காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 101 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருப்பேன். மற்றப்படி எனக்கு நேரம் போவதே பெரும்பாடாகிப் போய்விடும். 

இன்ரன்சிப் எப்ப வரும். எங்காவது தூர இடத்திற்குப் போட்டுத் தந்தார்களானால் எவ்வளவு நல்லம். புதுஇடம், புதுச்சூழல், புதிய முகங்கள்…. பார்க்கிற சந்திக்கின்ற சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எண்ணுவேன். 

சொந்த வீடு, சொந்த ஊர், பழகிய முகங்கள், அம்மா, அப்பா சொந்தங்களை விட்டுப் பிரிந்து செல்வதா? என்று நினைக்கும் போது மனத்திற்குள் என்னையறியாமலே ஒரு நெருடல். நித்திரைக்குச் செல்லும்போது மனம் அலை பாய்ந்தபடி இருக்கும். விடிந்தும் படுக்கையை விட்டு எழாமல் இன்ரன்சிப் பற்றிய சிந்தனையில் மூழ்கிக் கிடக்கின்றேன். 

அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டு “என்ணெணய் அம்மா” என்றேன். 

“மகள் இந்தா கோப்பியை குடிச்சிட்டு முகத்தைக் கழுவிவிட்டுவா. உனக்குப் பிடித்த அரிசிமா புட்டும் முருங்கைக்காய் பிரட்டலும் செய்து வைச்சிருக்கிறன்.” என்றார். 

அம்மாவை விட்டிட்டுப் போனால் இப்படியார் வாய்க்கு ருசியாய் சாப்பாடு சமைத்துத் தருவார்கள். அதை நினைக்க என்மனம் வேதனைப்பட்டது. 

இப்பொழுது, ஏன் மனதைப்போட்டு அலட்டிக் கொள்ளவேண்டும் வரும்போது பார்த்துக்கொள்ளுவோம் என்று எண்ணி அன்றாட வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். 

இரவுச் சாப்பாடு முடிந்து, அப்பா அம்மா நான் மூவரும் கதைத்துக் கொண்டிருந்தோம். கதையோடை கதையாக அப்பா சொன்னார்…

“இன்ரன்சிப்புக்கு யாழ்ப்பாணத்துப் பிள்ளைகளை திருகோ ணமலை, மட்டக்களப்பு எண்டு அனுப்புவார்களாம். மட்டக்களப்பு, திருகோணமலைப் பிள்ளைகளை யாழ்ப்பாணத்திலை விடுவார்களாம் என்று கதைக்கிறார்கள்.” 

“அப்ப எங்கடை பிள்ளையும் திருக்கணாமலை, மட்டக் கிளப்பு எண்டு” அம்மா சொல்ல…. 

“அவளுக்கு ஊர் உலகம் தெரியவேணுமப்பா. மொன்டசூரி தொடக்கம் யூனிவசிற்றிவரை இங்கதானே இருந்து படிச்சவள். நாலுலகம் தெரியவேணுமல்லோ” என்றார் அப்பா. 

நான் யுனிவசிற்றியிலை படிக்கிற காலத்திலை என்னுடன் படித்த திருகோணமலை மட்டக்களப்புப் பிள்ளைகள் விடுமுறை காலங்களில் தங்கள் ஊர்களுக்கு வரும்படி கேட்டும், பொம்பிளைப் பிள்ளைகள் கண்டபடி திரியக்கூடாது என்று சொல்லி அம்மா போகவிடாமல் மறிச்சுப் போட்டார். 


இன்ரசன்சிப் திருகோணமலை ஆதார வைத்தியசாலை என்று கடிதம் கிடைத்தது. அம்மாவை ஒருவாறு ஆறுதல் படுத்தி விட்டு, அப்பாவுடன் பல சென்றிப்போயின்ட் எல்லாம் தாண்டி காங்கேசன் துறைக்குப் போய் மிகக் கஷ்டப்பட்டுத்தான் திருகோணமலைக்கு கப்பலில் வந்து சேர்ந்தோம். போர்ச் சூழ்நிலையில் பிரயாணங்கள் பெரும் கஷ்டமாக இருந்த காலப்பகுதி. கப்பலுக்குச் சீற் எடுப்பது பதிஞ்சுவைத்துத்தான் செய்ய வேணும். வைத்திய வேலைக்கு வருகின்ற காரணத்தால் அரச அதிபரின் சிபாரிசில் அப்பாவுக்கும் எனக்கும் சீற் கிடைத்துவிட்டது. ஒருவாறு திருகோணமலைக்கு வந்து சேர்ந்து அப்பாவின் பழைய நண்பர் ஒருவரின் வீட்டில் தங்குவதற்கு றூமும் எடுத்துவிட்டோம். 

அடுத்தநாள் காலையில் ஆஸ்பத்திரிக்குச் சென்று கடிதத்தைக் காட்டி என்னை அறிமுகப்படுத்தினேன். 

அங்கே… கொழும்பு தமிழ்த்தினவிழாவில் நான் சிறுகதை ஆக்கத்திற்கு முதல்பரிசு தங்கப்பதக்கம் பெற்றேன். அதே விழாவில் கவிதை ஆக்கத்திற்கு முதல்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவரும் தன் தாயுடன் வந்திருந்தார். அவரும் இன்ரன்சிப்புக்கு கொழும்பிலிருந்து வந்துள்ளதைத் தெரிந்து கொண்டு கதைத்தேன். இரண்டாம் முறையாக இருவரும் ஒரு இடத்தில் சந்திப்போம் என்று எதிர்பார்க்கவில்லை என்றேன். அவரும் சிரித்தபடி ஆம் என்று தலையாட்டினார். சிரிக்கும் போது அவருடைய தெத்திப்பல்லு மிக அழகாகக் காட்சி தந்தது. 

சற்றுத் தூரத்தில் என் அப்பாவும் முகுந்தனின் அம்மாவும் சிரித்துக் கதைத்தபடி இருந்தார்கள். அதைப் பார்க்க எனக்குச்சற்று வியப்பாகத்தான் இருந்தது. 

முகுந்தன் சொன்னான்.. “அம்மா கொழும்பில் நடைபெற்ற தமிழ் தினவிழாவில் உங்களைக் கண்டு கதைத்த பிற்பாடு என்னிடம் இரகசியமாகச் சொன்னவ… உங்கடை அப்பாவும், என்ரை அம்மாவும் படிக்கிற காலத்திலை லவ்வாம். ஏதோ சந்தற்ப சூழ்நிலையாலை கல்யாணம் செய்யமுடியாமல் போய்விட்டதாம்” என்று சொல்லி முடிக்க, அப்பா என்னிடம் வந்து “இஞ்சை கப்பலுக்கு நிண்டு சுணங்கேலாது நான் கொழும்புக்குப்போய் பிளேனில் யாழ்ப்பாணம் போறன்” என்றார். 

அப்பாவும் முகுந்தனின் அம்மாவும் எங்கள் இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டார்கள். 

நாங்கள் இருவரும் எம்.எஸ்சின் அறைக்குள் சென்றோம். இருவருக்கும் ஒரே வாட்டில் வி.பிக்குக் கீழ் வேலை என்ற தெரிந்து கொண்டோம். அங்கு நிற்கும்போது இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் என்று கொண்டுவருவதும், எடுத்துச் செல்வதுமாக இருந்தார்கள். டாக்டர்கள், தாதிமார் மற்றும் உதவியாளர்கள் ஓடித்திரிந்து தங்கள் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்கள். பொலிஸ், ஆமி, நேவி பலரையும் காணக்கூடியதாக இருந்தது. 

அன்று மாலை வேலை முடிந்து கால்நடையாக இருவரும் தங்கியிருக்கும் இடங்களுக்குப் புறப்பட்டோம். கடற்கரை தெரிந்தது. சற்று இருந்துவிட்டு செல்வோமா? என்று முகுந்தன் கேட்க, சற்றுத் தூரத்தில் சென்று ஆட்கள் குறைவான இடத்தில் அமர்ந்து கொள்கின்றோம். எனக்கு எங்கிருந்துதான் இந்தத் துணிவு வந்ததோ தெரியவில்லை. ஆறு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் தமிழ்த்தின விழாவில் சந்தித்த நாங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று சந்தித்திருக்கின்றோம். அதற்கிடையில் இத்தகைய நெருக்கமா? எடுத்த எடுப்பிலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோமா? பல கேள்விகள் என் மனத்தில் வந்து ஊசலாடிக் சென்று விட்டன. 

“என்ன கவிதா பலமாக யோசிக்கின்றீர்” என்று முகுந்தன் என் சிந்தனையைக் கலைத்தார். 

“கவிதா உங்களிடம் ஒரு விடயத்தை இன்று சொல்லியே ஆக வேண்டும். தமிழ்தினவிழாவில் உங்களை என் அம்மா கண்ட பிற்பாடு என்னிடம் உங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டே இருப்பார். தானும் உங்க அப்பாவும் காதலித்து கல்யாணம் செய்யாமல் போனது அம்மாவைப் பெரிதும் பாதித்துவிட்டது என்றுதான் நினைக்கின்றேன். அதற்குப் பிராயச்சித்தமாக நான் உங்களைத்தான் கல்யாணம் செய்ய வேண்டு மென்று அடிக்கடி சொல்லி என் மனத்திலும் உன் ஆசையை வளர்த்து விட்டிட்டார். என் அம்மாவின் பெயரை உனக்கும் உங்கள் அப்பாவின் பெயரை எனக்கும் வைத்தலிருந்து தெரியவில்லையா அவர்களின் காதலின் ஆழத்தை” 

என்று முகுந்தன் கூறிய வார்த்தைகள் என் மனதையும் தொட்டுவிட்டது. இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் கொஞ்சநேரம் மௌனமாக இருந்துவிட்டு நாங்கள் போவமா? என்று சொல்லிக் கொண்டு எழுந்தேன். 

“நான் இப்படிச் சொன்னது பிழையா கவிதா. நீங்கள் வேறுயாரையும் விரும்பி இருக்கின்றீர்களா?” 

” முகுந்தன் அப்படி ஒன்றுமே இல்லை. பெரியவங்களாகப் பார்த்து முடிவு செய்தால் எனக்கு ஒருவித ஆட்சேபனையும் இல்லை என்றேன்” அவன் முகத்தில் ஒரு புன்னகையுடனான மகிழ்ச்சியை அவதானித்தேன். 


போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சேமநலன்களைக் கவனிப்பதற்காக திருகோணமலைக்கு வந்த பாகிஸ்தான் நாட்டு டாக்டர்களுடன் பணியாற்றுவதற்காக எங்கள் இருவரையும் மூதூருக்குப் போகச் சொன்னார்கள். எங்களுக்கு புதுஇடம் அத்துடன் போர்பயம் என்ன செய்வது. வெளிநாடுகளிலிருந்து வந்து கஷ்டப் பிரதேசங்களில் அவர்கள் கடமையாற்றும் போது, நாங்கள் எமது சொந்த நாட்டில் சேவை செய்ய ஏன் தயங்கவேண்டும் என்று எண்ணி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டோம். 

அடுத்தநாள் காலை, முதல் லோஞ்சில் மூதூர் செல்ல ஏற்பாடு. இரவு அம்மாவுக்கு போன்பண்ணி விடயத்தைச் சொன்னேன் “அங்கைதான் அடிக்கடி பிரச்சனை வருகிற இடமென்று பேப்பரிலை படிக்கிறன். நீ என்னெண்டு அங்கை தனியாய் போய்…” என்று அம்மா கவலைப்பட்டுச் சொல்ல… நான் சொன்னேன் வெளிநாட்டு டாக்டர்களுடன் இங்க இன்ரன்சிப்புக்கு வந்த எல்லோரும்தான் போறம் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு போனை வைத்துவிட்டேன். எங்களுடன் ஏழுபேர் காலையில் மருந்துப் பொருட்களுடன் திருமலை யெற்றியைச் சென்றடைந்தோம். அங்கு நாங்கள் கொண்டு போன சமான்களையெல்லாம் ஆமிக்காரர் செக் பண்ணினார்கள். என்னைப் பார்த்து இரண்டு ஆமிக்காரர் ஏதோ சிங்களத்தில் கதைத்துவிட்டு ஏதோ ‘யாப்பணம் என்று கேட்டார்கள். முகுந்தன் வந்து அவர்களுடன் சிங்களத்தில் கதைத்தார். பின்பு எல்லோரையும் லோஞ்சில் ஏறவிட்டார்கள். லோஞ் மூதூர் நோக்கிப் புறப்பட்டது. 

கடல் கொந்தளிப்பாக இருந்தபடியால் லோஞ் ஆடத்தொடங்கி விட்டது. அதனால் எனக்குப் பயம் ஏற்பட்டுவிட்டது. முகுந்தன் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார். கொஞ்சத்தூரம் போன பிறகு கடல் சாந்தமாகவே இருந்தது. கடலின் அழகையும் இடைக்கிடையே காணப்படும் சிறிய குன்றுகளின் அழகையும் சூரியனின் வருகையால் வானம் வெளித்திருந்த அழகையும் இரசித்தபடி ஒன்றரை மணித்தியாலப் பிரயாணத்தின் பின் மூதூர் யெற்றியைச் சென்றடைந்தோம். அங்கும் ஆமிக்காரர்கள் லோஞ்சில் வந்தவர்களுடைய சாமான்களைச் செக்பண்ணிக் கொண்டு நிற்கின்றார்கள். அந்தநேரத்தில் ஐ.சி.ஆர்.சி. வான் இரண்டு வந்து நின்றது. அதில் வந்தவர்கள் இறங்கி வந்து ஆமிக்கார பெரியவனுடன் ஏதோ கதைத்தார்கள். அவர்கள் எங்கள் சமான்களைச் செக் பண்ணாமல் எங்களைப் போக அனுமதித்தார்கள். நாங்கள் மூதூர் வைத்தியசாலையில் போய்ச் சேர்ந்தோம். அங்கு நோயாளிகள், காயப்பட்டவர்கள், வயோதிபர்கள், குழந்தைகள் என்று ஏகப்பட்ட கூட்டம். இரண்டு டாக்டர்கள் மட்டுமே இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். முகுந்தன் சொன்னார் “இப்படியான இடத்தில் சேவை செய்வதுதான் உண்மையான சேவை” அவருடைய நல்ல மனத்தை என்னால் அப்பொழுது உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. சில நாட்களில் என்னைப்போய் படுக்கச்சொல்லிவிட்டு இரவு முழுவதும் நோய்வாய்ப்பட்டு வருபவர்களுக்கு முதலுதவிச் சிகிச்சை செய்வதில் ஈடுபட்டிருப்பார். எல்லோருடனும் அன்பாகப் பழகுவார். வந்த சில நாட்களிலேயே எல்லோருடைய அன்பையும் பெற்றுவிட்டார். 


இரண்டு மாதம் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மாமாவின் மகன் சேயோன் இலண்டனிலிருந்து வந்திருப்பதாகவும், அவருக்கும் எனக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும் வீட்டில் தெரிந்து கொண்டேன். என்மனம் ஏனோ ஒரு நிலையில் இருக்கவில்லை. அப்பாவின் நிலை எப்படியிருக்கும் என்று அறிவதற்குப் பெரும் ஆவலாக இருந்தேன். 

அப்பாவிடம் சென்றேன். என் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அப்பா புரிந்து கொண்டுவிட்டார். சற்று மெளமாக இருந்துவிட்டு…… 

“மகள் உனக்கு நல்லபடித்த மாப்பிள்ளை சொந்தத்தில் கிடைத்திருப்பது நாங்கள் செய்த புண்ணியம். நீ தனிப்பிள்ளை தெரியாத இடத்தில் கல்யாணம் கட்டினால் நீ தனிச்சுப் போவாய். ஏதாவது கஷ்டம் துன்பம் வந்தாலும் சொல்லி ஆறுவதற்குக் கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள். காதல் செய்யும்போது பரவசத்தைக் கொடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் அது வாழ்க்கையாக அமையும் போது எத்தனை பேருக்குச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. காலப்போக்கில் அது ஒரு போலி வாழ்க்கையாகவே அமைந்து விடுவதுமுண்டு. இது நான் கண்ட அனுபவம். அம்மாவின் விருப்பப்படி உன் அத்தானைத் திருமணம் செய்வது மிகவும் சிறந்தது. அதுதான் என் பரிபூரணமான விருப்பமும்” என்று சொன்னார்.

எனக்கு முகுந்தனை நினைக்க… அவன் அம்மாவின் ஆசைகளை நினைக்க மனத்தில் என்னையறியாமல் ஒரு வேதனை ஏற்பட்டது உண்மைதான். 


மாமன் மகன் சேயோனை திருமணம் செய்து இலண்டனுக்குச் சென்றுவிட்டேன். இரண்டு பிள்ளைகள். பிள்ளைப்பெத்துப் பார்க்க அம்மாவை வரச்சொல்லிக் கூப்பிட்டும் அம்மா அப்பாவை விட்டுவிட்டு வரமாட்டன் என்று சொல்லிவிட்டார். 

இலண்டனுக்குச் சென்று ஏழு வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. ஒருநாள் திடீர் என்று அம்மாவின் ரெலிபோன் “அப்பாவுக்குச் சரியான நெஞ்சு வருத்தம். உடனும் பைப்பாஸ் ஒப்பறேசன் செய்யவேணுமாம். எனக்குப் பயமாய்கிடக்கு உடனே ஓடிவா பிள்ளை”. அத்தானுக்கு விடயத்தைத் தெரிவித்து இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து, கொழும்பை வந்தடைந்தோம். நவலோகா கொஸ்பிற்றலில்தான் அப்பாவைச் சேர்த்திருந்தார்கள். அம்மா எங்களைக் கண்டவுடன் அழத் தொடங்கிவிட்டார். அவவுக்கு ஆறுதல் கூறினேன். அவ பேரப்பிள்ளைகளைத் தூக்கி கொஞ்சினார். அப்பா நித்திரையாக இருந்தார். 

அங்கு நினற அத்தானின் மச்சான் சொன்னார் “இந்த டாக்டர்தானம் இட்ப இலங்கையில் பிரபல்யமானவராம். அவரிடம் ஒப்பறேசன் செய்வதற்கு பலர் மாதக்கணக்கில் காத்திருப்பதாகவும் உங்கடை அப்பாவைப் பார்த்தவுடன் நாளைக்கு என்று திகதி குறித்துவிட்டார்”


ஒப்பறேசன் முடித்துக்கொண்டு டாக்டர் வெளியில் வந்தார். முகுந்தன் நீங்களா? என்னையறியாமல் கத்திவிட்டேன். “ஒப்பறேசன் சக்சஸ்” நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்” என்று சொல்விட்டு தன் அறைக்குச் சென்றார். நானும் பின் தொடர்ந்து அவர் அறைக்குச் சென்றேன். ‘வாங்க உட்காருங்க என்று மரியாதையுடன் சொன்னார். அப்பாவுக்கு இரண்டு இடத்திலை புளொக் இருந்திருக்கு அதனால்தான் உடனும் ஒப்பறேசன் பண்ணினேன். என் அம்மாவை கவர்ந்தவரல்லவா? எனக்கும் கடமை இருக்குத்தானே அதைத்தான் செய்தேன்” 

“மிக்க நன்றி முகுந்தன். உங்கள் உதவியை என்றுமே மறக்கமுடியாது” என்றேன். 

“தாங்ஸ் இருக்கட்டும் நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்” 

“எனக்கென்ன நல்ல கணவர் இரண்டு பிள்கைள் லண்டன் வாழ்க்கை ஏதோ ஓடிக்கொண்டிருக்கின்றது” என்றேன். 

“நீங்கள் ஒரு டாக்டர் அங்கு வேலை செய்ய வில்லையா?” 

“எனக்கும் வேலைக்குப் போக விருப்பமில்லாதபடியால் வீட்டில் இருக்கிறேன்” என்றேன். 

“அது இருக்கட்டும் உங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்” 

“என்னைப்பற்றி உண்மையாகவே தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?” என்று புதிர் போட்டார். நானும் ஆவலில் “சொல்லுங்களேன்” என்றேன். 

“உங்கள் அப்பா அம்மாவை ஏமாற்றியதால் அவர் மனத்தால் பாதிக்கப்பட்டே இருந்திருக்கின்றார். அச் சந்தர்ப்பத்தில் என் அப்பாவைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அந்த வாழ்க்கை சந்தோஷத்தைக் கொடுத்ததோ என்னவோ நான் பிறந்தேன். நான் பிறந்து இரண்டு வருடத்திற்குப் பின் அப்பா வேறு ஒரு பெண்ணை மணந்துகொண்டு நோர்வேக்குப் போய் அங்கேயே இருந்துவிட்டார். அம்மா அதுபற்றி எதுவித கவலையும் படவில்லையாம். அம்மா ஆசிரியராக இருந்தபடியால் என்னை றோயல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தார். பின்பு கொழும்பு பல்கலைக் கழத்தில் கல்விகற்று மருத்துவத்துறையை முடித்துக் கொண்டு வெளியேறினேன்” 

“ஒருநாள் தான் வைத்திருந்த அல்பத்தைக் காட்டி உங்களைப் பற்றி சொன்னார். அம்மாவின் அல்பத்தில் உன் அப்பாவின் இருபத்தேழு படங்கள் இருந்தன. அவ்வளவுதூரம் என் அம்மா உன் அப்பாவை அளவுக்கதிகம் நேசித்திருந்தார் என்பதைப் புரிந்துகொண்டேன்” என்று கூறிய முகுந்தன் தொடர்ந்தும்… 

“திருகோணமலை ஆஸ்பத்திரியில் முதல் நாங்கள் இருவரும் இன்ரன்சிப்புக்கு வந்தபோது என் அம்மாவும் உங்கள் அப்பாவும் எங்கள் இருவருடைய திருமணத்தைப் பற்றித்தான் பேசியதாகவும், உங்கள் அப்பாவும் சம்மதம் தெரிவித்தாகவும் அம்மா சொல்லிச் சந்தோஷப்பட்டார்” 

“ஐ ஆம் வெறி சொறி முகுந்தன்”. 

”உங்கள் அப்பா என் அம்மாவை ஏமாற்றிய மாதிரி நீங்களும் என்னை ஏமாற்றிப்போட்டு வேறு திருமணம் செய்து கொண்டுவிட்டீர்கள். இதனால் பெரிதும் மனக்கவலை அடைந்திருந்த அம்மா ஒருநாள் திடீரென்று மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.” 

“தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்”. 

“அப்பா நோர்வேக்கு வரும்படி கடிதம் எழுதியிருந்தார். நான் அங்குபோக விரும்பவில்லை. ஸ்ருடண்ட் விசாவில் இலண்டனுக்குச் சென்று அங்கு பாட்ரயிம் வேலை பார்த்து எப்.ஆர்.சி.எஸ் முடித்துக் கொண்டு திரும்பவும் நம் நாட்டுக்கு வந்து வேலை பார்க்கின்றேன்.” 

“ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள்தான் என் குடும்பத்தவர்கள்” 

“நான் அதைக் கேட்கவில்லை உங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றிக் கேட்டேன்” என்றேன். 

“நான் திருமணம் செய்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டன” 

“யார் அவர்கள்? எங்கு இருக்கின்றார்கள்?” என்று கேட்டேன். 

“இவருடன் தான் இதயத்தால் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்….” என்று சொல்லி தன் பேசை எடுத்து விரித்துக்காட்டினார். 

அது என்படம். என் இதயநாடிகள் உறைந்துவிட்டன. என் நிலையை ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு… 

”உங்களுக்கு என்ன பைத்தியாமா முகுந்தன்?” என்றேன். 

“கவிதா! நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கு அம்மா கற்றுத்தந்த பாடம். உங்கள் அப்பாவையே நினைத்துக் கொண்டு காலம் எல்லாம் வாழ்ந்து மரணத்தையே தழுவிக் கொண்டார். அவர் உண்மையான காதலுக்காவே வாழ்ந்திருக்கின்றார்” 

எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. தொண்டையை ஏதோ இறுக்குவது மாதிரியான ஒரு நிலை சற்றுநேரம் உத்துப்பார்த்துவிட்டு முகுந்தன் சொன்னார்…. 

“கவிதா! என்னைப் பொறுத்தவளவில் காதல் புனிதமானது. அது ஒருமுறைதான் வரும். இது என் அம்மாவிடமிருந்து நான் பெற்ற பாடம். இதை உயிருள்ள வரை எந்தச் சக்தியாலும் அழித்துவிடமுடியாது!” என்று முகுந்தன் சொல்ல என் கண்கள் பனித்து விட்டன. 

அப்பொழுது என் கணவர் என்னை வந்த அழைக்க, ஒன்றுமே பேசமுடியாமல் முகுந்தனின் அறையை விட்டு வெளியே போகின்றேன்.

(இரண்டாம் பரிசுச் சிறுகதை) 

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இணுவில் கிராமத்தில் 1978ஆம் ஆண்டு பிறந்த செல்வி மாதுமை சிவசுப்பிரமணியம் தனது 14வது வயது தொடக்கம் எழுதத் தொடங்கினார். 1993 தொடக்கம் 1997 வரை இருபத்துமூன்று சிறுகதைகளைப் பாடசாலையில் படிக்கும் காலத்தில் எழுதினார். அத்தனை கதைகளும் பரிசு பெற்றவை. 1993 ஆண்டு அகில இலங்கைத் தமிழ்த் தினப்போட்டிவரை சென்று சிறுகதைக்காக இரண்டாவது பரிசு பெற்றார். மூன்று தடவைகள் அகில இலங்கைப் போட்டி வரை சென்று பரிசில்கள் பெற்றார். 1997ல் அகில இலங்கைத் தமிழ்த் தினப்போட்டியில் முதற்பரிசுக்கான தங்கப்பதக்கத்தைப் பெற்றார். திருகோணமலை மாவட்ட சாகித்திய மண்டலம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றார். இவர் 1993 தொடக்கம் 1997 வரை எழுதிப் பரிசு பெற்ற 15 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு “தூரத்து கோடை இடிகள்” என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சாஹித்ய குழு நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசும், பேராதனைப்பல்கலைக்கழக சாஹித்ய மண்டலம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசும், விபவி கலாசார மையம் அகில இலங்கை மட்டத்தில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிகம் பெற்றுள்ளார்.

– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *