கதோபநிஷத் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 12,270 
 

கதோபநிஷத்தில் வரும் ஒரு முக்கியமான கதை நசிகேதன் பற்றியது.

அந்த கதையில் முக்கிய அம்சம் நசிகேதன் எனும் ஒரு சிறுவனுக்கும் யமதர்மனுக்கும் இடையில் நடக்கும் சர்ச்சை.

வேத காலத்தில் , நசிகேதனின் தந்தை வாஜஸ்வர முனிவர், ஸ்வர்க லோகம் வேண்டி, விஸ்வஜித் எனும் பெரும் யாகம் செய்தார். பெரிய முனிவர்கள், ரிஷிகள் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.

விசுவஜித் யாகத்தின் நிபந்தனை விசித்திரமானது. உலகில் உள்ள அனைத்தையும் ஆளும் சக்தி பெறவே இந்த யாகம். ஆனால், அது நிறைவேற வேண்டுமென்றால், யாகம் செய்பவர் , தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்ய வேண்டும்.

அனைத்தையும் துறக்கச் சித்தமாக இருப்பவனுக்குத்தான் அனைத்தும் உரிமையாக இருக்க முடியும். அந்த காலத்தில் பசுக்களே ஒருவரின் முக்கிய சொத்தாக இருந்தது

நிபந்தனைப்படி வாஜசிரவஸ் அனைத்தையும் தானம் செய்தார். ஆனால், தனக்கு உதவாதவற்றைத் தானம் என்ற பெயரில் கொடுத்தார். யாகம் செய்பவர் , தனது நல்ல சொத்துக்களை தானமாக அளிக்க வேண்டும் இவரோ, நல்ல பசுக்களை கையில் வைத்துக் கொண்டே, மரணத்துக்காகக் காத்திருக்கும், பால் சுரக்காத, கறவை நின்ற ,உபயோகமற்ற, கிழப் பசுக்களைத் தானமாக அளித்தார்.

அவருடைய மகன் நசிகேதன் அனைத்தையும் கவனித்தான். அவன் ஒரு காரணப் பிறவி. அவனுக்கு அது பிடிக்கவில்லை. தன் தந்தை செய்யும் தவறை நினைவூட்டும் விதமாக , தந்தையிடம் சென்று, “அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். சிறந்தவற்றைத் தானம் செய்ய வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக , அந்த கேள்வியையே மூன்று முறை கேட்டான். கோபமுற்ற வாஜசிரவஸ், “உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்” என்றார்.

தந்தை சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, நசிகேதன் யமலோகம் புறப்பட தயாரானான். . வாஜசிரவஸ் மகனை தடுத்து பார்த்தார். “கோபத்தில் சொன்னது, போக வேண்டாம் மகனே” என மன்றாடி பார்த்தார் மகன் கேட்கவில்லை. நசிகேதன் யம லோகம் நோக்கி புறப்பட்டான் .

அவன் யம லோகம் போன வழியெல்லாம் ஒரே இருள். முற்களும், பூச்சிகளும் நிறைந்த வழி அவன் வைதரணி ஆறு அருகில் வரும் போது ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகளின் ஆத்மாக்கள் விழுந்து துன்பப்பட்டு கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கே பசுக்கள், அவர்களை ஆற்றிலிருந்து மீட்டு, அந்தக்கரை சேர்த்துக் கொண்டிருந்தன. அவை, அந்த பாவிகள் தானமளித்த பசுக்கள். சில மெலிந்த பசுக்கள், பாவிகளை மீட்க முயற்சித்து, முடியாமல், விட்டு விட்டு சென்றன. இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டே , எந்த வித சிரமமும் இல்லாமல், நசிகேதன் யமலோகத்தை வந்தடைந்தான் .

நசிகேதன் எமலோகத்தை அடைந்தபோது, எமன் அங்கு இல்லை. யமன், அவன் தந்தை சூரிய தேவனை பார்க்க சென்றிருந்தான். சித்ர குப்தன், நசிகேதனை வரவேற்றான் . “சிறுவனே உனக்கு இப்போது வருவதற்கான காலமில்லியே. அதுவும் பூத உடலிலே வந்திருக்கிறாய் !”

நசிகேதன் நடந்ததை விவரித்தான். “ நான் திரும்பி போக இயலாது. யமனை பார்க்க வேண்டும் . அவரிடம் என் தந்தை சொன்னதை சொல்ல வேண்டும் “ எனக் கூறி, எமனின் மாளிகையின் முன் மூன்று நாட்கள் காத்திருந்தான்.

யம தர்ம ராஜன், யமலோக பட்டினம் வந்ததும் சித்ர குப்தன் மூலம் செய்தி அறிந்தான். அதிர்ந்து போனான். ஒரு விருந்தினனை , நசிகேதனை மூன்று நாட்கள், காக்க வைத்தது தனக்கு பாவம் வந்து சேருமே என வருந்தினான்.

நசிகேதனை நோக்கி, “விருந்தினரான நீ மூன்று நாட்கள் உணவின்றித் தங்க நேர்ந்தது நான் செய்த குற்றம். அப்பழியைப் போக்க, என்னிடமிருந்து மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்” என்றான்.

நசிகேதன் தெளிவான மனதுடன் எமதர்மனை நோக்கி, “

உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை, என் தந்தை ஏற்றுக்கொண்டு, மனக்கவலையின்றி, தெளிந்த மனத்துடன் கோபம் அற்றவராய் என்னிடம் பேச வேண்டும். இதுவே எனது முதல் வரம்” என்றான். எமதர்மனும், “என் அருளால் உன் தந்தை உன்னை முன்பு போலவே ஏற்றுக்கொள்வார்” என்று வரம் தந்தான்.

அதன் பின் நசிகேதன், “எமதர்மனே! சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவ தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப் பற்றிச் சொல்வாயாக. இதுவே எனது இரண்டாவது வரம்” என்றான்.

எமதர்மன், “நசிகேதா, சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றிச் சொல்கிறேன். விழிப்புற்றவனாகக் கேள். சொர்க்கத்தைத் தருவதும் பிரபஞ்சத்துக்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது. அதாவது புறக்கிரியையாகச் செய்யும்போது, சொர்க்கத்தைத் தருகிற அதே யாகம், அக அக்கினியாக, ஆன்ம அக்கினியாகக் கொண்டு வித்யையாகச் செய்யப்படும் போது பிரபஞ்சத்துக்கு ஆதாரமான இறைவனை அடையும் சாதனை ஆகிறது.” என்றான்.

யாகம் செய்யும் வழிமுறைகளை உபதேசித்தான். நசிகேதன் அழகாய்ப் புரிந்துகொண்டு திருப்பிச் சொல்லவும், எமதர்மன் அகமகிழ்ந்தான்.

யமன் “இன்னொரு வரமும் தருகிறேன் என்றான். அந்த யாகம் நசிகேத யாகம் என்றே இனி விளங்கும் என்றான். மேலும், பல யாகங்களின் அறிவைக் குறியீடாக உணர்த்தும் பல வண்ண மாலை ஒன்றையும் வழங்கினான்” .

நசிகேதன், “மரணத்துக்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும் இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே” என்றான்.

எமதர்மன் ,“நசிகேதா, நீ வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள். பூமியில் உள்ள எல்லாச் செல்வங்களையும் அரசையும் கேள். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழ்ந்துகொள். மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே” என்றான். நசிகேதன் தெளிவாக, “உலகின் இன்பங்கள் நிலையற்றவை. ரகசியமாய் வைக்கப்பட்டுள்ள இவ்வுண்மையை நான் அறிய வேண்டும் . வேறு எந்த வரமும் வேண்டாம்” என்றான்.

எமதர்மன் நசிகேதனின் மன உறுதியில் மகிழ்ந்து, “நசிகேதா, உண்மையை அடைவதில் உறுதியாய் இருக்கும் உன் போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

முதலில் லட்சியத்தை அடைவதற்கான மந்திரம் ‘ஓம்’ ஆகும்.

உடம்பு, உயிர், ஆன்மா என்ற மூன்றின் சேர்க்கையே மனிதன். பொதுவாக மரணம் என்று குறிப்பிடப்படுவது உடம்பின் மரணம் மட்டுமே. உடம்பின் மரணத்துக்குப் பின்னரும் ஆன்மா வாழுகிறது. ஆன்மா பிறப்பற்றது; நிலையானது; அழியாதது” என்றான்.

மேலும், “மரணத்துக்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப்பயனும் பெற்ற பிறவியும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.”

ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில் அந்த வடிவங்களுக்கு வெளியேயும் திகழ்கிறது. ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம். உணர வேண்டியது. இறைவன் பேராற்றலின் உறைவிடம் என்பதை அறிய வேண்டும். அவ்வாறு உணர்பவன் மரணமில்லாப் பெருநிலையை அடைகிறான்.

மனதைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்”-

“மரணத்துக்குப் பின் நல்லது செய்தவர்கள் சொர்க்கம் அடைவார்கள். தீயது செய்தவர்கள் நரகம் அடைவார்கள்.

ஆனால் முக்கியமானது என்னவெனில் இந்த உடம்புக்குத்தான் அழிவு. ஆனால் அதில் குடிகொண்டிருக்கும் ஆன்மாவுக்கு அழிவு இல்லை. எனவே உடலை மனதால் கட்டுப்படுத்தி தீமை செய்யாமல் நன்மை செய்து நன்நெறிப்படி வாழ்பவர் மரணத்துக்குப் பின்னும் பேசப்படுவார். எனவே மரணத்துக்குப் பின்னும் புகழுடம்பு பெறுவார்

இவ்வாறாக எமதர்மன் தனது உபதேசத்தை நிறைவு செய்தான். இதைக் கேட்டு, பின்பற்றிய நசிகேதன் மரணமற்றவன் ஆனான்.

***

நசிகேதனின் சில கேள்விகளும் யம தர்மனின் பதில்களும் உங்கள் பார்வைக்காக: (நன்றி : முகநூல் மற்றும் கூகுள் )

1.1.20. நசிகேதன்-மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும்,இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவுபெற விரும்புகிறேன்

1.1.21. எமன்-நசிகேதா இந்த விஷயத்தில் தேவர்களுக்கு கூட சந்தேகம் உள்ளது.(தேவர்களுக்கு கூட தெரியாது) இந்த விஷயம் நுட்பமானது,எளிதாக அடையக்கூடியது அல்ல. எனவே வேறு ஏதாவது கேள்.

1.2.1 எமதர்மன்-மேலானது மற்றும் சுகம் தருவது (ஷ்ரேயஸ் , பிரேயஸ்) என இரண்டு உள்ளது.இரண்டும் வேறுபட்ட பலனை தருகிறது.மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை கிடைக்கிறது.சுகம் தருவதை தேர்ந்தெடுப்பவன் வீழ்ச்சியடைகிறான்.

1.2.2,3. மூடன் உடம்புக்கு சுகம் தருவதை தேர்ந்தெடுக்கிறான்.ஆனால் நசிகேதா நீயோ மேலான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறாய்.

1.2.4,5.இறைநெறி மேலானது, உலகியியல் இன்பம் கீழானது உடலுக்கு சுகம் தருவது. உலகியல் இன்பங்களை விரும்புபவர்கள் குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப்போல மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறார்கள்.

1.2.7,8.அறிய வேண்டிய ரகசியம் இந்த ஆன்மாபற்றியது..ஏற்கனவே ஆன்மாவை அறிந்தவன் உபதேசத்தை பின்பற்றினால் குழப்பம் இல்லை.உலகியல் இன்பத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி தெரியாது.

1.2.9,10 வாதங்கள் மூலம் இதை அறியமுடியாது.உண்மையை உணர்ந்தவர் ஒருவர் மூலம் இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

1.2.11.நசிகேதா! சொர்க்கலோகத்தில் அளவற்ற இன்பங்கள் நிறைந்துள்ளன.அங்கே பயம் இல்லை.நீண்ட நாட்கள் வாழலாம்.புத்திசாலியான நீ இதை நன்கு அறிந்திருந்தும் சொர்க்கத்தை உறுதியுடன் மறுத்துவிட்டாய்.

1.2.12.நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடையவேண்டியது.இதயக்குகையில் ஒளிர்வது, இருண்டபகுதியில் உள்ளது, பழமையானது, ஒளிமயமானது. புத்தி விழிப்புற்றவன் அத்யாத்ம யோகத்தால் தியானத்தின் மூலம் அதை அறிகிறான். (அத்தியாத்மயோகம் என்பது ஆன்மாவுடன் இணைதல் என்று பொருள்)
இங்கே இதயம் என்று சொல்வது இரத்தஓட்டத்திற்கு காரணமான இதயம் அல்ல.)

“பிரித்தறிந்து வாழ்! நசிகேதா, வாழ்க்கையின் இரு வேறு சுகங்கள் இருக்கின்றன. (ஸ்ரேயம் , ப்ரேயம்) அக வளர்ச்சியால் பெறப்படும் மேன்மையும் புற வளர்ச்சியால் பெறப்படும் மேன்மையும் வெவ்வேறு சுகங்களைக் கொடுக்கிறது. அதாவது மனத்தை அமைதிப்படுத்தி இறைவனை நாடுவதில் மனம் மேம்படுமானால் அந்த மனத்தின் மூலம் கிடைக்கும் அமைதி ஒரு சுகமாகும்.
உடல் சார்ந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் பொருள், போகம், ஆடல், பாடல், காமம் போன்றவற்றை அடைவதில் முன்னேறி புற வளர்ச்சியால் அனுபவிப்பது ஒரு சுகமாகும். இவற்றில் அக வளர்ச்சி பெறுவதே மேலானது.

மேலானது வேறு, சுகம் தருவது வேறு (ஸ்ரேயம் , ப்ரேயம்). அவை இரண்டும் வேறுபட்ட பலன்களைத் தந்து அவற்றின் மூலம் மனிதனைப் பிணைக்கின்றன. மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சுகம் தருவதை நாடுபவன் லட்சியத்திலிருந்து வீழ்கின்றான்.”

மேலானது, சுகம் தருவது இரண்டும் மனிதனை அணுகுகின்றன. அறிவாளி அவற்றை ஆராய்ந்து, அவை இரண்டையும் பாகுபடுத்துகிறான். சுகம் தரும் உலக இன்பங்களை விட்டுவிட்டு மேலானதைத் தேர்ந்தெடுக்கிறான். மூடன், உடம்பின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சுகம் தருவனவற்றை நாடுகிறான்.

மேலும் இறைநெறி, உலகியல் இரண்டும் வேறுபட்டவை, நேர்மாறானவை, வேறுவேறான பாதைகளைப் பின்பற்றுபவை. எந்த ஆசையும் உன்னை மேலான பாதையை நாடுவதிலிருந்து விலக்கவில்லை.

எமதர்மன்.பிறகு மனிதர்கள் எந்தெந்த சூழ்நிலைகளால் தம்மை வந்தடைகிறார்கள் என்பதைச் சொல்லத் துவங்கினான்.

“நசிகேதா! உலகமாயையின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்களை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி குறுக்கு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். உலகச் சூழலில் சிக்கித்தவிக்கும் இவர்கள் நடைமுறை வாழ்வில் எது உயர்வானவை என்று மற்றவர்கள் கூறுகிறார்களோ அதையே உயர்வானது என கருதி உலகச்சூழலை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.

குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப் போல் இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் உழல்கிறார்கள்.

குறுக்கு வழியில் மகிழ்ச்சியைத் தேடிச் செல்கின்ற, பணத்தாசையால் அறிவிழந்த, மனப்பக்குவ மற்றவர்களுக்கு மறுவுலக உண்மைகள் புரிவதில்லை. ‘இந்த உலகம் தான் எல்லாம், வேறு எதுவும் கிடையாது’ என்று கருதுகின்ற அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அடைகிறார்கள்.”

அதாவது அல்ப சந்தோஷங்களில் மனதை லயிக்கச் செய்து நிரந்தர அமைதியைத் தேடாதவர்கள் ஒவ்வொரு முறையும் எமனை அடைந்து மீண்டும் பிறப்பெய்துகிறார்கள். மரணத்திற்கு அப்பால் மனிதன் மீண்டும் பிறக்கிறான் என்பதை மிகத் தெளிவாக எமதர்மன் விவரிக்கிறான்.

எமதர்மன் மேலும் தொடர்கிறான் “நசிகேதா! எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்.”

“நசிகேதா! உலகியல் மனிதர்களால் கூறப்படும் போது இந்த ஆத்மா பற்றிய விபரங்கள் நன்றாக அறியப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் வெவ்வேறு விதமாக விளக்கிவிடுகின்றனர்.

அனுபூதி பெற்றவர்கள் உபதேசம் செய்வதைப் பின்பற்றினால் குழப்பம் இல்லாமல் விளங்கும். உனக்கு நான் விளக்குகிறேன். நசிகேதா கேள்! ஆன்மா அணுவைவிட நுண்ணியது. எனவே வாதங்களுக்கு அப்பாற்பட்டது. அனுபவித்தே அறிந்து கொள்ளக்கூடியது. வெறும் விளக்கங்களால் புரிந்து கொள்ள முடியாதது.”

***

பின் குறிப்பு:

நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் “ஆத்மா”.

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்.

“தத்வம் அஸி” – “நீ தான் அது” (அது = ஆத்மா) – இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான “அஹம் ப்ரம்மாஸ்மி” என்பது உணரப்படும்.

பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு பற்றி நமக்கு தெரியம் ஆனால், மரணம் ஒரு புதிராகவே இருக்கிறது. மரணம் என்றால் என்ன? அப்போது மனிதனுக்கு என்ன நேர்கிறது? அதன் பின் அவன் என்ன ஆகிறான்? இதுபோன்ற கேள்விகள் எல்லா காலகட்டத்திலும் எழுந்து வந்திருக்கின்றன. விடைகளுக்கான தேடலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கதோ உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது.

courtesy : google search and Wikipedia

பகவத் கீதையும் இதை அழகாக விளக்குகிறது . உதாரணத்திற்கு:

2.20 na jāyate mriyate vā kadāchin nāyaṁ bhūtvā bhavitā vā na bhūyaḥ
ajo nityaḥ śhāśhvato ’yaṁ purāṇo na hanyate hanyamāne śharīre

பொருள் : ஆத்மா ஒருபோதும் பிறப்பதில்லை. அது போல் ஒருபோதும் இறப்பதில்லை. முன்பு இல்லாமல் இருந்து இப்போது உருவானதல்ல,அதேபோல் இப்போது இருந்து, இனிமேல் இல்லாமல் போவதுமில்லை. இது பிறவாதது, இறவாதது,தேயாதது,வளராதது,முன்பே இருப்பது. உடலை கொன்றாலும், இதை கொல்லமுடியாது.

16.22 etair vimuktaḥ kaunteya tamo-dvārais tribhir naraḥ
ācharaty ātmanaḥ śhreyas tato yāti parāṁ gatim

பொருள் : ஆசை, காமம், குரோதம் உள்ள வரை, .ஒருவன் ப்ரேயத்துக்குள்ளே கட்டுப்பட்டு வாழ்கிறான். ஆரம்பத்தில் சுகம் தருவதும், முடிவில் கசப்பானதும் பரேயசே. ஆனால், உலக சுகங்களில்,ஆசையை குறைக்கும் புத்திமான், பிரேயத்திலிருந்து விடுபடுகிறான். ,அவனே பின்னர், ஸ்ரேயசில் ஈடுபடுகிறான். ஷ்ரேயஸ் ஆரம்பத்தில் கசப்பானது. ஆனால், முடிவில் ஆனந்தத்தை கொடுப்பது. அவனுக்கே முக்தி கிடைக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *