அந்த ரெயில் வண்டியில் ஒரு விபரீதம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 8,030 
 

“ஸார்!”

ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த கார்த்தியை பிளாட்பாரத்தில் நின்ற ஓர் இளைஞன் அழைத்தான்: “ஸார் ட்ரிச்சினாப்பள்ளி
போறாப்பிலியா?”

“நோ, நோ!… மயிலாடுதுறை!”

“அடடே, மாயவரத்துக்கா… ரொம்ப நல்லதாப்போச்சு! சுமதி! ஸார் மாயவரம் போறாராம்.. உன் கவலை எனக்கு விட்டுச்சு!” என்றான் இளைஞன்.

இவன் பக்கம் திரும்பி, “கைக் குழந்தையோடு ராத்திரி வேளையிலே என் ஒய்ஃபைத் தனியா அனுப்பறோமேன்னு கவலயா இருந்துச்சு. இப்ப நிம்மதியா இருக்கு. அவ சித்தே கண்ணசந்து தூங்கற டைப். சீயாழியில எழுப்பி, இறக்கி விட்டுடறீங்களா ஸார், உபகாரமா இருக்கும்!”

“என்ன ஸார் இது? சின்ன விஷயம். இதுக்குப் போய் உபகாரம் அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு? சீர்காழியில் அவங்களைக் குழந்தையோடு பத்திரமா இறக்கி அனுப்பி வைக்கிறேன் போதுமா?” என்றான் கார்த்தி.

அந்தப் பெண் களையாக இருந்தாள். இழுத்துப் போர்த்திக் கொண்டு, குழந்தையைத் தோளில் சாய்த்துக் கொண்டு எதிர் இருக்கையில் வந்து உட்கார்ந்தாள். அவளுடைய காலடியில் டிரங்குப் பெட்டியைத் தள்ளி வைத்தான் அவள் கணவன். குழந்தை அவள் பிடிக்கு அடங்காமல் திமிறித் திரும்பி இவனைப் பார்த்து சிரித்தது. “குழந்தை துறு துறுன்னு இருக்கானே, என்ன பேர் வெச்சிருக்கீங்க?” அவளைப் பார்த்து முறுவலித்தபடியே இவன் கேட்டான்.

அவள் இவனை நேருக்கு நேர் பார்க்காமல் தலை குனிந்தவளாய் குழந்தையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“அடி அசடே! ஸார் கேக்கறாரில்ல, பதில் சொல்லேன்!”

ஜன்னலுக்கு வெளியே பிளாட்பாரத்தில் போய் நின்ற அவள் கணவன் அவளை அதட்டினான். பிறகு கார்த்தியைப் பார்த்துச் சொன்னான்: “இவ எப்பவுமே இப்பிடித்தான் ஸார். வேத்து மனுஷாள்னா கொஞ்சம் ஷையா ஃபீல் பண்ணுவா. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க. கொழந்தை பேரு வைதீஸ்வரன். சீர்காழிக்குப் பக்கத்துல வைத்தீஸ்வரன் கோயில் இருக்கில்லே, அங்கே கிருத்திகைக்குக் கிருத்திகை தவறாம போயி வேண்டுதல் பண்ணிப் பிறந்த பிள்ளை. பெண் பிறந்தா தையல்நாயகி, ஆண் பொறந்தா வைத்தீஸ்வரன்னு பேர் வெக்கிறதா முடிவு செஞ்சிருந்தோம். ஆண்
தான்!”

இஞ்சின் ஊதியது. விலுக்கென்று உதறிவிட்டு ரெயில் வண்டி சத்தமின்றி நகரத் தொடங்கியது.

“சுமதி! ஊர் போய்ச் சேர்ந்ததும் எனக்கு போன் பண்ணு. மாமா, அத்தை, ஒன் தங்கச்சி கனி எல்லாத்தையும் நான் விஜாரிச்சதாச் சொல்லு!” சத்தமாகச் சொல்லிக் கொண்டே இளைஞன் பிளாட்பாரத்தில் ரெயில் வண்டியோடு ஓடி வந்தான்.

வண்டி வேகம் எடுத்தது.

பெட்டி ஓரளவு நிரம்பியிருந்தது. குழந்தை இப்போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த குண்டுப் பெண்மணியிடம் தாவியது. ஒரு ரூபாய் நாணயம் அளவு குங்குமப் பொட்டும் மஞ்சள் பூசிப் பொலியும் முகமுமாக இருந்த அந்தப் பெண்மணி குழந்தையைத் தூக்கக் கையை நீட்டினாள். குழந்தையின் தாய் குழந்தையைக் கொடுக்க விரும்பாதவளே போன்று மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டு ஜன்னல் வழியே தெரிந்த பறவை ஒன்றைக் காட்டி “அதோ பார்டா கண்ணா, குருவி!” என்று சொன்னாள்..

குங்குமப் பொட்டுப் பெண்மணியின் முகத்தில் ஏமாற்றம்.

“பெரிய பிகு பண்றாளே!” என்கிற பாவனையில் பக்கத்திலிருந்த முதியவரிடம் ஜாடையில் அபிநயித்தாள். இவனுக்குப் பக்கத்தில் ஒரு மீசைக்காரர் பீடிக்கட்டை எடுத்து அதிலிருந்து ஒரு பீடியை உருவினார். பாக்கெட்டில் கைவிட்டு ஒரு தீப்பெட்டியை எடுத்தார். எழுந்து டாய்லெட் அறைப்பக்கம் நடந்தார்.

போளூர் ஸ்டேஷனில் ரயில் வண்டி நின்றது. வெகுநேரம் நிற்பதாக உணர்ந்தான் இவன். டாய்லெட் பக்கம் புகை பிடிக்க ஒதுங்கின மீசைக்காரர் திரும்பி வந்து உட்கார்ந்தார். அவர் புகைத்த பீடியின் நாற்றம் சுற்றிச் சுற்றி வந்தது. அவர் ஒரு விஷயம் சொன்னார்: “வண்டி கிளம்ப ரொம்ப நேரம் ஆவும் ஸார்!”

கார்த்திக்குக் காரணம் புரியவில்லை. “ஏன்?” என்று கேட்டான்.

“போளூர்ல இன்னிக்கு கட்சி மாநாடு நடக்குதுல்ல? அதுல கலந்துக்க அமைச்சர் கார்மேகம் வந்தாரு. பேசி முடிச்சிட்டு இந்த ரயில்லதான் திருச்சி போறாராம். அவரு வர்ற வரைக்கும் அவங்க கட்சிக்காரங்க ரயிலை நகர விடப் போறதில்லை!”

“அமைச்சருக்காக ரயில் நிற்கணுமா?… நிற்குமா?” இவன் கேட்டான்.

மீசைக்காரர் இவனை வித்தியாசமாகப் பார்த்தார். “இன்னா ஸார் அப்பிடிக் கேட்டுட்டீங்க? ஒங்களுக்கு நாட்டு நெலவரமே தெரியாதா? அமைச்சர் கார்மேகத்தோட ஜாதிக்காரங்க இந்தத் தொகுதியில ஏராளமா இருக்காங்க. அவங்களுக்கு கார்மேகம் அமைச்சர் மட்டுமில்ல, தெய்வமாவே நெனைக்கிறாங்க. அவரு வர்ற வரைக்கும் வண்டி ஸ்டேஷன்ல நிக்கலைன்னு வெச்சுக்கங்க, வேற ரயிலு ஏதும் தண்டவாளத்துல ஓடிப்புடுமா? இல்ல, பஸ்ஸு, காருகதான் ரோட்டுல ஓடுமா?, அட, கடை கண்ணிகளைத்தான் திறந்து வெக்க முடியுமா?”

“சரிதான்!” சலிப்புடன் வெளியே பார்த்தான் கார்த்தி.

பிளாட்பாரம் நிரம்பி வழிந்தது. கையில் கட்சிக்கொடி ஏந்திய ஏராள மனிதர்கள், வாடிநக, வாடிநக! கோஷங்கள். டமால் டமால் அதிர்வேட்டுக்கள்…

இரவு நேரம். அந்த ஸ்டேஷனே திருவிழாக்கோலம் பூண்டது போல் காட்சியளித்தது. கோஷம் இப்போது உச்ச ஸ்தாயியில் கேட்டது. பிளாட்பாரத்தில் பலர் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடினார்கள்; அமைச்சர் வந்து விட்டார் போலும்!

ரயில் ஊதியது. “அப்பாடா, மினிஸ்டர் ஏறிப்புட்டார். வண்டி கெள்ம்பிடும்!” என்றார் மீசைக்காரர்.

எதிர் ஸீட்டில் இருந்த பெண் டிபன் பாக்ஸிலிருந்து தயிர் சாதத்தை ஸ்பூனால் குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

இவன் பார்த்த வரையில் ரயிலில் ஏறியதிலிருந்து ஒருவரிடமும் ஏன், இவனிடமும் அவள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. குழந்தையையும் யாரிடமும் தரவில்லை.

குங்குமப் பொட்டுக்கார அம்மாள் பக்கத்திலிருந்த கிழவரிடம் ஏற்ற இறக்கத்தோடு குடும்பக் கதையைப் பிரலாபித்துக் கொண்டு இருந்தாள்.

“நீங்க இப்பிடி எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டே இருந்தால் அந்த வேலூர்க்காரி கைதான் ஓங்கிப் போகும். ஒங்க சொத்து பத்துக்களைப் பறிக்கிறதுக்காகத்தான் தன் வீட்டுல வந்து இருன்னு அவ சொல்றா. நம்பிப் போனீங்க. சூனியம் வெச்சிடுவா, சொல்லிப்புட்டேன், ஆமாம்!”
கிழவர் மூக்குப் பொடியை டப்பியிலிருந்து எடுத்து மூக்கு முனையில் வைத்து சர், சர்ரென்று உறிஞ்சினார். அவருடைய முதல் மனைவி தான் இந்தக் குங்குமப் பொட்டுப் பெண்மணி. தள்ளாத வயதில் இரண்டாவதாக ஒருத்தியைக் கிழவர் திருமணம் செய்து கொண்டு விட்டாராம். அவள் பிடியிலிருந்து பிரித்துப் படாதபாடுபட்டு இழுத்துக் கொண்டு போகிறாளாம் இந்த முதல் மனைவி. இது தெரிந்ததும் கார்த்திக்கு ஆச்சர்யமாக இருந்தது.

கிழவரை வியப்புடன் பார்த்தான். மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத ஆசாமி!

வேலூருக்குப் பக்கத்தில் பொய்கைச் சந்தையில மாடு வாங்கி லாரியில ஏற்றிப் போய் கும்பகோணத்தில் வியாபாரம் செய்வாராம் பெரியவர். அம்மாதிரியொரு சந்தர்ப்பத்தில் மாடு பிடித்துத் தரும் தரகர் வீட்டில்தான் அந்த இன்னொருத்தியைச் சந்தித்தாராம். “பசையுள்ள ஆளுன்னு அவளுக்குப் புரிஞ்சு போச்சு. சேலைத் தலைப்பைச் சரேல்னு கீழே தள்ளிப்புட்டு ஒண்ணுந் தெரியாத பொண்ணு கணக்கா எதிர்ல நிப்பா. அடிக்கடி பக்கத்துல வந்து ஒரசுவா. நெகா புரியாம இவங்க சபலப் பட்டுட்டாங்க. இல்லேன்னா இந்த வயசுல புத்தி இந்த மாதிரிப்
போகுமா? நிறையச் சொத்து பத்து உள்ள இவுங்களை ரெண்டாம்தாரமாக் கல்யாணம் கட்டிக்கிட்டா. இவுங்க எப்ப மண்டையைப் போடுவாங்க் என்கிறதே அவளுக்குக் குறி.

இவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. ஏமாத்தி, நாலு பேத்தை வெச்சுத் தாலி கட்டிக்கிட்டா அவ பொண்டாட்டி ஆயிடுவாளா?”

கிழவர் மறுபடியும் பொடி டப்பாவை எடுத்துத் தட்ட ஆரம்பித்தார். அவருடைய புன்முறுவல் குங்குமப் பொட்டுப் பெண்மணியை ஆங்காரம் கொள்ள வைத்தது. “சிரிப்பு…சிரிப்பு..! இந்தச் சிரிப்புதான் எல்லாரையும் நம்ப வெச்சுடுது. ஒரு ஆபத்துன்னா கை கொடுத்து மடியில் தாங்கிப்பாளா அந்தச் சக்களத்தி?.. தான் தப்பிச்சு ஓடுவாளே கண்டி, ஒன் பக்கம் திரும்பிக்கூடப் பாக்க மாட்டா துட்டுக்காக வந்த அந்த முண்டை!”

“தாத்தா, ஒங்க செகண்ட் ஒய்ஃப் இவங்களை விட அழகா?”

எதிர் இருக்கைக் கோடியில் அமர்ந்திருந்த சுடிதார் பெண் கேள்வி எழுப்பி, கிழவரை நெளிய வைத்தாள்.

“அவுத்துப் போட்டுகிட்டு நின்னு வயசாளியை அசத்திப்புட்டா அழகாயிடுவாளா? ஒரு வருசம் புவனகிரியிலே எங்க வூடு இருந்த தெருவில் வட்டமடிச்சு, கெஞ்சு கெஞ்சுன்னு கெஞ்சித்தானே இவுங்க என்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டாங்க? அப்ப யார் அழகு சொல்லுங்க பார்ப்போம்?” என்று மலரும் நினைவுகளுக்கு குங்குமப் பொட்டு தாவ, பெட்டியில் கலீரென்ற சிரிப்பு!

ஊதற்காற்று உடம்பைச் சிலீரிட வைத்தது. ஜன்னல் கதவுகள் மூடப்பட்டன.

குழந்தையைப் பக்கத்தில் படுக்க வைத்துத் துண்டால் மூடி, அதனை அணைத்த மாதிரி கையை வைத்துக் கண்ணயர்ந்தாள் அந்தப் பெண்..

ரயில் வண்டி வேகம் எடுத்து ஓடத் தொடங்கியது.

திருவண்ணாமலையில் ஏறிய சிலர், மேலே லக்கேஜ் வைக்கும் பகுதிக்குத் தாவி ஏறி அதில் படுத்து விட்டார்கள். மீசை நடைபாதையில் துண்டை விரித்துக் கட்டையைக் கிடத்தியது.

சிறிது நேரத்தில் குறட்டைச் சத்தம்! கிழவர், மனைவி மீது சாய்ந்து உறங்கத் தொடங்கினார்.

கார்த்திக்குக் கண் அசந்தது. முந்தின நாள் இரவு கண் விழித்து அலுவலக வேலைகளில் மூடிநகியது இப்போது அசத்தியது.. வண்டி விழுப்புரத்தில் நின்றபோது தயிர்சாதம், மசால் தோசை, சூடா காபி, டீ என்று பிளாட்பாரக் குரல்கள் ஒலித்தது அரை மயக்கத்தில் கேட்டது.

மீண்டும் வண்டி வேகமெடுத்து ஓடியது.

சரேலென்று விழிப்பு கொடுத்தது. வண்டி எங்கோ நின்றது.

யாரோ, “எந்த ஊரு?” என்று அரைத் தூக்கத்தில் கேட்டார்கள்.

கார்த்தி எழுந்து கதவருகில் போனான். திறந்து எட்டிப் பார்த்தான். அத்துவானக் காட்டில் வண்டி நிற்பது புரிந்தது.

“ஐயோ!” என்று ஒரு அலறல் சத்தம். பெட்டிகளிலிருந்து பயணிகள் பலர் இறங்கி ஓடுவது தெரிந்தது. ஏதோ விபரீதம் என்று உணர்ந்தான் கார்த்தி.

நிறைய டார்ச் விளக்குகள்… பரபரப்பாகப் பலர் இறங்கி ஓடியது டார்ச் விளக்கொளியில் தெரிந்தது. ஒருவர் ஓடிக் கொண்டே சொன்னது எல்லோருக்கும் விளக்கம் தந்தது.

“ரெயில்ல பாம் வெச்சிருக்காங்களாம்! மினிஸ்டரைத் தீர்த்துக்கட்ட யாரோ சதி வேலை பண்ணியிருக்காங்க. தகவல் கெடைச்சு மினிஸ்டரைப் போலீஸ் வந்து பத்திரமா அழைச்சுகிட்டுப் போயாச்சு. எல்லோரும் சீக்கிரமா இறங்கித் தப்பிச்சு ஓடுங்க, ஓடுங்க!”

“ரயிலுக்குள்ள வெடிகுண்டா? கடவுளே!, ஓடுங்க! ஓடுங்க!”

பதற்றமான குரல்கள். மேலே படுத்திருந்தவர்கள் தொப்! தொப்! பென்று கீழே குதித்து கதவை நோக்கி ஓடினார்கள்.

மீசைக்காரர் வாரிச் சுருட்டிக்கொண்டு கதவருகில் போய் இருளில் கீழே த குதித்தார். அப்போதுதான் எதிர் இருக்கைப் பெண் சுமதி கதவருகில் நின்று பயத்துடன்… “ஐயா, என்னை இறக்கி விடுங்க!” என்று மீசைக்காரரிடம் கெஞ்சியதைக் கார்த்தி பார்த்தான். மீசை அவளைக் கை கொடுத்துக் கீழே இறக்க, “ஐயோ! இருட்டில ஒண்ணும் தெரியலியே, என்னைக் காப்பாத்துங்க, என்னைக் காப்பாத்துங்க!” என்று அவள் கதறினாள்.

இந்த நேரத்தில் குங்குமப் பொட்டுப் பெண்மணி கதவருகில் ஓடிப் போய், “அண்ணே! ஒரு கை கொடுங்கண்ணே…ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்!” என்று பதறி மீசையைக் கூப்பிட, “அட சர்த்தான் போம்மா! பாம் எந்த நேரமும் வெடிக்கும். ஒனக்குக் கை கொடுக்கறதுதான் என் வேலையா?” என்று சொல்லிக்கொண்டே இருட்டில் ஓட ஆரம்பிக்க, அவரைப் பின்பற்றி சுமதிப் பெண்ணும் இருட்டில் உயிர் தப்பினால் போதும் என்று கதிகலங்கி ஓடத் தலைப்பட்டாள். சுடிதார் பெண் பொத்தென்று குதித்து சரளைக்கற்களில் விழுந்து புரண்டவள்,
“ஐயோ கடவுளே!” என்று கத்தியபடி எழுந்து இருளில் ஓடினாள்.

கார்த்தி இறங்குமுன் பதற்றம் இருந்தாலும் சற்று நிதானமாக அந்தப் பெட்டியைப் பார்வையால் துழாவினான். சிலீரென்று அவன் மனசுள் ஒரு நடுக்கம்…

குங்குமப் பொட்டுக்காரப் பெண்மணியின் கணவரான கிழவர் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார். எதிர் இருக்கையில் ஒரு துணி மூட்டை.. அது என்ன? அட, சுமதியின் குழந்தை!

அடிப்பாவி! வெடிகுண்டு பயத்தில், உயிர் தப்பினால் போதும் என்று தன் கைக் குழந்தையைக் கூடவா ஒருத்தி விட்டுவிட்டு ஓடுவாள்?

அடிவயிற்றில் ஏதோ பிசைந்த மாதிரி ஒரு வலி இவனுக்கு. மனசு குமுறியது.

குழந்தையைக் கார்த்தி ஒரு கையில் ஏந்திக் கொண்டான்; கிழவரை எழுப்பி அவரை இன்னொரு கையால் அணைத்தபடி கதவருகில் வந்து இறங்கினான். கிழவரையும் பத்திரமாக இறக்கினான். மனசுள் ஒரு நடுக்கம் சிலீரிட்டாலும் மறுபக்கம் நிதானம், நிதானம் என்று யாரோ அவனை சர்வ ஜாக்கிரதையாக வழி நடத்துவதைப் போலிருந்தது.

முட்செடிகள் உடம்பைக் கிழித்தன; சரளைக் கற்கள் வெறும் காலைக் குத்தி வலி ஏற்படுத்தின.

சற்றுத் தள்ளிக் கூட்டமாகப் பயணிகள்… “என் பெட்டி! என் சூட்கேஸ், பணம்! நகை!” என்று கத்தியபடி சிலர் ஓட முற்பட, “யோவ் பாம் வெடிச்சுடும். மொத்த வண்டியும் வெடிச்சுச் சிதறப் போவுது. பணம் போனாப் போவட்டும். உயிர் பிழைச்சதே பெரிசு!” என்று அவர்களை மற்றவர்கள் இழுத்துக் கொண்டு இருந்தார்கள்.

இருட்டில் நிழலுருவங்கள்… கூக்குரல்கள்!

“மினிஸ்டர் உசிருக்கு வெச்ச குறி அது. எதிரி ஜாதிக்காரங்க வெடிகுண்டு வெச்சாங்களாம். நல்ல வேளை, விழுப்புரம் தாண்டியதுமே யாரோ ஸ்டேஷன் மாஸ்டருக்கும் போலீசுக்கும் தகவல் தந்துட்டாங்களாம். இடையில் ரெயிலை நிறுத்தி மினிஸ்டரை இறக்கிக் காரில் ஏத்திக்கிட்டுப் போயிட்டாங்க.

இப்ப மோப்ப நாய் வரப்போகுதாம்!” யாரோ சொன்னார்கள்.

கொஞ்ச நேரத்தில் நிறையப் போலீஸார், ஜீப்கள், கார்கள்… சர்ச் லைட் பொறுத்தி ரெயிலை ஃபோகஸ் செய்தார்கள்.

விளக்கு வெளிச்சம் இப்போது அந்த இடத்தை ஓரளவு தெளிவாகக் காட்டியது. பயணிகள் ஓலமிட்டவாறு அங்கும் இங்கும் பதைத்து ஓடி அலைந்து கொண்டிருந்தனர்.

கார்த்தியின் பக்கத்தில் நின்ற கிழவருக்குத் திடீரென்று ஆவேசம் பிறந்தது. குங்குமப் பொட்டுக் காரியைக் கண்டுபிடித்து விட்ட ஆவேசம்தான் அது. பாய்ந்து சென்று அந்தப் பெண்மணியின் கன்னத்தில் பளீர் பளீரென்று அறைந்தார்.

“இதுதான் ஆபத்துக் காலத்துல புருசன்காரனைக் காப்பாத்தற அழகாடீ சண்டாளி? நீ தப்பிச்சாப் போதும்னு ஓடி வந்துட்டியே சதிகாரி?”

சற்றுத் தொலைவில் மீசைக்காரனை ஒட்டிநின்ற சுமதி, விளக்கொளியில் நீள்கோடாகத் தெரிந்த ரெயில் வண்டியை அதீதப் பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இன்னும் தன் குழந்தையின் ஞாபகம் வந்ததாகத் தெரியவில்லை.

…அதனாலென்ன, இன்னும் சிறிது நேரத்தில் குழந்தைக்குத் தாயின் ஞாபகமும், தாய்க்குக் குழந்தையின் ஞாபகமும் வராமலா போய்விடும்?

( பத்திரிகையில் வெளிவராத கதை)

பின் குறிப்பு:
இப்படியும் நடக்குமா? தான் பெற்ற குழந்தையை விட்டு விட்டு ஒரு தாய் தன் உயிர் பிழைக்க ஓடுவாளா என்று சிலருக்கு சந்தேகம் எழக்கூடும். பல ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு சம்பவத்தை நேரில் சந்தித்த உண்மை அனுபவம்தான்… மனசிலேயே கிடந்து வெகு தாமதமாக இப்போது கதையாகியிருக்கிறது. – ஜே.வி.நாதன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *