ஆனந்தக் கண்ணீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 8,383 
 

எங்கள் கிராமத்துக்கு பள்ளிக்கூடம் வேண்டுமென்று பல அறப் போராட்டங்களைச் செய்ததற்கு அரசாங்கம் செவிமடுத்து ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கூடம் ஒறைக் கட்டிக் கொடுத்தது. இந்த அறப் போராட்டங்களுக்கு பக்க பலமாகவும், செயல் ஊக்கியாகவும் இருந்தவர்கள், எங்கள் ஊரில் அன்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சில கொள்கைவாதிகள்தான். அரசாங்கத்தின் பார்வையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றி ஒரு போதும் கவலைப்படவுமில்லை, தெரிந்து கொள்ள விரும்பவுமில்லை. ஆனால், அவர்களை அறிவு ஜீவிகளாகத்தான் பார்த்தனர், எங்கள் ஊர் மக்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகாகவும், மானத்தை மறைக்க சிவப்பு டவுசர் போட்டதற்காகவும் சிறை சென்ற தியாகிகள் இன்னும் எங்கள் ஊரில் உண்டு.

நான் படித்ததும் எங்கள் ஊர் சிவப்பு டவுசர் தியாகிகள் கண்டெடுத்த பள்ளியில்தான். எங்கள் பள்ளிக்கூடத்துக்கு நீளமான ஒரே அறைதான். அந்த அறை குறுக்கு சுவருக்குப் பதிலாக இரண்டு பெஞ்சுகளைப் போட்டு இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்த பெஞ்சுகளுக்கு முன்புறம் போடப்பட்டிருந்த மரப்பலகைமேல் உட்காருபவர்கள் மூன்றாம் நான்காம் வகுப்பு படிப்பவர்கள். பின்புறம், தரையில் உட்காருபவர்கள் முதலாம் இரண்டாம் வகுப்பு படிப்பவர்கள். பெஞ்சு மேல் உட்காருபவர்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கிறவர்கள். எங்கள் பள்ளியில் அன்று படித்த எல்லோருக்குமே, ஐந்தாம் வகுப்பு பெஞ்சுமேல் உட்கார்ந்து,காலை ஆட்ட வேண்டும் என்ற ஆசை வந்து போகும். ஆனால், அந்த பாக்கியம் எல்லோருக்குமே கிடைத்ததில்லை.

எங்கள் பள்ளியில் பாடத்திட்டம் இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று, பெஞ்ச்மேல் மற்றும் பெஞ்சுக்கு முன்புறம் உள்ளவர்களுக்கான பாடத்திட்டம். இரண்டு, பெஞ்சுக்கு பின்புறமுள்ளவர்களுக்கான பாடத்திட்டம். பெஞ்சுக்கு பின்புறம் உள்ளவர்களுக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என நாளுக்கு இரண்டு வீதம் கரும்பலகையில் எழுதிப் போடுவார் எங்கள் ஆசிரியர். அதைப் பார்த்து நாங்கள் எழுதிக் காட்டுவோம். அதேபோல் பெஞ்சுக்கு முன் உள்ளவர்களுக்கும், பெஞ்சு மேல் உட்காருபவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடம்தான். கூட்டல், வகுத்தல், பெருக்கல், வாய்ப்பாடு, குயில்பாட்டு, பாப்பா பாட்டு என எதையாவது ஒன்றை உரக்கப் படிக்கச் சொஎலுவார். எங்கள் தலைமை ஆசிரியர். யாராவது ஒரு மாணவனோ, மாணவியோ எழுந்து நின்று கொண்டு, பார்த்து, எழுத்துக் கூட்டி படிக்கப் படிக்க, நாங்கள் உரக்க பின்பாட்டுப் பாடுவோம்.

நான் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் கோதுமைச் சோறு போல் நெல்லுச்சோறு சத்துணவாக வந்து எங்கள் வயிற்றையெல்லாம் நிரப்பியது. மேலும், வலுவலுவென்ற வெள்ளைப் பற்பொடி, கறுப்பு செருப்பு, காக்கி டவுசர், வெள்ளை சொக்காயெல்லாம் எங்களுக்கு இலவசமாகக் கிடைத்தன. இவற்றிற்கெல்லாம், எங்கள் ஊர் மக்கள் எம்.ஜி.ஆர் பற்பொடி, எம்.ஜி.ஆர் செருப்பு, எம்.ஜி.ஆர் சொக்காய், எம்.ஜி.ஆர். டவுசர் என்றுதான் பெயர் வைத்திருந்தனர். நாங்களும் அப்படித்தான் சொல்லுவோம். என் அக்காவுக்கும், எம்.ஜி.ஆர் பாவாடையும், சொக்காயெல்லாம் கிடைத்தன. என் அம்மா துணி துவைக்கப் போகும் போது கூட எம்.ஜி.ஆர் பாவாடையைக் கழற்றிக் கொடுக்கும்படி கேட்டு வாங்கிக் கொண்டுதான் போவார் என் அக்காவிடம்.

அதேபோல், எங்கள் ஊர் பள்ளிக்குப் பணிபுரிய வரும் ஆசிரியர்களுக்கும் ஏதாவது ஒரு அடைப்பெயர் வைத்து விடுவார்கள். அப்படி, எங்கள் ஊர் மக்கள் ஒரு ஆசிரியருக்கு வைத்த பெயர் ”பொட்ட வாத்தியார”. அவர் எப்பொழுதுமே, வெற்றிலை – புகையிலையைக் கடைவாயில் வைத்து அடக்கிக் கொண்டே இருப்பார். மேலும், ”புருச்..புருச்…” என்று ஜன்னல் வழியாகத் துப்பி ஜன்னல் கம்பிகளையெல்லாம் சிவப்பாக மாற்றி விடுவார். அந்த வாத்தியாருக்கு ஓசி வெற்றிலைப் பாக்கு புகையிலைக் கொடுக்காத கிழவிகளே கிடையாது. எங்கள் ஊரில், அவர் வயதிலுள்ள பெண்களைக் கண்டால் ”வாடி எக்கா…. என்னாளா.. நல்லா இருக்கியா….? மாமா ஊட்ல இருக்குதா…, இல்ல காட்டுக்கு கீட்டுக்கு போயிட்டானா…? என்றுதான் கேட்பார். எங்கள் ஊர் வயசுப் பெண்கள், அவரைக் கண்டாலே, சிரித்துக் கொண்டு ஒதுங்கி ஓடிவிடுவார்கள். “டீ…! பொட்ட வாத்தியார் வராண்டீ…” என்று சில மாதங்கள் கழித்து, அந்த வாத்தியார் திடீரென்று காணாமல் போய் விட்டார். அவர் காணாமல் போய் இரண்டு வாரங்கள் கழித்து, ”பொட்ட வாத்தியார் காவேரியில் விழுந்து செத்து விட்டதாக ஊரில் பேசிக் கொண்டார்கள். பாடம் நடத்தும் போதெல்லாம் வயிறு குலுங்கக் குலுங்க எங்களையெல்லாம் சிரிக்க வைத்த அவர் போன பிறகு எங்களிடம் சிரிப்பு குறைந்து விட்டது.

அவருக்குப் பிறகு, இன்னொரு வாத்தியார் வந்தார். தலைமை ஆசிரியரைக் காட்டிலும் உருவத்தில் சற்று சிறியதாக இருந்ததால் புதியதாக வந்த ஆசிரியரை ”சின்ன வாத்தியாராக்கி, தலைமை ஆசிரியரைப் ”பெரிய வாத்தியாராக்கி” விட்டார்கள் ? எங்கள் ஊர் மக்கள். சின்ன வாத்தியார் வந்த முதல் நாளே நாங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டோம். சாராய நாற்றம் எங்கள் இளம் நுரையீரலைப் படாதபாடு படுத்தியது. கரும்பலகையில் ஏதாவது ஒன்றை எழுதிப் போட்டு விட்டு, ஒண்ணுக்கு போகிற சாக்கில் சாராயக் கடைக்குச் சென்று விடுவார். எங்கள் ஊருக்குள் இருந்த ஒன்றிரண்டு சாராயக் கடைகள் தினம் நான்கைந்து தடவையாவது அவரை அழைக்கும். சலிக்காமல் போய்விட்டு வருவார். போதையோடு போதித்த சின்ன வாத்தியாரை, பெரிய வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார். சின்ன வாத்தியாரை எங்கள் ஊர் மக்கள் நாளடைவில் ஒரு மாதிரியாக பேச ஆரம்பித்து விட்டார்கள். சின்ன வாத்தியார் என்ற பெயர் மருவி ”குடிகார வாத்தியார்” என்றாகி விட்டது. குடிகார வாத்தியாரை மாற்றச் சொல்லி கல்வி அதிகாரிகளுக்கு மனுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள், எங்கள் ஊர் சிவப்பு டவுசர் தியாகிகள். மேலும், எம்ஜிஆர் சத்துணவை ஆக்கிப் போடுவதற்கு இரண்டு ஆயாக்கள் – பெரிய ஆயம்மா, சின்ன ஆயம்மா. அரிசி பருப்பை எடுத்துக் கொடுக்க ஒரு சோத்து வாத்தியாரும் இருந்தார் எங்கள் பள்ளிக்கூடத்தில்.

பெரிய ஆயம்மா அரைக் கரண்டி சோறுதான் போடுவாள் எங்களுக்கு. கரண்டி நிறைய அள்ளுவது மாதிரி அள்ளி பாதிச்சோற்றை வழித்துப் போட்டு விட்டு மீதிச்சோற்றைக் கரண்டியிலேயே மிச்சப்படுத்திக் கொள்ளுவாள். சின்ன ஆயம்மா ஊத்தும் சாம்பாரில் முள்ளங்கி மணம் வரும். ஆனால், ஒரு துண்டு முள்ளங்கியைக் கூட எங்களால் பார்க்க முடியாது. கத்தரி விதை இருந்தால் அது கத்தரிக்காய்க் குழம்பு. வெண்டைக்காய் விதை இருந்தால் அது வெண்டைக்காய்க் குழம்பு. பெரிய ஆயம்மா போடும் அரைக் கரணடி எம்.ஜி.ஆர் சோற்றின் மேல் சாம்பாரை ஊற்றியவுடன் அது கரைந்து கஞ்சியாகி விடும். கறிவேப்பிலைக்கு பதிலாக ஒன்றிரண்டு புழுக்களும் சாம்பாரில் மிதக்கும். நெல் வயலுக்கு சொந்தக்கார பிள்ளைகள் எம்.ஜி.ஆர் சத்துணவில் புழு இருந்தாலும் இல்லா விட்டாலும் சாப்பிட மாட்டார்கள். அதைத் தட்டில் வாங்கிக் கொண்ட, சோத்து வாத்தியார் ஏமாந்த சமயம் பார்த்துத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். அவர்கள் வீட்டு நாயோ அல்லது வயதானவர்களோ சாப்பிடுவார்கள்.

நாங்கள் ”பகுத்துண்டு பல்லுயிர்..” சொல்லி விட்டு பள்ளிக்கூடத் திண்ணை மேல் உட்கார்ந்து சாப்பிடுவோம். ”பகுத்துண்டு..” சொல்லாமல் சாப்பிடுபவர்களுக்கு, சோத்து வாத்தியாரின் இலவச ”காது திருகு வைத்தியம்” கிடைக்கும். அதற்குப் பயந்து ”பகுத்துண்டு” சொல்லாமல் யாரும் சாப்பிட மாட்டோம். அரைக் கரண்டி வீதம், ஐம்பது குழந்தைகளன் சாப்பாட்டை மீதம் பண்ணி, தண்ணீர் குடத்தில் வைத்து வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவார்கள் பெரிய ஆயம்மாவும் சின்ன ஆயம்மாவும் சேர்ந்து. சோத்து வாத்தியார் இருட்டுக்கட்ட மீண்டும் பள்ளிக்கூடம் வந்து, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றைத் திருடிச் சென்று விடுவார். “சோத்து வாத்தியாரும் ஆயம்மாக்களும் சேர்ந்து, குழந்தைகள் சோத்தையும் அரிசி பருப்பையும் திருடிச் செல்வதாக” எங்கள் ஊர் மக்கள் பேசிக்கொள்வார்கள். இருந்தாலும் அதையெல்லாம் பெரிது படுத்தவில்லை. ஆனால், ஒரு சில தியாகிகல் அவ்வப்போது பேசிக் கொள்வார்கள் அவர்களை கையும் களவுமாக தடிக்க வேண்டுமென்று. பிறகு அவர்களும் மறந்து விடுவார்கள்.

பெரிய வாத்தியாரும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக் கடைசியில் முழுவதுமாக நிறுத்தி விட்டார். எதையாவது எங்களைப் பார்த்து எழுதச் சொல்லி விட்டு, கால்களை ஆட்டிக் கொண்டு தன்னை மறந்து சிந்தனை செய்து கொண்டிருப்பார். நாங்கள் பள்ளிக்கூடத்துக்கு வெளியே ஓடுவோம் மீண்டும் ஓடி வருவோம். எதையும் கண்டு கொள்ள மாட்டார். காலையில் பத்து மணிக்கு வருவார் சாயங்காலம் நான்கு மணிக்கு அக்குளில் கைப்பையை வைத்துக் கொண்டு கிளம்பி விடுவார். ஒன்றிரண்டு வருடங்கள் பொருத்து பார்த்தார்கள், எங்கள் ஊர் தியாகிகள். முடியவில்லை. கடைசியில் பெரிய வாத்தியார் மேலும் புகார் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பெருக்கல் வாய்ப்பாட்டையும் கூட்டல் வாய்ப்பாட்டையும் பார்த்து எழுதத் தெரிந்த காரணத்தால் நான் நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். ஒரு வழியாக, எனக்கு ஐந்தாம் வகுப்பு பெஞ்சு மேல் உட்கார அங்கீகாரம் கிடைத்தது. நானும் எங்கள் பெரிய வாத்தியாரைப் போல் கால்களை ஆட்டிப் பார்ப்பேன். இருந்தாலும் அவரைப் போல என்னால் ஆட்ட முடியாமல் போனது. பெஞ்சு மேல் உட்கார்ந்த சுகத்தில் அந்த ஆண்டு போனதே தெரியவில்லை எனக்கு. முழு ஆண்டு பரிட்சை முடிந்து விட்டது. ஐந்து நாட்கள் தொடர்ந்து பாப்பாப் பாட்டையும், ஏபிசிடியையும் வகுத்தல் கணக்கையும, பெருக்கல் வாய்ப்பாட்டையும் பார்த்து சிலேட்டில் எழுதிக்காட்டியதோடு.

இந்த முழு ஆண்டு பரிட்சையிலும் தேறிவிட்டேன். பெரியாண்டச்சி அம்மனை என் பாட்டி வேண்டிக் கொண்டதால். மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு, மிட்டாய் பாக்கெட்டுடன் எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் நடைப்பயணம் சென்று கலப்பம்பாடி மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். என்னுடன் இன்னும் நான்கு மாணவர்களும் ஒரு மாணவியும் சேர்ந்தார்கள். ஒரு சில நாட்களிலே ”புதுப்பட்டியிலிருந்து வரும் மாணவ/மாணவிகளுக்கு ”கா…ஙா…சா..” கூட தெரிய மாட்டங்குது என்று எங்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பேசிக் கொண்டார்கள். மேலும், ”புதுப்பட்டி மட்டும்தானா, இந்த சுற்று வட்டாரத்துல இருந்து வர மாணவ, மாணவிகளெல்லாமே இப்படித்தான் இருக்கிறார்கள்” என்றும் பேசிக் கொண்டார்கள் பெருமைப்பட.

திடீரென்று, ஒருநாள் மாவட்டக் கல்வி அதிகாரி ஒருவர் எங்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து விட்டார். நாங்கள் சொல்லியபடி மூச்சுவிடாமல் வாய் மேல் விரலை வைத்துக் கொண்டு திணறியவாறே உட்கார்ந்து கொண்டிருந்தோம். அந்தக் கல்வி அதிகாரி எங்கள் தலைமை ஆசிரியரிடம் ஏதேதோ வினாவிக் கொண்டிருந்தார். அவ்வினாக்களுக்கெல்லாம் ”எஸ் சார்”, ‘நோ சார்” பதிலைப் பதட்டத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியாக எங்கள் தலைமை ஆசிரியர் ”இந்த சுற்று வட்டாரத்தில் இருந்து வர மாணவ/மாணவிகளுக்கு ஒழுங்கா கூட்டப் பெருக்கக் கூட தெரிய மாட்டேங்குது சார்” என்று எங்களுக்கு நற்சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு அந்தக் கல்வி அதிகாரி ”இந்த சுற்று வட்டாரத்தில் மட்டுமில்லையா, இந்த மாவட்டம் முழுவதுமே நாங்க பார்த்த வரைக்கும் இப்படித்தான்யா இருக்கு” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி சென்று விட்டார்.

கல்வி அதிகாரி சென்றதும் மணி அடித்தது. அப்போது மாலை நான்கு மணி. நாங்கள் திபுதிபுவென வீட்டை நோக்கி ஓடினோம். “ஆடு மாடு ஓடற மாதிரி ஓடுதுங்க பாருங்க சார்” என்று ஒரு குண்டு வாத்தியார் தலைமை ஆசிரியரிடம் சொன்னார். அதற்கு அவர் ”அவங்க ஆடு மாதிரி ஓடுனா என்ன; மாடு மாதிரி ஓடுனா என்ன. உனக்கு மாசமானா டான்னு அரசாங்கம் சம்பளம் கொடுக்குதுல்ல. நீ மனுசனா இரு அது போதும்” என்று கடுப்பாகச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்.

நாங்கள் தலைதெறிக்க எங்கள் ஊருக்கு ஓடி வந்து விட்டோம். வந்த வேகத்தில் எனக்குக் கொடுத்த எம்.ஜி.ஆர் செருப்பும் பிய்ந்து கொண்டது வழியிலே. எனக்காக, எங்கள் ஊர் தியாகி ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். கையில் அவருக்கு வந்த கடுதாசியுடன். திக்கித் திணறி ஒரு வழியாக எழுத்துக் கூட்டி அவருக்குக் கடிதத்தைப் படித்துச் சொல்லிவிட்டு, அழுக்காகிப் போன எம்.ஜி.ஆர் சட்டையைக் கழற்றி வீட்டில் வைத்து விட்டு விளையாட ஓடிவிட்டேன்.

வருடங்கள் வேகமாக நகர்ந்தன.

உயர்நிலைப்பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த, பல்கலைக்கழகம் வந்து முனைவர் பட்டமும் பெற்று விட்டேன். நான் முனைவர் பட்டம் பெற்ற செய்தியை எப்படியோ தெரிந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற எங்கள் பெரிய வாத்தியார் எங்கள் வீட்டிற்கு வந்து ”என்னுடைய மாணவன், முனைவர் பட்டம் பெற்றதாகக் கேள்விப் பட்டேன். அவனுடைய போட்டோ இருந்தால் காட்டுங்கள்” என்று என் பெற்றோரிடம் கேட்டாராம். அதற்கு என் பெற்றோர், நான் முனைவர் பட்டம் பெறும் போது ஆளுனருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் புகைப்படத்தை வாங்கி அன்போடு என்னைத் தடவிப் பார்த்து விட்டு ஆனந்தக் கண்ணீரோடு சென்றாராம்.

இதைக் கேள்விப்பட்ட என் கண்களிலும் அந்தக் கண்ணீர்…. ஆனந்தக் கண்ணீர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *