கல்யாணியின் கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2022
பார்வையிட்டோர்: 2,227 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மா கல்யாணி! நீ சின்னக் குழந்தையாக இருக்கும் போதே உனது தாய் மறைந்துவிட்டாள். அப்போது கசந்து போன என் வாழ் வுக்கு நீ தான் ஆறுதல் கொடுத்தாய். உன்னை வளர்த்ததில் ஏற்பட்ட திருப்தியே இத்தனை காலத்தையுங்கடத்த எனக்கு உதவி செய்தது. என்னைப் பார்; அனுபவித்த துன்பங்களின் சின்னங்களாகத்தோலில் எத்தனை மடிப்புக்கள் விழுந்துவிட்டன. மயிரும் பஞ்சாகி நரைத்து விட்டது. இவ்வளவுக்கும் நான் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. ஆனால், இப்பொழுது என் மனத்தில் ஓர் அலைப்பு ஏற்படுகிறது.

“உன்னிடத்தில் வசந்தத்தின் சோபை கவிந்துவிட்டது. பூத்துக் குலுங்கும் பொன் கொடி போல விளங்குகிறாய். ஆனால் நீ இதை உணரவில்லை. உலகம் பொல்லாதது. மனிதர்களோ ஆசைகாட்டி ஏமாற்றுபவர்கள். உன்னைக் கண்டும் ஒருவனுக்குத் துடிப்பு ஏற்படா விட்டால் அவனைத் துறவி யென்றுதான் சொல்ல வேண்டும். வெறும் வார்த்தைகளில், மோகப் பார்வையில் ஒரு போதும் உண்மையான சுகம் இருக்காது. உனக்கு அனுபவம் போதாதல்லவா?

மாதவ் ஒரு டாம்பீகப் பேர்வழி. அவனுக்குக் சுகம் அனுபவிப்பதிலேதான் காலமும் கருத் தும் போகிறது. அதனால் இருந்த சொத்துக்களையெல்லாம் இழந்துவிட்டான். அந்த ஆசைக்காரப் பையனுக்கு இனி அப்படி நடக்க வசதியுமில்லை . அடிக்கடி அவன் இங்கு வரும் போது என் மனம் துடித்தது. இவ்வளவு காலமாகியும் இதைச் சொல்ல எனக்கு மனம் வர வில்லை. சொல்லுவதனாலே துன்பப்படுவாயென்றே நினைத்தேன். இனி என்னாற் பொறுக்க முடியவில்லை. நீ அனுபவிக்கப் போகும் துன்பத்தின் சாயலை என் மனந்தொட்டுக் காட்டுகிறது.

“அம்மா! ஏன் பேசாதிருக்கிறாய்? நான் உன் மனத்தைப் புண்ணாக்க விரும்புவேனா? நீ எப்படியோ சுகமாக வாழ்வதைக் கண்டால்தான் என் ஆத்மாவுக்குச் சாந்தி கிடைக்கும். சாகுந் தருவாயிலிருக்கும் என்னை வருந்தக் கூடிய எதையும் நீ செய்து விடமாட்டாயென்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் நீ சிறியவள். உலகச் சுழற்றியில் மொத்துண்டு போவாய்.

“அவன் இத்தனை காலத்துள் எவ்வளவோ பெண்களுடன் குலாவியிருப்பாரென்றே தோன்றுகிறது. சந்தியில் – நடுவழியில் – ஊர் சிரிக்க உன்னைத் தவிக்க விட்டு அவன் போய் விட்டால் உனது நிலைதான் என்னவாகும்? நீ ஆதரவற்று அழுது துடிப்பாய். எனது இருத யத்தில் ஆணிகளை வைத்து அறைவது போல அது இருக்காதா? கல்யாணி! நீயே இதை யோசித்துப் பார். உன்னைவிட உலகததில் எனக்கு வேறொன்றுமில்லை. கிளியை வளர்த் துப் பூனைக்குக் கொடுக்க நீ சம்மதிப்பாயா? எனது சக்தியிழந்த கிழ இருதயத்தைத் தொட்டுப் பார். அது உனக்குக் கேட்கும்படி பேசுகிறது” என்று கோவிந்தபாபு அமைதியாகப் பேசினார்.

“அப்பா! ஏன் ஏங்கித் தவிக்கிறீர்கள். அவர் மிகவும் நல்லவர். நீங்கள் அப்படி நினைப்ப தெல்லாம் பிசகென்றே எனக்குப்படுகிறது. நான் எதிர்த்து பேசுகிறேனென்று கோபிக்காதீர்கள். காலத்தின் கொடுமையால் எப்படியோ சொத்துக்கள் மறைந்துதான் போய்விட்டன. நேர்மை யையும் குணங்களையும் விடவா சொத்துக்கள் உயர்ந்தவை? பயங்கரமாக உங்கள் மனத்தில் எழும்புகிற எண்ணங்களை அடக்க எனக்கு வழி தெரியவில்லை. நீங்கள் என்னை நடு வழியில் விட்டுச் சோதிக்கிறீர்கள். நான் இனி வேறொரு முடிவு செய்து கொண்டு வாழ முடியுமா? எத்தனையோ காலமாக அன்புப் பயிரை வளர்த்தேன். அது பிரயோசனந் தருகிற காலங்கிட்டும் போது இப்படியொரு புயக்காற்று ஏனோ வீசி அதைப் பிடுங்க நினைக்கிறது. நான் சிறியவள் தான். ஆனால் எனது வழியிற் பிசகில்லை . நீங்களும் உலகத்தைப் பார்த்து விட்டுச் சொல்லுகிறீர்கள். அதிலும் பிழையில்லை . அவர் உயிரில்லாத – ஆசை காட்டுகிற உலகத்தின் ஈழற்காற்றல்லர்.

“பதியென்று நினைத்த அவரைச் சோதிப்பதுதான் தர்மமாகுமா? நம்பிக்கைதானே உயர்வைக் கொடுப்பது. எனது நம்பிக்கை வெறும் பேச்சன்று. நானோ உங்களுக்குஞ் சொல்ல முடியாதபடி நடந்துவிட்டேன். அந்தப் பாசம் சென்மங்களோடு தொடர்புடையதாகவே எனக்குப் படுகிறது. அதுவே உங்களது அந்திய காலத்துக்கு மிகுந்த ஆறுதலைத் தரக்கூடியது. தாழ்வென்றுஞ் சோர்வென்றும் வாழ்வில் எத்தனையோ சம்பவிக்கின்றன. நல்லவர்கள் போல இருந்துவிட்டுப் பிறகு சந்தியிலே இழுத்து விடுகிறவர்கள் தான் அநேகர். என்னுடன் முதலிலே பழகும் பொழுதே அவர் வெகுளி போல இருந்தார். அவருடைய உண்மை நிலையை இது காட்டுகிறதல்லவா? சொத்துக்கள் இல்லையென்று நீங்கள் சொல்லலாம். அதனாலென்ன? திரண்ட சொத்து ஒருவனுக்கு இருப்பதனாலேயே அவன் வண்டுபோலருசி பார்க்க எண்ணுகிறான.

“எனது வாழ்வுப் பிரயாணத்தையோ ஒருவரையுங் கேட்காமலேயே தொடங்கி விட்டேன். அது எப்படியோ பிசகுதான். உங்களுக்குத் துன்பஞ் செய்வது என் கண்களைக்கு திக் கொள்வது போலவிருக்கும். ஆனால் அவரை மறக்கச் சொல்வது என் உயிரைப் பறிப்பது போலவே தெரிகிறது. உங்களை வருத்துகிறேனென்று கவலைப்படாதீர்கள். எல்லாவற்றை யும் யோசித்துப் பாருங்கள்” என்று கல்யாணி பதில் சொன்னாள்.

கிழவருக்கு ஒன்றுஞ் சொல்லத தோன்றவில்லை. கல்யாணியைப் பார்த்துப் பார்த்துக் கசிந்தார். பிறகு “அம்மா! உன் பேச்சிலும் உண்மையிருக்கிறது. நான் சொன்னவற்றிலும் சில வேளை தப்பு இருக்கலாம். ஆனாலும் என் மனத்தை உனக்குத் திறந்து காட்டிவிட்டேன். இந்த உலகம் எனக்குப் பல ஏமாற்றங்களைக் காட்டி வருத்திவிட்டது. அதனாலேதான் இவற் றையெல்லாஞ் சொல்லிக் களையாறினேன். உனக்குக் கடவுள் துணை செய்வார்” என்று சொன்னார்.

கல்யாணி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு மௌனமாகவேயிருந்தாள்.

2

மாதவன் பெரிய ஐஸ்வரியத்துக்குள்ளேதான் பிறந்தான். எப்பொழுதும் டாம்பீகத்திலே பிரியங் கொண்டவன் போலவே காணப்பட்டான். அவனது உடை பாவனைகள் அப்படி நினைக்கச் செய்தன. ஊரில் அநேகர் அவனிடம் பிரியம் வைத்திருந்தார்கள். எல்லோருட னும் சங்கோஜமின்றியே பழகி வந்தான். இளம் பெண்களும் அவனோடு வித்தியாசமாக நடந்துகொள்வதைக் காணமுடியாது.

அவனது பொருளெல்லாம் அநேகமாகப் போய்விட்டது. குடியிருக்கும் வீடும் இன்னுஞ் சில நிலங்களுந்தான் மிச்சமாக இருந்தன. இவற்றையிட்டு எப்போதேனும் அவன் சிந்தித்த தாகத் தெரியவில்லை . அவனது முகத்தில் துன்பத்தின் குறிகள் இதுவரை பட்டதேயில்லை.

“ஊரிலுள்ள பெண்களுக்கெல்லாம் காசைவாரியிறைத்து ஆண்டியாகிறான்” என்று சிலர் பேசிக்கொண்டார்கள். இந்த வார்த்தைகள் கோவிந்த பாபுவின் காதுக்கும் எட்டிவிட்டன. அவர் அவனுடைய வாழ்க்கையை ஊன்றிக் கவனித்தார். தங்கள் வீட்டில் எப்படிப் பழகுகிறானோ, அப்படியே பல வீடுகளில் அவனது வாழ்க்கை அமைந்திருந்தது. அவருக்கு ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது. இளம் பெண்களுள்ள அநேக வறிய குடும்பங்களில் அவன் கால் வைத்த நாளிலிருந்து ஒருவித செழிப்புக் காணமுடிந்தது. எல்லோரும் மாதவனை அன்பாக விசாரித்து வந்தார்கள். இவையெல்லாம் பாபுவுக்குப் பெரிய ஏமாற்றத்தையே காட்டின. உண்மையில் இப்படியான நடத்தையுடையனென்று இவர் முதலில் நினைத்திருக்கவில்லை. இதை முன்னரே அறிந்திருந்தால் தங்கள் வீட்டில் காலெடுத்து வைக்கவும் விட்டிருக்கமாட்டார்.

“கல்யாணியோ அவன் மாயவலைக்குள் அகப்பட்டுப் போனாள். அவளுக்கு இதை எப்படிச் சொல்லுவது?” என்று கிழவர் வெகுநாளாகத் தவித்துக்கொண்டிருந்தார். சில வேளைகளில் தன் பெண் அவனோடு சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து. அதைக் கெடுக்கக் கூடாது என்று சோதிப்பார். மாதவனுடைய போக்கு வரவரப் பயங்கரமாகவே தெரிந்தது. “இனியும் பொறுத்தால் கல்யாணியின் வாழ்வு மண்ணோடு மடிவதுதான்” என்று நினைக்கும் போது அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. ஒருவாறு அடக்கிக்கொண்டு ஆறுதலாகவே பேசினார். ஆனால் கல்யாணியின் பதிலைக் கேட்டதும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை . அவளை வற்புறுத்தினாலும் பெரிய பிசகாகவே முடியும் போலிருந்தது. “எல்லாம் கடவுளது கட்டளைப்படி நடக்கிறது” என்று தனக்குள் நினைத்துக் கொண்டுதான் நான் சொன்ன வற்றிலும் சில வேளை தப்பு இருக்கலாம்” என்று பெருமூச்சு விட்டார்.

அப்பொழுது கல்யாணி மௌனமாகத்தான் இருந்தாள். ஆனால் அவள் மனத்தில் புயலடிக்கத் தொடங்கிவிட்டது. தந்தையின் பேச்சை முற்றாகத் தள்ள அவளுக்குச் சக்தி வர வில்லை. தன் நம்பிக்கையை இழந்துவிடவும் முடிய வில்லை. “அவருடைய வாழ்வில் நானே குறுக்கே போய்நின்று திருப்ப வேண்டும்” என்று நினைத்தான். அதற்காக அவனது வெளி வாழ்க்கையை அவதானித்ததோடு ஊர்க்கதைகளையும் மனத்தில் வாங்கி வைத்தாள்.

கோவிந்த பாபு குடியிருந்த தெருக்கோடியில் மகேந்திரதேவின் வீடிருந்தது. இவருக்குக் கமலமணியென்றொரு பேத்தியிருந்தாள். அவள் கல்யாணியிலும் சிறியவள். அழகிலும் குறைந்தவளல்லள். அவள் தந்தை ஏதோ கோபத்தால் வெகுநாட்களுக்கு முன்னரே தேசாந்த ரம் போய்விட்டார். கமலமணி மகேந்திரதேவின் ஆதரவிலேயே இருந்து வளர்ந்தாள். காலஞ் செல்லச் செல்ல செல்வமும் அவர்களை விட்டு மறைந்து போய்விட்டது. அதனால் அவர்களது வீடு மங்கிப்போய் ஒளியிழந்து கிடந்தது.

மாதவன் எப்பொழுது அந்த வீட்டிலே கால் வைத்தானோ அன்று தொடக்கம் அவர்க ளிடத்தில் ஒரு குதூகலம் தோன்றிவிட்டது. அவனும் அடிக்கடி அங்கு போய்வந்தான். உறவு முறை கொண்டாடுபவர்களைப் போலவே வேற்றுமையின்றிப் பழகினான். ஜனங்களுடைய வாயிலும் இந்தக் கதை விழுந்து வளர்ந்து வந்தது. இப்படியே இன்னும் பல கதைகள் அவனைப் பற்றியெழுந்து ஊரார் வாயில் அடிபட்டன.

இவற்றையெல்லாம் கேட்டுக் கல்யாணி தன்மனத்தை நிறைத்து வைத்திருந்தாள். நாளுக்குநாள் அவள் மனத்திலே பெரிய பாரம் ஏறிக்கொண்டு வந்தது. உள்ளத்தில் ஒளி யின்றி எதற்காக இருக்க வேண்டும் என்பதுக்கிணங்கவே அவன் செய்கைகள் அமைந் திருந்தன. மாதவன் வழக்கம் போலவே பாபு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான். அவன் வருகிற சமயங்களிலெல்லாம் வேலைகளைக் கவனிக்கச் செல்பவள் போலக் கல்யாணி மறைந்து விடுவாள். அல்லது போய்ப்படுத்துக்கொள்வாள். அவன் கல்யாணியின் உள்ளப் போக்கை இன்னும் நன்றாக அறியவில்லை. ஆனாலும் அவள் நடந்து கொள்ளும் மாதிரி சந் தேகத்தையே தந்தது. ஒருநாள் அதை வெளியாகவே கேட்டான். உள்ளே கிடக்கிற விஷத் தையெல்லாம் கொட்டிவிடுவதற்கு ஒரு சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டுதான் கல்யாணி இருந்தாள். இப்படி அவன் கேட்டதும் தன் முழுமனத்தையுந் திறந்து காட்ட முடியாதபடி ஆத்திரப்பட்டுப் பேசினாள்.

“என் விஷயத்தில் இவ்வளவு கவலைப்படுவது ஏனோ?”

“ஏனப்படிச் சொல்லுகிறாய்?

“மிகவும் கவனமெடுத்துக் கொள்ள வேண்டிய இடங்கள் எத்தனையோ இருக்கலாம் தவறுதலாக என்னைக் கேட்டுவிட்டீர்கள் என்றுதான் சொன்னேன்.”

“கல்யாணி! நீ யாரைக் குறித்துப் பேசுகிறாய்?”

“உங்களுக்கு இதில் ஒன்றும் விளங்கமாட்டேனென்கிறதே! எத்தனை அபலைப் பெண்கள் சந்தி சிரிக்கும்படி அழுது தொலைக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்களோ?”

“உண்மையாக எனக்கொன்றும் விளங்கவில்லை. தெளிவாகத் திறந்து சொல்லி விடேன்.”

“மறந்துவிடக் கூடிய விஷயங்களைத்தான் வெளித்திறந்து சொல்ல வேண்டும். ஒவ் வொருநாளும் சிரத்தையாகக் கவனித்து வருவனவற்றையுமா மனிதர்கள் மறந்துவிடு வார்கள்? இப்படியாக என்னை ஏமாற்றுவதற்கு அனுபவித்துத்தானாக வேண்டும். மகேந்திர தேவின் வீடு உங்களுக்குச் சுவர்க்கம் போல இல்லையா? இதையும் மறந்துவிட்டீர்கள்? ஐயோ, பாவம்! ஒன்றுமே ஞாபகத்துக்கு , வராது.”

“அதனால்…..

“எனக்கொன்றுமில்லை. அந்தப் பேதைப்பெண் கமலமணியும் ஒரு நாளைக்கு ஏங்கியேங்கிக் கண்ணீர் வடிக்கப் போகிறாளே, உங்களுக் கென்ன? அழகான – ஏமாந்து போகும் பெண்கள் வசிக்கும் குடிசைகள் இன்னும் அநேகமிருக்கின்றன!”

மாதவன் சிரித்தான். கல்யாணிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பாம்பு போலவே அவள் சீறிக்கொண்டு நின்றாள். அப்போது கோவிந்தபாபுவும் உள்ளே வந்தார்.

“மாதவ்! நீ எங்களைச் சந்தியில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறாய். உனக்குச் சிரிப்பு வருகிறது. எங்களுக்கு உயிர் துடிக்கிறது” என்று கோபமாகவே பேசினார். இதற்கு மாத வன் ஒரு பதிலுந் தரவில்லை . ஏனோ மறுபடியுஞ் சிரித்தான். கிழவருக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

“மாதவ்! தெருவில் இழுத்துவிட்டு அவள் மானத்தைப் போக்க நீ இங்கு வரவேண்டாம்; போ” என்று சொல்லித்தானும் வெளியே போனார்.

அவன் கல்யாணியைப் பார்த்து, “நீயும் என்னை நம்பமாட்டேனென்கிறாய்!” என்று சொல்லிக் கொண்டே வெளியே போனான். கல்யாணி சிலைபோலச் சமைந்து நின்றாள். சிறிது நேரத்தாலேதான் அவளுக்குச் சுய நினைவு சரியாக வந்தது. பாபுவிடம் போய், “அப்பா! திடீரென்று அவரை வெளியே போகச் சொல்லிவிட்டீர்களே, உங்களுக்கு அவ்வளவு கோபம் ஏன் வந்தது!” என்று பொருமினாள்.

கிழவருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. பேசாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டு மட்டும் இருந்தார்.

மாதவன் வீட்டை விட்டு வெளியே போகும் போதும் கவலையற்றவனாகவே காணப் பட்டான். ஆனால் ஒரு வருஷமாகியும் அவனது காலடிகள் அந்த வீட்டுப் படியைத் தடை வில்லை கல்யாணியின் உள்ளத்தில் இருண்ட மேகங்கள் கவிந்துவிட்டன. உள்ளுக்கு உருகிக் கொண்டிருந்தாள். தன்னுடைய வாழ்வு இப்படிப் படு மோசமாகிவிடுமென்று அவள் ஒருக்காலும் நினைத்திருக்கவில்லை. மாதவனை வெகுகாலமாக நம்பியேயிருந்தாள். பாபு அவனைப் பற்றிச் சொன்ன போதுகூட எதிர்த்துப் பேசினாள். இப்பொழுது எல்லாம் சரியாகவே முடிந்ததைக் காண அவளுக்கு ஒன்றுஞ் செய்ய முடியாதிருந்தது. இன்றைக்கோ நாளைக்கோ உதிர்ந்துபோகும் பழம்போல இருந்த தந்தையார் தனக்காகப் படுந்துன்பத்தைப் பார்த்திருக்க அவளால் முடியவில்லை.

அடிக்கடி சோர்வடைகிற தன் மகளைப் பார்த்துக் கிழவரும் தவித்தார். மாதவனைப் பற்றி வெளியில் விசாரித்துப் பார்த்தார். அவன் ஊரை விட்டுப் போய் ஒரு வருஷத்துக்கு மேலாகிறதென்று மட்டுந் தெரியவந்தது. “இன்னும் எந்த ஊர்ப் பெண்களது ஜீவனை வாங் கப் போயிருக்கிறானோ?” என்று தனக்குள்ளேயே பல தடவை சொல்லிக்கொண்டார். கல்யா ணியை அழைத்து, “அம்மா! ஏன் இத்தனை விசாரப்பட்டு வருந்துகிறாய்” அவனுடைய சுபா வத்தை நீயே நன்கு கண்டுவிட்டாய். ஊரைவிட்டுப் போனவன் இத்தனைக்கும் ஒருக்கால் உன்னை நினைத்திருப்பானென்று கருதுகிறாயா? எங்கேயோ போயிருந்து வலை வீசு கிறான் போலிருக்கிறது. எத்தனையோ கோடீஸ்வரர்கள் நல்லவர்கள் உன்னைக் கேட்கிறார் கள். அது எங்கள் செல்வப் பெருக்கைக் கருதித்தான் என்று நீ நினையாதே. உன் குணமும் அழகும் அமிருதம் போல உலகத்தில் கிடைக்கக் கூடியனவல்ல. உனது எண்ணத்தை இனி மாற்றித்தானாக வேண்டும். கமலமணியோடும் அவன் எவ்வளவு கலந்து பழகினான். அதுவும் ஊரறிந்த கதைதானே. அவளுக்குக் கல்யாண ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறு கின்றன. அவள்தான் இந்த உலகத்துக்கும் சரியானவள். உலகத்தில் வாழ வேண்டுமானால் அவளைப் போலத்தான் நீயும் இருக்க வேண்டும்” என்று சொன்னார்.

“அப்பா! கடவுள் எங்களைக் கடுமையாகச் சோதிக்கிறார். இடிந்துபோன என்மனத்தில் உங்கள் வார்த்தைகள் இவ்வளவு தூரம் உறுத்துகின்றனவென்று என்னாற் சொல்ல முடிய வில்லை . என்னை அவர் மறந்தும் இருக்கலாம். ஆனால் நான் எப்படி மாறமுடியும். எப் பொழுதோ என் சரீரத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டேன். இத்தனை நாளும் பொறுத்து விட் டீர்கள். எனது இருட்டுக்காலம் கெதியில் விடிந்து விடும். கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்று கல்யாணி வேண்டினான்.

கல்யாணியின் வார்தைகளைத் தட்டிக் கழித்துவிட அவரால் முடியவில்லை. ஆனால் அவள் வாழாமல் அழுது கொண்டிருப்பதையும் பார்க்க முடியாதிருந்தது. ஒன்றுஞ் செய்யமுடியாது பாபு தவித்தார்.

கமலமணியின் விவாகம் பெரிதாக நடந்தது. “மாதவனே எல்லாவற்றையும் நின்று நடத்தினான். மாப்பிள்ளையும் அவனுக்கு வேண்டிய சிநேகிதன்தானாம்” என்று ஜனங்கள் சொன்னார்கள். “கல்யாணீ அவன் உனக்குமொரு புருஷனைத் தேடிக் கொண்டுதான் வரு வான் போலிக்கிறது” என்று சொல்லிப் பாபு சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒரு வெறி கலந்திருந்தது. இதற்குக் கல்யாணி ஒன்றுஞ் சொல்லாமலே நின்றாள்.

கமலமணியின் கல்யாணத்துக்குப் பிறகு ஒருநாள், பொழுதும் விடிந்து வெகுநேரமாகி விட்டது. கிழவரும் கல்யாணியும் படுக்கையை விட்டு எழும்பவில்லை. கமலமணியும் மாப்பிள்ளையும் பாபு வீட்டிற்குள் நுழைந்தார்கள். மாதவனும் பின்னாலோன் வந்தான். கமலமணி நேரே கல்யாணி படுத்திருந்த அறைக்குள்ளே போனாள். எதிர்பாராதபடி அவள் வருவதைக் கண்ட கல்யாணி மிரண்டு போனாள். அதனால் ஒன்றுமே பேசாது எழுந்து படுக்கையில் இருந்தாள். அவளது பரிதாபமான தோற்றத்தைக் கண்டு கமலமணி கலங்கி னாள். அவள் கல்யாணியின் கைகளைப் பற்றிக்கொண்டு, “அம்மா! தங்கள் பிரபு கொள் வும் பிழையில்லாதவர். எனது வாழ்வை பிரகாசிக்கச் செய்தவரும் அவர்தான். எனக்காகக் தான் வெளியூருக்குச் சென்று கஷ்டப் பட்டார். ஊரார் கதைகளை நம்பவேண்டாம். எல்லாவற றையும் மன்னித்து விடுங்கள்” என்று நமஸ்கரித்தாள். அப்பொழுதுதான் மாதவனும் உள்ளே நுழைந்தான்.

கல்யாணி உடனே எழுந்துவிட்டாள். ஆனால் திரும்பி நின்று விம்மி விம்மி அழுதாள். “கல்யாணி! உன்னை ஏங்கி உருகும்படி செய்த இந்தப் பாவியை உன் இஷ்டப்படியே தண்டித் துக்கொள்” என்று சொல்வதுபோல மாதவன் தலைவணங்கி நின்றான்.

– கலாநிதி 1948.01, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *