கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 7,006 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிருஷ்டி கர்த்தனான பிரமனுக்கு வானலோகத்து அழ கரசனான் மதனனின் போக்கிலே வெறுப்பு விளைந்தது.

“ஏ ரதியே! என் அழகு எவருக்குமே இல்லையடி”

இப்படி மதனன் தன் மனைவியிடம் மட்டும் பெருமை அடித்துக்கொண்டிருப்பானேயாகில் நிச்சயமாகப் பிரமனுக்கு அவன்பால் வெறுப்பு ஏற்பட்டிருக்க முடியாது.

பெண்டாட்டியிடம் தன் பிரதாபங்களைப் பீற்றிக் கொள்ளாத ஒரு ஆண்மகனை, பிரமன் மூவுலகிலெங்கணுமே இன்னமும் படைக்கவில்லையே!

விஷயம் அதுவல்ல; “மதனன் தானே நிகரற்ற அழகன்” என்ற தலைக்கனத்தை ரதிதேவியிடம் மட்டும் காட்டவில்லை. மாறாகக் காண்பார் எவரிடத்தும் அக்கருத்தைக் கழறினான்.

அழகுக் கடவுள்கள் என அன்பர் கூட்டம் வழிபடுகின்ற கண்ணபரமாத்மாவைக் காட்டிலும், முருகவேளைக் காட்டிலும் தானே அழகுவாய்ந்தவன் என மதனன் தலை வீங்கித்தனமாக நடந்து கொள்ளலானான்.

கிருஷ்ணனது துணைவியரும், முருகனது மனைவியரும் “இந்த மதனனுக்குப் பைத்தியந்தான் பிடித்துவிட்டது” என நகையாடினார்கள்.

2

நாளுக்கு நாள் மதனனின் தலைக்கனம் எல்லை மீறிப் போய்க்கொண்டிருந்தது. இதனைச் சகிக்கமாட்டாத நிலையில், ‘வானலோகத்தின் பேரழகு’ எனக் கவிகள் பெருமிதப்படுகின்ற பாரிஜாத புஷ்பமானது,

“அடே மன்மதா! நீ கண்ண பெருமானைக் காட்டிலும், குறிஞ்சிக் குமரனை விடவும் மேலான அழகுள்ளவன் எனப் புலம்பித் திரிகிறாயாமே! அவர்கள் இருக்கட்டும்; பெருங்கவிகளே வியந்துரைக்கின்ற என் அழகில் பாதியாவது உன்னிடத்து உண்டா?” என்று ரோஷத்தோடு கேட்டது.

மதனன் வெகுண்டான். அந்த அழகிய பாரிஜாத பூவின் மென்மேனியைக் கசக்கி எறிந்தான்.

இந்த அநியாயத்தைக் கண்ணுற்ற தென்றலானது அந்தக் கசங்கிய மலரைக் காவிச்சென்று பிரமனின் காலடியிற் போட்டது.

“அடடா! அழகிய பூவே! உன்னைச் சின்னா பின்னமாக்கிய உன்மத்தன் யார்?”

ஜீவமரணப் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்த அந்தப் பாரிஜாதப் பூ சொன்னது:

“என்னைப் படைத்தவனே! தலைக்கன மிகுதியால் தானே யாவரிலும், யாவையிலும் அழகுமிக்கவன் என்று சொல்லித் திரிகிறானே மன்மதன்? அவனே என்னை மாசு படுத்தினான்.”

சொல்லி முடிந்ததும் பிரமனின் கைகளிலேயே தன் உயிரைவிட்டது அந்தப் பூ!

“அப்படியா சங்கதி? இனி ஒருகணமுந் தாமதிக்கக் கூடாது. இந்த வானகவாசியான மதனனின் வீண் தம் பட்டங்களை அடக்க வேண்டுமானால் மண்ணகத்திலேயே மானிடர் குலத்திலேயே நான் ஒரு அழகனை உற்பவஞ் செய்ய வேண்டும். அந்த மானிடன் தேவரிலும், யாவரிலும் மேலான அழகோடு துலங்கவேண்டும்.

பிரமா இந்த முடிவோடு எழுந்து நடந்தார்.

3

வானையே கூரையாகக் கொண்ட பூமியிலே – ஆசியா நிலப்பரப்பிலே – மரகதத் தீவு என வர்ணிக்கப்படுகின்ற மாங்கனி வடிவத் தீவிலே – சிறு கிராமம் ஒன்றிலே மூவுலகிலும் இணையில்லாத பேரழகனைச் சிருஷ்டி செய்தார் பிரமன்.

அந்த ஒப்பற்ற அழகுப் பொருளைச் சாதாரண ஜனங்கள் இனங்காணவே இல்லை. வெறும் ஜடத்தத்துவங்களிலே கண்மூடித்தனமாகத் திளைத்துக்கிடந்த சித்தாந்த வல்லுநர்களுக்கும், எழுத்துக்காரர்களுக்கும் ‘அந்தக்’ கலைப்பொருள் பற்றி ஒன்றுமே புரியவில்லை.

4

வானத்திலே, “நானே அழகன்” என அரற்றித் திரிந்த அநங்கன், பூமியின் சகல காட்சிகளையும், மர்மங் களையும் காட்டுகின்ற விநோத ஸ்படிகத்தினூடாக மானிட அழகனைப் பார்த்துவிட்டு,

‘அவன் யார்? சாதாரண ஒரு மானிடன்; என்னை விட உன்னதமான அழகோடு உலவித் திரிகிறானே; ஐயோ விதியே!’ என்றலறியபடி தலை கவிழ்ந்தான்.

முதன் முதலாகத் தன் கொ ழு நனைக் காட்டிலும் கோலம் மிக்க ஒருவனைப் பூமியிலே காண நேர்ந்தமை ரதியின் நெஞ்சிலே ஒரு இன்பமயமான சலனம் தோன்ற ஏதுவானது.

ரிஷிகளாலும், காவியப் புலவர்களாலும் ”ஒழுக் கத்தை விட்டகலா உத்தமி” எனப் புகழ்ந்துரைக்கப் பட்ட தேவியானவள், தன் சக்திக்குச் சவால்விடுகின்றீ ஒப்பில்லாச் சௌந்தர்ய அனலில் வீழ்ந்து புழுவென நெளிந்தாள். துடித்தாள்.

சேதி அறிந்த மன்மதன் வேதனைக்கடல் வீழ்ந்தான்.

5.

“அந்த அற்ப நரனை அழித்தேயாக வேண்டும்.

மன்மதன் கடுஞ் சீற்றத்துடன் காலக் கடவுளின் இடத்துக்குச் சென்றான்.

அவன் பிரயத்தனம் பலிதமாகவில்லை.

“தலைக் கொழுப்புப் பிடித்த உனக்காக – சிருஷ்டி கர்த்தனைப் பகைக்கின்ற சந்தர்ப்பத்தை நான் உண்டு பண்ணவிரும்பவில்லை.”

இப்படிச் சொல்லிக் கை விரித்துவிட்டான் காலக் கடவுள்.

6

ரதி தேவி அல்லும் பகலும் மண்மீது வாழும் அழகுத் தெய்வத்தை நினைந்து நினைந்து நெக்குருகினாள்.

இப்பொழுது ரதி-மன்மத தாம்பத்யம் அறவே அறுந்துவிட்டது.

“மதனன் தனது ஆற்றாமையால் உருகுகிறானே தவிர அவனது ‘தலைக் கனம்’ இன்னமும் குறைந்தபாடில்லை”

இவ்வாறான முடிவோடு பிரமன் தன் நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தான்.

ரதிதேவி மன்னவன் காதலாற் பித்தானாள் அல்லவா?

தனது ஆசைகளை ஈடேற்றுதற்காக மூவரையும் நினைந்து கடுந்தவம் புரிந்தாள் அவள்.

ரதியின் பிரயாசைமிக்க தவத்தை உணர்ந்து கொண்ட பிரம்ம, விஷ்ணு, உருத்திரன் மூவரும் ஒருசேர வந்து.

“பெண்ணே! உன் கோரிக்கை என்னையோ?” என்று ஆர்வத்தோடு கேட்டார்கள். ரதி சங்கோஜத்தோடு;

“நான் – நான் பூமியிலே வாழுகின்ற அழகிய மானிடனை – அழகுத் தெய்வத்தை முற்றாகப் பிரேமிக்கிறேன். அவன் என் துணைவன் மதனனைக் காட்டிலும் அழகானவன். தேவரீர் தயவாலேயே என் தவக்கனவு நினைவாக வேண்டும்” என்றாள்.

மூவரும் அர்த்தபுஷ்டிமிக்க மென்னகையோடு அவளை ஆசீர்வதித்துச் சென்றார்கள்.

7

ரதி பூமி சென்று மானிட வழிமுறைகளை அனுசரித்து அந்தப் பேரழகனின் சிநேகம் பெறச் செயல்புரிந்தாள்.

“தலைக் கொழுப்புக்கார மன்மதனின் மனைவி ஒரு மானிடனை விழைந்து பூமியேகிவிட்டாளடா”

எல்லாத் தேவர்களும் மேற்கண்டவாறு சொல்லிக் கைகொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

ஐயோ பாவம்! மதனனுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது.

“நான் உண்மை நிலை அறிந்தேன். அகங்காரம் தவிர்ந்தேன். கடவுளரே என்னை மன்னியுங்கள்”

மன்மதன் பிதற்றித் திரிந்தான்.

பிரமன் தன் கருணா நோக்கை மன்மதன்புறம் திருப்பினான்.

பூமியிலே மானிடன் காதல் விழைந்த ரதி, தன் காதல் வெற்றியடையாததால் மீண்டும் மன்மதன் இடத்தே வந்து சேர்ந்தாள்.

மமதை நீங்கிய மன்மதன் தனது ஆசை மனையாளோடு புதுவாழ்வை ஆரம்பித்தான்.

ஐயையோ! அந்தப் பாழாய்ப் போகிற காலக் கடவுள் ஏன் தான் பூமிமீதுலவும் மானிட அழகுவேந்தனின் “அழகை” விழுங்குவதற்காக வாயைப் பிளக்கிறானோ?

– சௌந்தர்யா பூஜை (இனிய சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1970, பிரசுரித்தவர்: ஐ.குமாரசாமி, கல்வளை, சண்டிருப்பாய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *