கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,797 
 

அன்னிக்குச் சனிக் கெழம!

ஆனந்துக்கு ரொம்பச் சந்தோசமா இருந்துச்சு. அதுலயும் அவனுக்கு லீவு, அவகம்மாவுக்குப் பள்ளிக்கூடம்னு சொன்னது அவனுக்கு ரெட்டிப்புச் சந்தோசமா இருந்துச்சு. அவுகம்மாவ அவனுக்குப் புடிக்காதுன்னு சொல்ல முடியாது. ஆனா அவுங்க, அவனோட விசயத்துல செய்ற கெடுபுடித்தனம் அவனுக்குக் கொஞ்சங்கூடப் புடிக்காது.

ஆனந்துக்கு நாலு வயசு. உள்ளூர்ல இங்கிலீசு மீடியம் பள்ளிக்கூடம் இல்லாததுனால பக்கத்து ஊர்ல இருக்குற காமாட்சி இந்து கான்வெட்டு ஸ்கூல்ல யூ.கே.ஜி படிக்கிறான். எல்.கே.ஜி படிக்கும்போது, பள்ளிக்கூடத்துக்குப் போவ மாட்டேன்னு காலைல தெனமும் அழுது அடம் பண்ணுவான். இப்ப அப்பிடி இல்ல. இப்ப ஸ்கூல் வேன்ல போறது அவனுக்குப் புடிச்சிருந்தது. ஆனா, தெனமும் சாயங்காலத்துல டியூசனுக்குப் போறதுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணுவான்.

ஆனந்தோட அப்பா சென்னைல ஏதோ ஒரு கம்பெனில வேல செய்றாரு. வாரக் கடைசில வீட்டுக்கு வந்துட்டு திங்கள் கெழம காலைல போயிருவாரு. அதுனால அவரு ஆனந்துட்ட ரொம்பப் பிரியமா இருப்பாரு. அவருக்கு அவெஞ் செல்லப் பிள்ள. ஆனந்தோட அம்மா மல்லிகா பக்கத்து ஊர்ல இருக்கிற தனியார் பள்ளிக்கூடத்துல டீச்சரா இருக்காங்க. டீச்சரா இருக்குறாங்கன்னு பேருதான ஒழிய, டீச்சருக்கான எந்த அம்சமும் அவுங்ககிட்ட இருக்காது. அந்தத் தெருவுல அவுங்க வாய்க்குத்தான் அம்புட்டுப் பேரும் பயப்படுவாங்க. அவ்வளவு பயங்கரமா கத்தி, சண்ட போடுவாங்க. அவுங்களுக்கு மட்டும்தான் ஆனந்து பயப்படுவான்.

ஒரு நாளு சாயங்காலம், வழக்கம் போல லபலபன்னு தெருவுல மல்லிகா கத்திக்கிட்டு அலஞ்சாங்க. அவுங் களப் பத்தி எல்லாத்துக்கும் தெரியுங்கிறதுனால யாரும் அவுங்ககிட்ட என்ன ஏதுன்னு கேக்கல.

எதுத்த வீட்டு லச்சுமியக்காளக் கூப்புட்டு, ‘‘பாத்தீங்களாக்கா இந்த ஆனந்துப் பய என்ன சொல்றாம்னு. வீட்டுப்பாடம் செய்யச் சொன்னதுக்கு மண்ணெண்ணெய ஊத்திக்கிட்டுச் சாகப் போறம்ங்கான். இந்த வயசுல பேசுற பேச்சாக்கா? இவனுக்காகத்தான நானும் அவரும் இந்தப் பாடுபடுறோம். இந்த நாயி இப்பமே இப்பிடிச் சொல்லுதுக்கா. எந்த நேரம் பாத்தாலும் டி.வி. பாத்துக்கிட்டு படிக்கவே மாட்டேம்ங்கான்.’’

‘‘அப்பிடியே வாயி மேல ரெண்டு போடுங்க. அதென்ன இந்த வயசு லயே செத்துப் போறெம்னு பேசுறது. அவுகப்பா வரவும் சொல்லுங்க. அரட்டி வுட்டுட்டுப் போகட்டும்.’’

‘‘அவுகப்பாதான… அவரு குடுக்குற செல்லந்தான் இவெங் கெட்டு குட்டிச் செவராப் போறான். பத் தாக்கொறைக்கி அவுகாத்தா ஒண்ணு. இந்தக் கெழவி என்ன சொல்லுதுங்கிறீங்க. நானு ரொம்பக் கண்டுசனா இருக்கப் போயித்தான் இவெங்கெட்டுப் போறானாம், என்னத்தச் சொல்லுவீங்க?’’

‘‘ஆமங்க. சின்னப் பெயதான. கொஞ்சம் ஃப்ரீயா உடனுங்க. ரொம்ப அடக்கிவச்சம்னா இப்படித்தான். இந்த வயசுல எதுக்குங்க டியூசன்? நீங்க டீச்சர்தான? நீங்களே வீட்டுல வச்சுச் சொல்லிக் குடுக்கலாம்ல?’’

‘‘ஒங்ககிட்டப் போயி நாஞ் சொன்னம் பாருங்க. எனக்கு வேலையே சரியாப்போகுதுங்க. இப்பப் படிக்கலன்னா பின்னால ரொம்பக் கஷ்டப்படுவான்ல. அவென் வாயில சூடு போட்டா இப்பிடி இனிமே பேச மாட்டான்!’’ சொல்லிக்கிட்டே வேகமா வீட்டுக்குள்ள வந்துட்டா.

அவனோட அப்பாவப் பெத்த பாட்டி ஆராயி அவுங்களோடதான் இருக்காங்க. ஆனந்துக்குப் பாட்டிகிட்ட ரொம்ப ஒட்டுதல். பாட்டிய அவனோட வயசுப் பிள்ள மாதிரி வச்சு வெளையாடுவான். பாட்டியும் பேரனுக்கு ஈடு குடுத்து சின்னப் பிள்ள மாதிரியே வெளையாடுவாங்க. அவுங்க ரெண்டு பேரும் வெளையாடுறதயும், பேசுறதயும் பாத்தா மத்தவுங்களுக்குச் சிரிப்பா இருக்கும்.

ஆராயிப் பாட்டி ஆனந்துக்கு நெறய்ய கத சொல்லுவாங்க. பாட்டுச் சொல்லிக் குடுப்பாங்க. செல நேரத்துல ஆனந்து பாட்டிக்குக் கத சொல்லுவான்; பாட்டுச் சொல்லிக் குடுப்பான், பாட்டி யும் சின்னப்புள்ள கணக்கா ஆடி ஆடிச் சொல்லுவாங்க.

ஆனந்துக்குக் கடவுளப் பத்தியும் பாட்டி சொல்லிக் குடுப்பாங்க. அவனும் ஒரு கொணம் வந்துச்சுன்னா ரொம்ப ஆர்வமாக் கேப்பான். கேள்விக்கு மேல கேள்வி கேப்பான். பாட்டியும் எல்லா கேள்விக்கும் சலிக்காம பதில் சொல்லு வாங்க. ஆனந்துக்குப் பாட்டியப் புடிச்சுப் போனதுக்கு இதுவும் ஒரு காரணம். அவுங்கம்மாவுக்குக் கொஞ்சங்கூட பொறும கெடையாது. அவெங் கேள்வி கேட்டாலே, எரிஞ்சு எரிஞ்சு கத்துவாங்க. அதுனால பாட்டிகிட் டதான் அம்புட்டுக் கேள்வியும் கேப்பான்.

ஒவ்வொரு நாளும் சாயங்காலத்துல பாட்டிக்கும் பேரனுக்கும் காரசாரமான வாக்குவாதம் நடக்கும். எல்லாம் டியூசன் சமாசாரந்தான். டியூசனுக்குப் போகாம இருக்குறதுக்கு என்னென் னமோ செஞ்சு பாப்பான். பாட்டிக்குக் கூட அவன அனுப்பாம இருக்கலாம்னு தான் தோணும். ஆனா, அவுகம்மாவுக்கு அவன் டியூசனுக்குப் போகாததுதெரிஞ்சா அம்புட்டுதான். ஆராயிப் பாட்டிய வார்த்தையாலயே சாகடிப்பா!

வயசுல பெரியவுங்களா இருந்தாலும், தன்னோட புருசனப் பெத்த மாமியாரா இருந்தாலும் கண்ணுமண்ணு தெரியாம வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவா. அவளோட புருசனும், பொண்டாட் டிக்குத்தான் சப்போர்ட்டாப் பேசுவான். ஆராயி பக்கம் நியாயம் இருக்குன்னு தெரிஞ்சாக்கூட அவனால அவுகளுக்குச் சப்போர்ட்டா பேசிட்டு வீட்டுல இருக்க முடியாது. மொத்தத்துல அந்த வீட்டுல மல்லிகா வச்சதுதான் சட்டமா இருந்துச்சு.

போன வாரத்துல ஒரு நாளு, ஆனந்து தெருப் பிள்ளைகளோட பழைய சைக்கிள் டயர உருட்டி வெளாண்டுட்டு இருந்தான். ஆராயி அவன டியூசனுக்கு அனுப்பப் படாத பாடுபட்டுக்கிட்டு இருந்தா. அவெம் பின்னாடியே ஓடி யோடிக் களச்சுப்போனா. கடைசியா ஒருவழியா அவனும் டயர உருட்டிக் கிட்டு வீடு வந்து சேந்தான். அவன வீட்டுக்குக் கொண்டுட்டு வந்ததே பெரிய சாதனன்னு மனசுக்குள்ள நெனச்சுச் சந்தோசப் பட்டுக்கிட்டா.

அவளோட பெரிய சைஸ் ஒடம்பத் தூக்கிக்கிட்டு அவம் பின்னாடி ஓடுறதுக்கு அவளால முடியாதுதான். இருந்தாலும் மருமகள நெனச்சுட்டா மலைக்காம ஓடுவா. வீட்டுக்கு வந்த ஆனந்த எப்பிடியாச்சும் தாஜா பண்ணி டியூசனுக்குக் கூட்டிட்டுப் போயிடணும்னு நெனச்சுக்கிட்டு, அவங்கிட்ட ரொம்பப் பிரியமாச் சொன்னா… ‘‘கண்ணே ஆனந்து, இன்னிக்கு மட்டுக்கும் டியூசனுக்குப் போயிட்டு வந்துருய்யா, ஏஞ் சாமி! எஞ் செல்லக்குட்டில்ல. ஒங்கம்மா வந்தா என்னிய மென்னு துப்பிடுவாடா. இன்னிக்கு மட்டும் போயிட்டு வந்துருய்யா. ஏ ராசா… எந்தங்கக் கட்டில்ல.’’

ஆனந்தும் பதிலுக்குக் கெஞ்சலா சொன்னான். ‘‘பாட்டி பாட்டி, இன்னிக்கு ஒரு நா மட்டும் நானு டியூசனுக்குப் போகல பாட்டி. நாளைலருந்து கண்டிப்பா போவேன்.’’

‘‘ஒங்கம்மா வந்து கேட்டா, என்னடா சொல்ல? நீயி தப்பிச்சுருவ. என்னத்தாண்டா வைவாங்க.’’

‘‘அம்மா வந்து கேட்டா நானு டியூசனுக்குப் போனேன்னு சொல்லிடு. அம்மா எனக்குத் திங்க வாங்கிட்டு வாரதுல ஒனக்கும் கொஞ்சம் தருவேன்’’& சர்வசாதாரணமாச் சொன்னான்.

அதக் கேட்ட ஆராயிக்குத் தூக்கிவாரிப் போட்டுருச்சு. பதற்றத்தோட அவங்கிட்ட சொன்னா… ‘‘அது தப்புடா செல்லம். பொய் சொல்லக் கூடாதுய்யா. இந்த வயசுல இம்புட்டுச் சுளுவா பொய் சொல்லுறியே. பொய் சொன்னா சாமிக்குப் புடிக்காது ராசா.’’

‘‘எனக்குந்தான் டியூசனுக்குப் போகப் புடிக்கல. அதுக்கென்ன சொல்ற? சாமிக்கு மட்டும் புடிக்காதுங்கற..?’’- ஒரு அதட்டலோடு முடிச்சான்.

ஆராயிக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா. அந்த நேரத்தப் பயன்படுத்தி ஆனந்து மறுபடியும் டயரத் தூக்கிட்டு ஒரே ஓட்டமா வெளிய ஓடிட் டான். ஆராயி அப்படியே வாசலுல ஒக்காந்து, எதுத்த வீட்டுக்கார லச்சுமியம்மாட்ட பொலம் புனா… ‘‘நீங்களும் பாத்துட்டுதான இருக்கீங்க. இந்தப் பொடியன் என்னிய என்ன பாடுபடுத் துறாம்னு பாருங்க. இந்தா ஓடியே போயிட்டான். இனி அவுகம்மாக்காரி வந்தா என்னென்ன கேள்வி கேக்கப்போறாளோன்னு நெனச்சா இப்பமே பயம்மா இருக்குது. இந்தப் பெயலுக்கு அதெல்லாம் எங்க தெரியுது. சொல்லச் சொல்ல ஓடிட்டானே. எனக்கு அவம் பின்னாடி ஓட முடியுமா என்ன? இதச் சொன்னம்னா, ‘வீட்ல ஒக்காந்துட்டுத் திங்கிறீல்ல, ஓடணும். திங்கிற சோறு சீரணிக்க வேணாமா? அதுக்காச்சும் ஓடணும்’பா. இந்த வயசுல நானு இப்பிடி ஏச்சும்பேச்சும் வாங்கிக்கிட்டு இந்தக் கொடல ரொப்பணும்னு கடவுளு எந்தலைல எழுதியிருக்காரு.’’

லச்சுமியம்மா சொன்னாங்க… ‘‘அந்தப் பயலக் கொஞ்சம் நேரமாச்சும் வெளாடவுடணும், பள்ளிக்கூடம் போய் வந்த ஒடனே டியூசன்ல போயிப் படின்னு வெரட்டுனா, அவனுக்குப் படிப்பு மேல சலிப்புதான் தட்டும். அவுகம்மா டீச்சர்தான. அவன சாயங்காலம் சித்த நேரம் வெளையாடவுட்டுட்டுப் பெறகு அவுகளே அவனுக்குச் சொல்லிக் குடுக்கலாம்ல?’’

‘‘அவா எங்க சொல்லிக் குடுப்பா. அவளுக்கு இத்தினிகூட பொறும கெடையாது. அவகிட்ட படிக்கப் போனாம்னா இவென் அடிவாங்கியே சாக வேண்டியதுதான். ஆனாலும், இவனுக்கு அவுகம்மாதான் லாயக்கு. நம்ம இவ்வளவு கெஞ்சுறமே… கொஞ்சமாவது மதிக்கிறானான்னு பாருங்க.’’

ஆராயி பேசிட்டு இருக்கையிலயே மல்லிகா வீட்டுக்கு வந்துட்டா. வந்ததுமே, ‘‘அவனெங்க? டியூசனுக்குப் போயிருக்கானா?’’னு படபடன்னு கேட்டா. ‘‘நானு எவ்வளவோ சொல்லிப் பாத்தேன். கேக்க மாட்டேனுட்டான். டயரத் தூக்கிட்டு வெளாடப் போயிட்டான்!’’-ஆராயி பயந்து பயந்து சொல்லி முடிக்கும் முன்ன மல்லிகா வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி வஞ்சுக்கிட்டே வெளிய போனா. வெறி புடிச்சவ மாதிரி கத்திக் கத்திக் கூப்புட்டா. ‘‘லேய் ஆனந்து, டியூசனுக்குப் போகாமெ இங்க என்னடா ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க? வீட்டுல ஒரு கிறுக்கி கெடக்கா. பிள்ளைய டியூ சனுக்குக்கூட கூட்டிட்டுப் போமாட்டா. தெண்டத்துக்குத் தின்னுட்டு நாயி கணக்கா வீட்டக் காத்துக்கிட்டு கெடக்கா. ஏம்லே டியூசனுக்குப் போகல?’’& அதட்டலா கேக்கவும், ஆனந்து பயந்து போயி ‘பாட்டிதான் இன்னிக்கி டியூசனுக்குப் போக வேண்டாம்னு சொன் னாங்க’ன்னு இழுத்தான். மல்லிகா ஆத்துரமாக் கத்துனா. ‘‘அவளுக்கென்னடா, ஒன்னியக் கொண்டு போயி வுடுறதுக்கு ஒடம்பு வலிச்சுப் போயி ஒக்காந்துருப்பா. சும்மாத் தின்னுட்டு தின்னுட்டு ஒடம்பு பெருத்துப்போனா எப்பிடி நடக்க முடியும்?’’

இதக் கேட்டுப் பதறிப் போன ஆராயி, லச்சுமியம்மாவ சாட்சிக்குக் கூப்புட்டு பரிதா பமாச் சொன்னா… ‘‘நீங்களும் பாத்துட்டுதான லச்சுமியம்மா இருக்கீங்க. இந்தப் பையன் என்ன சொல்றாம்னு பாருங்க. நானு அவன டியூசனுக்குப் போக வேண்டாம்னு சொன்னனாம். ஏண்டா இப்பிடி இந்த வயசுலயே அபாண்டமா பொய் சொல்ற? நானாடா போ வேண்டாம்னு சொன்னேன்.’’

‘‘செய்றதயு செஞ்சு போட்டு இப்ப எம் பிள்ள பொய் சொல்லுதுன்னா சொல்றீக? அவஞ் சின்னக் கொழந்த. பொய் சொல்ல மாட்டான்!’’& மல்லிகா தீர்க்கமாச் சொன்னா. இதக் கேட்ட லச்சுமியம்மா வந்து சொன்னாங்க, ‘‘இல்லங்க, அவுங்க எத்தனையோ தடவ அவனக் கூப்புட்டுப் பாத்தாங்க. அவன் அவுகள ஏமாத்திட்டு ஓடிப் போயிட்டானுங்க. நாங்களும் பாத்துட்டுதாங்க இருந்தோம்.’’

‘‘நீங்க சும்மா இருங்கக்கா. ஒங்களுக்குத் தெரியாது. சின்னக் கொழந்தைங்க பொய் சொல்லாதுங்க. எனக்குத் தெரியும். லேய்! நாளைலருந்து ஒழுங்கா டியூசன் போயிடணும். புருஞ்சுதா?’’& மல்லிகா கேக்கவும், நல்ல பிள்ளையா தலயாட்டிட்டு, அம்மா கையப் புடுச்சுக்கிட்டு வீட்டுக்குள்ள போனான். போம்போதே ஆராயிய ஒரு தினுசாப் பாத்துட்டுப் போனான். ஆராயி அவனப் பரிதாபமாப் பாத்தா.

கொஞ்ச நேரத்துல பாட்டின்னு வந்து மடில ஒக்காரவும் ‘என் செல்லம்’னு அவனக் கண்ணு கலங்க அணச்சுக்கிட்டா. அதப் பாத்த ஆனந்து கையில இருந்த வடையத் தின்னுக்கிட்டே சத்தமாச் சொன்னான்… ‘‘அம்மா, பாட்டி அழுவுறாங்க. நீங்க எதுக்கு அவுங்களத் திட்டுனீங்க?’’

ஆராயி அவசர அவசரமா ஆனந்தோட வாயப் பொத்துனா. மெதுவா அவங்கிட்ட கெஞ்சுனா. ‘‘ஐயய்யோ! கத்தாத செல்லம். நானு அழுவலடா. கண்ணுல தூசி உழுந்துருச்சு. அதான்!’’

அதுக்குள்ள மல்லிகாவோட சத்தம் உள்ளயிருந்து கேட்டது… ‘‘இப்ப என்ன சொல்லிட்டாங்கன்னு இழுவிட்டு இருக்காங்க. இப்பிடி வெளக்குவைக்கிற நேரத்துல கண்ணீர் உட்டா வீடு விருத்தியாகுமா? இந்த வீடு வெளங்காமப் போகணும்னுதான அவுங்க எண்ணம். அதான் ஈங்க முன்ன கண்ணீரு வந்துரும். கள்ளக் கண்ணீரு.’’

ஆராயி எதுவும் சொல்லாம அமைதியா இருந்தா. அவளோட மொகத்தப் பாத்த ஆனந்து சொன்னான்… ‘‘இல்லம்மா, பாட்டி அழுவல. சும்மா சொன்னேன்மா.’’

‘‘நீ ஒரு கூமுட்டடா. ஒன்னிய அப்பிடிச் சொல்லச் சொன்னாங்களாக்கும். இந்த வயசுலயே ஒனக்குப் பொய் சொல்லக் கத்துக் குடுக்காங்க பாரு. இவுங்க இருக்குற வரைக்கும் நீயி உருப்பட மாட்ட!’’

ஞாயித்துக் கெழம காலைல மல்லிகாகூட வேல பாக்குற டீச்சர் வீட்டுல ஏதோ விசேசம்னு மல்லிகா கௌம்பிப் போனா. போம்போது ஆராயிட்ட கண்டுசனாச் சொல்லிட்டுப் போனா… ‘‘அவன வெளிய உடாதீங்க. வீட்டுக்குள்ளயே வெளாடவைங்க. சரி சரின்னு மண்டையஆட்டிட்டு, உட்டுத் தொலச்சுராதீங்க. கண்ட கண்ட பெயல்களோட சேந்து கெட்டுக் குட்டிச்செவராப் போவான்.’’

ஆராயி அமைதியா இருந்தா. அம்மா போகவும், ஆனந்தன் வெளிய போயி வெளாடணும்னு நச்சரிக்கத் தொடங்கிட்டான். எல்லா வகைலயும் ஆராயிய ஏமாத்திப் பாத்தான். ஆராயியும் சளைக்காம அவன மடக்கி மடக்கி வீட்டுக்குள்ள போட்டு வெளாட்டு சொல்லிக் குடுத்துக்கிட்டு இருந்தா. ஆனா, அது ரொம்ப நேரம் பலிக்கல. அதுனால அக்கம்பக்கத்துல இருந்த பிள்ளைகள வீட்டுக்கும் கூட்டியாந்து ஆனந்தோட வெளாட வுட்டா. பிள்ளைங்க வெளாண்டுட்டு இருக்கைலயே ஆராயிக்கு மல்லிகாவெ நெனச்சு பயமா இருந்துச்சு. திடுதிடுப்புனு அவ திரும்பி வந்துட்டா, அம்புட்டுதான். பிள்ளைகள எதுக்கு வீட்டுக் குள்ள சேத்து வச்சுருக்கன்னு கத்துவா. அதுனால பிள்ளைங்கள வீட்டுக்குப்போகச் சொன்னா.

‘‘இவுங்கம்மா வார நேரமாச்சு. நீங்கள்லாம் வீட்டுல போயி சாப்புட்டுட்டு அப்பறமா வாங்க, என்ன!’’

‘‘எங்களுக்குப் பசிக்கல பாட்டி. நாங்க இங்கயே இருந்து வெளையாடுறோம்’’- பிரகாஷ் சொல்லவும், மத்த பிள்ளைகளும் அதையே சொல்லிட்டு வெளையாட்ட தொடர்ந்தாங்க.

‘‘ஆனந்தோட அம்மா இப்ப வந்துருவாங்கடா. வந்தா திட்டுவாங்கடா. போயிட்டு சாயந்தரமா வாங்க, என்ன…’’

ஆனந்து பாட்டியத் திட்டுனான்… ‘‘அவுங்களப் போச் சொல்லாத கெழவி. அவுங்க போனாங் கன்னா நானும் அவுங்களோட வெளிய போயி வெளாடுவேன். நீ என்னிய வுடாட்டி அம்மாட்ட ஒன்னியச் சொல்லிக் குடுப்பேன். வெளிப் பிள் ளைகள வீட்டுக்குள்ள வுட்டன்னு சொல்வேன். ஒன்னிய அம்மாட்ட நல்லா மாட்டிவப்பேன்!’’

‘‘அடப் பாவிப் பெயலே, நீயி வெளாடுறதுக் குத்தானடா அவுங்களக் கூட்டியாந்தேன். இப்பெ ஏம் மேல பழியப் போடுற. அதாண்டா, நல்லதுக்கே காலமில்லடா.’’

‘‘அப்ப இவுங்களப் போச் சொல்லாத!’’

‘‘அவுகள்லாம் அவுங்க வீட்டுல போயிச் சாப்புட்டு வருவாங்கடா’’ன்னு சொல்லி ஒருவழியா அனுப்பிட்டா. அவுங்க போம்போது, ‘‘சாப்புட்டுட்டு வந்துரணும்… சாப்புட்டுட்டு வந்துரணும்’’னு திரும்பத் திரும்பச் சொல்லி அனுப்புனான் ஆனந்து. பிள்ளைங்க போன பெறகு ஆனந்துக்கு வீட்டுல இருப்புக்கொள்ளல. அவனும் வெளிய போகணும்னு அடம் புடிச்சான். ‘‘பிள்ளைங்கள்லாம் சாப்புட்டு இங்க வருவாங்கடா. நீயும் சாப்புடுடா’’னு ஆராயி கெஞ்சுனா.

‘‘எனக்குச் சாப்பாடு வேணாம்.’’

‘‘அவுங்கள்லாம் வர முன்னாடி நீயி சாப்பிட்டாத்தான அவுங்க வந்ததும் அவுங்களோட வெளாடலாம். சீக்கிரமாச் சாப்புடு. ஏஞ் செல்லம்ல.’’

‘‘அவுங்கள்லாம் இனி வர மாட்டாங்க. நீயி சும்மா சொல்ற.’’

‘‘அவுங்க வராட்டிப் போறாங்க. நம்ம ரெண்டு பேருமா வெளாடலாம்.’’

‘‘ஓங்கூட நானு வெளாட மாட்டேன். அவுங்கதான் வரணும். நீயி எதுக்கு நாயே அவுங்கள அனுப்புன?’’

‘‘அப்பிடிப் பேசக் கூடாதுப்பா, பாட்டி நாந்தான அப்ப அவுங்களப் போயிக் கூட்டியாந்தேன். அது மாதிரி திரும்பவும் போயிக் கூட்டியாருவேன். சரியா?’’

‘‘பெரிய பாட்டி… இப்பப் போயிக் கூட்டிக்கிட்டு வா. அப்பத்தான் சாப்புடுவேன். இல்லன்னா நானு போறேன்.’’

ஒடனெ ஆராயி அவெங்கிட்ட ஒரு பத்து ரூவாத் தாளக் காட்டிச் சொன்னா… ‘‘அம்மா வார வரைக்கும் நீயி ஏங்கூட வீட்டுலயே இருந்தீன்னா பாயிட்ட ஒனக்குப் பிரியாணி வாங்கித் தருவேன்.’’

‘‘எந்த பாயிட்ட?’’

‘‘இந்த வண்டில வச்சுத் தள்ளிட்டு வந்து பஸ்டாண்டுகிட்ட விக்கிறாரே… சர்தாரு பாயி. அவருட்ட!’’

‘‘என்ன பிரியாணி?’’

‘‘கோழிக்கறி பிரியாணி. அன்னிக்கி ஒரு நாளு அப்பா வாங்கித் தந்தாரே அந்த பிரியாணி. சரியா?’’

‘‘சரி, போயி வாங்கிட்டு வா!’’

‘‘இப்ப எங்க இருப்பாரு? சாயங்காலந்தான அவரு வருவாரு. அப்ப வாங்கித் தாரேன். இப்ப நீயி சாப்புட்டுரு. வா, பாட்டி ஒனக்கு ஊட்டிவுடுறேன்.’’

ஆராயி ஊட்டிவுட, ஆனந்து சாப்பிட்டான். ஆராயியும் சாப்பிட்ட பெறகு வெளிக் கேட்டு, உள் கதவு எல்லாத்தையும் பூட்டிட்டா ஒரு பாயப் போட்டு படுத்தா. ஆனந்தையும் படுக்கச் சொன்னா. அவம் படுக்கல. பாட்டி பக்கத்துல ஒக்காந்துக் கிட்டான்.

ஆனந்துக்குப் பிரியாணின்னா ரொம்பப் புடிக்கும். பிரியாணிய நெனச்சுக்கிட்டே எந்துருச்சு வீட்டுக்குள்ள அங்கிட்டும் இங்கிட்டுமா நடந்தான். ‘‘பாட்டி! போயி பிரியாணி வாங்கிட்டு வா’’னு பொழுதன்னிக்கும் நச்சரிக்க ஆரம்பிச்சான். ஆராயியும் ‘இந்தா இப்பப் போறேன்… அப்பப் போறேன்’னு தாக்காட்டிக்கிட்டே படுத்துக் கெடந்தா.

‘‘பாட்டி, எங்க… ரூவாயக் காட்டு. நீயி நெசமாலுமே ரூவா வச்சிருக்கியான்னு பாப்பம்.’’

‘‘இந்தா பாரு செல்லம். பத்து ரூவா. கண்டிப்பா ஒனக்கு கால் பிளேட்டு பிரியாணி வாங்கித் தருவேன். ஆனா, நீ மட்டும் அம்மா வார வரைல வெளியவே போகக் கூடாது. வீட்டுக்குள்ளயே இருந்தாத்தான் பிரியாணி. வெளிய போனா பிரியாணி கெடையாது!’’- சொல்லிக்கிட்டே ரூவாயக் காட்டுனா.

‘‘பாட்டி, நீயி இப்ப மொதல்ல போயி பிரியாணி வாங்கிட்டு வா. நானு வீட்டுக்குள்ளயே வெளாண்டுட்டு இருக்கேன்.’’

‘‘இப்ப பிரியாணி போட்டுருக்க மாட்டாங்கல்ல. கரெக்டா ஏழு மணிக்குத்தான் பாயி வண்டியத் தள்ளிக்கிட்டு வருவாரு. அப்பப் போயி வாங்கிட்டு வாரேன்.’’

‘‘நானும் ஓங்கூட கடைக்கு வருவேன். சரியா?’’

‘‘சரி, நம்ம ரெண்டு பேரும் போயி வாங்கியாரலாம். என்ன?’’

‘‘ம்…’’

கொஞ்ச நேரங் கழிச்சு மறுபடியும் ஆரம்பிச்சான். ‘‘பாட்டி, இப்பக் கொண்டாந் துருப்பாரா?’’

‘‘இல்லடா… இன்னும் மணி ஆகலையே! சரி, நானு பொடவைய வச்சு ஒனக்கு ஊஞ்சல் கட்டிவுடட்டா? நீயி ஊஞ்சலாடிக்கிட்டே இருக்கியா?’’

‘‘வேணாம். ஊஞ்சல் வெளாட்டுக்கு நானு வரல.’’

‘‘சரி, அது வேணாம். ஒனக்குப் புடிச்ச கள்ளம் போலீசு வெளாட்டு வெளாடலாம். நாந்தாங் கள்ளனாம். நீதான் போலீசாம்!’’ & சொல்லிட்டு எந்திருச்சு உக்காந்தா.

‘‘சரி, அப்ப வெளிய போயி வெளாடுவோம், வா.’’

‘‘வெளிய ரொம்ப வெயிலா இருக்குடா. வீட்டுக்குள்ளயே வெளாடுவோம்.’’

‘‘வீட்டுக்குள்ளன்னா நானு வரல.’’

ஆராயி எதுவும் சொல்லாம மறுபடியும் படுத்தா.

கொஞ்ச நேரம் அமைதியாவே இருந்த ஆனந்து திடீர்னு கேட்டான். ‘‘நானு வீட்டுக்குள்ளயே இருந்தா பிரியாணி வாங்கித் தருவியா? வெளிய போனா தர மாட்டியா?’’

‘‘ஆமா, வீட்டுக்குள்ளயே இருந்தாத்தான். இல்லன்னா கெடையாது’’. ஆனந்த உள்ள மடக்கிப் போடுறதுக்கு நல்ல வழியக் கண்டுபுடிச்சுட்ட திருப்தில ஆராயி கண்ண மூடித் தூங்க ஆரம்பிச்சா. கொஞ்ச நேரம் ஆனந்து எதுவுமே பேசல. ஆராயியிக்குத் தூக்கம் கண்ண இழுத்துக்கிட்டுப் போச்சு. ஒண்ணுக்கு வருதுன்னு அவள உசுப்புனான். தூக்கத்துல சாவிய எடுத்து நீட்டுனா. கதவத் தெறந்துட்டு வெளிக் கேட்டுக்கு வந்தான். கேட்டுகிட்ட நின்னபடியே ஆராயிட்டக் கேட்டான்…

‘‘பாட்டி, நீயி என்ன சொன்னெ? வீட்டுக்குள்ளயே இருந்தாத்தான் பிரியாணி வாங்கித் தருவியா? வெளிய போனா தர மாட்டியா? சரி; எனக்குப் பிரியாணி வேணாம்!’’& சொன்ன வேகத்துல கேட்டு மேல ஏறிக் குதிச்சு ஓடியே போயிட்டான்.

அரக்கப்பரக்க எந்திருச்ச ஆராயிக்கு கையும் ஓடல; காலும் ஓடல. கேட்டுக்கு வெளிய நின்னுக்கிட்டு சத்தம் போட்டா… ‘‘டேய் ஆனந்து, இந்தா இப்ப பிரியாணி வாங்கப் போறேண்டா; வந்துருடா, டேய்..!’’& கத்தும்போதே அவளுக்குச் சிரிப்பும் அழுகையும் சேந்தே வந்துச்சு.

– ஏப்ரல் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *