கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 26, 2022
பார்வையிட்டோர்: 6,400 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இத்துடன் மூன்றாவது தடவையாக நான் என் சாமான் களைத் தொலைத்துவிட்டேன். சிலகாலமாகத் தொலைப் பதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தேன். இதுவே இப்ப நல்ல பழக்கத்தில் வந்துவிட்டது. பயிற்சி பலன் தரும்.

ஒரு சுற்றுலா பயணிக்கான தகுதிகள் எனக்கு இல்லை. அடிக்கடி சாமான்களைத் தொலைத்தபடி இருப்பேன். இதன் காரணமாக என்னைச் சுற்றி இருப்பவர்கள் மிக சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நான் மறந்துபோய் வைக்கும் அல்லது எடுத்துவிடும் பொருள்களைக் கண் காணிப்பதில் இவர்கள் நேரம் செலவழியும்.

இளம் வெய்யிலில் சுட்டெடுத்தது போல சிவந்த தோல் கொண்ட ஜெர்மன்காரன் ஒருத்தன் எனக்குச் சகாவாக வாய்த்திருந்தான். அவன் பருத்த உடம்போடு அசைந்தசைந்து நடந்தான். அவன் கட்டியிருக்கும் பெல்ட் தெரியாமல் அவனுடைய உடம்பு சதை வழிந்து மறைத்தது.

நான் தொலைத்தது தலை போகிற சமாச்சாரம். இதைத் தேடுவதில் இவன் எனக்கு ஒரு சகாயமும் செய்வதாகத் தெரியவில்லை. இவன் என்னுடைய உற்ற தோழன் இல்லை. ஏர்க்காலில் எருது பூட்டுவது போல இந்த சுற்றுலாக்காரர்கள் என்னைக் கலந்தா லோசிக்காமல் இவனை என்னுடன் சோடி சேர்த்திருந் தார்கள்.

நான் எவ்வளவுக்கு எவ்வளவு தொலைப்பதில் பலவானாக இருந்தேனோ அவ்வளவுக்கு என் மனைவி எச்சரிக்கை உணர்வு மிகுந்தவளாக இருந்தாள். அலு வலகத்தில் என் வெளிநாட்டுப் பயணம் நிச்சயமானதும் என்னுடைய பயணத்துக்கான ஏற்பாடுகளை ஒரு வாரம் முன்பாகவே செய்யத் தொடங்கிவிடுவாள். என்னுடைய சூட்கேஸ் இந்த நாட்களில் மூன்று நான்கு தடவை திரும்பித் திரும்பி அடுக்கப்படும்.

ஊறுகாய் போத்தலை முதலில் பிளாஸ்டிக் பையில் போட்டு, பிறகு பேப்பரில் இறுக்கச் சுற்றி, அதன்பின் ஒரு துணியில் சுருட்டி அடுக்குவாள். இந்த முறையில் ஒரு மாற்றமும் செய்ய முடியாது. டின் உணவுகளைத் தனித்தனியாகத் துணிகளில் சுருட்டுவாள். அது உடையும் தன்மை அல்லவே. அதற்கும் காரணம் இருந்தது. சும்மா அடுக்கினால் அவை உராய்ந்து லேபிள்கள் கழன்றுவிடும். அதற்குப் பிறகு உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாமல் திண்டாட்டமாகிவிடும். அதற்கான முன் எச்சரிக்கை தான்.

நான் பயணப்படும் நாட்டைப் பற்றிய புத்தகங்கள், சுற்றுலா விபரங்கள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படித்துவிடுவாள். அத் துடன் எனக்காகக் குறிப்புகள் தயாரிப்பாள். அந்த நாட்டின் வரைப்படம், பார்க்க வேண்டிய இடங்கள், என்னென்ன செய்ய வேண்டும், என்ன செய்யாமல் விடவேண்டும், அவர்கள் பணம் மாற்று விகிதம், தங்கவேண்டிய ஹொட்டல் போன்ற விபரங்கள் இதில் இருக்கும்.

அதிலே முக்கியமானது அவள் போடும் பட்டியல். நான் என் னென்ன சாமான்கள் வாங்கி வரவேண்டும் என்ற விவரம் கொண்டது. இந்தப் பட்டியலைக் கருணை இல்லாமல் போட்டிருப்பாள். கட்டில், மெத்தை தளபாடங்களிலிருந்து கருகுமணி வரை இதில் அடங்கும். நான் புறப்பட்ட நாளிலிருந்து இவற்றைச் சேகரிப்பதற்குத் தான் எனக்கு நேரம் சரியாக இருக்கும்.

பட்டியல் போடுவதில் கூட ஓர் ஒழுங்கும் கண்ணியமும் இருந்தது. இதில் ஒரு நுட்பமான தந்திரத்தன்மை மறைந்திருப்பது சாதாரண கண்களுக்குத் தெரியாது.

விலை உயர்ந்த சாமான்கள் முதலில் இருக்கும். கருகுமணி போன்றவை கடைசி கடைசியாக இடம்பெறும். இதன் காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்தப் பட்டியலைத்தான் நான் இப்பொழுது தொலைத்திருந்தேன். ஒரு விதத்தில் அது சந்தோசமாக இருந்தது. ஆனால் என் மனைவியின் முகம் போகும் போக்கை நினைத்ததும் மனது சங்கடப்பட்டது.

சிலருடைய கையிலே பணம் தங்காது. ஏதாவது ஒரு பொருளை வாங்கியபடியே இருக்க வேண்டும். அதன் உபயோகத்தைப் பற்றி ஆலோசிப்பது கிடையாது. காசு கையிலே இருக்கும் மட்டும் நெருப்பு போல தகிக்கும். அதைக் கொடுத்து பொருள் வாங்கினால் தான் மனம் ஆறும்.

என் மனைவியிடமும் இந்த நோய் இருந்தது. வாங்கும் நோய்.

எங்கேயாவது ஒரு கம்பளத்தையோ, ஜாடியையோ, வண்ண வேலைப்பாடுகள் செய்த மரப்பெட்டியையோ, படிகக் கண்ணாடி யையோ பார்த்துவிட்டால் அதை வாங்கி சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அதனால் ஒரு சதத்துக்கும் உபயோகம் இல்லை. ஒரு அலங்காரப் பொருளாக, காற்று வெளியை அடைத்துக்கொண்டு, தூசு தட்டுபவருக்கு வேலை கொடுத்தவாறு இருக்கும்.

ஒருமுறை ஓர் அபூர்வமான சீன பீங்கான் ஜாடி ஒரு கடையிலே இருந்தது. அதைக் கண்டது தொடக்கம் அதை வாங்கிச் சொந்த மாக்கிவிட வேண்டும் என்ற ஆசை என் மனைவியிடம் வளர்ந்தது; அதனுடைய வேலைப்பாடும் தொன்மையும் பார்ப்பவர் மனதை மயக்கும். கடைக்காரன் அதுமாதிரி இன்னொரு ஜாடி கிடைப்பது அரிது என்றான். மோகம் இன்னும் தலைக்கு மேல் ஏறிவிட்டது. உடனேயே பணமும் ஜாடியும் கைமாறின.

அதை வாங்கி இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஓர் ஆச்சரியம். அதே மாதிரி அச்சான இன்னொரு ஜாடி அதற்கு முன்பே வாங்கப் பட்டு பெட்டியில் பத்திரமாக இருந்தது. வாங்கிய பிறகு பெட்டியைக் கூடத் திறக்கவில்லை . அதைத் திறந்த பிறகுதான் அபூர்வமான ஜாடிகள் இரண்டு எங்களிடம் இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு என் மனைவியின் வாங்கும் வேகத்தில் தடங்கல் ஏற்பட்டிருக்கும் என்று நீங்கள் ஊகிக்கலாம். அப்படி யெல்லாம் ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை.

உயர்ந்த படிகத்தில் செய்த வைன் கிண்ணங்கள் பல உயரங்களில், பல தினுசுகளில், பல ஜொலிப்புகளில், அதிக விலைக்கு வாங்கப் பட்டு, கண்ணாடிப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு எங்கள் வீட்டில் காட்சி அளிக்கும். அபூர்வமான நேரங்களில் கூட அவை வெளியே வந்து தங்கள் தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

பட்டியலைப் பற்றிய சிந்தனை அறுபட்டது. எங்கள் சுற்றுலா பஸ் புகழ்பெற்ற காஃகன் பள்ளத்தாக்கின் விளிம்பை அடைந்து விட்டது. அங்கே எங்களுக்கான வழிகாட்டி கழுதைகளுடன் காத் திருந்தான். எல்லா வழிகாட்டிகளையும் போல இவனும் தாடியுடனும் குல்லாவுடனும் இருப்பான் என்று எதிர்பார்த்தேன். மாறாக அவன் ஓர் இளைஞனாக இருந்தான்.

விசாரித்ததில் ஒன்று புரிந்தது. வழக்கமான வழிகாட்டி இவனு டைய தகப்பனார்தானாம். அவருக்குக் கட்டாயம் தாடியும் தொப்பி யும் இருந்திருக்கும். அவருக்கு உடல் நலம் சரியில்லை என்றபடியால் எங்களுக்குத் தற்காலிக வழிகாட்டியாக இவன் வந்திருந்தான்.

வயதில் குறைந்தவனாகிய இவனிடம் அசட்டைத்தனம் நிரம்பி யிருந்தது. இவனையும் கழுதையையும் ஒப்பு நோக்கியபோது கழுதை இவனிலும் பார்க்க புத்திசாலித்தனம் கொண்டதாகத் தோன்றியது. இவனிடம் என் உயிரையும் உடமைகளையும் ஒப்புவிக்க மிகவும் தயக்கமாக இருந்தது.

அவன் கழுதையின் இரண்டு பக்கமும் சாமான்களைச் சரியான அளவு விகிதத்தில் தொங்கவிட்டான். நானும் கால்களைத் தொங்க விட்டுக்கொண்டு ஓர் உல்லாசப் பயணிக்கான உல்லாசத்தோடு பயத்தை மறைத்தவாறு பயணத்தை ஆரம்பித்தேன்.

என் வாழ்நாளில் நான் ஏறிய மிகவும் உயரமான வாகனம் சைக்கிள் தான். இதுவும் சைக்கிள் மாதிரித்தான் இருக்கும் என்று நினைத்தேன். முற்றிலும் தப்பு. அந்தக் கழுதையிலே ஆரோகணித்துப் போகும் போது மிகவும் உயரமான இடத்தில் இருப்பது போலவும், அந்தப் பனி மலைக்குன்றுகள் எல்லாம் எனக்குச் சொந்தமாகிவிட்டது போலவும் ஓர் எண்ணம் தோன்றியது. கழுதைக்கு என்ன தோன்றி யதோ யான் அறியேன்.

ஜெர்மன்காரன் ஏறிய கழுதை இன்னும் சிறியது. கட்டையான கால்கள். நாய்கள் படுக்குமுன் நாலு தரம் சுற்றிப்பார்த்து படுப்பது போல இவனும் நாலு தரம் கழுதையைச் சுற்றிவிட்டு ஏறினான். இவன் ஏறி உட்கார்ந்ததும் கழுதையின் கால்கள் இன்னும் இரண்டு அங்குலம் பனிச் சேற்றுக்குள் புதைந்து கொண்டன. அவனுடைய கால்கள் சேற்றைத் தொட்டும் தொடாமலும் இழுபட்டன.

கழுதையைப் பற்றி என்ன குறையும் சொல்லலாம். ஆனால் அது வேகமாக நடக்கும் என்று மட்டும் யாரும் குற்றம்சாட்ட முடியாது. தன்னிலும் பார்க்க இரண்டு மடங்கு பாரத்தை அது முணுமுணுக்காமல் காவும். ஐம்பது மைலோ, ஐந்நூறு மைலோ அதற்கு ஒரு பொருட்டில்லை. நில் என்று சொல்லும் வரை அவசர மற்ற ஒரு நடையில் நடந்துகொண்டே இருக்கும். இரண்டு கால் பிராணி நடக்கும் போது கண் பார்த்து கால் வைக்கலாம். நாலு கால் பிராணி, பின்னங்காலை வைக்கும் போது எங்கே வைக்கிறது என்று தெரிய நியாயமில்லை. எதிர்காலம் தெரியாத இந்த சோக முகம் கொண்ட கழுதையிலே சவாரிப்பது என்னைச் சங்கடப் படுத்தியது.

எங்கள் வழிநாட்டி முன்னே சென்றான். உச்சி மலைக்காற்று மெலிந்து போய் இருந்தது. நாலா பக்கமும் பனி மலைச் சிகரங்கள். வந்த பாதை மறைந்துவிட்டது; போகும் வழியும் தெரியவில்லை. அந்தப் பயத்திலும் பனிமலைக் குன்றுகள் மகோன்னதமான அழகு டன் தோன்றியதை மறக்க முடியவில்லை. இதற்கென்று ஓடர் பண்ணியது போல ஆகாயம் வெண்ணிறத்திலும் வெளிர் நீலத்திலும் கலந்து கண்ணைப் பறித்தது.

வழிகாட்டி இப்பொழுது தனக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கி னான். இரண்டு விதமான குரல்களில் பேசினான். சில வேளைகளில் கடுமையாகப் பேசினான்; அதற்குப் பதில் மன்றாடும் குரலில் வந்தது.

இவன் பின்னால் நாங்கள் வெகு கவனமாக ஒரு பேச்சுமூச்சின்றி தொடர்ந்தோம். எங்களுக்குள் பேசாமல் வருவதற்குக் கூச்சமாக இருந்தது. நாங்களும் எங்களுக்குள் ஏதாவது பேசவேண்டும் போலப் பட்டது. அவன் அப்படித்தான் எதிர்பார்த்தான்.

போகப்போக இவனை நம்பி இவன் பின்னால் புறப்பட்டது உயர்ந்த முட்டாள்தனமாகப் பட்டது. வரும் ஆபத்துகளை இவன் முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வல்லவன் அல்லன். ஆபத்து வந்த பிறகு அது வந்துவிட்டது என்று சொல்லி எங்களுக்கு ஆறுதல் தருபவன்.

இந்தக் கழுதை இந்தப் பனிப் புதைசேற்றைக் கடக்குமா என்று கேட்டால் தாராளமாக என்று கூறுவான். கழுதை முரண்டு பிடித்து நின்றதும் இனிமேல் போகாது என்று உற்சாகப்படுத்துவான்.

இனிமேல் உலகத்தின் எந்த மூலையில், எப்படிப்பட்ட மகோன்னத மான பள்ளத்தாக்கு இருந்தாலும், அதை நான் பார்க்கப் போவதில்லை என்று சபதம் எடுத்தபோது இரண்டு இடங்களில் என் உயிர் மயிரிழையில் தப்பியிருந்தது. பார்த்தது போதும் என்று திரும்பும்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

நாங்கள் அந்தப் பிரதேசத்தைச் சுற்றிச்சுற்றி வந்தோம். தேவதாரு மரங்கள் தலையிலே பனிப்பூக்களைச் சூடியிருந்தன. அதிலே ஒரு மரம் என் வலது புறத்தில் இருமுறை தோன்றி மறைந்தது. கழுதை களின் சுவாசச் சத்தம் அதிகமாகியது. அவற்றின் தடமும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒரு சைனியம் போன தோற்றத்தை உண்டுபண்ணியது.

வழிகாட்டி வழி தவறக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரி தெரியும் பனிதேசத்தில் நாங்கள் தடுமாறலாம். வழிகாட்டி தவறலாமா?

அப்பொழுதுதான் ஓர் ஆதிவாசி மேய்ப்பரின் குடிசை தென் பட்டது. இப்படியான பனி தேசத்தில், இந்த உயரத்தில் கூட மனிதர் கள் வசிக்கிறார்கள் என்று நினைத்தபோது மனதில் ஓர் அதிர்ச்சிதான் ஏற்பட்டது. அதிர்ச்சியுடன் ஒரு சந்தோசமும் வந்தது.

தாடியோடு ஒரு கிழவர். கருணையான முகம். அப்படி ஒரு கருணை முகத்தை நான் அதற்குப் பிறகு காணவில்லை. இரு குழந்தைகள். சிறுவனுக்கு வயது பத்திருக்கும்; சிறுமியின் வயது எட்டு இருக்கலாம். குடிசையின் உள்ளே ஒரு முது பெண்மணி. கிழவனாரின் மனைவி என்று ஊகிப்பதில் சிரமமில்லை . அவள் முகத்தில் மாத்திரம் வயதான கோடுகள் காணப்பட்டன. அந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோராகும் தகுதி உடையவர்கள் அங்கு காணப்படவில்லை.

இந்த எளிய மேய்ப்பர்களிடம் ஒன்றுமேயில்லை. அவர்கள் உடமைகள் எல்லாம் ஒரு கழுதைச் சுமையில் அடங்கும். இவர்களை நம்பி ஓர் ஆட்டு மந்தை இருந்தது. அந்த மந்தையை நம்பி இவர்கள் இருந்தார்கள்.

வழிகாட்டி கிழவனாருடன் பேசினான். தனக்குள்ளே இவ்வளவு பேசுபவன் பிறரைக் கண்டால் விடுவானா? அவர்கள் பேச்சு வெகு நேரம் நீடித்தது.

இந்தச் சிறுபிள்ளைகளுக்கு நாங்கள் என்ன செய்தோம்? எங் களைக் கண்டதும் அவர்கள் முகத்தில் அப்படியொரு பூரிப்பு. நாங்கள் அவர்களுக்கு ஒன்றுமே கொண்டுவரவில்லை. ஒரு சூயிங்கம் கூட இல்லாமல் போய்விட்டது. ஆனால் அந்த முகங்களில் வேற்று மனிதரைக் கண்ட மகிழ்ச்சி பொங்கி வீசியது.

அவர்களுடைய கேசம் செம்மண் கலரில் இருந்தது. முகத்தைத் தவிர உடம்பு முழுக்க போர்த்தி ஆடை அணிந்திருந்தார்கள். பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்கள் கண்ணைப் பறித்தன. அவர்கள் கன்னங்கள் எல்லாம் குங்குமம் பூசியது போல சிவந்து போய் கிடந்தன. சொக்கலட் உருகி ஒட்டியது போல கன்னத்தில் ஊத்தை அப்பியிருந்தது. அந்த ஊத்தை சுரண்டி எடுக்கக்கூடிய மாதிரி திட்டாகக் காணப்பட்டது. தண்ணீரில் கை வைக்க முடியாத ஊரில் இந்தக் குழந்தைகள் ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது குளிப்பார்களா என்பது சந்தேகமே.

நாங்கள் வழி தவறிவிட்டோம்; சரியான வழியைக் காட்டவும் என்பதை அவர்கள் மொழியில் கேட்பதற்கு அரை மணி நேரம் பிடிக்குமா? வழிகாட்டியும் கிழவனாரும் சூடான விவாதத்தில் இருந்தனர். வழிகாட்டி இடது கையைத் தூக்கிக் காட்டி மலைகளை ஏதோ குற்றம் சாட்டினான். கிழவர் அதை ஏற்கவில்லை . தன் தரப்புக்கு மறைந்துபோன பனிமலைப் பாதையைக் காட்டிப் பேசினார். வழிகாட்டிக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது. மலைகளை அநியாய மாகத் திட்டித் தீர்த்தான்.

குழந்தைகளுக்கு இந்த விவாதத்தில் அக்கறை இல்லை. அவர்கள் கிட்ட வந்தபோது ஒருவிதமான துர்நெடி வீசியது. அந்தப் பெண் குழந்தையின் கண் இமைகளில் வைரத்துண்டுகள் ஒட்டியிருந்தன. அவர்கள் பார்த்த முதல் அந்நிய மனிதர்கள் நாங்களாகத்தான் இருக்க வேண்டும். கண்கள் மலர எங்களை அண்ணாந்து பார்த்த படியே இருந்தனர்.

திடீரென்று விவாதம் முடிந்தது. ஆட்டுப்பால் அருந்தித்தான் போகவேண்டும் என்று கிழவர் பிடிவாதம் பிடித்தார். இதை வழிகாட்டி மொழிபெயர்க்கு முன்னமேயே ஜெர்மன்காரன் அவசர மாக கீழே குதித்து ஆட்டுப்பாலுக்காக ஏங்கிக் காத்திருக்கத் தொடங்கினான்.

அந்தக் கிழவி சுறுசுறுப்பாக ஆட்டைப் பிடித்துப் பால் கறந்தாள். நாங்கள் குளிர் பெட்டியில் பால் வைத்து எடுப்பது போல அவள் ஆட்டிலேயிருந்து சாதாரணமாகப் பால் எடுத்தாள். எங்களை உபசரிப்பதில் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டினார்கள். குழந்தைகளுடைய பரபரப்பிலிருந்து ஏதோ விசேஷ ஏற்பாடுகள் நடக்கின்றன என்று ஊகிக்கக்கூடியதாக இருந்தது.

பால் சூடாக்கப்பட்டது. ஆனால் தகுந்த கோப்பைகளில் அதைப் பரிமாறுவதில் சில சிரமங்கள் இருந்தன. கிழவியின் கண் அசைப்பில் கிழவர் உள்ளே போய் பெட்டியைத் திறந்தார். குழந்தைகளுடைய கண்கள் ஆச்சரியத்தில் மலர்ந்தன. அப்பொழுதுதான் புரிந்தது இந்த இரண்டு அந்நியர்களுக்காக விசேஷமான கோப்பைகள் வெளியே வந்திருக்கின்றன என்று. அவை, பாட்டன் வழிச் சொத்தாக வருடக்கணக்கில் ஒரு பெட்டியில் பூட்டப்பட்டு மூதாதைத் தன்மை யுடன் காணப்பட்டன.

வழிகாட்டிக்குப் பால் ஒரு தகரக் குவளையில் வந்தது. சிறுவன் கொண்டுவந்து வைத்தான். எனக்கும் ஜெர்மன்காரனுக்கும் விளிம்பு கள் உடைந்து, கோடுகள் விழுந்து மிகவும் பொக்கிஷமாகப் பாது காக்கப்பட்ட சீனக் கோப்பைகளில் வந்தது. சிறுவன் இந்தக் கோப்பைகளைத் தொட அனுமதிக்கப்படவில்லை. சிறுமி அகல விரிந்த கண்களோடு இந்தக் கோப்பைகளையே பார்த்தாள். கிழவனார் மாத்திரம் இதைத் தன் கையால் பக்குவமாக எடுத்து வந்து தந்தார்.

முன்பின் தெரியாத எங்களுக்குப் பன்னிரண்டாயிரம் அடி உயரத்தில் இந்த மறக்க முடியாத விருந்துபசாரம் நடைபெற்றது. உலகத்தோடு தொடர்பு அறுபட்டு, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அந்தச் சிறு குடும்பம் இந்த விருந்தைச் செய்தது. ஜெர்மன் காரன் கையில் அந்தக் கோப்பை மிகவும் சிறியதாகத் தோன்றியது. கோப்பையை மிகக் கவனமாகக் கையாண்டு குடித்ததில் நான் ஆட்டுப்பாலின் சுவையை அறியத் தவறிவிட்டேன்.

முன்பின் தெரியாத அந்தக் கிழவனாரிடம் சொல்லிக்கொண்டு விடை பெறுவதற்குத் தயக்கமாக இருந்தது. அந்தச் சிறுவனும் சிறுமியும் கூட எங்கள் பிரிவைத் தாங்க முடியாது போன்ற சோகத்தோடு முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள். இவ்வளவுக்கும் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை, அவர்களுடைய ஆட்டுப்பாலைக் குடித்ததைத் தவிர.

விடைபெற்று வெளியே வந்தபோது கழுதை தயாராக நின்றது. அதனுடைய சோகமான முகத்தில் ஒருவித மாற்றமும் இல்லை. அதிலே தந்திரமாக ஏறுவதற்குத் தயார் செய்தபடி இன்னொரு முறை திரும்பிப் பார்த்தேன்.

நான் திரும்பிப் பார்த்தபோது, முகத்திலே கோடுகள் பதித்த அந்த மூதாட்டி நாங்கள் ஆட்டுப்பால் அருந்திய கோப்பைகளை அந்தச் சிறுபெண்ணிடமிருந்து பறித்துக்கொண்டு அவசரமாக உள்ளே போனாள். விளிம்புகள் உடைந்த அந்தக் கோப்பைகள் சுத்தப்படுத்தப் பட்டு மறுபடியும் பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்படும், இன்னும் இரண்டு அந்நியர்கள் வழி தவறும் வரை.

பின் குறிப்பு :

கதை சொல்லும் உற்சாகத்தில் ஒரு தகவலை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டேன். நான் வந்த வேலையை முடித்துவிட்டு திரும்புவதற்காக விமான நிலையம் சென்றிருந்தேன். விமான டிக்கட்டை கொடுத்துவிட்டு சூட்கேஸைத் தூக்கி பீடத்தில் வைப்பதற்குக் குனிந்தேன். அப்போது டிக்கெட் அட்டைக்குள் மிகவும் பத்திரமாக வைத்திருந்த என் மனைவியின் பட்டியல் கீழே விழுந்தது. அதுவரை பட்டியல் தொலைந்துவிட்டது என்று மனைவியிடம் சொல்லிச் சமாளிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இனிமேல் அப்படிச் சொல்லமுடியாது.

– 1999-2000

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “ஐவேசு

  1. seper story a mu sir is the best writer i have read l should not miss any of his story oh my GOD like the list of the author and he found it at last nice ending moral the last things are not always last ones the message is rightly understood by me thanks kavignar ara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *