முறை மாப்பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 30,671 
 

அண்ணி, என் மகள் கிரேனாப்புக்கு என்ன குறைச்சல்? பி.ஏ. பட்டதாரி. ஒத்தைக்கு ஒரு மகள். அவள் சின்ன வயதில் நீங்க உங்கள் அண்ணன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கிளி மாதிரி இருக்கிற எங்கள் அண்ணன் மகள் கிரேனாப்பு தான் என் மகன் யோசேப்புக்கு என்று ஆயிரம் தடவை சொன்னீங்க. இப்போது உங்க மகன் இஞ்சினியர் ஆனதும் மனம் மாறிவிட்டீர்களே. அண்ணன் மகள் வேண்டாம் என்று சொல்வது அண்ணன் வீட்டில் அணுகுண்டு போட்டது போலிருக்கிறது. கிரேனாப்பு என்ற கிளி, இப்போ இலவு காத்த கிளியாய் ஏமாந்து போனாளே. என்ன செய்வது. சரி. இருக்கட்டும். உங்கள் மகன் யோசேப்பு மாதிரியே, அதே ஐந்தரை அடி உயரம், அதே கோதுமை நிறம், அதே இஞ்சினியர் படிப்பு, அதே பெயர் உள்ள யோசேப்புக்கு என் மகளை நான் கெட்டிக் கொடுக்கல, என் பெயர் ராஜாத்தி இல்ல. இது என் சபதம் என்று சொல்லிவிட்டு கோபத்தில் எழுந்து வந்துவிடவே, ராஜாத்தியின் கணவர் தங்கைய்யா அன்று முதல் மாப்பிள்ளை சந்தை ஒவ்வொன்றாய் ஏறி இறங்க ஆரம்பித்தார்.

மறுவாரமே, காலையில் காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத்திறந்தாள் ராஜாத்தி. வாங்க, நீங்க….. யாரு?

“வணக்கம். வள்ளியூரிலிருந்து வருகிறோம். நீங்க பதிஞ்ச இடத்தில் நாங்களும் பதிந்து வைத்திருந்தோம். என் மகன் ஐந்தரை அடி உயரம். மாநிறம். இஞ்சினியர். சென்னையில் வேலை. சம்பளம் 25 ஆயிரம். பொண்ணு அழகாக இருப்பதினால், நீங்கள் போட்ட நகைபோதும். ரொக்கம்வேண்டாம்” என்று சொன்னாள் மாப்பிள்ளையின் தாயார்.

அடே, நல்ல மாப்பிள்ளையாயிருக்கிறதே, ஆமாம், உங்க மகன்பெயர் என்ன என்று கேட்டாள் ராஜாத்தி.

மாப்பிள்ளை பெயர் மார்ட்டின் என்று சொன்னாள் தாயார்.

எல்லாம் பிடித்திருக்கிறது. ஆனால் பெயர் மட்டும் பிடிக்கவில்லை என்று சொல்லி அனுப்பி விட்டாள் ராஜாத்தி.

அடுத்த மாதம் இன்னொரு மாப்பிள்ளை வந்தார். வாட்டசாட்டமாய் வாலிப வயது. அரும்பு மீசை. இஞ்சினியர். வேலை என்று தகப்பன் சொன்னார்:

“என் மகன் கோயம்புத்தூரில் வேலை பார்க்கிறான். சம்பளம் 30 ஆயிரம்” என்றார் தகப்பனார். மாப்பிள்ளையை ஜன்னல் வழியே பார்த்த கிரேனாப்பு,”அம்மா, அம்மா இந்த மாப்பிள்ளை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று சொல்லவும், தகப்பனாரைப் பார்த்து, மாப்பிள்ளை பெயர் என்ன என்று கேட்டாள் ராஜாத்தி.

மாப்பிள்ளை பெயர் ஜாய்சன் என்றார். அதற்கு ராஜாத்தி, அப்போ இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டாள்.

இப்படி ஆல்வின், நீல்வின், மெல்வின், பால்வின், கோல்வின், காட்வின், அமட்சன், எமட்சன், காட்சன், வில்சன், லார்ட்சன் மற்றும் ஜாண்சன் என்று சுமார் 30 மாப்பிள்ளையைக்கழித்து விட்டாள் ராஜாத்தி.

வருடங்கள் பல உருண்டோடின. பழக்காலம் முடிந்ததும் பறவைகூட பறந்துபோய் விடுமாம். அதுபோல் பெண் பருவக் காலம் கடந்ததும், வரன் வரத்தும் குறைந்துவிட்டது.

கடைசியில் ஒரு மாப்பிள்ளை வந்தார். காரிலிருந்து இறங்கும் முன்பே, மாப்பிள்ளை பெயர் என்ன என்று ராஜாத்தி கேட்டாள்.

“மாப்பிள்ளை பெயர் “இஞ்சினியர் யோசேப்பு”, என்றாள் மாப்பிள்ளையின் தங்கை.

ராஜாத்திக்கு வாயெல்லாம் பல். ஒரே குஷி. மிகுந்த சந்தோஷம். வாங்க வாங்க என்று வரவேற்று மாப்பிள்ளை எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றாள் ராஜாத்தி.

காரிலிருந்து இறங்கி மாப்பிள்ளை நொண்டி நொண்டி நடந்தார். ஒரு கால் கட்டை; தலை மொட்டை. கருப்பு உதடு சிகரெட் நண்பன் என்பதைக் காட்டியது. வயது 40 இருக்கும்.

நொண்டி என்றாலும் பரவாயில்லை. பெயர் யோசேப்பு. அது ஒன்றே போதும் என்றாள் ராஜாத்தி.

மணப்பெண்கிரேனாப்பு முகம் வாடியது. வந்த நல்ல நல்ல மாப்பிள்ளையை எல்லாம் விட்டுவிட்டு, போயும் போயும் இந்தக் கிழவனுக்கா வாக்குப்படப் போகிறேன் என்று தீயில் விழுந்த புளுவாய்த் துடித்தாள் கிரேனாப்பு.

தாய் ராஜாத்தியின் கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமும், ஆணவமும் ஆங்காரமும் கொடி கட்டிப் பறக்கவே, கிரேனாப்பு வார்த்தைகள் எடுபடவில்லை .

உடனே ராஜாத்தி தன் அண்ணியிடம் சென்று, “நான் சவால் விட்ட மாதிரியே யோசேப்பு என்ற அதே பெயருள்ள இஞ்சினியர் மாப்பிள்ளைக் கிடைத்து விட்டதே” என்று ஆணவ சிரிப்பு சிரித்துக் கொண்டே கலியாணக் கார்டை எடுத்து முதலில் அண்ணியிடம் கொடுத்து விட்டு வந்து விட்டாள் ராஜாத்தி.

திருமணமாகி தம்பதிகள் மும்பை சென்றனர். அங்கே மாப்பிள்ளை வீட்டில் முதல் தாரத்துக்குப் பிறந்த வாலிபப்பையனும் பெண்ணும் இருந்ததைக் கண்டதும், இது இரண்டாம் தார மாப்பிள்ளை என்பதையும் மறைத்து விட்டார்களே என்று மனம் நொந்து போனாள் கிரேனாப்பு. மாப்பிள்ளைக்கு வேலையும் காலி. வீட்டில் ஒரே சாராயவாசனை. நொண்டி என்றாலும் பரவாயில்லை. சரியான தண்ணிவண்டி, தினமும் குடித்துவிட்டு அடி உதை. வீங்காத இடமில்லை . ஏங்காத நேரமில்லை. அழாத நாளில்லை. கவலை நெஞ்சைப் பிளக்கவே, சரியாக சாப்பிடாமல் சிறு வயதிலேயே இறைவனடி சேர்ந்தாள் கிரேனாப்பு.

மும்பையிலிருந்து போன் வந்தது. ஓடிப் போய் எடுத்தாள் ராஜாத்தி. அது அழுகுரல், ராஜாத்தி கலங்கினாள். கண்ணீர் விட்டாள். ஐயோ என் மகள் என்னை விட்டுப் போய்விட்டாளே, என் அகந்தையினால் என் மகள் வாழ்க்கையை அழித்து விட்டேனே. என் பெருமையினால் என் வீடு இடிந்து விழுந்து விட்டதே. என்று சொல்லி விம்மி விம்மி அழுது கதறினாள் ராஜாத்தி.

வெராண்டாவில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த கணவன் தங்கைய்யா ஓடிவந்து ஏன் இந்த நடுஇரவு இரண்டு மணிக்கு இப்படி அழுகிறாய். எதும் சொப்பனம் கண்டியா என்று கேட்டு “அதோ உன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறாள் பார்” என்று சொன்னார்.

நல்ல வேளை இது சொப்பனங்க என்று சொல்லிக் கொண்டே, ஓடிப்போய் தன் மகளை அணைத்து முத்தமிட்டு, மகளே, என்னை மன்னித்துவிடு. உன் அத்தை மகன். முறை மாப்பிள்ளை தான் வேண்டும் என்று இனி நான் பிடிவாதம் பண்ணமாட்டேன். உனக்குப் பிடித்த மாப்பிள்ளையைக் கெட்டி சந்தோஷமாயிரு.

என் பெருமையும் என் அகந்தையும் அல்லவா இந்தப்பாடு படுத்திவிட்டது என்று ராஜாத்தி உணர்ந்ததும், அருகிலுள்ள ஆலயக் கோபுரக் கடிகாரம் இரவு மூன்று மணி அடித்து, ஓர் அழகிய வசனமும் சொல்லிற்று.

“அழிவுக்கு முன்னானது அகந்தை, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” (நீதி 16 : 18)

வசனம் சொல்லி முடியவும், மேஜையில் கிடந்த ராஜாத்தியின் மொபைல் போன் அழகிய பாடல் ஒன்று பாடிற்று.

“உந்தன் சுயமதியே நெறியென்றுகந்து
சாயாதே – அதில் நீ மகிழ்ந்து மாயாதே”

(பெயர்கள் அனைத்தும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *