விழி திறந்த வித்தகன்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 24,193 
 

குரு ஞானசம்பந்தர் உயர்நிலைப்பள்ளி .பிரார்த்தனை மண்டபத்தில் நடுநாயகமாக நின்றான் கபிலன்.

ஒலிப்பேழையிலிருந்து உருக்கொண்டு தவழ்ந்து வந்த தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவடைந்தவுடன் மாணவத்தலைவன் தலைமையாசிரியருக்கு முகமண் கூறி ஒரு குறிப்பேட்டை தந்துவிட்டு தனது இருப்பிடம் திரும்பினான்.

“மாணவ மணிகளே.!..காலாண்டுத்தேர்வு வரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நடுநாயகமாக இருந்த இந்த மாணவன்…இப்போது பள்ளியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவனாக உங்கள் முன் நிற்கிறான்.!.சமீபத்திய மகிழ்ச்சியான செய்தி இவன் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று…”

தலைமையாசிரியர் தன் புகழ் பாடுவதையும் மறந்து சிலையாய் நின்றான் கபிலன்.

* * * *

” வணக்கம் …ஐயா.!”மாணவ மாணவிகளின் குரல் ஒன்றுசேர ஒலித்த போதும்…விரக்தியில் எழுவதற்கும் மறந்து அமர்ந்திருந்தான் .வகுப்பறையின் இறுதி மூலையான ‘மாப்பிள்ளை பெஞ்சு’தான் கபிலனின் நிர்பந்த சிம்மாசனம்..!.’இது அறிவியல் ஆசிரியர் அறிவழகனின் வகுப்பு..சிடுசிடு வென செய்முறை தேர்வு செய்தாயா.?…மூலக்கூறு ..சமன்பாடு என்று கேட்டு கழுத்தறுப்பதோடு…கண்மண் தெரியாமல் சாத்துவதிலும் சளைத்தவரில்லையே..’

‘பொதிக்கழுதைன்னு விதி எழுதிய பிறகு பந்தையக்குதிரையாக பரபரப்பானேன்’என்று அமர்ந்திருந்தவனை இன்புற செய்தது பிரதி வணக்கம் கூறிய அந்த மென்குரல்.!.

‘ இது சயின்ஸ் வாத்தியார் குரல் இல்லையே’தலை நிமிர்ந்தான்..

“செல்வங்களே..என்னை உங்களில் யாருக்கும் தெரிந்திருக்காது…நான் பத்மவாசன்..இந்த பள்ளியோட முன்னாள் ஓவிய ஆசிரியன்.!..இப்போ ஓய்வு பெற்று..நம்ம திருமடத்துல கோயில் திருப்பணிக்குழு தலைமை ஓவியன். ”

“உங்க அறிவியல் வாத்தியார் என்னோட முன்னாள் மாணவர்.அவரோட ஒப்புதலோட உங்கள் பொன்னான அறுபது நிமிடங்களை அபகரிக்கும் திட்டத்தோடு வந்திருக்கிறேன்….என்ன தயாரா.?!”

எல்லா மாணவர்களையும் போல கபிலனுக்கும் உற்சாகம் ஊற்றெடுத்தது.

“ஒவ்வொரு ஓவியனுக்கும் ஒரு பாணி உண்டு..எனக்கு மற்ற ஓவியங்களை விட கடவுள் படங்களை வரைவதில் அதிக ஈடுபாடு.அதனால இப்ப உங்கள் விருப்ப கடவுள் சித்திரங்களை வரையப்போறேன்…இந்த வகுப்புக்கு மாணவ தலைவன் யாரு.?..தம்பி ஒரு சுண்ணாம்புத்துண்டு கொடு.?”

மாணவத்தலைவன் வசீகரன் எழுந்து நின்று பேந்த பேந்த விழித்தான்.சிறுது நேர யோசனைக்கு பிறகு ‘சாக்பீஸா’சார்…?!”என்றான்.

“பீஸா…பர்க்கரெல்லாம் ஒத்துவராதுப்பா எனக்கு.!”ஓவிய வாத்தியார் நக்கலடிக்க….”பியூன்கிட்ட…வாங்கிட்டு வர்றேன்..சார்”என்று ஓடினான் வசீகரன்.

“சரி…பல்பம் யாராவது வச்சிருக்கீங்களா..?”கொள்ளென்று வகுப்பறையே சிரித்தது..”தப்பு தான் ..இப்பெல்லாம்..’அ..ஆ’எழுதிப்பழகுறது போய்…’லாப்டப்’ல அடிச்சி பழகுற காலமா போயிட்டுதே…ம்…நான் அந்த காலத்து ஆளு..!”என்றபடியே…

கரும்பலகைக்கு பக்கத்தில் இருந்த குப்பைக்கூடையை துழாவி கையில் கிடைத்த சாக்பீஸ் துண்டுகளால் கரும்பலகையில் தீற்ற….

மூச்சிறைக்க வசீகரன் புதிய சாக்பீஸ்களோடு வந்து நின்ற இரண்டு நிமிட அவகாசத்தில் …உறைந்த புன்னகையோடு யவ்வன ரூபமாய் கல்விக் கடவுள் கரும்பலகையில் காட்சியளித்தாள்.!.

“என்ன..பார்க்கறீங்க.!..கல்விக்கடவுள் எங்கிருந்து வந்தாள்.?!..விரல் வித்தையின்னோ…மனக்கண்ணுன்னோ .?!..சொன்னீங்கன்னா..அதுவும் ஒருவகையில் சரிதான்.!.ஆனா இந்த சித்திரம் ,உங்க தமிழ் வாத்தியாரோ..இங்கிலீஸ் டீச்சரோ..பயன்படுத்திட்டு..இனி உதவாதுன்னு தூக்கி எறிஞ்ச சுண்ணாம்பு துண்டால வரையப்பட்டது.!”

“உலகத்துல உபயோகமில்லாததுன்னு எதுவுமே இல்ல.!..ஒன்னுக்கு உதவாத ஒரு பொருள் இன்னொன்னுக்கு உதவும்….பார்வையை விசாலமாக்கிகிட்டா பாதை தானே திறக்கும்.!”.

“எல்லா திறமையையும் ஒருத்தர்கிட்டயே எதிர்பார்க்க முடியாது…சரஸ்வதி உன்கிட்டயும் இருக்கா…என்கிட்டயும் இருக்கா…உன்கிட்ட இசையா…அவன்கிட்ட நடனமா…என்கிட்ட ஓவியமா…பல ரூபங்கள்ல…கடவுள் யாரையும் கைவிட்டதில்லை.”

“தன்னம்பிக்கை எனும் பற்றுக்கொம்பை கைவிட்டுட்டுட்டா பாதாளத்துல விழறது தவிர்க்க முடியாததாக ஆகிடும்…எதிலும் நம்மால முடியும்னு நம்பி இறங்கு…நிலை நிறுத்திகிட்ட பிறகு விமர்சகனை கவனி..தொடர்ந்து ஜெயிக்க அவனும் அவசியம்…எதிலும் ஈடுபடுவதற்கு முன் விமர்சனத்தை உள்வாங்குவது அநாவசியம்.!”என்றார் ஓவிய வாத்தியார்.

மாப்பிள்ளை பெஞ்சில் கூனிக்குறுகி அமர்ந்திருந்த கபிலனை உற்சாகப்படுத்தின இந்த வார்த்தைகள்.

புரியாத ஆங்கிலத்தையும் …புலம்ப வைத்த அறிவியலையும் விட… கைகூடி வந்த கணிதத்தில் கூடுதல் கவனம் செலுத்தினான்.இதோ பள்ளி நிர்வாகத்தின் கவனம் இவன் மீதும்.

* * * *

“எல்லாம் வல்ல இறைவன் அருளால் பள்ளியின் மானம் கபிலன் போன்ற மாணவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதை காக்க வேண்டிய கடமை வீரர்களே…கல்வியில் கவனம் செலுத்துங்கள்.!”தலைமையாசிரியர் உரையை முடிக்க மாணவர்கள் அவரவர் வகுப்பறை நோக்கி நடந்தார்கள்.

வகுப்பாசிரியரின் சிறப்பு அனுமதியோடு ஆதின அரண்மனையை நோக்கி நடந்துகொண்டிருந்தான் கபிலன்.

விவேக சாந்தெடுத்து …வெறுமை இருள் நீக்கிய பிரம்மனை நோக்கி அந்த புதுமைப்படைப்பு வாழ்த்து பெற போய்க்கொண்டிருந்தது.ஆனால் அந்த பிரம்மனோ…வேறொரு கடவுளுக்கு திருநயனம் தீட்டுவதில் லயித்திருந்தான்.

– செப்டம்பர் 4-10;2009

Print Friendly, PDF & Email

1 thought on “விழி திறந்த வித்தகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *