அவள் ஒரு எக்ஸ்ட்ரா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 3,743 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவளை நான் அதற்கு முன்பு பார்த்ததே கிடையாது.

அவன் பத்திரிகை ஆபீஸைத் தேடி பொதுவாக அலங்காரிகள் வருவதில்லை. தப்பித் தவறி யாராவது வந்து விட்டார்கள் என்றால், அவர்கள் அகதிகள் என்று சொல்லித் கொண்டு அகப்பட்டதைப் பற்றிச் செல்ல வரும் இனத்தினராகவே இருப்பார்கள்.

முதலில் அவரையும் அப்படித்தான் எண்ணினேன். ‘அகதிகள்’ தான் பெருத்துக் கொண்டு வருகிறார்களே இந்நாட்டிலே! அகதிக் குடும்பங்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் சிலசமயம் அணிந்திருக்கிற ஆடைகளையும், அவர்கள் மேனி மினுமினுப்பையும் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் அகதிகள் தானா? அப்படியென்றால் நான் கூட அகதி என்று சீட்டு எழுதிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான். பகவதி பிஷாந்தேஹீப் பிழைப்பிலாவது நல்ல காசு கிடைக்கும் போல் தோன்றுகிறது. இந்த எழுதிப் பிழைக்கும் வெளியில் ஒரு ஒரு மண்ணும் கிடைப்ப தில்லை என்று நினைப்பது உண்டு. உம், அது வேறு விஷயம்!

அவள் நாகரிகமானவள் என்று விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பியது நன்றாகத் தெரிந்தது. அவள் மின்னல் சிரிப்பு ஒன்றை உகுத்தாள்.

‘என்ன? என்ன வேணும்?’ என்று கேட்கலாமா என் யோசிக்கும் வேளையிலேயே, அவள் கேட்டுவிட்டாள் ‘டைரக்டர் ஸார் இல்லையா? என்று.

‘டைரக்டர் ஸாரா? அப்படி இங்கே ஒருத்தரு மில்லையே’ என்றேன்.

‘இல்லே… வந்து… எனக்கு சினிமாவிலே சான்ஸ் இடைக்குமான்னு..’ என்று வார்த்தைகளை மென்று விழுங்கித் துப்பினாள் அவள்.

‘இது சினிமாவுக்கு ஆள் சேர்க்கிற இடமில்லை. பேப்பர் ஆபீஸ். இங்கே டைரக்டர் கியரெக்டர் யாரும் கிடையாது’ என்று சொன்னேன்.

‘இங்கே போய் விசாரித்தால் தெரியும்னு சொன்னாங்ளே’ என்றாள் அவள். அவளுக்கு அழுகை வந்து விடும் போலிருந்தது.

‘இங்கே அதெல்லாம் விவரம் தெரியாது. ஏதாவது படக் கம்பெனிகளிலோ , ஸ்டுடியோவிலோ போய் விசாரியுங்கள் -‘ என்றேன்

அவள் அசையா மடந்தையாக நின்றாள் அங்குமிங்கும் பார்த்தாள். பிறகு கைக்கட்டை விரலின் நகத்தைக் கடித்துக்கொண்டே பேசினாள். ‘நான் மதுரையிலிருந்து வந்திருக்கிறேன். சினிமாவவே சேரவேனும்னு ஆசை. இங்கே யாறையும் தெரியாது. நீங்க யாருக்காவது சிபாரிசுக் கடிதம் கொடுத்தால்…’

அவன் சீக்கிரம் வெளியேறினால் போதும் என்று பட்டது எனக்கு, ‘சினிமாவில் சேருவது நீங்கள் நினைப்பது போல் லேசான காரியம் என்று எனக்குத் தோன்றவில்லை. சினிமா உலகத்தில் எனக்கு யாரையுமே தெரியாது. அதனாலே நீங்க போகலாம் என்று வழியனுப்பி வைத்தேன்.

இப்படி வீணாகக் கெட்டப் போகிறார்கள் எத்தனை பேர். சினிமாவில் சேர்ந்தால் பணமும் புகழும் ஏராளமாகக் கிடைக்கும் என்ற எண்ணம் போலும். இவளுக்கு வயது பதினெட்டு, பத்தொன்பது தான் இருக்கும். வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடிவந்து விட்டாள். பட்டணத்துக்குப் போன உடனேயே சினிமா ஸ்டார் ஆகிவிட முடியும் என்று வெளியூரில் உள்ள சிங்காரிகளும் ஓய்யாரி களும் நவயுவதிகளும் எண்ணிக் கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது!…கட்டவிழ்ந்து புரண்டு நெளியத் தொடங்கிய சிந்தனைக்கு தடை விதிக்க வேண்டியதாயிற்று, வேறு அலுவல் குறிக்கிட்டதால்.

அப்புறம் நான் அவளைப் பற்றி கவலைப்படவேயில்லை. அவளின் சாயை நினைவுப் பரப்பிலிருந்து மங்கி மாய்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குத் துணை புரிந்த நீண்ட இடைவேளைக்குப் பின் மறுபடியும் அவளை நான் சந்திக்க முடிந்தது.

எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்திலே தான்!

புதிதாகத் திரைக்கு வரத் தயாராகிவிட்ட படம் ஒன்றின் பிரத்தியேகக் காட்சிக்கு எனது நண்பர் ஒருவரோடு நானும் போயிருந்தேன்.

படம் ஆரம்பிக்கக் கொஞ்ச நேரம் தானிருந்தது. வாசலை மறைக்கத் திரை தொங்கவிட ஆயத்தம் செய்து கொண்டிருந்தவனிடம் யாரோ கனத்த குரலில் பேசுவது கேட்டது. அதட்டலாக விழுந்தது.
நாங்கள் உள்ளே போகணும், வழிவிட்டு!’ என்று, அவன் இடமில்லை; உள்ளே அனுமதிக்க முடியாது என்று சொன்னான், ‘ஏன் முடியாது? நாங்க ஆக்ட்ரஸ்களாக்கும்!’ என்றாள் முதலில் பேசியவள் .

‘அட, யாரடா அவ? ஆக்டரஸாமே!’ என்ற மனக் குறிப்பு வழிகாட்ட பார்வை வாசல் பக்கம் உருண்டது பலருக்கு. நானும் திரும்பிப் பார்த்தேன்.

பகட்டாக ஆடை அணிந்து ‘அக்காள்’ ஒருத்தி. அவள் அருகில் நின்றாள் ஒரு தங்கச்சி, சிறியவள் தோற்றம் தான் என்னைத் திடுக்கிட வைத்தது. அவள் பல மாதங்களுக்கு முன்பு சினிமாவில் சேர வேண்டும் என்ற ஆசையோடு வந்தத சகோதரி தான்.

‘பரவால்லேயே! சினிமா சான்ஸ் கிடைத்துவிட்டது போலிருக்கு, எப்படிக் கிடைத்தது? யாரைப் பிடித்து எப்படி…’ என் மனம் கேள்விகள் எழுப்பியது. பார்வை வாசல் பக்கம் நடந்த நாடகத்தை ரசித்தது.

வாசில் காத்து நின்றவன் அவர்களை அனுமதிக்க முடிஅது என்றான். பெரியவள் உரிமைக் குரலில் வாதாடி நின்றாள். பிறகு அவசரமாகப் பொய் யாரையோ பார்த்து பேசி, தாராளமாக உள்ளே வந்து விட்டாள். மற்றவள் அவளை விட்டு நீங்கா நிழலாகவே இயங்கினாள்.

‘போகும் இடமெல்லாம் லட்சியசித்திதான் போலிருக்கு. பேஷ்!’ என நினைத்தேன்.

இரண்டு ஆக்ட்ரஸ்’களும் கர்வமாக நடந்து, எல்லோரையும் பார்த்தபடி-எல்லோரும் தங்களைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்போடு- முன்னேறி இடம் பிடித்தார்கள்.

படம் முடிந்து வெளியே வரும் போது, கும்பல் கலையட்டுமே என்று நான் பின் தங்கி நின்றேன். அந்தப் பக்கமாக வந்தார்கள் அவர்கள் இரண்டு பேரும்.’எப்பவோ ஒருதடவை பார்க்கது. மறந்திருப்பா’ என்று நினைத்தேன். அது தப்பு என்று சுட்டிக்காட்ட விரும்பியது போல் துடித்தது அவள் பார்வை. செஞ்சாயம் மிகுந்திருந்த உதடுகளில் சிரிப்பு பூத்தது. அவள் அங்கேயே நின்றுவிட்டாள்.

‘நமஸ்காரம்’ என்றாள்.

அநேகம் ஜோடிக் கண்கள் எங்கள் பக்கம் நீந்தியதில் வியப்பு என்ன இருக்க முடியும்?

குறும்பாகச் சிரித்தபடி அவள் கேட்டாள்: ‘என்னை ஞாபகம் இருக்கிறதா, ஸார்? நான் சினிமாவில் சேர்ந்து விட்டேன்.’

‘ஓ! சந்தோஷம்’ என்றேன்.

‘அது தான் ஆளைப் பார்த்தாலே தெரியுதே. உன் கூட நிற்பவளை அரைகுறையாப் பார்த்தாலே போதுமே!’- இப்படி நான் சொல்ல வில்லை. எண்ணிக் கொண்டேன்.

எப்படிச் சேர்ந்தாள் ; சினிமா அனுபவம் எப்படியிருக்கிறது; அவள் எதிர்பர்த்தபடி உள்ளதா? எவ்வளவோ கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் இடம், பொருள், ஏவல் என்கிறார்களே, அது ஒன்றும் சரிப்பட்டு வராததனால் நான் மௌனமாக நின்றேன். தோழி துரிதப்படுத்தியதால் அவளும் நகர்ந்து, கூட்டத்தில் கலந்தாள்.

பிறகு அவளை நான் சிலசமயம் பார்த்தது உண்டு. அவளும் தோழியும் பீச்சிலோ, பௌண்ட் ரோட்டிலோ, ஸென்ட்ரல் ஸ்டேஷன் சமீபத்திலோ கடந்து சென்ற போது பார்த்திருக்கிறேன். எதிரும் புதிருமாகச் சந்தித்தது இல்லை.

பலப்பல மாதங்களுக்குப் பின்னர் சந்தர்ப்பம் மீண்டும் அவளை என் முன் கொண்டு வந்து சேர்த்தது.

படக் கம்பெனி ஒன்றிலே தான். படமுதலாளி ஒருவரைக் காணச்சென்ற எனது நண்பரோடு நானும் சும்மா போயிருந்தேன். நண்பர் ஆபீஸ் அறைக்குள் போன போது, நான் வெளி ஹாலில் உட்கார்ந்திருந்தேன். வீணாக உள்ளே போவானேன் என்று தான். அப்பொழுதுகான் அவளைக் காண முடிந்தது.

சிரத்தையோடு சிங்காரித்து வந்திருந்த அலங்காரிகள் தனித் தனியாகவோ, இரண்டு மூன்று பேராகவோ அங்கு மிங்கும் சுழன்று கொண்டிருந்தார்கள். அவளும் நின்றாள் அங்கே. அவள் ஒரு ‘எக்ஸ்ட்ரா’ என்பது அவள் நடையிலே, உடையிலே, நின்ற நிலையிலே, பார்க்கும் தினுசிலே, அசையும் தெளிவிலே-ஒவ்வொரு பண்பிலும் விளம்பரமாகிக் கொண்டிருந்தது. அவள் தற்செயலாக என்னைப் பார்த்தாள். பார்வையை மீட்டுக் கொண்டாள்.

‘மறந்திருப்பாள். ரொம்ப நாளாச்சல்லவா!’ என்று நினைத்தேன்.

அவள் மீண்டும் கவனித்தாள். என்ன நினைத்தாளோ, மெதுவாக அருகில் வந்து நின்று ‘நமஸ்காரம், ஸார்… இங்கே எங்கு வந்தீர்கள் – ஏன் வெளியே உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டாள்.

நான் சொன்னேன். தொடர்ந்து விசாரித்தேன்: ‘என்ன, சினிமா உலகம் எப்படியிருக்கு? நட்சத்திர பூமி உண்மையில் தூரத்துப் பச்சையாகத் தோன்றுகிறதா; இல்லை, தென்றலும் குளுமையும் நிறைந்த பூஞ்சோலையாக உள்ளதா?’

‘என்னத்தைச் சொல்ல? ஏன் தான் சினிமாக்காரியாக மாறணும்னு ஆசைப்பட்டேனே என்றிருக்கு எனக்கு சில சமயம். வந்தாச்சு. இனி என்ன செய்வது?’ என்று கூறி பெருமூச்செறிந்தாள் அவள்.

‘ஏன்! அதற்குள் இந்த வாழ்க்கை அலுத்து விட்டதா?’ என்று கேட்டேன். அதில் கேலி சிறிது தொனித்திருக்கலாம். ஆனால் உடனேயே அதற்காக நான் வருந்தினேன், அவள் எதிர்பார்ப்பது நையாண்டியல்ல; அனுதாபம் தான் என்று சொல்லாமல் சொல்லியது அவள் பார்வை.

‘என்ன செய்வது? ஆசைப்படுகிறோம், ஆர்வத் துடிப்போடு ஆராயாமலே குதிக்கிறோம். முன்னேற முரண்டு. பிடிக்கிறோம். ஆனால் முடிவு லட்சியச் சிதைவு தான். லட்சியம் என்றுமே அடிவானமாகத்தான் இருக்கிறது. இலகுவில் தொட்டுவிட இயல்வதில்லை. எல்லாத் துறைகளுக்கும் இது பொது’ என்றேன்.

‘இப்படி யிருக்கு மென்று நான் நினைக்கவே யில்லை’ என்றான் அவள். நான் பதில் எதுவும் சொல்லாததனால் அவளே பேசினாள் : பெரிய கலை, சேவை-கத்தரிக்கா சேமியா என்று பேசிவிடுகிறார்கள். ஆனால் நடைமுறையில், அம்மா! பயமாக இருக்கிறது, ஸ்டார்களைப் பற்றி, கலைக் கொம்பர்களைப் பற்றியெல்லாம் பக்க பக்கமாக எழுதுகிறவர்கள் ஒரு தடவையாவது எங்கள் அபிப்பிராயங்களைக் கேட்டு எழுதினால் என்னவாம்?…’

எனக்கு சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்கவில்லை. பாவம், அவள் ஆசையை வீனகக் கெடுப்பானேன்! இருந்தாலும் ஏதாவது சொல்ல வேண்டுமே, ஆகவே ‘பரஸ்பர உதவி தான்’ என்றேன். அவளுக்குப் புரியவில்லை என்பது தெரிந்தது.

‘படமுதலாளிகளும் வாழவேண்டும். பத்திரிகைக்காரர்களும் வாழ வேண்டும் அல்லவா! அதனால் தான் பிரமாதப்படுத்துகிறார்கள்’ என்றேன்.

‘அது கிடக்கு. உண்மையில் இந்தக்கலை இன்றைய நிலையிலே உருப்படும்னு நினைக்கிறீர்களா?’ என்று கேட்டாள்.

‘எனது பதில் எப்படி உருப்படும்?’ என்ற கேள்வியாகத் தான் உதிர்ந்தது.

அவளாகவே சொன்னாள்:

‘இன்றைக்கு ஒத்திகை உண்டு. எல்லாரும் வரணும் அப்படின்னு சொன்னாங்க. வந்தோம் இங்கே வந்து இவ்வளவு நேரம் காத்திருந்த பிறகு, இன்னைக்கு ஒத்திகை வேண்டாம். இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம். எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்னு சொல்லி விட்டாங்க. என்ன செய்றது? இப்படி வந்து விட்டுப் போறதுன்னு சொன்னா எவ்வளவு வீண் செலவாகுது? அதை யார் தருகிறா? ஸ்டார் வரணும்னா ஒரு தடவைக்கு ஒன்பது தடவை காரு போகுது. நாங்க வெறும் எக்ஸ்ட்ரக்கள் தானே!

எனக்கு அன்று – படம் ஒன்றின் பிரத்தியேகக் காட்சியின் போது, – தியேட்டரில் நடந்ததும், ‘நாங்கள் ஆக்ட்ரஸ்கள்’ என்ற கர்வ அறிமுகமும் நினைவில் எழுந்தன. அவர்கள் நகர்ந்ததும், வாசலில் நின்றவன் முனங்கியதும் ஞாபகத்துக்கு வந்தது. பெரிய இவளுக! ஆக்ட்ரஸ்களாமில்ல, ஆக்ட்ரஸுக! தெரியாதாக்கும், எக்ஸட்ராஸா இருப்பாளுக. இருந்தாலும் ஜம்பத்துக்குக் குறைச்சல் இல்லை!’

அன்று அவளிடம் மிடுக்கும் பெருமையும் இருந்தன. இன்று துயரமும் ஏக்கமும் அதிகமிருந்தன. ஏன்? காரணம் என்ன?

அவளிடமே கேட்டேன்.

‘எக்ஸ்ட்ராப் பிழைப்பைப் பற்றி என்ன சொல்ல? எப்படியாவது உயிர்வாழ வேண்டியிருக்குதே’ என்று அலுப்பாக மொழிந்தாள் அவள்.

சினிமா உலக ‘எஸ்ட்ரா’ நடிகைகளின் வாழ்க்கையைப் பற்றி ஆராய வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. பணம் தண்ணீர் பட்டபாடு படுகிற அந்த உலகத்தின் கீழ்ப்படியில் உள்ளவர்கள் நிலை எப்படியிருக்கிறது; நட்சத்திரங்களைப் போல் பகட்டும் படாடோபமுமாக வாழ முடியாவிட்டாலும், சௌக்கியமாகக் காலங் தள்ள வசதிகள் கிடைக்கின்றனவா என்றறிய வேணும் என்ற அவா உண்டு எதற்குமே வெளியே புலனாகாத ‘மறுபுறம்’ ஒன்று உண்டல்லவா? இந்தக் கலையுலகின் மற்றோர் புற மர்மங்களை அறிய வேண்டும் என்ற நினைப்பு என்றும் எனக்கு உண்டு.

அவள் மூலம் ஒரு சிறிதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன், அதனால் மற்றவர்கள் அர்த்தம் நிறைந்த பார்வை பறிமாறிக் கொள்வதையும் குறும்பாகச் சிரித்துக்கொள்வதையும், மெல்லொலி பரிமாறி ரகசியம் பேசுவதையும் உணரமுடிந்தாலும் கவனியாதது போல் ஒதுக்கி விட்டேன்.

மற்றவர்கள் கண்ணெறிந்த படி நகர்ந்தார்கள், ஒரு ‘எக்ஸ்ட்ரா’ “ஏன்டி புஷ்பா, இப்ப வரப்போறியா? இல்லே, உனக்கு ஜோலி இருக்குதா?” என்று குத்தலாகக் கேட்டு விட்டு நடந்தாள்.

அவளுடைய தோழி வரவும், அவளும் சென்றாள். ‘புஷ்பா, யாரடி, அது? பழைய சிநேகமா? அல்லது புது நட்பா?’ என்று கேட்டு வீட்டுச் சிரித்தாள் தோழி.

‘போடி!’ என்று அவள் கண்டித்த குரலும் காதில் விழுந்தது.

எனக்கு ‘எக்ஸ்ட்ரா’க்கள் மீதும் அதிக வெறுப்பு ஏற்பட்டது, சினிமா, படவுலக பிரம்மாக்கள், ஸ்டுடியோ பூமி, நட்சத்திரங்கள், எக்ஸ்ட்ராஸ் – எல்லோர் மீதும்: எல்லாவற்றின் மீதும் உள்ள வெறுப்பும் ஆங்காரமும் அதிகரித்தன.

‘ரொம்ப நேரமாக என் கூடப் பேசிக் கொண்டிருந்தாளே, அது யாரப்பா அவ?’ என்று கேட்டபடி, வந்து சேர்ந்தார் நண்பர்.

‘அவள் ஒரு எக்ஸ்ட்ரா?’ என்று நான் சொன்ன தோரணையே நண்பரை வீண் பேச்சு வளர்க்க விடாமல் தடுத்து விட்டது.

‘ஓ ! அவளா? மூன்பே பார்த்திருக்கிறோமே’ என்று சமாளித்துக் கொண்டார் அவர்.

2

அவள் ஒரு ‘எக்ஸ்ட்ரா’.

சினிமா உலகத்தில் இடம் பெற வேண்டும் எனும் ஆசை உந்த, ஊரை விட்டு ஓடிவந்தபோது அவள் நினைத்ததில்லை என்றும் தான் ‘எக்ஸட்ரா’ வாகவே வாழ வேண்டியிருக்கும் என்று.

அவள் பெயர் புஷ்பா. இன்று.

முன்பும் அதே பெயர் தானா?- சொல்ல முடியாது. அநேகமாக, அவள் ‘பர்வாசிரமப் பெயர் புஷ்பா என்று இராது. ஏதாவது பிச்சம்மாளாகவோ, ‘ பேச்சியம்மாள் என்றோ -இந்த தினுசில் எப்படியோ ஒன்று – இருந்திருக் கலாம். சினிமா உலகில் புகுத் தவுடன் ஆளே மாறிவிட வேண்டும் என்பதற்கு அடையாளம் தானோ என்னவோ முதலில் ஏற்படுகிற பெயர் மாற்றம்! நீ எப்படியும் போகிறது! அவளுக்கு புஷ்பா என்ற பெயர் அழகாக இருந்தது.

அவள் அழகும் -பிரமாதம் என்று வியக்கத் தக்கதாயில்லை யெனினும் – சில நட்சத்திரங்களின் அழகை விட நன்முகத் தானிருந்தது. திறமையாக மேக்கப் செய்தால் அவளும் ஜொலிக்கும் நட்சத்திரமாக மாற முடியும்.

அந்த நம்பிக்கை தான் முக்கியத் தூண்டுதல் அவளை சினிமா உலகுக்குப் பிடித்துத் தள்ள, அவள் எதிரேயிருந்த கண்ணாடி, ஆசையை வளர்த்தது. ஆர்வத் தீயை அதிகரிக்க உதவியது. ‘அவளுக்கும் இவளுக்கும், எந்த ஸ்டாருக்குமே நான் என்ன மட்டமா? நான் அழகாகத் தான் இருக்கிறேன்’ என்று பெருமை பேசியது பளிங்சில் பூத்த நிழல், முகத்தை அப்படியும் இப்படியும் ஆட்டி அசைத்து, சாய்த்து வளைத்து, நிமிர்த்தி, பலவிதப் போஸ்கள்’ சித்தரித்து மகிழ்ந்தாள், கண்களைச் சுழட்டிக்கொண்டாள் எழிலாக நின்று பார்த்தாள். ஒயிலாக அசைந்து நடந்தாள் சினிமாவில் கண்டு ரசித்த பல விதக் கோணங்களை, ஸ்டைல்களை யெல்லாம் தானே நடித்துப் பார்த்துக் கொண்டாள்: ‘ரொம்ப நல்லாருக்கு இவ்வளவு போதாதா’ என்று அவள் தனக்குத் தானே ஸர்டிப் கேட் கொடுத்து விட்டாள். அவளைப் பொறுத்தவரையில் தான் சினிமா ஸ்டாராகாவே ஆகிவிட்ட தாக நினைப்பு.

அவளிடம் அழகிருந்தது கொஞ்சம் படித்திருந்தாள். சினிமா உலகத்தில் உள்ளவர்களில் எத்தனையோ பேருக்கு ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடக்கூடத் தெரியாது. தமிழில் சரியாகக் கையெழுத்திடத் தெரிந்தவர்கள் தான் என்ன ரொம்ப ரொம்பப் பேர்களா இருந்துவிடப் போகிறார்கள்! படங்களில் பலர் தமிழைக் கொலை செய்வதிலிருந்தே அவர்களது படிப்பு லட்சணம் தெரிகிறதே. தனக்கோ ஆங்கிலம் கூட வாசிக்கத் தெரியும், ஹிந்தி வேறு படித்திருக்கிறாள். போதாதா? கொஞ்சம் ஆங்கிலப் பதங்களை இடையிடையே தூவி தமிழைத் தெளிவாகப் பேசினுல், அவள் படித்தவள் என்பது லேசாகப் புரிது விடும். நேரே போக வேண்டியது; பட முதலாளியைப் பார்க்க வேண்டியது. கவர்ச்சிக்கும் முறையில் பேசி தன் ஆர்வத்தைப் பற்றிச் சொன்னதுமே, தனக்கு ‘சான்ஸ்’ கிடைத்து விடும் என்று நம்பினாள். அவள் எண்ணற்ற படங்களைப் பார்த்திருக்கிறாள். அவற்றின் மூலம் அவள் அறிந்தது என்ன? தமிழ்ப் படத்திலே நடிக்க நடிப்புத் திறமை தேவையில்லை, சும்மா அலங்காரப் பாத்திரமாக வந்து வந்து போனால் போதும். பாடும் திறமை கூடத் தேவையில்லை. ‘பிளே பாக்’ முறை என்று ஒன்று இருக் கிறதாமே அதன்படி சரிக்கட்டிக் கொள்வார்கள். நாட்டி யம் கலா பூர்வமாகத் தெரிய வேண்டும் என்றில்லை கைகள் ஆட்டி, கால்களை உதைத்து, இடுப்பை நெளித்து, குதித்துக் குதித்து ஆடினால் போதும். அவள் ‘டிரில்’ செய்து பழகியவள் தான். ஸ்கிப்பிங், ஜம்பிங் எல்லாவற்றிலும் தேர்ந்தவள் தான். அதனால் சினிமாவுக்குத் தேவையான டான்ஸை சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். பாட்டு என்று கத்தும் சிறமை அவளிட மிருந்தது நடிக்க முடியும் என்ற நம்பிக்கையருந்தது. அப்புறமென்ன? அவள் ஏன் சினிமா நடிகையாக முடியாது? இல்லை, ஏன் ஆகக் கூடாது?…

இப்படி அடிக்கடி எண்ணி வந்த அவளுக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. அவளுக்குத் தந்தையில்லை. தாய் தான் இருந்தாள் அவளிடம் தன் ஆசையைத் தெரிவித்தாள். அவளோ உனக்கு எதுக்கு இந்தப் புத்தி? ஒழுங்காக பெண்ணா லட்சணமாயிரு. ‘வாறதை மாசத்திலே கலியாணத்தைப் பண்ணி வைக்கலாம்னு நான் அலைஞ்சு திரிகிறேன் இவள் என்னடீன்னா கூத்தாடிச்சியாகப் போகப் போகிறாளாம்’ என்று சிறினாள். அதற்காக, அவள் ஆசை ஓடுங்கி விடுமா? சமயம் பார்த்திருந்து ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சென்னைக்கு டிக்கட் எடுத்து விட்டாள்.

சினிமாவில் சேர்ந்து விடவேணும் என்கிற ஆசை இந்த யுகத்திலே எத்தனை எத்தனையோ பேர்களை – ஆண்களையும் பெண்களையும் தான் – பற்றிக் கொண்டு விடாது ஆட்டி வைக்கிற வியாதி. இதற்குக் காரணம் புகழ்ப் பசியும், சுல பமாகப் பணம் நிறையப் பெற்று விடலாம்; இவற்றால் பெருமையோடு வாழலாம் என்கிற ஆசையும் தான் அதனால் எத்தனையோ பெண்கள் ஊரை விட்டு ஓடி வந்து விடுகிறார் கள் ‘கெட்டும் பட்டணம் சேர்’ என்கிற பழமொழியை மாற்றி விடுகிறார்கள். இவர்கள் பட்டணத்துக்கு வந்து கெட்டு குட்டிச் சுவராகத் தயாராகி விடுகிறார்கள்.

அவளும் அவ்விதம் வந்தவள் தான். அவளுக்கு பட்டணத்தில் யாரையும் தெரியாது. எந்த இடமும் தெரியாது என்றாலும் துணிந்து விட்டாள். நேராக சினிமாக் கம்பெனி எதங்காவது போவது; அல்லது சினிமாப் பத்திரிகைக்காரர்களில் யார் உதவியுடனாவது செல்வது என்ற எண்ணத்துடன் வந்தவள் அவள். அது மாதிரி வேட்டையாடத் துணிந்த சந்தர்ப்பத்தில் தான் அவள் முதன் முதலில் நானிருந்த பத்திரிகை ஆபீஸுக்கு வந்தது.

இதையெல்லாம் எனக்கு அறிவித்தது ஸ்டுடியோ கண்டன் ஒருவன். அவனுக்குத் தொழிலே இது தான். ‘எக்ஸ்ட்ரா’ வியாபாரம் என்று சொல்லலாம். படங்களுக்குத் தேவையான எக்ஸ்ட்ரா நடிகைகளை முதலாளிகளிடம் அழைத்து வருவதும், சினிமாவில் சேர ஆசைப்படுகிற பெண்களுக்கு சான்ஸ் தேடித்தருவதும், ஒன்றிரு படங்களில் நடித்த பின் பிழைப்பின்றி அவதியுறும் எக்ஸ்ட்ராக்களுக்கு சான்ஸ் வாங்கித் தருவதும், அந்த உதவிக்காக நடிகையிடமும் முதலாளியிடமும் பணம் பெற்றுக் கொள்வதும் தான் அவன் பிழைப்பு, வாழ்க்கை அனைத்துமே.

அவன் தான் அவளையும் சினிமாவில் சேர்த்து விட்டதாகச் சொன்னான்.

ஒரு நாள் அவள் ஸ்டுடியோ ஒன்றின் வாசலில் நின்று கொண்டிருந்தாளாம். காலை எட்டு மணியிலிருந்து நின்றாளாம், மத்தியானம் இரண்டு இரண்டரை மணியாகியும் கூட அவள் அங்கேயே நின்றிருக்கிறாள், உள்ளே அவளை அனுமதிக்காமல் வழி மறைத்திருந்தது காவல். அவள் முதலாளியைப் பார்க்க வேண்டும் என்றாளாம், எந்த முதலாளியை; எதற்காக என்ற கேள்விகள் எழுந்தன. அவள் ஏதாவது படத்திலே நடிக்க சான்ஸ் கேட்கவேணும் என்று சொல்லவும், வாசல் காப்பவன் என்னவோ கேலி பேசியிருக்கிறான். அவள் முகம் கறுத்து நின்றாளாம்.

வெயில் வேறு தகித்திருக்கிறது. சாப்பிட வில்லை. பசி, பணமில்லையே என்ற கவலை, எதிர்காலம் பற்றிய கவலை, ஏமாற்றம், அவமானம் எல்லாம் சேர்ந்து அவளைச் செயலற்றவளாக்கி விட்டன. அவள் செய்வது என்ன வென்று அறியாமல் அங்கேயே நின்றாள். அப்பொழுது, கமுகு மாதிரி அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்த அவன்-எக்ஸ்ட்ரா தரகன்-அவளருகில் வந்த அன்பாகப் பேச்சுக் கொடுத்தான். அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் உபசரித்தானாம். பிறகு அவரையும் இவரையும் பார்த்து சான்ஸ் வாங்கிக் கொடுப்பதற்கு என்னப் பாடா பட்டேன். அப்பப்பா, அன்னைக்கு நான் மட்டும் உதவி புரியலேன்னு சொன்னா, புஷ்பா பாடு அவ்வளவு தானே, ‘தெரு நாய் மாதிரிச் சீரழிஞ்சு போயிருக்க மாட்டாளா சீரழிஞ்சு?’ என்று சொன்னான் அவன்.

அவ நன்றி கெட்ட நாய், ஸார். இவ்வளவெல்லாம் உதவி செய்தேனே. அதை நினைச்சுப் பார்க்கிறாளா? ஊஹூம் எவனோ ஒரு அஸிஸ்டன்ட் டைரக்டரின் உறவு கிடைச்சிட்டுது. அப்புறம் என்னை ஏன் கவனிக்கப் போறா? இந்த எக்ஸ்ட்ராக்களே அப்படித்தான், ஸார். படத்துக்குப் பின் படம் என்று சான்ஸ் வாங்கிக் கொடுக்கிற வரைக்கும் அண்ணே, அண்ணேன்னு பின்னாலே திரிவாளுக. தொடர்ந்து சாள்ஸு கிடைத்து, கண்ணைச் சுழட்டி, ஜாடை காட்டி கம்பெனியிலுள்ள எவனையாவது கைக்குள்ளே போட்டுக் கொண்டால் சரிதான். பிறகு என்னை மறந்து விடுவாங்க. நீ யாரோ, உன்னை யாரு கண்டா என்று விரட்டி விடுவாங்க. தேவடியாப் புத்தி எங்கே ஸார் போகும்?’ என்றான்.

இவன் இப்படிச் சொல்கிறான். அவள் என்ன சொல்வாளோ? இவன் சொல்வதையும் சரி சரி யென்று கேட்டுக் கொள்ள வேண்டியது தான் என்று என் மனம் பேசியது.

‘அப்படியானால் இப்பல்லாம் புஷ்பாவுக்கு நல்ல சான்ஸுதானா?’ என்று கேட்டேன்.

‘என்ன சான்ஸு, எரு விழுந்த சான்ஸு| இந்த பீல்டே அப்படித் தான் ஸார். ஆளுக்கு ஆளு பழகுகிறதைப் பொறுத்திருக்கு. அந்த உதவி டைரக்டர் தயவு இப்ப இருக்கு அவளுக்கு. அது என்றும் நிலைத்திருக்கும்னு என்ன ஸார் நிச்சயம்? எக்ஸட்ராக்கள், சில்லறை நடிகர்கள் பாடு என்றுமே கஷ்டம் தான். வாழ்க்கை ஒரே நிதானமாக இருக்கும்னு சொல்ல முடியாது’ என்றான் அனுபவஸ்தன்.

முடிவு என்ன ஆயிற்று? அவன் சொன்னது தான் நடைமுறையில் நிகழ்ந்தது.

3

மேலும் சில மாதங்களுக்குப் பிறகு நான் புஷ்பாவைச் சந்திக்க சந்தர்ப்பம் துணை புரிந்தது. எதிர்பாராத நிகழ்ச்சி தான் இதுவும்.

நான் திருநெல்வேலி போவதற்காக திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் இடம் பிடித்து வசதியாக உட்கார்ந்த பிறகு, சூழ்நிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். மங்கலான வெளிச்சம் அது வழிந்து கொண்டிருந்த இடத்தில் ஒரு முகம் எனக்கு அறிமுகமானதாகத் தோன்றியது. கவனித்தேன். அவளும் கவனித்தாள். உடனேயே தலைகுனிந்து கொண்டாள்.

அவள் தான், அந்த எக்ஸ்ட்ரா நடிகை புஷ்பா சொந்த ஊருக்குப் போகிறாள் போலிருக்கிறது. வந்து நாளாயிற்று அல்லவா? ரெண்டு வருஷங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் முதன் முதலாக வீடு திரும்புகிறாள் என்று நினைக்கிறேன், அங்கு வரவேற்பு எப்படியிருக்குமோ! பாவம்’ என்று நெஞ்சொடு புலம்பிக் கொண்டேன்.

அவன் என்னைப் பார்க்க விரும்பவில்லை என்று நினைத்தேன். அவள் முகம் அவ்விதமே கூறியது. என்ன காரணமோ? எதாக இருந்தால் தான் என்ன! எப்படியும் போகிறாள். அவள் பார்! ஏதோ ரெண்டு மூன்று தடவைகள் பார்த்துப் பேசியிருக்கிறேன். அவ்வளவு தானே என்று எண்ணினேன்.

நான் நினைத்தது தவறு என்று நிரூபித்து விட்டாள் அவள். ரயில் புறப்பட்டு ஓடத் தொடங்கியதும், அவள் ஜன்னல் அருகில் வருபவள் போல் வந்து நின்றாள். ‘அங்கே சௌகர்யமான இடமிருக்கு. நான் மதுரைக்குப் போகிறேன். உங்களிடம் எவ்வளவோ விஷயங்கள் சொல்ல வேண்டும். தயவு செய்து அந்த இடத்துக்கு வாருங்களேன்’ என்று கெஞ்சுதலாகக் கூறினாள் அவள்.

அவளை, கவனித்தேன். அவள் மிகவும் மாறிப் போயிருந்தாள், முன்பிருந்த அழகு இல்லை. இளமை இல்லை. மிடுக்கும் மினுமினுப்புமில்லை. கவர்ச்சி இல்லை, கசங்கிப் போன மலர் போல் காட்சியளித்தாள் அவள். முகத்திலே சோகம் நிரந்தரமாகக் குடியேறி வாழ்ந்தது. கன்னங்கள் வறண்டு, காமத்தின் மிகுதியான வடுக்கள் ஏற்று காண அருவருப்பு அளிப்பனவாக மாறியிருந்தன. அவளது அழகான கண்களிலே ஒளியில்லை. அவள் செயற்கை அங்காரத்திலும் சிரத்தை காட்டவில்லை. அவளைப் பார்க்கும் போது எனக்கு அவளிடம் அனுதாபமே மிகுந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக வேறொரு மாருதல் கண்களை உறுத்தியது. ஒல்லியாய், துவண்டு விழும் கொடி போலிருந்த அவளுடைய வயிறு பருமனாக வளர்ந்திருந்தது விகாரமாகத் தான் தோன்றியது. அவள் கர்ப்பவதி.

உலகத்தின் உண்மைத் தன்மையை ஒருவாறு புரிந்து வரும் எனக்கு அவளின் கதி பளிச் செனப் புரிந்தது. அவள் கருவுற்றதும், அவளைக் கொஞ்சிக் குலாவிய கயவன் அவளைக் கைவிட்டிருப்பான். அவளுக்கு பிழைக்கும் வழி கூடக் கிட்டியிராது. இந்த நிலையில் அவள் என்ன செய்யப் போகிறாள்? அவளுடைய முழுக் கதையையும் அறிய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவள் உதவியால் சினிமாக் கலையுலக ‘எக்ஸ்ட்ர’க்களின் வாழ்க்கையையே உணர முடியுமே என்ற எண்ணம் தான் காரணம். அதனால் அவன் காட்டிய இடம் சேர்ந்தேன்.

‘நான் திருநெல்வேலிக்குப் போகிறேன். ஆகவே, நீங்கள் மதுரை போகும் வரை. சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்ல முடிக்கலாம். ஏராளமான நேரம் இருக்கி து’ என்றேன்.

அவள் : துயரம் துளும்பிய குரலில் பேசினாள் : ‘நான் கெட்டுப் போனவள். உங்கள் மதிப்புக்கும் அனுதாபத்துக்கும் அருகதையற்றவள். எனக்கு நீங்கள் மரியாதை காட்ட வேண்டியதில்லை.’

அவள் அப்படிப் பேச ஆரம்பித்தது எனக்குப் பிடிக்க வில்லை. எனக்கு வேதனையையே தந்தது தாழ்ந்து போன அவள் மேலும் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ள விரும்பியது. அதனால் சொன்னேன் : ‘சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் மனிதர்களை எப்படி எப்படி யெல்லாமோ ஆட்டி வைக்கின்றன. இவற்றின் காரணத்தால் மனிதத்தன்மை பறிக்கப்பட்டோ, நசுக்கப்பட்ட்டோ போய் விடலாம். அதற்காக என்றுமே ‘தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்து’ போக வேண்டியது தான் ஒரு முறை தவறிவிட்டவர்கள் என்பதை நான் ஆதரிக்கவில்லை. தவறுவது இயல்பு, பிறகு திருந்தி, இழந்த மனிதத் தன்மையை மறுபடியும் பெற முயற்சிப்பது தான் மனிதருக்கு அழகு, உங்கள் வாழ்க்கை உங்களை மிகவும் சோதித்திருக்கலாம் சோர்வுற்றுச் சாம்பிக் குவிந்துள்ள நீங்கள் எல்லோரிடமும் அவமதிப்புற வேண்டும் என்று எண்ணு வானேன்?…’

அநாவசியமாக நான் பிரசங்கம் பண்ணத் தொடங்கி விட்டேனோ என்ற சந்தேகம் எழவே, எனது பேச்சு நின்று விட்டது.

‘நீங்கள் முதலிலேயே சொன்னீர்கள், சினிமாவில் சேருவது சுலபமல்ல என்று, பிறகு, சினிமாக் கலை இன்றைய நிகயிலே எப்படி உருப்படும் என்று கேட்டீர்கள். நீங்கள் சொன்னது சரி தான்…… உங்களைப் பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களிடம் என் வாழ்க்கையை-எக்ஸ்ட்ரா நடிகையின் கேவலமான பிழைப்பைப்-பற்றிச் சொல்ல வேண்டும் என்ற ஆசை, எனக்கு ரொம்ப நாளாக இருந்தது. ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. நீண்ட கடிதம் எழுதலாமா என்று எண்ணினேன். துணிவு வரவில்லை. முதலில் உங்களுக்குக் கடிதம் எழுதவே எனக்கு பயம். ஆமாம். பயம் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாவதாக, சில விஷயங்களை எப்படி எழுத்திலே வெட்கமின்றிக் கூறுவது என்ற தயக்கம். மூன்றாவதாக, என்னால் தொடர்பாக மனசில் எழுவதை எழுதமுடியாது என்ற காரணம், இப்படிக் காலம் ஓடிவிட்டது. நல்லவேளை, இன்று சந்தர்ப்பம் துணை புரிந்தது. இது தான் நான் உங்களைப் பார்க்கும் கடைசி முறையாக இருக்குமென நினைக்கிறேன். எனது எதிர்காலத்தை எண்ணிப் பார்க்கும் மனத்தெம்பு கூட எனக்கில்லை, எதிர்காலம் பேய் மாதிரி இருள் படிந்து பயங்கரமாக ளர்ந்து நிற்கிறது. சிலசமயம் நான் செத்துப் போவேன் என்ற எண்ணம் எழுகிறது. நானே தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைப்பது, உண்டு. அதற்குக் கூட துணிச்சல் இல்லை. சாகவும் பயமாக இருக்கிறது. வாழவும் பயமாக இருக்கிறது. எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை. ஒன்றுமே ஓட வில்லை, நான் மதுரைக்குப் போகிறேனே. அங்கு போய் என்ன செய்யப் போகிறேன்? எனக்கே தெரியாது. ஆனால் எங்காவது போயாக வேண்டுமே. பட்டணத்திலிருந்து தான் என்ன செய்வது? செலவுக்கு வழி? மதுரையில் என் அம்மா இருக்கிறாள். அவளிடம் எப்படிப் போய் முகத்தைக் காட்டுவது என்று இதுவரை இருந்தேன். வேறு வழி எதுவுமில்லை என்ற நெருக்கடி ஏற்பட்டவுடன் வருவது வரட்டும் என்று கிளம்பிவிட்டேன், கெட்டுப் போன சிறுக்கி; தட்டுவாணி என்று எல்லோரும் ஏசுவார்கள் என்ன செய்வது?…’

அவள் தன் அனுபவத்தை வீரிவாகவே சொன்னாள். நான் அனுதாபத்துடன் கேட்டிருந்தது அவளுக்குச் சிறு ஆறுதல்.

தான் எண்ணியபடி எதுவும் நடக்காது என்பதை உணர புஷ்பாவுக்கு அதிக காலம் பிடிக்க வில்லை. ஆரம்பத்திலேயே கசப்பு தட்டி விட்டது. அவள் கம்பெனி கம்பெனியாகத் திரிந்தாள். முதலாளிகளைப் பார்க்க முடியவில்லை. ஸ்டுடியோ வாசல்ல் காத்துக் கிடந்தாள். பயனில்லை கொண்டு வந்திருந்த பணம் கரைந்து விட்டது: சாப்பாட்டுக்கும் தங்கவும் இடமில்லையே என்று எண்ணும் போது அவளுக்கு அழுகை வந்தது. அந்தச் சமயத்தில் தான் ஸ்டுடியோவைச் சுற்றிக் கொண்டிருந்த கறுப்பசாமி அவள் பக்கம் வலை வீசி அவளைப் பிடிக்க முடிந்தது. அவன் பரிவாக விசாரித்து ஆறுதல் கூறியது வறண்ட வயலுக்குப் பின் குளிரக் குளிர மழை பெய்தது போலிருந்தது. புதிதாகத் தானாகவே போய் சேர்ந்து விட முடியாது; அனுபமுள்ளவர்களின் உதவி வேணும்; தனக்குப் பலரைத் தெரியும்; தான் எத்தனையோ பேர்களை சினிமாவில் சேர்த்து விட்டது உண்டு என்று அவளுக்குச் சொன்னான். வீட்டுக்கு வந்து தங்கலாம்; அம்மா இருக்கிறாள், கவனித்துக் கொள்வாள் என்றும் தெரிவித்தான்.புஷ்பாவுக்கு வெறு வழி எதுவும் தென்பட வில்லை. ஆகவே அவனுடன் சென்றாள்,

அவன் அவளை ஒரு முதலாளியிடம் அழைத்துச் சென்றான். அவர் மறுபடி வரச் சொன்னார். வேறு இரண்டு மூன்று படக் கம்பெனிகளுக்கும் கூட்டிச் சென்றான், ஒருவரிடம் தனியாக ரொப நேரம் பேசிக் கொண்டிருந்தான். திரும்பி வந்ததும், அங்கு சான்ஸ் கிடைக்கலாம் என்று அறிவித்தான். தினம் அவரிடம் சொல்ல யிருக்கிறேன், இந்த முதலாளியிடம் பேசியிருக்கிறேன் என்று உறுதி கூற அவன் தவறுவதில்லை. சான்ஸ் கிடைக்குமா என்ற சந்தேகம் பிறந்தது அவளுக்கு மூன்று நாட்களுக்குப் பிந்கு அவன் சந்தோஷமாக வந்து, அவளை அழைத்துப் போனான். அம்முறை ஏமாற்றமில்லை.

அவள் கனவு கண்டாள். முதல் படத்திலேயே நல்ல சான்ஸ் கிடைக்கும் ஏதோ நாலைந்து ரீல்களில் தோன்றிப் பேசி, படம் பார்க்கிறவர்கள் நினைவில் நிற்கும்படி ஒளிர்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என எண்ணினாள். பிறகு தானாக சான்ஸ்கள் வரும் இரண்டு மூன்று படங்களுக்குப் பிறகு முக்கிய பாத்திரமாகத் தோன்றலாம். பணமும் புகழும் ஏராளமாகக் கிடைக்கலாம். வசதியாக வாழலாம். இப்பொழுது பட்ட கஷ்டங்களை யெல்லாம் மறந்து விடலாம் என்று நம்பினாள்.

முதல் நாள் – அவளைப் படக் கம்பெனியில் சேர்த்து விட்ட அன்று -இரவில், கருப்பசாமி சிரித்துச் சிரித்துப் பேசி அவளை வளைய வந்தான். அவன் போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை இருந்தாலும் என்ன செய்வது? உதவி செய்தவன், அவன் வீட்டில் தங்கியிருக்கிறாள். சீறி விழ முடியுமா? சிரிக்கத்தான வேண்டும்! அவன தன் ஆசையை அறிவித்தான். அவளுக்குப் பகீரென்றது. இப்படியும் நடக்குமென அவள் எதிர்பார்க்க வில்லை. அவள் கோபம் காட்டினாள். ‘என்னடி பத்தினித்தனம் பண்றே! மதுரையிலே நீ டிக்கெட்டுப் போட்டுக் கிட்டிருந்திருப்பே, தெரியாதாக்கும். உன்னைக் கட்டி வந்து உதவி செய்தது எதற்கு? பணம் வந்ததும் நீ தரப் போகிற கமிஷனுக்கு மட்டும் தான்னு நினைச்சியா? ஹ ஹ ஹா’ என்று ‘வில்லன்’ சிரிப்பும் பார்வையும் சிதறினான் அவன், என்ன செய்ய முடியும்? அவன் ஆசை காட்டினான், தன்னால் பெரிய பெரிய சான்ஸ்கள் எல்லாம் பிடித்துத் தர முடியும் என்றான். அவளுக்கு ஆசையிருந்தது சினிமா நட்சத்திரம் ஆக வேண்டுமென்று. ஆகவே அவனிடம் அவள் தன்னையே கொடுத்து விட வேண்டியதாயிற்று.

முதலில், படத்தில் சும்மர தோழியாக வந்து போவது தான் என்றறிந்ததும் அவளுக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. ஹீரோயின் பார்ட அவள் எதிர்பார்க்கவில்லை தான் என்றாலும் இவ்வளவு அகாமதேயமான ஒரு வேஷம் தானா என்று நினைக்கவும், கண்ணீர் வடித்தாள் அவள்.. அவனிடம் சொன்ன போது, அவன் தனது ‘டிரேட் மார்க்’ சிரிப்பையே உகுத்தான். ‘பின்னே என்ன ஹீரோயினி ஆக்ட்டு கிடைக்கும்னு நினைச்சியா?’ என்றும் கிண்டல் செய்தான்.

சினிமாவில் நடிப்பது மகிழ்வான, கலையான, கௌரவமான, மசிப்பான வேலை என்று எண்ணி வந்த அவளுக்கு அதைப் போன்ற மோசமான அலுவல் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ற எண்ணத்தை உண்டாக்கியது அனுபவம். அவள் ஒரு எக்ஸ்ட்ரா. எஸ்க்ட்ரா நடிகை என்றதுமே கேவலமாகக் கருதுகிறார்கள் பலரும். தொழி லில் உள்ளவர்களில் பெரும்பாலோரே தான். அவள் பிழைப்பிற்காக பிறர் தயவை எப்படியாவது பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது. எப்படியாவது என்று கருப்பசாமி சொன்னதன் பொருள் அவளுக்குப் புரிந்தது. தயவைப் பெறுவதற்கு அவள் தன்னை, தன் உடலை காணிக்கை யாக்க வேண்டி யிருந்தது. பட உலகச் சில்லறைத் தேவதைகள், பூசாரிகள் முதல் முதலாளி ஐயாவின் கார் டிரைவர் வரை, அவள் ஒரு எக்ஸ்ட்ரா என்பதனால் அவளிடம் தங்களுக்குத் தாராள உரிமை உண்டு என்று நம்பினார்கள் அப்படியே நடந்து கொள்ளத் தவித்தார்கள். கலையின் பெயரால் காமம் ஆட்சி செலுத்துவதை அவன் உணர்ந்தாள். கௌரவம், அந்தஸ்து. பணம் படாடோபம் செல்வாக்கு முதலிய போர்வைகளில் மிருகத்தனமும் சின்னத்தனங்களும் செழிப்புற்று வாழ்வதை அவள் உணர முடிந்தது. அந்தப் படு பயங்கரமான சுழலிலே அவள் சிக்கிக் கொண்டாள். அவளாகவே ஆசையோடு வந்து விழுந்தாள். இனி மீள வழியல்ல என்றே தோன்றியது.

முதல் படத்திற்குப் பிறகு ‘சான்ஸ்’ கிடைப்பது சுலபமாக இருக்கவில்லை. பழைய கதையேதான். அலைந்து அலைந்து திரும்புவது. சிபாரிசுச் சீட்டாக சிலரிடம் தன்னை ஒப்புவிக்க வேண்டியிருந்தது. கலையின் பெயரால் கௌரவமான விபசாரம் அல்லாமல் வேறு என்ன இது என்ற நினைப்பு எழும், ஆனால் அவள் பிழைக்கவேண்டுமே! எத்தனையோ தினங்கள் அவன் பட்டினி கிடந்தாள். கறுப்பசாமியும், ‘அம்மா’ என்று அவன் அழைத்த ஸ்திரீயும் போதனைகள் பல புரிந்து அவளை ‘தொழிற்காரி’ யாக மாற்றி விட்டார்கள் உயிர் வாழ்வதற்காக அவள் உடலை விற்றாள். பணத் தேவையும் இருந்ததே! படக் கம்பெனிகளுக்குப் போக நல்ல டிரெஸ் தேவை. பவுடர் முதலியன தேவை. பணம் சம்பாதிக்க வேறு வழியில்லை.

இப்படி அல்லலுற்ற அவளுக்கு அந்த உதவி டைரக்டரின் தயவு கிட்டியது. அவன் தாராளமாகப் பண உதவி செய்தான். ஒன்றிரண்டு படங்களிலும் சான்ஸ் கிடைத்திருந்தது. இனியாவது கௌரவமாக வாழ முயல வேண்டும் என்று நினைத்தாள். அதற்காக கறுப்பசாமி வீட்டிலிருந்து வெளியேறினாள். தனியாக ஒரு சிறு வீடு பார்த்துக் குடிபுகுந்தாள். வீடா அது! பன்றிக் குச்சு மாதிரி. ஆனால், பட்டணத்தின் சுற்றுப் புறங்களிலே இத்தகைய குடிசைகள் தானே பெருத்துப் போயுள்ளன. இவற்றில் தானே கூனிக் குறுகி ஒண்டி ஒடுங்கிக் கிடக்க வேண்டியிருக்கிறது எண்ணற்வர்களுக்கு? வேறு போக்கு ஏது? அவளும் அப்படித்துணிந்தாள், ஆனால் காலமும் அவளது புதிய அன்பனும் வஞ்சித்து விட்டதால் அவள் அதிகம் சீரழிய நேர்ந்தது. தனக்கு இனி விமோசனமே கிடையாது என்று நினைத்தாள். அவள் கருவுற்றதும் அவன் அவளை ஒதுக்கி விட்டான். அவனை அவள் பார்க்கவே முடியவில்லை. எங்கிருக்கிறானோ தெரியாது.

அவள் மானத்தை விட்டுவிட்டு, கறுப்பசாமியை போய்ப் பார்த்தாளாம். ‘வயிற்றில் வளர்ந்து வருவதை அழித்து வீடு. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள். பிறகு எங்காவது சான்ஸ் கிடைக்குமா பார்க்கலாம்’ என்றானாம். அதை விட தன்னையே அழித்துவிடுவது நல்லது என்று எண்ணினாள் அவள். ‘இவ்விதம் தான் பலபேர் வாழ்கிறார்கள். வாழ்வதற்காக எல்லாவற்றையும் துறந்து விட்டார்கள், மனிதத்தன்மையையும் தான்’ என்றாள் புஷ்பா பொங்கி வந்த துக்கத்தை அடக்கமுடியாமல் கண்ணீர் வடித்தாள். ஜன்னலில் முகம் சாய்த்து அழுது கொண்டு கிடந்தாள் அவள். அடங்காத விம்முதலின் அறிகுறியாக, ஜன்னலின் பக்கம் சாய்ந்திருந்த அவள் முதுகு உயர்ந்து தாமும் கணத்துக்குக் கணம். அவள் அழுகையில் தான் ஆறுதல் காணவேண்டும். அப்படியும் ஆறுதல் பெற முடியுமா?

எனக்கு அவளிடம் அனுதாபம் அதிகரித்தது. ஐயோ பாவம்! பெரிதாக வளர்ந்து வருகிற ஒரு கலைத் தொழிலில், அதே வேகத்தோடு வளர்ந்து, அந்தத் தொழிலுக்காக தங்களையே காவு கொடுத்துக் கொள்ளும் இனத்தில் ஒரு சிறு புள்ளி அவள். அவளுக்கு உயர்வில்லை, உய்வு கிடையாது. அவள் ஒரு எக்ஸ்ட்ரா தான்!.

– கோரநாதன், முதற்பதிப்பு: அக்டோபர் 1949, அறிவுப் பண்ணை, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *