டுப் புறப்பட்ட போது நான் விம்மிவிம்மி அழுதேன். ஒருவாரமாக அழுதேன். அதற்கு முன்னரோ பின்னரோ நான் இப்படி அழுது கலங்கியதில்லை….

ஆறுமுகம் பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டான். அவனது உதடுகள் லேசாக நடுங்கின.

1981 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவனாகச் சென்றபோதுதான் ஆறுமுகத்தை முதன் முதலாகச் சந்தித்தேன். எனது அறை நண்பனாக ஆறுமுகம் வந்தான். அதிகமாகப் பேச மாட்டான். இடது கண்ணை லேசாகச் சுருக்கிக் கொண்டு சிரிப்பான், பிள்ளைச் சிரிப்பு. எப்போது பார்த்தாலும் ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரன் எழுத்துக்களிலேயே மூழ்கிப் போயிருப்பான். டேல்கார்னகியில் அதிக பரிச்சயம் உள்ளவன்.

மலையகத் தோட்டத் தொழிலாளரின் வாழ்வைப் பற்றி மிகவும் உருக்கமாகச் சொல்லுவான். இந்தத் தேசத்தை வளமாக்கிய அவர்கள் தேயிலைச் செடிகளுக்கே பசளை ஆகிக்கொண்டிருக் கிறார்கள் என்று சொல்லும்போது எனது நெஞ்சு துயரம் செறியக் கனக்கும். கலகாவிலிருந்து பேராதனை வழியாகக் கண்டிக்குச் செல்லும் பஸ் வண்டிகளில் அவர்களை நான் உற்றுக் கவனித்திருக்கின்றேன். அபாக்கியசாலிகள், வஞ்சிக்கப்பட்ட, தோட்டக்காட்டைத் தவிர வேறு எதையும் அறியாத மக்கள்.

கரும்புத் தோட்டத்திலே கவிதையில் பாரதி கூறிய மொரிஷியஸ் தோட்டத் தொழிலாளரின் அவலம் என் மனதில் அப்படியே ஞாபகம் வந்தது. ஆறுமுகத்திடம் சொன்னேன். மௌனமாகவே கேட்டுக் கொண்டிருந்தான். அன்று மாலையில், சி.வி. வேலுப்பிள்ளை மலையகத் தோட்டத் தொழிலாளிகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கவிதைத் தொகுதியைக் கொடுத்தான். மூன்று கவிதைகளுக்கு மேல் படிக்க முடியவில்லை. லயங்களில், தேயிலைத் தோட்டத்தில் அந்த மக்கள் படும் துயரம் கவிதை வரிகளில் இரத்தச் சேறாய் வழிந்து என் அமைதியைக் குலைத்தது. நெஞ்சு ரணமானதை உணர்ந்தேன்.

நித்திரையை இழந்த நான் என் அமைதியின்மைக்கு வடிகால் தேடமுயன்றேன். எழுந்து கட்டிலில் உட்கார்ந்தேன். மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்பட்டு, தேயிலைக்குப் பசளையாய், உரமாக ஆகிக் கொண்டிருக்கும் அந்த மக்கள் பச்சையும் சிவப்புமாக என் கண்ணெதிரே வந்தார்கள். என் மனதில் வார்த்தைகள் சத்தமிட்டன, எழுது! என்றன. வெள்ளைத்தாள் ஒன்றை எடுத்தேன். ‘மலைக்குள் மாண்டிடவோ அவர் இங்கு மனிதராகி வந்தார்?” என்று தலையங்கமிட்டேன், அறுபத்து நாலு வரிகளில் ஒரே மூச்சில் கவிதை எழுதி முடித்தேன், திரும்பிப் படித்துப் பார்த்தபோது எனக்கே ஆச்சரியமும், வியப்பும் உண்டாயிற்று. காலையில் எழுந்து ஆறுமுகத்திடம் இந்தக் கவிதையைக் கொடுத்தேன். கவிதையைப் படித்துவிட்டு ஆறுமுகம் என்னை வியப்போடு நிமிர்ந்து பார்த்தான். கைகளைப் பற்றிக் கொண்டு மௌனமாகவே இருந்தான். கணப் பொழுதில் சுயத்திற்கு மீண்டான்.

“அருமையான கவிதை” என்றான். அன்றுதான் தன்னுடைய குழந்தைப் பருவக் கதையை அவன் என்னிடம் சொன்னான்.

ஆறுமுகம் பிறந்தபோது அவனுடைய தாய் இறந்து போய்விட்டாள். சரியான மருத்துவ வசதி இன்றியே இந்த மரணம் சம்பவித்தது. அவனுடைய தாத்தா அவன் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தார். மனைவி இறந்த ஒரு வருஷத்திலேயே ஆறுமுகத்தின் தகப்பனும் விபத்தில் சிக்கி இறந்துவிட்டான். தாத்தா மலையப்பன் தோட்டத்துரை பங்களாவில் மரஞ்செடிகளைப் பராமரிக்கும் வேலை செய்துவந்தார். ஆறுமுகத்திற்கு ஆறு வயசாயிற்று. தோட்டத்துரை வீட்டில் ஆறுமுகத்தையும் வேலைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார் மலையப்பன். ஆறுமுகம் துரை வீட்டில் சின்னச்சின்ன வேலைகள் செய்தான். சீமாட்டி மார்க்கரெட்டின் செருப்புகளை எல்லாம் அழகாகவும், பளபளப்பாகவும் அவன் ‘பாலிஷ்’ செய்வான். அவன் ‘பாலிஷ்’ செய்வதையே வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பாள் மார்க்கரெட். அவனுடைய சுறுசுறுப்பும், வேலையில் உள்ள கவனமும் அவளை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும். அவனிடம் சின்னச் சின்ன ஆங்கில வார்த்தைகளால் அவள் கேள்வி கேட்பாள். தயங்கித் தயங்கிப் பேசத் தொடங்கியவன் ஒரு வருஷத்திலேயே சுத்தமான ஆங்கிலத்தில் பதில் சொல்லத் தொடங்கினான். அவனது உச்சரிப்புச் சுத்தம் அவளைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும்.

ஒருநாள் அவள் அவனிடம் கேட்டாள், “அறுமுகம் உனக்குப் படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறதா?”

ஆறுமுகம் இடது கண்ணைச் சுருக்கிக்கொண்டு அவளை ஆர்வமாகப் பார்த்தான். முகத்தில் நிறைந்த உற்சாகம்.

“ஆம், ஆம் எனக்கு மிகவும் ஆசை.”

அவனது உற்சாகமான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மார்க்கரெட் தீர்மானமான குரலிலே சொன்னாள்.

“நாளையில் இருந்து நீசாயந்தர வேளைகளில் படிப்பதற்கு ஒழுங்கு செய்கிறேன்” என்றாள்.

ஆறுமுகம் ஆனந்தத்தில் திணறினான். எதிரே தெரிந்த மேகக் குவியல்கள் தன்னை உயரஉயர அள்ளிச் செல்வது போல் பரவசம் கொண்டான். கண்கள்கூட அவனை அறியாமலே லேசாகக் கலங்கின. அவனுடைய படிப்பு ஆர்வமும் உற்சாகமும் எவ்வித சிரமமும் இன்றி அவனைக் கெட்டிக்கார மாணவன் ஆக்கின. எல்லோருக்கும் வியப்பான ஒரு மாணவனாக விரைவிலேயே அவன் அறியப்பட்டான்.

பல்கலைக்கழகத்தில் அவன் படிக்க வந்து முதலாவது மாதத்திலேயே லண்டனில் இருந்து அவனுக்கு கடிதம் வந்திருந்தது. மார்க்கரெட் எழுதியிருந்தாள். கடிதத்தை நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம் பத்திரமாக அதை மடித்து வைத்தான்.

“யோ, எனக்கு இரண்டே இரண்டு ஆசைகள் தான் இருக்கின்றன. நான் நன்றாகப் படித்து முடித்து சம்பாதிக்க வேண்டும். இந்தப் பணத்தை சேமித்து வைத்து லண்டனுக்குப் போய் மார்க்கரெட் சீமாட்டியைப் பார்த்து என்னுடைய நன்றியைச் சொல்ல வேண்டும். பின்னர் மீண்டும் எனது மண்ணிற்குத் திரும்பி வந்து என்னுடைய மக்களுக்காக நான்

என்னை அர்ப்பணம் செய்வேன்.”

1972 ஆம் ஆண்டில் நான் கண்டிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒழுங்காக எனக்குக் கடிதம் எழுதிவந்த ஆறுமுகத்திடம் இருந்து ஒரு வருஷமாகக் கடிதம் வராதது எனது மனதை உறுத்திக் கொண்டிருந்தது.

பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறிய நான் ஆசிரியனாகத் தனியார் பள்ளியில் சேர்ந்து கொண்டேன். ஆறுமுகம் பல்கலைக்கழக நூலகத்திலேயே பயிற்சி பெற்று உதவி நூலகர் ஆனான்.

அவன் எனக்கெழுதிய ஒவ்வொரு கடிதமும் ஆங்கில மொழியிலேயே எழுதப்பட்டது. மணி மணியான எழுத்தில் கவிதை போல அந்தக் கடிதங்கள் மனதில் அடையாளம் கொள்ளும். அவைகளை நான் மிகவும் பத்திரமாகச் சேர்த்து வைத்திருந்தேன்.

பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்ற நான் ஆறுமுகத்தைப் பற்றி விசாரித்தேன். அப்போது நான் விசாரித்தவர் என்னை லேசான வேதனையோடு பார்த்தார்.

“நீங்கள் யார்?’

நான் சொன்னேன். அவர் பரிவோடு எனது கையைத் தொட்டார்.

“ஆறுமுகம் இறந்துபோனது உங்களுக்குத் தெரியாதா?”

என்னால் அந்த வார்த்தைகளை எதிர்கொள்ள முடியவில்லை. இதயம் துண்டுதுண்டாக வெடிப்பது போன்ற வலியை உணர்ந்து கொண்டேன். எனது நா வரண்டது. கண்கள் தன்னையறியாமலே கலங்கின. விம்மல் நெஞ்சினுள் சுழித்து அமுங்கிப் போயிற்று.

தளர்ந்து போன நான் அங்கிருந்து நடந்தேன்.

ஆறுமுகம் பேராதனைப் பூங்காவில் தொங்கு பாலத்தின் முடிவிலே உட்கார்ந்திருந்தான். இன்னும் மூன்று மாதங்களில் அவன் லண்டனுக்குப் போவதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்திருந்தான். அதைப் பற்றியே யோசனை பண்ணிக் கொண்டிருந்தான். யோசனையில் நேரம் போனதே தெரிய வில்லை .

திடுக்கிட்டவனாய் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டான். பல்கலைக்கழகத்தில் இப்போது நிறைய நெருக்கடிகள். இராணுவத்தினரும், பொலிசாரும் தீவிரவாத இளைஞர்களைப் பல்கலைக்கழக மண்டபங்களில் வேட்டை

யாடத் தொடங்கியிருந்தனர்.

எல்லாத் தேடுதல்களும் இரவிலேயே நடந்தன. பிடிபட்டவர்கள் பற்றி ஆறுமுகமும் அரசல் புரசலாகக் கேள்விப்பட்டான். சேகுவேரா இயக்கம் பற்றி அப்போதுதான்

அறிந்து கொண்டான்.

வீதியில் வந்து கொண்டிருந்த ஆறுமுகத்தை வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் வழிமறித்து பரபரப்போடு கூறினான்.

“எமர்ஜென்சி போட்டிருக்கிறாங்க. என்னோடு வந்திடுங்க… ம்ம்…”

ஆறுமுகம் சட்டென்று மோட்டார் சைக்கிளில் ஏறினான். கணப்பொழுதுதான். எதிரே இராட்சதன் போல ஜீப் ஒன்று. இளைஞன் அவசரமாக மோட்டார் சைக்கிளை உதைத்தான்.

அவ்வளவுதான்.

துப்பாக்கி வேட்டுகள் சடசடத்தன.

ஆறுமுகமும் இளைஞனும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

இந்த ஆண்டும் பேராதனைக்குச் சென்றிருந்தேன். புறப்படும் போது பேராதனைப் பூங்காவுக்குப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அங்கு போனதும் அந்த முடிவு மாறிப் போயிற்று. நடந்து செல்கையில் பழைய நினைவுகள் மேகக் கூட்டங்களாக நெஞ்சை அடைத்தன. பெருமூச்சு சீறிற்று.

தொங்குபாலத்தின் வழியாக நடந்து போய்க் கொண்டிருக்கையில் ஆறுமுகமும் நானும் உட்கார்ந்து பேசிய இடத்தினைப் பார்த்தேன். மூங்கில் மரங்களும் செடிகொடிகளும் லேசாக மங்கி மஞ்சள் படிந்திருந்தன, வெய்யிற் காலம் என்பதால்.

இப்போது இந்த இடத்தில் இருவர், தகப்பனும் மகனுமாய் இருக்க வேண்டும், வந்து உட்கார்ந்து கொண்டனர்.

தகப்பனைப் பார்த்தேன், ஆச்சரியம் மேலிட்டது, அப்படியே ஆறுமுகத்தை ஒத்த தோற்றம். இடது கண்ணை அரை குறையாக மூடியவாறு முகம் மலரச் சிரிக்கிற அதேசிரிப்பு. என்னை மறந்தவனாய் அவரையே பார்த்துக் கொண்டு நின்றேன். இப்போது தகப்பனும் மகனும் என்னை வினோதமாகப் பார்த்தனர்.

நான் சுயநினைவுக்கு வந்தேன். மனதுள் ஒரு குரல் கேட்டது. “ஆறுமுகம் உயிரோடு இருந்தால் அவனுக்கும் நிச்சயமாக இதேபோல ஒரு மகன் இருப்பான்.”

(குறிப்பு: மார்க்கரெட், அவள் கணவன் வெலிங்டன் – ஆறுமுகத்தை அறுமுகம் என்றே அழைப்பர். அவ்விதமே எழுதியுள்ளேன். அது எழுத்துப் பிழையல்ல.)

– 1997

– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *