உயிரோவியம்
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா, இந்தச் சித்திரம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா!” பதினெட்டு வயது நிரம்பிய ராஜு தன் தாயிடம் சிறு குழந்தையைப் போல் கொஞ்சிப் பேசினான். அவன் தாயார் அவன் எழுதிய அந்தச் சித்திரத்தையே இமை
கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தாள். ராஜுவின் கற்பனையில் உதித்த ஓர் உருவம் அது. வானவில்லின் வர்ணஜாலங்களை யெல்லாம் திரட்டிக் குழைத்து, தேவ கன்னியர்களின் வனப்பையெல்லாம் வடித்தெடுத்து உருவாக்கியிருந்தான் அந்த எழில் உருவத்தை.
“ராஜு! இத்தகைய அழகு வாய்ந்த பெண் ஒருத்தி இந்த உலகத்தில் உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருந்தால் அவளைத்தான் நான் உனக்கு மணம் முடித்து வைப்பேன்” என்றாள் அவன் தாய் பாகீரதி.
“அம்மா, இந்தக் கலியாணப் பேச்சை மட்டும் என் காதில் போடாதே. நான் ஒரு சிறந்த சித்திரக்காரனாக விளங்க வேண்டும். இதுதான் என்னுடைய வாழ்க்கையின் லட்சியம். நான் சென்னைக்குப் போய்ச் சித்திரக் கலை பயிலப் போகிறேன். இதற்குத் தாங்கள் தான் எப்படியாவது தந்தையின் சம்மதம் பெற்றுத் தரவேண்டும்” என்றான் ராஜு. தந்தையிடமிருந்து ஆக வேண்டிய எந்த ஒரு காரியத்தையும் தன் தாயின் மூலமாகச் சாதித்துக் கொள்வது தான் அவனுடைய வழக்கம்.
பாகீரதி தன் மகன் விரும்பியபடியே அவன் தந்தை மாசிலாமணியின் சம்மதம் பெற்று அவனைச் சென்னைக்கு அனுப்பி வைத்தாள்.
ராஜு சென்னையில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். சித்திரக் கலையில் தன் முழு கவனத்தையும் ஈடுபடுத்தினான். இரவு பகலாய்க் கண் விழித்து அந்தக் கலையைப் பயின்றான். எத்தனை எத்தனையோ சிருஷ்டிகள்! என்னென்னெவோ முகபாவங்கள்! உலகத்தின் ஆசாபா சங்களை யெல்லாம் பிரதிபலிக்கும் முகத் தோற்றங்கள்! உள்ளத்தின் உணர்ச்சிகளை யெல்லாம் எடுத்துக் காட்டும் உருவகங்கள்! சிருஷ்டிக் கடவுளே கண்டு வியக்கும் வண்ண ஓவியங்கள்!
ராஜுவின் புகழ் உச்சத்தை எட்டியது. புகழுடன் அவன் சித்திரங்களுக்கு நல்ல மதிப்பும் ஏற்பட்டது, யார் யாரோ அவன் சித்திரத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். வெறும் புகழினால் மட்டும் என்ன பயன்? புகழுடன் பணத்தையும் விரும்பினான் அவன். ஓய்வு ஒழிவு இன்றிச் சித்திரங்களை எழுதிக் குவித்தான். ஆயினும் அத்தனை வேலைகளுக்கிடையிலும் அவன் தன் தாயாருக்குக் கடிதம் எழுதுவதற்கு மட்டும் தவறவில்லை.
“அம்மா, நான் நந்திவனத்தைவிட்டு வந்து நாலு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தங்களைப் பார்க்க வேண்டுமென்று மிகவும் ஆவலாயிருக்கிறேன். ஆனால் எனக்கு இங்கு ஓய்வு என்பதே துளிக்கூட இல்லை.என் சித்திரங்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. நேற்றுக்கூட ஒரு ஜமீன்தாரின் படத்தை வரைந்து கொடுத்தேன். ஆயிரம் ரூபாய் கிடைத்தது. எனக்குக் கிடைத்துள்ள இவ் வளவு பெருமைக்கும் புகழுக்கும் தங்கள் அன்புதான். காரணம். அடுத்த வாரம் நந்திவனம் வரத் தீர் மானித் திருக்கிறேன்.
இப்படிக்கு,
ராஜு.
“அம்மா!” என்று ஆவலோடு அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ராஜு. உள்ளிருந்து விரைந்து வந்த அவன் தாயார், “வாடா ராஜு” என்று கனிந்த சொற்களால் அவனை எதிர்கொண்டழைத்தாள்.
“ஏன் இப்படி இளைத்துப் போய்விட்டாய்?” என்று கேட்டாள் பாகீரதி.
ஆனால் உண்மையில் ராஜு கேட்க வேண்டிய கேள்வி அல்லவா அது?
அவன் தாய் அடையாளமே தெரியாதபடி மாறிப் போயிருந்தாள். நாலு வருடங்களுக்கு முன்னால் அவ களுடைய களை பொருந்திய முகத்திலிருந்த ஆனந்தமெல்லாம் எங்கே? அந்தக் கவர்ச்சி மிக்க கண்களிலிருந்த ஒளியெல் லாம் எங்கே? முகத்திலே ஏன் இத்தனை வாட்டம்? நெற்றியிலே ஏன் இந்தச் சுருக்கம்? பார்வையில் ஏன் இத்தனை சோகம்?
“அம்மா, ஏன் இப்படி மெலிந்து விட்டீர்கள்? உங்களுக்கு என்ன குறை?” என்று பதறினான் ராஜு
பாகீரதி சிரமப்பட்டுத் தன் முகத்திலே மகிழ்ச்சியைத் தருவித்துக் கொண்டவளாய், “ஒன்றுமில்லை ராஜு” என்று மழுப்பினாள்.
“அம்மா, தாங்கள் எதையோ மறைக்கப் பார்க்கிறீர்கள். என்னிடம் உண்மையைச் சொல்ல மாட்டீர்களா…?”
“எனக்கு ஒரு குறையும் இல்லை ராஜு! உன்னிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?”
“அம்மா. நான் கலியாணம் செய்துகொள்ளாமல் இருப்பது தங்கள் மனக்குறைக்குக் காரணமாயிருந்தால் சொல்லுங்கள். நான் உடனே மணம் புரிந்துகொண்டு விடுகிறேன். நான் சித்திரம் பயிலுவதற்கு மணவாழ்க்கை இடையூறாக இருக்குமே என்பதற்காகவே இதுவரை கலியாணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் – இனி அந்தக் குறை தங்களுக்கு வேண்டாம்.”
மகனுடைய அன்பும் பாசமும் பாகீரதியின் நெஞ்சத்தை நெகிழ வைத்துவிட்டன. அவள் கண்களிலிருந்து கண்ணீர் கூட வந்து விட்டது.
“ராஜு! பசியோடு வந்திருப்பாய்; குளித்துவிட்டுச் சாப்பிட வா, எழுந்திரு” என்று பேச்சை மாற்றினாள் பாகீரதி.
“அப்பா எங்கே?”
“அவர் சென்னைக்குப் போயிருக்கிறார். இப்போதெல் லாம் அவர் கிராமத்திலேயே தங்குவதில்லை. புதிதாக சர்க்கரை மில் ஒன்று ஆரம்பிக்கப் போகிறாராம். அது சம்பந்தமாக அடிக்கடி பட்டணம் போய் விடுகிறார்”
‘அப்படியா? அடிக்கடி சென்னைக்கு வரும் அப்பா என்னை ஏன் ஒரு முறைகூட வந்து பார்ப்பதில்லை?’ என்று தனக்குள்ளாக எண்ணிக் கொண்டான் ராஜு
அவன் நந்திவனத்தில் நாலே தினங்கள்தான் தங்கியிருந்தான்; அதுவும் தாயாரின் ஆசைக்கிணங்கி. இல்லை யென்றால் மறுதினமே புறப்பட்டுப்போயிருப்பான்.
நந்திவனத்துக்குச் சென்று திரும்பியது முதல் அவன் உள்ளத்தில் நிம்மதியே இல்லாமற் போய்விட்டது. அவன் தாயின் அன்பு முகமும்,அதில் காணப்பட்ட இனம் தெரி யாத சோகமும் அவன் மனத்திரையில் ஓர் அழியா ஓவிய மாகப் பதிந்துவிட்டன. தாயின் சோகத்துக்குக் காரணம்? அதைத்தான் அவனால் ஊகிக்க முடியவில்லை.
களை பொருந்திய முகம் ; ஒளி வீசும் கண்கள் ; மகிழ்ச்சி பொங்கும் மலர்ந்த பார்வை!-இது நான்கு வருடங்களுக்கு முந்திய தன் அன்னையின் தோற்றம்! இப்போது? அந்தக் கண்களிலே ஏதோ ஒருவித ஏக்கம். முகத்திலே இனம் புரியாத ஒருவித சோகம்.
அந்த ஏக்கமும் சோகமும் கலந்த தன்னுடைய தாயின் முகத்தை ஒரு சித்திரமாகத் தீட்ட விரும்பினான் அவன். ஆனால் அது அத்தனை எளிதான காரியமா? அற்புதமாக வரைய வேண்டிய அபூர்வ சித்திரம் அல்லவா அது? ‘தாயின் தெய்வத் திருவுருவில் எவ்விதப் பிசகும் நேர்ந்துவிடக் கூடாது. அப்படி நேர்ந்துவிட்டால் அதைவிடக் கொடிய செயல் வேறு இருக்க முடியாது. இதுவரை நான் வரைந்த சித்திரங்களையெல்லாம் காட்டிலும் மகத்தான ஓவியமாகத் திகழவேண்டும். எந்த சைத்திரிகனும் இதைக் காட்டிலும், சிறந்த ஓர் ஓவியத்தை வரைந்துவிட முடியாது என்ற அளவுக்கு அது அமைய வேண்டும்’ என்று எண்ணினான் ராஜு.
அந்தச் சித்திரத்தை அவசரப்பட்டு முடித்துவிட விரும்ப வில்லை அவன். தன்னுடைய முழுத் திறமையையும் காட்டி, காலத்தையெல்லாம் அதற்காகவே ஈடுபடுத்தி வரைய வேண்டிய உன்னத உயிரோவியம் அது என்பதற்காக, அதை. எழுதத் தொடங்காமலே காலம் தாழ்த்திக் கொண்டிருந்தான் அவன்.
அன்று விஜயதசமி, அவனைத் தேடி அவன் இருக்கும் அறைக்கு ஒரு பெண் வந்தாள். நல்ல அழகி. ஆனால் அவளுடைய அழகு அவனை வசீகரிக்கவில்லை. எவ்வளவோ அழகிகளைத் தன் தூரிகையால் சிருஷ்டித்திருந்த அந்தப் புகழ் பெற்ற கலைஞனுடைய கண்ணோட்டத்தில் அந்தப் பெண் ஓர் அழகியாகப் படவில்லை. அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்:
“நீ வந்த காரியம்?”
“தங்களிடம் சித்திரம் கற்க.”
“சித்திரக் கலையை நான் யாருக்குமே இலவசமாகக் கற்பிப்பதில்லையே!”
“தாங்கள் கேட்கும் பொருள் என்னவானாலும் தயங்காமல் தருவேன். எப்படியும் தங்களிடம் சித்திரம் பயில வேண்டும். இதுவே என் லட்சியம்.”
“சரி; இன்று விஜயதசமி. நல்ல நாள். உன் பெயர்?”
“தமயந்தி.”
பயிற்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்தன. சென்னையில் சர்வதேசச் சித்திரக் காட்சி ஒன்று நடை பெறப் போவதாகப் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியாயிற்று.
நண்பர்கள் பலர் ராஜுவைத் தூண்டினார்கள்; “இந்தக் காட்சியில் உன்னுடைய சித்திரமும் இடம் பெறவேண்டும். மேனாட்டுக் கலைஞர்களும் அறிஞர்களும் வந்து உன் சித்திரத்தைக் கண்டு வியக்க வேண்டும். நீ எழுதும் அந்தச் சித்திரத்தின் கீழ் நீ என்ன விலை எழுதி வைத்தாலும், அந்த விலை கொடுத்து அதை வாங்கிக் கொள்ளவும் பலர் முன் வரவேண்டும். இந்த அரிய வாய்ப்பை நீ இழந்துவிடக் கூடாது!”
ராஜு சிந்தித்தான். ‘புகழ் பெருகும், நல்ல விலை கிடைக்கும்’ என்ற சொற்கள் அவனைத் தீவிரமாகச் சிந்திக்க வைத்தன.
“தமயந்தி! சித்திரக் காட்சியில் நான் பங்கு கொள்வது பற்றி உன் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டான் ராஜு.
“அவசியம் தங்கள் சித்திரம் அதில் இடம் பெற வேண்டும்; இதுவே என்னுடைய விருப்பமும்” என்றாள் அவள்.
ராஜு யோசித்தான்; ‘காட்சிச் சாலையில் வைக்கக் கூடியதாக என் வசம் எந்தச் சித்திரமும் இல்லையே. சித்திரக் காட்சியில் வைப்பதற்குரிய சித்திரம் எதுவாக இருக்கலாம்: எதை எழுதலாம்? ஆம்! என் அருமைத் தாயாரின் உருவத்தையே எழுதி வைக்கிறேன்.’
ராஜு தூரிகையைக் கையில் எடுத்துக் கொண்டான். அவன் இதய ஆழத்தில் பதிந்து விட்டிருந்த அன்னையின் சோக வடிவத்தைக் கண். எதிரில் கொண்டு வந்தான். பத்தே நாட்களில் அதை எழுதி முடித்துவிட்டான் அவன்.
என்ன விந்தை! அன்னையின் உள்ளத்தில் மறைந்து கிடந்த அந்த இனம் தெரியாத சோகம் அவனுடைய சித்திரத்தில் அப்படியே பிரதிபலித்தது. அவன் நீண்ட காலமாக எழுத வேண்டும், எழுதவேண்டும்’ என்று காலம் கடத்திக்கொண் டிருந்த அந்தச் சித்திரம் முழு வெற்றியுடன் அமைந்து விட்டது. அந்தப் படத்துக்குக் கீழே தன் கையெழுத்தைப் போட்டான். படத்தின் விலை இருபத்தையாயிரம் என்றும் எழுதி, அதன் கீழ் ஒட்டிச் சித்திரக் காட்சிச் சாலைக்கு அனுப்பிவிட்டான்.
சித்திரக் காட்சிக்கு விஜயம் செய்த சமஸ்தான மன்னர் ஒருவர் அதை இருபத்தையாயிரம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும், சித்திரத்தைக் கண்காட்சி முடிந்ததும் எடுத்துக் கொள்வதாகவும் கூறிவிட்டுப் போயிருந்தார்.
ஆயினும். கலைஞன் ராஜுவின் உள்ளத்தை ஏதோ ஒன்று அரித்துக்கொண்டிருந்தது. ‘தாயின் சோக வடிவத்தை எல்லோரும் வியக்கத்தக்க முறையில் எழுதி அதனால் பெரும் கீர்த்தி பெற்றுவிட்டேன். ஆனால் இதுதானா என்னுடைய லட்சியம்? ஒரு சித்திரத்தின் பயன் இதுதானா? சித்திரத்தின் வெற்றிக்கு மூலகாரணமான என் தாயின் துன்பத்தைக் கண்டுபிடித்து அதைத் துடைக்கும் சக்தி எனக்கு இல்லையே!’ இந்தச் சமயத்தில் யாரோ அறைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது.
”யார் அது?”
“நான்தான் தமயந்தி. இன்று சித்திரக் கண்காட்சிச் சாலைக்குப் போயிருந்தேன். அவ்வளவு பேரும் தங்கள் சித்திரத்தைச் சூழ்ந்துகொண்டு நிற்கிறார்கள். தங்களுக்குத்தான் முதல் பரிசு என்றும் அறிவித்துவிட்டார்கள்” என்று பெருமிதத்துடன் கூறினாள்.
ராஜு ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்தான்.
“ஐயா, இன்று மாலை என் வீட்டில் தங்களுக்கொரு சிறு விருந்து நடத்தப் போகிறேன்” என்றாள் தமயந்தி.
“ஏன்”? என்ன விசேஷம்?”
“இன்று எனக்குப் பிறந்த தினம். தாங்கள் தடை சொல்லாமல் விருந்துக்கு வரவேண்டும்.”
“ஆகட்டும்.”
அன்றுதான் ராஜு, தமயந்தியின் இல்லத்துக்கு முதல் முறையாகச் சென்றான். அந்த வீட்டில் தமயந்தியும் அவள் மூத்த சகோதரி லலிதாவும் மட்டுமே இருந்தனர். லலிதா ஒரு மாதிரி’யாக வாழ்க்கை நடத்துபவள் என்பதைப்பற்றி அவன் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தான்.
ஆனாலும் அதைப்பற்றி யெல்லாம் அவனுக்கு என்ன அக்கறை? தமயந்தி அவனுக்குப் பணம் கொடுக்கிறாள். அவன் சித்திரம் கற்றுக்கொடுக்கிறான்… அவ்வளவுதான்.
விருந்துக்குப் பிறகு தமயந்தி ராஜுவை ஒரு ஹாலுக்கு அழைத்துச் சென்றாள். அங்கேயிருந்த அபூர்வமான தந்தப் பொருள்களையும், சித்திரங்களையும், சிலைகளையும் அவனுக்குக் காட்டினாள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்த ராஜு ஹாலுக்கு மத்தியில் சுவரில் மாட்டப் பட்டிருந்த ஒரு படத்தைக் கண்டதும் அசைவற்று நின்றான். காரணம், அது ராஜுவின் தந்தை மாசிலாமணியின் படம்!
‘என்ன? அப்பாவின் படமா? அவர் படம் இங்கு எப்படி வந்தது? ஓகோ! ஒரே கணத்தில் அவனுக்கு எல்லாம் விளங்கி விட்டன. அம்மா கூறினாளே, அடிக்கடி பட்டணம் போகிறார் என்று, இதற்குத்தானா? அம்மா! உங்கள் முகத்திலே உள்ள சோகக் களங்கத்துக்குக் காரணம் இதோ நிதர்சனமாக விளங்கிவிட்டது. இந்த ரகசியத்தைத்தானே என்னிடம் சொல்லாமல் மூடி மறைத்தீர்கள்? இதோ தெரிந்துவிட்டது அம்மா அந்த உண்மை!’
ராஜு, அப்புறம் அந்த வீட்டில் அதிக நேரம் தாமதிக்க வில்லை. சீக்கிரமே புறப்பட்டுவிட்டான், புறப்பட்டவன் நேராகக் காட்சிச் சாலைக்குச் சென்றான். அங்கிருந்த தன் தாயின் படத்தைக் கையில் எடுத்துக்கொண்டான்.
காட்சிச் சாலை அதிகாரியிடம் சென்று, “ஐயா; இந்தச் சித்திரக் காட்சியில் என் படத்தை வைத்திருக்க இயலாமைக் வருந்துகிறேன். உங்கள் பரிசும் எனக்கு வேண்டாம். பாதியில் திருப்பி எடுத்துக்கொண்டு போவதற்காக என்னை மன்னிக்கவும்” என்றான்.
“ஏன்? உங்கள் படத்தை ஜமீன்தார் ஒருவர் இருபத்தைந்தாயிரம் விலைக்கு வாங்கிக் கொள்வதாக வாக்களித்து விட்டுப் போயிருக்சிறாரே!”
“அந்தப் பணம் எனக்கு வேண்டாம். என் சித்திரத்தின் மதிப்பு எவ்வளவு என்பதைக் காட்டுவதற்காகத்தான் நான் விலை போட்டிருந்தேனே தவிர, விற்பதற்காக அல்ல. நான் இதை விலைக்கு விற்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டுச் சித்திரத்தை எடுத்துக்கொண்டு நேராக தமயந்தியின் வீட்டுக்குச் சென்றான். தான் வரைந்த தன் தாயின் படத்தை, அந்த உயிரோவியத்தை, உள்ளத்தை உருக்கும் அந்தச் சோக வடிவத்தை, அந்தப் பத்தினித் தெய்வத்தை, அந்த வீட்டில் மாட்டப்பட்டிருந்த தன் தந்தையின் படத்துக்குப் பக்கத்தில் மாட்டிவிட்டான்.
“தமயந்தி! இந்தப் படத்தை நான் உன்னுடைய பிறந்த தினப் பரிசாக அளிக்கிறேன். இதை நீங்கள் என்றென்றும் இதோ இங்கே உள்ள இந்த போட்டோவுக்குப் பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும். அதற்கு இஷ்ட மில்லை யென்றால் இப்போதே சொல்லி விடுங்கள். நான் இதை என் கையோடு எடுத்துக்கொண்டு போய்விடுகிறேன்” என்றான்.
தமயந்திக்கும் அவள் சகோதரிக்கும் ஒன்றுமே புரிய வில்லை. பரிசாகக் கிடைத்த அந்த அற்புதமான கலை நுட்பம் மிக்க படத்தை இழப்பதற்கு அவர்களுக்கு மனம் வரவில்லை. ராஜுவின் இஷ்டப்படியே அப்படத்தை அந்த போட்டோவுக்குப் பக்கத்திலேயே வைப்பதற்கு ஒப்புக்கொண்டார்கள்.
சில தினங்களுக்கெல்லாம் அந்த வீட்டுக்கு மாசிலாமணி வந்தார். மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தவர் அங்கே தன் போட்டோவுக்குப் பக்கத்தில் தன் மனைவியின் படம் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டார். அந்த உயிரோவியத்துக்கு அடியில் ‘ராஜு’ என்று கையெழுத் திட்டிருப்பதையும் கண்டார். அந்தப் படத்தையே வெகு நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
“சுவாமி, அந்தப் படத்தைப் பார்த்தீர்களா? எத்தனை அழகாயிருக்கிறது? அந்தக் களை பொருந்திய முகத்தில் தெரியும் சோகத்தைப் பார்த்தீர்களா? இந்தப் புண்ணியவதி யாரோ? இந்த அம்மாளின் சோகத்துக்கு என்ன காரணமோ? பாவம், பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாயிருக்கிறது. இதை எழுதியவர் ஒரு சிறந்த சைத்திரிகர். அவரிடம் என் தங்கை சித்திரம் பழகி வருகிறாள். சில தினங்களுக்கு முன்னால் அவர் என் தங்கையின் பிறந்த தின விழாவுக்காக இங்கே வந்திருந்தார். அப்போது உங்கள் போட்டோவையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, இருபத்தைந்தாயிரம் பெறக்கூடிய இப் படத்தை என் தங்கைக்குப் பரிசாகக் கொடுத்து, தங்கள் போட்டோவுக்குப் பக்கத்திலேயே மாட்டி வைக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டுப் போனார்” என்றாள் லலிதா. லலிதாவின் சொற்கள் ஒவ்வொன்றும் அவர் இதயத்தைப் பிளந்தன. அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. “லலிதா, நான் வருகிறேன். இது என் மனைவியின் படம். ராஜு என்னுடைய மகன். இன்றோடு நீ என்னை மறந்து விடு” என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார் மாசிலாமணி.
அது முதல் அவர் சென்னைக்குச் செல்வதையே அடியோடு நிறுத்திவிட்டார். இதை அறிந்த பாகீரதியின் முகத்தில் இருந்த ஏக்கம், சோகம் எல்லாம் மறைந்து விட்டன. பழைய ஆனந்தமும் களையும் அவள் முகத்தில் பரிபூரணமாகக் குடிகொண்டன.
அந்தச் சித்திரத்தின் மூலம் தனக்குக் கிடைக்க விருந்த பொருளையும், புகழையும் இழந்தது பற்றி ராஜு துளிக்கூட வருத்தப்பட வில்லை. அதை காட்டிலிலும், ஒரு நிகரற்ற செல்வத்தைத் தன் தாய்க்கு அளித்த பெருமையும் திருப்தியும் அவன் உள்ளத்தில் நிரம்பியிருந்தன.
– திருக்குறள் கதைகள், மங்கள நூலகம், சென்னை.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 5, 2025
பார்வையிட்டோர்: 46