கவர்மெண்ட் ஆஸ்பத்திரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 1,728 
 

ஏண்டா கட்டாரி நாளைக்கு ஆத்துக்கு வாறியா? கரிக்குஞ்சான் கேள்விக்கு கட்டாரி உடனே பதில் சொல்லவில்லை, தன்னுடைய ஒழுகும் மூக்கை இழுத்து விட்டு ஆத்தா நாளைக்கு காட்டுல களை புடுங்கணும்னு சொல்லுச்சு, எலே,சொல்லிட்டு வாடா நம்ம குஞ்சாமும் வாறான், தூண்டி கொண்டு வாறேன்னான்,

கட்டாரிக்கும் ஆசைதான், தூண்டி போட்டு மீன் பிடிப்பது எல்லாரையும் விட இவனுக்கு கை வந்த கலை. அதுவும் கரையோரம் சுற்றும் சிறுவாடு மீங்கள் இவன் தூண்டிலில் டப்..டப்..என்று மாட்டி இழுத்து கரையில் வீசுவான். பொறுக்கி எடுப்பவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ம்..ம்..எதுக்கும் எங்க ஆத்தா கிட்டே கேட்டு பாக்கேன்.

புத்தக கட்டை எறிந்து விட்டு தெருவுக்குள் ஓடியவன், சோக்காளிகளுடன் கிட்டிப்புள் விளையாட்டில் மூழ்கி விட்டான். இரவு சாய ஒவ்வொரு குடிசையிலிருந்தும் வசவுகளுடன் கூடிய சத்தம் வர ஒவ்வொருத்தனாய் கழன்று கொள்ள ஆரம்பித்தார்கள். தனியனாய் இவன் நிற்கும்போது இருள் கவிழ்ந்து காட்டு வேலை முடிந்து வந்தவர்களும் அங்கங்கு அடங்கி விட்டார்கள்.

வேறு வழியில்லாமல் மெல்ல குடிசைக்குள் எட்டிப்பார்த்தான். பாயில் ஆத்தா படுத்திருப்பது தெரிந்தது. மனசுக்குள் மெல்லிய குற்ற உணர்ச்சியுடன் உள்ளே வந்தான். ஆத்தா இழுத்து போர்த்து படுத்து கொண்டிருந்தாள். ஆத்தா ஆத்தா.. கூப்பிட்டான். ம்..ம்..முணகலுடன் போர்வையை தலைமீதிருந்து எடுத்த ஆயா..ஏன் ராசா எங்கயா போயிட்டே? ஆத்தாளுக்கு உடம்பு முடியாம கிடக்கேன்., பக்கத்துல குப்பன் கடைக்கு போய் ஒரு டீத்தாண்ணி வாங்கி வர கூட ஆளை காணோம்.

ஆத்தா, இப்ப வாங்கியாரேன், சொன்னவனுக்கு ஒண்ணும் வேணாம், பாரு கூழு காய்ச்சி வாச்சிருக்கேன், வட்டல்ல ஊத்திட்டு வந்து குடி. மதியத்துக்கு மேல என்னால முடியல ராசா, ஒரே கூதலா இருந்துச்சுன்னு படுத்துட்டேன். பக்கத்துல இருவாச்சி அக்காகிட்ட மாத்திரை இருந்தா நான் கேட்டேன்னு வாங்கியாயா.

சரி ஆத்தா.. இருளின் ஓடினான். என்னடா பண்ணுது உங்க ஆத்தாவுக்கு, தெரியலைக்கோ, கூதலடிக்குதுன்னு படுத்திருக்கு. இருடா நானும் வாறேன், மதியமே உடம்பு என்னமோ பண்ணுதுன்னு வீட்டுக்கு வந்துட்டா.

இருவாச்சி வந்து பார்த்து ருக்கம்மா, இரு ரசம் காய்ச்சி வச்சிருக்கேன், உன் பேரன் கிட்டே கொடுத்தனுப்பறேன். அப்படியே நம்ம அண்ணாச்சி கடையில் காய்ச்சலு மாத்திரை கிடைச்சா வாங்கி கொடுத்தனுப்பறேன்.

ஆத்தா தட்டு தடுமாறி ரசத்தை குடித்து விட்டு வாங்கி வந்த மாத்திரையும் போட்டுக்கொண்டாள். சலிப்புடன் ராசா நீ போய் அந்த கூழை குடிச்சுட்டு வந்து படுத்துக்கோ சாமி.மீண்டும் போர்வையை போத்தி படுத்துக்கொண்டாள்.

ஆத்தா வெள்ளென எழுந்து வேலை பார்ப்பவள் இழுத்து போர்த்து தூங்கி கொண்டிருந்தாள். இவன் எழுந்தவுடன் காலையில கூட்டாளிகள் ஆத்துக்கு போலான்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது திரும்பி ஆத்தாவை பார்த்தான். அவள் இப்பொழுது “அனத்தி”க்கொண்டு படுத்திருப்பதை கண்டு பயமாய் இருந்தது. ஆத்தா எந்திரிச்சா கிளம்பிடலாம், மனசுக்குள் நினைத்தாலும் ஆத்தா இப்படி படுத்த்தே கிடையாது.

எட்டு மணி வாக்கில் இருவாச்சி வந்து எட்டி பார்த்தவள் ருக்கம்மாளின் நிலையை பார்த்து அடி ஆத்தி இம்மா கொதி கொதிக்குது, கொஞ்சம் இரு எங்க வீட்டுக்காரரை இட்டாரேன், ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்.

சோலையண்ணனின் மாட்டு வண்டியை பேசி பூட்டி ருக்கமாவை பக்கத்து டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்கள். கட்டாரிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பசி வேறு வயிற்றை கிள்ளியது. அவனும் வண்டி ஏறி வந்து விட்டான்.

ஒரு வாரம் ஆசுபத்திரியில் படுக்க சொல்லிவிட்டார்கள். இருவாச்சியும் அவள் கணவனும் கட்டாரியிடம் சொல்லிக்கொண்டு “ஏலேய்” ஆத்தா கூட இரு எங்கியும் போயிடாதே. டாக்டரு வருவாங்க. ஏதாவது சொன்னா கேட்டு வச்சுக்க. நான் நாளைக்கு வாரேன். கிளம்பி விட்டார்கள். அவர்களும் சாப்பிட்டியா என்று கேட்கவில்லை.

ஆத்தா பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டான். வயிற்று பசி காய்ச்சல் தாங்காமல் ஓடிப்போய் அங்கிருந்த தண்ணீர் வைத்திருந்த டிரம்மில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்தான். அவனுக்கு இப்பொழுது ஆற்றுக்கு போயிருக்கும் நண்பர்களை நினைத்துக்கொண்டான்.

நல்ல வேளை மதியம் ஆத்தாளுக்கு ரொட்டியும், பாலும் ஆசுபத்திரியில் கொடுத்தார்கள். இவனுக்கு பசிக்கு தேவாமிர்தமாயிருந்தது. ஆத்தா கொஞ்சமாய் எடுத்துக்கொண்டாள்.

இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. ஆத்தா இப்பொழுது எழுந்து உட்கார்ந்து கொள்ளுகிறாள். கட்டாரிக்கு இப்பொழுது ஆசுபத்திரி மிகவும் பிடித்து விட்டது. பக்கத்து பெட்காரர்களின் அருகில் போய் நின்று கொள்வான். இப்படி மாறி மாறி வேடிக்கை பார்த்து பொழுதை போக்கினான். சில இடங்களில் அந்த நோயாளிகளை பார்க்க வருபவர்கள் கொடுக்கும் நொருக்கு தீனிகளையும் வாங்கிக்கொள்கிறான். ஆத்தா வேண்டாமென்று சொல்லுவாள். இவன் கேட்கமாட்டான்.

இருவாச்சி இரண்டு முறை வந்து பார்த்து விட்டு சென்றாள்.

ஒரு வாரத்தில் வீட்டுக்கு போக சொல்லி விட்டார்கள். கட்டாரிக்கு போவதற்கே மனமில்லை. நேரமானால் ரொட்டி, பால், சாப்பாடு, இவைகளை சாப்பிட்டு பழகியிருந்தான்.

மனமில்லாமல்தான் ஊருக்கு திரும்பினான்.

கட்டாரி இல்லாமல் ஆத்துக்கு போன நண்பர்கள் ஆற்றில் என்ன நடந்தது என்று இவனிடம் சொன்னார்கள். இவன் அதை அலட்சியம் செய்து இந்த ஒருவாரம் டவுன் ஆஸ்பத்தியில் என்னென்ன கிடைத்தது என்று இவன் சொல்ல சொல்ல அவன் நண்பர்களுக்கு கவர்ண்மெட் ஆஸ்பத்தி சொர்க்கமாக தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *