அந்தநாள் நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 7,785 
 

நினைவுகள் சுகமானதா? சுமையானதா? என்னும் கேள்விக்கு என்னைப் பொறுத்தவரையிலும் சுமையானதே, ஆண்டுகள் ஓடிமறைந்தாலும். இரத்தமும் சதையுமாய், உணர்வோடு உடல் இருக்கும்வரை நினைவுகளும் மாறாது, அது இன்பமாவதும் , துன்பமாவதும், அவரவர் தலைவிதி.

தினமும் உந்தித் தள்ளும் கடமைகள் எல்லவற்றையும் தள்ளிக்கொண்டு ஓடினாலும், எதோ ஒரு இடத்தில் நிறுத்தி நினைவுகளை கிளறுகிறது.இந்த நாள் என்னை அப்படியே, இழுத்துக்கொண்டு போய் புதைத்துவிடும்.

இன்றும் அப்படித்தான் எனக்காக, கணவன் பிள்ளைகள், பரிசுகளோடு என்னை மகிழ்வித்து , பிறந்தநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறார்கள் . ஆனால் என்மனம் வேதனையில் துடிக்கிறது. நானும் நினைக்கிற்ன் ,எல்லாவற்றையும் என்மேல் பாசத்தைப் பொழியும் குடும்பத்திற்காய் மறக்க வேண்டுமென, ஆனால் முடியவில்ல,

என்னோடு ஒன்றாய்ப் பிறந்தவன் பரணி, இருவரும் இரட்டைக் குழந்தைகள் . அழகோடும் அறிவோடும், ஊரே கொண்டாடும்படி வளர்ந்தோம். பெற்றோருக்கு எங்களால் பெருமையும் , மகிழ்வுமே, பாடசாலையிலும் உயர்கல்வியிலும் எந்தப்பிரச்சனையும் இல்லாமலே திறமையுடன் தொடர்ந்தபோதே உள்நாட்டுயுத்தம் பல்கலைக்கழக மாணவர்கள், கைதாவதும், காணமற்போவதுமென, பெற்றோர் பிள்ளைகள்,வளாகம் , கல்லூரி சென்று திரும்பும்வரை வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டிருக்கும் நிலை. தமிழும் பரணியும், ஒரேவளாகம் ஆதலால் ஒருவருக்கொருவர் பாதுகாப்புடன் இருப்பதாய் பெற்ரோருக்கு சிறிதுநிம்மதி. அவர்களும் எந்தப் பிரச்சனைக்கும் போகாமல் ஒதுங்கிதே இருந்தார்கள். ஆனால் நித்தம் இராணுவம் வருவதும் மாணவர்களை சந்தேகமென இழுத்துச் செல்வதும் இடைவிடாது தொடர்ந்தது.

அன்றும் எங்கோ நடந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களென பல மாணவர்களுடன் தமிழையும் அழைத்து விசாரித்து, மேலதிக விசாரணைக்காய் , இரணுவமுகாமிற்கு வரும்படி கூறினார்கள். இதைப்பார்த்த பரணி, தமிழுக்கும் இதற்கும் எந்தத்தொடர்பும் இல்லையெனத் தமிழின் கையைப்பற்றித் தடுத்தான். உடனே பாய்துவந்த சிப்பாய் பரணியின் வயிற்றில் காலால் உதைத்து அவனை வீழ்த்தி,தமிழைப்பிடித்திழுத்து வாகனத்தில் ஏற்றி,நீயும் ஏறென, வீழ்ந்த பரணியின் தலைமுடியைப் பற்றி ஏத்தினான் . மாணவர்கள் அனைவரும் எதுவும்புரியாமல் , திகைப்பிலும் பயத்திலும் உறைந்திருந்தார்கள். இராணுவமுகாமிற்குச் சென்றவர் மீண்டுவருவதில்லை, அதிலும் பெண்கள்நிலை சொல்லவேண்டியதில்லை. நான்கு மாணவர்களும், நான்கு மாணவிகளும் வாகனத்திலிருந்தார்கள்.அனைவருமே ஏதுமறியாதவர்கள், வேள்விக்கு கடாவை பட்டியிலிருந்து தெரிவுசெய்வதுபோல இன்று நம்மை வதைப்பிற்காகத் தெரிவாக்கியிருக்கிறார்கள் என்பது அனவருக்கும் புரிந்து மௌனமாய் நெஞ்சுதுடிக்க இருந்தார்கள். ,ஆனால் தமிழின் நிலை இருதலைக்கொள்ளியாய், பரணி பேசாமல் இருந்திருந்தால், பெற்றோரைக் சமாதனப்படுத்தி , அடுத்த நடவடிக்கை எடுக்க ஒருவராவது வெளியே இருந்திருக்கலாம்.

அதைவிடவும் எதிர்த்தபடியால் இவங்கள் பரணியை சும்மா விடமாட்டார்களென மனம் பதைத்தது.அனைத்து மாணவர்கலிடமும், தனித்தனியாய் பல கேள்விகள் கேட்டார்கள், பின்பு மேலதிகாரி வரவேண்டும் அதுவரை இருக்கும்படி,மாணவிகளைத் தனியாகவும் ‘ மாணவர்களைத் தனியாகவும் அறையில் இருத்தினார்கள். மாலை இரவாகியது, இப்படியே இரண்டு நாட்கள், மறைந்தது, இடைக்கிடை பலமுகங்கள் வந்து, தனியே அழைத்துச் சென்று நீ புலியா? அவனைத் தெரியுமா? இவனைத் தெரியுமா? பயிற்சி எடுத்திருக்கிறாயா? எனக்கேள்விகளோடு, உடலையும், தொட்டுத்தடவி ஆராட்சி செய்தது. அவர்கள் தொடும்போது, நூறு கம்பளிப்பூச்சிகள் ஊர்வதுபோல , அருவருப்பாகவும், உண்மையில் போராளியாய் இருந்து இவர்களில் ஒருவன் தலையையாவது எடுத்திருக்காமல் போனேனே என்ற வெறுப்பும் தோன்றியது. இத்தனைக்குள்ளும், மனம் பரணியை நினைத்துத் துடித்தது. மூன்றுநாட்கள் வைத்து, விசாரணையென பலவித அருவருப்பான செயல்களையும் , கேள்விகளையும் தொடர்ந்தபோது, வளாக நிர்வாகத்தினதும் , பெற்றோரின் தொடர்ந்த அழுகுரல்களாலும், மாணவிகளை மட்டும் வெளியேவிட்டார்கள்.

வெளியில் காத்திருந்த,அதிபர் நம்மைப் பெற்றோரிடம் சேர்ப்பித்தார். அம்மாவும் அப்பாவும் அழுதுவீங்கிய கண்களுடனும், கண்ணீருடனும் கட்டியணைத்து அழுதார்கள். அவர்களிடம் பரணிபற்றிக்கேட்டபோது, இன்னும். விடவில்லையெனவும் , விசாரணையின்பின் விடுவதாய்க் கூறியிருப்பதாகவும் கூறியழுதார்கள். வீடு மரணவீடாகவே காணப்பட்டது. உற்றார் உறவினர்கள் கூடியிருந்தார்கள், எல்லோர் முகமும் , உணவு ,தூக்கமின்றி வாடிக்கிடந்தது.

சுழலும் பூமி யாருக்காகவும் பார்த்திருப்பதில்லையே, மேலும் இரண்டு நாட்கள் கழிந்து கடற்கரையில் இரு ஆண்சடலங்கள் கிடப்பதாய்,அதில் ஒன்று பரணியினது எனவும் , அடையாளங்காணப்பட்டது. உடல் முழுவதும் சிகரெட்டின் சூட்டுக்காயங்களும், நகங்கள் பிடுங்கப்பட்டும், பற்கள் உடைக்கப்பட்டும். அடையாளம் தெரியாமல் கருகிக்கிடந்தது. வீட்டிற்கு எடுத்துவந்து இறுதிக்கிரியைகள் எப்படி முடித்தோம் என்றேதெரியாது, அழகிய குருவிக்கூடாய் இருந்த இல்லம் பிய்த்தெறியப்பட்டது.வளாகனிர்வாகம் இரணுவமுகாமிடம் பரணியைப் பற்றிக்கேட்டபோது தப்பியோடிவிட்டதாகவும், தேடப்படுவதாகவும் கூறினார்களாம். நியாயமற்று , புளுக்களைப்போல உயிர்கள் அழிக்கப்படுவதை , மனிதநேய அமப்புகளும் பார்த்தும் வாய்மூடி இருந்தது. அத்தோடு பெற்றவர் பயத்தினால் என் கல்விக்கு முற்றுபுள்ளிவைத்து , திருமணம்பேசி ஜெர்மனிக்கு அனுப்பிவைத்தார்கள். காலம் விரைந்து வருடங்கள் பதினைந்தைக் கடந்தாலும், மனத்கிலிருக்கும் வலிகள் கடமையில் கரைந்தாலும் என் பிறந்தநாட்களில் என்னோடு ஒன்றாய்ப் பிறந்தவனின் நினைவும், அவனைக் கடைசியாய் பார்த்த அந்தக் கொடுமையான காட்சியும் வந்து மனதை ரணமாவதைத் தடுக்க முடியவில்லை. இருக்கட்டும் அப்படியே இது அவனுக்கான அஞ்சலிப்பு நாளாய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *