கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 10,746 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 | அத்தியாயம் 2

இரவு ஒன்பது மணிக்குமேலிருக்கும். குளிர்காலமாகையினால் எங்கும் மூடுபனி கவிந்துகொண்டிருந்தது. ஜன நடமாட்டம் வெகுவாய்க் குறைந்திருந்த போதிலும், வீதிகளில் நடமாடு வோரின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாதபடி செய்து கொண்டிருந்தது பரவிக் கிடந்த பனிப்படலம். அந்த மூடுபனி யைக் கிழித்துக்கொண்டு வெகு வேகமாக ஒரு கார், மாம்பலத் தில் இருக்கும் உஸ்மான் ரோட்டில் வந்துகொண்டிருந்தது. அந்தக் காரின் முன்னாலிருந்த இரண்டு பிரகாசமான விளக்கு களும் ஒரு பூதத்தின் பயங்கரக் கண்களைப்போல் காட்சியளித்தன. பனிப்படலத்தை விலக்கிய வண்ணம் விரைந்து வந்து கொண்டிருந்த அந்த மோட்டார் வண்டி உஸ்மான் ரோட்டில் பனகல் பார்க்குக்கு எதிரில் இருக்கும் இரண்டடுக்கு பங்களாவின் முன்னால் வந்து குலுங்கி நின்றது. குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ளக் கம்பளிக் கோட்டு, நிஜார் முதலியவை களை அணிந்துகொண்டிருந்த துப்பறியும் துளசிங்கம் அந்த வண்டியிலிருந்து வெளியே இறங்கினார். மறுகணம் வண்டி சென்றுவிட்டது. கோட்டுப் பையிலிருந்து டைரியை எடுத்து அதில் எழுதியிருந்த வீட்டின் நெம்பரைப் பார்த்துக் கவனப்படுத் திக்கொண்டார். பிறகு டார்ச் விளக்கொளியினால் அந்தப் பங்களாவின் முகப்பிலிருந்த நெம்பரைக் கவனித்தார். தான் தேடி வந்திருக்கும் வீடு அதுதான் என்று அவருக்கு விளங்கி விட்டது! அந்தப் பங்களாவின்மீது ஒருமுறை கண்ணோட்டம் செலுத்திவிட்டு முன்னாலிருந்த இரும்பு கேட்டைத் திறந்து கொண்டு பங்களாவினுள் பிரவேசித்தார் துளசிங்கம்.

பங்களாவின் முன் வராந்தாவில் பொறுமையின்றி முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான் ஒரு கான்ஸ்டேபிள். துளசிங்கத்தைப் பார்த்தவுடன் அவனுடைய பரபரப்பு அதிக மாகியது. வராந்தாவில் வந்து நின்ற அவருக்கு ஸல்யூட் அடித்து விட்டு ஒதுங்கி நின்றான் அவன்.

“என்ன கந்தசாமி! என்ன சமாச்சாரம்? இன்ஸ்பெக்டர் சங்கரன் இந்த வீட்டு விலாசத்தைக் கொடுத்து என்னை இங்கு அனுப்பினார். உன்னை அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்…” என்றார் துளசிங்கம்.

“ஆமாம் ஸார்! எவனோ இந்த வீட்டினுள் புகுந்து கொள்ளையடித்துவிட்டதாக ஆதிகேசவன் என்பவர் டெலிபோன் செய்தார். அதனால்தான் இன்ஸ்பெக்டர் என்னை இங்கு அனுப்பினார்!”

“அப்படியா? அந்த ஆசாமி எங்கே?”

“உடம்பு சரியாக இல்லை என்று மாடியில் படுத்துக்கொண் =டிருக்கிறார் “.

“அவருக்குத் திடீரென்று அப்படி என்ன உடம்பு?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் துளசிங்கம்.

“நான் வந்தபோது நன்றாகத்தான் இருந்தார். என்னை வரவேற்று என்னிடம் பேச முயன்ற போது திடீரென்று வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டார். உடம்பு ஆடியது; முகம் விகாரமாகியது. அவர் உண்ட ஆகாரத்தில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என்றும், அதனால் தான் அவ ருடைய உடல் நிலை அப்படி மாறி விட்டது என்றும் நான் புரிந்து கொண்டேன். டாக்டரை வரவழைக்கட்டுமா என்று கேட்டேன். ஓய்வு எடுத்துக் கொண்டால் உடம்பு சரியாகி விடும் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார். நீங்கள் விரைவில் வந்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியுமாகையினால் மேற்கொண்டு நான் ஒன்றும் அவரை விசாரிக்கவில்லை” என்றான் கான்ஸ்டேபிள் கந்தசாமி.

அவனை அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு மாடிக்குச் சென்றார் துப்பறியும் துளசிங்கம். படிக்கட்டுகளில் நடந்து செல்லும்போதே சுற்று முற்றும் இருக்கும் பொருள்களை அவரு டைய விழிகள் கவனித்துக் கொண்டே வந்தன.

கந்தசாமி குறிப்பிட்ட அறை அரைகுறையாகத் திறந்திருக் தது. துளசிங்கம் கதவை நன்றாய்த் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தார், அது ஒரு ரகசியப் பரிசோதனைச் சாலையைப் போல் காட்சி அளித்தது. சுவரை ஒட்டினாற் போல் இருந்த பெஞ்சுகளில் கண்ணாடிப் புட்டிகளும் குழாய்களும் வைக்கப் பட்டிருந்தன, அவைகளில் வலது பக்கமாக நீண்ட கண்ணுடிக் குழாய் ஒன்று சிதறித் தரையில் கண்ணாடித் துண்டுகளாகக் கிடந்தது. அவ்வறையின் ஒரு பக்கமாகக் கிடந்த ஆடும் பிரம்பு நாற்காலியில் வலது கரத்தினால் நெற்றியை அழுத்திப் பிடித்த வண்ணம் சாய்ந்து லேசாக ஆடிக் கொண்டிருந்தார் ஒருவர், அவருடைய விழிகள் இடுங்கிப் போயிருந்தன. தலைமயிர் கலைந்து கிடந்தது. முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் அரும்பி நின்றிருந்தன, உடம்பு ஒடுங்கிப் போய் இருந்தது. அவைகளி லிருந்து தான் தேடிக்கொண்டு வந்திருக்கும் ஆசாமி அவராகத் தான் இருக்கவேண்டும் என்று புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தார் துளசிங்கம்.

“நீங்கள் தானே மிஸ்டர் ஆதிகேசவன்?” என்று விசாரித்தார் துளசிங்கம்.

அவர் தலையைச் சற்று உயர்த்தி விழிகளை உருட்டித் தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் துளசிங்கத்தைப் பார்த்தது, ‘நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்பது போல் இருந்தது.

“என் பெயர் துளசிங்கம், ஒரு துப்பறிபவன். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வந்திருக்கிறேன்” என்று துளசிங்கம் கூறிய பிறகுதான் தலையை அசைத்து அவரை வரவேற்றார் அவர்.

“ஓ! துப்பறியும் துளசிங்கமா? வணக்கம் சார். நான் தான் ஆதிகேசவன். உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் நேரில் பார்த்தது இல்லை. ஒவ்வொரு நிமிடமும் என் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வருகிறது. நான் உண்ட உணவில் ஏதாவது கோளாறு இருந்ததோ என்னவோ? சாப்பிட்டதிலிருந்து என் உடம்பு ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறது! இருந்தாலும் என்னால் முடிந்தவரை நடந்த விஷயங்களைச் சொல்லி விடுகிறேன்” என்று கூறினார் தயக்கமும் தடுமாற்றமும் கலந்த குரலில் அவர். ஆதிகேசவனின் உடல் நிலை மோசமாய் இருப்பது தெரிந்தும் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்காக அவரை விசாரித்தார் துளசிங்கம்.

“நான் இந்த அறையினுள் பிரவேசித்தவுடனேயே நீங்கள் குறிப்பிட்டதுபோல யாரோ இவ்வறையினுள் பலவந்தமாக நுழைந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். ஏதாவது பொருள்கள் காணாமல் போய் விட்டனவா ?”

“எனக்குத் தெரிந்த வரையில் எந்தப் பொருளும் களவாடப் படவில்லை. ரசாயனப் பரிசோதனைப் பொருள்கள் தான் பாழாகி விட்டன. அதுவும் நல்ல சமயத்தில் உடைக்கப்பட்டு இருக் கின்ற ன!”

“அப்படியானால் இங்கு நடக்கும் ஆராய்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் குற்றவாளி அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களா?”

“அப்படி நான் சொல்லவில்லை. எல்லா விஷயங்களும் தெரிந்தால்தான் உங்களுக்கு உண்மை விளங்கும். நானும் என் னுடைய நண்பர் தில்லைநாயகமும் இங்கு ஒரு முக்கிய ரசாயன ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம். நாங்கள் இருவரும் விஞ்ஞான அறிவு பெற்றிருந்தபடியால்தான் அந்த ஆராய்ச்சியில் இறங்கினோம். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒரு மரப்பட்டையிலிருந்து போலிப் பஞ்சைத் தயாரிக்கும் வழியைக் கண்டு பிடித்தோம். அதைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். ரோஜா மலர் இல்லாமலேயே ரோஜா மணத்தை உண்டாக்குவது எப்படி? பருத்திச் செடிகளிலேயே பலவித கலர் பஞ்சுகள் உண்டாகச் செய்வது எப்படி? என்பது போன்ற ஆராய்ச்சிகளைச் செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம். சில நாட்களுக்கு முன்பு, குறிப்பிட்ட பழம் ஒன்றைச் சாப்பிட்டால் பசியே எடுக்காது என்ற செய்தி வெளியாகியிருந்தது! அந்த அதிசயக் கனியைப்பற்றி ஆராய்ச்சி செய்வது என்று தீர்மானித்திருந்தோம். நாங்கள் இருவரும் ஒரே விஷயத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போதிலும் தனித்தனியாகத் தான் வேலை செய்து வந்தோம். நான் இந்த அறையில் என் பரிசோதனைகளைச் செய்து வந்தேன். தில்லைநாயகம் மற்றொரு பகுதியில் இருக்கும் ஆராய்ச்சி அறையில் பரிசோதனைகளைச் செய்து வந்தார்.

“நாங்கள் கொஞ்ச நாட்களாக மும்முரமாய் வேலை செய்து வந்தோம். எங்கள் ஆராய்ச்சி அநேகமாக வெற்றி பெறும் தருவாயில் இருந்தது. விரைவில் வெற்றி காண வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இருவரும் அவ்வாறு தனித்தனியாக வேலை செய்து வந்தோம். நான் வழக்கம்போல் இன்று காலை எட்டு மணிக்கு இந்த அறைக்கு வந்து சேர்ந்தேன். அப்பொழுது இந்த அறை ஒழுங்காகத்தான் இருந்தது. தில்லைநாயகம் வெளியூருக்கு சென்றிருந்தபடியால் ஒரு மணி நேரம் கழித்துத்தான் வந்து சேர்ந்தார். சாப்பிடுவதற்காகச் சுமார் பன்னிரண்டரை மணிக்கு வெளியே சென்ற நான் ஒன்றரை மணிக்கு முன்பு திரும்பி வந்து விட்டேன். எனக்குப் பிறகு தில்லைநாயகம் சாப்பிடச் சென்று இரண்டு மணிக்குப் பிறகு வந்தார். நாங்கள் இருவரும் மாலை ஆறரை மணி வரையில் எங்கள் ஆராய்ச்சியில் ஆழ்ந்து கிடந்தோம்” என்று கூறிவிட்டுச் சற்று நிதானித்துப் பெரு மூச்சு விட்டுக்கொண்டு தொடர்ந்து பேசுவதற்கான சக்தியை வரவழைத்துக் கொண்டார்.

“நீங்கள் வழக்கமாக எவ்வளவு நேரம் வரையில் இங்கு காத்திருப்பீர்கள்?” என்று குறுக்கிட்டார் துளசிங்கம்.

“மாலை ஆறு மணிக்கு முன்பு வெளியேறியதில்லை. சிற்சில சமயங்களில் நேரம் போனதே தெரியாமல் கூட இருந்திருக்கிறோம். ஆறரை மணி சுமாருக்கு தில்லைநாயகம் இந்த அறைக்கு வந்தார். வீட்டிற்குப் போகப் போவதாகச் சொன்னார். நான் எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்குபடுத்தி வைத்து விட்டுச் சில நிமிடங்களுக்குள் அவருடன் புறப்பட்டு விட்டேன், நாங்கள் இருவரும் பாண்டி பஜாரில் இருக்கும் நளினா கேபில் சிற்றுண்டி புசித்து விட்டுச் செல்லத் தீர்மானித்திருந்தோம். ஆகவே, பன கல் பார்க்கினுள் நுழைந்து எங்கள் ஆராய்ச்சி சம்பந்தமான குறிப்புகளைப் பேசிய வண்ணம் நடந்து கொண்டிருந்தோம். நான் கண்டு பிடித்த உண்மைகளையும் அவர் ஆராய்ந்தறிந்திருந்த விஷயங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தபோது இன்னும் சில மணி நேரங்கள் தொடர்ந்து வேலை செய்தால், அந்த ஆராய்ச்சி முற்றுப் பெற்று விடும்போல் தோன்றியது. ஆகவே நான் அன்று இரவு தொடர்ந்து அந்த ஆராய்ச்சியை நடத்தப் போவதாய்க் கூறினேன். என் விருப்பத்திற்கு அவர் தடை சொல்லவில்லை. நளினா கேபிற்குச் சென்று சிற்றுண்டி புசித்து விட்டு வெளியே வந்தபோது எட்டு மணிக்கு மேலாகி விட்டது. தில்லைநாயகம் ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்து கொண்டு தன்னுடைய இருப்பிடத்திற்குப் புறப்பட்டு விட்டார். நான் அவரை வழியனுப்பிவிட்டு இங்கு திரும்பி வந்தேன். வீட்டினுள் நுழைந்து இந்த அறையை அடையும் வரையில் எந்த விதமான மாறுதலும் இல்லை. ஆனால் இவ்வறையினுள் நுழைந்த பிறகு…”

“மிஸ்டர் ஆதிகேசவன்! நீங்கள் தில்லைநாயகத்துடன் சென்றபோது வீட்டைப் பூட்டிக்கொண்டுதானே சென்றீர்கள்?”

“ஆமாம்.”

“அப்படியானால் நீங்கள் வந்தபோது அந்தப் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததா?”

“இல்லை, பூட்டியபடிதான் இருந்தது !”

“அவ்வாறானால், நீங்கள் இருவரும் வெளியே புறப்படு வதற்கு முன்பு குற்றவாளி இவ்வீட்டினுள் புகுந்திருக்க வேண் டும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?”

“அப்படி நினைப்பதற்கு இடமில்லை. இந்த வீட்டில் நுழைந்து எங்கள் ஆராய்ச்சியைப் பாழாக்குவதினால் யாருக்கு என்ன லாபம் இருக்கப்போகிறது?”

“உங்கள் ஆராய்ச்சியின் மீது பொறாமை கொண்ட யாராவது அப்படிச் செய்திருக்கலாமல்லவா? நீங்கள் வெளியே சென்றதைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டு, மாறு சாவி போட்டுத் திறந்து, விட்டினுள் புகுந்து பரிசோதனைக் கருவிகளைப் பாழ்படுத்தி விட்டு மறுபடியும் பூட்டிக் கொண்டு சென்றிருக்கலாம் அல்லவா?”

“எங்கள் ஆராய்ச்சியைப் பாழாக்குமளவிற்குப் பொறாமை கொண்ட விரோதிகள் ஒருவரும் இல்லை”

“அது சரி. அப்புறம்?”

“அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து மின்சார விளக்கை அழுத்தினேன். விளக்கொளி படர்ந்தவுடன் என் பார்வை தரையில் சிதறிக்கிடந்த கண்ணாடித்துண்டுகளின் மீது விழுந்தது. கண்ணாடிக்குழாய்கள் உடைக்கப் பட்டிருக் கின்றன என்பதை உணர்ந்தேன். கலவரமும் குழப்பமும் அடைந்த நான் தில்லைநாயகத்தின் அறையின் பக்கம் சென் றேன். அவ்வறையின் கதவு அரை குறையாகத் திறக்கப்பட் டிருந்தது. உள்ளே விளக்கொளியும் இல்லை. அங்கு ஏதாவது விபரீதம் நடந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும் போலிருந் தது எனக்கு. ஆனால் திடீரென்று வயிற்றைப் புரட்ட ஆரம்பித்து உடல் நடுக்கமும், மயக்கம் வருவது போன்ற உணர்ச்சியும் ஏற் பட்டபடியால் திரும்பி என் அறைக்கு வந்து விட்டேன்.”

“நீங்கள் இந்த இடத்திற்கு வந்த பிறகு வேறு ஏதாவது விபரீதம் நடந்ததா?”

“இங்கு திரும்பி வந்தபிறகு எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஒருவன் ஒரு பெருமுயற்சி செய்து அதில் வெற்றி காணும் தருவாயில் திடீரென்று அவனுடைய முயற்சிகளை முறியடித்தால் எவ்வித மனத்துடிப்பு ஏற்படுமோ அவ்வித உள்ளத்துடிப்பு தான் எனக்கு அப்பொழுது ஏற்பட்டது.. உடனே போலீசுக்குப் போன் செய்து விட்டு இந்த நாற்காலியில் அமர்ந்து விட்டேன்.”

“நீங்கள் செய்யும் இந்தப் பரிசோதனைக்குப் போட்டியாக வேறு யாராவது இதே பரீட்சை செய்து வருகிறார்களா?”

“நாங்கள் என்ன ஆராய்ச்சி செய்கிறோம் என்று எங்களைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. சென்னை மாகாணத்தில் நாங்கள் செய்யும் ஆராய்ச்சியை வேறு எவரும் செய்யவில்லை என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும்.”

“உங்களுக்குப் போட்டியாக ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறீர்கள் ! உங்களுக்கு விரோதிகளும் இல்லை என்கிறீர்கள்! ஆனால் யாரோ உங்களுடைய அபிவிருத்தியைத் தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று நிச்சயமாய்க் கூறுவேன். உங்கள் நண்பர்களிடமாவது அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களிடமாவது எப்பொழுதாவது எந்த முறையிலாவது நீங்கள் செய்யும் ஆராய்ச்சியைப்பற்றி வெளிப்படுத்தியது உண்டா?”

“இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் என்றும் ஜாக்கிரதை யாகத்தான் இருந்திருக்கிறோம். நாங்கள் ஆராய்ச்சி செய்யும் சமயத்தில் ஒருவரும் இங்கு வருவது இல்லை. அப்படி யாராவது வந்தால் அவர்களை நாங்கள் ஆராய்ச்சி அறையினுள் அனுமதிக்க மாட்டோம், ஒரு வேளை அவர்கள் அப்படி ஏதாவது கேட்டாலும் நேர் விரோதமாக எதையாவது சொல்லி அனுப்பி விடுவோம். அத்துடன் நாங்கள் செய்யும் ஆராய்ச்சியின் ரகசியங்கள் வெளிப்பட்டு விடப்போகிறதே என்று நாங்கள் கண்டு பிடிக் கும் உண்மைகளையும் ஆராய்ச்சி சம்பந்தமான குறிப்புகளையும், ஒரு காகிதத்தில் எழுதி வீட்டிற்குக் கொண்டு போய் விடுவோம். இந்த விஷயத்தில் தில்லைநாயகம் என்னைவிட முன் ஜாக்கிரதை மிகுந்தவர். நீங்கள் சந்தேகிப்பது போல் எங்கள் ஆராய்ச்சியின் மூலம் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கு வந்திருந்தால் இவ்வாறு அவன் பரிசோதனைக் கருவிகளைப் பாழ் படுத்தியிருக்க மாட்டான்!”

“ஆராய்ச்சி சம்பந்தமாய் உதவி செய்ய நீங்கள் வேறு யாரையாவது நியமித்திருக்கிறீர்களா?”

“இல்லை! இந்த மாதிரியான விஷயங்களில் உதவிக்கு வேறு ஒருவரை நியமித்துக் கொள்வது மிகவும் அபாயகரமானது. நம்மிடமிருந்து விஷயங்களைக் கற்றுக்கொண்டு பிறகு நம்மையே எதிர்த்து நிற்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் நாங்கள் உதவி செய்ய ஒருவரையும் நியமித்துக் கொள்ளவில்லை.”

“தில்லைநாயகத்தின் அறையைப் பரிசோதிக்க விரும்புகி றேன். உங்களால் எழுந்து வர இயலுமா?” என்று கேட்டார் துளசிங்கம். உடலில் தளர்ச்சியும் பார்வையில் தடுமாற்றமும் ஏற் பட்ட போதிலும் மிகுந்த பிரயாசையுடன் ராக்கிங் சேரை விட்டு எழுந்து துளசிங்கத்துடன் நடந்தார் ஆதிகேசவன். தில்லைநாயகத்தின் அறைக் கதவு அரை குறையாகத் திறக்கப்பட்டிருந்தது. துளசிங்கம் முதலில் உள்ளே பிரவேசித்தார். கோட்டுப் பையிலிருந்து டார்ச்சைக் கையில் எடுத்து மின்சார விசையைத் தேடி விளக்கைப் போட்டார்.

ஆதிகேசவனின் அறையைப் போலத்தான் விசித்திரமான ரசாயன புட்டிகளுடனும் கண்ணாடிக் குழாய்களுடனும் காணப் பட்டது அந்த அறை. அங்கு எந்த விதமான சேதமும் ஏற்பட்டிருக்க வில்லை. இருவரும் அந்த அறையினுள் இருந்த பொருள்களின் மீது ஒரு முறை கண்ணோட்டம் விட்டனர்.

“நான் இந்த அறைக்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. அவர் இங்கு என்னென்ன வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இங்கு இருக்கும் நிலையிலிருந்து இந்த அறையி னுள் ஒருவரும் வரவில்லை, எந்தப் பொருளும் கையாளப்பட வில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தில்லைநாயகம் இருந்திருந்தால் உண்மையைக் கண்டு பிடித்திருக்கலாம்.”

“அப்படியா? அவர் எங்கு வசிக்கிறார்?”

“அடையாறில் வசித்து வருகிறார்.”

“அவருடைய வீட்டில் டெலிபோன் இருக்கிறதா?”

” மீபத்தில் தான் அவருக்கு டெலிபோன் கனைக்ஷன் கிடைத்தது.”

“சரி, டெலிபோன் செய்து அவரை உடனே வரவழைக்கிறேன். அப்பொழுது நம்முடைய சந்தேகம் தீர்ந்து விடுமல்லவா?” என்று துளசிங்கம் கூறியவண்ணம் டெலிபோன் டைரக்டரியை புரட்டி தில்லைநாயகத்தின் நெம்பரைக் கண்டு பிடித்து அவரைக் கூப்பிட்டார். சுமார் பத்து நிமிடங்களாகியும் டெலிபோன் மணி மட்டும் அடித்துக் கொண்டிருந்ததே தவிர பதில் வரவில்லை. ஏமாற்றத்துடன் டெலிபோன் ரிஸீவரைக் கீழே வைத்து விட் டார். தில்லைநாயகத்தினிடமிருந்து பதில் வரவில்லை என்பதைக் கேள்விப்பட்டுத் திகைப்படைந்து போனார் ஆதிகேசவன்.

அவர் எட்டரை மணிக்கே வீட்டிற்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். அவர் வீட்டில் இல்லாவிட்டால் அந்த வீட்டைக் கவனித்துக் கொள்ளும் காந்திமதியாவது பதில் சொல்லியிருக்க வேண்டுமே? அவள் ஒரு போதும் எந்தக் காரணம் கொண்டும் வெளியே செல்லமாட்டாளே” என்று வியப்புடன் கூறினார் ஆதிகேசவன்.

“சரி, நான் அங்கேயே சென்று அவரை விசாரித்து விட்டு வருகிறேன். அதற்குள் இந்த அறையைப் பரிசோதனை செய்து விடுவது நல்லதல்லவா” என்று கூறிவிட்டு மாறு சாவியினால் அந்த அறையில் இருந்த மேசை டிராயரைத் திறந்தார் துள சிங்கம். அதில் ஏதோ சில கடிதங்களும் துண்டுக் காகிதங்களும் இருந்தன. ஆராய்ச்சி சம்பந்தமான எந்த விதமான குறிப் பும் அங்கு காணப்படவில்லை! ஆதிகேசவன் கூறியது போல் அவைகளை அவரே எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று தீர் மானித்தார் துளசிங்கம். ஆயினும் அவருக்கு ஒருவிதமான சந் தேகம் ஏற்படாமல் இல்லை. கரத்திலிருந்த டார்ச் விளக்கைப் பொறுத்தி மேசையின் கீழே கவனித்தார்.

அந்த ஆராய்ச்சி பலனளித்து விட்டது. ஒரு சிறிய கத்தி மேசையின் அடியில் விழுந்து கிடந்தது. அதன் மீது ஒன்றும் காணப்படாததினால் சமீபத்தில்தான் அது அங்கு போடப்பட் டிருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதை ரகசியமாய் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டார் துளசிங்கம்.

ஆதிகேசவன் தன்னுடைய ஆராய்ச்சிக் கருவிகள் பழுதாக் கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போனார். இப் பொழுது தில்லைநாயகத்தைப்பற்றிய தகவல் ஒன்றும் கிடைக்கா ததை அறிந்து திகைப்படைந்தார். இவ்விரண்டும் சேர்ந்து அவ ரூடைய உடல் நிலைமையை மேலும் மோசமாகி விட்டன. அவர் நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு பெருமூச்சு வீட்ட வண்ணம் மீண்டும் ராக்கிங் சேரில் உட்கார்ந்து விட்டார்.

“மிஸ்டர் ஆதிகேசவன்! நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். குற்றவாளியை எப்படியாவது கண்டு பிடித்து விடுகிறோம்” என்று அவரைத் தேற்றினார் துளசிங்கம்.

“என் உடம்பு என்னவோ செய்கிறது. இனிமேல் என்னால் இங்கே இருக்க முடியாது. நான் என் வீட்டிற்குப் போகிறேன். என் விலாசம் பரமசிவ நாடார் தெரு, மைலாப்பூர். அவசியமானால், அங்கு என்னை வந்து பாருங்கள்” என்றார் அவர். மிகுந்த பிரயாசையுடன் துளசிங்கம் அவருடைய கரங்களைப் பிடித்து அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார். அப்பொழுது அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த டாக்ஸியை நிறுத்தி அதில் ஆதிகேசவனை அமரச் செய்தார். அடுத்த கணம் வண்டி அவ ருடைய உத்தரவுப்படி மைலாப்பூரை நோக்கிச் சென்றது.

துளசிங்கம் தானும் புறப்படவேண்டும் என்று நினைத்த போது காள்ஸ்டேபிள் கந்தசாமி, “நான் ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறேன். சற்று என்னுடன் வருகிறீர்களா?” என்று கேட்டான்.

அந்த வீட்டின் பின்புறமிருந்த பெரிய கண்ணாடி ஜன்னலைச் சுட்டிக் காண்பித்தான் கந்தசாமி. கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது! கண்ணாடித் துண்டுகள் உடைந்து உட்புறம் விழுந்து கிடந்தன, உள்ளும் வெளியும் காலடிகள் தென்பட்டன. குற்றவாளி அந்த வழியாகத்தான் அவ்வீட்டினுள் பிரவேசித்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டார் துளசிங்கம். முன்புற மாய் உள்ளே பிரவேசித்தால் யாராவது கவனித்துவிடப் போகி சார்களே என்றுதான் குற்றவாளி அந்தக் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே பிரவேசித்திருக்கிறான் என்பது விளங்கி விட்டது. அதைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி எடுத்துக் கொண்டு கந்தசாமியை அங்கேயே காவலிருக்கும்படி எச்சரித்து விட்டுப் புறப்பட்டார்.

துளசிங்கம் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தபோது இன்ஸ் பெக்டர் சங்கரன் வெளியே சென்றிருந்தார். இரண்டொரு கான்ஸ்டேபிள்களைத் தவிர வேறு எவரும் அங்கு இல்லை. அந்த சமயத்தில் மேசையின் மீதிருந்த டெலிபோன் ஒலித்தது. போனுக்கு அருகே இருந்த துளசிங்கம் ரிஸீவரைக் கையில் எடுத்தார்.

“ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?” என்றது ஒரு பெண்ணின் குரல். அந்தக் குரலில் கலவரமும் பதட்டமும் தென்பட்டன. துளசிங்கம் ஒரு கணம் திகைத்துப்போனார்.

“ஆமாம்! நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் அவர்.

“நான் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலிருந்து பேசுகிறேன். சற்று நேரத்திற்கு முன்பு தில்லைநாயகம் என்பவர் இங்கு அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல் நிலை மோசமாய் இருந்தபடியால் அவருடன் ஆராய்ச்சி வேலையில் ஈடுபட்டிருக்கும் ஆதிகேசவன் என்பவருக்குப் போன் செய்து பார்த்தோம். பதில் இல்லை, அவருடைய வீட்டிலும் டெலிபோன் இருப்பதாய்த் தெரியவில்லை. அதனால்தான் நான் இத்தனை அவசரமாய் உங்களைக் கூப்பிட்டேன்” என்றது அந்தப் பெண்ணின் குரல்.

அதில் எத்தனை பரபரப்பு!

“என்ன, என்ன? தில்லைநாயகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாரா? இப்பொழுது அவருடைய உடல் நிலை எப்படியிருக்கிறது?” என்று ஆவலுடன் கேட்டார் துளசிங்கம்.

ஒரே ஒரு வினாடி மௌனம். பிறகு “சில நிமிடங்களுக்கு முன்பு தில்லைநாயகம் இறந்து விட்டார். அதைத் தெரிவிக்கத் தான் உங்களை இத்தனை அவசரமாய் அழைத்தேன்” என்று சோகத்துடன் பேசினாள் அந்தப் பெண். துளசிங்கம் திடுக்கிட்டுப் போனார். ‘அந்தப் பெண் யார்? அவளுக்கும் தில்லைநாயகத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்றெல்லாம் பல கேள்விகள் கேட்க அவருடைய நெஞ்சம் துடித்தது. ஆனால் அந்தப் பெண்மணி ரிஸீவரை வைத்துவிட்டபடியால் பதில் ஒன்றும் வரவில்லை. அளவு மீறிய ஏமாற்றத்துடன் தொப்பென்று ரிஸீவரை வைத்து விட்டார் துப்பறியும் துளசிங்கம்.

– தொடரும்…

– ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?, முதற் பதிப்பு: பெப்ரவரி 1957, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *