அப்பாவின் அசைவச் சாப்பாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 2,040 
 

(இதற்கு முந்தைய ‘காமராஜ் நாற்காலி‘ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

இனி அவருடைய சாப்பாட்டில் மாமிச உணவை சேர்த்துக் கொள்ளப் போவதாக, மெட்ராஸில் இருந்த அவனுக்கு கடிதம் எழுதித் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தைப் படித்ததும் அவனுக்கு ஆச்சரியமாகிவிட்டது. நம்ப முடியாமல் இருந்தது. அப்போது அவனுக்கு வயது முப்பத்தி மூன்று. அவன் உடனே கிளம்பி ஊருக்குப் போனான். விஷயம் உண்மைதான்.

அப்பா அவன் முன்னிலையில் சிறிது வெட்கத்துடன் அசைவ உணவைச் சாப்பிட்டார். கிட்டத்தட்ட நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் அசைவ உணவு சாப்பிடத் தொடங்கியதில் அவன் அம்மாவிற்கு ரொம்பச் சந்தோஷம்.

விதவிதமான அசைவ உணவுகளை அப்பாவிற்காக அம்மா ஆசையுடன் சமைக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்பாவும் அவைகளை ஆசையுடன் சாப்பிட்டார். அப்பாவிற்கு அப்போது வயது அறுபது. ஆகிவிட்டிருந்தது. நாற்பது வருட இடைவெளிக்குப் பிறகு அப்பா மறுபடியும் மாமிச உணவு சாப்பிட ஆரம்பித்திருந்ததை அவருடைய உடம்பு ஏற்றுக் கொள்ளுமா என்று முதலில் அவனுடைய அம்மா பயந்தார். ஆனால் அவர் பயந்த மாதிரி எதுவும் ஆகவில்லை. அப்பாவின் உடம்பு அசைவ உணவை நன்கு ஏற்றுக்கொண்டது. அதனால் பிரச்னை இல்லாமல் போய்விட்டது.

அதனால் அப்பா தினசரி புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டார். அம்மா மிகுந்த ரசனையுடன், ஈடுபாட்டுடன் அப்பாவுக்காக மெனக்கிட்டாள் காலை ஆறு மணிக்கே பசும் பாலைச் சுண்டக் காய்ச்சி அதை ஒரு பெரிய டம்பளரில் ஊற்றி அதில் இரண்டு கோழி முட்டைகளை உடைத்துப் போட்டு அப்பாவுக்கு குடிக்கக் கொடுப்பாள். தோட்டத்தில் சிறிது நேரம் நடந்துவிட்டு, குளித்துவிட்டு அப்பா டைனிங் ஹால் வந்துவிடுவார்.

பிறகு சரியாக எட்டு மணிக்கு காலைப் பலகாரம். ஆவி பறக்கும் இட்லியும், கொத்துக்கறியும் அம்மா சுடச்சுட பரிமாறுவாள். நான்கு இட்லிகளிலேயே அப்பா போதுமென்றாலும் அம்மா விடமாட்டாள். குறைந்தது ஆறு இட்லிகளை சாப்பிட வைத்துவிடுவாள். இட்லி செய்யாத நாட்களில் தோசையும் கொத்துக்கறியும்…

அப்பா அதன்பிறகு ஒரு குட்டித்தூக்கம் போடுவார். மணி பத்தரையானதும் அந்த வீட்டில் ஆட்டுக்கால் சூப் .வாசனை மூக்கைத் துளைக்கும். கொஞ்சம் மஞ்சள் பொடி; மிளகுப் பொடி விரவி சூப்பை ஆற்றிக்கொண்டே வந்து அம்மா அப்பாவை எழுப்பிக் கொடுப்பாள். அப்பா சூப்பை ஒரு நிமிடம் ஆசையுடன் பார்ப்பார். சூப்பின் மேற்பரப்பில் கொழுப்பு அழகாக எண்ணெய் மாதிரி வட்டம் வட்டமாக மிதந்து கொண்டிருக்கும். சூப்பை ஆசையுடன் உறிஞ்சி உறிஞ்சி நிதானமாக சிறிது சிறிதாக அப்பா ரசித்துக் குடிப்பார். குடிக்க குடிக்கப் பேரானந்தமாக இருக்கும் அவருக்கு.

சூபபைக் குடித்து முடிந்ததும், மிக்ஸியில் போட்டு நன்றாக பொடிசெய்த பொரிகடலை மாவுடன் நாட்டுச் சர்க்கரை கலந்த கலவை இரண்டு கைப்பிடி சாப்பிடுவார். சில சமயங்களில் அதில் நெய் விட்டுப் பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொடுப்பாள் அம்மா.

அதன்பின் சரியாக ஒன்றரை மணிக்கு மதியச்சாப்பாடு. அதில் கண்டிப்பாக மீன் இருக்கும். அப்பாவுக்கென்றே தூத்துக்குடி அல்லது திருச்செந்தூரில் இருந்து வெள்ளைநிற பாம்ப்ரெட் (pomfret) மீன்கள் வரவழைக்கப்பட்டன. அவைகளை அம்மா நன்கு வேகவைத்து முழுதாகப் பரிமாறுவாள். அதில் மசாலா சேர்க்கமாட்டாள். அப்பா அதில் லெமன் பிழிந்து நான்கு விரல்களினால் வழித்து வழித்து ரசித்து சாப்பிடுவார். பிறகு மறுபக்கம் மீனைப் புரட்டிப் போட்டு சாப்பிட்டதும், நடு எலும்பை மட்டும் தட்டில் ஒதுக்கி வைத்துவிடுவார். அவனுக்கு என் அப்பாவா இப்படி? என்று தோன்றியது.

இதுதவிர, வெள்ளாட்டின் நெஞ்சுக்கறி தினமும் வேண்டுமென்று கறிக்கடை சலீமிடம் அம்மா சொல்லிவைத்து விடுவாள். தாரளமாக கறிக் குழம்பை ஊற்றி ஊற்றி அப்பா ஒரு பிடி பிடிப்பார். அப்பா சாப்பிடும்போது மின்சாரம் நின்றுவிட்டால் அம்மா அருகில் நின்றுகொண்டு பத்தமடை பனை விசிறியால் அப்பாவுக்கு நன்றாக விசிறி விடுவாள்.

அப்பா ரசம் சோறு சாப்பிடும்போது இரண்டு பெரிய நாட்டுக்கோழி முட்டைகளை முட்டை அடிக்கிற மிஷினில் கொடுத்து, நுரை வருகிற அளவிற்கு அடித்து எடுத்து ருசியாக ஆம்லெட் செய்து கொடுப்பாள் அம்மா. அந்த ஆம்லெட் ரோஜாப்பூ மாதிரி மெத் மெத்தென்று இருக்கும். பாசுமதி அரிசியும் அந்த ஆம்லெட்டும் செம காம்பினேஷன்.

அடுத்து தயிர்சோறு. தண்ணீர் விடாமல் காய்ச்சின பாலில் உறை ஊற்றி வைத்த தயிர் எப்படி இருக்கும்? அதுவும் சிறிதும் புளிக்காத தயிர்…! அதுவும் இல்லாமல் மண் பானையில் காய்ச்சி மண் சட்டியில் உறைய வைக்கப்பட்ட தயிர்…!! அந்த தயிர் சாதத்துக்கு கடித்துக் கொள்ள நல்ல மீன் ரோஸ்ட். ஒவ்வொரு மீன் ரோஸ்ட்டும், இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்கும். அப்பாவின் வயிறுதான் போதும் போதும் என்று சொல்லிவிடும்…

இவ்வளவுக்கும் பிறகு இரண்டரை மணிக்கு ஒரு தட்டு நிறைய ஆப்பிள் பழத் துண்டுகள். அதைச் சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் நிறைய ஐஸ் போட்டு சாத்துக்குடி ஜூஸ்.

மூன்று மணிக்கு மேல் அப்பா மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் போடுவார். அதன்பிறகு மாலையில் சற்று நேரம் தோட்டத்தில் வாக்கிங். சில சமயம் ஆள் கிடைத்தால் பூப்பந்து விளையாடுவார்.

ஆறரை மணிவாக்கில் களைத்து வீட்டினுள் வரும் அப்பாவுக்கு சூடாக நான்கு பரோட்டாவும் சால்னாவும் இருக்கும். சில சமயங்களில் சால்னவிற்கு பதிலாக கோழி சாப்ஸ். அதைச் சாப்பிட்டு அதிக நேரமாகியும் கோழி சாப்ஸ் வாசனை வாயில் அடித்துக் கொண்டிருக்கும். அம்மா அதற்காக சிறிது பெருஞ்சீரகத்தை லேசாக வறுத்து அப்பாவை வாயில் போட்டு மெல்லச் சொல்லுவாள்.

இனிமேல் நேராக ராத்திரி எட்டரை மணிக்குத்தான் சாப்பாடு. நடுவில் வேறெதுவும் கண்டிப்பாக இல்லை. அதுவும் சைவச் சாப்ப்பாடுதான். ராத்திரி வேளையில் மட்டன், சிக்கன் சாப்பிட்டால் சில சமயங்களில் அப்பாவுக்கு ஒத்துக் கொள்வதில்லை. வயிறு பொருமும்.

அதனால் அப்பாவுக்கு மட்டும் ஏதாவது பொரித்த குழம்பு செய்து, இரண்டு மூன்று துவையல்கள், சுட்ட அப்பளம், ரசம் மட்டும். அப்பளத்தில் பிரண்டை வாசனை கமகமக்கும். பசியைத் தூண்டும் கல்லிடைக்குறிச்சி அப்பளம் ஆயிற்றே! அப்புறம் தயிர் சாதம், வடுமாங்காய். சில சமயம், வடு மாங்காயுடன் திருச்சி மாகாணிக் கிழங்கு ஊறுகாய். முத்தாய்ப்பாக வீட்டில் செய்யப்பட்ட ஐஸ்க்ரீம் இரண்டு அல்லது மூன்று ஸ்கூப் மட்டும்.

ஆனால் மனதிற்குள் கொஞ்சம் குற்ற உணர்ச்சி இருந்து கொண்டிருந்ததோ என்னவோ, அப்பா அவனிடம், “நீ மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் அசைவ உணவு சாப்பிட்டுவிடாதே…ஒனக்கு அது வேண்டாம்…” என்றார்.

“பயப்படாதீங்கப்பா, நான் எந்தக் காலத்திலும் அசைவ உணவைத் தொடக்கூட மாட்டேன்…” என்றான்.

அப்பாவின் சந்தோஷம் அவருடைய முகத்தில் தெரிந்தது. நாளடைவில் அப்பா மீண்டும் அசைவ உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியது பழைய செய்தியாகி விட்டது. ஆனாலும் மற்ற விஷயங்களில் அப்பாவிடம் மாற்றம் எதுவும் இல்லை. எப்போதும்போல வெளியுலகத் தொடர்புகள் பலவற்றை நீக்கிவிட்டு வீட்டுக்குள்ளேயேதான் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார். செய்தித்தாள்கள் வாசிப்பதை நிறுத்தவேயில்லை அவர்.

வீடு தேடி வந்த நண்பர்களிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத பெரும் சம்பவங்கள் இந்திய அரசியலில் நடந்து விட்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *