காணாமல் போனவர்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 14, 2022
பார்வையிட்டோர்: 9,792 
 

(1985 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்காட்சியில், நேற்று மணியைப் பார்க்க நேர்ந்தது. மணி என்றால் மனோன்மணி. பத்துப் பனிரெண்டு முழு வருஷங்களுக்குப் பிறகு, அவளைப் பார்க்கிறேன். ரொம்ப ஆச்சர்யமாய் இருந்தது.

என் மகன், ‘அப்பா…. கண்காட்சிக்கு எப்போதான் அழைச்சுக் கிட்டுப் போவே நீ…’ என்று கறாராய்க் கேட்டுவிட்ட பின், போகாமல் எப்படி இருப்பது? போனோம்.

கண்காட்சி என்றால் கூட்டம். மனிதர்கள், மனிதர்களை வேடிக்கைப் பார்க்கச் செய்துகொண்ட ஏற்பாடு. பழங்காலத்தில் திருவிழா, நவீன காலத்தில் கண்காட்சி. ராட்சஸ ராட்டினமும், அசுர அப்பளமும் குழந்தைகளை மட்டுமா ஈர்க்கும்? இரண்டு கைகளிலும் அந்தப் பெரிய அப்பளத்தைப் பிடித்துக்கொண்டு, எப்படி விண்டுத் தின்பது என்று குழந்தைகள் விழிப்பது ரசிக்கத் தக்க ஒரு விஷயம் அல்லவா?

ஓர் அரங்கில் பொம்மலாட்டம் நடந்துகொண்டிருந்தது. மனிதர் களைப் போல உடுத்த பொம்மைகள் கைகளை வீசி வீசி, தத்தித் தத்தி, மாயக் குரலில் பேசுவது சங்கருக்கு மிகத் தமாஷாய் இருந்தது போலும். நகர மறுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். நான் வெறுமனே கூட்டத்தை நோட்டமிட்ட போதுதான் மணி என் கண்ணில் பட்டாள்.

எங்கோ பார்த்த உருவம் மாதிரி இருக்கிறதே என்று தான் முதலில் தோன்றியது. பல வருஷ இடைவெளியில் மனிதர்களுக்குச் சதை கூடும். அல்லது உடம்பு வற்றியிருக்கும், ஆனால் ஜாடை தெரியும். அசைவு காட்டிக் கொடுத்து விடும். யாரோ தன்னைப் பார்ப்பதை அவள் உணர்ந்திருப்பாள் போலும். சட்டென்று திரும்பி என்னைப் பார்த்தாள். பார்த்த அந்தக் கணத்திலேயே, அவள் முகம் விளக்கேற்றியதைப் போல ஒளிர்ந்தது.

“ஹே.. நீங்க… நீ கிருஷ்ணமூர்த்தி தானே…?” என்றாள். என்னால் தலையசைக்க மட்டும்தான் முடிந்தது.

“அப்ப்பா ! எத்தனை வருஷம்… நல்லாயிருக்கியா” என்றபடி சிரித்தாள்.

அதே சிரிப்பு. மனதின் அடியாழத்திலிருந்து பொத்துக் கொண்டு வரும் சிரிப்பு. மனசைத் துடைத்துப் போட்டு விட்டுச் சிரிக்கும் சிரிப்பு. சிரிக்கமாட்டேன் என்று சத்தியம் பண்ணிய வரையும் தொற்றிக் கொள்கிற சிரிப்பு.

“இது யாரு….? உன் பையனா…?” என்றாள்.

“உம்.”

மணி, சங்கரின் கன்னத்தைப் பிடித்து இலேசாகக் கிள்ளினாள்.

“உன் பேரு என்ன கண்ணா ….?”

“சங்கர்…” ஒரு கண்ணை பொம்மைகளின் மேல் வைத்த படிச் சொன்னான் குழந்தை. வெட்கம் எதற்காக வேணும் குழந்தைகளுக்கு வரும்.

“என்ன படிக்கிறே…”

ரொம்பச் சங்கடப் பட்டவனாய், ‘தேர்ட் ஸ்டாண்டர்டு’ என்றான், சங்கர். நிகழ்ச்சியின் சப்தம் காரணமாக, குழந்தையை நோக்கிக் குனிந்து, அவன் முகத்தில் காது வைத்து அவன் பேசுவதைக் கிரகித்துக் கொண்டாள். “மூனாம் கிளாஸா? பரவாயில்லையே….”

“நீ எப்படி இங்க….?” என்றேன்.

“அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கேன்… வயிற்று வலி. இங்க வந்து முனு நாளாவுது… ஒரு சினேகிதி வீட்டில் தங்கியிருக்கேன். அது இருக்கட்டும்… உன்னைப் பத்திச் சொல்லு…. என்ன பண்றே… உன் ஓய்ப் என்ன பண்றாங்க….” சங்கரை வலுக் கட்டாயமாக இழுத்துக்கொண்டு வெளியே வர நேர்ந்தது.

எங்கள் பள்ளிக்கூடத்து மதில் சுவரும், எங்கள் ஊர் சிறைச் சாலை வெளிச்சுவரும் ஒரே மாதிரி நிறம் கொண்டவை; சமமான பலம் கொண்டவை. ஆகவே, கோடை விடுமுறையை நான் மிக ஆவலோடு எதிர்பார்ப்பேன். விடுமுறை நெருங்க நெருங்க கனவில் கூடத் தாத்தா ஊருக்குப் போகிற பயணம் வரும். தாத்தா வீடு போகாத விடுமுறை, ஒரு விடுமுறையில் சேர்த்தியா? தாத்தா வீடு மட்டும் இல்லாத பையன்கள், பாவம்கள்; அவர்கள் விடுமுறை வீண்.

லீவு விட்ட மறுநாளே நான் தாத்தா விட்டுக்குப் புறப்பட்டு விடுவேன். அப்பா பஸ் ஏற்றி விடுவார். கண்டக்டரிடம் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொல்வார். ‘ஊர் வந்ததும் ஞாபகமா இறக்கி விடுப்பா-‘ என்று டிரைவரிடமும் சொல்வார் கண்டக்டரும், பயணிகளும் திரும்பி என்னைக் குழந்தையைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள். ஜன்னல் ஓரமாக என்னை உட்கார வைத்துவிட்டு, தரையில் நின்று கொண்டு ‘பத்திரம் பத்திரம்’ என்று குறைந்தது, வண்டி கிளம்புவதற்குள், நூறு முறையாவது சொன்னால்தான் அவருக்கு ஆறுதல். என்னை வெட்கம் பிடுங்கித் தின்னும். என்னை வண்டியேற்றி விட்டு அப்பா உடனே போய் விடக் கூடாதா என்று தோனும். ஆனால் வண்டி கிளம்பித் தெரு முனைத் திரும்புமளவும், வண்டியையே பார்த்துக்கொண்டு விக்கித்து நிற்கும் அப்பாவை நினைத்தால் வண்டிக்குள் இருக்கும் எனக்கு மனசு வலிக்கத்தான் செய்யும். அப்பா அல்லவா?

வேர்கடலைச் செடிகள், பூவரசு, புளி, ஆல் அரச மரங்களே செழித்து வளரும், செம்மண் பூமிகளை மூன்று மணி நேரம் கடந்தால், ஊர் வந்து விடும். வயசான கோயில் கோபுரம். புடவை அகலத்துக்கே எப்போதும் தண்ணீர் காணும் மணிமுத்தா நதி. நாட்டு மருந்து வாசனை வீசும் கடைத்தெரு. சுகமான சீயக்காய்த் தூள் வாசனை. தெருவில் இறைக்கும் அரவை மிஷின். கடைக்கு நேர்த் தெருவில் நடந்து வலது கைப்பக்கம் திரும்பினால் கேட்டுத் தெரு. ஒரு குதிரை வண்டி மட்டுமே போக வசதியான குறுகல் தெரு. தெரு குறுகியிருந்தால் என்ன? இத்தெருவில்தான் தாத்தா வீடு இருந்தது. நேர் வீட்டுக்கு மூன்றாவது வீடு மணி வீடு. மூங்கில் தட்டி வைத்த ஓட்டு வீடு.

திடீரென்று என்னைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து தாத்தாவும், பாட்டியும் மீள்வதற்கு முன், பையைக் கடாசிவிட்டு. மணி வீட்டில் இருப்பேன். மணிக்குப் பாட்டி மட்டும் தான். அம்மா இல்லை. தாய்மாமன் இருந்தார்.

“அட…மூர்த்தி வந்திருக்கு. வாப்பா, டீ மணி. உன் சினேகிதக்காரன் வந்திருக்கு பாரு…” என்பாள்.

ஒரு முயல் குட்டி மாதிரி மணி குதித்துக்கொண்டு ஓடி வருவாள். அந்த வெள்ளைச் சிரிப்புடன், நூறு பக்கங்கள் எழுதி விடக் கூடிய சிரிப்பு. எழுதினாலும் விளக்கிச் சொல்லிவிட முடியாத சிரிப்பு, வார்த்தை தான் பாஷையா? சிரிப்பும்தான். பாஷையைக் காட்டிலும் பலமானது.

மணியின் பாட்டி தோசை கொண்டு வந்து தருவாள், காலை வேளையானால். அது மாதிரி தோசை அந்தக் கைக்குத்தான் வரும் போலும். மொத்தமாகப் பணியாரம் மாதிரி இருக்கும். அழுத்தம் இருக்காது. சொதசொத வென்று வாயில் போட்டால் பஞ்சு மிட்டாய்போல கரையும். அதன் மேல் மிளகாய்ப் பொடி தூவி, எண்ணெயைத் தாராளமாக விட்டுச் சொட்டச் சொட்டத் தருவாள்.

இரண்டுக்கு மேல் அசுரனாலும் தின்ன முடியாது. வெள்ளைத் தோசை மேல் அகலமாய்க் கருஞ்சிவப்புப் பொடி கண்ணுக்கு அழகு. அப்புறம் நாவுக்கு. மணி வீடு என்னைக் கையைப் பிடித்து இழுத்தது, இத்தோசைக்காகவும்கூட இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

“இனி உன்னைக் கட்டிவைக்க முடியாது. கணக்குப் பிள்ளை பேரன் வந்துட்டு. இனி காயற வெயிலெல்லாம் உன் தலைமேல் தான்” என்பாள் மணிப்பாட்டி. உண்மைதான். வெயில் எதற்குத் தான் காய்கிறதாம்?

நேராக எங்கள் தாத்தா வீட்டுத் தோட்டத்துக்கு ஓடி வருவோம். மிக அகலமான, தோட்டம் அது. அடுத்த நாயக்கமார் தெருவரை நீண்டது. அப்படி ஒன்றும் மரங்கள் செறிந்தது இல்லை. ஓர் இலந்தை மரம், ரெண்டு கல்யாண முருங்கை, ரெண்டு மூன்று வாழைகள். ஒரு பெரிய அரசு. அப்புறம் குத்துச் செடிகள், கிணறும், கிணற்றடிக்கல்லும். கிணறை ஒட்டிய இலந்தை மர நிழலே எங்கள் வாசஸ்தலம்.

மணியை ராணி என்றும் சொல்லலாம். உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தே பிறரை ஏவிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் அவள் கெட்டிக்காரி. அந்த இலந்தை, குட்டை மரம் தான். எனினும் பிளந்த மரப்பட்டையின் சிராய்ப்பைப் பொருட் படுத்தாது ஏறிப் பழமாகவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல், செங்காயாகப் பறித்து நான் அவளுக்குத் தர வேண்டும். நான் சந்தோஷமாகச் செய்கிற காரியங்களில் இதுவே தலைமையானது. மணிக்காக எந்த உச்சியின் மீதும் நான் ஏற முடியுமே!

உள்ளிருந்து என் பாட்டி சப்தம் போடுவாள். “வானரமே, கெணத்தில விழுந்து வச்சு எங்களுக்குப் பழியைக் கொண்டு வந்திடாதே…” கிழங்கள்! எப்போதும் கிழங்கள் இப்படித்தான். விஷயத்தின் தப்பான பக்கங்களையே பார்க்கும் கிழங்கள். “மரம் ஏறுகிறாயா?” சரி, விழுந்து காலை உடைத்துக் கொள்வாய். தெருவில் நடக்கிறாயா? சரி. வண்டி வந்து உன்மேல் மோதத்தான் போகிறது. குளிக்க ஆற்றில் இறங்குகிறாயா? அப்படியானால், ஆற்றில் முழுகிக் கட்டாயம் சாவத்தான் போகிறாய்!” கிழங்கள்!

மணிக்குத் தொண்டர்கள் உண்டு. என்னைப் போல மெய்யான தொண்டர்கள். எல்லாம் ஆறு ஏழு வயசுக்குள்ளான தொண்டர்கள். அவர்களையெல்லாம் கூட்டி வைத்துக்கொண்டு பாடம் நடத்துவாள் மணி.

“மணி! நீ வளர்ந்த பின்னால் என்னவாகப் போகிறாய்?” “நான் டீச்சர் ஆகப் போறேனே!”

மணியின் மனசுக்குள் ஒரு டீச்சர் இருந்தாள். இப்போது யோசிக்கையில் புரிகிறது. கஞ்சி முறமுறப்போடு இஸ்திரி போட்ட வாயில் புடவை; தூக்கிக் கட்டின கொண்டை . ஒரு கையில் குடை ஒரு கையில் சின்னப்பை. பலகார டப்பாவை விழுங்கி வைத்தி ருக்கும் பை. அவள் பள்ளிக்குப் போவதை மேட்டுத் தெருவே வியந்து வேடிக்கை பார்க்கிறது. நிச்சயமாய், வகுப்புக்குள் அவள் கையில் ஒரு பிரம்பு இருக்காது.

சமயங்களில், இலந்தை மர நிழலில் அவள் வகுப்பு நடத்து வாள். நாலைந்து குட்டி மாணவர்கள். கல்லின் மேல் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு மணி உட்கார்ந்திருப்பாள். கீழே தரையில் அந்தக் குட்டிகள் உழக்குகள் மாதிரி உட்கார்ந்திருக்கும். ஒரு சின்ன சவுக்குக் குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு, அதை அவர்கள் முன் அசைத்து அசைத்து, ‘என்ன எழுதிட்டையா? உம் சீக்கிரம்’ என்றாவது லட்சுமி, ஏன் பேந்தப்பேந்த முழிக்கிறே… உதை திங்க ஆசையா?’ என்றாவது பேசிக் கொண்டிருப்பாள்.

“அது என்னத்துக்கு கையில் குச்சு?” என்பேன்.

“பிரப்பம் பழம் தின்னால் தானே படிப்பு மண்டையில் ஏறுது” என்பாள், மிடுக்காக.

ஒருநாள் மணியின் பாட்டி சொன்னாள். “ஏம்ப்பா மூர்த்தி. இவளுக்கு அடுத்த வருஷத்திலேந்து இங்கிலீஷ் பாடம் உண்டாமே. சும்மா ஆடி வீணாக்கிற நேரத்துல, அவளுக்கு நாலு இங்கிலீஷ் வார்த்தை சொல்லிக் கொடேன்.”

ஆங்கில மீடியத்தில் படிக்கும் எனக்கு, என் சொற்ப அறிவை யும் வாங்கிக் கொள்கிற ஒரு சிஷ்யை கிடைத்தால் கசக்குமா? என்ன? அதுவும் மணி.

விளக்கு வைத்த பிறகு நாங்கள் படிக்க உட்கார வேண்டும் என்பது ஏற்பாடு. “உம்… பெரீய்ய வாத்தியாரு வந்திருக்காரு…” என்றுதான் மணி என்னை வரவேற்பாள். அந்த அலட்சியத்தோடு தான் உட்காருவேன். “வவ்வவ்வே…” என்று கூடச் சில சமயங்களில் சொல்வாள்.

‘என் பெயர் மனோன்மணி.’ ‘நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன்’ என்பது போன்ற ஆங்கில வாக்கியங்களைச் சொல்லிக் கொடுக்கும் முன்பே அவளுக்கு ஆங்கிலம் அலுத்துவிட்டது. அவள் செல்லமாய் வளர்க்கும் பூனை அவள் காலை உரசிக் கொண்டு ‘மியாவ்’ என்றதும் அதற்கு ஒரு காரணம். பூனையை விடவா ஆங்கிலம் உசத்தி?’

“ஆங்… மூர்த்தி. பூனைக்கு என்ன இங்கிலீஷ்?”

“கேட்.”

“கேட்?”

“கேட். சி.எ.டி. கேட்.”

“பூனைக்கு எதுக்குக் கேட்டுன்னு சொல்லனும். அது மியாவ், மியாவ்னுதானே கத்துது. ‘மியாவ்’னு பேர் இருந்தா நல்லா இருக்குமே! மியாவ்னா பூனை.”

எங்கள் வகுப்பு இது மாதிரித்தான் தொடரும். அப்புறம், நாய்க்கு ‘லொள்’ என்று பெயர் வைக்க வேண்டும். குதிரைக்கு ஹி… ஹி’ என்றிருந்தால் நன்றாக இருக்கும் என்பது மாதிரி அவள் அபிப்பிராயங்களை நான் கேட்டுக் கொண்டிருக்கும்படி வகுப்பு நிறம் மாறும்.

ஏழு ஏழரைக்கு மணியின் மாமா சைக்கிளில் வந்து இறங்கு வார். அவருக்கு முன் அவசரமாக பீடி வாசனை முந்திக் கொண்டு வரும். கைச் சுருட்டு மாதிரி, கன்னங்கரேலென்று இருப்பார். கொஞ்சம் பருத்த உடம்பு.

“என்னப்பா மூர்த்தி… எப்ப வந்தே…” என்று முதன் முதலாக என்னைப் பார்க்கும்போது விசாரிப்பார். அப்போது அவர் என்னை விட ஏழெட்டு வயது பெரியவராக இருப்பார். ஆனால், எனக்கு முன் நின்று, முழுசாக ரெண்டு வார்த்தை அவர் பேசியதில்லை.

“என்ன… கிளாஸ் நடக்குதாக்கும்?”

“ஆமா …”

“என்ன கிளாஸ்?”

“இங்கிலீஷ்.”

“இவ இங்கிலீஷ் படிச்சு கலைக்டர் ஆகப் போறாளாக்கும்….”

அலட்சியமாக வார்த்தையைத் தூக்கிப் போட்டு விட்டு கொல்லைப் பக்கம் கை கால் கழுவப் போய்விடுவார். ஏன் மணி கலெக்டராகக் கூடாதா? யார் தான் ஆகக் கூடாது. அல்லது ஆக முடியாது?

“சீய்… இந்த மாமா சுத்த மோசம்…” என்று என் காதுக்குள் சொல்வாள் மணி.

கண்காட்சித் திடலை விட்டு நாங்கள் வெளியே வந்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். மணி, கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிரண்டு வார்த்தைகளில் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். நான் தான் தோண்டித் தோண்டி வாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.

எஸ்.எஸ்.எல்.சி. கூட அவள் எழுதி முடிக்கவில்லை . மாமா சைக்கிள் கடை வைத்திருந்தார். ஆகவே, அவர் சொன்னாராம். சைக்கிள் கடைக்காரனின் மனைவி எஸ்.எஸ்.எல்.சி. எதற்காக எழுத வேண்டுமாம்? அவள் என்ன வேலைக்கா போகப் போகிறாள்? வீட்டில் இருக்க வேண்டியவள்தானே அவள். மாமாவின் சம்பாத்தி யத்தில், உண்டு வாழ்ந்த அவளால் என்ன செய்யக்கூடும்? பதினாறு வயது மணிக்கும் முப்பது வயது மாமாவுக்கும் கல்யாணம் நடந்து விட்டது.

“அவருக்கு என்னதான் உடம்பு?”

“குடி வயிறு வெந்துவிட்டது. வேறென்ன?” என்று சாதாரணமாகச் சொன்னாள் மணி. இருட்டும், அழுது வடியும் தெரு விளக்கும் அவள் முகம் பார்க்க முடியாமல் அடித்து விட்டன.

“சீரியஸா…”

“அப்படித்தான்.”

“எத்தனைக் குழந்தைங்க மணி உனக்கு?”

“நாலு; நாலும் பெண்ணுங்க…”

“…”

“என்ன திடீர்னு அமைதியாயிட்டே.”

“அவர் குடிப் பழக்கத்தை நீ மாத்தியிருக்கனும் மணி.”

அவள் சிரித்தாள்.

“யார் யாரை மாத்தறது? யாரையும் மாத்த முடியும்னு நீ நினைக்கிறியா? குழந்தை மாதிரி பேசறியே…”

“மனைவியால் முடியும். அவளால முடியல்லைன்னா வேற யாராலே முடியும்?”

அவள் மீண்டும் சிரித்தாள்.

“நாங்க சமமா இருந்திருந்தோம்னா ஒருக்கால் அது முடிஞ்சிருக்கும் மூர்த்தி. சோத்துக்கு வழியில்லாமே, பாட்டியும் போன பின்னால் சோறு போடறாரேன்னு கழுத்தை நீட்டினவ தானே நான். என்னால அவரைக் கண்டிக்க முடியுமா? எதிர்ல நின்று பேசத்தான் முடியுமா? அவர்தான் கேட்டுக்குவாரா என்ன?”

பஸ் ஸ்டாண்டை அணுகி இருந்தோம்.

வரிசைக்கடைகளில் ஒன்றிலிருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி என் பையனிடம் கொடுத்தாள் மணி. சங்கர் என்னைப் பார்த்துக்கொண்டே அதை வாங்கிக் கொண்டான்.

“வீட்டுக்கு வந்துட்டுப் போயேன்…. சுமதிக்கும் உன்னைத் தெரியும்” என்று நான் சொன்னேன்.

“வர்றேன். இப்ப வேணாம்… ஒருநாள் கண்டிப்பா வர்றேன்…”

“எனக்கும் அவங்களைப் பாக்கனும்னு ஆசையா இருக்கு.”

“நீ எங்க வீட்டுலயே தங்கலாம் மணி.”

“இப்ப நான் இருக்கிற இடமே வசதியாய்த்தான் இருக்கு. அந்த சினேகிதி ரொம்ப நல்லவ, தெரியுமா? நீ அவளையும் அவ புருஷனையும் பார்க்கணும்… உன்னைப் பார்த்த சந்தோஷத்தில, ஒன்னை மறந்துட்டேன்.. கண் காட்சியில அவ புருஷன் போட்டோ ஸ்டால் போட்டிருக்கார்… உன்னை அறிமுகப் படுத்தியிருக்கலாம்….. மறந்துட்டேன் பாரு… கொஞ்சம் பணம் வேண்டியிருந்தது…. வாங்கிட்டுப் போவத்தான் இங்க வந்தது…”

ஆஸ்பத்திரி போகும் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.

“மணி பணம் ஏதாவது தேவைப்படுமா? என்கிட்டே நீ கேக்கப்படாதா?”

அவள் சிரித்தாள். கண்களின் ஓரம் கசிந்து, மினுமினுத்தது. “இப்போதைக்குத் தேவைப்படாது. வேணும்னா அப்புறம் பாக்கலாம்.”

அவள் கணவர் சேர்த்திருந்த பகுதியை விசாரித்துக் கொண்டேன்.

இன்று மாலை நான் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். அப்பா ஆஸ்பத்திரியில் இருந்த போது கூட நான் அங்கு போய் அவரைப் பார்த்தவன் இல்லை. ஆஸ்பத்திரியின் வாசனையை நான் வெறுக்கிறேன். நோயுற்ற மனிதர்களின் அவஸ்தைகளைக் கண் கொண்டு என்னால் பார்க்க முடியவில்லை.

அந்த மாமாவைப் பார்க்கையில் ‘சொரேல்’ என்றது. உடம்பில் உள்ள சதைகளையெல்லாம் யாரோ வழித்துக் கொண்டு, எலும்பை மட்டும் போட்டுவிட்டுச் சென்றதுபோல அவர் சுக்கு மாதிரி கிடந்தார். கண் பாதி திறந்திருந்தது.

மணி சப்தமிட்டு, “பாண்டிசேரி மூர்த்தி வந்திருக்கு… நம்ம வீட்டுக்கு எதிர்ல இருந்தாங்களே, கணக்கப்பிள்ளை … அவர் பேரன் வந்திருக்கு” என்றாள்.

அவர் சிரமப்பட்டு என்னை ஆழ்ந்து கவனித்தார். சில நிமி ஷங்களுக்குப் பிறகே என்னைப் புரிந்துகொண்டார். அவர் முகத்தில் லேசான சிரிப்பு மலர்ந்தது.

உடைந்த வார்த்தைகளில், “சௌக்யமா” என்றார்.

“தாத்தா போன பிறகு நம்ம ஊருக்கு வர்றதே இல்லாமே போய்விட்டது” என்பதாக விட்டு விட்டுச் சொன்னார்.

நான் கொண்டு போயிருந்த பழங்களைப் பார்த்தார். என்னிடம் திரும்பி தலையை அசைத்தார். எனக்கும் புரிந்தது. இந்தப் பழங்கள் இனி இவருக்குத் தேவைப்படாது என்று தோன்றியது. அவரும் அதை உணர்ந்திருந்தார்.

மணியைச் சுட்டிக் காட்டி மார்பில் கையை வைத்துக் காட்டினார்.

‘அவளைப் பற்றித்தான் என்னுடைய கவலையெல்லாம்’ என்று சொல்ல முயன்றார் என்று புரிந்தது.

மணி புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கினாள்.

அங்கிருக்க என்னால் முடியவில்லை.

வெளியே வந்தேன். மணியும் என்னைத் தொடர்ந்தாள்.

“மணி…. நான் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு உடனே வந்துடறேன். உனக்கு ஒரு துணை இப்போ அவசியம்.”

“நான் சிலதைத் தயார் பண்ணிட்டு வந்துடறேன்… கவலைப் படாதே” என்றேன்.

அவள் சிரித்தாள். அர்த்தம் வெளிறிப்போன சிரிப்பு. மகிழ்ச்சி யின் சார்பில் மட்டும் தானா சிரிப்பு வரும் ஆழ்ந்த சோகத்துக்கும் அது வெளிப்படும்.

அவள் குளித்தோ, உடை மாற்றியோ இருக்கவில்லை. சாப்பிட்டும் இருக்க மாட்டாள் என்பது நிச்சயம்.

“வாயேன், ஏதாவது சாப்பிடலாம்…”

“முடியாது மூர்த்தி. வெறும் காபி மட்டும் வாங்கிக் கொடு.”

முதல் விழுங்கைப் பல்லைக் கடித்து விழுங்கினாள். அன்று முழுக்க அவள் பருகும் முதல் உணவு அதுவாகத்தான் இருக்கும்.

எனக்குச் சொல்ல வேண்டும் போல் தோன்றியது.

“டீச்சர் ஆகனும்னு ஆசைப்பட்டியே மணி. முடியாமே போயிடுச்சே….”

மீண்டும் அந்தச் சிரிப்பு. காபியை முடித்து, நடந்து வருகையில் சொன்னாள்.

“பாட்டிக்கு நான் பேத்தி, வெறும் குழந்தை. இவளுக்கு என்ன தெரியும்ங்கற நினைப்பு. மாமாவுக்கு நான் அவரோட முறைப் பொண்ணு. என்கிட்டே எப்படியும் நடந்துக்கலாம்ங்கற அதிகாரம் அவருக்கு இருக்கறதா நினைப்பு. என்னை ஒரு மனுஷியா யார் நினைச்சுப் பாத்தா? எனக்கும் ஆசைப்பட முடியும்னே யாரும் நினைக்கலியே மூர்த்தி.”

நான் கிளம்பினேன். நான் போய் பணம் தயார் பண்ணிக் கொண்டு திரும்ப வேண்டும்.

மணி ஆஸ்பத்திரியின் வளைவுக்குள் சென்று மறைந்தாள்.

என்னை வண்டியேற்றிவிட்டு, அது கிளம்பித் தெருமுனை திரும்பும் வரைக்கும் விக்கித்து நின்று, வண்டி மறையும் வரை பார்த்துக்கொண்டு நிற்கும் அப்பா ஏன் அப்படிச் செய்தார் என்பதை அப்போதுதான் முதல் முறையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

– 1985

Print Friendly, PDF & Email

1 thought on “காணாமல் போனவர்கள்

  1. மனதை உருக்கும் கதை…பிரபஞ்சனின் கதைகளில் என்னை மிகவும் நெகிழ வைத்த கதை என்றும் கூறலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *