அடிமைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 7,244 
 

அறைக்குள் நுழைந்தபோது அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். புதிய முகங்கள் – முன்பின் அறிந்திராத நபர்கள், நான்கு பேர். நடுத்தர வயது. நல்ல ஆகிருதி. உட்கார்ந்திருக்கும்போதே உயரம் தெரிந்தது. தாடை இறுகிய சதுர முகம். தணல் போல் சிவப்பு, விழியோரம்.

அனந்த் வந்ததும் எழுந்தார்கள், வணக்கம் சொன்னார்கள்.

“ நான் ஜகன்னாதன் ” – ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், அவர்களில் ஒருவர்.

“ அட்வகேட் ” என்று தொழிலைச் சொன்னார் அருகில் இருந்தவர்.

“ சந்தித்ததில் சந்தோஷம் ! நான் என்ன செய்யக்கூடும் ? என்றான் அனந்த். பக்கத்தில் இருந்தவரைச் சுட்டிக் காண்பித்தார் ஜகன்னாதன்.

“ இவர் அப்பாராவ். ஆந்திராவன் பெரிய பணக்காரர்களில் ஒருவர். கல்லுடைக் கின்ற குவாரி காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். ”

“ நான் என்ன செய்யக்கூடும் ? ” என்றான் அனந்த் மறுபடியும்.

அவர்கள் ஒன்றும் பேசாமல் சிரித்தார்கள். அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று நிஜமாகவே புரியவில்லை அவனுக்கு. அத்தனை அதிகாலையில் அவர்கள் எதற்காக வந்திருக்கக்கூடும் ? ஆந்திராவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவசரம் என்றார்கள். ஆதலால் எழுதிக் கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து வந்திருந்தான் அனந்த். ஆனால், அவர்களோ வாயைத் திறக்காமல் சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.

“ நான் என்ன செய்யக்கூடும் ? ”

“ நீங்கள் எங்கள் கல்லுடைக்கும் தொழிலுக்கு உதவ வேண்டும். ”

“ என்னது … ? ”

மறுபடியும் சிரித்தார்கள்.

“ நான் எழுத்தாளன் ! அதுவும் செய்திப் பத்திரிகையின் ஆசிரியன். நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும் ? புரியவில்லையே … ”

இப்போது ஜகன்னாதன் பேச ஆரம்பித்தார்.

“ மிஸ்டர் அனந்த். சுற்றி வளைக்க விரும்பவில்லை. நீங்கள் எழுத்தாளர் என்பது தெரியும் ‘ தி ஒப்பீனியன் ’ பத்திரிகையின் புதிய ஆசிரியர். அதுவும் தெரியும். வேதபுரியில் சிறைப்பட்டிருக்கும் கொத்தடிமைகளை விடுவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்திருப்பதும் தெரியும். ”

அனந்த் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஓ ! விஷயம் அங்கு நகர்கிறதா ?

“ நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தொழிலாளர்கள் எங்களிடம் தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்று நேற்றல்ல, இரண்டு தலைமுறைகளாக ! ”

“ பரம்பரையாக அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ”

“ அடிமை என்பதெல்லாம் உங்கள் புஸ்தக வார்த்தைகள். அவர்கள் நியாயமான முறையில் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்க இடம் கொடுக்கிறோம். சோறு கொடுக்கிறோம். குடும்பம் மொத்தத்திற்கும் வேலை கொடுக்கிறோம். உங்களுக்குத் தெரியும், அரசாங்கங்களிலும் கூட இவற்றையெல்லாம் செய்வதற்கு முடிவதில்லை. ” ஜகன்னாதன் மென்மையாக, ஆனால் உறுதியாகப் பேசினார்.

“ பாராட்டுக்கள் ! வக்கீலாக இருந்தாலும் வியாபாரியைப் போல் பேசுகிறீர்கள் ” என்று சிரித்தான் அனந்த்.

“ இது சிரிக்கிற விஷயமில்லை ! ” – ஜகன்னாதன் முகம் இறுகியது.

“ நீங்கள் போட்டிருக்கிற இந்த வழக்கின் காரணமாக மக்கள் உங்கள் மீது கொதிப்பாக இருக்கிறார்கள்.

“ எனவே … ”

“ நீங்கள் விசாரணையில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்க வந்திருக்கிறோம். ”

“ ஸாரி ! எனக்கென்று சில நம்பிக்கைகள், கடமைகள் இருக்கின்றன. நான் அவற்றிலிருந்து பின் வாங்குவதற்கில்லை. ”

இப்போது சட்டென்று அப்பாராவ் ஒரு காரியம் செய்தார். மடியில் வைத்துக் கொண்டிருந்த சிறிய கறுப்புப் பெட்டியைத் திறந்தார். உள்ளே சிறிதும் பெரிதுமாக நோட்டுக் கட்டுகள் இருந்தன.

“ இது உங்களுக்குத்தான் … ”

“ நீங்கள் விலாசம் தெரியாமல் வந்திருக்கிறீர்கள் ” என்று கோபமாக எழுந்தான் அனந்த்.

இதுவரை பேச்சில் கலந்து கொள்ளாமலிருந்த இரண்டு பேர் விருட்டென்று எழுந்து வந்தார்கள். உள்ளே போகத் திரும்பி இருந்த அனந்தின் கழுத்துப் பக்கத்தில் பின்னாலிருந்து ஒரு வெட்டு விழுந்தது. கையை விறைத்து, ஆயுதமாக்கி வீசிய கராத்தே வெட்டு, “ அம்மா ” என்று நிலையைப் பிடித்துக் கொண்டு தடுமாறினான் அனந்த். அடுத்த நிமிடம் மூர்ச்சையுற்றுத் தரையில் சாய்ந்தான்.

“ சினிமா போல் இருக்கிறதே ! ” என்றாள் இந்து.

“ நம் சினிமாக்கள் வாழ்க்கையை நெருங்கியிருக்கின்றன என்பது உண்மைதான் ” என்று சிரித்தான் ராஜன் – அனந்தின் உதவியாளன். அனந்த் படுக்கையில் நிமிர்ந்து உட்கார முயற்சித்தான். தோள்பட்டையில் மெலிதாய் ஒரு வலி ஒளிர்ந்தது.

“ அது சரி ! இந்த வம்பை எங்கே வாங்கினாய் ? ”

“ தமிழில் அதிகம் விற்கும் வாரப் பத்திரிகையில் ! ”

“ என்னது ? ’‘

அனந்த் ஒரு பத்திரிகை கட்டிங்கை எடுத்துக் காண்பித்தான். ஒரு பயணக் கட்டுரைக்கு நடுவில் ஒரு வரி. ஒரே வரி.

‘ வேதபுரத்திற்கு அருகில் பத்தாயிரம் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகிறார்கள் ! ’

சிவப்பில் அடிக் கோடிடப்பட்டிருந்தது.

“ நானும் படித்தேனே இதை. ”

“ படித்திருப்பாய். ஐந்து லட்சம் பிரதி விற்கிறது இந்தப் பத்திரிகை. அதனால் குறைந்தது ஐம்பது லட்சம் பேராவது படித்திருப்பார்கள். ஆனால், ராஜனுக்குப் படித்துவிட்டு சும்மா இருக்க முடியவில்லை. இங்கே கொண்டு வந்தான். இதை இணைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்குக் கடிதம் எழுதினேன். கடிதத்தை ரிட் மனுவாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். விசாரணைக்கு உத்தரவாகி இருந்தது. விசாரணை ஆரம்பமாகிவிட்டது நண்பர்கள் வந்து போனதில் இருந்து தெரிகிறது. ”

“ இத்தனை நடந்திருக்கிறது ; நீ என்னிடம் வாயே திறக்கவில்லையே ! ”

“ விஷயம் மொத்தமும் முடிந்ததற்குப்பின், கட்டுரையாக எழுதலாம் என்றிருந்தேன். ”

“ இப்போதே இதைச் செய்தியாய் வெளியிட்டு விடலாம். ”

“ அது மிக நல்ல காரியம் ” என்றான் ராஜன்.

“ வேண்டாம், ப்ளீஸ் ! ”

“ ஏன் ? ”

“ அது வெறும் விளம்பரம். வேண்டாம். ”

“ உனக்கு வேண்டாம் விளம்பரம். பத்திரிகைக்கு வேண்டும். இதனால் இன்னும் ஒரு பத்தாயிரம் காப்பி விற்றால் கசக்கமா என்ன ? ”

அனந்த் பேசவில்லை.

“நீ எழுத்தாளன். விஷயத்தைப் பார்க்கிறாய். நான் முதலாளி. விற்பனையை யோசிக்கிறேன்.

“ அதுதான் கவலையாய் இருக்கிறது. ”

வேதபுரத்திற்குப் புறப்படுவதற்கு இரண்டு நாள் முன்னால் அந்தத் துக்கம் நேர்ந்தது. ராஜனின் தங்கை, அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, புடவை தீப்பிடித்து இறந்துபோனாள். அதிர்ந்து போனான் அனந்த். சின்ன பெண். துருதுருவென்று அலையும் கண்கள். ராஜனுக்கு இணையான புத்திக் கூர்மை, சாதுர்யம் ! ஆனால், கல்யாணத்திற்குப் பின் ஒடுங்கிப் போனாள். புகுந்த வீட்டு மனிதர்கள், அவளின் புத்திசாலித்தனம் கண்டு மிரண்டார்கள்.

அவள் எரிந்து போனது கேட்டு ராஜன் இடிந்து போகவில்லை. வெடித்து உடையவில்லை. விசும்பி அழவில்லை. ஆத்திரப்பட்டான். இது கொலையோ என்று சந்தேகப்பட்டான். துக்க வீட்டில் தடையம் தேடினான். பக்கத்து வீட்டில் சாட்டிசியம் கேட்டான்.

“ மாப்பிள்ளையே கொன்றிருப்பான் சார் ! ” என்று பொருமினான்.

“ அப்படியெல்லாம் சொல்லாதே ராஜன். ”

“ உங்களுக்குத் தெரியாது சார். ஒரு கைதி மாதிரி வைச்சிருந்தான் அவளை.

‘ வரதட்சணை போறலை. வேலைக்குப் போ ’ ன்னு அனுப்பிச்சான் … ”

“ அப்படிப்பட்டவன், சம்பாதிக்கிற பொண்டாட்டியை எப்படி ராஜன் கொளுத்துவான் ? அது பொன் வாத்தில்லையோ ? ” – இந்து இடைமறித்தாள்.

“ அத்தனை யோசனை கிடையாது மேடம். வீட்டுக்கு வெளியில் மனைவியை அனுப்பினால் நம்பிக்கை வைக்கணும். சம்பாதிக்கிற பெண்டாட்டி மேல் சந்தேகம். ”

“ ஸாரி ” என்றான் அனந்த். ஆத்மார்த்தமாக. அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை.

“ அவன் கையில் கல்சுரல் க்ரைசிஸ் ஆக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. சோஷலிஸத்தின் நியாயங்களோ, கேப்பிடலிஸத்தின் சௌகரியங்களோ முற்றிலும் கிடைக்காத இந்த தேசம், பணம் பணம் என்று வெறிகொண்டு விட்டதோ என்று நான் சந்தேகப்படுகிறேன். நம் வேர்கள் புழுத்து விட்டதோ என்று பயப்படுகிறேன். ”

“ எதையுமே அதீதமாக எடுத்துக் கொண்டு அவஸ்தைப் படுவதுதான் உன் சுபாவம். ”

காரில் திரும்பிக் கொண்டிருக்கும்போது,

“ எப்படி இது சாத்தியம் ? ” என்றான் திடீரென்று !

“ எது அனந்த் ? ”

“ பெண்களின் சுதந்திரம் பற்றி எத்தனையோ தலைமுறையாகப் பேசி வந்திருக்கிற தேசம் இது. பெண்கள் தெய்வமாகக் கும்பிடுகிற சமூகத்தில், இப்படி அவர்கள் உயிரோடு எரிக்கப்படுவதும் எப்படி சாத்தியம் … ?

“ அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை அனந்த். பெண்களை உடைமையாக எண்ணி வந்திருக்கிற தமிழர்கள். தங்களுடைய எத்தனையோ உடைமைகளைத் தெய்வமாக வழிப்பட்டது போலவே, பெண்டாட்டிகளையும் கும்பிட்டு வந்திருக்கிறார்கள். அந்த அடிமைத்தனத்திற்கு அன்று சிலைகள் வடிக்கப்பட்டன. இன்று தெய்வாம்சம் போய் விட்டது. இவர்கள் சிலைகளும் இல்லை. மனுஷிகளாகவும் அவர்களை அங்கீகரிக்க முடியவில்லை. கலாசாரச் சிக்கல் ! ”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *