அப்பாவி முனீஸ்வரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,756 
 

காலம் அவனுக்குத் தீராப் பகையானது. வெகுநாட்களாக் காத்திருக்கும் போல! தக்க தருணத்தில் பழிதீர்த்தது. வசமாக மாட்டிக்கொண்டான். அவனுக்கும் வாழ்வுக்குமான உறவே அறுந்துபோனது. பிடிமானம் என்பதே இல்லாதிருந்தது. அப்பன், ஆத்தா உயிரோடு இல்லை. இருந்திருந்தால், குடிக்கக் கஞ்சியாவது இருந்திருக்கும்.

அவன் ஆத்தா ‘முனி’ சாமியை நினைத்து, அவனுக்கு முனீஸ்வரன் என்று பெயரிட்டாள். ‘முனி வீரமுள்ள சாமி. ஈவு, இரக்கம் பார்க்-காது. ஒரே அடியாக அடித்துவிடும். பொல்லாச்சாமி’

இப்படியெல்லாம் கதை சொல்வார்கள். ஆனால், இவன் அப்படி இல்லை. கோழை. அப்பன், ஆத்தா இல்லாத ஏக்கத்திலேயே வளர்ந்த பயல். வெள்ளை மனசு. ஒரு ஈ எறும்புக்குத் துரோகம் நினைக்க மாட்டான். அவனுக்கு வேண்டியது எல்லாம், வயிற்றுக்குச் சோறு. தினம் ஒருவேளை போதும், சீவனம் ஓடிவிடும்.

மார்கழி மாத முடிவு. பகல் துவங்கியது. வானம் இருண்டு கிடந்தது. வெயில் வருவதற்கு வெகு நேரம் ஆகும் போல! தெருவெங்கும் சாணி தெளித்த ஈரம். வாசலெங்கும் அரிசி மாக்கோலம். பெரிய வீடுகளில் சிறிய கோலம்; சிறிய வீடுகளில் பெரிய கோலம். கோலத்தின் மையத்தில் சாணப் பிள்ளையார். பிள்ளையாரை பூசணிப் பூவும், பறங்கிப் பூவும் அலங்கரித்தன. ஊரே பனி மூட்டத்துடன் குளிர்ந்திருந்தது.

முனீஸ்வரன் வீடு மட்டும் வெறிச்சோடிக் கிடந்தது. மண்சுவரில் கூரை வீடு. சுவர் மண் கரைந்து ஒழுகிய சுவடுகள்.

‘‘ஏய் முனி… எந்திரிடா! பொழுது விடிஞ்சு எம்மா நேரம் ஆவுது… இன்னும் தூங்குற? எந்திரி. பருத்திக்கொல்ல கொத்தப் போவணும்!” – திண்ணையில் படுத்திருந்த முனீஸ்வரனைக் காலங்கார்த்தாலேயே வந்து எழுப்பினான் மாடசாமி.

முனீஸ்வரன் அரைகுறையாகக் கேட்டு எழுந்து உட்கார்ந்தான். பசியில் காது அடைத்திருந்தது. எழுந்து இரண்டு அடி நடப்பதற்குள், கெண்டைக் கால் பிடித்து இழுத்தது. தெருவில் ஊர் ஆட்கள் தென்படவில்லை. வேலைக்குப் போயிருந்தனர். ஆடு, மாடுகள் மேய்ச்சலில் இருந்தன. வயலில் பெண்கள் பட்டக் கயிற்றைப் பிடித்துப் பருத்தி விதையிட்டனர். பள்ளிக்கூடச் சிறுசுகள் சிண்டு அய்யர் போர்செட்டில் குளித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். தான் மட்டும் சோம்பேறியாக இருப்பதாக இவனுக்கு மனசு உறுத்தியது.

போர்செட்டில் யாருமில்லை. கைலி, சட்டை இரண்டையும் களைந்து, கசக்கிக் காய வைத்தான். கோவணத்துடன் முங்கிக் குளித்தான். பின்பு ஈரத் துணிகளை உடுத்திக்கொண்டு, வீட்டுக்குப் போனான். வீடு பூரா ஒட்டடை. கீற்றுகளின் ஓட்டை வழியே சூரிய ஒளி புகுந்து, மண் தரையில் வெளிச்சக் கோலங்கள் வரைந்திருந்தது. சாமி மாடம் அருகில் போனான். எப்போதோ அய்யனார் கோயில் பூசாரி கொடுத்த திருநீறு பொட்டலம் இருந்தது. குங்குமச் சிமிழில் குங்குமம் நிறைந்திருந்தது. அதைத் தீர்ந்துபோகவே விடமாட்டாள் ஆத்தா. கொல்லுமாங்குடி சந்தைக்குப் போகும் போதெல்லாம் வாங்கி வந்து நிரப்பிடுவாள். திருநீற்றைக் குழைத்து நெற்றியிலும் மார்பிலும் கையிலும் இட்டுக்கொண்டான். ஆத்தா படத்தை உற்றுப் பார்த்-தான். ஓரங்களில் கரையான் அரித்திருந்தது. சுவர் பூரா கரையான்கள். சாமிப் படங்களெல்லாம் மழையில் நனைந்து, உருவங்கள் அழிந்திருந்தன. நல்ல விளக்கில் எண்ணெய் காய்ந்து பிசுபிசுப்புடன் இருந்தது. தன்னை அறியாமல் கண்ணில் நீர் வந்தது. வாய்விட்டு அழ நினைத்தவன், அடக்கிக்கொண்டான். ‘ஆத்தா விளக்கேத்தி எம்மா நாளாச்சு!’ என்று நினைத்துக் கொண்டான்.

சின்னத்தாயி இருந்தபோது வீடு இப்படி இராது. மங்களகரமாக இருக்கும். வீட்டு வாசலிலிருந்து அடுப்பங்கரை வரை சாணத்தால் மெழுகி, வீடே கோயில் மாதிரி இருக்கும். பொழுது விடிந்ததும் நல்ல விளக்கேற்றி, வத்தி கொளுத்தி, சாம்பிராணி வாசனை தெருவெங்கும் வீசும். உலகமே சாமி இருக்கா, இல்லையா என்று விவாதம் நடத்திக்கொண்டு இருக்க, ஏதோ சின்னத்தாயி வீட்டில் மட்டும் சாமி இருக்கிறதாகப்படும், சுற்றியிருப்பவர்களுக்கு.

சின்னத்தாயி இருந்தபோது முனீஸ்-வரன் ஒரு நாளும் இப்படிப் பசியும் பட்டினியுமாக இருந்ததில்லை. பின்னோக்-கிப் போனால், காலம் உயிரோட்டமாக இருக்கும். பங்குனி மாத அம்மன் திரு-விழா-வின் கடைசி நாள், பெரியாச்சி அம்மனுக்கு கெடா வெட்டிப் படையல்; அய்யனார் கோயில் படையல்; பிடாரியம்ம-னுக்குப் புரட்டாசி மாதம் படையல்; வைகாசி மாதம், மேலகட்டுத்திடல் முனீஸ்வரனுக்குப் படையல். எல்லாவற்றிலும் ‘டாண்’ என்று முனீஸ்வரன் ஆஜராகிவிடுவான்.

அப்போது, வைகாசி மாசம். முனி சாமிக்குக் கெடா வெட்டுப் படையல். பொழுதுசாயும் நேரம். பரபரப்பாக வீட்டினுள் நுழைந்து, கொடியிலிருந்து பச்சைக் கைலியை உருவிக் கட்டிக்கொண்டான் முனீஸ்வரன். சாமி மாடத்தில் இருந்த திருநீற்றை எடுத்துக் குழைத்து, நெற்றியில் பட்டையாக இட்டுக்கொண்டான். நடுவில் பெரிய வட்டமாக குங்குமப் பொட்டு. இடுப்பில் சிவப்புத் துண்டு கட்டிக்கொண்டான். பார்ப்பதற்குக் கோயில் பூசாரி மாதிரி இருந்தான். நேர் வாக்கெடுத்துத் தலையை வாரிக்கொண்டு, வாசலுக்கு வந்தான். ஊர்ப் பெரியவர்கள் படையலுக்கு வேண்டிய சாமான்களை எடுத்துப் போய்க்கொண்டு இருந்தனர். கூட்டத்தைப் பின்தொடர்ந்தான். ‘‘முனீஸ்வரா! இன்னிக்கு உன் காட்டுல மழதான்!” என்று கிண்டலடித்தார் முண்டாசுக் கிழவர் ஒருவர். சந்தோஷமாக நெஞ்சு நிமிர்த்தி நடந்தான் முனீஸ்வரன்.

படையலுக்குக் கறிச்சோறு தயாரானது. தண்ணீர் எடுப்பதிலிருந்து காய்கறி அரிவது, அடுப்பு எரிப்பது என சமையலுக்கு உதவினான் முனீஸ்வரன். இருட்டு ஆக ஆக, போஸ்ட் மரத்திலிருந்து கொக்கி போட்டு மஞ்சள் விளக்கு எரிந்தது. ராத்திரி ஒன்பது மணிக்குப் படையல் நடந்தது. ஓயாமல் வேலை செய்ததில், முனீஸ்வரனுக்கு நல்ல பசி. முதல் பந்தியில் இடம் பிடித்துக்கொண்டான். சிவனாண்டி கறிச்சோற்றைப் போட்டுக்கொண்டே போக, ‘இன்னிக்கு ஒரு புடி புடிச்சிட வேண்டியதுதான்’ என்று ஒரு முடிவோடு சாமியைக் கும்பிட்டு, சோற்றைக் கையிலெடுத்தான் முனீஸ்வரன்.

‘‘முனீ… முனீஸ்வரா…’’ என்று பதறியடித்து ஓடி வந்தான் வேலப்பன். கையில் எடுத்த சோற்றை மறுபடி இலையில் போட்டுவிட்டு, எழுந்து நின்றான் முனீஸ்வரன்.

‘‘முனீ… சீக்கிரமா வூட்டுக்கு வா! அங்க உன் ஆத்தா பேச்சு மூச்சு இல்லாம உசுருக்குப் போராடிக்கிட்டுக் கெடக்குது!”

கதிகலங்கிப் போனான் முனீஸ்வரன். பிறகு எழுந்து தலைதெறிக்க வீடு நோக்கி ஓடினான். வயல் வரப்புகளில் விழுந்தெழுந்து, சேறும் சகதியுமாக வீடு போய்ச் சேர்ந்தான். தெருவில் இவன் வீட்டு முன் ஊர்ச் சனங்கள் கூடியிருந்தனர். வீட்டுக்குள் ஒப்பாரிச் சத்தம். இவன் நெஞ்சு படபடக்க வீட்டுக்குள் நுழைய, ஒப்பாரி பாடிக்கொண்டு இருந்தவர்களில் ஒரு கிழவி இடையில் பாட்டை நிறுத்தி, சேலையில் மூக்கைச் சிந்தி, ‘‘வா ராசா! கடைசி நேரம் வரைக்கும் எம் புள்ளையப் பாக்கணும், எம் புள்ளையப் பாக்கணும்னு சொல்லிக்கிட்டே உசுர விட்டாடா ஒன் ஆத்தா! எப்படி மண்ணுல சாஞ்சு கெடக்கா பாருடா, நான் பெத்த ராசா!’’ என்றாள்.

‘‘இப்பிடி அவனைத் தன்னந்தனியா தவிக்க வுட்டுட்டுப் போயிட்டியே ஆத்தா! அவனுக்கு ஒன்ன விட்டா வேற யாருடி இருக்கா? பாவம், இந்தப் புள்ள இனி அநாத ஆயிடுமே! என்ன பண்ணுவான் சாமி…’’ என்று புலம்பினாள் தெற்குத் தெரு சரோஜா.

வாயடைத்துப்போய் நின்றான் முனீஸ்வரன். உயிரை இழந்தவனாக, ஆத்தா அருகில் அமர்ந்தான். அவள் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். ‘‘ஆத்தா… ஆத்தா…” என்று மெல்லியதாக முனகினான். ஊர் மக்கள் அடுத்து ஆக வேண்டிய காரியத்தைப் பார்த்தனர்.

பொழுது விடிந்ததும் சொந்தங்-களுக்குச் சொல்லியனுப்பினர். பெருங்கூட்டம் சேர்ந்தது. சாயங்காலம், தப்பு வேட்டுச் சத்தத்துடன் சின்னத்தாயி இறுதி ஊர்வலம் போனாள். பிணத்தை இடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பும்போது நல்ல இருட்டு. சாமி மாடத்தின் எதிரில் அமர்ந்தான் முனீஸ்வரன். மாடத்தில் விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. காலம் வலியோடு நகர்ந்தது. வெகுநேரம் அமர்ந்தபடியே இருந்தான். சாமி மாடத்தில் எப்போது விளக்கு அணைந்ததோ!

அன்றோடு சரி… விளக்கும் எரிவதில்லை; அவன் வாழ்வும் உயிரற்றுப்போனது! காலம் தன் விளையாட்டில் தந்திரமாகக் காயை நகர்த்த, திக்கற்றவனானான் முனீஸ்வரன்.

ஆத்தாவின் நினைவிலிருந்து மீள முடியாமல், வீட்டுக்கு வெளியே வந்தான் முனீஸ்வரன். மணி காலை எட்டரை இருக்கும்.

‘பருத்தி வயல்ல இந்நேரம் ஒரு பட்டம் முடிஞ்சிருக்கும்’ என நினைத்துக்கொண்டான். பசி எடுத்தது. மல்லியத்து அத்தை வீட்டுக்கு நடந்தான். அத்தை இட்லி சுட்டுக்கொண்டு இருந்தது. ஏழெட்டுப் பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். ரொம்பத் தயங்கி, ‘‘இட்டிலி கொடு அத்த, நேத்துக் காலைலேருந்து பட்டினி!” என்றான் முனீஸ்வரன்.

‘‘அட ஏன்டா நீ வேற வவுத்தெரிச்சலக் கௌப்புற! நானே கடன வொடன வாங்கிப் பொழப்பு நடத்திட்டிருக்கேன்…’’ என்று இழுத்தாள்.

‘‘தை மாச அறுப்புக்குத் தந்துடறேன் அத்த!”

‘‘ஆமா, நீயும் இப்படித்தான் மாசாமாசம் சொல்லுற! ஆனா, தந்தபாடில்ல! நா ஒண்ணும் பணங்காசு சேக்க யாவாரம் பண்ணலப்பா! வயித்துப் பொழப்புக்குதான்! ஏதோ அப்பன், ஆத்தா இல்லாத புள்ளயாச்சேன்னு ஒரு நா, ரெண்டு நா இட்டிலி கொடுக்கலாம். அதான் சாக்குன்னு அடிக்கடி வந்து நின்னா எப்படி? ஒரு வேலைக்கும் போக மாட்ற! என்னா புள்ள நீ!”

‘‘எங்க அத்த வேலை இருக்கு?”

‘‘நேத்திக்குப் பண்ணையாரு வூட்டுல கூப்புட்டாங்களாம். நீ வர முடியாதுன்னு சொன்னியாமே? கொழுப்பு-தானே?’’

‘‘இல்ல அத்த, அங்கே பொழுதுக்கும் இடுப்பொடிய வேலை செஞ்-சுட்டு, அவங்க கொடுக்குற அம்பது ரூவா சம்பளத்துக்குப் பண்ணையாரு கால் அமுக்கச் சொல்லுவாரு. சரியா அமுக்கலைன்னு நெஞ்சுலயே எட்டி ஒதப்பாரு. அதான், போகல!”

ஒரு நிமிடம் மனசு இளகி, கண்கலங்கி நின்றாள் மல்லியத்து அத்தை.

‘‘யாருதான்டா கஷ்டப்படல, சொல்லு? எல்லாருந்தான் கஷ்டப்படுறோம்!” என்றபடி இட்லியைப் பிட்டு சட்னியில் முக்கி வாயில் போட்டுக்கொண்டது ஒரு பெரிசு.

அவரை இன்னொரு பெரியவர், ‘‘ஒனக்கு என்னப்பா, உங்கப்பன் இருந்தவரைக்கும் அவர் சொத்தைத் தின்னே தீர்த்துப்புட்ட! ஏன் சொல்ல-மாட்டே?’’ என்று நக்கலடித்தார்.

சுவர் ஓரமாக மண் பானையில் நீர் இருந்தது. சொம்பில் மொண்டு வயிறு நிறையக் குடித்தான் முனீஸ்-வரன். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினான்.

‘‘இருடா, இட்டிலி தரேன். தின்-னுட்டுப் போ!” என்றாள் அத்தை.

‘‘இல்ல அத்த, நான் கௌம்புறேன்!”

‘‘சரி, இப்ப எங்க போறே?”

‘‘மேலக்கட்டுல பருத்திக் கொல்ல கொத்தப் போறேன்!’’ என்றவன், வேகமாக நடந்தான்.

பருத்தி வயலில் ஆட்கள் மூன்றாவது பட்டத்தைப் பிடித்தனர். முனீஸ்வரனைக் கண்டதும், ‘‘ஏய்… ஒன்ன எப்ப எழுப்பிட்டு வந்தேன்… ஆடி அசைஞ்சு இப்ப வர்ற? வெயில் வர்றதுக்கு முன்னாடி வேலைய முடிச்சா, மத்தியானம் சித்த படுத்து எந்திரிக்கிலாமுல்ல? சரி, சாப்புட்டியா?” என்றான் மாடசாமி.

‘‘ம்…”

‘‘கொஞ்சம் முன்னாடி வந்திருந்தாலும், கள்ளாச்சும் குடிச்சிருக்கலாம். இருந்த கள்ளு பூராத்தையும் குடிச்சுப்புட்டானுவ. அந்தத் தூக்கு வாளியில் ஏதாச்சும் மிச்சம் மீதி இருக்கான்னு பாரு!’’

வரப்பு ஓரமாக இருந்த தூக்குவாளியை எடுத்துப் பார்த்தான் முனீஸ்வரன். ஒரு கொட்டாங்குச்சி அளவுக்குக் கள்ளு இருந்தது. அதை வாயில் கவிழ்த்துக்கொண்டான். மேல்நாக்கை நனைத்தது போல் இருந்தது. அது மேலும் பசியைக் கிளப்பிவிட்டது. தலை கனத்துப்போனது.

கந்தசாமி வயலுக்குக் கன்னி வாய்க்கால் வழியாக நீர் ஓடியது. முனீஸ்வரன் அதில் துண்டை நனைத்-துப் பிழிந்தான். ஈரத்தை முகத்தில் அழுத்திக்கொண்டான். பின்பு ஈரத் துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு, மண்வெட்டியை எடுத்துப் பட்டம் பிடிக்க ஆரம்பித்தான். நினைவுகள் முன்னும் பின்னுமாக ஓடின. ஆத்தாவை நினைத்துக்கொண்டான். ஊர் மக்கள் உதவாததை எண்ணி வருத் தப்பட்டுக்கொண்டான். கடவுளிடம் பல கேள்விகளை முன்வைத்தான்.

காலை வெயில் அதிகரித்தது. தனது கோபத்தை பூமியின் மீது காட்டினான் முனீஸ்வரன். மண்வெட்டியிலிருந்து களைமண் சிதறியது. கொத்துகிற கொத்தில் பூமியே இரண்டாகப் பிளந்துவிடும் போலிருந்தது. அடிக்கிற வெயிலில், இடுப்புத் துணி கருகிவிடும் போலிருந்தது. நா வறண்டது. முதுகில் வெயில் சுள்ளென்று குத்தியது. உடல் முழுக்க வியர்வை வழிந்தோடியது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. கை,கால் கொரக்-களி இழுத்தது. ‘நான் பெத்த மவனே, ராசா! பசிக்குதாடா தம்பி…’ என்று ஆத்தா பரிவோடு கேட்பது போல் இருந்தது. அந் நேரம் குழந்தை ஆனான் முனீஸ்வரன். அழுதான். வானத்தின் நீலமும், வயல்வெளியின் பச்சையும் மங்கிப்போயின. கையிலிருந்து மண்வெட்டி நழுவிக் கீழே விழுந்தது. சுற்றிலும் இருள் சூழ்ந்தது. கழுகாய் வட்டமிட்டுக்-கொண்டு இருந்த காலம், கோட்டானாய் ஓரிடத்தில் அமர்ந்து, தன் வட்ட விழிகளை விகாரமாகத் திறந்து பார்த்தது. ஊரே நிசப்தத்தில் உறைந்துகிடந்தது. சுழன்று வீசியது காற்று. நிர்வாண உடல் காற்றோடு மெள்ள மேலே எழும்பிக் குருதியின் வாடையைச் சுவாசித்தது. நற்தருணம் இது என காலம் முனீஸ்வரனைத் தனதாக்கிக்கொள்ளக் காத்திருந்தது.

– 24th அக்டோபர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *