மீண்டும் காலை வரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,166 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

லொறி திடீரென்று நின்றது. “திருப்பதி ” – குரல் மெதுவாக ஒலிக்கிறது. பதிலில்லை . “டேய் தம்பி, திருப்பதி! எழும்படா!”

அமைதியும் ஒரு பயங்கர மௌனமும் நிறைந்திருந்த அந்தக் காட்டுப் பிரதேசத்தில் லொறி டிரைவர் முத்தையாவின் குரல் கணீரென்று கேட்டது.

முறிகண்டிப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொளுத்தி விட்டு, திருநீறு சந்தனத்தை நெற்றியில் அப்பி ‘டிரைவர் முத்தையாவுக்கும் கொடுத்த பின்பு, மிச்சமிருந்த இரண்டு கலவைகளையும் விரல்களால் வழித்து, லொறியின் முன் முகப்பில் பூசிவிட்டு, லொறிக்குள் அடுக்கப்பட்டிருந்த மூட்டைகளை ஒதுக்கிப் படுக்க இடந்தேடி, பனிக்குளிரை அகற்ற மூட்டைகளின் அணைப் பில் சூட்டி நாயைப் போலச் சுருண்டு படுத்திருந்த லொறியின் ‘கிளினர்’ திருப்பதி தென்னம் வண்டு, வேகத்துடன் கண்களைத் தாக்கியது போலத் துடித்துப் பதைத்து எழுந்தான்.

கண்களைக் கையால் கசக்கிவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தான். “என்ன அண்ணை ; ஏன் லொறியை நிப்பாட்டினிங்க”

“திருப்பதி கீழே இறங்கு. ரோட்டிலை நிற்கிற இந்த எருமை யைத் திரத்து. மரமாட்டம் நடுரோட்டில் நிக்கிது – தரித்திரம்!”

லொறியின் ஒரு மூலையில் செருகியிருந்த துவரங்கம்பை எடுத்துக் கக்கத்தில் இடுக்கியவாறு மூட்டைகளை மிதித்துக் கொண்டு கீழே குதித்து இறங்கினான் திருப்பதி.

துவரம்கம்பின் அடி வேதனை தாங்காது நகர்ந்து, நகர்ந்து ரோட்டின் கரையில் ஒதுங்கிப் பாதையை விட்டு விலகினது, அந்த எருமை.

“ரைட்! லொறியை எடண்ணை!”

லொறி உறுமிக்கொண்டு கிளம்பியது.

மீண்டும் முன் சாய்ந்திருந்த மூட்டையருகில் சென்றான். அவனுடைய எண்ண மெல்லாம் முப்பத்தாறு மணி நேரத்திற்குள் கொழும்பு சென்று, வீடு திரும்பிட வேண்டும் என்பது தான். வாசிகசாலை ஆண்டு விழா நாடகத்தில் பங்குபற்ற வாக்குக் கொடுத்தபடியால் அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலையே தவிர வேறு எதுவுமில்லை .

வெங்காய நெடி மூக்கைத் துளைக்கிறது. மடியில் வைத்திருந்த மூக்குப் பொடியை எடுத்து, ஒரு சிட்டிகையை மூக்கில் அடைத்து விட்டுக் கைவிரல்களை உதறிவிட்டுக் கொண்டான் திருப்பதி.

லொறி ஓடிக்கொண்டே இருந்தது. நினைவு அலைகள் நித்திரைச் சோம்பலை விரட்டி விட்டன.

உரும்பிராய் சந்தியைக் தாண்டிச் சற்று வடக்குப் பக்கம் சென்றால் கண்ணில் தென்படுவது தான் அந்தப் ‘பெட்ரோல் ஷெட்’. அதற்கும் அப்பால் சற்றுத்தூரம் சென்றால் அமைதியான ஒரு பெரிய கல் வீட்டைக் காணலாம்.

அந்த வீடு பொன்னாச்சிக்குச் சொந்தம். பொன்னாச்சி வீட்டுக்குச் சொந்தம்போல அந்தக் கிராமத்து மக்களுக்குக் காட்சி கொடுக்கிறது அந்த வீடு.

பொன்னாச்சிக்கிழவியின் கணவன், ஆசைப் பிள்ளை தன் வாழ்நாளில் ஏதாவது சாதித்திருந்தால், ஒன்று மலைநாட்டில் ரம்புக்கணைத் தோட்டத்தில் கண்டக்டராக இருக்கையில் உழைத்த பணத்தினால் கட்டிய இந்த வீடும், இரண்டாவதாக அநாதையாகத் திரிந்த திருப்பதியைப் பொன்னாச்சிக்குத் தொட்டாட்டு வேலை செய்ய விட்டு வளர்த்த கதையையும்விட வேறு எதுவும் குறிப்பிட் டுச் சொல்வதற்கில்லை.

இந்த இரண்டில் திருப்பதி வீட்டை விட்டே போய் விட் டான். மற்றது போக இன்னும் சில நாட்களே இருக்கின்றன!

கணவன் இறந்ததினால் கிடைத்த பணத்தைக் கொண்டு வட்டிக்கு விட்டு, இறுக்கமாக வாழ்ந்து திருப்பதியையும் தன்வயிற் றையும் வளர்த்து வந்தாள் பொன்னாச்சிக் கிழவி.

கிராமத்தில் கிழவிக்கு இனசனங்கள் நிறைய இருந்துங் கூட இதுவரையில் எவரிடமும் எந்த உதவியையும் நாடியதில்லை .

ஆனால் மிகவும் கிட்டின உறவினர்கள் பொன்னாச்சிக் கிழவி யிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒன்றை.

அது தான் கிழவியின் மரணச் செய்தி!

கிழவியின் மரணத்தினால் அவர்களுக்கு நிறைய இலாபம் இருக்கிறது. அந்த வீடும், அதைச் சுற்றியுள்ள தோட்டந் துரவுகளும்…

மூப்பின் எல்லைக் கோட்டைத் தாண்டிய சில ‘கிழடு கட் டைகள்’ அடிக்கடி டாக்டரைச் சந்திக்க பட்டணத்து ஆஸ்பத் திரிக்குப் படையெடுத்துச் செல்லுவார்கள். இது அப்படியொன் றும் நடக்கமுடியாத சங்கதியல்லத்தான். அதைப் பார்க்கும் பொழு தெல்லாம் பொன்னாச்சிக் கிழவிக்கு மனதை என்னவோ செய் யும். தொடக்கத்தில் உடல் நலத்தைப் பற்றிய இந்தக் கவலை கிழவிக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் திருப்பதி வந்தநாள் தொடக்கம், இந்த மனக்கவலை அவளை விட்டகன்று விட்டது. மனதில் ஒருவித சாந்தி.

முன்னால் வந்த ஏதோ ஒரு வாகனத்துக்கு இடம் விட்டுக் கொடுத்ததால் லொறி பள்ளத்திலிறங்கி ஒரு தடவை தேகத்தைக் குலுக்கி எடுக்கிறது.

முற்றாக நினைவுத்தொடர் அறுந்து விடவில்லை. ஆனால் இன்று -?

பொன்னாச்சிக் கிழவியை நினைத்து, மனம் துயர எண் ணங்களில் ஊசலாடுகிறது.

ஒரு வருடத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி வந்து விட்டவன் தான் திருப்பதி; வீட்டை விட்டு வெளியேறி விட்டவன் என்பதை விட, வீட்டை விட்டுத் துரத்தப்பட்டவன் என்பதே பொருத்தமானதுமாகும்.

பாசம் என்பது பொல்லாத உணர்ச்சி; அது மைல் கற்களி னால் மாத்திரம் துண்டிக்கப்பட்டு விடுவதில்லை.

மூடி வைக்காத வெண்ணெயைப் போல, அவனது உள்ளம் எங்கோ ஒரு மூலையில் வாழும் அந்தக்கிழவிக்காக….

லொறி வவுனியாவை வந்தடைந்தது.

டிரைவர் முத்தையா லொறியை நேராக வவுனியா பெட்ரோல் நிலையத்தில் கொண்டுபோய் நிறுத்தினான்.

‘மட்டினி ஷோ’ பார்த்துவிட்டு வெளியே வருபவன் போல, கண்களைக் கசக்கிக் கொண்டு லொறியை நெருங்கி வந்தான், பெட்ரோல் அடிப்பவன்.

“டாங்கி நிறைப் பார்த்துப் போடப்பா”

‘சரி’ என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான், பெட்ரோல் அடிப்பவன்.

‘திருப்பதி வா, கோப்பி குடிப்பம்!” – முத்தையா கிளீனரை அழைத்தான்.

இருவரும் எதிரே விடிய விடியத் திறந்திருக்கும் ஒரு தேனீர்க் கடைக்குள் நுழைந்தார்கள்.

“அப்பு, ரெண்டு வெறுங் கோப்பி போடு, கடிக்கக் கிடிக்க ஏதாவது இருக்கே?” முத்தையா கேட்டான்.

“ஏன் தம்பி இண்டைக்கு இவ்வளவு நேரம்? யாழ்ப்பாணத் திலை இருந்து பிந்தி வெளிக்கிட்டிருக்கிறீங்கபோல இருக்கு…..” கடைவாசலில் குந்திக் கொண்டு, சுருட்டுப் புகையை ஊதிக் கொண்டிருந்த கிழவன் இதைக் கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க் காமல் இரண்டு ‘வெறும்’ கோப்பி போட ஆரம்பித்தான்.

கிழவனைவிட பார்வைக்கு மூத்த சுவர்க்கடிகாரம் இன்றைய அமெரிக்க கடிகாரத்தைப் போல் தன்னுடைய சிரமமான வேலை யான மணி பன்னிரண்டையும் அடித்துத் தள்ளியது. சத்தம் கணீரென்று கேட்டது.

கோப்பி குடித்துவிட்டுப் புறப்பட்டார்கள். திருப்பதி மூட்டை களின் மேல் இம்முறை வளையமாய்ப் படுத்துப்பார்த்தான்.

“உஸ்….. அம்மாடி! என்ன பனி; என்ன குளிர்” – அவன் வாய் என்னவோ முணுமுணுத்தது.

நாளை இந்நேரம் இங்கு திருப்பி விட்டால் கட்டாயம் நேரத் திற்கு விழாவிற்குப் போய் விடலாம் என்று கணக்கிடுகிறது அவன் மனம்.

சிட்டிகைப் பொடியை கையில் எடுத்து ஓர் இழுவை இழுத்து விட்டு ‘மவ்ளரால்’ காதை மூடிக் கட்டிக் கொண்டான்.

பொன்னாச்சிக் கிழவியுடன் இருக்கையில்தான், திருப்பதிக்கு ‘கிளீனர்’ உத்தியோகம் கிடைத்தது. அடுத்தவீட்டு முத்துவின் தயவால் நாயகம் கம்பனியில் சேர்ந்தான். எழுபத்தைந்து ரூபா சம்பளத்தில் சேர்ந்தவன் இன்று ஏதோ தொண்ணூறு ரூபா எடுக்கும் அளவிற்கு வந்து விட்டான். கொழும்பிற்குப் போய் வரும் படிச் சம்பளம் வேறு.

வாரத்திற்கு இரண்டு தடவையாவது திருப்பதி யாழ்ப்பாணத் திலிருந்து கொழும்பிற்கு லொரியில் செல்ல வேண்டியதாக வரும். யாழ்ப்பாணத்திலிருந்து வெங்காயம், வாழைக்குலை போன்ற பொருட்களும் கொழும்பிலிருந்து சரக்கு சாமான்களும் எடுத்து வரவேண்டியதே அவனுக்கும், முத்தையாவுக்கும் லொறிக்கும் வேலை. இதனால் அவனுக்கு நிம்மதியான நித்திரை கிடையாது. மூட்டை மேலும் கடை விராந்தையிலும் படுப்பது அவன் தொழில் விதியாகப் போய்விட்டது. இதையிட்டு அவன் முன் கவலை அடைந்ததேயில்லை.

ஆனால் இன்று தங்கமணியை இந்த நிலையில் விட்டு விட்டா?

மீண்டும் சம்பவக் கோவைகள் நிழலாட்டம் போடுகின்றன.

‘அர்டன்டன்’ தங்கமணியைப் பெரிய ஆஸ்பத்திரியில் தெரியாதவர்களே இல்லை. அவளுக்கு அங்கு கிடைத்த பெயர் அவளுக்கே வியப்பாக இருந்தது. அவளுடைய தாய், தேங்காய் விற்று வயிற்றை வளர்த்துக் கொண்டிருக்கையிலே தங்கம் எட்டு வயதில் சிவகுருநாதரின் வீட்டில் வேலைக்கு அமர்ந்தாள். தன் தாய் கார் விபத்தில் மாண்ட பிறகு டாக்டரிடமே இருந்து விட்டாள். அவள் ‘பெரிய பிள்ளை’யாகி முட்டையும் நல்லெண்ணையும் விழுங்காமலே வளர்ந்து வரும் உடம்பைக் கண்டு ஏங்கிய டாக்டர் அவர்கள், தன் மகனின் எதிர்காலத்தை நினைத்து அஞ்சியோ என்னவோ யாழ்ப்பாணத்து பெரிய ஆஸ்பத்திரியில் ‘அற்டன் டனா’கச் சேர்த்து விட்டார்.

தங்கமணியின் கையில் நாலு காசு புரளத் தொடங்கியது.

தங்கமணி ஆஸ்பத்திரியில் சேர்ந்து ஒரு சில மாதங்களுக்குள் யாருக்கும் கிடைக்காத ‘பெயர்’ எடுத்தாள். அங்கு வேலை பார்க்கும் ‘மைனர்கள்’ தொடக்கம் கிழடுகள் வரை அவளிடம் பல் இளித்துக் குழைந்து கதைப்பதைக் கண்ட மற்றும் ‘அற்டன்டுகள்’ வாயில் வந்த விதமெல்லாம் ‘குசுகுசு’த்தார்கள். அதைக் கண்டு தங்கம் சற்றுக்கூடத் தயங்கவில்லை. அவர்கள் பார்க்கத் தக்க தாகவே பழகிவந்தாள்.

பொன்னாச்சி மாரடைப்பால் ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருக்கையில் தங்கமணி வேலைபார்க்கும் வாட்டில் தான் படுக்கை கிடந்தது. அந்த வாரமும் ‘லீவு’ போட்டு விட்டு நேரா நேரம் போய் கிழவியைப் பார்த்து வந்தான் திருப்பதி. இதனால் திருப்பதிக்கும் தங்கமணிக்கும் ஒரு வித அந்நியோன்னிய மன ஒற்றுமை ஏற் பட்டது. இவர்கள் பழகும் விதத்தைக் கண்ட பொன்னாச்சி ‘நல்ல சோடி’ என்று சொல்லாவிட்டாலும் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

“என்னடா, ஏன் தங்கத்தை இன்னும் காணோம்?” – ஒரு நாள் இப்படி திடுதிப்பென்று கேட்டாள் பொன்னாச்சி.

“அவளுக்கு இன்று லீவாம். படத்துக்குப் போவதாகச் சொன்னாள்.

“நீ போகவில்லையா?”

பொன்னாச்சி கேட்ட இக்கேள்விக்கு என்ன சொல்வதே என்றே தெரியாமல் தலைகுனிந்து சிரித்தான்.

ஆறு மணிக்கப்பாலும் நிற்கும் திருப்பதி ஐந்தரைக்கு புறப் பட்டதும் பொன்னாச்சிக்கு விஷயம் விளங்கிவிட்டது.

தங்கமணியைப் பொன்னாச்சிக் கிழவிக்கு மிகவும் பிடித் திருந்தது. மருந்து கொடுக்க வரும்போது தன் ஊர்க்கார நர்ஸிடம் தங்கத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாள். ஒருநாள் கேட்டும் விட்டாள். நர்ஸ் சொன்ன விபரத்தைக் கேட்ட பொன்னாச்சிக் கிழவி அடுத்த நாள் வீடு திரும்ப இருந்தவள், இன்னும் இரண்டு நாள் அதிகம் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

திருப்பதி அடுத்த நாள் வந்தான்.

தங்கமணியுடன் ஒரு தொடர்பும் இருக்கக் கூடாது என்று மிகவும் கண்டிப்பாகத் தெரிவித்தாள் கிழவி.

“அவள் ஒரு ‘வேசை’யாம். ராத்திரித்தானே எல்லாம் தெரிஞ்சுது. அவளைப் பற்றி இந்த ஊரே சிரிக்குதாம். நீ அவ ளோட வச்சியிருக்கிற சிநேகத்தை மறந்து விடு ” என்று உபதேசம் புரிய ஆரம்பித்தாள்.

‘ஓர் இரவு மனித மனத்தில் இவ்வளவு விச வித்தையா விதைத்து விடும்?”

பொன்னாச்சி கிழவியின் இந்தத் திடீர் திருப்பம் திருப்பதியை இப்படித்தான் சிந்திக்க வைத்தது.

அவன் பேசவில்லை . கிழவியின் குணம் அவனுக்குத் தெரியும். ஒன்றும் பேசாமலே போய்விட்டான்.

கிழவி பொன்னாச்சி வீடு திரும்பிய மூன்று நாட்களுக்குள் இச் செய்தி ஊரில் பரவிட்டது.

“ஆச்சி, உன்ரை திருப்பதி ஆஸ்பத்தியிலே ஆரோ கங்காணி ஒருத்தியுடன் தொடர்பாம். அவளே தஞ்சமெண்டு படுத்திருக் கிறானாம். நேற்று செல்லம்மான் சந்தியிலே கதைப்பதாகச் சொன்னார்” என்று குஞ்சக்கா கூறியதைக் கேட்ட கிழவியின் நெஞ்சத்தில் புயல் கிளம்பியது.

செய்தி செல்லம்மானின் வாய்க்கு எட்டி விட்டது என்று அறிந்த கிழவி இனி இந்த ஊரிலே இருப்பவர்களுக்கெல்லாம் தெரிந்துவிடப்போகிறது என்று துடித்தாள்.

அன்றிரவு திருப்பதியுடன் நடந்த தர்க்கத்தின் பிறகு அவன் அந்த வீட்டுப்படி மிதிக்க தேவையில்லை. இன்றுடன் அவன் போய் ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தங்கமணியைக் கட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திலேயே இருந்து விட்டான்.

நீண்ட பெருமூச்சு விட்டான் திருப்பதி. லொறி கொழும்புக்கு – புறக்கோட்டைக்குப் போய்ச் சேரும் பொழுது காலை ஏழுமணி திருப்பதி எதிர்பார்த்ததை விட அரை மணி நேரம் முன்னரே வந்தடைந்ததையிட்டு மகிழ்ந்தான்.

முத்தையா வெங்காயம் கொண்டு வந்த குறிப்பிட்ட ஸ்டோருக்கு லொறியைச் செலுத்தினான். கடை மூடப்பட்டிருந்தது. அங்கு நிற்கும் காவலாளியிடம் கூறிவிட்டு இருவரும் பிரிந்தனர். நாளை இரவு நடக்க இருக்கும் நாடகப் பாத்திரத்தின் வசனங்களை

அவன் மனதில் மனனம் பண்ணிப் பார்த்தான்.

எப்படியாவது நாளை இரவுக்குள் போய்ச் சேர்ந்து விட வேண்டுமென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

வருஷா வருஷம் நடக்கும் அந்த ஆண்டு விழாவில் …

திருப்பதி தன் முழுத்திறமையையும் கவனத்தையும் செலுத்தி அந்த வாசிகசாலை ஆண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தி வைக்கத் தீர்மானித்தான்.

கிராமத்தில் எந்த விழா நடந்தாலும் ஒரே குதூகலம் தான். அதுவும் வாசிகசாலை ஆண்டு விழா என்றால் அன்று ஒரே கொண்டாட்டம். சங்கீதம், நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் இருக்கையில் கொண்டாட்டத்திற்கு கேட்பானேன்? நாற்சந்தி முனையில் இராணுவத்தாரால் எரிக்கப்பட்ட கடை அருகில் இருக்கும் அரச மரத்தடியில், குந்திக்கொண்டு தினமும் ‘நியூஸ்’ பரப்பும் சில பெரியோர்களுக்கு அன்று ஒரே வேட்டை, போங்க! அவர்கள் தினமும் அங்கு ‘கதைச்சுச்’ சிரிக்க எடுத்துக் கொள்ளும் முதல் விஷயம் அக்கிராமத்துக் குமரிகளைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

இவர்களின் அகராதிப்படி இந்த இரண்டு மூன்று தலை நரைச்சான் குஞ்சுகளின் புதுவித அர்த்தப்படி தங்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளைத் தவிர, மற்றப் பெண்கள் எல்லோருமே குறிப்பாக கிராமத்து குமரிகள் எல்லாருமே…!

இப்பேர்ப்பட்ட விழாக்கள் மூலம் தான் தங்கள் தங்கள் கதை கட்டிவிட்ட பாத்திரங்களைக் காணும் சந்தர்ப்பம் கண் எதிரே கிடைக்கும். அவர்களுடைய சந்தோஷத்தைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தோற்றத்தில் இன்றோ நாளையோ என்று படுகிழவர்களாகக் காட்சி தந்தாலும் அந்த ‘வியாதி’ மட்டும் இருந்தாலும் இவர்களை விட்டுப்போகாது போல் தெரிந்தது.

திருப்பதி மறுநாள் மாலை யாழ்ப்பாணம் திரும்பியதும் தங்கமணியை அழைத்துக் கொண்டு பஸ்சில் விழாவிற்குப் புறப் பட்டான்.

வாசிகசாலையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபரப்பி, தனது முழுத்திறமையையும் காட்டிக்கொண்டிருந்தது. நாலாபக்கத்தி லிருந்தும் சந்திக்கு கூட்டம் வந்து கொண்டிருந்தது. குந்திக் கொண் டிருந்த பெரியவர் ஒருவர் திருப்பதியையும் கண்மணியையும் கண்டதும் எழுந்தே விட்டார். இளைஞர்கள் அவனைக் கண்டதும் கட்டித் தழுவினார்கள். வந்தடைந்த அந்த சொற்ப நேரத்திற் கெல்லாம் பல நினைவுகள் திருப்பதியின் மனதில் மின்னல் போல் ஓடி மறைந்தன.

தங்கமணியை அழைத்து பெண்களுக்கென்று விடப்பட்ட பகுதியில் அவளை விட்டு விட்டு, மேடையை நோக்கிப் பின் பக்கம் நடையைக் கட்டினான் திருப்பதி.

தங்கமணியின் முகத்தில் அப்பியிருந்த ‘பவுடர்’ வெளிச் சத்தில் மினுமினுத்தது. அங்கு வந்த பெண்கள் அவளை வெறித்து பார்த்து கொண்டிருந்தனர்.

சேலைக்கார வேலன் நேற்றுத்தான் புதிதாகக் கொண்டு வந்த ‘ரூபி சியர்’ சேலை அணிந்து வந்த பெண்களில் சிலருக்குத் தங்கமணியும் அதே சேலையை உடுத்திருப்பதைக் கண்டதும் பொறாமை ஏற்படத்தான் செய்தது. அவள் அருகில் வந்த சிலர் எழுந்து சற்றுத் தள்ளி அமர்ந்தனர். வேறு பகுதியில் இருந்த பெண்கள் அவளைப் பார்த்து ஏதோ காதுக்குள் குசுகுசுத்தனர் அக்கூட்டத்திலிருந்த ஒருத்தி எழுந்து வெளியே அவசர அவசர மாகச் சென்றாள். சற்று நேரம் கழித்து அக்கிராமத்து பெரியவர் ஒருவருடன் அதே பெண் வந்து கொண்டிருந்தாள். அவை ஒன் றையும் கவனியாமல் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தான் தங்கமணி.

“இந்தா உன்னைத்தான்…..!” தங்கமணி கவனிக்கவில்லை .

“இந்தா, ஏய்; உன்னைத்தான். எழுந்து அங்கே போய் அந்தக் கயித்துக்கு வெளியே இரு! உம்…”

கிராமத்து வழக்கப்படி ஒரு பகுதியினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார் அந்தப் பெரியவர்.

தங்கமணி அதிர்ந்து போய்விட்டாள். அவமானம் முகத்தைச் சிறுக்க வைத்தது.

கூடியிருந்த பெண்கள் வாய்விட்டுச் சிரிக்கும் சிரிப்பின் ஒலி, தலை குனிய வைத்தது.

கண்கள் திருப்பதியைத் தேடின. “ஏன் இருக்கிறாய் இம்! ஒழும்பு’

அவள் அசையவில்லை. உடலெல்லாம் வெயர்த்து ஒழுகியது.

மனம் – மரத்த நிலை. திருப்பதியையே மீண்டும் தேடினாள்.

கத்திக்கத்திப் பொறுமை இழந்த அந்தப் பெரியவர் அவளரு கில் விரைந்து சென்றார்.

கூட்டத்தில் ஒரு வகைப் பரபரப்பு.

“அவளைத் தொடாதே. நிறுத்து!” தொண்டை கிழிய வெளிவந்த இக்குரலைக் கேட்ட ஒலிபரப்பியும் கூட்டத்துடன் சோந்து அமைதியானது.

பொன்னாச்சிக் கிழவி பெண் புலியைப் போலச் சீறிக் கொண்டு எழுந்தாள்.

“அவளைத் தொட நீ யார்? அவளை வெளியே போகச் சொல்ல உனக்கு என்ன உரிமை. திமிர். உம்! சொல்லு”

கிழவியின் கண்கள் உரோசத்தால் சுற்று முற்றும் சுழல் கின்றன. கூடியிருந்த பெண்கள் பெட்டிப் பாம்பாகி விட்டனர்

பொன்னாச்சி தொடர்ந்து சொன்னாள்:

“அவள் இப்ப என்ரை மருமேள். ஓம், இப்ப அவள் என்ரை மருமேள்தான்! வாடி போவோம்!” – கூட்டத்தில் நுழைந்து தங்க மணியின் கைகளைப் பற்றி இழுத்தவண்ணம் தெருவில் இறங்கி நடந்தாள் பொன்னாச்சிக் கிழவி

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *