கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 10,170 
 

நீ பார்த்துள்ளாயா!? நீ அறிவாயா!? என்று ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர், மக்களின் ஆச்சர்யம்தான் கட்டுங்கடங்காமல் இருந்தது, பிறந்து வளர்ந்தது முதல் இந்த ஊரையே தாண்டிபோகாத பல முதியவர்கள் கூட வாயில் விரல் வைத்து யோசித்து பார்த்தனர், ஒருசில வாய்ச்சொல் வீரர்களான முதியவர்களே!!

சிற்சில பொய்மொழிகளையும் கூறிக் கொண்டிருந்தனர் “முன்பு நம்ம ஊர் வடக்கு தெருவில் இவர் வசித்தது உண்மைதான் பின்பு சிதம்பரம் பக்கம் போய்விட்டார்!” என்று அவர்கள் அவிழ்த்து விட்டனர்.

ஆனால் அது அப்பட்டமான பொய் என்று யாருக்கும் புரியாமல் இல்லை, ஜனங்கள் அனைவரும் ஆராவாரம் செய்தபடி பின்சென்றாலும் தங்களுக்கு முன்னே நடக்கும் நம்பியையும் அவருக்கு முன்னே நடக்கும் பெரியவரையும் பார்த்து அதிசயப் பட்டு கொண்டே இருந்தனர்.

“ஏனப்பா!!, இந்த மாப்பிள்ளாண்டன் இத்தனை நேரமும் மூக்கு கயிறு இல்லாத கன்னுகுட்டி மாதிரி துள்ளினான், இப்ப என்னடான்னா அந்த பெரியவர் பின்னாடி காந்ததுக்கு கட்டுபட்ட இரும்பு மாதிரி ஓடுறான்!!” என்றார் ஒரு பெரியவர் அவர்களது கவனம் கலையும் விதமாக முன்னே சென்ற நம்பி அந்த பெரியவரிடம் ஏதோ பேசுவது போல தெரிந்தது அனைவரும் அந்த பக்கம் காதை கொடுத்தனர்.

“ஐயா, பெரியவரே!! இன்னும் எத்தனை தூரம்தான் நடக்க வேண்டும்!?, இரண்டு நாட்களாக திருமண வேலைகள் காரணமாக எனக்கு தூக்கமே கிடையாது!! இப்போது இந்த ஏறுவெயில் நேரத்தில் இப்படி நடக்க வைத்து இட்டு செல்கிறீர்களே!! உம் வீடுதான் எங்கே!?” என்று நம்பி கேட்பதற்குள் அந்த பெரியவர் வேகமாக திரும்பி நம்பியை ஒரு பார்வை பார்த்தார்.

“சும்மா!! வாயை மூடிக்கொண்டு வர மாட்டாயா!?” என்று அதட்டுவது போல இருந்தது அந்த பார்வை.

நம்பி, தன் கரங்களால் வாயை பொத்தி கொண்டு தந்தையார் மிரட்டும் பொழுது அஞ்சும் குழுந்தை போல முகத்தை வைத்து கொண்டார் அவரது மனம் ஏனோ அந்த முதியவரின் திருவேடப் பொலிவழகில் சென்றது.

“இவர் எத்தனை வயதானவராக இருக்கக் கூடும்!? நூறு வயது இருக்குமா!? உடம்பில் உள்ள சுருக்கங்களையும் நரைத்து வழியும் தலைமுடி தாடியையும் பார்த்தால் 120 வயதுகூட இருக்கும் போல தெரிகிறதே!! ஆனால் பாவி நடக்கும் வேகத்தை பாருங்களேன்!! தடகளவீரர்கள் எல்லாம் தோற்றுவிடுவார்கள் போலருக்கிறதே, நெற்றியில் திருநீற்று பூச்சும் சந்தன கீற்றும் எத்தனை அழகாக இருக்கிறது, கையில் வைத்துள்ள குடையை சுற்றிவிட்ட படியே பிடித்துள்ளாரே!! அவர் குடை வைத்திருக்கும் லட்சணத்தை பார்த்தால் வெயிலுக்கு பிடித்திருப்பது போல தெரியவில்லையே ஏதோ ஒப்புக்கு சப்பாணியாக அந்த குடைதான் அவர் கையில் ஒட்டி கொண்டுள்ளது போல உள்ளது, வேட்டியை கச்சமாக வரிந்துள்ளார் எனில் இவருக்கு திருமணமாகி மனைவி மக்கள் இருக்கிறார்கள்தான் போலிருக்கிறது, எல்லோரையும் எங்கு விட்டிருப்பார்!? அவர் வீட்டுக்குதானே கூப்பிட்டு போகிறார் அங்குதான் அவர்களும் இருக்கக் கூடும்!!”

“ஆனால் இந்த முரட்டு கிழவன் நம்மை அவர்களுக்கும் அடிமை செய்ய சொல்வானா!? அப்படி ஏதாதவது சொன்னால் இவரது குடும்பத்தினரிடம் “உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம்!!” என்று சொல்லிவிட வேண்டியதுதான்”

“இவருக்கு அடிமை என்றுதானே சபையில் சாதித்தார்!? அங்கு போய் குடும்பத்துக்கே வேலை செய்ய சொன்னால் என்ன செய்வது!? அங்கு போய் என்னென்ன வேலை செய்யவேண்டுமோ!? திருமணப் பந்தலிலே இந்நேரம் மணம் முடிந்து அவளுடன் இன்பமாக இருக்க வேண்டிய என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இந்த கிழட்டு பண்டாரத்துடன் நடக்க விட்டு விட்டாயே!! அட ஆண்டவா!!!!” என்று நம்பி புலம்பி நின்றார்.

“ம்!! என்ன!? கூப்பிட்டாயா!?” என்று அந்த வேதியர் கேட்டார்.

“உம்மை எங்கே ஐயா கூப்பிட்டேன்!? நீர்தான் கூப்பிடாமலேயே வந்து நிற்கிறீரே!! நான் கயிலாயத்து ஆண்டவனை கூப்பிட்டேன்!!”

“என்ன!? கயிலாயத்து ஆண்டவனை கூப்பிட்டாயா!? இதோ பார் நம்பி!! உனக்கு இனிமேல் ஆண்டவன் எல்லாம் நான்தான், முதலிலே வெண்ணெய் நல்லூரில் வந்து எனக்கு பணி செய், வித்தகம் பேசிக் கொண்டு காலம் தாழ்த்தாதே!!, நான்தான் நீ கூப்பிட வேண்டிய ஆண்டவன்!!, நீ என் அடிமை!! மறந்து விடாதே!!” என்று வேதியர் கூறியதும்,

நம்பி, “அட!! பாதகக்கார கிழவனே இறைவனை கூட கும்பிட கூடாது என்கிறாயே!! இவனை பித்தன் என்று கூறியதும் சரியானதுதான் போல வேதியக் கோலத்தில் இருந்து கொண்டு சிவநிந்தனை செய்ய அஞ்சாதவனாக இருக்கிறானே!! இந்த கிழட்டு பண்டாரம்!!” என்று எண்ணினார்.

“ம்!! என்ன மசமச என்று நிற்கிறாய் வா!!” என்று மீண்டும் முதியவரின் அதட்டல் நம்பிக்கு பதற்றத்தை உண்டாக்கியது.

“இதோ!! வருகிறேன் சுவாமி!!” என்று போலியாக கும்பிட்டபடி பின்னால் சென்றார் நம்பி.

“ஐயா, நான் ஒன்று உங்களிடம் கேட்கலாமா!?”

“கேள்!!”

“இல்லை!! நீங்கள் உண்மையில் இந்த ஊர்தானா!?, ஏதோ வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்றீர்கள் ஆனால் தற்போது வெண்ணெய் நல்லூர் அருட்டுறையப்பர் ஆலயத்திற்கு செல்லும் பாதையில் செல்கிறீர்கள், உண்மையில் உங்களுக்கு இந்த ஊரா!? இல்லை வேறு ஏதாவது ஊரா!?”

“ம்!!, இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஊரும் என் ஊர்தான்!!, “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று ஒரு சங்கப் பாட்டு இருக்கிறதே நீ படித்துள்ளாயா!? அது எல்லாம் என்னை பார்த்து பாடியதுதான்!!” என்று கூறிய முதியவரை பார்த்த நம்பி,

மனதிற்குள் “சரிதான், இது தெளிந்த பைத்தியமாக இருக்கும் போலிருக்கிறது!!” என்று எண்ணியவராய்,

“நான் ஒன்று கேட்டால் நீங்கள் வேறு ஏதோ ஒரு பதில் சொல்லி குழப்புகிறீர்களே சுவாமி, உங்களது வேடத்தை பார்த்தால் என் மனம் அளவிலா ஆனந்தம் கொள்கிறது ஆனால் நீங்கள் பேசுவதனை பார்த்தால் எரிச்சலாக உள்ளது!! தாங்கள் யார்!?எதற்காக என்னை அடிமை கொண்டீர்!? கூறுங்கள்” என்று நம்பி கேட்ட நேரத்தில் முதியவர் திருவெண்ணெய் நல்லூர் ஆலயத்தின் கோபுரத் திருவாயிலை கடந்து உள்ளேறியிருந்தார்.

நம்பிகளும் தன்னை மறந்து பின்னால் சென்றிருந்தார், ஆனால் உடன் வந்த ஜனங்கள் வாசலிலேயே நின்று அதிசயப் பட்டு கொண்டிருந்தனர்!!

நம்பிகள் ஒருமுறை திரும்பி பார்த்து “ஏன் இந்த ஜனங்கள் வெளியிலேயே நிற்கிறார்கள்” என்று எண்ணியபடி மீண்டும் முதியவரை பார்த்த பொழுது அவர் இருந்த இடத்தில் முதியவரோ காணாமல் மறைந்து போயிருந்தார்.

“ஆஹா!! என்ன ஆச்சர்யம், ஐயா!! பெரியவரே!! சுவாமி!! எங்கு மறைந்து சென்றீர்கள்!?, இது என்ன மாயமாக இருக்கிறதே!!” என்றபடி ஆலயத்தின் கொடி மரம் பலிபீடம் முதலிய பகுதிகளில் சென்றும் ஆலயத்தின் பின்பக்கத்திற்கும் சென்று தேடி வலமாக வந்து மீண்டும் வாசலை அடைந்தார் நம்பி!! உள்ளே அருட்டுறையப்பர் மந்தகாசம் சிந்தியபடி விளக்கொளியில் இலிங்கரூபமாய் காட்சியளித்தார்.

அதுகண்ட நம்பிகள், “இறைவா!? இது என்ன அதிசயம் என்னை வல்வழக்கிட்டு ஆண்ட முதியவர் இங்கு வந்து மறைவானேன்!! ஒன்றும் புரிவில்லையே சுவாமி!!” என்று வேண்டிய மாத்திரத்திலே தேவ துந்துபிகளும் பஞ்ச வாத்தியங்களும் முழங்க!!சப்தரிஷிகளின் வேதகோஷம் ஒலிக்க விண்ணாதி தேவர்களும் மலர்மாழி பொழிய “வெள்ளை ரிஷப வாகனத்தில் உமாதேவியுடன் வானிடை தோன்றிய இறைவன்”,

“நம்பியாரூரா!! நம்மை அறியவில்லையா!!” என்று கேட்டார்.

வானிடை ஒலியெழுந்த திசை நோக்கிய நம்பியாரூரப் பெருமானார், “ஆஹா!! ஆண்டவா!! ஆரமுதே!! ஆருயிரே!!அம்பலவா!! நீங்களா வந்து என்னை தடுத்து ஆட்கொண்டீர்கள், என்று சென்னிமிசை கூப்பி நிலமிசை வீழ்ந்தார் எழுந்தார்.

அந்த மாத்திரத்திலேயே முன்னொரு காலத்தில் திருக்கயிலைமலையில் “மையல் மானுடமாய் மயங்கும் வேளையில் ஐயனே தடுத்த ஆண்டுருள் செய்!!” என்று நம்பிகளே விண்ணப்பித்து இருந்ததும் அது தொடர்பான நிகழ்வுகளும் நம்பிகளுக்கு நினைவு வந்தன.

“இறைவா!! வாக்கு பிழையின்றி என்னை வாழ வைக்க வந்தவரே!! உம்மை யாரென்று அறியாமல் பித்தன் என்றும் பேயன் என்று சிறுமொழிகளால் ஏசினேனே!! இதனை எண்ணி என் மனம் பொறுக்கவில்லை சுவாமி!!” என்றார்.

“நம்பீ!! நமக்கு விருப்பமானவனே!! இந்த தென்திசை மக்கள் அனைவரும் உய்யவேண்டி நீ பாடவேண்டும், நமக்கு அருச்சனையாவது தமிழ்திருப்பட்டுகளே!! அதற்குதான் இங்கு உன்னை அவதரிக்க செய்தோம், ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழால் பாடுவாய்!! என்றார் ஸ்வேதரிஷப வாகனனான கயிலையம்பதி இறைவா!! ஆரமுதே!!தில்லையம்பலத்தில் நடமாடும் வள்ளலே!!, உன்னை என்னறிந்து ஏத்துகேன், எப்படி பாடுகேன்!!? “மணப்பந்தலில் “பித்தன்” என்று சொன்னாயே அதனையே முதலாக வைத்து பாடுவாய் மகனே!!” என்ற இறைவனார் திருவாக்கிற்கு இணங்க அந்த நிகழ்வு நடந்த முற்பகல் நேரத்திற்கு ஏற்ற பண்ணான “இந்தளத்தை” கூட்டி “பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா!!” என்னும் பெரிதாம் திருப்பதிகம் பாடி திருக்கடைக்காப்பும் சாற்றினார் சுந்தரமூர்த்தி சுவாமிகளாம் நம்பியாரூரப் பெருமானார்.

பதிக இசையில் தோய்ந்திருந்த பரம்பொருளோ!! “இந்த மண்மேல் உள்ள பதிபிறவும் சென்று நம்மை பாடுவாய் நம்பீ!!” என்றபடி மறைந்தருள!!

“பெருமானே!! சென்றுவிட்டாயா!? உன்னை பித்தன் என்றேனே!! எனக்கல்லவா இப்போது பித்து!! உன் மேல் பித்து பிடித்து விட்டது!!”

இறைவா!! இறைவா!! நாவலூருக்கு வருகிறேன் அங்கு காட்சி தருவாயா!? இறைவா!! என்றபடி அருள்துறையில் இருந்து இறங்கினார் நம்மை எல்லாம் இருள்துறையில் இருந்து எடுக்கவந்த எம்மையாளுடைய வள்ளலான நம்பியாரூரப் பெருமானார்!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *