ஆசை யாரை விட்டது?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 6,752 
 

பெரிய மல்டிநேஷனல் நிறுவனத்திலிருந்து சீனியர் வைஸ்-பிரசிடெண்ட்டாக ரிடையர்ட் ஆனவுடன் நான் பாட்டுக்கு தேமேன்னு பெங்களூரில் என் வீட்டில் உட்கார்ந்துகொண்டு சிறுகதைகள் எழுதிக்கொண்டு இருந்தேன். அவைகள் பிரசுரமாவதில்லை என்பது வேறு விஷயம். ஒருநாள் திடீர்ன்னு என் மனைவியின் அண்ணா மாப்பிள்ளை ஜெயக்குமார் சென்னையிலிருந்து போன் போட்டு “நீங்க சீரியல்ல நடிக்கிறீங்களா? என் நண்பர்தான் அந்த சீரியல் தயாரிப்பாளர்…நீங்க சரின்னு சொன்னா நான் அவர்கிட்ட பேசுகிறேன்” என்றார். ஜெயக்குமார் என் உறவினர் என்பதைவிட எனக்கு நல்ல நண்பர். நான் ரொம்ப உற்சாகத்துடன் “சரி” என்று சொன்னேன்.

ஆசை யாரை விட்டது? எனக்குள் நடிக்கும் ஆசை துளிர் விட்டது. தமிழ் நாட்டிலேயே சிறந்த அப்பா நடிகராக என்னை நினைத்துக்கொண்டு கற்பனையில் சிறகடித்துப் பரவசமடைந்தேன். அன்றிலிருந்து என்னை கண்ணாடியில் அடிக்கடி பார்த்துக் கொண்டேன். எனக்கு தமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரியும். பார்க்கவும் சுமாராக (!?) இருக்கிறேன். எனக்கென்ன குறை என்று என்னை நானே தாயார் படுத்திக்கொண்டேன்.

அடுத்த புதன் சீரியல் தயாரிப்பாளர் எனக்கு போன் செய்து “வர்ற சனிக்கிழமை ஆடிஷன் வர முடியுமா? சீரியல் டைரக்டர் உங்கள நேரில் பார்க்கணுமாம்” என்றார்.

நான் உடனே ஜெயக்குமாருக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்ல அவர், “சனிக்கிழமை என் வீட்டுக்கே வந்துடுங்க, இங்கிருந்தே நீங்க தயாரிப்பாளருடன் அவர் கார்லயே ஸ்டூடியோவுக்கு போகலாம்” என்றார்.

மிக்க ஆவலுடன் சதாப்தி ரயிலில் சென்னை சென்று ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றேன். அவர் தயாரிப்பாளரை அறிமுகம் செய்துவைத்து அவருடன் என்னை ஸ்டூடியோவிற்கு அனுப்பி வைத்தார்.

வடபழனியில் ஒரு வீட்டின் குறுகலான மாடிப்படிகளில் ஏறி என் செருப்பைக் கழட்டச் சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு ஒரு ஏ.ஸி அறையில் சிலர் டி.வி மானிட்டர் முன்பு அமர்ந்து குரலை ஏற்றி இறக்கி டப்பிங் பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த அறையில் ஒரு இளைஞர் இரண்டு மூன்று பேருடன் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார். அவர்தான் டைரக்டர் என்று சொல்லி என்னை அவரிடம் தயாரிப்பாளர் அறிமுகம் செய்து வைத்தார். டைரக்டர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.

பிறகு “சரவணா” என்று சத்தம்போட்டு விளிக்க, டப்பிங் ரூமிலிருந்து ஒரு சிறிய பையன் ஓடி வந்தான். வந்தார் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் என்பதை பிறகு தெரிந்து கொண்டேன். அவரிடம், “சாருக்கு ஒரு ஆடிஷன் எடுத்துரு” என்றார்.

சரவணன் என்னை தனியாக தள்ளிக்கொண்டு போய் “சாருக்கு எந்த ஊர்?” என்றார்.

“பெங்களூர்.. இன்னிக்கி காலேலதான் வந்தேன்.”

“பெங்களூரா..?” என்னை வினோதமாகப் பார்த்துவிட்டு, தன்னிடமிருந்த டிஜிட்டல் காமிராவை தயார் நிலையில் வைத்து, “ஏதாவது பேசி நடித்துக் காமிங்க” என்றார்.

நான் உடனே என்னை ஒரு அப்பாவாக பாவித்துக்கொண்டு குரலில் ஏற்ற இறக்கத்துடன் “இத பாரு மாயா இது உன்னோட கல்யாணம், உன்னோட வாழ்க்கை… பாஸ்கர்தான் உன்னோட எதிர்காலம்ன்னு நீ டிசைட் பண்ணிட்டா எங்கிட்ட பிராங்கா சொல்லிடு…நானே முன்னின்று நல்லபடியா உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்….” சரவணன் “போதும் சார்” என்று இடைமறித்து டிஜிட்டல் காமிராவை ரிவைண்ட் பண்ணி என்னிடம் காண்பித்து “நல்லா வந்திருக்கு சார்” என்றார்.

டைரக்டரிடம் என்னை கூட்டிச் சென்று “ஒகே சார்” என்றார். சற்று நிம்மதியடைந்தேன்.

தயாரிப்பாளர் என்னை மறுபடியும் ஜெயக்குமார் வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார்.

அடுத்த வாரம் சென்னைக்கு அருகில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹாஸ்பிடலில் ஷூட்டிங் ஆரம்பமானது. மாணிக்க ராஜா என்பவர், புரொடெக்ஷன் மானேஜர், என்னை காலை எட்டு மணிக்கே ஹாஸ்பிடலுக்கு வரச் சொன்னார். நான் ஏழு ஐம்பதுக்கே சென்று மிகுந்த ஆசையுடன் காத்திருந்தேன்.

சரியாக எட்டு மணிக்கு மாணிக்க ராஜா பர பரப்புடன் வர அதைத் தொடர்ந்து அனைவரும் வந்து விட்டார்கள். டைரக்டர் எட்டு பத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார். டைரக்டரிடம் பேசிவிட்டு என்னிடம் வந்த மாணிக்க ராஜா மேக்கப்மேனிடம் அழைத்துச் சென்று, “சாருக்கு சீப் (chief) டாக்டர் வேடம்..இவர ரெடி பண்ணு” என்று சொல்லிவிட்டு மொபைலில் பேசியபடி அவசரமாக எங்கேயோ சென்று மறைந்தார்.

மேக்கப் மேன் என்னை அமரவைத்து ஒரு ஈர ஸ்பாஞ்சினால் என் முகத்தை துடைத்துவிட்டு பவுடர் போட்டு, புருவங்களை ஒரு ஐப்ரோ பென்சிலினால் தடவி மேலும் கறுப்பாக்கி அழகு செய்தார். பின்பு என் முகத்துக்கு நேரே கண்ணாடி பிடித்துக் காண்பித்தார். எனக்கு குறுகுறுப்பாக இருந்தது. விவரம் தெரிந்து எவரும் என்னைத் தொட்டு அழகு படுத்தியதில்லை. என் மிகச் சிறிய வயதில் என் அம்மா எனக்கு வகிடு எடுத்து வாரிவிட்டு பவுடர் போட்டு விட்டது மட்டும் தீற்றலாக ஞாபகம் வந்தது.

அடுத்தடுத்து மேக்கப் போட்டுக்கொள்ள பலர் தயாராக நின்று கொண்டிருந்தனர்.

திடீரென்று வடை வாசனை தூக்கியடித்தது. “நாஷ்டா வந்திருச்சு, எல்லோரும் சாப்பிட வாங்க” என்று மாணிக் ராஜா குரல் கொடுத்தார். அடுத்த அறையில் வட்ட வடிவில் அனைவருக்கும் ப்ளாஸ்டிக் இருக்கைகள் போடப்பட்டன. அங்கிருந்த டேபிளின் மீது வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த எவர்சில்வர் தட்டை எல்லோரும் எடுத்துக்கொண்டு இருக்கையில் அமர, நானும் தட்டை எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்தேன். டைரக்டரும் எங்களுடன் அமர்ந்து கொண்டார். ஒருவர் ஒரு பெரிய எவர்சில்வர் ஜெக்கில் தண்ணீர் கொண்டுவந்து எங்கள் வலது உள்ளங் கையில் ஊற்ற நாங்கள் அதில் கையையும் தட்டையும் கழுவிக் கொண்டோம். அடுத்து வந்தவர் எங்களிடம் ட்ரம் போன்ற ஒரு பாத்திரத்தை காண்பிக்க அதில் நாங்கள் கழுவிய தண்ணீரை ஊற்றினோம்.

மூன்றாவதாக வந்தவர் எங்கள் தட்டில் சுடச் சுட இரண்டு இட்லிகள் வைத்தார். தட்டில் ஆவி பறந்தது.

தொடர்ந்து வடை சாம்பார் சட்னி பரிமாறினார்கள். அடுத்து சூடாக பொங்கலும், கொத்ஸும். அடுத்து தோசை அதற்கு தொட்டுக்கொள்ள காரச்சட்டினி என அனைத்தும் மளமளவென பரிமாறினர். காலை உணவை மொத்தம் பதினைந்து நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தோம். எல்லா வகைகளுமே சுவையாக இருந்தது. என் வீட்டில்கூட ஒருசேர இவ்வளவு வகைகள் சுவையாக நான் சாப்பிட்டதில்லை. ஒரு பெரிய வாளியினுள் தண்ணீர் பாட்டில்களில் தண்ணீர் பிடித்து வைத்திருந்தார்கள். அதைத்தான் எல்லோரும் எடுத்து குடித்தோம். இது எனக்கு சுகாதாரமில்லாத செயலாகத் தோன்றியது. கடைசியாக பேப்பர் கப்பில் அனைவருக்கும் காப்பி, டீ கொடுத்தார்கள்.

சரியாக ஒன்பது மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது. சரவணன் ஓடிவந்து எனக்கு டாக்டர் கோட் அணிவித்து கையில் ஸ்டெத் கொடுத்து டைரக்டர் முன்னால் சென்று நிறுத்தி “ஆர்ட்டிஸ்ட் ரெடி சார்” என்றார். அங்கு ஒரு அழகிய பெண் ஹாஸ்பிடல் பெட்டில் படுத்திருந்தாள் டிஜிட்டல் காமிராவுடன் காமிராமேன் தயாரானார்.

நான் சரவணனிடம் “இது என்ன கதை? என்ன சீன்?” என்று பரிதாபமாகக் கேட்டேன்.

கதை கேட்பது பெரிய குற்றம் போலும். ஒரு ஜந்தைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்து, “இவரு வெங்கடேஷ்….நீங்க சொல்ல வேண்டிய வசனங்ககளை இவரு சத்தம்போட்டு சொல்லுவாரு… நீங்க முக பாவனைகளுடன் அதைத் திருப்பிச் சொன்னாப் போதும் அல்லது வாயசைத்தால் போதும், மற்றதை டப்பிங்க்ல பார்த்துக்கலாம்” என்றார்.

இது மாதிரிதான் எனக்கு தினமும் நடந்தது. அது ஏதோ வரிசையாக ஏழு கொலைகள் சம்பந்தப்பட்ட கதை என்பதை நானாகப் புரிந்து கொண்டேன். என் ஷூட்டிங்கின் கடைசி நாள் வரை நான் வெங்கடேஷ் சொன்னதைத்தான் திருப்பிச் சொன்னேன். கதையைப் புரிந்துகொண்டு அதனுடன் ஒன்றி என் கேரக்டரில் ஊறி சிறப்பாக என் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்கிற என் தீராத ஆசை வெறும் கானல் நீராகிப் போனது. இந்த மாதிரி எவர் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பதால் இனிமேல் என் நேரத்தையும் சிந்தனைகளையும் நடிப்பதற்காக செலவழிக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். தமிழ் தெரியாத பல நடிகர் நடிகைகள் தமிழ் சீரியல் மற்றும் சினிமாக்களில் நடிப்பதின் ரகசியத்தை புரிந்துகொண்டேன்.

என்னுடன் காண்டீபன் என்கிற 76 வயது பெரியவர் ஒருவர் நடித்தார். அவர் கடந்த ஐம்பது வருடங்களாக நிறைய சினிமாக்களிலும், சீரியல்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளாராம். . நடிக்க ஆரம்பித்த புதிதில் என்றாவது ஒரு நாள் தன் பெயர் பெரிதாகப் பேசப்படும் என்று நம்பினாராம். ஆனால் அவர் இன்று வரை கவனிக்கப் படவில்லை. சொற்ப சம்பளத்தில் தினமும் அல்லாடுகிறார் பாவம். இது மாதிரி ஏராளமானோர் விட்டில் பூச்சிகளாக ‘என்றாவது ஒரு நாள்’ என்கிற நம்பிக்கையில் வலம் வருகிறார்கள்.

ஷூட்டிங்கில் நிறைய விஷயங்களை கிரகித்துக் கொண்டேன்.

தமிழில் ஒரு நாளைக்கு உத்தேசமாக 105 சீரியல்கள் எடுக்கப் படுகின்றன. சினிமா மாதிரி திட்டமிடுதலும், கவனமும் இல்லாமல் டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைப்பதற்காக கதையை ஜவ்வாக இழுத்துக்கொண்டு செல்கிறார்கள். டிஜிட்டல் காமிராவில் வேஸ்டேஜ் இல்லாததால் இஷ்டத்துக்கு சுட்டுத் தள்ளிவிட்டு பிறகு எடிட்டிங்கில் சமாளிக்கிறார்கள். நடித்தவர்களுக்கு அன்றன்றைக்கே பணமாக செட்டில் செய்கிறார்கள். பெரிய அல்லது தொடர் நடிகர்களுக்கு அவ்வப்போது வங்கியில் பணம் செலுத்தி விடுகிறார்கள். உழைத்தால்தான் கையில் காசு.

ஷூட்டிங் வரும் அனைவருக்கும் ஒரு நாள் சம்பளக் கணக்கு என்பதால் என்பதால் ஆபீஸ் மாதிரி லீவு என்பதெல்லாம் கிடையாது. எனவே சென்னையில் சமீபத்தில் பெய்த பேரிடர் மழையில் எல்லா ஷூட்டிங்கும் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப் பட்டதால் வரும்படி இல்லாமல் நிறைய நடிக, நடிகைகள், டெக்னீஷியன்ஸ் கஷ்டப்பட நேர்ந்தது.

சினிமா சம்பந்தப்பட்டவர்கள் நிறையப் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள் என என்னைப் பலர் பயமுறுத்தினார்கள் ஆனால் உண்மை வேறு. அனைவரும் பண்பு உள்ளவர்களாகவும் நாகரீகம் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். தற்போதைய ஐ.டி. நிறுவனங்களை விட சினிமா நிறுவனங்கள் எவ்வளவோ மேல் என்று எனக்குத் தோன்றியது.

ஷூட்டிங்கில் ஹாஸ்பிடல் டீனாக என்னுடன் நடித்த திரு.அர்விந்த்ராஜின் அறிமுகம் எனக்கு சற்று நிம்மதியளித்தது. அவர் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்குனர் துறையில் படித்துவிட்டு முதலில் வெளிவந்த மாணவர்கள் பிரிவில் பிரகாசமானவர். ஆபாவாணன் தயாரிப்பில் 1986ல் அவர் இயக்கிய முதல் படம் ‘ஊமைவிழிகள்’ மிகவும் பேசப்பட்டது. தொடர்ந்து உழவன் மகன் உட்பட அவருடைய பதினாறு படங்கள் அக்காலத்திய டிரென்ட் செட்டர்ஸ். அவருடன் அதிகம் பேசி சீரியல்கள், சினிமா பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.

சினிமாவில் முன்னேறி நிலைத்து நிற்க திறமை ஒன்றுதான் தேவையானது. சிபாரிசினால் இரண்டொரு படங்கள் தாக்குப் பிடிக்கலாம். அவ்வளவுதான். ஆழமான புரிதலும், திறமையுடன் கூடிய கடின உழைப்பும்தான் சினிமாவில் முக்கியம்…

ஒரு ஐ.டி.கம்பெனி ஆரம்பித்து நடத்துவது மிகச் சுலபம். நம் வாரிசுகளை நிர்வாகிகளாகப் போட்டு அமெரிக்காவில் ப்ராஜெக்ட் வாங்கி இந்திய கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை இரவு பகலாக செக்கிழுக்க வைத்து எளிதாக டாலரில் கல்லா கட்டிவிடலாம்.

ஆனால் சினிமாவில்தான் உண்மையான, திறமையான கற்பனா சக்தியும், டீம் ஒர்க்கும், உழைப்பும், டெடிகேஷனும் காணப்படுகிறது. மிகப் பெரிய சாகாவரம் பெற்ற இண்டஸ்ட்ரி அது.

ஷூட்டிங் அனுபவத்தில் நான் பார்த்த நல்ல விஷயங்கள்:

எல்லாமே நேரத்துக்கு நடக்கிறது. தினமும் காலை ஒன்பது மணிமுதல் மாலை ஏழுமணி வரையில் ஷூட்டிங் நடக்கிறது. டெக்னீஷியன்ஸ் சிறப்பாக, திறமையாக செயலாற்றுகிறார்கள்,

ஈடுபாட்டுடன் உழைக்கிறார்கள்.

அனைவரையும் பண்புடன் நடத்துகிறார்கள். பெண்களை ‘மேடம்’ என்றும் ஆண்களை ‘சார்’ என்றும் அவரவர் பெயருடன் சேர்த்து விளிக்கிறார்கள். பெண்களை பிரத்தியேக கவனத்துடனும், மரியாதையுடனும் நடத்தி பத்திரமாக அனுப்பி வைக்கிறார்கள்.

காலை உணவு, மதியம் சாப்பாடு மாலை ஹை டீ எல்லாம் தரமாகவும் சுவையாகவும் தரப்படுகிறது.

மதிய உணவில் சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, அப்பளம், ஊறுகாய் என அமர்க்களப் படுத்துகிறார்கள். தண்ணீர் மட்டும் சுகாதாரமில்லாமல் இஷ்டத்துக்கு கண்ட கண்ட பாட்டில்களில் பிடித்து குடிக்கிறார்கள்.

நான் உணர்ந்த நெகடிவ் சங்கதிகள் :

கதையைப் பற்றிய சரியான திட்டமிடல் டைரக்டருக்கு இருப்பதில்லை, நடிக்கும் எவருக்கும் கதையின் அல்லது வசனங்களின் மீது துளியும் அக்கறையில்லை. நடிப்பில் ஆர்வமும் ஈடுபாடும் இல்லை. டி.ஆர்.பி க்காக காட்சிகள் இழுக்கப் படுகின்றன. ஆரோக்கியமான இலக்கு இல்லாமல் பயணிக்கிறார்கள். சீரியலைப் பார்க்கும் மக்களும் தரம் பற்றி சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்பதும் உண்மை.

நடிக்க வந்தவர்கள் திக்கு தெரியாமல் காத்திருக்க வைக்கப் படுகிறார்கள். பல சமயங்களில் ஒரு காட்சிகூட எடுக்கப்படாது அன்றைய சம்பளம் கொடுத்து திருப்பியனுப்பும் கொடுமையும் அரங்கேறுகிறது.

சீரியல்களின் பெரும்பாலான நிறுவனங்கள் உப்புமா கம்பெனி. இயக்குபவர்களும் சொதப்பலான டைரக்டர்கள்.

மொத்தத்தில் எனக்கு இந்த சீரியல் அனுபவம் ‘ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்றாகிவிட்டது. தயாரிப்பாளர் என் உறவினரும் நண்பருமான ஜெயக்குமாரின் நண்பர் என்பதால் அவரும் எனக்கு நண்பர்தானே… அந்த உரிமையில் என்னுடைய பெங்களூர்-சென்னை பயணச் செலவு, தங்கும் செலவு, நடிப்புக்கான சம்பளம் என எதையும் இன்றுவரை நான் அவரிடம் கேட்டுக் வாங்கிக் கொள்ளவில்லை.

இது பற்றி ஜெயக்குமாரிடம் நான் எதுவும் பேசவுமில்லை.

திரும்பி வந்து சமர்த்தாக பெங்களூரில் மறுபடியும் கதை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

இரண்டொரு கதைகள் பிரசுரமான உற்சாகத்தில் திளைத்திருந்தேன்.

அன்று திடீரென ஊமைவிழிகள் டைரக்டர் அர்விந்த்ராஜிடமிருந்து போன், “சார் ஒரு புதுப் படத்துக்கு இப்ப டிஸ்கஷன் போயிகிட்டிருக்கு…இந்திரா சொளந்தர்ராஜன் கதை…கர்நாடகாவுல ஷிமோகால ஷூட்டிங்.. உங்கள ஒரு நல்ல காரெக்டருக்கு ப்ளான் பண்ணி வச்சிருக்கேன் வர்றீங்களா?” என்றார்.

குரலில் உற்சாகத்துடன் “கண்டிப்பா வரேன் சார்” என்றேன்.

அது சரி, ஆசை யாரை விட்டது ?

Print Friendly, PDF & Email

1 thought on “ஆசை யாரை விட்டது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *