வாடகை வீடு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 6,178 
 

நாமதான் இந்த மாத கடைசியிலே வீட்டைக் காலி பண்றதாகச் சொல்லிட்டோம் இல்ல, பின்னே ஏன் அவசரமா காலி பண்ணச் சொல்லி நெருக்குறாங்க? எனக் கேட்டாள் ஜெயந்தி.

அவங்க அவசரம் அவங்களுக்கு. என்றார் ராமலிங்கம்.

என்ன அவசரமாக இருந்தாலும் என்ன? நாம முன்னேயே சொல்லியாச்சு. நம்ம பசங்க பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறதனாலேதான் நம்ம கிராமத்து வீட்டைப் பூட்டி போட்டுவிட்டு இங்கே வாடகைக்கு வந்தோம்,

தேர்வுகள் முடிந்தவுடன் காலி செய்திடுவோம் என சொல்லிட்டோம் இல்ல, பின்ன சீக்கிரமா போங்கன்னா என்ன அர்த்தம்? அதெல்லாம் போக முடியாது, எங்களுக்கு எப்போ செளகரியப்படுதோ அப்பத்தான் போவோம்னு சொல்லுங்க. என பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள்.

அப்படியெல்லாம் சொல்லமுடியாது ,மகனின் தேர்வு முடியட்டும், நாம நம்ம கிராமத்திற்கே போயிடுவோம். பதினைந்து நாள் முன்னேயே போகனும் அவ்வளவுதான்.

காரணம் தெரிஞ்சுதுன்னா இப்படி எல்லாம் நீ பேச மாட்டே என்றார்.

என்ன பொல்லாத காரணம்?

அவங்க பெண் திருமணமாகி வெளிநாட்டில் இருந்தவங்க ஊருக்கு வருகிறாங்க, மணமாகி இரண்டு வருடமா குழந்தை பேறு இல்லையாம், ஏதோ வேண்டுதல், அவங்க வீடு இரண்டு மாடி ஏறனும் அதனாலே இந்த வீட்டில் தங்க வைக்கலாம்னு யோசிக்கிறாங்க. அதிலே ஒன்றும் தவறில்லையே. என்றார்.

அப்ப சரிங்க, மறுநாள் பதினைந்தாம் தேதியே கிளம்பிடுவோம். என்றாள்.

இது தான் என் ஜெயந்தியின் குணம் என பாராட்டினார். ராமலிங்கம். சரி , நான் கிராமத்திற்குப் போயி ஆட்கள் இரண்டு பேரை சொல்லிட்டு வருகிறேன் பொருள் எல்லாம் கட்டனும் இல்லே எனக் கிளம்பினார்,

வீட்டு வாயிலில் பூனை ஒன்று குறுக்கே இடம் போனது. உள்ளே சென்று நீர் அருந்திவிட்டுத் திரும்பக் கிளம்பினார் பூனை இப்போது வலம் போனது. என்ன நடக்குது? என சந்தேகத்தோடு கிளம்பிச்சென்றார்.

சொன்ன நாளில் வேலையாட்கள் வந்து பொருள்களை கட்டிக்கொண்டு இருக்க, கோணிப் பையை எடுக்க பரண் மீதேறினார் ராமலிங்கம்.

ஏறியவர் படப்படப்பாய் இறங்கினார். பரணில் உள்ள பொருட்களை மட்டும் அப்புறம் எடுத்துக்கலாம் என சொல்லிவிட்டு, மீதி பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டுச் சாவியைக் கொடுக்காமல் கிராமத்து வீட்டிற்கு அனைவரும் சென்றனர்.

மறு நாளும் உணவு எடுத்துக் கொண்டு வாடகை வீட்டுக்கு வந்து திறந்து சிறிது நேரம் அங்கு கழித்துவிட்டு தனது கிராமத்திற்கு திரும்பினார்.

மூன்று நாட்களாக நடக்கும் இதைக் கேள்விப்பட்ட வீட்டுச் சொந்தக்காரர் கோபத்தின் உச்சிக்கே போனார். நேரே அவரைக் காண கிராமத்திற்கே சென்று,

என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? நீங்க?

வீட்டைக் காலி பண்ணச் சொன்னா, பண்ணிட்டு போகாம, சாவியையும் கொடுக்காம தினமும் வீட்டைத் திறக்கறதும், மூடறதும் என்ன நடக்குது அங்கே? என கேட்க,

அதானே சாவியை குடுத்திடுறதாதானே சொன்னாரு! ஏன் இப்படி செய்கிறார்னு தெரியலையே என கல் அடிபட்ட குளம் போல் குழம்பினாள் ஜெயந்தியும்.

என்னை மன்னிச்சிடுங்க! நான் சாவியை இப்போ தரமாட்டேன், இன்னும் பத்துநாள் அவகாசம் மேலும் வேண்டும் என்றார்.

இதெல்லாம் படித்தவருக்கு அழகா இல்லை! அவ்வளவுதான் நான் சொல்வேன் என்று கோபமாகி கிளம்ப எத்தனித்தார்.

சார், என் மனைவிக்கிட்டே கூட இந்த விஷயத்தைச் சொல்லவில்லை.உங்ககிட்ட சொல்ல கூடாது என்று இல்லை, எங்கே சொன்னால், நீங்க எல்லோரும் என்னை அல்ப்பமா நினைப்பிங்களோ, இதெல்லாம் ஒரு காரணமான்னு கூட நீங்க நினைக்கலாம், அதனால்தான் மறைத்தேன். ஆனா நான் எங்கள் குடும்பத்துக்காகவும் உங்கள் நல்லதுக்காகவும் உங்க பெண்ணின் நல்லதுக்காகவும்தான் அப்படி செய்தேன் என்று நிறுத்தினார்.

அப்படி என்ன விஷயம்? என்று ஆர்வமானார்கள். அவர்களும் நம்மைப் போலவே!

அன்று நான் பொருட்களை எல்லாம் கீழே இறக்குவதற்கு பரண் மீதேறினேன், அங்கே ஒரு தாய்ப் பூனை தன் நான்கு குட்டிகளுடன் படுத்து இருப்பதைக் கண்டேன். நாம் தான் வாடகை வீட்டை காலி செய்கிறோம், கிராமத்தில் உள்ள நம் சொந்த வீட்டிற்குச் சென்று விடுவோம். நம்மை நம்பித்தான் அதுகள் குட்டியை ஈன்று இருக்கும். அதுகள் எங்கே போகும்? என யோசித்த நான், இரண்டு நாட்களாக வீட்டிற்கு வந்து உணவை வைத்துவிட்டுச் செல்கிறேன். உணவு இல்லை என்றால் அது தன் குட்டியையே சாப்பிட்டு விடும், மேலும் குட்டிகள் பெரிதானவுடன் அவைகள் ஒன்றை ஒன்று பிரிந்துவிடும். அது வரையிலாவது ஒன்றாக சேர்ந்து இருக்கட்டுமே என்ற சின்ன ஆசைதான். அதுவும் உங்கள் பெண் வந்து தங்கப் போகும் வீடு. இதனை கலைத்த பாவம் நமக்கு வரவேண்டாம் என்று எண்ணித்தான் பரண்மீதுள்ள பொருளை நான் எடுக்கவும் இல்லை, உங்களிடம் சொன்ன தேதியில் சாவியையும் என்னால் கொடுக்கவும் முடியலை. இதற்கும் படிப்புக்கும் சம்பந்தம் இருக்கனுங்கிற அவசியமில்லை, நெஞ்சிலே கொஞ்சம் ஈரம் இருந்தால் போதும்! இல்லைங்களா?

என்னை மன்னித்து விடுங்கள், என் குடும்பத்தையும் சேர்த்தே கவலைக் கொண்டதற்கு நன்றி. அவங்களும் காலி பண்ணினதற்கப்புறமா சாவியை வாங்கிக் கொள்கிறேன் என்றார் வீட்டுச் சொந்தக்காரர்.

அங்கேயும் மனிதம் கிளைப் பரப்பிட செய்து இருந்தார் ராமலிங்கம்.

Print Friendly, PDF & Email

1 thought on “வாடகை வீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *