தனியொருவனுக்கு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 14,088 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“..தோலிருக்கச் சுளை வாங்கிகளின் தத் துவச்சிருஸ்டியான “சுரண்டல் வித்தை” என்னும் நித்திய தரித்திர நாராயண னின் ஆசீர்வாதம், தின்ற வயிறு பாதி தின்னாத வயிறு மீதியாக “அநித்தியம்” என்ற இந்தப் பூலோக வாழ்க் கையில் அந்த இரண்டு ஜீவன்களும் உழன்று கிடந்தன.”

“களவெடுப்பியோ ?”

“இல்லை”

“பொய் சொல்லுவியோ?”

“சொல்லேல”

“அடுத்தவீடு போவியோ?”

“போகேல்ல”

“கூடுவாரத்துகளோட திரிவியோ?”

“இல்ல, திரியல்ல”

செப்பமான சம்பல் அடி.

பொடியன் மிதிபட்ட நாக்கிளிப் புழவாட்டம் சுருண்டு கீழே விழந்தான்.

அடிபோட்ட பூவரசங்கம்பு, அதன் மூச்சுத் தெறித்துச் சிலும்பலாய்ப் போய்விட்டது. ஒருவித அந்தகாரத் தவிப்புத் தொங்க கெந்தகித்த பெருச்சினப்போடு கம்பை நசித்து எறிந்துவிட்டு, தாய் சின்னத்தங்கம் திண்ணையில் குந்திக் கொண்டாள்.

பொடியளை ஓரக் கண்ணால் பார்த்தாள்.

நெஞ்சிரக்கம் ஊனித்துப் புரையோட, அவளின் தேகம் கொலுக்க ழன்று இடிந்து போய்விட்டது.

குஸ்டரோகத் தவ்வல் வலிச்சல் நாய்க் குட்டி மாதிரி பையனின் உடம்பு குறாவி விட்டது. அடிபட்ட தழும்புகள் நச்சுத் தேள் புழுவாட்டம் அதைப்பெடுத்துக் கொப்பளித்து ஊதின. ரணகாயங்களி விருந்து இரத்தக்கசிவு ஊனமாக வழிந்தது. ஊளமைக்காயங்களோ சிதிர மடங்கலும் அம்மிப் பிரளயித்தன. கேவி எடுக்கிற விக்கல் தொண்டைக் குவளையை இடறி, இடுக்கி, அடித்து, “முடுக் கிட்டுக்” கொண்டது. வாயச் சிணுங்கல் ஓயவில்லை.

பொடியனுக்கு ஏலவே கோது நெஞ்சு .மேலும் இரண்டு நாள் போசாக்கில்லா விட்டால் பையனின் விலாச்சோணை தலை கோதப்பக்குவமான ஓர் எலும்புச் சீப்பாகி விடும் என்பதற்கு, இன்றைய “கலவைத்தானம்” பண்ணும் நமது “ஸ்பெசலிஸ்டு”களின் சிபார்சு கூட வேண்டியதில்லை.

பையனின் கேவிக் கேவி அழ, விலா எலும்புகள் சதைப் பாடத்தை நுளுந்திப் புடைத்துக் கொண்டு தோற் சவ்வுகளைக் குத்திட்டுக்கிளம்பின.

பொடியனின் பிஞ்சு உடலில் நாலு நாளாக அரித்தெடுத்த பசி, அவனின் அடிக்குடல் சுருங்கிக் கிளர்ச்சி பண்ண ஆரம்பித்ததால் நமது “பெரியவர்கள்” காலங்காலமாகக் கத்திக் கத்திச் சொன்ன “நல்லொழுக்கம்” என்ற நற்சாட்சிப் பத்திரத்தையும் உதாசீனம் செய்து அதைக் கருத்தில் கொள்ளாமல் அவன் குட்டிச் சாத்தான் தொழிலில் இறங்கி விட்டான் என்பதைத் தாய் சின்னத்தங்கம் கசடறத் தெரிந்து கொண்டாள்.

என்றாலும், ஊர் வாய் சும்மா கிடக்குமா? இல்லாததையே இருப்பதாகச் “சத்தியம்” செய்து ஆனந்தப்படும் “பரிசுத்தமான மனிதர்கள்” இந்தப் பொல்லாப்பைக் கண்ட மாத்திரம் என்னவெல்லாம் சொல்லிப்பழிப்பார்கள் தெரியுமா?

அப்பேர்ப்பட்ட அந்த வக்கணைகளையெல்லாம் அவள் ஒரு கணம் நினைத்து உருப்போட்டுப் பார்த்தாள்.

“ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோனெனக் கேட்க “விருந்த இந்த தாயானவளுக்கு, அப்படி ஓர் அவமானத்தை தாங்கவே முடியவில்லை.

“பசிகொண்டால் நாக்கை இழுத்துச் சாகலாம்.ஆனால் களவு என்பதை மனசாலும் நினைக்கக் கூடாது” என்று அடுத்த மரவள்ளி தோட்ட வளவுகாரர் அடிக்கடி சொல்லிக்கொள்வதில் வேறு இவள் நம்பிக்கை பூண்டவள்.

“களவு அவமானந்தான்…?”

ஆதலால், களவெடுத்த மைந்தனுக்கு அகப்பட்ட. கையோடு இன்று இந்தத் தண்டனை.

இன்று அவள் “போதும் போதும்” என்ற அளவிற்கு பையனுக்கு வேண்டிய “சாப்பாடு” கொடுத்திருக்கிறாள்.

பொடியனின் தலையெழுத்து, அவன் “அதை” வாங்கிக் கட்டிக் கொண்டு எடுத்த அடி நகர்த்தாமல் நிலத்தில் விழுந்து சுருண்டு கிடந்து தேம்பிக் கொண்டிருந்தாள். அந்தக் கண்ராவிக் கோலம்தான் நொந்து பெற்ற தாயான அவளின் நெஞ்சை ஆகவும் கெந்தகி க்கச் செய்து கொண்டிருக்கிறது.

‘ஆ, நான் பெருங் கருமக்காறி. என்ர ராஜனுக்கு, என்ர பச்சை மண்ணுக்கு நல்லா அடிச்சுப் போட்டேனே பாவி’ என்று நிர்விசாரமாகத் தன்னையே கறுவிக் கொண்டாள்.

மறுகணம், “இந்தக் கொடுவாளின்ர வயித்தில இது என்ன கறு மத்திற்கு வந்து புறந்தது?” என்று ஒரு விசுவாமித்திரக் கணை தொடுத்துவிட்டு, இந்தப் பாதகியின்ர வயித்தில வந்து சம்பவித்தது க்காக, நீ எந்தக் காலமும் உத்தரிச்சுச் சாகு” என்று முனகிக் கொண்டு ஓரக் கண்களால் அவனைப் பார்த்து நெஞ்சு விம்ம ஒரு பாட்டம் தனக்குள் பூகம்பித்துக் கொண்டாள்

கெம்பித் தகித்துப் பொம்மிய நெஞ்சுப் பொதி, அவள் கமண்டல த்தில் ஏறிப் புரையோடிய பின், மிச்சச் சக்கையாக அவள் கண்களி லிருந்து கண்ணீர் “பொலு பொலுத்துக்” கொட்டியது.

அவளின் தேகமும் இளைத்துப் போய்விட்டது.

அந்தப் பிள்ளையைத் தவமிருந்து பெற்ற “குற்றத்”திற்காக அவனை விஞ்சி அவள் வயிறு வாரக் கணக்கிலே காய்ந்து கொண்டிருக்கிறதை எப்பொழுதோ கண்மூடிய புருசனுக்கு இப்பொழுதும் ஒரு தடவை முறையிட்டாள்.

தேவ கருணை சுரந்து அதன் அக்கினிப் பரீட்சையில் தேறியதும் “திடீரென” எழுந்த கடவுள் கடாஷத்தால் “பரமபதம்” சேர்ந்த, இது அன்றைய சித்தர்களினதும், இன்றைய நவீன தத்துவர்களினதும் பழைய கண்டுபிடிப்பின் புதிய மேஸ்தர், மாணிக்கத்துக்கு அவளின் முறைப்பாடு எங்கே தெரியப் போகிறது?. பாவம், அவள் முழு விசுவாசத்துடன் முறையிடத்தான் செய்தாள். ஆனால் அவள் வேண்டிய அனுக்கிரகம் மட்டும் கிடைக்கவில்லை. தாயும் பிள்ளையும் அழுதுவிட்ட கண்ணீர், முகங்களில் வழிந்ததுதான் மிச்சம்.

தோலிருக்கச் சுளை வாங்கிகளின் தத்துவச் சிருஸ்டியான “சுரண்டல் வித்தை” என்னும் நித்திய தரித்திர நாராயணனின் ஆசீர்வாதம், தின்ற வயிறு பாதி தின்னாத வயிறு மீதியாக “அநித்தியம்” என்ற இந்தப் பூலோக வாழ்க்கையில் அந்த இரண்டு ஜீவன்களும் உழன்று கிடந்தன.

அன்று ஒரு நாள்…

வழக்கம் போல் எரிகிற அவள் வயிறு புதிய வேகங்கொண்டு சன்னதமாடியபோது வழக்கத் துக்கு மாறாகவே அவள் கண்கள் இருண்டு மங்கின. காதுகள் “கிண்”ரம் போட்டன.

பசி…

ராஜனைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

அவன் தலை அறுத்த கோழி மாதிரி, தண்ணீருக்குள் தளம்புகின்ற பாசிபோல் சோர்ந்து போய் ஊசலாடிக்கொண்டு கிடந்தான்.

குடலை அறுக்கின்ற பசி. ஒரு கணம் “சடாரென்று” எங்கோ ஒரு சத்தம். அது, அந்த அடுத்த வீட்டுக்காரரின் மரவள்ளித் தோட்டத்தை யடுத்துக் கிடக்கின்ற அடிவளவுப் பனைக் கூடலுக்குள்ளேயிருந்து கிழடு தட்டிய பனங்காய் ஒன்று அகோரமாய் “தொழுக் “கென்று விழுந்த தொனி.

பையனுக்கு மண்டை முட்டின யோசனை எழுநந்தது.

ஆனால்…?

மரவள்ளிக் கட்டையைப் பெயர்த்துக் கொண்டு வந்த “குற்றத்”திற்காகத்தானே அம்மா அன்று கண்டித்தாள்.?

ஆனாலும், பசி நியாயம் பேசிற்று…

‘இது சும்மா விழுந்த வெறும் பனங்காய்தானே?’

பொடியனின் நடுத்தீர்ப்பு முடிவுக்கு வர ஒரு நிமிடம் எடுத்தது. புதிய உசார் பெற்றுத் துள்ளிக் குதித்து முற்றத்தை தாவினான்.

எதிரே தாய் பத்திரகாளி கோலத்தில் காட்சியளித்தாள்.

உடனே அவன் வாலைச் சுருட்டி அடுப்புக்குள் முடங்கும் நாய்க் குட்டி போல் மெதுவாகப் போய்த் திண்ணையில் குநந்திவிட்டான்.

ஆனால்?

அந்தப் பனங்காய் விழுந்த அகத்திக்குப் பின் அவளுக்கும் மனசு “என்னவோ” பண்ணிற்று, வயிற்றுச் சுருக்கல் எக்கல் ஒருதடவை பனையேறிக் குதித்தது. சிரசு முட்டின யோசனை வந்து போயிற்று. வாய் உமிழ்ந்து ஊறிற்று.

மெல்ல அங்குமிங்கும் பார்த்து ஒரு வித நாணச் சிலிப்போடு கண்களைச் சிமிட்டிக் கொண்டு,ராஜனைப் “பரிவோடு” பார்த்தாள்.

நாறல் மீனைப் பார்த்த கள்ளப் பூனையாட்டம், பயலும் அப்போது தாயை ஏற இறங்கப் பார்த்தான்.

ஒரு கணம் ஓர் இடைவெளித் தகிப்பு, இருவரையும் ஆட்கொண்டது.

“டே, ராஜா”

“என்னம்மா ?”

“ஒரு சங்கதி சொல்றன், “சட்”டென எழும்பி இப்படிக் கிட்டே வா”

அவன் தயக்கமாக எழுந்து நழுந்திக் கொண்டு கிட்டே வந்தான்.

அவள் நமட்டிச் சிரித்தாள்.

“ஏனம்மா சிரிக்கிறாய்?”

“ஓடிப் போய் பனங்காயை எடுத்துக் கொண்டு வா. வரேக்க நவ்வதாப் பார்த்து ஒரு இழுவை மரவள்ளிக் கட்டையும் இடுங்கியா, போ”

அவன் பரிதாபத்தோடு, நம்பிக்கையிழந்து ஏக்க விழிகளால் பார்த்தான். பின்பு ஏங்கின விழிகளை உருட்டி தாயைப் பார்த்து முகம் வறட்டிச் சிரித்தான்.

அக்னிப் பரீட்சை, சோதனைக்களம்.

‘அம்மா என்னைச் சோதிக்க, பொறுப்பான நேரத்தைக் கண்டு பிடிச்சிட்டா’

இரங்கி வழிந்த அவனின் வறட்சி விழிகள், அப்பொழுதும் அவளைப் பார்த்தபடியே கிடந்து முழுசின.

“ஏண்டா உப்புடிப் பார்க்கிறாய். போ, போய் அதை எடுத்து கொண்டா”

ராஜன் அப்பொழுதும் அசையவில்லை.

“ஏன் சுணங்கிறாய், போ”

“உண்மையாத்தான் சொல்றியோ?”

“உண்மைதான் ஒடு”

“என்னைச் சோதிக்கிறாய்?”

“இல்லையடா ராஜா”

“பிறகு நீ அடிப்பாய்”

“நான் இனி அடியன் ராஜா, ஓடிப் போய் எடுத்தா”

ஏலவே அவள் கிளித்தட்டுப் பாய்ச்சல்காரன். பையனை இனிச் சொல்ல வேண்டுமா?

எடுத்தான் ஓட்டம்.

கவடு கிழிகிற ஒட்டம்.

விண்மண் பாராமல் குருவிப்பாய்ச்சலில் ஓடிப்போய் “சாகிறேன் பெண்ணே பிடியடி பந்தயம்” என்றிருந்த ஒரு தற்குறியான வெறும் உக்கல் வேலிக் கதியால் ஒன்றைச் “சட்டென்று முறித்துப் பொட்டுப் பிரித்துப்போன அந்த அசுர சாதனையை பெற்ற தாய் வியந்து பார்த் துக் களி கூர்ந்தவளாய் மெல்லக் குசினிக்குள்ளே பிரவேசித்தாள்.

போன பையன் திரும்பிவரக் காணோம்.

‘என்ன சுணக்கம்?’ என்று அவள் தனக்குள் தலையைப் போட்டு பனங்காய் பினைந்தாள்.

அப்போது ஒரு குரல், அது சிங்கக் கர்ஜனையாக வந்து உறுமி அவள் காதறக் கேட்டது.

“டேய் கள்ள ராஸ்கல், தாராடாது மரவள்ளிக் கட்டையை இழுத்துக் கொண்டு ஓடுற வடுவா?”

சின்னத் தங்கத்தின் நெஞ்சு கைவிட்ட பானைபோல் “நொறுக்” கிட்டது.

அவளுக்கு “விசயம்” வள்ளீசாகப் புரிந்து விட்டது.

பெண்களுக்கு நெஞ்சிலே நிறைந்து கிடக்கும் பாசம், தலையில் உள்ள மூளையின் வேகத்தை மழுங்கவைக்கவே உதவுகின்றது என்பதை இப்போதுதான் அவள் சரியாகத்தான் தெரிந்து கொண்டாள்.

இருந்தும் என்ன?

தலையாடி வீட்டில் தஞ்சம் புகுந்த கள்ளன் மாதிரிச் சங்கதி பிழையாகி விட்டது.

பொடியன் களவெடுத்த கையோடு “பிடிபட்ட பால்” பெரும் விபரீதத்தில் வந்து முடிந்துவிட்டதை , “தாய்” என்ற அவள் “சக்தி”யாற் தடுக்க முடியவில்லை.

“களவெடு, பொய் சொல்லாதே” என்ற “பெரியவர்களின் சித்த ஞான வாக்குகள் அப்போது நினைவில் வந்திருக்க வேண்டும். உடனே பையன் வளவுக்காரன் காலில் விழுந்து “உண்மை “என்ற அந்த மந்திரச் செபமாலையும் உருட்டிப் பார்த்தான்.

காரியம் கை கூடவில்லை.

இந்தக் காட்சிகளையெல்லாம் அவள் கண்களில் ஊனங் கக்கப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

பெற்றவயிறல்லவா? விளக்கு அணைந்த மாதிரி அவள் நெஞ்சு “பக்”கென்று திகைத்தது.. கண்கள் இருண்டு கொண்டு வந்தன.

“ஐயோ, நான் நொந்து பெத்த என்ர குஞசே!”

அவள் அலங்க மலங்க விழுந்து கோலங் குலைந்து எழுந்து நின்று பார்த்தாள். அதற்குள்ளே அந்த வளவுக்காரச் சடாமுனி, ஆக்ரோசமாக ஓடிவந்து அவன் முதுகிலே அதே மரவள்ளிளிக்கட்டையைப் பறித்து அடித்த அடி தாங்காமல் பையன் நாரி நெளிய, உடலை வளைத்து, “என்ர அம்மா?” என்று வீரிட்டுக் கதறிக்கொண்டு முற்றத்திலே தாயின் காலடியிலேயே சுழன்று விழுந்தான்.

“என்ர ராஜா, அழாதையடி, நான் பெத்த என்ர செல்லக்கிளியே, நீ இனி அழாதையணை, நான் தான் பாவியடி”

தாயின் பரிதாபக் கோவம் பையனின் நெஞ்சைக் கரைத்து விட்டது. அவன் “திக்”கிட்டுப் போய் வாயசைக்காமல் கிடந்தான்.

அவள் மைந்தனை அணைத்து வைத்துக்கொண்டு மறுபடியும் அலறினாள்.

“என்ர ராஜனுக்கு நல்லா அடிச்சுப் போட்டேனோடி?”

“ஓம்”மா, நீதாம்மா போகச் சொன்னே”

அவள் இதயத்தில் ஈட்டி குத்தின மாதிரி விழுந்தது அந்தக் கேள்வி.

“ஆ என்ர ராஜா , நான் போகச் சொல்லேலயடா, இந்த வயிறு தான் அப்படிச் சொல்லுதடி, நான் என்ன செய்ய?”

அதுக்காவத்தாம்மா நானும் அண்டைக்குக் களவெடுத்தேன். நீ தான் “களவெடாதையடா”ண்டு “போதிச்சு” எனக்கு அடிச்சுப்போட்டியே”

அவளின் “சதுரம்” குல்லிட்டது.

“பிறகு நீயே போகச் சொன்னாய். போனேன். இப்ப நீ அடிக்கேல, அடுத்தவள் பிடிச்சு அடிக்கிறானம்மா. இதெல்லாம் என்னம்மா?”

அந்தக் கேள்விக்கும் விடை தெரியாமல் அவள் நெஞ்சு சாம்பிற்று.

தான் பெற்ற சின்னஞ் சிறுவனின் பூதாகரமான அந்தக் கேள்விக்கணைக்கு அவள் அப்போதும் பதில் சொல்லாமல் “தறு தறு” வென்றுமுழிசிக் கொண்டிருந்தாள்.

அதற்குப் பதிலாக அப்போது அவளின் கண்களில் கண்ணீர் தான் துளும்பித் தெறித்தது.

“வளவுக்காரன் அடிச்சது எனக்குத்தானே நோகுது. அதுக்கு நீ ஏனம்மா அழுகிறே?”

“டியே ராஜா, நான் இப்ப உனக்காக அழேல்லையடி. இந்த உலகத்தை நினைச்சுத்தான் அழுகிறேன்ரா”

ராஜன் சற்று நிதானம்மாக யோசித்தான். அப்போது அவன் முகத்தில் ஒரு வெறுப்புத் தட்டியது.

“சரிதானம்மா, இது உலகமில்லை. பெரும் “நரக”ம்மா. இந்த நரகம் எப்ப அழியும்மா?”

சிறுவனுக்கு வந்த ஞானம் தாயின் நெஞ்சைக் குலுக்கியது.

“ஆ, என்ர அப்பனே, நீ என்ர பிள்ளையில்லையடா. தெய்வமாய் வந்து பிறந்த உன்னைப் பாவி நான் தெரியாமல் அடிச்சுப் போட்டேனே, ஐயோ ….!”

அந்த அந்தகார நிலையையும் பொருட்படுத்தாமல், அவன் அந்தக் குரலை ஊடறுத்தவாறு தாயைப் பார்த்துக் கேட்டான்.

“அம்மா, நான் களவெடுத்தது பாவமா?”

“இல்லை ராஜா….”

திணறிய வாய் உப்பி அடங்க, அதை ஆமோதிக்கும் தோரணையில் தலையை ஆட்டிக் கொண்டு “ஓ”வென்று குரல் வைத்தவண்ணம், தான் பெற்ற அந்த தெய்வத்தை அள்ளி எடுத்துக் கட்டியணைத்துக் கொஞ்சினாள் தாய்.

ஆனால்….?

அந்த அழியாத நரகத்தில், இந்த இரண்டு ஜீவாத்துமாக்கள் அன்று இரவும், காய்ந்த வெறுங்குடல்களோடு தான் குறாவிக் கிடந்தன.

பையன் சொன்ன அந்த நரகம் இன்னும் அழியவில்லை.

– 1970 தாமரை

– ஓசை – சித்திரை – ஆனி – 1990

– அகஸ்தியர் கதைகள், முதற் பதிப்பு: 1987, ஜனிக்ராஜ் வெளியீடு, ஆனைக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *