வைராக்கியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2022
பார்வையிட்டோர்: 5,771 
 

வினஜாவின் மனம் ஏதோ பெரிய விடயத்தைச் சாதித்த மகிழ்ச்சியில் துள்ளியது.தனது வீட்டைப்பார்க்கப் பார்க்க மனதில் கர்வம் ஓங்கியது. எத்தனை காலக் கனவு…அவளது வைராக்கியத்தின் உருவாய், நிமிந்து நிற்கிறது அந்த கொன்ரம்பொரரி மாடி வீடு…

மொட்டைமாடியில் ஏறி நின்ற போது நல்லுர் கோயிலின் கோபுரங்கள் ,மிக அழகாய்…கம்பீரமாய்த் தெரிகின்றன.கோபுரத்தை தரிசித்தபோது வினஜா தன்னை மிக அற்பமானவளாய் உணர்கிறாள். ஆனால் ஒரு கணம் தான்…

அவளை அறியாது அவள் பார்வை தெருவைத்தாண்டி அந்தப் பழைய வீட்டில் நிலைத்தது. அவள் இதழ்கடையில் ஏலனச் சிரிப்பு ஒன்று தோன்றி மறைகிறது.

வினஜாவும் அவள் மகள் அபிதாவும் லண்டனில் இருந்து கொழும்பில் தங்காது நேராக யாழ்ப்பாணம் வந்துவிட்டார்கள்.கோண்டாவிலில் தனது தமக்கை வசந்தி வீட்டில் பயணப் பையை வைத்துவிட்டு சிறிது ஓய்வெடுத்தார்கள். மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு புறப்படச் சொல்லி வசந்தி வற்புறுத்தினா. ஆனால் அதுவரை பொருத்திருக்க வினஜாவுக்கு பொறுமை இல்லை. ஓட்டோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு நல்லூர் பைமன் வீதியில் கோயிலுக்கு 200 மீற்றர் தொலைவில் அவள் கட்டியிருந்த மாடிவீட்டைப் பார்ப்பதற்கு ஓடிவந்துவிட்டார்கள்.

வீடு முழுமையாகக் கட்டிமுடிந்துவிட்ட போதும் இன்னும் சில தளபாடங்கள் போட வேண்டியிருந்தது. வீட்டை முழுமையாகத் துப்பரவாக்கி தோட்ட வேலைகளும் செய்ய வேண்டியிருந்தது. வீடு குடிபூருவதற்கான திகதியையும் அவள் இலண்டனில் இருந்தபோதே குறித்துக்கொண்டு வந்துவிட்டாள். இன்னும் பதினைந்து நாட்கள்தான் இருந்தன.,அதற்குள் அவள்செய்ய வேண்டிய வேலைகள் தலைக்கு மேல் இருந்ததன. லண்டனில் கடையை விட்டு விட்டு வர முடியாததால் அவள் கணவர் குகன் குடிபூரலுக்கு முதல்நாள் தான் வருகிறார். மருத்துவக் கல்வி இறுதித் தேர்வை முடித்துக் கொண்டு தகப்பனோடுதான் மயூரனும் வர இருக்கிறான்.

முன் வீட்டில் கார் நுழைகிறது. வினஜா தனது பார்வையைக்கூர்மையாக்கிக் கொண்டு அந்தக் காரை உற்றுப் பார்க்கிறாள்.அதில் இருந்து அருள் இறங்குகிறான்.

வினஜாவின் மனதில் இனம் புரியாத படபடப்பு…

முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படித்தான்…மருத்துவப் படிப்பை முடித்து பட்டமளிப்பு விழாவுக்கு போய்விட்டு அத்தை வீட்டு வாசலில் வந்து இறங்கினான் அருள்.

அன்று வினஜா காதலும் பெருமையும் பொங்க அவனை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவள் பார்வையை உள் வாங்கி இரசித்ததாகவே தெரிந்தது. காதலின் மயக்கம் அவன் கண்களில் ஒளியிட்டதை வினஜாவால் உறுதியாக உணர முடிந்தது என்னவோ உண்மைதான்,

ஆனால் அன்று இரவு நடந்த சம்பவம், வினஜாவும் அவள் தாயும் அவமானத்தால் வெந்து சாம்பலான போது, அருளின் கண்கள் எந்த சலனத்தையும் வெளிப்படுத்தாத வெற்றுக் காகிதம்போலல்லவா இருந்தது…

சண்முகம் சாரதா தம்பதிகளின் ஐந்து பெண்களில் கடைக்குட்டிதான் வினஜா. சண்முகம் யாழ்ப்பாண் ரவுனில் சாரதா புடைவையகம் என்ற பெயரில், பெரிய புடைவைக் கடைகள் இரண்டை அருகருகே வைத்திருந்தார். அவற்றில் வருமானம் போதிய அளவில் வந்து கொண்டிருந்தது, தனது மூத்த இரண்டு பெண்களான கவிதாவுக்கும் குமுதாவுக்கும் கோண்டாவிலில் இரண்டு வீடுகளை கட்டிச் சிறப்பாகவே கலியாணம் செய்து கொடுத்திருந்தார். வினஜாவுக்கு தாம் முதலில் கட்டிய பெரிய வீட்டை வைத்துக் கொண்டு வசந்திக்கும் ராதாவுக்கும் வீடுகட்டுவதற்காக அத்திவாரம் போட்டிருந்தார்.

அப்பொழுதெல்லாம் சண்முகத்தின் ஒன்றுவிட்ட தங்கையான சுந்தரியும் அவவின் குடும்பமும் அண்ணன் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்தது. தனது மகனான அருளை ஐந்து வயது இளையவளான வினாஜாவுக்கு கட்டிவைக்க வேண்டும் என விரும்பியது சுந்தரிதான். சண்முகம் பெரியவர்களானதும் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார், ஆனாலும் அருளையும் வினஜாவையும் இணைத்து குடும்பத்தவர்கள் பகிடிபண்ணுவதுமட்டும் தொடர்ந்தது. அந்த பகிடி விதை மட்டும் வினஜாவின் பிஞ்சு மனத்தில் விதையாக ஊன்றி அவளது பருவ வயதில் மரமாக வளரத்தொடங்கிவிட்டது.

1983 ஆம் அண்டு கலவரத்தின் போது சண்முகத்தின் இரண்டு புடவைக்கடைகளும் எரிந்து சாம்பலாயின. அந்த அவலம் சண்முகத்தின் மனதில் இடியாக இறங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஆரோக்கியத்தைப் பறித்து சம்பவம் நடந்த ஆறாவது மாதம் அவரது உயிரைக் காவு வாங்கியபோது வினஜாவின் குடும்பமே ஆட்டங்கண்டது.முன்னர் ஒட்டி உறவாடிய சொந்தங்கள் மெல்ல மெல்ல விலகத்தொடங்கின. சுந்தரி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

கணவனின் இறப்பின் பின் தனது குடும்பத்தைக் கொண்டு நடத்த சாரதா படாத பாடு படவேண்டியிருந்தது.ஆனாலும் சண்முகத்தின் ஆட்டத்துவசம் முடிந்த கையோடு கலியாண வயதை எட்டியிருந்த வசந்திக்கு வினஜாவுக்கு என வைத்திருந்த வீட்டைக் கொடுத்து ஒருவாறு கலியாணத்தினை செய்து வைத்துவிட்டா. ராதா அசிரியையாய் இருந்ததால் அடுத்த ஐந்து வருடங்களை ஒருவாறு ஓட்ட முடிந்தது. ராதா தன்னோடு கூடப் பணியாற்றிய அசிரியர் கவியழகனை காதலித்தபோது தன்னிடம் இருந்த சொற்ப நகையையும் அவளுக்கென இருந்த காணியையும் கொடுத்து மிக எளிமையாகக் கலியாணத்தை செய்துமுடித்த போது சாரதாவிடம் ஒரு நிம்மதி எற்பட்டது என்மோ உண்மைதான்.

ஆனால் அந்த நிம்மதியை அனுபவிக்க முடியாத வகையில் வாழ்க்கை அவவைப் பயமுறுத்தியது. வினஜா அப்பொழுதுதான் தனது உயர்தரப் பரீட்சையை எழுதியிருந்தாள்.விஞ்ஞானப்பிரிவில் தோற்றி இருந்த அவளால் மூன்று பாடங்களில் சாதாரண சித்தியை மட்டுமே எடுக்க முடிந்திருந்தது.ராதாவின் கலியாணத்திற்குப் பின்னர் மூத்த மகளான கவிதா வீட்டில் வினஜாவும் சாரதாவும் போயிருந்தார்கள்.ஆனால் அங்கு அவர்கள் எதிர்நோக்கிய சில வேண்டாத நிகழ்வுகள் அவர்களை, தனித்து வாழ்வதன் மூலமே தமது கௌரவத்தையும் சுதந்திரத்தையும் காத்துக்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வரவைத்தன .

அவர்கள் தனித்து வந்தபோது வினஜா வேலைக்குப் போக வேண்டியது கட்டாயமாக இருந்தது. வினஜா சிறிய, தனியார் மருத்துவ கிளினிக் ஒன்றில் உதவியாளராகச் சேர்ந்து கொண்டாள். அங்கு அவள் வரவேற்பாளராக, மருந்து கட்டுபவளாக ,கிளினிக்கை சுத்தம் செய்பவளாக எல்லாமாக வேலைசெய்த போதும் சொற்பவருவாயையே பெற முடிந்தது. வெளிநாட்டில் வசித்த சாரதாவின் நண்பி கலையரசி தனது வீட்டை வாடகையில்லாது வழங்கியது அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அதில் வீட்டுத்தோட்டம் ஒன்றை அமைத்து தமக்கு வேண்டிய வருவாயை சாரதாவும் ஏற்படுத்திக்கொண்டதால் ஓரளவு சமாளிக்க முடிந்தது.

சாரதா தனது கணவன் இறந்த பின் இரண்டு குமருகளை கரை சேர்த்து விட்டா. ஆனால் வினஜாவுக்கு என்று கொடுக்க ஒரு காணித்துண்டைத்தவிர வேறோன்றும் இருக்காதது அவவின் மனதை வாட்டிக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் அருள் மருத்துவ்சபீடத்துக்கு அனுமதி பெற்றுக் படித்துக் கொண்டிருந்தான். சீதனத் சந்தையில் அவனது மார்க்கெற் உயர்ந்துகொண்டுபோனது. என்னதான் வினஜா அழகி என்றாலும் அருள் தொட முடியாத உயரத்துக்குச் சென்றுவிட்டான் என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டிருந்தா சாரதா . தனது விரலுக்கு எற்ற சம்பத்தத்தைச் செய்துமுடிக்க தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய்த்தொடங்கியிருந்தா,

ஆனால் வினஜா மட்டும் கற்பனையுலகிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அது எண்பதுகள். இன்றுபோல காதலை ஒரு குறுஞ் செய்தியில் வெளிப்படுத்திவிட முடிவதில்லை.இருவரும் சந்திகத்துக் கொள்ளும் போது பார்வையால் ஒருவரை ஒருவர் கவ்வி இழுப்பது போலப் பார்த்துக்கொள்வார்கள். சிறுபுன்னகை உதிர்ப்பில் காதலினை வசீகரிக்க முயல்வார்கள். இவற்றோடு காதல் வெளிப்பாடுகள் முடிந்துவிடும். அருள் தனாக வந்துகாதலை முதலில் வெளிப்படுத்தவேண்டும் என ஏக்கத்துடன் காத்திருந்தாள் வினஜா . அந்தத் துணிவு ஒருநாளும் அவனுக்கு வருவதாகத் தெரியவில்லை. அப்பா உயிரோடு இருந்து செல்வச் செழிப்போடு இருந்திருந்தால் ஒருவேளை அவள் தானாகவே அருளிடம் தனது காதலைத் தெரிவித்திருப்பாளோ என்னவோ. வினஜாவின் பொருளாதார நிலை முள் போல் அவள் மனதையும் உருத்திக்கொண்டுதான் இருந்தது.

சண்முகம் இருந்த போது அடிக்கடி வீட்டுக்கு வரும் அத்தை குடும்பம் இப்பொழுதெல்லாம் கலியாணம் முதலிய விசேடங்க்ளுகு மட்டும் வந்து போகிறது. ஆனால் அவர்கள் வீட்டு சிறு விசேடங்களுக்குக் கூட சாரதாவை அழைக்க சுந்தரி தவறியதில்லை..ஐம்பது அறுபது பேருக்குக் கூட அசராது மிகச்சுவையாக சமைக்கும் சாரதா அவர்களுக்கு தேவையாக இருந்தது. அந்த நேரங்களில் மட்டும் அண்ணி அண்ணி என குழைந்துகொண்டு சுந்தரி வருவதன் நோக்கம் சாரதாவுக்கு புரியாமல் இல்லை. வினஜாவின் அழகில் ஈடுபட்டு அருள் பிடிவாதமாக நின்றால் ஒருவேளை வினஜாவின் விருப்பப்படி இந்தக் கலியாணம் நடக்கக் கூடும் என்ற நப்பாசை அவவின் மனதின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்ததே அவர்கள் அழைப்பை ஏற்று அவ அவர்களின் விசேசங்களுக்கு போவதற்கான காரணமாக இருந்துவந்தது.

அப்படித்தான் அன்றும் சாரதா அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தா.

அருளின் பட்டமளிப்புவிழாவை சிறிய கொண்டாட்டமாகவே சுந்தரி ஒழுங்குபண்ணியிருந்தா.. நெருங்கிய உறவினரும் நண்பர்களுக்கும் அன்று கறி விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. சமைப்பதற்காக விசெடங்களுக்கு சமைக்கப்போவதைத் தொழிலாகக் கொண்டிருந்த செல்லம்மா அழைக்கப்பட்டிருந்தா. அவவோடு வேறுசில உறவுப் பெண்களும் உதவிசெய்தபோதும் சாரதாதான் முழுதாக ஈடுபட்டு சமையலைச் செய்து முடித்தா.

மாலைஐந்து மணியளவில் தனது வேலையை முடித்து விட்டு வினஜா தாயை சைக்கிளில் ஏற்றி வருவதற்காக அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள்.

டொக்ரராக தனது அத்தானைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே அவள் மனதில் கிலுகிலுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது,உள்ளத்தின் மகிழ்ச்சி முகத்தில் ஒளியைப்பாச்சி அவள் அழகை மேலும் மெருகூட்டுவதாகவே இருந்தது.

அருள் காரில் இருந்து பட்டமளிப்பு கோட்டுடன் கம்பீரமாக இறங்கினான் அருளின் பின்னால் புகைபடப்பிடிப்பாளரும் இறங்கினார்.

சுந்தரி மிகவும் படபடப்பாகக் காணப்பட்டா.

“அண்ணி தேத்தண்ணி போடுங்கோ அவையள் வரப் போயினம்”

செல்லம்மா மத்தியானத்தோட போட்டா ,அவ வடைக்கு அரைச்சுவைச்சிருக்கிறா. அதை ஒருக்கா எண்ணையில போட்டு எடுங்கோ.. வினஜா ஹோல ஒருக்கா ஒழுங்குபடுத்துபிள்ளை…பொம்மர் அடிச்சமாதிரி சாமங்கள் எல்லா இடமும் சிதறிக் கிடக்கு.”

அவவின் கட்டளைகள் அதிகாரத்துடன் ஓங்கி ஒலித்தன. .

“யார் வரப் போகிறார்கள்….? இப்பொழுது கொஞ்சம் முதல்தான் வந்த எனக்கு ஒரு வாய் தண்ணி கூடத்தராமல் அத்தை வேலைக் காரருக்கு கட்டளையிடுவது போல் வாய் ஓயாமல் வேலை சொல்லுகிறாவே”

என்ற எண்ணம் மனதில் தோன்றி வினஜாவின் மனதைக் குடையத்தொடங்கினாலும் அருளுக்காக அதனைத் தாங்கிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் ஒருபெரிய கார் வீட்டின் முன் வந்து நின்றது,அதிலிருந்து ஒருகுடும்பம் இறங்கியது.அவர்களது நடை உடை பாவனை அவர்களது செல்வச் செளிப்பை பறை சாற்றின. தாய் தந்தை இரண்டு பிள்ளைகள்…. அவர்களோடு ஒரு பெரியவரும் வந்து இறங்கி இருந்தார்.. அந்தப்பெரியவருக்கும் அந்தக் குடும்பத்துக்குமான உறவை வினஜாவால் மட்டுக்கட்டமுடியவில்லை. அவர்களில் அந்தப் பெண்பிள்ளைக்கு வினஜாவின் வயது இருக்கலாம். வழமையாக யாழ்ப்பாண்த்தில் கோயில் கலியாணம் முதலிய இடங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களுக்கு வினஜாவை ஒத்த கன்னிப் பெண்கள் சேலை உடுத்துவதில்லை.

அந்தபெண் சேலை உடுத்திருந்தாள். அலங்காரமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததுபோல் வினஜாவுக்குப் பட்டது. ஆனாலும் தனது அழகுக்கு பக்கத்திலும் வரமுடியாதவளாய் அந்தப் பெண் மிகச் சாதாரணமாகவே இருப்பதாக வினஜா எண்ணிக்கொண்டாள்.

அவர்களைச் சுந்தரி அத்தையும் கணேசன் மாமாவும் விழுந்து விழுந்து உபசரித்தார்கள், சாரதாவை வேறு தேனீர், வடை வகையறாக்களைக் கொண்டு வருமாறு துரிதப்படுத்திக் கொண்டிருந்தா சுந்தரி அத்தை.

இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த வினஜாவின் மனத்தை ஒருவித சங்கடம் அழுந்தியது.

அவர்களது உபசரிப்போடு அங்கு எஞ்சி நின்ற அருளின் நண்பர்களும் உபசரிக்கப் பட்டார்கள். ஆனால் சற்றுத்தூரத்தில் குழப்பத்தோடு இவற்றை அவதானித்துக்கொண்டிருந்த வினஜாவை ஆரும்கண்டுகொள்ள வில்லை. அடுபடியில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த சாரதாவுக்கு வினஜா புறக்கணிப்புக்கு உள்ளாவது தெரிந்திருக்கவில்லை.

தேனீர் கடை முடிந்த போது எல்லோரும் படம் எடுத்தார்கள்.

அருளோடு அந்த குடும்பமும் நின்று படம் எடுத்தது.

“சுஜாவும் அறுளும் மட்டும் நின்று படம் எடுக்கட்டுமன். கலியாணம் முடியும் வரைஅந்தப் படத்தவைச்சு சுஜா பாத்துக்கொண்டிருப்பாதானே “ அருளின் நெருங்கிய நண்பன் கவி சொன்னபோது வினஜாவுக்கு தான் அதள பாதாழத்தில் விழுவது போல் இருந்தது.அவளால் பொங்கிவந்த அழுகையை கட்டுப்படுத்தமுடியவில்லை. குசினிக்கு ஒடிச் சென்று தாயை கட்டிப்பிடித்துக் கொண்டு விக்கி விக்கி அழுதாள்.

சாரதாவுக்கு அரசல் புரசலாக மத்தியானமே இந்தச் செய்தி தெரிந்திருந்ததால் வினஜாவின் அழுகைக்கான காரணம் புரிந்தே இருந்தது. சாரதாவின் கண்களிலும் கண்ணீர் கோர்வையிட மகளைத் தடவிக் கொடுத்தா.

“அண்ணி அங்க இன்னும் இரண்டு பேருக்கு தேத்தண்ணி கொடுக்கேல்ல “ என்று கேட்டபடி சுந்தரி குசினிக்குள் புகுந்தபோது சாரதா ஆத்திரத்தின் உச்சிக்குப் போயிருந்தா.

“கடைசியில நம்பவைச்சு ஏமாதிட்டீங்களில்ல”.கோபமும் அழுகையுமாக வெளிப்பட்ட வார்த்தைகளின் அர்த்தம் முழுமையாகச் சுந்தரிக்கு விளங்கியிருந்த போதும் ஒன்றும் தெரியாத பாவனையில்
“என்ன சொல்லிறீங்க அண்ணி” என்றா.

“தெரியாதமாதிரி நடிக்காத சுந்தரி அருளை விஜிக்கு கட்டிக் கொடுக்கிறதா நீங்கள்தானே சொல்லி அவளிண்ட மனசில ஆசையை வளத்தனீங்கள்.”

சாரதாவின் பேச்சு சுந்தரிக்கு ரசிக்கவில்லை… சுந்தரியின் கை ஓங்கியிருக்றது. அதனால் செருக்கும் அவவின் மனம் முழுவதும் மண்டிக்கிடந்தது.எண்பதுகளின் கடைசி காலம் அது, இளைஞர்கள் பலர் நாட்டுநிலைமைகளால் வெளிநாட்டுக்கு வெளியேறி இருந்தனர். பலர் இயக்கத்தில் சேர்ந்திருந்தனர்.இந்த நிலையில் உள்ளூரில் மாப்பிள்ளை எடுப்பது என்பது சிரமமான காரியமாக இருந்த நிலையில் மருத்துவம் பொறியியல் முதலிய உயர் கல்விகற்ற மாப்பிளைக்கான கிராக்கியும் மிக அதிகமாக இருந்தது. இந்த நிலையில் சுந்தரி போன்றோரின் காட்டில் மழை பெய்ததில் ஆச்சரியம் இல்லைதான்.

“சின்னனில எதோகதைச்சதை வைச்சு இப்ப உனக்கு டொக்க்றர் மாப்பிளை கேட்குதோ. ஒரு வீட்டுக்கு கூட வழியில்ல படிப்பும் சரியா இல்லை. வந்திட்டினம் மாப்பிள பிடிக்க”.

நெருப்புத்துண்டுகளாகாக வந்து விழுந்த வார்த்தைகள் மனதைக் கொதிப்படையச் செய்ய திரும்பிய வினஜாவின் முன் அருள்….. இவற்றையெல்லாம் கேட்ட படி எந்தச் சலனமும் இல்லாது நிற்பது தெரிகிறது.

“அம்மா நீங்கள் சண்டைபிடிக்க இது நேரமில்ல. அம்மா அப்பாவோட நான் படமெடுக்க வேணும்”.

என்றபடி பதிலுக்குக் காத்திராது வெளியேறினான் அருள்.

அந்தக் கணத்தில் கணந்தோறும் கணந்தோறும் அருள் மீது வளர்த்து வைத்த காதலைத் துடைத்தெறிய வேணும்போல் வினஜாவுக்கு தோன்றுகிறது. ஆனால் அது முடியக்கூடியதா…?

தானும் தாயும் கண்ணீரும் கோபமுமாய் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதை நினைத்தபோது வினஜாவின் கண்களில் இன்றும் கண்ணீர் திரையிடுகிறது.

அந்த நிகழ்வின்பின் உறவினர் ஒருவரின்செத்தவீட்டில் சுந்தரி பீற்றிகொண்ட விடயந்தான் இன்று நல்லூரில் வினஜா வீடுகட்டுவதில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

“அருளுக்கு கனக்க இடத்திலையும் கேட்டு வந்தது. அனால் இப்ப முடிவாகியிருக்கிற இடம் நல்ல இடம் .நல்லூரில வீடு, காசு, நகை எண்டு நாங்கள் கேக்காமலே அள்ளி அள்ளித் தருகினம். டொக்றர் மாப்பிள்ள எண்டால் சும்மாவே”

சுந்தரி இந்த அம்புகளை தங்களை நோக்கித்தான் எய்திருக்கிறா என்பதை சாரதாவும் வினஜாவும் அறியாதிருக்க அவர்கள் முட்டாள்களில்லை.

அருள் இல்லாது வினஜாவின் வாழ்க்கை ஒன்றும் இருண்டு விடவில்லை. புரோக்கர் மூலம் லண்டன் மாப்பிள்ளை ஒன்று சரிவர அருளுக்கு கலியாணம் நடப்பதற்கு முன்னமே வினஜாவிற்கும் குகனுக்கும் இந்தியாவில் வைத்துக் கலியாணம் நடந்தது. ஒன்ரறை மாதங்கள் இந்தியாவில் கணவனுடன் தங்கிவிட்டு அவனை மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு வினஜா வயிற்றில் கருவைச் சுமந்தவண்ணமே ஊர் திரும்பியிருந்தாள்.

வினஜாவின் கலியாணத்தால் அவளின் குடும்ப அந்தஸ்து உயர்ந்ததாக எண்ணினார்களோ என்னவோ சுந்தரி அத்தையும் கணேசன் மாமாவும் வீடு தேடிவந்து அருளின் கலியாண்த்துக்குக் கட்டாயம் வர வேண்டும் என்று அழைத்தார்கள், சாரதாவுக்கு கோபம் ஆறவில்லை .வினஜாவையும் போக வேண்டாம் என்று மறித்தா. ஆனால் வினஜா கலியாணத்துக்கு போனாள்.

பெண்கள் மிகவும் நுட்பமான மனவுணர்வுகளைக்கூட அடையாளங்காணும் திறன் படைத்தவர்கள்.அருள் வார்த்தைகளால் காதலைச் சொல்லாவிட்டாலும் அவன் தன்னழகை இரசித்தானென்பதையும் தன்மீது காதல் கொண்டிருந்தான் என்பதையும் சர்வ நிச்சையமாக வினஜா அறிவாள், தனது காதலை வெளிப்படுத்தும் துணிவுமட்டும் தான் அவனுக்கு இல்லை எனக் கருதியிருந்தவளுக்கு அவன் பணமோகம் காரணமாகத் தன்னை புறக்கணித்தான் என்பது பெரும் ஏமாற்றத்தை தந்தது. அவள் காதல் உணர்வு தோன்றாத பருவத்திலேயே அருள் மீது விருப்புக் கொண்டு பருவ வயதில் காதலை கணந்தோறும் வளத்திருக்கிறாள். அவனது மருத்துவப்படிப்போ அவனது பண வசதியோ அவள் காதல் கொள்ளக் காரணமாய் ஒரு போதும் இருந்ததில்லை..அவன் மிகச் சாதரணனாக இருந்தாலும் கூட அவளது காதலில் மாற்றம் இருந்திருக்காது.

அந்த காதலுக்கு மதிப்பில்லாதபோது எற்பட்ட ஏமாற்றம் தாங்கமுடியாதாய் இருந்தது ,அந்த ஏமாற்றம் அவளிடத்தில் வன்மமாக உருமாறி வளரத்தொடங்கியிருந்தது.

மிக அழகாக அலங்கரித்துக் கொண்டு ஒரு தேவதை போல…கண்ணாடியில் தன்னைத்தானே இரசித்துக் கொண்டாள் வினஜா.

கலியாணம் மிகவும் தடல் புடலாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் பெரிய வியாபார புள்ளியான பெண்ணின் தகப்பன் கனகசபை காசு கொடுத்து படித்த டொக்ரர் மாப்பிள்ள்ளையை வாங்கிவிட்ட மத மதப்பில் மண்டபம் முழுவதும் பெருமையோடு சுற்றிக்கொண்டிருந்தார்

பரிசுப்பொருளினை எடுத்துக் கொண்டு மணமேடைக்குப் போணாள் வினஜா. . பரிசை வழங்கியபோது இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன . அருளின் கண்களில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிந்தது. பணத்துக்கு ஆசைப்பட்டு அழகு தேவதையை இழந்து விட்டோமே என்ற ஏக்கம் அதில் கோடிட்டதை வினஜா மிகவும் இரசித்தாள். ஆனால் இவையாவும் ஒரு கணம் தான் . மீண்டும் அருள் சகய நிலைக்கு வந்து விட்டான்.

அவனை பழிவாங்குவதற்கான வழியை அன்றுதான் அவள் வகுத்துக் கொண்டாள். அருள் எவற்றுக்காக எல்லாம் அவளை நிராகரித்தானோ அவற்றையெல்லாம் தான் அடைவது எனத் தீர்மானித்துக்கொண்டாள்.

ஸ்பொன்சர் முதலிய காரணங்களால் அவள் குழந்தை மயூரனுக்கு முன்று வயது முடிந்த நிலையிலேயே இங்கிலாந்துக்கு வினஜா போக முடிந்தது. அவள் அங்கு போனபோது குகன் தமிழ் கடை ஒன்றிலும் பெற்றோல் செற் ஒன்றிலும் வேலை செய்து கொண்டிருந்தான். இருவரையும் இங்கிலாத்துக்கு கூப்பிடுவதற்குத் தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் செலவழித்திருந்தான் குகன்.இதனால் மயூரனை பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டு வினஜா குகன் வேலை செய்த தமிழ் கடையிலேயே தானும் வேலைக்கு போகத்தொடங்கினாள். இருவரும் கடுமையாக உழைத்தார்கள். ஐந்து வருடங்களின் பின் தாம் வேலை செய்த கடையையே வாங்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது.அந்தக்கடையில் குகன் மாடாக உழைத்தான் என்றால் வினஜா மிகத்திறமையாக நிர்வகித்தாள். வாகனம் ஓட்ட பழகிய அவள் பொருட்களைத் தானே கொள்வனவு செய்து வாகனத்தில் ஏற்றிவரும் அளவுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டாள். அடுத்த மூன்றாண்டுகளில் அருகில் இருந்த இன்னும் ஒரு கடையும் அவர்களின் சொந்தமானது . அப்பொழுதுதான் அபிதாவும் பிறந்தாள். ஆனாலும் வினஜா மயூரனின் படிப்பினையும் பார்த்துக்கொண்டு அபிதாவைக் கைக் குழந்தையாகவே கடைக்கு கூட்டிவந்து கடையையும் பார்த்துக் கொண்டாள். மயூரனை மருத்துவராக ஆக்க வேண்டும் என்ற தனது கனவையும் ஊட்டியே வளர்த்து வந்தாள்.

அவள் கனவுகள் கனவுகளாக மறைந்து விடாது நியங்களாகவும் மாறின. அவளது உழைப்பும் குகனது ஆதரவும் அவற்றினை நினைவாக்கின. லண்டனில் குறைடன் பகுதியில் தனி வீடு ஒன்றையும் வாங்கிக் கொண்டாள்.அருள் மேற்படிப்புக்காக லண்டன் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வந்த போது விமானநிலையத்திலிருந்து குகனும் வினஜாவும் தான் அழைத்துவந்தார்கள். வினஜாவின் உடை நேர்த்தியும் அவள் கார் ஓடிவந்த லாவகமும் அவளது அழகிய வீடும் அருளை வியப்பில் ஆழ்த்தின என்பது அவனது கதைகளில் இருந்து விளங்கியது. இரண்டு நாள்கள் மட்டுமே அவன் அங்கு தங்கிய போதும் வினஜா ஆங்கிலத்தில் சரளமாகவும் சரியான உச்சரிப்பிலும் பேசியதை அவதானிக்கக் கூடிய சந்தர்ப்பம் அவனுக்குக் கிட்டியது. அதனையிட்டு சிறிது பொறாமைகூட அவன் பட்டதாக தெரிந்தது. இவையெல்லாம் ஏதோ ஒருவகையில் வினஜாவின் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தன.

2000 ஆண்டு இலங்கைக்கு வந்தபோது நல்லூரில் அந்தநேரத்தில் ஓரளவு மலிவாக வாங்கிய காணியில் இன்று சில கோடிகளைச் செலவழித்து அழகிய மாடி வீட்டைக் கட்டிவிட்டாள் வினஜா…

இந்தப் பணத்துக்காகத்தானே என்னை நிராகரித்தாய்.இங்கு பார் உன்னுடைய சீதன வீட்டிலும் பிரமாதமான வீட்டை நான் கட்டிவிட்டேன். என்று காட்டுவதற்கு அவள் உள்மனம் விரும்பியது போலும்.

குடிபூரல் அன்று அருளையும் அவள் குடும்ப்தையும் கட்டாயமாக அழைப்பாள்.

அப்பொழுது தனது டொக்கறர் மகனான மயூரனையும் அறிமுகப்படுத்துவாள். தான் வீழ்ந்து விடவில்லை என்பதை பறைசாற்ற அரிய சந்தர்ப்பம் இது…

“அபி அந்த வீட்டை பார்”. அருகில் அவள் மகள் வந்து நின்ற போது அருளின் வீட்டைச் சுட்டிக்காட்டினாள் வினஜா.

“இது எங்கட சொந்தக்காரற்ற வீடு. ஒருகாலத்தில இந்த வீட்டக் காட்டி எங்கள படு கேவலமா நடத்தினவ. இண்டைக்கு அவையிண்ட வீட்டிலும் பார்க்க நல்ல வீட்ட நான் கட்டிட்டன்.”

“ என்னம்மா நீங்களும் எல்லாரையும் போலத்தானா?அப்ப நீங்கள் உங்கட தேவைக்காக இந்த வீட்ட கட்டேல்ல: இதுதான் தமிழாக்களிண்ட பிரச்சினை எப்பவும் அடுத்தவனை விட தான் பெரியாள் எண்டு காட்டிறதுக்காக என்னவும் செய்வினம். நலல பிஃரண்டா இருக்கிறதாக் காட்டிக்கொளுவினம். ஆனா உள்ளுக்குள்ள அவையோடதான் முதல் சொம்பீற் பண்ணுவினம். இந்த வீட்டுக்கு செலவழிச்ச காசக் கொண்டு லண்டனில வீடு வாங்கியிருந்தால் 1300 பவுண்டுக்கு ரெண்டுக்கு விட்டிருக்கலாம்.”

அபிதா தானறிந்த பெரும்பானமையான தமிழர்களின் மனப்போக்கே தனது தாயிடமுமிருப்பதைச் சுட்டிக்காடடுகிறாள்.

பணம் படைத்தவர்கள் பலர் ஊரில் தமது வேரைப் பதிய வைப்பதாகச் சொல்லியும் தமது முதலீடுகளில் இதுவும் ஒன்று எனச்சொல்லியு, தாம் இலங்கைக்கு வரும்போது ஒரு வீடு வேண்டும் எனக் கூறியும் யாழ்ப்பாணத்தில் நவீன வசதிகளோடு கூடிய வீடுகளை எழுப்பிவருகிறார்கள். இதனூடாகத் அவர்கள் தமது பணப் பெருமையையும் காட்டத்தவறுவதில்லை. வினஜாவும் இத்தகைய ஒரு மனநிலைக்கு உட்பட்டுத்தான் வீட்டைக்கட்டினாளா…?

அபிதா சொன்னவை வினஜாவின் மனதைக் குழப்பிவிடுகின்றன. அந்தக்குழப்பத்தில் இருந்து விடுபட்டு மன அமைதி பெற வேண்டும் போல் இருக்கிறது வினஜாவுக்கு.

அப்பொழுது நல்லூர் கோயிலில் பூஜைக்கான ஆரம்ப மணி அடிக்கிறது. வினஜா கோயிலுக்கு போய்வர விரும்பினாள்.

கோயில் வாசலில் மனம் உருகி பிராத்தித்த போது மனதில் திடீரென ஒரு கேள்வி தோன்றுகிறது .அருளை வெற்றிகொண்டதாக எண்ணியதெல்லாம் அபிதா சொன்னது போல போட்டி மனப்பான்மையின் வெளிப்பாடா? அல்லது தனது மமதை மனதின் வெளிப்பாடா? என்ற கேள்விதான் அது. அது அவள் உள்ளத்தை ஆக்கிரமித்த போது அவள் தன்னையே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறாள்.

தனது இந்த முன்னேற்றத்துக்கெல்லாம் மூலகாரணமாய் இருந்தவன் அவளது கணவன் குகன் என்பது வினஜாவுக்கு நன்கு தெரியும். அவன் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் அவளுக்கு உண்டு.

சந்தர்ப்பங்களை உறுதியான மனதோடு விடாப்பிடியாகப் பயன்படுத்தினால் தன்னைப்போன்று யாராலும் முன்னேற முடியும் என்று அவள் இப்பொழுது உறுதியாக நம்புகிறாள். குகன் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தை அவள் பயன்படுத்தியிருக்கிறாள்.

ஆனாலும் தனது வைராக்கியம் அருளின் புறக்கணிப்பால் வந்தது,அதனால் அவனும் தனது முன்னேற்றத்துக்கு காரணமாய் இருந்திருக்கிறான் என்று எண்ணும்பொது அவனை மன்னித்து விடலாம்போல் தோன்றுகிறது,

வைராக்கியம் என்ற பெயரில் தான் யாருக்காகாவோ தனது வாழ்வை வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் சிறிய வலியையும்தருகிறது, ஆனால் அந்த வலியின் முடிவில் ஒரு தெளிவு பிறக்கிறது.

மனதில் இது வரை காவித்திரிந்த பெருங்கல் விலக மனம் இலேசாகி அமைதி பரவுகிறது. நல்லூர் மண்ணில் கால்வைத்த நேரம் தனது மனம் தெளிந்ததாக எண்ணியவள் நல்லூர்க் கோபுரத்தைப் பார்க்கிறாள். கண்ணீர் கண்களில் திரையிடுகிறது, மானசீகமாக முருகனிடம் மன்னிப்பை வேண்டுகிறாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *