ஒளி
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கார்த்திகைத் திருநாள். ஊரே ஒளி மயமாய்த் திகழ்ந்து கொண்டிருந்தது. இல்லங்கள்தோறும் ஆண்ட வன் சரவிளக்குகளாகக் கொலுவிருந்து தீபச்சுடராகப் பிர: காசித்துக்கொண் டிருந்தான். ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் மலர்ந்த முகத்தோடு மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
சுந்தரமூர்த்தியின் பங்களா வாசலில் மட்டும் ஓர்.அசா தாரணச் சூழ்நிலை நிலவியது. வாசல் வராந்தாவில் சுந்தர மூர்த்தியும் இன்னும் சிலரும் ஒரு மங்கள் நிகழ்ச்சியை எதிர்பார்க்கும் ஆவலில் பங்களாவிற்குள் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
நர்ஸ் ஒருத்தி அவ்வப்போது வெளியே வருவதும், அவர் களுக்கெல்லாம் உதட்டினால் சமிக்ஞை காட்டுவதும், மீண்டும் உள்ளே செல்வதுமாக இருந்தாள்.
லேடி டாக்டரும், நர்ஸும் வந்து இரண்டு மணி நேரமாகிறதே; இன்னும் ஒன்றும் தெரியவில்லையே என்ற கவலையில் அமைதி இழந்தவராய்க் காணப்பட்டார் சுந்தர மூர்த்தி.
மணி ஏழு இருக்கும். அந்த ஆங்கிலோ இந்திய லேடி டாக்டர் புன்னகை பூத்த முகத்துடன் வெளியே வந்தாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை எதிர் பார்த்து எல்லாரும் அவள் முகத்தையே பார்த்துக்கொண் டிருந்தார்கள்.
“மேல் பேபி! பியூடிபுல் சைல்ட்! கண்ணும் நோஸும் அளகாயிருக்குது!” என்று தனக்குத் தெரிந்த கொச்சைத் தமிழில் கூறினாள் அவள்.
சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளுக்குள் குழந்தையின் ‘முதல் முழக்கம்’ சுநாதமாய் ஒலிக்கத் தொடங்கியது.
“கங்ராஜுலேஷன்ஸ், மிஸ்டர் சுந்தரம்!” என்று சுந்தரமூர்த்திக்குத் தெரிந்தவர்கள் அவருடைய கையைக் குலுக்கி, தங்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொண் டார்கள்.
அது ஆண் குழந்தையாகத்தான் பிறக்கும் என்று எனக்கு அப்போதே தெரியும் எனக் கூறி ஒரு சிலர் தங்களுடைய தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
சுந்தரமூர்த்தி அவர்கள் அனைவருக்கும் சர்க்கரையும், கற்கண்டும் வழங்கினார்.
குழந்தை பிறந்த பத்தாவது தினத்தன்று சுந்தரமூர்த்தியின் பங்களாவில் நாதஸ்வர இசை ‘ஜாம் ஜாம்’ என முழங்கிக் கொண்டிருந்தது.
அன்று தான் அவருடைய அருமைக் குழந்தையின் நாமகரண விழா!
ஆயர்பாடியில் கோபியர்கள் கோகுல கிருஷ்ணனைச் சூழ்ந்துகொண்டு கொஞ்சிக் குலவியதைப்போல், ஊர்ப் பெண்கள் அனைவரும் சுந்தரமூர்த்தியின் குழந்தையைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டார்கள்.
ஒருத்தி, குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டாள்.
இன்னொருத்தி, அதன் உச்சி முகர்ந்து உள்ளம் மகிழ்ந்தாள்.
மற்றொருத்தி, ‘குழந்தையின் ஜாடை அம்மாவை அப்படியே உரித்து வைத்திருக்கிறது!’ என்று புகழ்ந்து, குழந்தையின் அப்பாவைக் கண் ஜாடையாகப் பார்த்துப் புன்னகை பூத்தாள்.
வேறொருத்தி, அதற்கும் பதில் சவால் கொடுப்பதுபோல் ‘அம்மா ஜாடை ஒன்றுமில்லை; அப்பா ஜாடைதான்’ என்றாள்.
குழந்தையோ இவர்களுடைய அசட்டுப் பேச்சைக் கேட்கச் சகிக்காததைப்போல் முகத்தைச் சுளித்துக் கொண்டது.
பின்னர், வீட்டுக்குப் பெரியவர்கள் வந்து தாயையும் சேயையும் வைத்துத் திருஷ்டி சுற்றிப் போட்டார்கள். பிறகு குழந்தையைப் பூமணித் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடினார்கள். இந்தக் கோலாகலத்தையெல்லாம் கண்ட குழந்தை தன்னுடைய அழகிய செவ்விதழ் விரித்துச் சிரித்தது.
குழந்தையின் தாய் தேவகி, தன்னுடைய அன்புக் கணவரை அருகில் அழைத்து, “குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?” என்று கேட்டாள்.
“கார்த்திகைத் திருநாளன்று பிறந்திருக்கிறான். முருகக் கடவுளின் பெயர்களில் ஏதாவதொன்றை வைக்கலாம்” என்றார் சுந்தரமூர்த்தி.
“குழந்தை மூக்கும் முழியுமாக அழகா யிருக்கிறான். கண்ணன் என்றே வைக்கலாம்” என்று தன் ஆசையைத் தெரிவித்துக் கொண்டாள் தேவகி.
“குழந்தை நல்ல சிவப்பு! கண்களிலே அறிவின் ஒளி வீசுகிறது. முகத்திலே புத்திக்களை தாண்டவமாடுகிறது. ஆகையால் ரவி என்ற பெயர்தான் மிகவும் பொருத்தமா யிருக்கும்” என்றார் குழந்தையின் மாமா.
“தவமிருந்து பெற்ற குழந்தை. அது தீர்க்காயுசாய் வாழவேண்டும். ஆகையால் குழந்தைக்கு மூக்குக் குத்தி, குப்பையிலிட்டு, குப்புசாமி எனப் பெயர் வைக்கலாம்” என்றாள் குழந்தையின் அத்தை.
கடைசியில், ஒருவராலும் ஒரு முடிவுக்கும் வர முடியாமற்போகவே, கிருஷ்ணன் படத்துக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து, திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்தார்கள்.
கண்ணன் என்ற பெயரே வந்தது. அருமைத் தாயின் விருப்பமே ஆண்டவனின் விருப்பமாகவும் இருந்தது.
மாந்தளிர் போன்ற சிவந்த மேனி; ‘கொழு கொழு வென்ற உடலமைப்பு; குமிழ்க் கன்னங்கள்; சலனமிடும் விழிகள். நெற்றியிலே தவழ்ந்து விளையாடும் கரு கரு வென்ற மிருதுவான வெல்வெட் சுருட்டை மயிர்!குழந்தை யைக் காண்போர் இது தெய்வக் குழந்தையோ?’ என வியக்கும் அதிசயமான தோற்றம்.
குழந்தைக்கு ஓராண்டு பூர்த்தியாயிற்று. செல்வக் குடும்பத்தில் பிறந்த குழந்தை. அதுவும் தவமிருந்து பெற்ற ஒரே குழந்தை! ஆண்டு விழாவின் சிறப்புக்குச் சொல்லவா வேண்டும்?
அது தெய்வக் குழந்தைதான், சந்தேகமில்லை.விக்கிரகம் போன்ற வடிவத்தில் வீடு முழுவதும் தவழ்ந்து விளையாடு வான் கண்ணன். ஆனால் கதவிடுக்கில் கையை வைத்துச் சாத்திக்கொண்டு அழமாட்டான். தினம் தினம் பால முருகன் படத்தின் எதிரில் போய் உட்கார்ந்துகொண்டு அந்தப் படத்தையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண் டிருப்பான். ஆனால் அருகில் சுடர்விட்டு எரியும் குத்து விளக்கைத் தொட்டுக் கையைச் சுட்டுக்கொண்டு அழமாட் டான். இவ்வளவு புத்திசாலியான, அழகான குழந்தை அழக்கூடிய சமயங்கள் இரண்டே இரண்டுதான்.
அது பசி எடுக்கிறபோதும், இருட்டைக் காண்கிற போதும்தான். அது ஏனோ தெரியவில்லை; இருள் என்றால் மட்டும் அந்தக் குழந்தைக்குக் கட்டோடு பிடிக்கவில்லை.
மேலும் இரண்டு ஆண்டுகள் கடந்தன. குழந்தைக் கண்ணன் தவழும் நிலையிலிருந்து தத்தி நடக்கும் பருவத்தை அடைந்தான். மழலை மொழி மாறி அழகாகப் பேசவும் வந்துவிட்டது அவனுக்கு!
அவன் சின்னக் குழந்தைதான் ; ஆயினும் அந்தக் குழந் தையின் அறிவுக் கூர்மையோ சொல்லத் தரமன்று.
அம்மா! எப்போதும் வெளிச்சமாகவே இருக்க வேண்டும். இரவெல்லாம் தீபம் எரிந்தபடியே இருக்க வேண்டும் என்பான்.
வானத்திலே சுடர் வீசும் சந்திரனையும், நட்சத்திரங் களையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவான் அவன்.
“அம்மா, இன்றைக்கு ஏம்மா சந்திரனே வல்லே!”
“இன்றைக்கு அமாவாசையடா, கண்ணு ! அதனால் சந்திரன் வரமாட்டான்!” என்பாள் அவன் தாய்.
“அம்மா! இந்தக் கடவுள் அமாவாசைன்னு ஒன்றை ஏன்தான் படைச்சாரோ ?” என்று அலுத்துக் கொள்வான் கண்ணன்.
“குறையில்லாமல், குற்றமில்லாமல், களங்கமில்லாமல் இந்த உலகத்தில் எதுவுமே கிடையாதுடா என் செல்வமே!” என்பாள் தேவகி.
“அம்மா, அதோ தெரிகிறதே அது என்ன நட்சத்திரம்மா?”
“துருவ நட்சத்திரம்!”
“துருவன்னா யாரு?”
“அவன் ஒரு சின்னப் பையன். தபஸ் இருந்து நட்சத்திர மாக மாறிவிட்ட ஒரு தெய்வக் குழந்தை!”
”அம்மா! நானும் ஏம்மா துருவனாட்டமா தபஸ் பண்ணி நட்சத்திரமாகி ஆகாசத்திலே போய் ‘ஜம்’மென்று பிரகா சிக்கக் கூடாது? இந்த இருட்டைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலைம்மா. நான் தெய்வமா யிருந்தா சந்திரனைத் தேயவே விடமாட்டேன். எப்பவும் வெளிச்சமாவே வைத்திருப்பேன்.”
குழந்தையின் பேச்சைக் கேட்ட தாயின் கண்களில் பனித்திரையிட்டது.
அன்றொரு நாள் அமாவசை இரவு: கண்ணனுக்குத் தூக்கமே வரவில்லை.
“அம்மா, சினிமான்னா என்ன அம்மா?” என்று கேட்டான் அவன்.
சினிமாவைப் பற்றி விளக்கினாள் தேவகி.
“அம்மா, என்னை ஒரு நாள் சினிமாவுக்கு அழைச்சுண்டு போக மாட்டாயா?”
“ஆகட்டுமடா என் கண்மணியே!” என்றாள் தாய். தேவகியும் சுந்தரமூர்த்தியும் ஒரு நாள் கண்ணனைச் சினிமாவுக்கு அழைத்துச் சென்றார்கள்.. வெளிச்சமாயிருந்த கொட்டகையில் படம் ஆரம்பமாகுமுன் விளக்குகள் அணைக் கப்பட்டுச் சட்டென இருள் சூழ்ந்தது.
அந்த இருட்டைக் காண மிகவும் பயந்து நடுங்கினான் கண்ணன்
“அம்மா, இந்த இருட்டிலே சினிமா பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. எழுந்து வா, வீட்டுக்குப் போகலாம்” என்றான்.
கண்ணனுக்கு வயது நாலு ஆயிற்று. ஆயினும். புத்திசாலித்தனத்துக்கு வயது மதிப்பிட அவனுடைய முடியவில்லை.
காலையில் இருள் விலகி ஒளி பரவத் தொடங்குவதுதான் தாமதம். சின்னஞ்சிறு கண்ணன் தானாகவே படுக்கையை விட்டு எழுந்து விடுவான். எழுந்திருக்கும்போதே தன்னுடைய படுக்கையைச் சுருட்டிக் கொண்டு போய் அதை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பான். பிறகு குளிக்கும். அறைக்குச் சென்று பல் துலக்குவான். குளித்துவிட்டு, வேறு உடை மாற்றிக் கொள்வான். கையோடு பழைய உடை களைக் காண்டு போய் அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் போடுவான். பிறகு பீரோக் கண்ணாடியின் முன் னால் நின்றுகொண்டு தானாகவே தலைவாரிப் பொட்டிட்டுக் கொள்வான். அங்கிருந்து பூஜை அறைக்குள் சென்று தெய்வப் படங்களுக்கு முன்னால் நின்றவண்ணம் கண் மூடி, கரம் குவித்துக் கடவுளை வழிபடுவான்.
இந்த அதிசயக் குழந்தையின் புத்தியையும் பக்தியையும் கண்டு தாயும் தந்தையுமே வியப்படைந்து போனார்கள்.
மாயக்கண்ணனே தங்கள் வயிற்றில் மறுபிறப்பு எடுத்து வந்து விட்டானோ என எண்ணி மெய் சிலிர்த்தார்கள்.
கண்ணனுக்குக் காலிலே வெள்ளிச் சலங்கையும், இடுப் பிலே தங்க அரைஞாணும், கழுத்திலே சங்கிலியும் அணி வித்து அழகு பார்த்து அகமகிழ்ந்தார்கள். அவன் குதித்து ஓடும்போது வெள்ளிச் சதங்கையின் கிண்கிணி ஓசை கேட்டு அவர்கள் உள்ளம் பூரித்தார்கள்.
நாலு ஆண்டுகள் பூர்த்தியாயின. ஒரு நல்ல நாள்பார்த்து. மேளதாளத்துடன் குழந்தைக்கு அட்சராப்பியாசம் செய்து. வைத்தார் சுந்தரமூர்த்தி.
கண்ணன் தன்னுடைய தளிர்க்கரங்களில் பலகையை ஏந்திப் பள்ளிக்குச் சென்ற காட்சி ஒரு தனி அழகு பொருந்தி விளங்கிற்று.
அந்த அறிவுக் குழந்தை, அழகுக் குழந்தை பள்ளிக் கூடம் போகும்போதும், வரும்போதும், ஊரார் அவனை அள்ளி விழுங்கி விடுவதுபோல் அதிசயத்துடன் பார்த்தார்கள்.
மாதங்கள் சில கடந்தன. ஒருநாள் கண்ணன் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்தான். அன்று அவன் முகத்தில் வழக்கமாக உள்ள உற்சாகத்தைக் காணவில்லை. தோட்டத் துக்குச் சென்று கைகால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே வந்தவன் “அம்மா! எனக்குத் தலையை வலிக்கிறதம்மா?” என்றான்.
அந்த அதிர்ச்சியைத் தாங்காத தேவகி, “ஐயோ, என் குழந்தைக்கு என்ன வந்து விட்டது?” என்று துடிதுடித்துப் போனாள்.பரபரப்புடன் கணவனை அழைத்து டாக்டரைக் கூட்டி வரச் சொன்னாள்.
கண்ணனைப் பஞ்சணையில் படுக்க வைத்து அவன் தலையைத் தன் இரு கைகளாலும் அமுக்கிப் பிடித்தாள். அவன் உடம்பு இலேசாகச் சுட்டுக் கொண்டிருந்தது.
‘அம்மா, அம்மா’ என்று ஈன் சுரத்தில் முனகினான் கண்ணன்.
டாக்டர் வந்து கண்ணனைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, “குழந்தைக்குக் கடும் ஜுரம் அடிக்கிறது, இன் ஜெக்ஷன் கொடுத்துவிட்டுப் போகிறேன். நாளைக்கு மறு படியும் வந்து பார்த்த பிறகுதான் என்ன ஜுரம் என்று சொல்லமுடியும்” என்று கூறி, குழந்தையின் பொன்னான கையைப் புண்ணாக்கிவிட்டுச் சென்றார்.
ஊசியால் டாக்டர் தன்னைக் குத்தும்போதுகூட, கண்ணன் அழவேயில்லை. தலைவலியைப் பொறுப்பதுபோல் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டான்.
டாக்டர் தினம் தினம் வந்து ஊசி குத்திக் கொண்டிருந்தார். ஆனால் வாரம் ஒன்றாகியும் ஜுரம் குறைந்த பாடில்லை. ஊரிலுள்ள பெரிய பெரிய டாக்டர்களெல்லாம் வந்து பார்த்தார்கள். குழந்தை ஜுர வேகத்தில் அனலில் பட்ட இளந் துளிர்போல் துவண்டு சுருண்டு கட்டிலில் படுத்துக் கிடந்தான்.
“அம்மா!” என்று எப்பொழுதாவது ஒரு தடவை அழைத்து, “விளக்கு எரியறதாம்மா?’ என்று மட்டும் கேட்டுவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்வான்.
கண்ணனுடைய உடல் நிலை மேலும் மோசமாகிக் கொண்டே போயிற்று. தேவகியும் சுந்தரமூர்த்தியும் குழந்தை படும் துன்பம் தாங்காமல் துடித்துப் போனார்கள். அந்த வேதனையில் துரும்பாக இளைத்தும் விட்டார்கள்.
“தெய்வமே! உனக்கு நாங்கள் என்ன தீங்கு செய்தோம்? கண்ணன் நீ கொடுத்த பிச்சை! அவனை ஏன் இப்படி வதைக்கிறாய்? எங்கள் வயிற்றில் பிறக்கக்கூடிய குழந்தையா அவன்? அவன் ஒரு தெய்வப் பிறவி ! அவனுக்கு ஏன் இந்தக் கொடுமை? அவனுக்கு உயிர்ப் பிச்சை கொடு” என்று இரு வரும் தெய்வத்தைப் பிரார்த்தனை செய்துகொண்டார்கள்.
பெற்றோரின் பிரார்த்தனை வீண் போகவில்லை.தெய்வம் அவர்களுடைய இதயக் குமுறலுக்குச் செவி சாய்த்தது.
ஒரு மாதம் கழித்துக் கண்ணன் கண் திறந்தான். கொஞ்சம் கொஞ்சமாகப் பேசவும் தாடங்கினான். தேவகியும் சுந்தரமூர்த்தியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது?
“இன்னும் ஒரு மாதத்துக்கு அவன் எழுந்து நடமாடக் கூடாது அதிகம் பேசச்கூடாது.பள்ளிக்கூடம் போகக் கூடாது. பிரெயின் மெனன்ஜடிஸ் என்னும் கொடிய நோய் இவனைத் தாக்கியிருக்கிறது. இவன் உயிர் தப்பிப் பிழைத்ததே புனர் ஜன்மம்” என்று கூறிய டாக்டர், தேவகியையும் அவள் கணவனையும் தனியாக ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றார்.
“இனி உங்கள் கண்ணனுடைய உயிருக்கு ஓர் ஆபத்தும் இல்லை. ஆனால் அவனுக்குக் கண் பார்வை போய்விட்டது. இந்த நோய் அவன் உயிரைக் கொண்டு போவதற்குப் பதிலாக அவன் பார்வையைக் கொண்டு போய்விட்டது” என்று கூறினார்.
இந்தப் பேரதிர்ச்சியைத் தாங்கமுடியாத தேவகி அப்படியே மூர்ச்சையுற்றுக் கீழே சாய்ந்தாள். சுந்தர மூர்த்தி பிரமை பிடித்தவர்போல் சிலையாக ஸ்தம்பித்து நின்றார். ஆண்டவனுடைய சோதனையை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?
பார்வை இழந்துவிட்ட கண்ணன் தட்டுத் தடுமாறிய படியே வீட்டுக்குள் வளையவரத் தொடங்கினான். ஆனால் தனக்குக் கண்ணே தெரியவில்லை என்னும் செய்தியைத் தன் வாயால் சொல்லித் தாய் தந்தையாரைத் துன்பத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை அவன்.
‘பிறவி முதல் இருளையே விரும்பாத குழந்தை இனி என்றென்றும் நிரந்தரமான இருளிலேயே வாழவேண்டியதாகி விட்டதே’ என்று பெற்றோர்கள் கண்ணீர் வடித்தார்கள். ஆனால், அந்தக் குழந்தையோ தன்னைப்பற்றித் துளியும் வருத் தப்படவில்லை. எப்போதும்போல் அந்தக் குழந்தையின் முகத்தில் புன்னகை தவழ்ந்து விளையாடிக்கொண்டுதான் இருந்தது. இனி அவன் வாழ்வில் இருள் ஏது?
அருள் பொருந்திய நெஞ்சம் உடைய அக்குழந்தைக்கு இப்போது இருள் என்பதே தெரியவில்லை. இருளிலேயே ஒளியைக் காணும் தெய்வக் குழந்தையாகிவிட்டான் அவன்!
– திருக்குறள் கதைகள், மங்கள நூலகம், சென்னை.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 5, 2025
பார்வையிட்டோர்: 46