பிட்டுக்கு மண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 35,707 
 

ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு நவராத்திரி வந்து விட்டதென்றால், கூத்தும் கொண்டாட்டமுமே! நவராத்திரியின் போது, அந்த ஒன்பது நாட்களிலும் நாளைக்கோர் அலங்காரமும், வேளைக்கோர் ஆராதனையுமாக ஏற்பான் அவன் அவன் கால் மாறிக் குனித்தவன் அல்லவா? ஆண்டவனின் மகிழ்ச்சி வெள்ளம் அந்தக் கோயில் மடத்திலே ஆனந்த வெள்ளமாகத் திரை எழுப்பி, நுரை எழுப்பிப் படர்ந்து பரவும் ; பரவி ஓடும்.

ஆண்டவனுக்குக் குதூகல மென்றால், ஆளப்பட்ட ஊருக்கும் ஊர் மக்களுக்கும் அந்தக் குதூகலத்தில் பங்கு இருப்பது இயல்புதான். ஆகவே, நவராத்திரித் தருணத்தில் பூவை மாநகர் விழாக்கோலம் ஏற்கும்.

இந்தப் பூவை மாநகரிலே ‘பசை மிக்கது செட்டித் தெரு, ஊரோடு ஊராகப் பசையாக ஒட்டிக்கொண்டது இது. இங்கே செட்டி மார்கள் ஒரே இனம். ஆனால் அவர்களுக்குள் புரப் பிரிவுகள் மட்டும் பல உண்டு. இவற்றுள், ஆதியான் செட்டியார் புரத்தவர்களுக்குக் குடிக்காணியாட்சிப் பாத்தியதை கொண்டது இந்த நடராஜர் மடம். ஆதியில் மடமாகத் கூத்தப் பிரனானின் படத்தை மட்டிலுமே கொண்டு விளங்கியது. இப்போது கோயிலாகிவிட்டது. நியமப்படி பூசனைகள் தூபதீபம் ஏற்று நடக்கும்.

இத்தகைய பரம்பரை, வழிபாட்டில் நவராத்திரிக் காப்புக் கட்டும், கடைசி நாளன்று நிகழும் வெள்ளி ரதப் பவனியும் எடுப்புமிக்கவை. முதலும் இறுதியுமான இவ்விரு நிகழ்ச்சிகளுங்கூடக் கோயிலை அடிமை கொண்டவர்களுக்கே உரிமை பூண்டிருந்தன. ஏனைய விழாக்கள், பண்டைய மரபுப்பிரகாரம் ஆளுக்கொரு மண்டபம் படியாக உபயம் ஆகும்.

பின், கூத்தன் கூத்தாடக் கேட்பானேன்?

* * *

விடிந்தால், மகாளய அமாவாசை, புண்ணியகாலம். நவராத்திரி விழா ஆரம்பமாகிவிடும். துதியை திதி, உத்தரட்டாதி நட்சத்திரம் கூடிய சித்தயோகம் சிம்ம லக்கினத்தில் அம்பலக் கூத்தனுக்குக் காப்புக் கட்டி விடுவார்கள். கொலு ஏறி விடுவான் ஆண்டவன்; மகர் நோன்பு முடிய நவராத்திரி கொண்டாட்டந்தான்!

ஓதுவாருக்கு இனிமேல் நிற்க நிலைக்க நேரம் இருக்காதுதான். இரவு முழுவதும் விழாச்சம்பந்தமான அலுவல்கள் சரியாக இருக்கும். நவராத்திரி நாட்களில் அவதாரங்களுக்கான அலங்காரப் பொருட்கள், அணிமணிகள், பட்டுடைகள், வெள்ளித் தீபவரிசைகள் முதலானவற்றைக் கிட்டங்கியில் உள்ள இருப்புப் பெட்டகத்தினின்றும் பிரித்தெடுக்க வேண்டும். கல்யாணம் காட்சி மாதிரி தெய்வ காரியங்களிலுங்கூட வேலைகள் சுற்றிச் சுற்றி வரும், இயல்புதான்.
அந்திப் பொன்னொளி. சிந்தூரக் கனவாகி இயற்கையின் புதிர்மயக்கம் கொண்ட சூனியப் பெருவெலியில் சித்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

கைப்பிடியில் சிக்கெனப் பற்றியிருந்த காகிதச் சீட்டுக்களை மேலும் ஒரு தடவை உன்னிப்பாகப் பார்வையிட்டார். “அப்பனே! நடராஜப் பெருமானே!” என்று பாசமும் பக்தியும் உருகி வழியத் தமக்குள், தமக்குத்தாமே முணுமுணுத்துக் கொண்டார். கழுத்தில் இழைந்து கிடந்த ருத்திராட்ச மாலையை நெருடிவிட்ட வாக்கில் எதிர்ப்புறத்தில் பார்வையை ஓடவிட்டார் அவர்.

ரங்கன் ஓடி வந்தான். எதற்கெடுத்தாலும் அவனுக்கு ஓட்டந்தான். மடத்தின் காவலாளி என்றால், பின் சாமானியமா? “ஐயா, மடத்து அடிமைக்காரங்களும் மண்டபப்படிக்காரங்களும் கோயில் பிரகாரப் பந்தலிலே வந்து கூடியிருக்காங்க, உங்களுக்கோசரம் எல்லாரும் காத்துக்கிட்டிருக்காங்க என்று தகவல் கொடுத்தான் அவன்.

“ஓ, அப்படியா?”

“ஆமாங்க!”

“சாடாப் பேர்களும் வந்தாச்சா?”

இனம்புரிந்த தவிப்பும் இனம் புரியாத கலக்கமும் ஆண்டு நிற்க, “அம்பலவாணன் செட்டியாரும் வந்துட்டாராப்பா?” என்று கேட்டார் ஓதுவார்.

ரங்கன் கைகளை அகல விரித்தவாறு, “ஊகூம்; இல்லீங்களே! அவர் மட்டுந்தான் பாக்கி!” என்று தாழ் குரலில் விடை சொன்னான்.

‘தெய்வமே?’

***

புரட்டாசிக் கெடுவில் வாடைக்குப் பஞ்சம் இருக்குமோ? இருக்கலாமோ?

ஓதுவார் பற்றறுத்த துறவியைப் போலே மயில் கண் துவாலை மார்புக்குக் குறுக்கு வசத்தில் பு கைப்புறம் படிந்த காகிதக் கற்றைகளோடு நடை ஓற்றி வந்தார்.

“வாங்க ஐயா! ஐயா வாங்க?”

உலகம் பலவிதம் என்கிற சித்தாந்தத்துக்குச் சாட்சியம் அளிக்க இப்போது ஒலி பிரிந்து குரல் ஈந்த சத்தபேதங்களே போதும்.

“ஆமா!” என்று சொல்லித் தலையை உலுக்கி , கும்பிட்ட கரங்களுக்குப் பதில் கும்பிடு கொடுத்துக் கொண்டே விரிப்பில் சம்மணம் கோலி அமரலானார் ஓதுவார். ஓதுவாரென்றால், சுந்தரமூர்த்தி ஓதுவார் எனப் பொருள்.

“ஐயாவோட பூர்வாங்க அலுவலெல்லாம் கைகூடி முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறோங்களே.”

சொன்னவர் தீனாரூனா : அதாவது திருவம்பலம் செட்டியார்; பல்போனாலும் சொல் போகாத பழுத்த பழம்.

“வாஸ்தவந்தான். என் கடன் பூராவும் மாமூல் பிரகாரம் முடிஞ்சாச்சு!” மென்மைத் தன்மை நிரக்கக் கூறினார் ஓதுவார்.

“ஐயா, மண்டபப்படிக்கான முறிச்சீட்டுக்களையும் சாமான் சிட்டங்களையும் உடையவங்ககிட்டே சேர்ப்பிச்சுக் கையொப்பம் வாங்கிக்கிடுங்க. விடிஞ்சானதும், சாமியைக் கொலு ஏற்றத்துக்குண்டான காரியங்களைக் கவனிக்கலாம்!” என்றார் பாகவதர் கிராப் விடலை.

பேச்சில் சிக்கிரி கலந்த காப்பித்தூள் மணத்தது. காப்பித் தூள், சிக்கிரி விகிதாசார ரகசியமா? மூச்! அது சிதம்பர ரகசியம்!

“ஆகட்டும்!” என்கிறார் ஓதுவார்.

சம்மணக் கோலத்தை மாற்றி உட்கார்ந்த ஓதுவார். கைவசம் அடங்கியிருந்த உரிமைச் சீட்டு வகைகளைக் கண்குவித்துப் படிக்கலானார். முதல் முறை படித்தாயிற்று. மறு தரம் வரிசைப்படுத்தி வாசித்துக் கொண்டு வந்தவர், அடுத்து வந்த சீட்டுத்தாளைக் கையில் தனியே எடுத்து வைத்துக் கொண்டார். “நவராத்திரி அஞ்சாவது நாள் மண்டபப்படி நம்மள் சோவன்னா மானா அம்பலவாணன் செட்டியாரோடது” என்று சொல்லி, தொடர்ந்த சொற்களைத் தொடர் சேர்க்க வாய்க்காமல் நிறுத்தினார் ஓதுவார்.

“ஆமா; அதுச்கென்ன, ஐயா?”.

“அதுக்கு ஒண்ணுமில்லீங்க. ஆனா, அந்தப் ‘பிட்டுக்கு மண் மண்டப்படியை நடத்தறது யாரின்னுதான் நான் யோசிக்கிறேனுங்க!”.

“பிட்டுக்கு மண் மண்டபப்படியை நடத்தப் பாத்தியம் கொண்ட அம்பலவாணன் செட்டியார் இருக்கரால்லவா?”

“புள்ளி இருந்திருந்தால், இந்தப் பிரச்னை ஏன் இப்படிக் கிளம்பப் போகுது? நீங்க பட்டணமே கதின்னு ஆகிட்டவங்க. உங்களுக்குக் கதையே தெரியாது போலிருக்குது, தம்பி!”

“என்ன நடந்திச்சு அவுகளுக்கு?” “என்ன நடக்கக் கூடாதாதோ, அத்தனையும் நடந்திருச்சுது!”

“ஆமா தம்பி , எனக்குங்கூட மறந்து போயிட்டுது. அம்பலவாணன் செட்டியார் நம்ப மண்ணைத் துறந்து போய்ப் பத்து மாசத்துக்கு நெருங்கப் போகுது!”

“அட கடவுளே!” “கடவுள் என்ன செய்வார், பாவம்!”

ஓதுவார் இடைமறித்தார் : “பாவ புண்ணியத்தோட ஐந்தொகைக் கணக்கைப்பற்றி வெறும் மனுஷங்களான நமக்குப் பேசுறதுக்கு அருகதை இல்லை. ஆனா இந்த ஊர்ச் செட்டிமார்களுக்குள்ளாற , அம்பலவாணன் செட்டியார் ஒரு தனிப் புள்ளியாய்த்தான் இருந்துக்கிட்டு வந்தார். என் அனுபவத்திலே என்னோட மனசறிஞ்ச உண்மையான தாக்கல் இது. அந்தக் காலத்திலே, பர்மாப் பணம் ஆட்டம் போட்ட சங்கதியும் தெரியும். இடை நடுவாந்தரத்திலே இந்த ஊரே நொடிச்சு அந்தரத்திலே நின்ன கதையும் தெரியும்; இப்போ காபித்தூள், தூள் பறந்துக்கிட்டு இருக்கக்கூடிய இந்த ஊர்நடப்பும் எனக்குப் புரியும். ஆனா, அம்பலவாணன் செட்டியார் இப்படிப்பட்ட விதிக்கெல்லாம் விலகி, ஒரு விலக்காகவே இருந்தார். கொடிகட்டி வாழ்ந்தவர் அவர். கொடி அறுந்தால் என்ன செய்கிறது? பூர்வஜன்ம வினைப்பயன்; அந்தப் புண்ணியவான் தம் பெண்டாட்டியை இழந்தார்; வாரிசு இல்லாத ஆளுக்குச் சொத்துப் பத்து எதுக்குன்னு ஆண்டவன் நினைச்சிட்டானோ என்னவோ? பழகின சிநேகிதருக்கோசரம் இரக்கப்பட்டு, பிராமணாள் காபிக் கிளப்பை விலை கொடுத்து வாங்கி அறந்தாங்கியிலே நடத்தினார். உண்டானபோது கோடானு கோடின்னு சொல்லுவாங்க, இல்லையா? அது மாதிரி அவரைச் சுற்றிச் சுற்றி வந்து சாப்பிட்டவங்களும், நயவஞ்சனையாலே ஏய்ச்சவங்களும் ஒரு குறைச்சலும் இல்லாமல்தான் இன்னிக்கு இருக்கிறாங்க. ஆனா, அவருக்குத்தான் நஷ்டத்துக்கு மேலே நஷ்டம் வந்திச்சு. சொத்து சுகம் வீடு வாசல் எல்லாம் போயிடுச்சு! பத்து மாசத்துக்கு முந்தி அவர் இந்த மண்தூசியை உதறிப்பிட்டுப் போனவர்தான். இதுநாள் பரியந்தம் அவரைப்பற்றி ஒரு தகவலுமே இல்லை !”

ஓதுவாருக்குத் தொண்டை அடைத்தது; கனத்தது.

“அம்பலவாணன் செட்டியாரோட பந்துக்களிலே மேலவளவு கந்தசாமிச் செட்டியாரும் நடுத்தெரு தங்கராஜ் செட்டியாரும் ஓகோ’ன்னு இருக்காங்களே; அவங்களுக்காச்சும் அவரைப்பத்தி ஏதானும் தெரியமோ, என்னவோ?” என்று விசாரணை செய்தார் பல் போன பலராமன் செட்டியார்.

ஓதுவார் விநயமாகச் சிரித்தார் : “பிச்சையாண்டி ஆகிட்ட அம்பலவாணன் செட்டியாரைப்பற்றி யாருக்கென்ன கவலை. பெரியவரே! நீங்க கண்ணாலே பார்க்க, பாயிலே படுத்தவங்க தரையிலேயும், தரையிலே படுத்தவங்க பாயிலேயும் கிடக்கலீங்களா? ஆனா, நம்ப அம்பலவாணன் செட்டியார் மானாபிமானம் மிக்கவர்!

ரொம்ப ரொம்ப ரோசக்காரர்! ரொம்ப ரொம்ப மானி! பிறந்த மண்ணை மட்டும் துறந்திட்டார் அம்பலவாணன் செட்டியார்னு தோணல்லே; அநுதினமும் கைகடுக்கக் கும்பிட்டுக் கால்கடுக்க வலம் வந்த இந்தத் தெய்வத்தையுங் கூடத் துறந்திட்டாரோன்னு கூட எனக்குத் தோணுது. இல்லாட்டி, எந்தத் தில்லியிலே இருந்தாலும், இந்த நவராத்திரிக் கெடுவுக்கு இங்கிட்டு வந்து குதிச்சிருக்க மாட்டாரா? ஈச்வரா!”

ஓதுவார் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“அது சரி, இப்ப என்ன ஆகிறதாம்? அம்பலவாணன் செட்டியாரோட உபயமண்டபப்படி என்ன ஆகிறதாம்?” என்று கேட்டது கடுக்கன் இளவட்டம்.

“சட்டுப்புட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்தால் தான் தேவலாம். பசி நேரம் இது” என்றது புதிய மீசை.

கோயிலுக்குச் சொந்தம் பூண்டிருந்த எட்டுப் பேர்களும் ஒருவரை ஒருவர் மேலும் கீழுமாகப் பார்த்துக் கொட்டக் கொட்ட விழிக்கலாயினர்.

ஓதுவார் நரை திரண்ட முடிகளை வேதனையோடு கோதிவிட்டபடி, அவர்களை ஒரு முறை ஊடுருவினார். பிறகு, ஒரு முடிவும் தோணலீங்களா உங்களுக்கெல்லாம்?” என்று வேதனை தாளாமல் வினவினார்.

“ஊஹும்!”

குரல்கள் எட்டு வகையாகப் பிசிறு தட்டிக் கேட்டன.

“ஒரு வேளை, அம்பலவாணன் செட்டியார் எங்காச்சும் அநாதையாகிக் காலமாகி…?”.

உள்ளம் நடுங்க, உடல் நடுங்கக் குறிக்கிட்ட ஓதுவார். “ஐயையோ!….. உங்க பேச்சை ஈவிரக்கமில்லாமல் முடிச்சுடாதீங்க, கடுச்சன்காரத் தம்பி!” என்று கெஞ்சினார், விழிகள் துளும்பின; நெஞ்சம் துளும்பியது.

“சரி, சரி, ஏதாச்சும் முடிவு பண்ணினால் தானே?”

“ஒண்ணமே மட்டுப்படலையே!”

“அந்த அம்பலவாணன் செட்டியார் திருவிழாவை நடத்தாமல் விட்டுப்புட வேண்டியதுதானோ?”

“என்ன சொன்னீங்க, மீசைக்காரத் தம்பி?” ஆவேசமும் ஆத்திரமும் முழங்கக் கேட்டார் ஓதுவார். நெற்றி நரம்புகள் புடைத்தன.

“பின்னே , என்னவாம்?”

ஓதுவார் ஆற்றாமையோடு பெருமூச்செறிந்தார். “சோதனைகள் பாழாய்ப்போன இந்த மனிதர்களைத்தான் விட்டு வக்கிறதில்லைன்னு நினைச்சிருந்தேன். இப்போ தெய்வத்துக்கும் அல்லவா சோதனை வந்திட்டுது? ஈச்வரப் பிரபோ!” குரல் தழுதழுத்தது.

“ஓதுவார் ஐயா, நீங்களே இதுக்கு ஒரு யோசனை சொல்லுங்களேன்?”

ஓதுவார் உணர்ச்சி சுழிக்கப் பேசினார் : “லட்சக்கணக்கான பணத்திலே புரண்டுக்கிட்டு இருக்கிற உங்களுக்கெல்லாம் தோணாத மார்க்கமும் யோசனையுமா மண்ணிலே புரண்டுக்கிட்டு இருக்கிற எனக்குத் தோணப்போகுது? ஊம். அம்பலவாணன் செட்டியார் எப்படி எப்படியோ உச்சத்திலே வாழ்ந்தவர்; வாழ்ந்து காட்டினவர் ! அந்த மனிதரை யார் மறந்தாலும் நல்லவங்க ஒருநாளும் மறக்க முடியாது. அது மாதிரியே அவர் வருஷம் வருஷம் கோலாகலமாய் நடத்தி வந்த ‘பிட்டுக்கு மண் மண்டபப்படியையும் யாருமே மறக்க வாய்க்காது. அப்படிப்பட்ட புண்ணியவானோட மண்டபப்படியைப் பெருமையோடவும் மனிதாபமானத்தோடவும் ஏற்று நடத்தக் கோயில் அடிமைக்காரங்களாகிய உங்களுக்கெல்லாம் மனசு வரல்லே! …. பரவாயில்லை. அம்பலவாணன் செட்டியாரோட மண்டபப்படியை என் தலையை அடமானம் வச்சாவது, எப்படியாவது பணம் தோது பண்ணி நானே நடத்திடுறேன். இது என் கடமையாக்கும்; இது என் பாக்யமாக்கும்!”

கோயிலுக்கு அடிமைப்பட்டவர்கள் இப்போது மௌனத்துக்கும் அடிமைப்பட்டார்கள்.

***

அப்போது

“ஐயோ ”

புதிய குரலொன்று எதிரொலித்தது.

எல்லோரும் பார்வைகளைத் திசைமாற்றினார்கள்.

யாரோ ஒரு பண்டாரம் மொட்டைத் தலையும் திருநீற்றுப் பூச்சும் ருத்திராட்ச மாலையும் பொலியக் காட்சி தந்தார்.

“யோவ்! இது ஆண்டி மடம் இல்லே; கோயில் மடம்! இங்கிட்டுப் பிச்சை போட மாட்டாங்க! ஊருக்குள்ளே போய்ப் பாருங்காணும்!”

கடுக்கண் வைரக் கடுக்கன் ஆயிற்றே ! அது ஏழரைக் கட்டைச் சுருதியில் ஆணையிட்டது.

அந்தப் பண்டாரம் ஏன் அப்படிச் சிரிக்க வேண்டும்? உலகாளும் ஆண்டவனே ஒரு கட்டத்திலே “பிச்சை ஆண்டி” யாக வேடம் புனைய நேர்ந்த விதியை நினைத்திருப்பாரோ?

ஓதுவார் மலைத்தார்.

“ஐயா, பிச்சைக்காக நான் இப்போது இங்கு வந்து நிற்கவில்லை !”

“பின்னே?”

“இங்கே சுவாமிக்குப் பூஜை பண்ணுகிற ஓதுவார் ஒருத்தர் இருக்காராமே, அவர் யார்? எங்கே இருக்கார் அவர்? என்று விசாரித்தார் ஆண்டிப் பண்டாரம்.

“ஏன், நான்தான்!” என்று சொல்லிக்கொண்டே முன்னே வந்தார் ஓதுவார். பண்டாரத்தைக் கூர்ந்து பார்த்தார். ஏக்கமும் ஏமாற்றமும் நிழலிட, “சுவாமிகளே, சுவாமி சந்நிதியிலே இப்படி உட்காருங்க” என்று உருக்கமாக வேண்டினார். “என்ன விஷயமுங்க, ஐயா?” என்று கேட்டார்.

விளக்குடையான் கழலடியில் நின்ற தூண்டாமணி விளக்குச் சுடர் தெறித்தது.

பண்டாரம் திருவாய் மலர்ந்தார் : “ஐயா, இவ்வூரைச் சேர்ந்திருந்த அம்பலவாணன் செட்டியார் என்பர் தம்மோட பிட்டுக்கு மண் மண்டப்படித் திருவிழாவை வழக்கம் போலவே விமரிசையாக நடத்தச் சொல்லி உங்ககிட்டே இந்த இருநூற்றைம்பது ரூபாயைச் சேர்ப்பிக்கச் சொன்னார். இந்தாங்க பணம் என்ணிச் சரி பார்த்துக்கிடவேணும்!”

ஓதுவார் மேனி சிலிர்த்தார். பணத்தை நடுங்கும் விரல்களால் சரி பார்த்து இடுப்பு மடியில் வைத்துக் கொண்டார். அந்தத் தர்மசீலர் நல்லபடியாக இருக்காரல்லவா?” என்று ஆர்வத்துடன் உணர்ச்சி வயப்பட்டு விசாரித்தார்.

“ஊம்! கொட்டினார் பண்டாரம்.

“எங்கே இருக்கார் அவர்”

“எங்கேயும் இருப்பவர் ஐயா அந்தப் புண்யவான்.”

“தம்மோட மண்டபப்படி விழாவன்றைக்காகினும் அம்பலவாணன் செட்டியார் வருவாரா, சுவாமிகளே?” மனிதாபிமானத்தின் ஆர்வம் பிடர்பற்றித் தள்ள விசாரித்தார் சுந்தரமூர்த்தி.

“வருவார்னு தோணலீங்க!” என்றார் ஆண்டி.

“அட கடவுளே! தெய்வம் அவரை மறந்திடுச்சே என்கிறதுக்கா, அவரும் மறந்திட்டாரா என்ன? ஐயோ! என்ன சோதனை இது? நடராஜப் பிரபோ!” என்று உருகிக் கரைந்தார் அர்ச்சகர்.

“ஐயா, தெய்வம் அவரை மறந்திடுச்சு என்பதோ, அல்லது அவர் தெய்வத்தை மறந்திட்டார் என்பதோ இந்தப் பொய்யான வாழ்க்கையிலே நமக்கு நாமே கற்பிதம் செய்து கொள்ள வேணுமானால் உபயோகப்படலாம். ஆனா, மெய்யாகவே ஆளுகிறவனுக்கும் மெய்யாகவே ஆளப்படுகிறவனுக்கும் ஊடாலே இப்படிப்பட்ட பொய்யான மயக்கங்கள் செல்லாக் காசுக்குச் சமதைதான். தெய்வசித்தம் என்கிற ஒரு மகத்தான மாயசக்திக்கு முன்னே நாமெல்லாம் எம்மாத்திரம்; இந்தக் கட்டைக்கு நாழி ஆகுது . விடை வாங்கிக்கிட வேணும், ஐயா!”

பண்டாரத்தின் விழிகள் பொங்குகின்றன.

***

அன்றைக்குத்தான் பிட்டுக்கு மண் மண்டபப்படி விழா அம்பலவாணன் செட்டியார் மரபு காத்து நடத்தும் இத்திருநாள் வைபவத்துக்கு விசேஷமாகக் கூட்டம் கூடுவது வழக்கம். மேளக் கச்சேரி , பிட்டு, சர்க்கரைப் பொங்கல், கடலைப் பருப்புச் சுண்டல், தாம்பூலம், தேங்காய் மூடி என்று அன்று தடபுடலாகவே உபயங்கள் எல்லாம் நடந்தேறும். “தெய்வம் தந்தது என்னோட சொத்து. அந்தத் தெய்வத்துக்கு விமரிசையாய் மண்டபப்படி செய்கிறதிலேதான் என்னோட மனச்சாட்சி அமைதி காணும்; அதுதான் என் மனசுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்; கொடுக்கவும் முடியும்” என்பார் செட்டியார்.

அப்படிப்பட்ட மெய்ப் பக்தரான அம்பலவாணர் இல்லாமலேதான் அவர் மண்டபப்படி விசேஷம் நடைபெற வேண்டுமென்று விதித்துவிட்டதா என்ன?

நிரம்பி வழிந்த ஒளி வெள்ளத்திலே கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஓதுவார் ஏக்கம் தேங்க, சோகம் பாகமிட, மெய்யொடுங்கி, மெய் விதிர்த்துப் போய்விட்டார். அப்பனே’ ஏன் இப்படிச் சோதிச்சிட்டே? இதோ, தீபாராதனை நடக்கப் போகுதே ! உன்னை அல்லும் பகலும் அனவரதமும் துதித்துக்கொண்டிருக்கப் பழகிவிட்ட அம்பலவாணன் செட்டியாரை மறந்திட்டியா? இல்லை, மறக்கப் போறியா? உன்னை மறக்காத அவரை நீ மறந்தால், மறக்க நேர்ந்தால் அது தருமமாகுமா, நியாயமாகுமா? சொல், அம்மையப்பா! நெஞ்சம் நெக்குருகியது: உருகிக் குலைந்தது; குலைந்து விம்மியது; விம்மி வெடித்தது.

திருப்புகழ் பாடிக் கொண்டிருக்கிறது நாகசுரம். அனித்த மறத் திருப்பொதுவில் விளங்கு நடத்தரசு க்கு இன்றைக்குப் பிட்டுக்கு மண் சுமந்த வேடம் புனை வடிவம். அதாவது, அவதாரம் ! பிட்டும் மண்ணும் கதை அல்லவே!

பிட்டு விற்ற கிழவி வந்தியின் சார்பிலே, வைகைப் பெருவளத்தை அடைக்க அல்லது அடக்கச் சோமசுந்தரக் கடவுள் மண் சுமந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படிப்பட்ட திருவிளையாட்டை நினைவுறுத்தியும் நினைவு கூட்டியும் விளங்கும் அந்தக் கோலத்திற்கென்று அப்படியொரு மகிமை போலும்!

மண்வெட்டி, பிட்டுத் தட்டு, ஐந்தடுக்கு நாமுகத் தீபம் எல்லாமே வெள்ளிப் பொருள்கள்தாம் ; வெள்ளியம்பலத்தே திருநடம் புரிந்த ஐயனுக்கு உகந்தவைதாம். இவை அனைத்தும் அம்பலவாணரின் பக்திச்சுவை சொட்டும் உபயங்களேயாம்.

“ஊம்! ஐயா, பூஜை ஆரம்பியுங்கள். மணி இப்போதே பத்தடிக்கப் போகுதுங்களே, ஓதுவார் ஐயா!”

உத்தரவு பிறந்தது.

ஓதுவாருக்குத் திகீரென்ற ஓர் அச்சஉணர்வு அச்சாரம் கொடுத்து உலுக்கி விட்டிருக்கவேண்டும். இமை கொட்டாமல், ஆனால் தேள் கொட்டின துடிப்போடு ஆண்டவனைப் பார்த்தார்; பார்த்துக்கொண்டே நின்றார். நெஞ்சிலும் நினைவிலும் நிழலாடிய அம்பலவாணன் செட்டியாரின் அன்பின் உருவம் மனக்கண்ணிலே ஆடியது கண்ட பாங்கிலே ஆடியது. ஏக்கமும் ஆர்வமும் தழலாகக் கொதிக்க, கைக்கு மெய்யான ஏமாற்றமும் சோகமும் சாட்டைப் பம்பரமாகச் சுழல, அவர் சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினார். முடியவிழ்ந்த நரைமுடிக்கற்றைகள் வாடகை காற்றில் அசைந்தாட, அலைந்தாட நுட்பமாகக் கண்டோட்டம் பதித்தார். அம்பலவாணன் செட்டியார் திடுதிப்பென்று இங்கே சுவாமியின் திருச்சபையின் சந்நிதியின் முன்னே வந்து குதித்துவிட மாட்டாரா? அம்புலிக்கு ஆசைப்படும் மழலையென அவர் மனப்பால் குடித்துவிட்டாரோ? மறு இமைப்பில், நெடு மூச்சுப் பிரிந்ததுதான் மிச்சம். மணியைக் கையில் ஏந்தினார்.

வில்வ இலைகள் சிந்தின , சிதறின. அம்பலவாணன் செட்டியாரின் ஜன்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனையைத் தொடங்கினார் ஓதுவார்.

மேளச் சத்தம் முழங்கிற்று. நாதசுரம் வழிந்தது. கையெடுத்துக் கும்பிடவேண்டும். அதோ, தீபாராதனை நடக்கிறது.

தீபம் ஏந்திய ஓதுவாரின் அன்புக் கரங்கள் ஏன் அப்படி நடுங்குகின்றன? ஈசனே, எம்பிரானே! சோதனை கடந்தவன் ஆயிற்றே நீ? ஆனாலும் சோதனை நடத்திவிட்டாயே? உன் சித்தம் இந்த அற்பனுக்கு எப்படித் தெரியும், புரியும்? உன் விருப்பம் போல் நீ விளையாடு. அலகிலா விளையாட்டுடையவன் ஆயிற்றே நீ?

அம்மையப்பா! எங்கள் அம்பலவாணன் செட்டியாரை எங்கிருந்தாலும் நல்லபடியாகக் காப்பாற்றவாவது அருள்பாவிப்பாய் அல்லவா? இமை வட்டங்களிலே சுடுநீர் வட்டம் போட்டது.

ஆராதனை தொடர்ந்தது.

“ஹரஹர மகாதேவா!’

கண்டாமணி ஓசையெனக் கணீரென்று முழுக்க மிட்டது பக்திச் சுவை குலுங்கிய புதிய குரலொன்று.

கூட்டம் ஏறிட்டு விழித்தது, அங்கே…..

ஏக்கமும், உருக்கமும் மேலிடக் கைகுவித்து நின்றார் அந்த மொட்டைத் தலை ஆண்டிப் பண்டாரம்.

எண்குணங்கள் பெற்ற அந்த ஆண்டவன் ஏன் அப்படிச் சிரிக்கிறான்? புதிர்ச் சிரிப்பல்லவா அது?

ஆம், அம்பலத்தரசனின் அந்தப் புதிர்ச் சிரிப்புக்குத் தாராளமாகப் பொருள் இருக்கத்தான் இருக்க வேண்டும். அப்படியென்றால்?

அதோ, கோயிலின் வெளிப் புறத்துப் பந்தலிலே, கும்பலோடு கும்பலாகவும் தாடியும் மீசையும் எலும்பும் தோலுமாகவும், நின்று கொண்டே, மேனி குலுங்கிட, கண்கள் குலுங்கிட, மனம் குலுங்கிட, பக்தி பரவசத்தோடு மெய்மறந்து , ஆனால் மெய்யை மறக்காமல் கைகூப்பிக் கும்பிட்டுக்கொண்டே இருக்கிறதே ஓர் உருவம், அந்த உருவத்தைப் பற்றறுத்துப் பாருங்கள்!

“அப்பனே! நடராஜப் பெருமானே! உன்னோட அன்புக்கும் கருணைக்கும் ஈடேது, எடுப்பேது? நீ ஆட்டுவித்தாய். நான் ஆடாமல் தப்புவேனா? கண்காணாத சீமையிலே மண் சுமந்து, காசு சேர்த்து, வளமைப்படி உன் திருநாளை, என் மண்டபப்படியை, நல்ல தனமாகக் கொண்டாடக் கொடுத்து வச்சேனே! நான் பாக்கியவான்தான்! என் மானத்தைக் கட்டிக் காத்தாயே அம்மையப்பா! உன் விளையாட்டை என்னவென்பேன்? நீ மண் சுமந்த பாவத்துக்கு ஓர் புது அர்த்தம் கொடுக்க வேண்டித்தான் நானும் மண்சுமந்த புண்ணியத்தைப் பெற்றேனோ? நீ புதிரல்லவே! நான்தான் புதிர் ! இல்லையானால், எனக்குன்னு மெய்யன்பரான ஒரு ஓதுவாரையும், ஓர் ஆண்டிப் பண்டாரத்தையும் கை காட்டியிருப்பாயா? கடைசியிலே என்னையும் மீறின வகையிலே என்னையும் இங்கே இப்போது மாயமாகக் கொண்டாந்து சேர்த்திட்டு இப்படிச் சிரிச்சுக்கிட்டு இருப்பாயா அப்பனே! ஆகா! அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!” அந்த உருவம் உருகிக் கரைந்து கொண்டே இருக்கிறது.

***

திருநீற்று மடலும் கையுமாக வெளிப்புறப் பந்தலை அடைந்தார் ஓதுவார். அவர் பார்வை நாற்புறமும் ஓடியது. மறுகணம், “ஆ! ஐயாவா?” என்று தம் உள்மனம் ஆனந்த பரவசம் மேலிடக் கூவியவாறு, விரைந்து பாய்ந்து, விபூதிப் பிரசாதம் வழங்கினார். ஓதுவார். எம்பிரானே! உன் விளையாட்டு இப்படியா நடந்திருக்குது! கண்கள் கசிந்தன! மேனி உறுப்புக்கள் ஒசிந்தன.

அந்த உருவம் விபூதியை மெலிந்த கை நடுங்க வாங்கிப் பூசிக்கொண்டதுதான் தாமதம் ; மறு இமைப்பில் அவ்வுருவம் அப்படியே தடாலென்று தரை மண்ணில் சாய்ந்தது.

ஓதுவார் துடியாய்த் துடித்தார். கூட்டம் பரபரப்படைந்தது.

“பாவம்! யாரோ பரதேசி ஒருவர் திடீர் மயக்கம் போட்டு விழுந்திட்டார். எல்லாரும் தயவு பண்ணி ஒதுங்கி நல்ல காற்றுக்கு வழி விடுங்க ரங்கா, ஓடிப்போய் நல்ல தண்ணீர் கொண்டாப்பா!”

ஓதுவாரின் விழிகளினின்றும் கண்ணீர் மாலை நீண்டு மணக்கிறது.

ஆகா! அந்தத் தூண்டாமணித் தீபம் எத்துனை அறக் கருணையோடும் அருட் சிரிப்போடும் ஒளி ஏற்று ஒளிகாட்டிக் கொண்டிருக்கிறது!

– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *