புன்னகைகள் புரிவதில்லை…

 

என் போன்றவர்களுக்கெல்லாம் காதலிக்க அறுகதை கிடையாது. அதுவும் என்னை விட பத்து வயது சிறியவனைக் காதலிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது எனக்கு. ஆண்கள் தன்னை விட பத்து வயது சிறியவளைக் காதலிக்கலாம், மணந்து கொள்ளலாம். ஆனால் பெண்ணாகப் பிறந்தால்? பெண்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அது முறைகேடாம், கலாச்சார சீரழிவாம். மண்ணாங்கட்டி.

எனக்கு ஏன் அவனைக் காதலிக்க வேண்டுமென்று தோன்றியது? இதுவரை நான் எந்த ஆணிடமும் பேசியதில்லை. நான் பேசிய முதல் ஆண் அவன் தான். அதனால் தானோ! ஒருவேளை நான் இவனிடம் பேசாமல் வேறு எந்த ஆணுடனும் முதலில் பேசியிருந்தால் அவன் மீதும் காதல் வந்திருக்குமோ?

இல்லை, நிச்சயமாக இல்லை!

நீ எந்த ஆணுடனும் பேசியதில்லையென்றால் உன் தந்தை, உன் உறவினர்கள் யாரும் ‘ஆண்’ இல்லையா?

இந்த சமூகம் என்னைப் பேச அனுமதிக்காத ஆணிடம் நான் பேசியதில்லை!

ஒரு கட்டத்தில் ஆண்களின் மீதே வெறுப்பு. இனி திருமணம் என்ற ஒன்றை நான் நினைத்து கூட பார்ப்பதில்லை என்றிருக்கையில் இவன் மீது மட்டும் ஏன் காதல் வயப்பட்டேன்!

எனக்கு செவ்வாய் தோஷமாம். முப்பது வயதில் ‘முதிர்கன்னி’ என்ற பட்டத்தோடு சுற்றிக்கொண்டிருக்கிறேன். இந்த பத்து ஆண்டுகளில் எத்தனை ‘ஆண்’களைப் பார்த்துவிட்டேன். அதில் ஒருவனுக்கு கூடவா அறிவு என்பது இல்லை. என் தந்தைக்கே அறிவில்லை. பிறகு எப்படி நான் மற்ற ‘ ஆண்’களிடம் அறிவை எதிர்பார்க்க முடியும்?

என்னைப் போன்ற பெண்ணின் நிலை, ஆண்களுக்கு இவ்வுலகிலிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நல்லவேளை எனக்குத் தங்கை இல்லை. இருந்திருந்தால் அவள் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் குடும்பத்திற்கு ஆகாதாம். ஆனால் இப்போது நிறைய ‘ஆண்கள்’ வருகிறார்கள். ஆண்களா அவர்கள்? இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட வேண்டுமாம். இப்போது செவ்வாய் தோஷம் ஒன்றும் செய்யாதா? என் அப்பனைச் சொல்ல வேண்டும். பாவம், அவன் மட்டும் என்ன விதிவிலக்கா? அவனும் ‘ஆண்’ தானே!

அவனுக்கு என்ன மரியாதை? எவன் கையிலாவது என்னைப் பிடித்துக்கொடுத்தால் அவன் கடமை முடிந்ததாம். கடமையாம் கடமை!

எந்த ஆணையும் எனக்குப் பிடிக்கவில்லை.

ஏன் என்னால் தனியாக வாழ முடியாதா? எனக்கு செவ்வாய் தோஷம் தானே தவிர வேறொன்றும் இல்லையே. என்னைப் பார்த்து பல் இளிப்பதும், வேறு விதமாக பேசுவதும். எப்படி முடிகிறது அவர்களால்? ஏன் முடியாது? முடியும் முடியும். ஏனென்றால் அவர்கள் ‘ஆண்கள்’!

வெளியிலே தான் அப்படியென்று நினைத்தால் என்னைப் பற்றி அறிந்தவர்களும் என்னிடம் தவறாக நடந்துகொள்ளவே முயற்சி செய்கிறார்கள். ஒரு சுற்றுச் சுவருக்குள் ஐந்து குடும்பங்கள். அதில் அவன் குடும்பமும் இருந்தது. அவனைத் தவிர மற்ற எல்லாரும் என்னைத் தவறாகவே அணுகினார்கள். ‘ஆண்கள்’ தான் அப்படியென்றால் அவர்கள் மனைவியும் அப்படித்தான். என்னை அவர்கள் கணவர்களோடு தொடர்புபடுத்தி பேசுவதில் ஒரு ஆத்மதிருப்தி போலும். ‘ஆண்களை’ மணம் முடித்து அவர்களுடன் பழகியதனால் பெண்களுக்கும் குணம் மாறிவிடுமோ? பன்றி கூட சேர்ந்த கன்றும்…

என்னைப் போன்ற பெண்களையும், கணவனை இழந்த பெண்களையும் ஒரு காமப் பொருளாகவே பார்க்கிறார்கள்!

ஆண்கள் என்றாலே அறுவறுப்பு. நினைக்கும்போதே, ச்சே வாந்தி வருகிறது.

ஆனால் அவன் மட்டும் விசித்திரமாக இருக்கிறானே எப்படி! அவன் தாயின் கருவிலிருக்கும் போதே அவன் தந்தை இறந்துவிட்டாராம். முழுக்க முழுக்க அன்னையிடம், ஒரு ‘பெண்’ணிடம் வளர்ந்ததால் தானோ!

இடம் கிடைத்தால் இடிக்கின்ற ஆண்களின் மத்தியில் அவன் பார்வை கூட என் மேல் தவறாக இடித்தது கிடையாது. அதனாலும் தான் நான் அவனைக் காதலித்தேன்!

தாயாய் இருந்து அவன் தாயைப் பார்த்துக்கொள்கிறான். இதற்கு மேல் என்ன வேண்டும் நான் அவனைக் காதலிக்காமல் இருப்பதற்கு?

‘ஆண்கள்’ என்னிடம் தவறாக நடந்து கொள்வதை அவனிடம் கூறும்போது, அவனால் அதைத் தட்டிக் கேட்க இயலாவிட்டாலும் அவன் கூறும் ஆறுதல் வார்த்தை இருகின்றதே! அது போதும் எனக்கு! அது போதும் ஒரு பெண்ணுக்கு! எங்கிருந்து இதையெல்லாம் கற்றுக் கொண்டான்!

எனக்கு அவனைப் பிடித்திருப்பது போல் அவனுக்கும் என்னைப் பிடித்திருக்குமா? என் எல்லா உணர்வுகளையும் புரிந்து கொண்ட அவன் என் காதலையும் புரிந்து கொண்டிருப்பானா?

நான் என் காதலை அவனிடம் சொன்னதில்லை. ஒருவேளை அவன் என்னைக் காதலிக்கவில்லையெனில் எவ்வளவு மனம் நொந்து போவான். ஒருவேளை அவனும் என்னைக் காதலித்தால்? என் காதலைச் சொல்லித்தான் பார்க்கலாமோ? இல்லை, அவன் என்னைக் காதலித்தால் பரவாயில்லை, அப்படி இல்லையென்றால்!

அவனும் என்னைக் காதலிப்பானானால் அவனே என்னிடம் சொல்லட்டும். இந்தச் சமூகத்தில் ஆண்கள் தானே எதையும் தொடங்க வேண்டும். அவர்கள் பின்னால் தானே பெண்கள்!

அவன் மட்டும் சரியென்றால் போதும். வேறெதுவும் எனக்குத் தேவையில்லை. என் அப்பனைப் பற்றியும் எனக்கு கவலையில்லை, இந்த சமூகத்தைப் பற்றியும் எனக்கு கவலையில்லை.

ஆனால்…

அவனது கல்லூரிப் படிப்பு முடிகின்ற நிலையில் அவனுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டர்களாம். இப்போதே பார்க்க ஆரம்பித்தால் தான் இன்னும் ஒரு வருடத்தில் அவனுக்குத் திருமணம் செய்ய சரியாக இருக்குமாம். முகத்தில் எந்த பாவனையும் இல்லாமல் என்னிடம் கூறினான்.

ஒருவேளை நான் இப்போதாவது என் காதலை அவனிடம் சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்தானோ? என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவன் அவ்வாறு எதிர்பார்க்கவில்லையென்றால்?

நான் பார்த்து சரியென்று சொன்ன பின் தான் அந்த பெண்ணை நீ திருமணம் செய்ய வேண்டும் என்றேன்.

உயிரில்லாத ஒரு சிரிப்பைச் சிரித்தான்.

அதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை!

என் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்த ஒற்றை தீபம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது… 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்று மாலை நான்கு மணிக்கு மாப்பிள்ளைப் பார்க்க வருவதாக பெண் வீட்டில் சொல்லியிருந்ததால், மாப்பிள்ளை வீட்டில் 'தட புட' லாக ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். இந்த வரன் நிச்சயம் முடிந்துவிடும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஜாதகமெல்லாம் பார்த்தாகிவிட்டது, எட்டு பொருத்தம். இது இரண்டாவது வரன், ...
மேலும் கதையை படிக்க...
இருவரும் நடைபாதை ஓரத்தில் பொடிநடையாக ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது உடையும் இன்ன பிற அணிகலன்கலுமே, அவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் என்றும் சொல்லியது. மேலும் அவர்கள் சுமக்கும் குடும்ப பாரங்களை அவர்களது முகம் ...
மேலும் கதையை படிக்க...
இன்று இரவு சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மீண்டும் இரயிலில் பயணம் செய்யப்போவதை நினைத்து மனம் புழுங்கிக்கொண்டிருந்தார் செல்வம். இதற்கு இவரது முந்தைய கசப்பான அனுபவம் தான் காரணம். சாதாரணமாக நாம் அனைவரும் தொலை தூரப் பயணம் என்றாலே, பேருந்தை விட இரயில் பயணத்தையே தேர்வு ...
மேலும் கதையை படிக்க...
ப்ரோடீன்ஸ் பிராய்லர் கடை... அவரது மகன் வைத்த பெயர் அது. கோழிகளும், கோழிகளின் தோல் உறிக்கும் இயந்திரமும் இருக்கும் ஒரு சிறிய அறையின் முன்னால் பனை ஓலையால் கூரை வேயப்பட்டிருக்கும். அந்த கூரையில் தோல் உரிக்கப்பட்ட கோழிகள் தொங்கியவாறு இருக்கும். கோழியை வெட்டுவதற்கு ...
மேலும் கதையை படிக்க...
ஸ்மைல் ப்ளீஸ்…! சிரிப்பிற்கு கியாரண்டி…!
கேளிக்கை…
இரயில் பயணம்
பக்… பக்… பக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)