கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 3,277 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு நாள் சில குழந்தைகள் கணவாய் ஒன்றில் தானிய மணி போன்ற ஒரு பொருளைக் கண்டெடுத்தார்கள். அதன் நடுவே ஒரு கீற்று ஓடிக் கிடந்தது. ஆனால் அது கோழிமுட்டை அளவு பெரியதாக இருந்தது.

அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த பிரயாணி ஒருவன் அந்தப் பொருளைப் பார்த்தான். ஒரு காசு கொடுத்து குழந்தைகளிடமிருந்து அவன் அதை வாங்கினான். அதை நகரத்துக்கு எடுத்துப்போய், ‘அதிசயப் பொருள்’ என்று சொல்லி அரசனிடம் அவன் விற்று விட்டான்.

அரசன் தனது மந்திரிகளை அழைத்தான். அது என்ன பொருளாக இருக்கும் என்று கண்டுபிடிக்கும்படி சொன்னான். மதியூக மந்திரிகள் அனைவரும் யோசித்தார்கள். யோசித்து யோசித்துப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் விளங்கவில்லை. கடைசியாக ஒரு தினத்தில், அது ஜன்னல் ஓரத்தில் கிடந்த சமயம், பெட்டைக்கோழி ஒன்று உள்ளே புகுந்து அதைக் கொத்தி அதில் சிறு துவாரம் ஒன்று ஏற்படுத்தி விட்டது. அப்பொழுது, அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் புரிந்து விட்டது, அது தானிய மணிதான் என்று.

உடனே அவ் அறிஞர் பெருமக்கள் அரசனை நாடிச் சென்றார்கள். ‘இது ஒரு தானிய மணி ஆகும்’ என்று அறிவித்தார்கள். இதைக் கேள்வியுற்ற அரசன் அதிக வியப்படைந்தான். அத்தகைய தானியம் எப்பொழுது எங்கே விளைந்தது என்று கண்டுபிடிக்கும்படி அரசன் மதியூக மந்திரிகளுக்குக் கட்டளையிட்டான். அவ் அறிவு மணிகள் மீண்டும் ஆலோசித்தார்கள்; அகப்பட்ட நூல்களில் எல்லாம் ஆராய்ந்து பார்த்தார்கள். எனினும் அதைப்பற்றி எதுவுமே புலனாகவில்லை.

ஆகவே அவர்கள் மன்னனிடம் சென்று முறையிட்டார்கள் ‘நாங்கள் எவ்விதமான பதிலும் தருவதற்கில்லை. அதைப் பற்றி எங்கள் புத்தகங்களில் ஒன்றுமே இல்லை. தாங்கள் குடியானவர்களைத் தான் விசாரிக்க வேண்டும். ஒருவேளை அவர்களில் சிலர் அவர்களது தந்தையரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கலாம், தானியம் இந்த அளவுக்கு எந்தக் காலத்தில் எங்கே விளைந்தது என்று.’

ஆகையினால், மிகவும் வயதாகிப் போன குடியானவன் எவனையாவது தன் முன்னே கொண்டுவந்து நிறுத்தும்படி அரசன் ஆக்கினை செய்தான். அவனது பணியாளர்கள் அப்படிப்பட்ட மனிதன் ஒருவனை மன்னன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

முதிர்ந்து, கூன் விழுந்து, சாம்பல் போல் நிறம் வெளுத்து, பல் இழந்து காணப்பட்ட அந்த மனிதன் இரண்டு கோல்களின் ஆதரவோடு தள்ளாடி வந்துதான் ராஜாவின் திருமுன்னிலே நிற்க முடிந்தது.

அரசன் அவனிடம் அந்தத் தானியத்தைக் காட்டினான். ஆனால் அக் கிழவன் அதைச் சரியாகப் பார்க்கக்கூட இயலவில்லை. எனினும் அவன் தன் கைகளில் அதை வாங்கி, தொட்டுத் தடவிப் பார்த்தான்.

இத்தகைய தானியம் எங்கே விளைந்தது என்று உன்னால் சொல்ல முடியுமா, கிழவா? இதுமாதிரி தானியத்தை நீ எப்பொழுதாவது வாங்கியது உண்டா? அல்லது உன் வயல்களில் விதைத்தது உண்டா? என்று மன்னன் கேட்டான்.

அந்த வயோதிகனின் காதுகள் மந்தமாகியிருந்தன. அதனால் ராஜாவின் பேச்சை அவன் சிரமப்பட்டுத்தான் கிரகிக்க முடிந்தது. மிகுந்த சிரமத்தோடுதான் அவன் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முடிவில் அவன் அறிவித்தான்; ‘இல்லை, இது போன்ற தானியத்தை நான் என் வயல்களில் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை. நாங்கள் தானியம் வாங்கிய காலத்தில், தானிய மணிகள் இப்பொழுது உள்ளதுபோல் சிறியனவாகவே இருந்தன. ஆனாலும் நீங்கள் என் தந்தையை விசாரித்துப் பாருங்கள். இந்த ரகமான தானியம் எங்கே விளைந்தது என்பதை அவர் கேள்விப்பட்டிருக்கலாம்.’

எனவே அக் கிழவனின் தந்தை கண்டுபிடிக்கப்பட்டு ராஜா முன் கொண்டு வரப்பட்டான். அவன் ஒரு கோல் ஊன்றி நடந்து வந்தான்.

மன்னன் அவனிடம் அந்தத் தானியத்தைக் காண்பித்தான். அவ்வயோதிகக் குடியானவனுக்கு இன்னும் பார்வை நன்றாகவே இருந்தது. அவன் தானியத்தைக் கூர்ந்து நோக்கினான்.

‘இதுமாதிரி தானியம் எங்கே விளைந்தது என்று உம்மால் சொல்ல முடியுமா, பெரியவரே? இதுபோல் நீர் வாங்கியது உண்டா? இல்லையேல் உமது வயல்களில் பயிரிட்டதாவது உண்டா?’ என்று அரசன் கேட்டான். அவ் வயோதிகனுக்குக் காதுகள் தெளிவாகக் கேட்காவிட்டாலும்கூட, தனது மகனைவிட நன்றாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது அவனால்.

‘இல்லை. இது போன்ற தானியத்தை நான் எனது வயலில் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை. வாங்குவதுபற்றிச் சொல்லப் போனால், என் காலத்தில் பணம் என்பது பழக்கத்துக்கு வரவேயில்லை. ஒவ்வொருவனும் தனக்கு வேண்டிய தானியத்தைப் பயிரிட்டான். அவசியம் ஏற்படுகிறபோது பரஸ்பரம் பங்கிட்டுக் கொள்வதும் உண்டு. இதுமாதிரி தானியம் எங்கே விளைந்தது என்று எனக்குத் தெரியாது. நாங்கள் பயிரிட்ட தானியம் இந்தக் காலத்துத் தானியத்தைவிட அளவிலும் பெரிதாக இருந்தது. மாவும் அதிகமாகக் கிடைத்தது. ஆனாலும் இத்தகைய தானியத்தை நான் பார்த்ததேயில்லை. என் தந்தை காலத்தில் தானியம் ரொம்பவும் பெரியதாக விளைந்தது, மிக அதிகமாக மாவும் இருந்தது என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் அவரை விசாரிப்பது நல்லது’ என்று அவன் சொன்னான்.

ஆகவே ராஜா அந்தக் கிழவனின் தகப்பனைத் தேடி ஆட்களை அனுப்பி வைத்தான். அவர்கள் அவனையும் கண்டுபிடித்து விட்டார்கள். அவனும் மன்னன் முன்னால் அழைத்து வரப்பட்டான்.

அவன் ஊன்றுகோலின் உதவி இல்லாமலே தாராளமாக நடந்து வந்தான். அவன் பார்வை அருமையாக இருந்தது. காதுகள் நன்றாகக் கேட்டன. பேச்சும் தெளிவாக இருந்தது. அவனிடம் அரசன் அந்தத் தானியத்தைக் காட்டியதும், அவன் அதை வாங்கிப் பார்த்தான்; தனது கையில் வைத்து உருட்டினான்.

‘இப்படிப்பட்ட அருமையான தானியத்தை நான் கண்ணால் கண்டு ரொம்ப காலம் ஆகிவிட்டது’ என்று சொல்லி அவன் அதில் கொஞ்சம் கிள்ளி எடுத்து வாயில் போட்டு ருசி பார்த்தான். ‘அதே ரகம் தான்’ என்றும் சொன்னான்.

‘இந்த ரகத் தானியம் எங்கே எப்பொழுது விளைந்தது என்று சொல்லு, தாத்தா. இதுமாதிரி நீ எப்பொழுதாவது வாங்கியது உண்டா? அல்லது வயல்களில் பயிரிட்டது உண்டா?’ என்று அரசன் கேட்டான்.

அம் முது பெருங்கிழவன் தெரிவித்தான்; ‘இது போன்ற தானியம் எனது காலத்தில் எங்கு பார்த்தாலும் விளைந்து வந்தது. எனது சின்ன வயதிலே இத்தகைய தானியத்தைத் தின்றுதான் நான் வளர்ந்தேன். மற்றவர்களை ஊட்டி வளர்த்ததும் இதுபோன்ற தானியத்தினால்தான். இந்த ரகத் தானியத்தையே நாங்கள் விதைத்தோம்; அறுத்தோம்; கதிர் அடித்தோம்.’

‘நீ அதை எங்கிருந்தாவது வாங்கினாயா? அல்லது நீயாகவே பயிரிட்டு உருவாக்கினாயா? சொல்லு தாத்தா’ என்று ராஜா விசாரித்தான்.

அம் முதியவன் புன்னகை புரிந்தான். ‘எனது காலத்தில் உணவுப் பொருளை விற்பனை செய்வது அல்லது விலைகொடுத்து வாங்குவது என்கிற பாபத்தைப்பற்றி எவரும் எண்ணியது கூடக் கிடையாது. பணம் எனும் விஷயமாக எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொருவனுக்கும் அவனுக்கே சொந்தமான தானியம் கிடைத்து வந்தது’ என்றான்.

‘அப்படியானால், தாத்தா உன் வயல் எங்கே இருந்தது? இதுபோன்ற தானியத்தை நீ எங்கே பயிரிட்டாய்?’ என்று அரசன் கேட்டான்.

கிழவன் பதிலளித்தான்: ‘கடவுளின் பூமிதான் எனது நிலம். எங்கெங்கு நான் உழுதேனோ அங்கெல்லாம் எனது வயல்தான். நிலம் தாராளமாகக் கிடந்தது. அதைத் தனது உடைமை என்று எந்த மனிதனும் சொந்தம் கொண்டாடியதில்லை. உழைப்பை மட்டுமே தங்களுக்குச் சொந்தமானது என்று மனிதர் குறிப்பிட்டு வந்தனர்.’

‘இன்னும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு, போதும். முதலாவது, பூமி அந்தக் காலத்தில் மட்டும் ஏன் இத்தகைய தானியங்களைத் தந்தது, இப்பொழுது ஏன் இப்படி விளைச்சல் தருவதில்லை? இரண்டாவதாக, உனது பேரன் இரண்டு கோல்கள் ஊன்றி நடப்பானேன்; உன் மகன் ஒரு கோலின் துணையோடு நடப்பது ஏன்; நீ மாத்திரம் கோல் எதுவும் இல்லாமல் நடப்பது எதனால்? உனது கண்கள் ஒளி நிறைந்து உள்ளன. உன் பற்கள் வலிவுடன் இருக்கின்றன. உனது பேச்சு தெளிவாகவும் காதுக்கு இனியதாகவும் இருக்கிறது. இதெல்லாம் எப்படி நேர்ந்தது?’ என்று ராஜா கேட்டான்.

‘இவையெல்லாம் இவ்வாறு ஏற்பட்டிருப்பதன் காரணம் என்னவென்றால்—தங்கள் உழைப்பைக் கொண்டே வாழும் வழக்கத்தை மக்கள் இழந்து விட்டார்கள். மற்றவர்களின் உழைப்பை நம்பி வாழப்பழகிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், மனிதர்கள் கடவுளின் கட்டளைப்படி வாழ்க்கை நடத்தினார்கள். தங்களுக்கு உரியது எதுவோ அதைக்கொண்டு திருப்தி அடைந்தார்கள்; மற்றவர்கள் உற்பத்தி செய்ததை அபகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டதில்லை.’ இப்படி விளக்கம் கொடுத்தான் அந்தக் கிழவன்.

– டால்ஸ்டாய் கதைகள், முதற் பதிப்பு: 1956, ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய், தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், அலைய்டு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *