கெளசிக கோத்திரம் வந்த கதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 17,208 
 

இந்திரனுக்கு சமமான புத்திரன் ஒருவன் தனக்குப் பிறக்க வேண் டும்’ என்பதற்காக தவம் இருந்தான் சாம்பன் என்ற மன்னன்.

சாம்பனின் தவ வலிமையைக் கண்டு இந்திரனே அவன் முன் தோன்றி, ”நானே உனக்கு மகனாகப் பிறப்பேன்” என்று கூறினான். அதன்படி சாம்பனின் மனைவிக்கு, ‘காதி’ என்ற புத்திரன் பிறந்தான். அவனுக்கு ‘கௌசிகன்’ என்ற பெயரும் உண்டு.

கெளசிக கோத்திரம் வந்த கதை!கௌசிகன் வளர்ந்து பெரியவனானான். இவனுக்கு குணவதியான பெண் ஒருத்தி மனைவியானாள். இவர்களுக்கு பிறந்தவள் சத்தியவதி. பிருகு முனிவரின் புதல்வனான ரசீக முனிவர், அழகில் சிறந்த சத்தியவதியை மணக்க விரும்பினார். தனது விருப்பத்தை கௌசிக மன்னனிடம் தெரிவித்தார்.

கௌசிக மன்னனுக்கு இதில் விருப்பம் இல்லை. எனவே ஓர் உபாயம் செய்தார். ரசீக முனிவரிடம், ”மாமுனிவரே… என் மகளை உமக்குத் திரு மணம் செய்து கொடுக்க வேண்டுமானால், சீதன மாக ஆயிரம் குதிரைகளை நீங்கள் தர வேண்டும். அந்தக் குதிரைகள்… ஒரு காது மட்டும் கறுப்பாகவும், பிரகாசிக்கும் தேகமும், அதிவேகமாக ஓடும் ஆற்றலும் கொண்டவையாக இருக்க வேண்டும்!” என்று நிபந்தனை விதித்தார்.

சத்தியவதியின் மீதுள்ள ஈர்ப்பால், ரசீக முனிவரும் சம்மதித்தார். வருண பகவானைத் துதித்து, அவர் அருளால் ஆயிரம் குதிரைகளைப் பெற்று மன்னரிடம் கொடுத்தார். ரசீகனது தவ வலிமையைக் கண்டு ஆச்சரியமுற்ற கௌசிக மன்னர், தன் மகளை அவருக்கே மணம் செய்து வைத்தார்.

தன் ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்த பிறகு, தங்கள் குலம் தழைக்க ஒரு புத்திரனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை கௌசிக மன்னருக்கும் அவர் மனைவிக்கும் ஏற்பட்டது. அதற்காக பல தான- தருமங்களும், யாகங்களும், ஆலயத் திருப்பணிகளும் செய்தனர். இருந்தும் புத்திரப் பேறு கிட்டவில்லை.

அதே மாதிரி, அவர் மகள் சத்தியவதிக்கும்… திருமணமாகி பல நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதுகுறித்து, தன் கணவரான ரசீக முனிவரிடம் கூறி வருந்தினாள் சத்தியவதி.

இதைக் கேட்ட ரசீக முனிவர், உண்ணும் உணவில் மந்திரங்களை ஜபித்து, மனைவியிடம் தந்தார். அவளிடம், ”சத்தியவதி! சரு எனும் பெயர் கொண்ட –

மகிமை பொருந்திய- மந்திரசக்தி மிக்க இந்த உணவை உட்கொண்டால், நமக்கு ஒரு புத்திரன் பிறப்பான்” என்று கூறினார்.

கணவனின் மொழி கேட்டு சந்தோஷமான சத்தியவதி, ”சுவாமி! ஒரு விண்ணப்பம். என் பெற்றோருக்கும்… குலம் தழைக்க குமரன் ஒருவன் இல்லையே என்கிற குறை இருக்கிறது. அவர்களுக்கும் தாங்கள் திருவருள் புரிய வேண்டும்” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டாள்.

ரசீக முனிவரும் தனது மனை வியின் கோரிக்கையை ஏற்று மற்றொரு ‘சரு’வைக் கொடுத்தார். அத்துடன், ”சத்தியவதி… முதலில் கொடுத்த சருவை நீயும், இரண்டாவதாக கொடுத்ததை உன் தாயும் உட்கொள்ள வேண்டும்” என்றார்.

சத்தியவதி மனம் மகிழ்ந்தாள். தன் தாயைச் சந்தித்தவள்… தன் கணவர் கூறிய வாக்கியத்தை அப்படியே கூறி, ‘சரு’வை உண்ணும்படி கேட்டுக் கொண்டாள்.

தாயும், மகளும் இறைவனைத் தியானித்துக் கொண்டு ‘சரு’வை உண்பதற்காக உட்கார்ந்தார்கள். அப்போது சத்தியவதியின் தாய்க்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது.

அதாவது, ‘சத்தியவதிக்குக் கொடுக்கப்பட்ட சரு, தனக்குக் கொடுக்கப்பட்டதை விட சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். காட்டில் வாழும் முனிவருக்கு, வீர தீர குணங்கள் கொண்ட புத்திரன் பிறப்பதைவிட, அந்த புத்திரன் சத்திரிய வம்சத்தில் பிறந்தால் அரச சந்ததி அழியாப் புகழோடு அமையும் அல்லவா?’ என்று சிந்தித்தாள்.

மகளிடம் தனது எண்ணத்தைக் கூறினாள். சத்தியவதியும் அதற்கு சம்மதித்தாள்.

ரசீக முனிவரின் ஆணையை மீறி, முதல் ‘சரு’வைத் தாயாருக்குக் கொடுத்து விட்டு, இரண்டாவதாகக் கொடுத்த சருவைத் தான் உண்டாள் சத்தியவதி.

பிற்பாடு இந்த விஷயம் ரசீக முனிவருக்குத் தெரிய வந்தது. சத்தியவதி மீது கடுங்கோபம் கொண்டார்.

”என்ன காரியம் செய்து விட்டாய் சத்தியவதி… ஞானம், சாந்தி, பொறுமை இவற்றோடு கூடிய புத்திரன் நமக்குப் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மந்திரம் ஜபித்து, உனக்கு உண்பதற்காகக் கொடுத்த ‘சரு’வை உன் தாய்க்குக் கொடுத்திருக்கிறாயே! கணவனின் வார்த்தைகளை மீறிய உனக்கு, க்ஷத்திரிய குணங்களைக் கொண்ட… மகா மூர்க்கனான மகன் பிறப்பான். உன் தாய்க்கு உத்தமமான சாத்வீக குணம் கொண்ட புதல்வன் பிறப்பான்” என்று சபித்தார்.

கணவரின் வார்த்தைகளைக் கேட்டு மனம் கலங் கினாள் சத்தியவதி. அவரது பாதங்களில் விழுந்து மன்னிக்க வேண்டினாள்.

”தாங்கள் எனக்குக் கருணை காட்ட வேண்டும். அறியாமல் செய்து விட்டேன்” என்று கண்ணீர் வடித்துக் கதறினாள். அதன் பின் ரசீக முனிவர் அவள் மீது கருணை கொண்டு அவளுக்கு அருள் செய்தார்.

முனிவரின் அருளால் சத்தியவதி, ஜமதக்னியையும், அவளுடைய தாய், விசுவாமித்திர முனிவரையும் பெற்றனர் (இந்த சத்தியவதிதான் பிறகு பூலோக நலனுக்காக கௌசகி என்ற நதியாக மாறியவள்)!

சத்தியவதி குமாரனான ஜமதக்னி முனிவர், இக்ஷவாகு வம்சத்து மன்னனான ரேணு என்பவரின் புதல்வியான ரேணுகை என்னும் நற்குண நங்கையை திருமணம் செய்து கொண்டார்.

அந்த ரேணுகை வயிற்றில்தான் ஸ்ரீமந் நாராயணன் ‘பரசுராமன்’ என்னும் திருநாமத்துடன் அவதாரம் செய்தார்.

விசுவாமித்திரருக்கு மதுச்சந்தன், தனஞ்செயன், கிருததேவன், அஷ்டகன், கச்சபன் என்ற பிள்ளைகள் பிறந்தனர். இந்த வம்சம் பின்னாளில் வளர்ந்து ‘கௌசிக கோத்ரம்’ உண்டாயிற்று.

_ எம்.எஸ். ருக்மணி தேசிகன், சென்னை-33 (டிசம்பர் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *