எளிய மனதோர் பேறுபெற்றோர்
கதையாசிரியர்: அல்போன்ஸ் மோசஸ்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 226

அந்தப் பங்கிற்கு புதிய பங்குதந்தை வந்து சுமார் ஐந்து மாதங்கள் உருண்டோடி விட்டன. அவர் பொறுப்பேற்றதிலிருந்து பங்கிலும் பங்கைச் சார்ந்த பள்ளியிலும் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. டிசம்பர் மாதம் பிறந்தது. இறைமகன் யேசு பிறப்பு விழாவைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டார். பாடற்குழுவினர் மட்டும் பாடி வந்த கிறிஸ்து பிறப்பு பாடல்களை அனைத்துப் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்து அனைவரும் ஒருங்கிணைந்து பாட முயற்சிகளை மேற்க்கொண்டார். கிறிஸ்மஸ் விழா குறித்த நேரத்தில் ஆரம்பமானது.
விழா ஆரம்பித்தவுடன் பள்ளிப் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து இறைவணக்கம் மிக நேர்த்தியாகப்; பாடி வந்திருந்த சிறப்பாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். பாடலுக்குப் பின்னர் ஏற்கனவே அறிவித்திருந்ததுபோல ஒவ்வொரு மாணவனும் ஒரு பரிசுப் பொருளை எடுத்து வந்து பக்கத்திலிருப்பவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தனர்.
இப்போது கிறிஸ்து பிறப்பு நிகழ்வை நினைவுகூறும் வகையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாக இருக்கின்றது என்ற அறிவிப்பின் பின்னர் மேடையிலிருந்த திரைச்சீலை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது திரை விலக விலக உள்ளே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்தும் பார்வைக்குத் தென்பட்டன. முதலில் அனைவரது கண்ணிலும் தென்பட்டது ஆடுகளும் மாடுகளும் தான். பின்னர் கொஞ்சம் தூரத்தில் இடையர்கள். அதன்பிறகு தூரத்தில் இருந்த இடத்திலேயே நடந்து வந்து கொண்டிருப்பது போன்ற பாவனையில் காணப்பட்ட மூன்று அரசர்கள். வளர்ப்புத் தந்தை சூசையப்பர், மேரிமாதா நடுவில் பாலன் இயேசு. இறைமகன் இயேசு பிறப்பு வரலாற்று நிகழ்வினைத் தத்ரூபமாக அமைத்திருந்தார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்த பள்ளி மாணவச் செல்வங்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு எழுந்து நின்று மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டனர். பெரும் கை தட்டல் வானைப் பிளந்தது. “டேய் நம்ப பஸ் டிரைவர்கள பார்றா. மூன்று அரசர்கள் போல எப்படி நடக்கிறாங்க பார்றா” என்றான் வில்லியம். டீ. அங்கப் பார்றி. நாமெல்லாம் கருப்பாயின்னு கூப்பிடுவோமே அந்த அக்கா. அதாண்டி அட்டன்டர் மாரியம்மா என்னமா மேக்கப் போட்டு மரியம்மாவாக அப்படியே அழகாக ஜொலிக்கிறாங்க பாரடி என்று சிலரும் பார்ரா பள்ளிக்கு மட்டம் போடுற பிள்ளைகள் எல்லாம் எப்படி இடையர்களாக காட்சி அளிக்கிறாங்க பார்ரா என்று ஒவ்வொரு பிள்ளைகளும் அவரவருக்குத் தெரிந்தவர்களை அடையாளம் கண்டு, பார்த்து, ரசித்து, மகிழ்ந்து ஆரவாரமிட்டனர்.
கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரு என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டதும் ஜோல்னா பையில் பரிசுப் பொருட்களுடன் வந்த காவலாளி நிக்கோலாஸ், நடனமாடிக் கொண்டே தன்னிடமிருந்த சாக்லெட்டை அழகான புன்சிரிப்புடன் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே வந்தார். கிறிஸ்மஸ் விழா இனிதே நிறைவுற்றது. பங்கு பெற்ற அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் அது ஒரு புது அனுபவமாக இருந்தது. எப்படியோ இருந்த நம்மை இப்படி சிறப்பா ஆக்கிட்டாரே இந்த சாமின்னு நேரே பங்குத் தந்தையிடம் சென்று தங்களது மனப்பூர்வமான நன்றியினை ஆனந்தக் கண்ணீரோடு சமர்ப்பித்தார்கள். சாமி இத்தனை நாள் பிள்ளைகளால் கருப்பாயின்னு கேவலமானப் பட்டம் சூட்டிக் கூப்பிட்ட என் மகளை இறைவனைப் பெற்ற அன்னை என்ற ஸ்தானத்தில் அழகாக உயர்த்தி, அழகு பார்த்த உங்களை, என்னால் என்றுமே மறக்க முடியாது சாமி என்று மாரியம்மாவின் அம்மா பங்குத் தந்தையின் காலில் விழுந்து வணங்கியது அனைவரையும் நெகிழ வைத்தது.
ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கவே இறைமகன் இயேசு மனிதனாக இந்தப் பூமியில் அவதரித்தார். அதைத்தான் நீங்கள் சிறப்பாகச் செய்து காட்டினீர்கள் என்றார் தந்தை. இருந்தபோதிலும் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டில் எங்களையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்த உங்கள் பொன்னான மனசிற்கு எப்படி நன்றி சொல்வதென்றேத் தெரியவில்லை என்று பங்கேற்பாளர்கள் அவரை வாழ்த்தினர். ஒவ்வொரு நடிகரையும் பாராட்டி தந்தை அவர்களுக்குப் பொன்னாடி போர்த்தி பரிசுகள் வழங்கினார். அனைவருக்கும் பள்ளி சார்பாக கிறிஸ்மஸ் கேக் வழங்கப்பட்டது.
இத்தனை ஆண்டுகளாக ஆடம்பர கிறிஸ்மஸாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டுதான் அர்த்தமுள்ள கிறிஸ்மஸாக இருக்குதுன்னு நிகழ்ச்சியைக் கண்டுகளித்தவர்கள் பேசிக் கொண்டே சென்றது காதில் தேனாக இனித்தது. நமது வாழ்க்கையிலும் ஆடம்பர கிறிஸ்மஸ் தவிர்த்து அர்த்தமுள்ள கிறிஸ்மஸை கொண்டாடுவோம்.
| நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |